Monday, 27 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 3

கோதைநாச்சியாருக்குத் தவிர அன்றைய தினம் மிகவும் சந்தோசமாக கடந்தது. கோபாலகிருஷ்ணனும் அவனது மனைவியும் வந்து சாப்பிட்டுவிட்டு மாலையே சென்றுவிட்டனர். ஆண்டாளின் கல்யாணம் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை. அன்று இரவு தூங்கும் முன்னர் ஆண்டாள் தனது அம்மாவிடம் ''ஏன்மா என்னைப் பத்தி ரொம்ப கவலைப்படறியா?'' என்றாள்.

''ஜோசியர் சொன்னதுல இருந்துதான் மனசுக்கு சரியில்லைம்மா, நீ போய் தூங்கு, நாளைக்கு நல்லா கனவு காணு, லேட்டாவே எழுப்புறேன்'' என்றார் கோதைநாச்சியார். ''நாளைக்கு ஞாயித்துக்கிழமை, கனவு வராதேம்மா'' என சொல்லிவிட்டு தூங்கச் சென்றாள் ஆண்டாள்.

தூக்கம் வராமல் அழுகையே வந்துவிட்டது கோதைநாச்சியாருக்கு. என்ன பெரிய ஜோசியம், எல்லாம் நாம வைச்சதுதானே, இதுக்குப்போய் இப்படி கவலைப்படறோமே என நினைத்துக்கொண்டே ''ஏங்க ஏதாவது பரிகாரம் செய்யலாமனு கேட்டீங்களா?'' என்றார் கோதைநாச்சியார். ''பரிகாரம் கேட்க மறந்துட்டேன், நாளைக்கு அழகியமணவாளன் பத்திக் கேட்டுட்டு வரலாம்னு இருக்கேன்'' என்றார் நாராயணன்.

''உங்களுக்கு ஏன் இப்படி மனசு போகுது, நாளைக்கு நம்மளை கொஞ்சம் கூட மதிக்காம போகப்போறாங்க, இப்படி ஒரு விசயத்தை வெளிய சொன்னம்னா என்ன குடும்பம் இதுனு கேலி பண்ணாதவங்க யாரும் இருக்கமாட்டாங்க, அதுவுன் ஜோசியத்தைக் காரணம் காட்டினா காரித்துப்புவாங்க'' என்றார் கோதைநாச்சியார். ''எதுக்கும் கேட்டு வாரேன்'' என நாராயணன் சொல்லிவிட்டு மனதில் கவலை கொண்டார்.

பொழுது விடிந்தது. ஆண்டாள் எழுந்து குளித்து பாடங்கள் படித்துக் கொண்டிருந்தாள். ''பிஞ்சுக் குழந்தை'' என மனதில் சொல்லிக்கொண்டு நாராயணன் நண்பரைப் பார்க்கக் கிளம்பினார். நண்பரிடம் விசயம் சொன்னதும் ''உன் பொண்ணை இப்ப எதுக்கு கட்டிக்கொடுக்க ஆசைப்படற, கல்யாண வயசு வரப்ப நானே வந்து பொண்ணு கேட்டு என் பையனுக்குக் கட்டி வைக்கிறேன், பேச்சு மாறமாட்டேன்'' என்றார் இராஜமன்னார்.

ஜோசியர் சொன்னதை சொன்னதும் ''அட என்ன நீ இவ்வளவு பட்டிக்காட்டுத்தனமா இருக்க, இப்ப உலகம் எவ்வளவு தூரம் முன்னேறிக்கிடக்கு, ஜோசியம் பாசியம்னு'' என அறிவுரை கூறி அனுப்பினார். ஆனாலும் மனது கேட்காமல் ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்டதற்கு ஜோசியர் ''பரிகாரம் இருக்கு, ஆனா முப்பது வயசுக்கு அப்புறம் தான் அதுவும் செய்ய முடியும், அதுவும் இரண்டாம் தாரமாப் போனாத்தான் உண்டு'' என்றார் ஜோசியர். மனதைத் தேற்றிக்கொண்டு விளையாட்டுத்தனமாக நினைத்த விசயம் விபரீதமாகப் போய்க்கொண்டிருப்பதை நினைத்து வீடு சேர்ந்தார் நாராயணன்.

இரண்டு மாதங்கள் கடந்தது. சனிக்கிழமையானால் கல்யாணம் பத்தி பேச ஆரம்பித்துவிடுவாள் ஆண்டாள். கோதைநாச்சியார் ஆண்டாளிடம் நிலைமையை சொல்லி போன சனிக்கிழமை அழுதேவிட்டார். ஆண்டாள் ''நான் கல்யாணம் பண்ணாமே வாழ்ந்துக்கிறேன்ம்மா, இப்ப கல்யாணம் வேணாம்மா, அழாதே'' என சொன்னவள் ''ஜோசியர் பத்திக் கவலைப்படாதேம்மா, காதலுக்கு அதெல்லாம் ஒரு தடையும் இல்லம்மா, எனக்கு காதல் வரும்லம்மா'' என சொல்லிவிட்டு சிறு பிள்ளையாய் விளையாடினாள். கோதைநாச்சியார் ''பெருமாளே'' என்றார்.

(தொடரும்)

Sunday, 26 July 2009

வலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி

வலைப்பூவின் நோக்கம் எனது எண்ணத்தைச் சேகரிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்திய வேளையில், பலரின் பார்வைக்கு நமது சிந்தனைகள் கொண்டு செல்லும் கருவியாக இந்த வலைப்பூ அமைகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் இந்த வலைப்பூவினை அனைவரின் பார்வைக்கும் கொண்டு செல்வதை வலைப்பூ திரட்டிகள் மிகவும் எளிதாக்கி விடுகின்றன.

தமிழ்மணம் மட்டுமே எனக்கு அறியப்பட்டத் திரட்டியாக இருந்தது. சிறிதுநாளில் இதுபோன்ற சேவையை பல வலைப்பூ திரட்டிகள் செயல்படுத்தி வருகின்றன என்பதையும் தமிழ்மணம், சங்கமம், திரட்டி போன்றவைகள் தானியங்கிகளாகச் செயல்படுவதை அறிய முடிந்தது. ஆனால் தமிழிஸ், அதென்ன தமிழிஸ் என யோசித்தபோது, அட இங்கிலீஸ் என ஞாபகம் வந்தது, நாமோ அல்லது மற்றவரோ இணைக்க வேண்டும் என பல நாட்கள் பின்னரே அறிந்தேன்.

பல திரட்டிகளில் சென்று இணைக்கும் அளவுக்கு நேரம்தனை செலவிட முடியாமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. இவ்வாறிருக்க தமிழிஸ்லிருந்து திடீரென 10க்கும் மேற்பட்ட வாக்கு பெற்ற ஒரு எழுத்துப் பற்றி எனக்கு மின்னஞ்சல் வர அட என ஆச்சரியம் அளித்தது. எழுத்தை நேசிக்கும் வாசகர்கள் கண்டு வியந்து போனேன்.

வினவு, தமிழ் ஓவியா போன்ற எழுத்தாளர்களின் பதிவுகள் தமிழ்மண பரிந்துரையில் அதிக ஓட்டுகள் பெறுவது கண்டு வியந்ததுண்டு. நன்றாக எழுதினால் அன்றி எவரும் வாக்கு அளிக்கப் போவதில்லை. இதில் குளறுபடி, கூட்டுக்குழப்பம் என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. எப்படியோ வாக்குகளும் பரிந்துரைகளும் விழ அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள் என்பது மட்டும் உண்மை. அந்த நிலையை அவர்கள் நிச்சயம் கஷ்டப்பட்டே அடைந்திருக்க முடியும். நண்பர்கள் சேர்ப்பது என்பது எளிதாக இருக்கலாம், ஆனால் அதை நீட்டித்துக்கொள்வது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை.

எனது பதிவுகள் தமிழிஸ் பெற்ற வாக்குகளைப் பார்த்து ஒரு பதிவு அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என நான் முடிவுக்கு வந்துவிடலாம் என்றே இருந்தாலும் மேலும் எப்படியெல்லாம் எழுத வேண்டும் எனும் ஒரு உத்வேகத்தை அவை தராமல் இல்லை.

தமிழ்மண வாசகர்கள், தமிழிஸ் வாசகர்கள், திரட்டி வாசகர்கள், சங்கமம், தமிழ்10 என வாசகர்களை அடையாளம் பிரிக்கலாம் என்றாலும் நான் அனைத்துக்கும் பொதுவான எழுத்தாளானகவே பரிமாணம் செய்கிறேன்.

அங்கீகாரம் கிடைக்கச் செய்திட வேண்டும் எனும் போராட முற்படும்போது அங்கே சோர்வு என்பது இருக்கக் கூடாது, நம்மை எவரும் கவனிக்கவில்லை என்கிற மன ஆதங்கமும் அவசியம் இல்லாதது. ஒரு எழுத்து நிச்சயம் நன்றாக இருந்தால் பிறரால் நிச்சயம் வாசிக்கப்படும், நேசிக்கப்படும் என்கிற உண்மையை மட்டும் அறிந்து கொண்டேன்.

எனது எழுத்துக்குப் புதிய வழியைக் காட்டிக்கொண்டிருக்கும் வலைப்பூ திரட்டிகளுக்கும், வாசகர்களுக்கும், ஆர்வக்கோளாறினால் தலைகாட்டிச் செல்லும் வாசகர்களுக்கும், என்னை வளர்த்துவிட்ட, இன்னும் வளர்த்துக் கொண்டிருக்கும் முத்தமிழ்மன்றத்துக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம் என இறுமாந்து விடாதே, விசயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்'' இதுதான் எனது கொள்கை.

அனைவருக்கும் மீண்டும் நன்றி.

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 2

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் ஆண்டாளைத் தனியாக அழைத்துச் சென்றார் கோதைநாச்சியார். ''நீ இப்படி இனிமே நடந்துக்கிராதே, எனக்கு மனசெல்லாம் வலிக்குது, உனக்கு நல்லாப் படிச்சி, ஒரு நல்ல உத்தியோகத்துக்குப் போய் வாழனும்னு ஆசையே இல்லையா'' என அறிவுரை சொன்னார்.

''கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கிறேன், உத்தியோகத்துக்குப் போறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''ஐயோ பெருமாளே, என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்கேள், என் புள்ளைக்கு புத்திமதி சொல்லப்படாதோ'' என வேண்டிக்கொண்டார் கோதைநாச்சியார்.

''ஏன் பெருமாள்கிட்ட அப்படி வேண்டிக்கிறம்மா, என்னோட வேண்டுதலை முறியடிக்க நீ இப்படி வேண்டினா அந்த பெருமாள் உனக்கு உதவுவாரா'' என ஆண்டாள் கண்சிமிட்டிக் கொண்டே கேட்டவள் ''என்னோட வேண்டுதல் தான் ஃபர்ஸ்ட்'' என இங்குமிங்கும் ஓடினாள்.

''ஆண்டாள், ஆண்டாள் நில்லு, சரி இப்ப விளையாட நேரமில்லை, நான் சமையல் பண்ணனும்'' என்றவருக்கு ''நானும் உனக்கு உதவுறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''நீ படி, சமையல் வேலை நான் பார்த்துக்கிறேன்'' என்றவருக்கு ''நானும் சமைக்கிறேன்'' என அம்மா செல்லும் முன்னரே சமையல் கட்டுக்குள் போனாள் ஆண்டாள்.

''ஏங்க, நம்ம பிள்ளையை கண்டிக்கக் கூடாதா'' என்றார் கோதைநாச்சியார். அதற்கு நாராயணன் ''நான் மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்'' என்றார். ''இது என்ன கொடுமை, அப்பனும் பிள்ளையுமா சேர்ந்து இப்படி ஆடுறீங்க, இது என்ன விளையாட்டா?'' என்றார் கோதைநாச்சியார்.

''காதல் வர பருவத்தில கல்யாண ஆசை வந்துருக்கு, நான் ஆண்டாளோட சாதகத்தை எடுத்திட்டுப் போய் பார்த்துட்டு வரேன்'' என கிளம்பினார். 'பெருமாளே ஏன் தான் ஆண்டாள்னு பேரு வைச்சேனோ?' என சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தார்.

அங்கே ஆண்டாள் காய்கறிகள் நறுக்க ஆரம்பித்து இருந்தாள். ''இது அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்லம்மா'' என்றாள் ஆண்டாள். ''பிடிக்கும் பிடிக்கும், கத்தரிக்காய் பிடிக்காம இருக்குமா, ஆனால் கல்யாணம் பிடிக்கும்னு சொல்ற முத பொண்ணு நீயாத்தான் இருப்ப'' என சொல்லிக்கொண்டே சமையல் வேலை செய்ய ஆரம்பித்தார்.

''என்னது சின்னப் பொண்ணோட சாதகமா இருக்கு இது. குரு பார்வை பலமா இருக்கு. இன்னும் ஆறு மாசத்தில கல்யாணம் நடக்கனும் அப்படியில்லையினா அறுபது வயசில தான் கல்யாணம், சரியான நேரத்திலதான் அந்த பெருமாள் உங்களை இங்கே அனுப்பி வைச்சிருக்கா நாராயணன்'' என்றார் ஜோதிடர்.

''நினைச்சேன், என்னடா இந்த வயசுல பொண்ணு இப்படி கல்யாணத்துக்குப் பறக்கறாளேனு'' என்றார் நாராயணன். ''மாப்பிள்ளை அமையுமா?'' என்றார் மேலும். ''அந்த பெருமாளே மணவாளானா வருவாரு பாருங்கோ'' என்றார் ஜோதிடர். 'மணவாளன்' என மனதில் சொல்லிக்கொண்ட நாராயணன் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன் அழகியமணவாளனைப் பற்றி கற்பனை பண்ணத் தொடங்கினார். அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தபோது சமையல் எல்லாம் தயாராக இருந்தது. கோதைநாச்சியாரிடம் விசயத்தைச் சொன்னார் நாராயணன்.

''பெருமாளே, என்ன சோதனை இது'' என சொன்ன அன்னையிடம் ''என்னம்மா'' என்றாள் ஆண்டாள். ''உனக்கு இப்பவே கல்யாணம் பண்ணித்தான் ஆகனுமாம் சோசியர் சொல்லிட்டாராம்'' என வார்த்தைகளை நழுவவிட்டார். ''நான் சொன்னா கேட்கலை, சோசியர் சொல்லித்தான் கேட்கனுமா'' என அம்மாவின் கவலையினை அதிகரித்தாள் ஆண்டாள்.

''அண்ணனும் அண்ணியும் வரப்போறாங்க, ஏன்மா உம்முனு இருக்க'' என்றபடி ஆண்டாள் வாசலை எட்டிப்பார்த்தாள்.

(தொடரும்)