Friday, 24 July 2009

கடவுள் ஆசைப்படுவாரா?

விட்டுப்போன ஆசைகள் என பல இருக்கும். சொல்வதற்கு நினைவில் வராத ஆசைகளும் ஒளிந்திருக்கும். சொல்ல நினைத்து நாகரிகம் கருதி சொல்லாத ஆசைகளும் இருக்கும் ;) இப்படி ஆசைகள் மரணம் வரை தொடர்பவையே. நான் இறந்தால் எனது கிராமத்து சுடுகாட்டில் என்னை எரிக்க வேண்டும் என சொன்ன ஆசையும் உண்டு. பின்னர் நான் மரணமடைந்த பின் எனது அங்கம் யாவும் எடுத்துக்கொள்ளுங்கள் என எழுதிக் கொடுத்த ஆசையும் உண்டு.

பேராசைகள்

எனது எழுத்துக்கு வழி சொன்ன முத்தமிழ்மன்றம், சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கத்திற்கு வழியமைக்கும் முத்தமிழ்மன்றம் பதிப்பகத்துறையில் காலடி வைத்து முத்தமிழ்மன்ற பதிப்பகம் என பெரும் மகிழ்வுடன் வலம் வர வேண்டும் எனும் ஆசை உண்டு.

பொதுநல அமைப்பு ஒன்றை உருவாக்கி அதை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் எனும் ஆசையும் உண்டு.

Pathways எனும் ஆங்கில நாவல் எழுதிடும் ஆசையும் உண்டு.

இந்திய நாட்டின் பிரதமராக வேண்டும் எனும் ஆசை அதிகமாகவே இருந்தது. இப்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக வேண்டும் எனும் ஆசை வந்துவிட்டது ;)

உலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் அழித்துவிட்டு கடவுள் மதம் என்ற தடமே இல்லாமல் செய்ய வேண்டும் எனும் ஆசையும் உண்டு.

ஒற்றுமையுணர்வுடன் கூடிய மொத்த மனித சமுதாயத்தையும், அனைத்து நாடுகளும் ஒன்றே என ஒரே நாணயத்தையும், போட்டியும் பொறாமையும் காழ்ப்புணர்வு இல்லாத மேன்மை நிறைந்த சமுதாயத்தையும் நிறுவிட வேண்டும் எனும் ஆசை அளவில்லாமல் உண்டு.

எந்த ஒரு நாட்டுக்கும் எல்லை என்பதை வரையறுத்துக்கொள்ள முடியாது எனவும், போர் என்பதை அறியாத மனித இனமும் அனைவருக்கும் உரிமை எனவும் அதே வேளையில் பிறர் உணர்வுகளையும் உரிமைகளையும் காக்கும் வண்ணம் ஒரு உலகமாக மாற்றிட ஆசை உண்டு.

எளிய கல்வி முறை, எளிய வேலை முறை, ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்வதே முக்கியம் என காப்புரிமை சட்டத்தையே கலைத்துவிடும் ஆசை அளவிடமுடியாது.

கறைபடாத எண்ணம், குறையில்லாத வாழ்க்கை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, உண்மையான உலகம் பட்டினியில்லாத குழந்தைகள், நோயில்லாத மனிதர்கள் என நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு உலகத்தை உருவாக்க ஆசை.

எப்படி இதுவெல்லாம் முடியும்? எப்படி இப்படியொரு உலகத்தை கடவுள் படைத்தாரோ அதுபோன்று இப்படிப்பட்ட உலகத்தையும் கடவுளால் படைக்கமுடியும். ஆனால் ஒரே கேள்வி இதுதான்

கடவுள் ஆசைப்படுவாரா?

முற்றும்

ஆசைப்பட்டேன் - 5

தேர்வில் வெற்றி பெற்றதும் மனம் அளவிலா மகிழ்ச்சி கொண்டது. பார்மகாலஜி அல்லது வேதியியல் துறைக்குச் செல்ல வேண்டும் என ஆசையாய் இருந்தது. பீகார் மாநிலத்திலும் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் இரண்டு வார இடைவெளியில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. பீகார் மாநிலத்தில் தேர்ச்சியடையாமல் போகவே ஆசை வேதனையானது. ஆசைப்படு ஆசைப்படு என நண்பர்கள் சொல்லியும் ஆசையே இல்லாமல் மேற்கு வங்காளம் சென்றேன். அங்கே நுண்ணுயிரியல் தந்தார்கள். ஆசையுடன் ஏற்றுக்கொண்டேன். பரோடா செல்ல அழைப்பு வந்தது. ஆனால் ஆசைப்பட முடியவில்லை. வேதியியல் பிரிவும் தந்தார்கள். இருப்பதே போதும் என ஆசை கட்டுப்பட்டது. ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் பேராசை ஒருவழியாய் முதல்படியை தொட்டது.

அப்போதுதான் எனது கவிதைகளை வெளியிட வேண்டும் எனும் ஆசை துளிர்விட்டது. எழுதிக்கொண்டேதான் இருந்தேன். கவிஞன் என நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டேன். ஆசை துள்ளல் கொண்டது.

மேற்கொண்டு மருத்துவ ஆராய்ச்சி செய்ய வேண்டும் என ஆசை அதிகமாகவே இருந்தது. எனது ஆசையை நிறைவேற்ற எனது முதுநிலை ஆசிரியரே உதவுவதாக சொன்னார். சில காரணங்களால் அவரது ஆசையுடன் என் ஆசை சேராமல் போனது. டில்லி சென்று ஆசையைத் தொடர்ந்தேன். மூன்றே மாதங்களில் கல்யாண ஆசை தொற்றிக்கொள்ள ஆசிரியர் ஆனேன்.

கல்யாணப் பருவம்

என்னுடன் என் தாய் எப்போதும் இருக்க வேண்டுமெனும் ஆசை அடுத்த வருடத்திலே தொலைந்து போனது. அழுதபோதாவது அம்மா வருவாளா? இங்கேதான் நான் கடவுளின் ஆதிக்கத்தில் முழுதும் என்னை தொலைத்து இருந்தேன். உயிர் வாழும் ஆசை கூட அற்றுப்போனது எனலாம். தாய் ஆசைப்பட்ட பெண்ணும் நான் ஆசைப்பட்ட பெண்ணுமே மனைவியானார். சிறகுகள் முளைக்கத் தொடங்கியது. இந்தியாவில் பண்ண வேண்டிய ஆராய்ச்சியை இங்கிலாந்தில் இலண்டனில் பண்ணிட வாய்ப்பு கிடைத்தது. ஆசையிலும் பேராசை!

கல்யாணம் ஆனது, குடும்பமும் ஆனது. அட இனி ஆசைப்படாமல் இருக்க முடியாதே. ஆனால் ஆசைகள் என்னைத் தொலைக்கத் தொடங்கின. கவியுணர்வு தொலைந்தே போனது. ஆராய்ச்சி என்னை ஆக்கிரமிக்கவும் குடும்ப பொறுப்பும் என்னை ஆசையை சற்றே ஓரமாக்கத் தூண்டியது. கடவுளை கேள்வி கேட்கும் விநோத ஆசை வந்து சேர்ந்தது. திருநீரும் குங்குமும் அணிந்தே பழக்கப்பட்டு வெறும் நெற்றியாய் நடந்திட எதையோ தொலைத்து விட்டது போன்ற உணர்வு. மதித்து போற்றிய கடவுளுடன் சற்று அதிகமாக விளையாடிய தருணங்கள்தான் இவை.

கோதை ஆண்டாள் ரங்கன் மேல் ஆசைப்பட்டாள்
முருகன் வள்ளியின் மேல் ஆசைப்பட்டார்
ராமன் சீதையின் மேல் ஆசைப்பட்டார்
சீதை ராமன்மேல் ஆசைப்பட்டார்
மீரா கண்ணன் மேல் ஆசைப்பட்டாள்
நானும் நாராயணன் மேல் ஆசைப்பட்டேன்!

நுனிப்புல் சிதறியது. நுனிப்புல் ஆசை பேராசையானது. புத்தகம் வெளியிட்டு எனக்கும் எழுதத் தெரியும் என அடையாளம் காட்டிக்கொண்டேன். கவிதைப்புத்தக ஆசை ஆசையாகவே இருக்கிறது.

அதே வேளையில் ஆசையாய் அன்று ஆரம்பித்த ஆராய்ச்சி வரும் காலத்தில் மக்களுக்கு உதவும் என நினைக்கும்போது ஓரளவு நிம்மதியாக இருக்கிறது. தொடர்ந்து ஆராய்ச்சி ஆசையை நடத்தி தந்து கொண்டிருக்கும் நாராயணனை வணங்கிக் கொள்கிறேன்.

என் பேராசைகள் தொடரும்

ஆசைப்பட்டேன் - 4

நான் வீட்டில் கடைசிப் பையன், அதுவும் பதின்மூன்றாவது. சிறுபிள்ளையாய் இருக்கும்போது என்னை ஏன் கடைசியாய் பெற்றீர்கள் என பெற்றோரிடம் கவலையாய் கேட்டதுண்டு. என்னை யார் பார்த்துக்கொள்வார்கள் என ஆசை வந்து அழுகையுடன் கேட்டதுண்டு. அப்பொழுதெல்லாம் ஆண்டவன் அத்தனை எனக்குத் தெரியாது, அட மனைவினு ஒருத்தர் வருவாங்கனு ஒன்னுமே புரியாது!

கல்லூரிப் பருவம்

மருத்துவம் சம்பந்தபட்ட கல்லூரிக்கு மட்டுமே செல்வேன் என ஆசை அடம்பிடித்தது. நுழைவுத் தேர்வு எழுதும்போதே ஊட்டியில் மருந்தாக்கியலுக்கு அழைப்பு வந்தது. கேள்வி எல்லாம் கேட்ட பின்னர் நாற்பதாயிரம் என சொன்னதும் பணம் கொடுத்து படிக்கமாட்டேன் என நான் சொல்ல ஆசை தவித்தது.

நாட்கள் நகர நகர பல் துறையிலிருந்தும் பதிலில்லை, விவசாயம் இருக்கிறது கவலையில்லை என சொல்ல ஆசை அவதிப்பட்டது. இப்படியே போனால் எப்படி என சொல்ல முப்பத்தாயிரம் தந்தே வறட்டு கெளரவம் ஆசையை வெற்றி பெற வைத்தது. எனக்கு இது அவமானமாகத்தான் இருந்தது, மனதில் தீராத வலியையும் தந்தது. மேற்படிப்பு என ஒன்று படித்தால் தேர்வில் தேறி பணம் தராமல் படிக்கச் செல்வது என ஆசை அச்சாரமிட்டது. ஓரிரு மாதங்களில் ஒரு இலட்சம் கேட்டு மருத்துவருக்குப் படிக்க அழைப்பு வந்தது. மருத்துவராகும் ஆசை அதற்குள் மரத்துப் போயிருந்தது.

கவிதை எழுதும் ஆசை பன்னிரண்டாவது தமிழ் ஆசிரியர் வளர்த்தது. பேசும் பேச்செல்லாம் கவிதையாய் போய் கல்லூரியில் கவிஞன் பட்டம் பெற வைத்தது. கல்லூரி நண்பர்களுடன் சண்டை போடாமல் இருக்க வேண்டி ஆசை வந்தது. இருவர் மட்டும் என்னுடன் ஒரே ஒரு முறை முறைத்துக்கொள்ள ஆசை நொறுங்கியது. இரண்டு நிலையுமே எனது தேவையில்லாத பேச்சினால் வந்தது. அடுத்த நாளே கைகள் குலுக்கினால் ஒரு முறை உரசியது வலித்தது. நாக்கில் இராகு என்று சொன்னார் ஜோசியர், எவரையும் கொத்திவிட்டுப் போகும் என்றார், ஆனால் எனக்கல்லவா வலித்தது. பிறரைக் கொத்தும்போதெல்லாம் எனக்கல்லவா வலிக்கிறது. அமைதியாக இருக்க ஆசைப்பட்டேன். அளவுடன் பேசவே ஆசைப்பட்டேன். இருந்தும்...

பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு குரல் முழக்கமிட ஆசை கொண்டது. அந்த ஆசை வென்றது. என்னை ரஜினி என சொல்லிச் சிரித்த நண்பர்கள் கண்டு மனம் மகிழ்ந்தது.

அகில இந்திய தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனும் ஆசைக்கு அடித்தளமிட்டேன். அடிக்கடி படத்துக்கும் செல்லமாட்டேன், நண்பர்களுடன் வீண் அரட்டையிலும் ஈடுபடமாட்டேன். குடிக்கவும் மாட்டேன், புகைக்கவும் மாட்டேன். பெண்கள் கண்டால் ஒதுங்கிச் செல்வேன் ;) சாமியா நீ? என என்னை கேட்டவர்களுக்கு என் குலசாமி கருப்பசாமி என்றே சொன்னேன்.

வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்றார் மாணிக்கவாசகர். கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசுபோதினும் அச்சமில்லை என்றான் பாரதி. தேர்வில் வெற்றி பெற வேண்டுமெனும் ஆசை பெண்களைக் கண்டு அச்சப்பட்டது. காதல் ஆசை வரமாலிருக்க கவிதையை காதல் செய்த தருணம் அது. மோகத்தில் மூழ்கிவிடாதிருக்க மனம் படிப்பில் மூழ்கிய தருணம் அது. இங்கேதான் அன்பை ஆசை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியது எனலாம்.

காதல் வருமா? வராதா? வந்ததா? வரவில்லையா? எவரும் என்னைக் காதலித்தான் இவன் என இதுவரை சொன்னதில்லை. நானும் இவளை காதலித்தேன் என சொல்லும்படி எவரையும் காதலிக்கவும் இல்லை. காதல் ஆசை ஒளிந்து கொண்டது! கல்யாணம் என சொன்னதுமே கல்லூரிப் பருவத்திலே காதல் ஆசை வந்தது. காதல் ஆசை கொண்ட பெண்ணையே கல்யாணம் செய்து அந்த காதல் ஆசை வென்றது.

இந்த காதலும் கல்யாணமும் தாயின் ஆசையால் என்னை ஒட்டிக்கொண்டது. கல்யாண சம்மதம் என் தாய் கேட்க, காதல் ஆசை வந்து சேர்ந்தது. கடவுளின் மேல் தீராத காதலும் வந்து குவிந்தது.

படிக்கும்போது ஜோசியத்தில் ஆசை பிறந்தது. கையை காட்டி கதைகள் கேட்க ஆசை வளர்ந்தது. காட்டிய கையை மூடிக்கொள்ளச் சொன்னதும் தைரியம் வந்தது. காட்டிலே இருந்தாலும் நோட்டினைப் பார்ப்பாய் என்று சொன்னதும் ஆசை பெருமிதம் கொண்டது!

என் ஆசைகள் தொடரும்