Thursday, 23 July 2009

ஆசைப்பட்டேன் - 3

பசுமாடு கன்றுக்குட்டி போட்டதும் சீம்பால் என காய்ச்சித் தருவார்கள். எங்கே பசுமாடு கன்று போடும், எப்பொழுது கன்று போடும் எனக் காத்திருந்து குடிக்க வேண்டும் என குடித்து மகிழ்ந்த ஆசை இப்போது இல்லை, அட பசுமாடுகளே பக்கத்தில் இல்லை!

ஆடுகள் ஓட்டிக்கொண்டும், மாடுகள் ஓட்டிக்கொண்டும் காடுகளில் மேய்த்த சிறுவயதில் இயேசுநாதர் அத்தனை பழக்கமில்லை, கண்ணபிரான் அத்தனைத் தெரியவில்லை, திருமூலரும் எனக்குப் பரிச்சயமில்லை. அவர்களாகவே ஆக வேண்டும் எனும் ஆசை எழுந்திட வழியுமில்லை, இனி வழி பிறக்கப்போவதுமில்லை! இப்போது நுனிப்புல் எழுதி ரெங்காழ்வாராக மாற வேண்டுமெனும் ஆசை பொய்யான ஆசையே!

கண்மாயில் எப்போது தண்ணீர் வரும், சிவந்த தண்ணியில் எப்போது தவழ்ந்து போவோம் என ஆசையாய் மழை தரும் வானம் பார்த்ததுண்டு, ஆண்டுக்கு ஒருதரமாவது பொய்க்காமல் மழையும் தண்ணீர் தேக்கிப் போவதுண்டு. கிணற்று கட்டிடத்து மாடியில் இருந்து குதித்து நீந்த தண்ணீர் வராதா என ஆசையும் உண்டு. நிறைந்து வழியும் கிணறு என சிலமுறை கண்டதும் உண்டு. தரை தெரிய தண்ணீர் இருக்க ஆசை அழிந்ததுண்டு.

ஐந்தாவது படித்துவிட்டு ஆறாவது வகுப்பிற்கு அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல வேண்டும் என ஆசை வந்தது. ஆசையின் விளைவாக அந்த பள்ளிக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. முதலாவதாக வர வேண்டுமென ஒரு ஆசிரியை என்னிடம் சொல்ல ஆசை பிறந்தது, அந்த பள்ளியை விட்டு விலகும் வரை என் ஆசையோடு அவரது ஆசையும் நிறைவேறியது! கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற வேண்டுமென கணித ஆசிரியரின் ஆசை என் ஆசையோடு இரண்டு மதிப்பெண்களில் தகர்ந்து போனது!

தமிழ் ஆசிரியையின் அன்பினால் தமிழ் மேல் பற்று வந்தது. தமிழ் எனக்குள் விலகாமல் உயிரும் கொண்டது. சிறு வயதில் கதை எழுதிட ஆசை வந்தது. வாடா மலர் எனப் பெயரிட்டு எழுதிய பின்னும் அது வாடிப்போனது!

என் சின்ன அக்கா அதிகாலையில் காபி போட்டு என் மேசைக்கு கொண்டு வர வைக்க சண்டை போடும் ஆசை உண்டு. அக்காவும் வந்து எடுத்து குடி என எடுத்து வராமல் சண்டையிட ஆசை அடம்பிடிப்பதுண்டு. ஆசையை கொன்றுவிட வேண்டாமென அம்மா எடுத்து வந்து தருவதுண்டு. நான் இப்போது மனைவிக்கு காபி போட்டுத் தந்து மகிழும் ஆசை உண்டு அது அதிகாலையும் சரி நடுஇரவு எனினும் சரி ;)

கிரிக்கெட் விளையாடியே கரிக்கட்டை நிறத்துக்குப் போனாயே என வீட்டில் சொல்வதுண்டு ;) கிராமத்து கிரிக்கெட் அணி சுற்று வட்டாரத்தில் பெரிய அணி என பெயர் வாங்க நினைத்த ஆசை உண்டு. கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியதும் அந்த ஆசை பொய்த்துப் போனது.

என் ஆசைகள் தொடரும்.

Wednesday, 22 July 2009

ஆசைப்பட்டேன் - 2

சின்னஞ்சிறு வயதில்

அன்னையின் அரவணைப்பில் அன்பின் கதகதப்பில் வாழ்ந்த பருவம். என்ன என்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதை இப்பொழுது நினைத்துப்பார்க்க முடியவில்லை, நினைவில் அனைத்தும் நின்றுவிடவில்லை. எப்படி இறவா ஆசைகளாய் இருக்கும் இது?

ஆசைப்படுவது என்பது அனைவருக்கும் சாத்தியமே. 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா' என்பார்கள். ஆசைப்படட்டும், அப்பொழுதுதானே முடம் என்பது ஒன்றும் தடையல்ல என வேறு வழி தேட முயற்சி வரும்.

பள்ளிக்குச் சென்று பயின்றிட ஆசைப்பட்டு இருப்பேனா?

படுத்து உறங்கியே சுகமான தாலாட்டு கேட்க ஆசைப்பட்டு இருப்பேனா?

புத்தம் புது நண்பர்கள் கொண்டதால் மகிழ்ச்சியில் திளைத்து இருப்பேனா?

இருப்பதை பங்கு போட இவர்களா என ஆசையை கொளுத்தியிருப்பேனா?

கதை கதையாய் பாட்டியும் பெற்றோர்களும் சொன்னால் தான் சின்னஞ்சிறு வயது ஆசைகள் வெளித் தெரியும்.

பசிக்கும்போது தாயின் பாலுக்காக ஆசைப்பட்டிருப்பேன். வலியின்போது அன்பின் அதட்டலுக்கு ஆசைப்பட்டிருப்பேன். எல்லா பொம்மைகளுமே எனக்கே என என்னிடம் வைத்திருந்திருக்க ஆசைப்பட்டு இருப்பேன்.

இப்படி ஆசைகளில் மனதில் நீங்காத ஒரு ஆசை உண்டே.

வயல் வரப்புகளில் வாகனம் ஓட்டுவது போல் ஓடுவதுண்டு. மிகவும் வேகமாக, ஆட்களை ஏற்றி இறக்குவதாக கற்பனையும் அதில் உண்டு. இதற்கென ஒரு நண்பரும் கிடைத்தார். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். சின்னஞ்சிறு வயதில் அப்படி வாகனம் ஓட்டுவது போல் ஓடியதை பெரியவன் ஆனதும் நினைவு கொள்வார். அப்படி வாகனம் ஓட்டிய காரணத்தாலே பேருந்து ஓட்டுநராக வேண்டும் என ஆசை சிறு வயதிலே உண்டு. கனவெல்லாம் காண்பேன். ஆனால் இந்த ஆசை நிறைவேற நான் எப்பொழுதுமே முயற்சி செய்தது இல்லை. இந்தியாவில் இருந்தவரைக்கும் இரு சக்கர வாகனத்துக்குக் கூட நான் பயிற்சி எடுக்கச் செல்லவில்லை. ஆக இது ஒரு அற்ப ஆசை என்றே தோன்றுகிறது!

ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதை அடைய முயற்சி செய்ததுண்டா? வலிகள் சுமந்ததுண்டா? அவமானம் தாங்கியதுண்டா? சாதித்தே தீருவேன் என அடம்பிடித்ததுண்டா? அப்பொழுதுதான் ஆசைக்கு அர்த்தம் வரும்.

என் ஆசைகள் தொடரும்.

ஆசைப்பட்டேன் - 1

மண்ணாசை
பெண்ணாசை
பொன்னாசை

இந்த மூன்று ஆசைகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்று இல்லாமல் எந்த ஒரு மனிதனும் இருக்கவே முடியாது என்பார்கள்.

'ஆடையில்லாத மனிதன் அரை மனிதன்
ஆசையில்லாத மனிதன் குறை மனிதன்'

'ஆசைப்படு ஆனால் அவதிப்படாதே'

இறந்தகால ஆசை
நிகழ்கால ஆசை
எதிர்கால ஆசை

சின்னஞ்சிறு வயதில் வந்த ஆசைகள் இப்பொழுது இறந்தகால ஆசைகள் ஆனால் அவை இறவா ஆசைகள் என சொல்லலாம். அவைகளை எப்பொழுது வேண்டுமென்றாலும் நாம் முயன்றால் உயிர்ப்பித்துக் கொள்ளலாம். சில விதிவிலக்குகள் தவிர்க்கமுடியாதவை.

இப்பொழுது நினைத்துக்கொண்டிருக்கும் ஆசைகள் நிகழ்கால ஆசைகள். இவை நிழலாய் தொடரும், திடீரென மறையும் ஆனால் இறவாத் தன்மை கொண்டவை.

எதிர்கால ஆசைகள் என்பவை நம்மை கூறு போடுபவை. இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என இப்பொழுதே காசு பணம் சேர்க்க வைத்து நிகழ்காலத்தை கொள்ளையடிப்பவை இந்த ஆசைகள்.

ஆசை மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு மனிதனிடம் ஆசையைப் பட்டியலிடு எனச் சொன்னால் அவனுக்கு ஆசையைப் பட்டியலிட இந்த பிறவி மட்டும் போதாது என்பான் ஒரு கவிஞன்.

ஒரு துறவி எலியை விரட்ட பூனை பிடித்து குடும்பஸ்தனான கதையை சொல்லி வைத்ததே மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் என எச்சரிக்கையை நமக்குத் தரத்தான்.

நிராசை
பேராசை
நியாய ஆசை

எந்த ஒரு ஆசையாய் இருந்தாலும் தனக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கும் உதவும்படியாக இருக்கும் ஆசைதான் மிகச் சிறந்த ஆசை.

'பேராசை பெரு நஷ்டம்'

பேராசைப்படுவதில் தவறில்லை! ஆனால் நியாயமான பேராசைகள் கூட நஷ்டத்தில் தான் முடிகிறது என எண்ணும்போது பேராசை பெரு நஷ்டமாகவே இருக்கிறது. நிறைவேறாத ஆசைகள் மனதை வாட்டம் அடையச் செய்கின்றன. ஆனால் மனிதன் மிகவும் கவனமாகவே இருக்கிறான், அந்த ஆசையை உதறிவிட்டு வேறொரு ஆசையை எடுத்துக்கொள்கிறான். இதைத்தானே சந்தர்ப்பம்தனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என சொல்கிறார்கள். நியாயமான ஆசைகள் நியாயமாகவே இருக்க முடியும்.

'ஆசை என்பதின் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே'

இது ஒரு கவிஞனின் ஆதங்கம். இன்று பணத்தை மையப்படுத்தியே பல ஆசைகள் எழத் தொடங்கிவிட்டன. இந்த ஆசை மனிதனை உற்சாக மட்டும் படுத்தவில்லை, மனிதத்தையே கொன்று போடத் தொடங்கி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது.

'அவனன்றி எதுவும் அசையாது என்பதே
ஆசையின்றி எதுவும் அசையாது எனச் சொல்லத்தான்'

என் ஆசைகள் தொடரும்.