12. உலகில் சிலர் துன்புறுவதற்குக் காரணம் பூர்வ ஜென்ம பலாபலன் என்று கூறக்கேட்டுள்ளோம்.
அவ்வாறு பூர்வ ஜென்ம தொடர்ச்சி என்பது உண்மையா..? முற்பிறவியின் நிகழ்வுக்கான பேறோ, தண்டனையோ அடுத்த பிறப்பிலும் தொடரும் என்னும் கருத்து உங்களுக்கு ஒப்புதல் உடையதா..?
அவ்வாறு பூர்வ ஜென்ம தொடர்ச்சி என்பது உண்மையா..? முற்பிறவியின் நிகழ்வுக்கான பேறோ, தண்டனையோ அடுத்த பிறப்பிலும் தொடரும் என்னும் கருத்து உங்களுக்கு ஒப்புதல் உடையதா..?
எனது பதிலை எழுதும் முன்னர் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ முதல் பாகத்தில் கண்ணதாசன் அவர்கள் எழுதியதில் சில உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
‘ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறது’ எனும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. ‘பத்வீம் பூர்வ புண்ணியானாம்’ என்பது வடமொழி சுலோகம். ‘மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்’ என்பதும் தமிழ் மூதுரை. முற்பிறப்பின் கரும வினைகள் அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.
‘இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்’
என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன? ஒவ்வொரு உயிரின் வாழ்வும், தாழ்வும், வறுமையும், வளமும், நோயும், சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன? ஆண்டவனின் தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. ஒரு தலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது ‘நாத்திகம் பேசியதால் வந்தது’ என்றார்கள். ஆத்திகம் பேசிய இரமணரிஷிக்கு ஏன் வந்தது?
இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம்? எந்தக் கணக்கைக் கொண்டு தெய்வம் வழங்குகிறது? ஒவ்வொரு பிறவியின் கணக்கைக் கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது. நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும் அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.
‘’முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை
முதல் இடை கடைநமது வசத்திலில்லை’ என்றான் மகாகவி பாரதி
'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து' என்றான் வள்ளுவன்.
ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்மவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி எங்குப் பார்த்தாலும் இந்து சமயம் ‘ஊழ்வினை’ என்பதை மிகவும் அழுத்தமாகவேச் சொல்கிறது என்பதை அறியலாம். இப்பொழுது இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன். பிறக்கும் முன்னர் நான் எப்படி இருந்தேன், இறந்த பின்னர் நான் எப்படி இருப்பேன் என்பதிலெல்லாம் எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. பூர்வ ஜென்ம பலன் காரணமாகத்தான் இந்த வாழ்க்கையில் நான் அனுபவித்துக்கொண்டிருப்பது அடுத்த பிறவியில் அனுபவிக்கப் போவது எனக்கொள்வோம் எனில் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், பல விசயங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் அத்தனை எளிதாகக் கொண்டு வர இயலுவதில்லை. இது மனவலிமையின்மையா? இறைவனின் தன்மையா? என்றெல்லாம் என்னால் சிந்தித்துக் கொள்ள இயலவில்லை. அதன் காரணமாகவே ‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என இந்து சமய தத்துவத்தையே நுனிப்புல்லில் எழுதினேன்.
அதேவேளையில் நமது செயல்களுக்கு நாமே பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் கொள்கை என்னுள் உண்டு, இதில் இறைவனை பங்காளியாக்கிக் கொள்ள ஒருபோதும் துணிவதுமில்லை. ஆனால் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள் என பலரும் ஊழ்வினை கருத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.
'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்' என்கிறார் வள்ளுவர்.
'ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்' என்கிறார் இளங்கோ.
‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்’ என்கிறார் மாணிக்கவாசகர்.
ஆனால் எனக்கோ இதையெல்லாம் ஒப்புக்கொள்ள இயலுவதில்லை, அவர்கள் அறிந்ததுபோல் நான் ஒருவேளை அறியாமலேயே இருக்கலாம். இதற்கான காரணம் நடக்கும் விசயங்களுக்கு நம்மால் உண்மையான விளக்கம் சொல்ல இயலுவதில்லை. ஆனால் இதை மிகவும் அருமையாக ‘இயற்கைத் தேர்வு’ எனும் கொள்கைக்குள் கொண்டு வந்தார் சார்லஸ் டார்வின். ‘சுற்றுப்புறச் சூழல் பொருத்தே ஒரு உயிரினம் தன்னை தற்காத்துக் கொள்வதோடு, தனது இனத்தைப் பெருக்கிக்கொள்கிறது’ என்கிறார் இவர். எது எப்படியிருப்பினும் ஊழ்வினை பற்றிப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் இதுகுறித்து பேசும்போது கேட்பதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது.
சுவாமி விவேகாநந்தர் ‘மனிதனின் மனம் பலவீனப்பட்டு இருக்கும்வரை இறைவன் அத்தியாவசியமாகத் தெரிகிறார்’ என்கிறார். இப்படி ஒவ்வொருவரின் கருத்துக்களையும், பல நூல்களையும் படித்த பின்னர் ஒருவர் எடுத்துக்கொள்ளும் முடிவு கூட ஊழ்வினையாகத்தான் இருக்கும் என முடிப்பது எத்தனைப் பொருத்தமாக இருக்குமோ எனக்குத் தெரியாது, ஆனால் வள்ளுவர் அப்படித்தான் சொல்கிறார்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என அடுத்த பிறவியிலும் பேறோ தண்டனையோத் தொடரும் என நானும் இக்கேள்விக்குப் பதிலாக வைத்துவிடத்தான் நினைக்கிறேன் ஆனால் என் ஊழ்வினை என்னைத் தடுக்கிறது போலும்.