Sunday, 2 August 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)

தோணுகால் ஊரின் மந்தையில், அடுத்த வருடத் தேர்தலில் தனக்கு ஓட்டு அளிக்கும் வாய்ப்பு இருப்பதைப் பற்றியும், எந்த கட்சிக்கு ஓட்டு அளிக்கலாம் எனும் யோசனையுடன் அமர்ந்திருந்தான் ரகுராமன்.

அவனது யோசனையை கலைக்கும் விதமாக அங்கு வந்து சேர்ந்தான் பழனிச்சாமி.

''டேய் ரகு, என்னடா இங்க வந்து உட்கார்ந்திருக்க, வக்கனாங்குண்டுக்காரங்கே நாளைக்கு மேட்ச் விளையாட கூப்பிட்டாங்கடா, 50 ரூபா மேட்ச், நீ வரியல''

''ம் வரேன், பழனி நீ அடுத்த வருசம் தேர்தலுல முத ஓட்டுப் போடனும்ல''

''ஒரு கள்ள ஓட்டு அடுத்த தொகுதியில நடந்த இடைத்தேர்தலுலப் போய் போன வருசமே போட்டு வந்துட்டேன், முத ஓட்டா?''

''எந்த கட்சிக்குப் போட்ட, ஏன் அப்படி போட்ட?''

''நீ காலேஜுல படிக்கிற, நான் ஊர் சுத்திட்டுத் திரியறேன், நூறு ரூபா கொடுத்தானுங்க, பசக்குனு ஒரு குத்து குத்திட்டு வந்துட்டேன், எந்த கட்சினு சொன்னேனு வைச்சிக்கோ அப்புறம் அந்த கட்சிக்குத்தான் அவமானம், சரி கிளம்பு பிராக்டிஸ் பண்ணலாம்''

''அடுத்த வருசம் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவ''

''ஓட்டு ரகசியத்தை எல்லாம் வெளியிலச் சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்றேன். எவன் அதிக காசு தரானோ அவனுக்குத்தான் என் ஓட்டு. அந்த ஒருநாள் கூத்துக்கா இப்படி யோசிச்சிட்டு இருக்கே''

''நீங்க எல்லாம் விளையாடப் போங்க, நான் சாயந்திரமா வரேன்''

ரகுராமனுக்கு பழனிச்சாமி சொன்ன பதிலில் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியது. தனது தாத்தா காலத்திலிருந்து தனது வீட்டில் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சி போட்டியிடாதபோது அதன் கூட்டணி கட்சிக்கும் என வாக்களித்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஏன் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் வாக்கு அளிக்கிறீர்கள் என அவன் ஒருநாளும் கேட்டதில்லை. இன்று கேட்டுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளாராகப் பணியாற்றும் பாண்டுரங்கன் ஆசிரியர் ஞாபகம் வந்தது. அவரது வீட்டு வாசலில் சென்று நின்றான் ரகுராமன்.


''அடடே வா ரகுராமா, படிப்பு எல்லாம் எப்படி போகுது?''

''நல்லாப் படிக்கிறேன் ஐயா''

''ம்ம்... என்ன சாப்பிடுற''

''வேணாம் ஐயா. நீங்க எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டு வரீங்க, எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவீங்க''

''அரசியல் அறிவியல் படிக்கிறதால இப்படி ஒரு கேள்வியா? ம்... நான் எப்பவும் தி.மு.க தான். உதயசூரியன் சின்னத்தில ஓட்டுப் போட்டேப் பழகிப் போச்சு''

''ஏன்? அந்த கட்சிக் கொள்கை ரொம்ப பிடிச்சதா ஐயா?''

'' நான் கலைஞரோட அபிமானி. அவரோடப் பேச்சு, எழுத்துல கவரப்பட்டவன், அதனால் எப்பவும் தி.மு.க வுக்கும், கூட்டணிக்கும் தான் என் ஓட்டு''

''கட்சிக் கொள்கையைப் பார்க்கறதில்லையா ஐயா?''

''தி.மு.க வோடதா, கூட்டணி கட்சிகளோடதா?''

''பொதுவா''

''பார்ப்பேன், பார்ப்பேன், உதயசூரியன் அப்படினாலே இருளைப் போக்குபவனு அர்த்தம், இதைவிட தனியா என்ன கொள்கை வேண்டி இருக்கு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதாதா?''

ரகுராமன் யோசித்தான். தி.மு.க. அ.தி.மு.க பெரிய கட்சிகள். வளர்ந்து வரும் கட்சிகள்னு சில கட்சிகள். சுயேட்சையாகப் போட்டியிடப் போகிற பலர். எதிர் வரும் நபரிடம் எதேச்சையாகக் கேட்டான்.

''அண்ணே, அடுத்த வருசத் தேர்தலுல எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவீங்க''

''பச்சைக் குத்திருக்கோம் பாரு, எப்பவும் இரட்டை இலை தான்''

அவரது கையைப் பார்த்தான் ரகுராமன். கண்களில் ஏக்கம் நிலவியது. பொறுப்பற்ற மக்கள் இருக்கும்வரை ஒரு பொறுப்பானத் தலைவரை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?

(தொடரும்)

Saturday, 1 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 2

வீட்டிற்கு வந்த கோவிந்தசாமி வீட்டுப் பத்திரம், தோட்டத்துப் பத்திரம் என எல்லாத்தையும் எடுத்து வைத்தார். அன்று மாலையே தனது மகன்களைப் பார்க்கச் சென்றார். அடுத்தநாள் காலையில் மகன்கள் இருவரையும் சந்தித்து தனது முடிவினையும், உயில் எழுதவும் ஏற்பாடு செய்யவும் கூறினார். அதற்கு அவரது மகன்கள் அந்த வீடும், தோட்டமும் தங்களுக்கு வேண்டாமென கூறிவிட்டனர். சொத்து எதுவும் வேண்டாம் எனவும் இனிமேல் நாங்கள் சென்று அதைப் பராமரிக்க இயலாது என கூறினர். கோவிந்தசாமி தனது மகளிடம் சென்று தனது எண்ணத்தைக் கூறினார். அவரது மகளும் வீடும் தோட்டமும் வேண்டாம் என சொன்னார்.

முதலில் பணம் தருகிறேன் என சொன்னவர்கள், நிலத்தையும் வீட்டையும் விற்று வரும் பணத்தைக் கொண்டு காசி செல்லுமாறு அம்மூவரும் சொல்லி வைத்தார்போல் கோவிந்தசாமிக்கு அறிவுரை கூறினர். கோவிந்தசாமி கோடியலூருக்கு அன்று இரவே திரும்பினார். வசந்தராஜுவைச் சந்தித்தார். தான் காசிக்குச் செல்வதாக அவரிடம் கூறியவர் நிலத்தையும் வீட்டையும் சுப்புராஜ் பெயருக்கே மாற்றித் தருவதாகவும் சுப்புராஜுக்கு உயில் எழுதித் தருவதாகவும் சொன்னார். இதைக்கேட்ட வசந்தராஜ் கண்கள் கலங்கியது.

வசந்தராஜ் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். காலங்காலமாக கூலி வேலை செய்து வருபவர். கோவிந்தசாமியின் வியாபாரத்திற்கு உதவியாக இருந்தவர். கோவிந்தசாமி பலமுறை இவருக்கு உதவிகள் புரிந்து இருக்கிறார். இப்படி கோவிந்தசாமி வந்து சொன்னதும் எதுவும் சொல்லமுடியாமல் வசந்தராஜ் நின்றார். நிலத்தை நீங்க திரும்பி வந்தப்பறம் உங்களுக்கே நான் தந்துருரேன், நீங்க ஏத்துக்கிறதா இருந்தா எங்களுக்கு எழுதிக்கொடுங்க என வசந்தராஜ் சொன்னதும் சுப்புராஜும் ஆமாம் என தலையாட்டினான். உங்க பேரிலேயே இருக்கட்டும், மனுசருடோ மனசு எப்படின்னாலும் மாறும் என வசந்தராஜ் மனைவி குருவம்மாள் சொன்னார். ஆனால் கோவிந்தசாமி தனது முடிவில் மாற்றம் இல்லை என சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

அடுத்தநாளே நிலத்தையும், வீட்டையும் சுப்புராஜ் பெயரில் எழுதிக்கொடுத்தார் கோவிந்தசாமி. தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும், வியாபாரம் செய்து கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டார். ஆனால் இந்த நிலம், வீடு மாற்றமானது ஊரில் மற்ற எவருக்கும் தெரியாமல் இருக்குமாறு மிகவும் கவனமாக சற்று தொலைவில் உள்ள ஊரில் சென்று பத்திரம் எழுதினார். உயிலும் சுப்புராஜ் பெயருக்கே எழுதித் தந்தார்.

கோவிந்தசாமி காசிக்குச் செல்ல இருப்பதை அறிந்தார்கள் ஊர்மக்கள். இவருடன் செல்ல ஊரில் உள்ள சிலர் திட்டமிட்டு இவருடன் வருவதாக ஆயத்தமானார்கள். கோவிந்தசாமியும் சரியென சொன்னார். ஆனால் தான் நடைபயணம் செய்தும், பேருந்திலும், புகைவண்டியிலும் செல்ல இருப்பதாக சொன்னதும் அனைவரும் பின்வாங்கினர். கோவிந்தசாமி தனியாக செல்ல வேண்டியதாகவே போனது.

வியாபாரம் செய்தபோது வடநாட்டுக்காரர்களுடன் பழகி இருந்ததால் இந்தி மொழி கோவிந்தசாமிக்கு ஓரளவு தெரியும். அதனால் மிகவும் தைரியமாகவே கிளம்பினார். தன்னுடன் உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டார். வடநாட்டுல குளிரும் என சொன்னதைக் கேட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டார்.

ஊரில் இருந்த சிவன் ஆலயத்தில் சென்று வழிபட்டார். முதலில் நடைபயணமாகவே பயணத்தைத் தொடங்கினார். தனது இடுப்பைச் சுற்றி பணத்தைக் கட்டிக்கொண்டார். மிகவும் சாதாரண மனிதரைப் போல் பயணிக்கத் தொடங்கினார். வசந்தராஜ் தனது குடும்பத்துடன் தனது வீட்டிலேதான் வசித்தார்.

ஊரிலிருந்து வந்தவர் மாலையில் மதுரையினை அடைந்தார். அங்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் வந்து காசிக்கு செல்லும் வழியையும் எந்த ஊரெல்லாம் செல்ல வேண்டும் எனும் முழு விபரத்தையும் கேட்டு எழுதி வாங்கிக்கொண்டார். அவர்கள் எழுதித்தந்தது சற்று சுற்றுப்பாதையாகத்தான் இருந்தது. கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். நடைபயணத்தால் கலைத்தவர் அந்த கோவிலிலே சற்று நேரம் வெளியில் சாய்ந்தவாரே தூங்கினார். காசியில் இருந்த அந்த புனித ஆலயம் மிகத் தெளிவாக கனவில் தெரிந்தது. விழித்தவர் பேருந்தினைப் பிடித்து சென்னைக்குப் பயணமானார். பேருந்திலே நன்றாகத் தூங்கினார். சென்னையை பேருந்து அதிகாலை அடைந்தது. கோவிந்தசாமி தன்னிடம் இருந்த பணத்தைக் காணாமல் போனது கண்டு மனம் தவித்தார்.

(தொடரும்)

தேடினால் கிடைத்துவிடும் - 1

கோடியலூர் கிராமத்தின் வடக்குத் தெருவில் வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார் கோவிந்தசாமி. அவருக்கு இப்போது அறுபது வயதாகிறது. இவரது மனைவி ஓரிரு வருடங்கள் முன்னால்தான் வைகுண்ட பதவி அடைந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகி நகரங்களில் நல்ல வசதிகளுடன் குடியேறிவிட்டார்கள். எப்போதாவது இவர் நினைத்தால் மகன்கள் வீட்டிற்கோ, மகள் வீட்டிற்கோ சென்று சிலநாட்கள் தங்கிவிட்டு வருவது இவரது வழக்கம். அங்கு செல்லும்போதெல்லாம் மிகவும் அன்புடனே இவரை அவர்கள் நடத்துவார்கள். அவர்களும் இந்த கோடியலூருக்கு வந்து தந்தையைப் பார்த்துச் செல்வது வழக்கம்.

இவர் கோடியலூரிலே வியாபாரியாகத்தான் வேலை செய்து வந்தார். கோழி வியாபாரம், பருத்தி வியாபாரம், ஆடு வியாபாரம், என அனைத்து வியாபாரங்களிலும் கொடிகட்டி பறந்தார். மிகவும் நேர்மையான மனிதர். வியாபாரம் என்றால் லாபம் பார்க்கும் தொழில்தான் எனினும் கொள்ளை லாபம் பார்ப்பதை அறவே வெறுத்தவர். ஆடம்பரமற்ற வாழ்க்கையையும், அமைதியான வாழ்க்கையையும் விரும்பியதால் எதிலும் சிக்கனமாகவே இருந்தார். சிறு வயதில் இவர் கண்ட ஒரு கனவானது பலமுறை திரும்ப திரும்ப வந்து போயிருந்தது. இவர் அதை வெறும் கனவுதான் என புறக்கணித்து இருந்ததாலும் அந்த கனவு இன்னும் இவரை வாட்டிக்கொண்டுதான் இருந்தது. காசிக்குச் செல்லவேண்டும் எனும் ஆசை இவருக்கு பலநாட்களாக இருந்தும் வந்தது. கனவும் ஆசையும் ஒன்றாக இருந்திட்டாலும் வியாபாரத்திலே மனம் ஒட்டி இருந்ததால் எங்கும் செல்லவில்லை.

தூங்கிக் கொண்டு இருந்த கோவிந்தசாமிக்கு மீண்டும் அதே கனவு வந்தது. காசிக்குச் செல்வது போலவும் அங்கே புனிதத் தலத்தின் அருகில் ஒரு புதையலை இவர் எடுப்பதாகவும் கண்ட கனவு மீண்டும் வந்துவிட விழித்து எழுந்தார். ஏன் இந்த கனவு தன்னைத் தொடர்ந்து வருகிறதே என சலிப்புடன் எழுந்து தனது சிறு தோட்டத்திற்குச் சென்றார்.

இந்த தோட்டம் இவரது உழைப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வாங்கியது. அதிக நிலங்கள் வாங்காமல் இருந்த நிலத்திலே பயிர்செய்து வரும் பணத்தில் சமூக சேவை செய்தும் பிள்ளைகளைப் படிக்க வைத்தும், மனைவியை அன்புடன் கவனித்தும் வந்த இவருக்கு இந்த கனவு இடைஞ்சலாகத்தான் இருந்தது.

நிலத்தில் பயிர் செய்து இருந்த மிளகாய்ச் செடியைப் பார்த்தார். மிகவும் நன்றாக வளர்ந்து இருந்தது. தென்னை மரம் மிகவும் செழிப்பாக வளர்ந்து காட்சி தந்து கொண்டிருந்தது. வாழை மரங்கள் வளப்புடன் இருந்தது. இப்படியாக ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவர் இதையெல்லாம் விட்டுவிட்டு இனிமேல் காசிக்குப் போய் புதையல் எடுத்து என்ன செய்யப்போகிறோம் என பேசாமல் தோட்டத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒருமுறை இவரது மனைவியிடம் கூட இந்த விசயத்தைச் சொல்லிப்பார்த்தார். அவர் போகலாம் ஆனா பிள்ளைக என சொல்லி வேண்டாம் என மறுத்துவிட்டார். இப்படியாக ஆசை வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் காசி பயணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. போன மாதம் கூட மகன்களிடமும், மகளிடமும் சொன்னபோது சிரித்துவிட்டார்கள். காசிக்கு போகிற செலவு நாங்க தரோம் ஆனா எங்களால இப்போ காசிக்கு வர முடியாது என கூறிவிட்டார்கள்.

தோட்டத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டார் கோவிந்தசாமி. பலமான யோசனையாக இருந்தது. சின்னத் தோட்டம் எனினும் வயதாகியதால் அவர் தோட்டத்து வேலைக்கு என ஒரு ஆள் நியமித்து இருந்தார். அவன் கோடியலூர் கிராமத்தில் வசிக்கும் வசந்தராஜுவின் இளைய மகன் சுப்புராஜ். தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சுப்புராஜை அழைத்தார் கோவிந்தசாமி. அவனுடன் சிறிது நேரம் தோட்டம் பற்றி பேசிக்கொண்டு இருந்தவர் அனைத்தையும் கவனித்துக்கொள்ள இயலுமா எனக் கேட்டார். அவனும் சரி என சொன்னான். மனதில் காசிக்குச் செல்வது என முடிவெடுத்தார் கோவிந்தசாமி.

(தொடரும்)