Friday, 3 July 2009

கேள்வியும் பதிலும் - 6

மேலே இருக்கும் கேள்விகள் கேட்டவர் பத்மஜா சகோதரி. இனி வரப்போகும் அடுத்த ஐந்து கேள்விகள் கேட்டவர் சுதாகர் அண்ணன்.

6. இன்னும் சில நாட்களில் பதவி விலக போகும் நம் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் பல்கலை கழகத்திற்க்கு வேலைக்கு போகும் பட்சத்தில், அவருடைய மதிப்பு எந்த நிலையில் இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?


எனக்கு பெயர் இடப்பட்ட கதையினை இங்கு சொல்வது சரியாகப்படும் என்பதை சொல்லி ஆரம்பிக்கிறேன். நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தத்துவமேதை என போற்றப்படுபவர் திரு. எஸ். இராதாகிருஷ்ணன். அவர்களை மனதில் கொண்டு எனக்கு எனது அக்கா இட்ட பெயர்தான் இராதாகிருஷ்ணன். ஒரு ஆசிரியர் ஆன ஜனாதிபதியை சிறப்பிக்கும் பொருட்டு அவருடைய பிறந்ததினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. மக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்.

நான் அறிந்தவரை அரசியல் விசயத்துக்காக மட்டுமே பல ஜனாதிபதிகள் நமது நாட்டில் பெயர் பெற்றனர், ஆனால் திரு. அப்துல்கலாம் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பலருடைய மனதில் இடம் பெற்றுவிட்டார். இது அவர் புரிந்த விஞ்ஞானத்தில், கவிதையில், கனவில், செயலில் செய்த சாதனையை பொருத்து அமைந்தது என குறிப்பிடலாம். அப்படிப்பட்டவர் ஒரு பல்கலைகழகத்திற்கு மீண்டும் பணியாற்ற செல்வாரேயானால் அந்த பல்கலைகழகம் பெரும் பேறு பெற்றதாகும். அவருடைய மதிப்பு எள்ளளவும் குறையாது. மேலும் மேலும் பெருகும். இந்த ஜனாதிபதி பதவியானது அவரது சாதனையை மதிப்பில் கொண்டு வந்ததுதான். அந்த பல்கலைகழக மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், நேரில் உரையாடும் வாய்ப்பு கிட்டும். முன்னேறத்துடிக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழி காட்டுபவர் உடனிருப்பார் எனும்போது மேலும் உற்சாகம் பொங்கும். சாதிக்க முடியாத மனமெல்லாம் அவர் அருகில் இருக்கையில் சாதித்து காட்டிட முனையும். அந்த மாணவர்கள் இவரது புகழை மென்மேலும் பரப்புவார்கள். திரு. அப்துல்கலாம் இந்திய வரலாற்றில் சாதனையாளர்கள் வரிசையில் என்றோ இடம்பெற்றுவிட்டார், அதிலிருந்து இடம் பெயர்த்தல் என்பது இனி சாத்தியமில்லை. அவருடைய மதிப்பு மென்மேலும் பெருகிக்கொண்டே பொகும் என்ற நிச்சயமான எண்ணம் அனைவரிடமும் இருக்கும் என்றே கருதுகிறேன்.

(தொடரும்)

Thursday, 2 July 2009

கேள்வியும் பதிலும் - 5

5) தாங்கள் செய்து வந்த ஆய்வில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். ஆனால், தற்பொழுது அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இச்சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் தவறை நீங்களே சென்று ஒப்புக் கொள்வீர்களா இல்லை எதுவுமே நடவாதது போல் இருப்பீர்களா?

தவறுகள் நடக்கும்போதெல்லாம் நானே சென்று இப்படி செய்தேன் இப்படி ஆகிவிட்டது என ஒப்புக் கொண்டு இருக்கிறேன். மிகப்பெரிய தவறு நடந்தாலும் அதையேதான் செய்வேன். எதுவும் நடவாததுபோல் இருக்கவும் முடியாது.

பல ஆராய்ச்சிக்கூடங்களில் எதுவுமே சாதாரணமாக செய்வதில்லை, ஒரு விசயத்தை பலமுறை செய்து ஊர்ஜிதப்படுத்திய பின்னர்தான் முடிவினைச் சொல்கிறோம். ஆதலினால் தவறாக வந்த முடிவுகளையும் இணைத்துவிடுகிறோம். ஆனால் அது குறித்த ஒரு ஆராய்ச்சிகட்டுரை வெளி வருகிறது எனில் இந்த விசயங்கள் மூடி மறைக்கப்பட்டுவிடும். ஆனால் 80 சதவிகிதம் மேல் செயல்முறைகள் சரியாக இருந்தால் அன்றி அதனை வெளியிடுவதில்லை. எல்லாம் சரியாய் அமைவது என்பது மிகவும் அரிதாக நடக்கும்.

ஆராய்ச்சிதனை ஒவ்வொரு முறையும் பிற குழுக்களிடம் பேசும்போது தவறினை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். நாம் எண்ணாத விசயங்கள் எல்லாம் அவர்கள் எண்ணத்தில் ஓடும், நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

முடிந்தவரை தவறுகளை தவிர்த்தால் நலம் பயக்கும். இப்படி தவறுதலாக மருந்து ஒன்றை உருவாக்கி அதனை சோதனை செய்தால் பலருடைய உயிர் கேள்விக்குறியாகிறது என்பது உண்மை.

கேள்விகளுக்கு நன்றி.

(தொடரும்)

கேள்வியும் பதிலும் - 4

4) நுனிப்புல்லிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டால்...... என்ன செய்வீர்கள்?

அதென்ன சகோதரி நான் நினைத்து இருந்து இருக்கிறேன், நீங்கள் கேட்கிறீர்கள். இது குறித்து யாரிடமும் நான் சொல்லவில்லையே. இங்கும் சொல்லி இருக்கமாட்டேன், பதில் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். எனது கனவுகள் எப்பொழுதுமே உறங்கிக் கொண்டே இருக்கும் அதன் நினைவு திரும்பும்வரை.

நாவல் எழுதும்போதே சாகித்ய அகாடமி விருதினைப் பெற வேண்டும் என்ற ஆவலில்தான் எழுதவே ஆரம்பித்தேன். இது மிகவும் உண்மை. எனக்கு நிறையவே அந்த விருதினைப் பெற வேண்டுமென ஆசை உண்டு. அப்படி ஒரு நிலை வருமெனில் எண்ணிய எண்ணமெல்லாம் கைகூடுகிற அளவுக்கு என்ன பாக்கியம் செய்தேன் என அந்த இறைவனின் முன்னால் நின்று மனம் கலங்கி நிற்பேன். அப்படியே இந்த உலகம் அமைதியினை முன்னிறுத்தி வாழ வேண்டிக் கொண்டு இருக்கும் அந்த ஆசையையும் அமைதியாய் சொல்லி வைப்பேன்.

(தொடரும்)