Saturday, 25 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 1

திருவான்மியூரினில் ஒரு அழகிய வீட்டினில் அதிகாலை அனைத்து சப்தங்களுக்கும் மத்தியில் ஒரு சப்தம் அதிகமாகவே கேட்டது.

''ஆண்டாள், ஆண்டாள், எழுந்திரும்மா, மணி ஏழாகப் போகுது, இன்னுமா உறக்கம். சனிக்கிழமைனு வந்துட்டாப் போதுமே'' என பதினைந்து வயது நிரம்பிய ஆண்டாளினை அவரது அன்னையார் கோதைநாச்சியார் எழுப்பி விட்டார்.

''என்னம்மா, இன்னைக்கும் என்னோட கனவை நீ கெடுத்துட்ட, கல்யாண மேடையெல்லாம் தயாரா இருந்துச்சு, போம்மா'' என முனகிக் கொண்டே எழுந்தாள் ஆண்டாள்.

''அடியம்மா, வார வாரம் சனிக்கிழமையானதும் மூணு மாசமா இதே பல்லவியை நீ பாடறியே, இப்ப உன்னை கல்யாணம் செஞ்சிக் கொடுத்தா என்னை ஜெயிலுலப் போட்டுருவாங்கம்மா, போன வாரம் ஏழரைக்குத்தான் எழுப்பினேன் இதே பல்லவியைத்தான் பாடின. சீக்கிரம் குளிச்சிட்டு வா, கோவிலுக்கு நேரமாகுது எனக்கு'' என கோதை நாச்சியார் பரபரப்பாகத் திரிந்தார்.

''இன்னைக்கும்மா கனவு கண்டேனு சொன்னா, சமத்துப் பிள்ளை'' என தனது பங்குக்கு ஆண்டாளின் தந்தை நாராயணன் கேட்டு வைத்தார்.

''ஒரு சினிமாவுக்குப் போகமாட்டேங்கிறா, டி.வி முன்னால உட்கார மாட்டேங்கிறா, புள்ளைகளோட ஊர் சுத்த மாட்டேங்கிறா. ஆனா எப்படித்தான் இப்படி கனவு வருதோ இவளுக்கு, நீங்கதான் அவளை மெச்சிக்கனும், கிளம்புங்க'' என அவசரப்படுத்தினார் கோதை நாச்சியார்.

ஆண்டாள் குளித்துவிட்டு தலையில் சாம்பிராணி புகையைப் போடச் சொல்லி அம்மாவிடம் வந்து நின்றாள். ''ஹேர் ட்ரையர் எடுத்து தலை முடியை காய வை, இப்படி துண்டாலத் துவட்டிக்கிட்டு வந்து நிக்கிற, தடுமம் பிடிக்கப் போகுது'' என ஓடியாடினார் கோதைநாச்சியார். ''எனக்கு அதெல்லாம் வேணாம், மல்லிகைப்பூ இருந்தா அப்படியே வைச்சி விடும்மா'' என்றாள் ஆண்டாள்.

சாம்பிராணி புகைப் போட்டுக்கொண்டே இருக்கும்போது ''ஏன்மா மஞ்சள் கொஞ்சமாப் பூசிக்கிறக் கூடாதோ, வெயில் அடிக்கிற மாதிரி இருக்கு'' என்றார் கோதைநாச்சியார்.

''என்னை அவசரப்படுத்திட்டு இப்படி சாவகாசமா நின்னா எப்படி'' என்றார் நாராயணன். அவசர அவசரமாக கிளம்பினார்கள். ''அம்மா பச்சைக் கலர் தாவணி மாத்திக்கிரட்டா?'' என சத்தமிட்டாள் ஆண்டாள். ''நீலக் கலருக்கு என்னப் பிரச்சினை வந்துச்சு இப்போ, அதையேப் போட்டுக்கிட்டு வா'' என மறுபதில் சொன்னார் கோதைநாச்சியார். ''மாத்திக்கிரேன்'' என மறுபடியும் சத்தமிட்டாள் ஆண்டாள். ''உன் இஷ்டப்படி செய், ஏன் ஸ்கூல் யூனிபார்ம் கூடப் போட்டுக்கிட்டு வா'' எனச் சொன்னவர் ''மாடர்னா இருப்பாளுனுப் பார்த்தா இப்படி பட்டிக்காட்டுத்தனமா இருக்கா'' என தனது கணவரிடம் சொல்லிக்கொண்டார் கோதைநாச்சியார்.

''நீ ரொம்ப மாடர்னு, நட நட'' என்றார் நாராயணன். ஆண்டாள் துள்ளிக்கொண்டு ஓடி வந்தாள். ''போலாம்மா'' என்றாள் அவள். மூவரும் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றார்கள். ''இன்னைக்கு என் பையனோட பிறந்தநாள், பேரு கோபாலகிருஷ்ணன். அவன் பேர்ல ஒரு அர்ச்சனை செஞ்சிருங்கோ'' என கோதைநாச்சியார் சொன்ன மறுகணம் ''என் பேரு ஆண்டாள், அப்படியே எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு ஒரு அர்ச்சனை செஞ்சிருங்கோ'' என்றாள் ஆண்டாள். கோவில் பட்டர் சிரித்தார், ''என்னம்மா அர்ச்சனை பண்ணிரட்டுமா'' என்றார் பட்டர். ''அவாகிட்டே எதுக்குக் கேட்கறீங்கோ, நான் சொன்னதைச் செய்யுங்கோ சாமி'' என்றாள் ஆண்டாள்.

''ஏன்மா சும்மா இருக்கமாட்டியா, என்னைக்க்குமில்லாம இன்னைக்கு ஏன் இப்படி கோவிலுல வந்து மானத்தை வாங்குற, சாமி நீங்க பையனுக்கு மட்டும் பண்ணுங்கோ'' என கோதைநாச்சியார் சொன்னார். ''பொண்ணு விருப்பத்துக்கும் செஞ்சிருங்கோ'' என்றார் நாராயணன்.

பட்டர் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார். அங்கே வந்து இருந்தவர்கள் ஆண்டாளை ஒருமாதிரிப் பார்வையுடன் பார்த்தார்கள். ஆண்டாள் கண்களை மூடி பிரார்த்திக்கத் தொடங்கி இருந்தாள். அவள் பிரார்த்தனையைக் கேட்ட கோதைநாச்சியார் ''யேய் ஆண்டாள், என்னப் பிரார்த்தனை இது, உன் விளையாட்டுக்கு அளவில்லையா?'' என மெல்லச் சொன்னார். ஆனால் ஆண்டாள் பிரார்த்தனையை நிறுத்தவில்லை. ''எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை பெருமாளே'' என பிரார்த்தனையை முடித்தவள் முன்னால் தீபத்தைக் காட்டினார் பட்டர்.

(தொடரும்)

சில்வண்டுகள் - 10 (முற்றும்)

'' நீ சீனிவாசப் பெருமாள் பற்றி எனக்கு ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டாம், இந்த மனிதர்கள் கோபம் ஒன்றே அதிகம் அறிந்தவர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள். அமைதியாய் இருப்பதையும் கண்டு கோபப்படுபவர்கள். தேவர்களும் கோபத்தின் மொத்தவடிவமாகவே இருந்தார்கள். அசுரர்களை அழித்துத்தான் அவர்களால் எதையும் சாதிக்க முடிந்தது. பக்தியில் செழித்திருந்த அசுரர்களை அன்பினால் அமைதியினால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதை நீ அறிவாயா?'' என கோபத்துடன் கூறினார் சட்டை போடாத ஜகநாதன்.

''கோபங்கள் இல்லாமல் வாழ்வது இயலாத காரியம். சின்ன சின்ன விசயங்களுக்கும் கோபங்கள் வந்தே தீரும். கோபம் கொள்வதால் நிலை மாறப்போவதில்லை என அறிந்தும் கோபம் வந்தே தீரும். கோபம் அமைதிக்கான வழியே'' என சட்டை போட்ட ஜகநாதன் சொல்லியதும் மற்ற ஜகநாதன் ஆவேசமானார்.

''நீ இன்னும்மா மாறவில்லை, கோபம் அழிப்பது; எனது கோபம் அமைதியை குலைப்பது. அமைதியாய் இருக்க துடித்திடும் என்னை இந்த கோபம் விடுவதில்லை. உன்னை என்ன செய்கிறேன் பாரடா'' என சட்டை போடாத ஜகநாதன் சொன்னதும் சட்டை போட்ட ஜகநாதன் சுகுமாரனை 'வீட்டுக்கு போ' என சொன்னார்.

சுகுமாரன் அங்கிருந்து ஓடினான். பயங்கரமாகச் சிரித்தார் சட்டை போடாத ஜகநாதன். ''கோபத்துடனே வாழ்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்'' என சட்டை போட்ட ஜகநாதனை எரிக்கத் தொடங்கினார். போராடிப் பார்த்தும் முடிவில் எரிந்து சாம்பலானார் சட்டை போட்ட ஜகநாதன். சாம்பலை உடலில் பூசிக் கொண்டு ஊருக்குள் நடக்கலானார் அவர்.

ஓடிய சுகுமாரன் ஒரு இளைஞன் ஜகநாதன் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டான். மறைந்து இருந்து பார்த்தான். மூதாட்டி உணவு வந்து வைத்தாள் அதே போலே நடித்தாள். ஆனால் அந்த இளைஞன் உண்ணாமல் தட்டை கீழே தள்ளிவிட்டான். கதவைத் திறந்து கொண்டு தீப்புண்களுடன் வந்த அந்த வயதானவர் அந்த இளைஞனை ஒரு பக்கம் இழுத்துச் சென்றார். மூதாட்டியும் உடன் சென்றார். எரியும் வாசனை அடித்தது. அதிர்ந்து போனான் சுகுமாரன். திரும்பியவன் தோளில் ஜகநாதன் கையை வைத்தார். அரண்டு போனான் சுகுமாரன்.

உள்ளே போய் நான் வந்திருக்கிறேன் என சொல் என சொன்னார் அவர். சுகுமாரன் போக மறுத்தான். போ என சத்தமிட்டார். சுகுமாரன் உள்ளே நுழைந்தான். அறையில் ஒருவன் எரிந்து கொண்டு இங்கும் அங்கும் ஓடினான். அவனை கட்டையால் அடித்து அடக்கிக் கொண்டு இருந்தார்கள். 'ஆ' என கத்தியே விட்டான் சுகுமாரன். திரும்பி பார்த்த மூதாட்டி 'நீ திரும்பவும் வந்தாயா' என கூறிக்கொண்டே பொடியை தூவினார். சுகுமாரன் வெளியில் ஓடிவரும் முன் தீயை எறிந்தனர். சுகுமாரன் எரியத் தொடங்கினான்.

இதைக் கண்டு சிரித்துக் கொண்டே கோபம் இல்லா மனிதர்கள் இருக்கவே முடியாது. கோபம் அழிக்கும், அது அமைதிக்கான வழி இல்லை என சத்தமிட்டார். வயதானவரும் மூதாட்டியும் வந்து பார்த்தனர். எரிந்து சாம்பலானான் சுகுமாரன். ஜகநாதன் அவர்களை உள்ளுக்குள்ளே தள்ளிவிட்டுவிட்டு வீட்டினை எரித்துவிட்டு நடக்க தொடங்கினார். கிராமம் அதிர்ச்சிக்குள்ளாகியது. ஊர்க் கோவிலில் சென்று அமர்ந்தார். ஊரில் யாருமே சண்டை போடாமல் இருந்தார்கள். சத்தம் போட்டு பேசுவதற்கு கூட பயந்தார்கள். ஒரு நாள் ஜகநாதபுரத்திற்குள் ஒரு வாகனம் நுழைந்தது. அதிலிருந்து இறங்கிய இளைஞன் ஒருவன் நேராக கோவிலுக்கு சென்று ஜகநாதனைப் பார்த்தார். அவனுடன் வந்த அவன் குடும்பத்தினர் கோவிலைச் சுற்றினார்கள். ஜகநாதனிடம் பேசினான் அந்த இளைஞன்.

''கோபம் கொண்டால் நீங்கள் எரித்து விடுவீர்களாமே''

''ம்ம்''

''உங்களை யார் எரிப்பது?''

அவனை மேலும் கீழும் பார்த்தார் ஜகநாதன்.

''அன்பினை சொல்லக் கூட சத்தம் போட்டுத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அன்பினை வலியுறுத்த கோபம் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி கோபம் மனித வாழ்வில் பெரும் இடம் வகிக்கிறது. சாந்த சொரூபமாக இருக்க நடக்கும் நிகழ்வுகள் உதவுவதில்லை. எல்லா மணி நேரத்திலும் எல்லோரும் கோபம் கொள்வதில்லை. அன்பே உருவமாக வாழ்ந்த மனிதர்களையும் எவரும் மதித்து நடப்பதில்லை. அமைதியைத் தேடி இப்படி கோபம் கொண்டு அழையும் உம்மை யார் எரிப்பது என்றுதான் கேட்டேன்''

''நீ யார் எனத் தெரியவில்லை''

''உனது கண்களுக்கு என்னைத் தெரியாதது ஒன்றும் பெரிய விசயமில்லை. உன்னிடம் எத்தனை பெரிய சக்திகள் இருக்கின்றன. நீ நினைத்தால் எவரையும் எரிக்கலாம். ஆகாரம் காற்று எதுவுமின்றி நீ வாழலாம். மரணம் என்பதை அருகே விடாத வண்ணம் நீ இருக்கலாம். இத்தனை சக்திகளை கொண்டு நீ அமைதியை உலகில் நிலை நிறுத்தி இருக்கலாம். உன்னால் ஏன் முடிவதில்லை? உனது அமைதியை குலைத்தார்கள் என்றுதானே நீ நினைத்தாய். அவர்கள் ஏன் அமைதியற்று திரிகிறார்கள் என நினைத்தாயா?''

''நீ யார்? அவர்கள் அமைதியற்று இருக்கவே பிறந்தவர்கள். அவர்களுக்கு அமைதியாக இருந்தால் மரணித்துப் போனதாக நினைக்கக் கூடியவர்கள். எப்பொழுதும் சண்டையும் கோபமும் சத்தமும் போட்டு கொண்டே இருக்க வேண்டும் அவர்களுக்கு. அதனால் எனது அமைதிக்கு இடையூறு விளைவித்தால் எரிக்கிறேன். உன்னை எரிக்கும் முன்னர் சொல்லிவிடு''

''உனது செயல்களுக்கு காரணம் சொல்லிவிட்டாய் பார்த்தாயா! என் பெயர் சீனிவாச பெருமாள். அமைதியற்று இருப்பவர்களிடம் அமைதியை ஏன் எதிர்பார்க்கிறாய். இப்பொழுது சொல் உன்னை யார் எரிப்பது?''

ஜகநாதன் கோபம் கொண்டு எழுந்தார்.

'உடல் நிர்வாணம் ஒன்றும் அவசியமில்லை. மனம் நிர்வாணம் ஆக வேண்டும். நீ திருந்திவிடுவாய் என இருந்தேன். நீ என்றுமே மாறுவதில்லை என முடிவு கொண்டாய். உன்னை யார் எரிப்பது' என திரும்பவும் கேட்டான் அவன்.

ஜகநாதன் சுற்றத் தொடங்கினார். 'உன்னில் அமைதியும் அன்பும் நிலவட்டும். கோபம் உன்னிடம் இருந்து போகட்டும். இந்த மனிதர்கள் இப்படித்தான் சண்டை சச்சரவுகளுடன் இருப்பார்கள். நீ எரிப்பதை நிறுத்தி கொள்' என சீனிவாச பெருமாள் சொல்லியபோது ''ஏங்க இவ்வளவு நேரம் இங்க என்ன பண்றீங்க சீக்கிரம் வாங்க இராமேஸ்வரம் போகனும்' என கடிந்து கொன்டார் அவன் மனைவி.

வாகனத்தில் ஏறிக்கொண்டு கிளம்பியபோது தன்னையே எரிக்கத் தொடங்கினார் ஜகநாதன். கிராமம் வேடிக்கைப் பார்த்தது.

முற்றும்.

சில்வண்டுகள் - 9

நிலம் அதிர்ந்தது. வெகுவேகமாக தூரத்தில் ஒருவர் ஓடிவருவதைப் பார்த்தார் ஜகநாதன். சுகுமாரனை தனக்குப் பின்னால் சென்று நின்று கொள்ளுமாறு கூறினார். மோகனவள்ளி திரும்பிப் பார்த்தார்.

''ஜகநாதா என்னை காப்பாத்துடா, அவனை இனிமே அடிக்க மாட்டேன், ஜகநாதா என்னை மீண்டும் அழிய விட்டுராதேடா'' என மோகனவள்ளி சொல்லிக்கொண்டிருக்கும்போதே சட்டை போடாத ஜகநாதன் அங்கு கடுங்கோபத்துடன் வந்து நின்றார். மேலும் கீழும் தாவி குதித்தார். இதை மறைந்து நின்று பார்த்த சுகுமாரன் உறைந்து போனான். உள்ளம் நடுநடுங்கியது. கண்களை இறுக மூடிக்கொண்டான். ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் ஆடிய சட்டை போடாத ஜகநாதன் எதுவும் பேசாமல் தாயை எரிக்கத் தொடங்கினான். தாய் அலற ஆரம்பித்தாள்.

''வேண்டாம்டா ஜகநாதா, நிறுத்துடா ஜகநாதா, அவன் உன் அப்பாவையே எரிச்சான், நீ என்னை எரிக்கிறியேடா'' என சொல்லியபோது சட்டை போட்ட ஜகநாதனுக்கு கடுங்கோபம் வந்தது. ''என்னம்மா சொல்கிறாய்? நான் எரித்தேனா? உன்னை காப்பாற்றுவது மகாபாவம்'' என சொல்லிவிட்டு சுகுமாரனை அழைத்துக்கொண்டு ஊருக்குள் நடக்கத் திரும்பினார். சட்டை போடாத ஜகநாதன் சுகுமாரனைப் பார்த்துவிட்டார். ஆவேசத்துடன் ஓடி வந்து சுகுமாரன் முன்னால் நின்றார் அவர். சுகுமாரன் நடுநடுங்கினான். சட்டை போட்ட ஜகநாதன் 'இவன் அமைதியானவன், இவனை விட்டுவிடு'' என சொன்னதும் தரையில் ஆக்ரோஷமாக சுற்ற ஆரம்பித்தார் சட்டை போடாத ஜகநாதன். அதற்குள் தாய் எரிந்து சாம்பலாகி இருந்தார். கீழே விழுந்து சாம்பலில் உருள ஆரம்பித்தார். இந்த செய்கைகளை கண்டு சுகுமாரன் மயங்கி விழுந்தான்.

''நிறுத்து ஜகநாதா, உனது கோபத்தையும் ஆவேசத்தையும் நிறுத்து'' என சட்டை போடாத ஜகநாதனிடம் சென்று உரக்கச் சொன்னார் சட்டை போட்ட ஜகநாதன். உருள்வதை நிறுத்தியவர் மேலும் கீழும் பார்த்தார். உரக்கச் சிரித்தார். மயங்கிய நிலையிலே இருந்தான் சுகுமாரன்.

''நீ அமைதியை தேடிக் கொண்டாயோ''

''அமைதியில் தான் உள்ளேயே இருந்து கொண்டேன், நீ வெளியே சென்று இன்னமும் கோபம் தணியவில்லை, நான் உள்ளே இருந்து அமைதியை அறிந்து கொண்டேன்''

''வெளியேயும் அமைதி காணலாம் என அன்று உன்னிடம் கூறிவிட்டு வெளிச்சென்று சிவாங்குகம் காட்டினிலே கடுந்தவம் புரிந்து அமைதியின் உச்சத்தைத் தொட்டபோது கடும் மழை எனது தவம் கலைத்தது. இடம் மாறினேன். அமைதியாய் இருக்க இடம் தேடியபோதெல்லாம் எவரேனும் ஒருவர் இன்னல் தந்து கொண்டிருந்தார். எனவே நான் செய்யும் செயல்களுக்கு உன்னிடம் இனிமேல் விளக்கம் தரப்போவதில்லை''

''உனது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர் என அடுத்தவரை கைகாட்டுவதை இன்னும் நீ மறக்கவில்லை''

''நீயும் அமைதி இழந்துதானே இதோ இந்த மாபாவியின் சொல்கேட்டு வீட்டினுள் வருபவரை விரட்டி அடித்தாய், நீயும் அமைதியற்றே அலைந்து திரிந்தாய். சில தினங்களுக்கு முன்னர் அதிகாரிகளை பொடி தூவி நீ எரித்ததை நான் அறியமாட்டேன் என நினைத்தாயா? எனது கோபத்தை நீ அதிகரிக்காதே''

''மனிதர்கள் கோபம் இல்லாமல் வளர்ச்சி அடைய முடிவதில்லை. ஒன்றை உரசாமல் ஒன்று உருமாற்றம் கொள்வதில்லை எல்லாம் ஒருவித கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அதை அறிய நீ வெளியே திரிய வேண்டியதில்லை, உள்ளே நான் முடங்கிப்போக அவசியமில்லை. இதோ இவனே எனக்கு ஆசான்'' என சட்டை போட்ட ஜகநாதன் சுகுமாரனை நோக்கி காட்டியதும் அவனை எரிக்கத் தொடங்கி்னார் சட்டை போடாத ஜகநாதன்.

விழித்தான் சுகுமாரன். எரிய விடாமல் தடுத்தார் சட்டை போட்ட ஜகநாதன். ''நீ எரிப்பதைத் தொடர்ந்தால் நான் பிழைக்க வைப்பதை தொடர்வேன், நீ எரித்ததற்கு அர்த்தம் இல்லாமல் போகும் எனவே நீ நிறுத்திக்கொள்'' என அவர் கூறியதைக் கேட்டு மேலும் கீழும் குதித்தார் சட்டை போடாத ஜகநாதன்.

சுகுமாரனை நோக்கி ''அன்றே என் பின்னால் வராதே என உன்னிடம் சொன்னேன், உன்னைப் போன்றவர்கள் எங்கள் தவ யோகத்தினை தடுக்க வல்லவர்கள் இப்பொழுதே சென்று விடு'' என சொன்னதும் 'அவன் தாய் தந்தையர்களை இழந்துவிட்டான், இனிமேல் என்னுடனே இருப்பான், கோபம் அமைதிக்கான வழி என அறிந்து கொள் அமைதியை அழிக்கவல்லது அல்ல. கோபம் நேர்வழியில் நடக்க உதவி செய்யும், கோபத்தினால் ஏற்படும் மெளனம் சாதிக்கவல்லது. அந்த கோபத்தைக் கொண்டு நீ எரிப்பதை தவிர்த்துவிட்டு அமைதியை உருவாக்கக் கற்றுக்கொள்'' என சட்டை போட்ட ஜகநாதன் சொன்னதும் சுகுமாரனுக்கு சப்தநாடிகளும் ஒடுங்கிவிட்டது.

''ஜகநாதா'' என பலமாக கத்தினார் சட்டை போடாத ஜகநாதன். ''நீ அணிந்திருக்கும் ஆடையைப் போன்றே உன்னில் இருக்கும் கோபத்தை மறைத்து வைக்கிறாய். நான் அமைதியாய் இருக்கத்தான் விழைந்தேன். இதோ இந்த மாபாவி சொன்னதுபோல் இந்த உலகத்தில் அமைதியாகவே இருக்க இயலாது!'' என சொல்லிவிட்டு கிறுகிறுவென சுத்தினார்.

''இருக்க இயலும், சாதுக்கள் இருக்கிறார்கள். சதா இறைவனையே நினைத்துக்கொண்டு சக மனிதர்கள் மேல் கோபம் கொள்ளாமல் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்''

''ருத்ர தாண்டவம் தெரியாதா! புராணங்கள் படித்தறியா மூடனே! தேவலோகம் என சித்தரித்து தவத்தினை சிறுமைபடுத்திய முனிவர்கள் கூட்டம் தெரியாதா, கோபம் கொண்ட மகான்களே அதிகம் உண்டு! அமைதியை விரும்புவதுபோல் அழிப்பதையே குறிக்கோளாயும், அழிக்கும் எண்ணம் கொண்டவர்களை அதிகரித்தவர்களே அதிகம் உண்டு. எந்த இறைவன் அமைதியே சொரூபமாக வாழ்ந்தார்!'' என சொல்லி சுற்றிக்கொண்டே ஜகநாதனை நோக்கி வந்தார் சட்டை போடாத ஜகநாதன். இருவரையும் கண்ட சுகுமாரன் கதிகலங்கிப் போனான்.

''கோபத்தில் மதி இழந்து பேசாதே, ஒருவரை மட்டும் உனக்கு உரைக்கிறேன், அவர் சீனிவாசப் பெருமாள்'' என சட்டைப் போட்ட ஜகநாதன் சொன்னதும் சட்டைப் போடாத ஜகநாதன் அப்படியே நின்றார்.

(தொடரும்)