Monday, 3 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 5

அருகில் இருந்த அறை ஒன்றில் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டார் கோவிந்தசாமி. அஸ்தி பையைத் திறந்துப் பார்த்தார். பாலீதின் பையில் போடப்பட்டு இருந்தது. மனம் நிம்மதி ஆனது. ஆனால் காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது. ஒரு காபி குடித்தால் தேவலாம் என காபி அருந்தினார். அந்த இளைஞன் இன்னமும் இவரையே பார்த்துக்கொண்டிருந்தான். மழை விட்டு இருந்தது.

அவனருகே வந்த அவர், காசிக்கு எளிதாகச் செல்லும் வழி எது எனக் கேட்டார். அந்த இளைஞன் கரக்பூர் மார்க்கமாகச் சென்றால் எளிதாகச் செல்லலாம் என சொன்னான். இருமிக்கொண்டே இருந்தார் கோவிந்தசாமி. கோவிந்தசாமிக்கு தான் கேட்டது தமிழ்மொழிதானா என வியந்தார். தம்பி நீங்க தமிழா என்று கேட்டார். ஆம் என்றான் இளைஞன். தனது பெயர் தமிழ்பாண்டே என அறிமுகப்படுத்திக்கொண்டான். கோவிந்தசாமிக்கு காய்ச்சல் அதிகமானது.

அதிக அலைச்சலும், தூக்கமின்மையும் அவருக்கு சற்று அசெளகரியத்தைத் தந்து இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார் கோவிந்தசாமி. அவரது மயக்கத்தைத் தெளிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் தமிழ்பாண்டே. மருத்துவர் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என சொன்னதும் கோவிந்தசாமியை தனது வீடு இருக்கும் நீலகந்த நகருக்கு அழைத்துச் சென்றான்.

புதிய நபருடன் தன் மகன் வருவதைக் கண்ட தனலட்சுமி முகர்ஜி யார் என கேட்டார். தமிழ்க்காரர், காசி செல்கிறார் சுகமில்லை என சொல்லி ஒரு அறை ஏற்பாடு செய்யச் சொன்னான். இன்று ஓய்வெடுத்துச் செல்லட்டும் என சொன்னவனை தனியாய் அழைத்து நாளை உனது தந்தைக்கு திதி நாள், அந்த விசேசம் செய்ய வேண்டும், நீ இந்த தருணத்தில் இப்படி ஒருவரை அழைத்து வந்து இருக்கிறாயே என கடிந்து கொண்டார். போகச் சொல்லிவிடலாம் என்றான் தமிழ்பாண்டே. ஆனால் தாய் இருக்கட்டும் என அனுமதி அளித்தார்.

கோவிந்தசாமி அன்று அங்கேயே தங்கினார். காலையில் கிளம்பலாம் என இருந்தவருக்கு காய்ச்சல் இன்னும் இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் செல்வது நல்லதல்ல என இருந்தாலும் இப்படி இங்கே தங்குவது சரியாகாது என நினைத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தார். தமிழ்பாண்டே உடல்நலம் சரியானவுடன் செல்லலாம் என தடுத்துவிட்டான். அவனது தந்தையின் திதி நிகழ்வில் கலந்து கொண்டார் கோவிந்தசாமி. மனம் புதையலிலும் காசியிலும் நின்றது.

அன்றைய தினமும் அங்கேயே தங்க வேண்டி வந்தது. காய்ச்சலும் இருமலும் ஓரளவுக்கு சரியானது போல் இருந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கரக்பூர் நோக்கி பயணமானார் கோவிந்தசாமி. கரக்பூரில் இறங்கி காசி இரயிலுக்குச் செல்லும் வழியில் ஐந்து பேர் இவரை சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களை கண்ட அதிர்ச்சியில் கோவிந்தசாமி உடல் வெடவெட என ஆடத் தொடங்கியது.

(தொடரும்)

எழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு?

வலைப்பதிவர் திரு.கிரி அவர்கள் எனது இடுகை ஒன்றிற்கானப் பின்னூட்டத்தில் ஒரு விண்ணப்பம் வைத்தார். அது என்னவெனில், எனது எழுத்து நடையை எளிமையாக்கினால் எனது இடுகைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதேயாகும்.

அவரது வேண்டுகோளுக்கிணங்க, எழுத்து நடையை எவ்வாறு எளிமையாக்குவது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்தபோது சில விசயங்கள் புலப்பட்டது. அவை,

1. சொல்ல வருவதை மிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம், எளிய தமிழ் சொற்கள் கொண்டு எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவது.

2. வாசிப்பவரைத் தேவையில்லாத குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களது நேரத்தை வீணாக்காமல் இருப்பது.

3. ஒரே சொல்லை அவசியமில்லாது மீண்டும் மீண்டும் உபயோகிக்காமல் இருப்பது.

4. அளவுக்கு அதிகமாக, நீண்ட தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது. அதாவது வள வள என இல்லாது வளமையுடன் எழுதுவது.

5. எழுதியதைப் படித்துப் பார்த்து ஏதேனும் புரிகிறதா என சோதித்துப் பார்த்துவிட்டு பின்னர் இடுகையை வெளியிடுவது.

6. 'ஏதோ எழுதுகிறோம்' எனும் மனப்பக்குவத்தை அகற்றிவிட்டு 'சாதனை புரிய எழுதுகிறோம்' எனும் நம்பிக்கையுடன் எழுதுவது.

7. பயன் தரும் விசயங்களை பக்குவத்துடன் எழுதுவது.

8. வாசிப்பவர்களின் மனதில் நல்லெண்ணத்தையும், நல்லதொரு நம்பிக்கையையும், நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்துவது. இதுமட்டுமின்றி எழுதும்போது மிகவும் இயல்பாகவே எழுதுவது.

மேலே சொல்லப்பட்ட விசயங்களை மனதில் முன்னிறுத்தி எழுதுவோம் எனில் வாசகர்கள் பயன் அடைவார்கள் என்பது உறுதி. இத்தருணத்தில் வலைப்பதிவர் திரு.கிரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்பு தினம்னா என்ன?

நண்பர்கள் தினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டதை வலைப்பூக்களில் கண்ணுற்றேன். எனது ஒரு பதிவில் பின்னூட்டமாக சந்ரு அவர்கள் நண்பர்கள் தின வாழ்த்துகள் சொல்லிச் சென்றார். நானும் அதே பின்னூட்டத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் சொல்லிக்கொண்டேன்.

ஆனால் வருடப் பிறப்பினைக் கொண்டாடும்போது சொல்லிக்கொள்ளப்படும் வாழ்த்துகளைப் போல் அல்லாமல் எவருமே எனக்கு நண்பர் தின வாழ்த்துச் சொல்லவில்லை, நானும் எவருக்கும் நண்பர் தின வாழ்த்துச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆக எனக்கு நண்பர்கள் இல்லையா? அல்லது நான் நண்பர்களைப் புறக்கணிக்கிறேனா?

முத்தமிழ்மன்றத்தில் நண்பர்கள் தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்ளப்படும், ஆனால் இம்முறை எவருமே அந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ளாத ஒருத் தோற்றத்தை இன்று சென்றுப் பார்த்தபோது அறிந்தேன். நானும் மெளனமாக சில பதிவுகள் வழக்கம்போல் படித்துவிட்டு, பதிவிட்டுவிட்டு வெளியேறிவிட்டேன். நண்பர்களை இந்த தினம் மட்டுமே நினைவு கொள்தல் அவசியம் இல்லை என கருதுகிறோமோ? அல்லது இதுவும் ஒரு நாள் சடங்கு முறையில் சேர்க்கப்பட்டுவிட்டதே எனும் வருத்தமா?

நண்பர்கள் எனப் பலரைச் சேர்த்து மகிழும் வேளையில், பகைவர்களாக அவர்கள் மாறிவிடக்கூடாதே எனும் அளவிலா பயம் எனக்கு வந்து சேர்வதுண்டு. எப்போதும் சற்றுத் தள்ளி நின்றேப் பழகிக்கொண்டேன். நட்புடன் சேர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் என்னை ஓரமாகவே நிற்கச் சொன்னது.

நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு கூட நட்பில் ஒருவித ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது. விசுவின் மக்கள் அரங்கத்தில் விசு சொன்னார் எனது நண்பர்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது. அவரவர் வேலை, குடும்பம் என்றே நாட்கள் செல்கிறது. திருமணம் ஆன பின்னர் வேலை, குடும்பம் என நட்பு சற்று தள்ளியே தான் நிற்கிறது.

என்னுடன் படித்த, பழகிய நண்பர்கள் எனது நினைவலைகளில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொடர்பு கொள்வதுதான் குறைந்துப் போய்விட்டது. எப்போதாவது பேசிக்கொள்வதா நட்பு என்பது போல் ஆகிவிட்டது.

இந்த நட்பு தினத்தை எனது மனைவியிடமும், ஒன்பது வயது நிரம்பிய மகனிடமும் சொன்னேன். புன்னகைத்தார்கள். சில மணி நேரங்கழித்து எங்கள் மகன் என்னிடமும், என் மனைவியிடமும் கை குலுக்கி நட்பு தின வாழ்த்துகள் சொன்னான். நானும் எனது மனைவியும் நட்பு தின வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டோம்.

எங்கெங்கோ இருக்கும் எங்கள் நண்பர்களும் மகிழ்ந்து இருப்பார்கள், என்னுடன் வாழும் இந்த இரண்டு அருமையான நண்பர்களை நினைத்து.