பல எண்ணங்களை கதைகளாக, கட்டுரைகளாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அங்கே எழுதி வருவதுண்டு. எனக்குத் தெரிந்த நண்பர்கள் வலைப்பூ ஒன்றை ஆரம்பியுங்கள் என்று சொல்ல 'அதெல்லாம் எதற்கு' என்றே வேண்டாம் என இருந்தேன். மேலும் தனியாக வலைப்பூ வைத்து எழுதும் அளவுக்கு எல்லாம் சிந்தனையும் இல்லை, மேலும் எழுதும் எழுத்தில் அலங்காரம் பூசும் அளவுக்கு தமிழ் இலக்கியவாதியும் நான் இல்லை என்றே இருந்தேன். பின்னர் எனது எழுத்துக்களையெல்லாம் சேகரிக்கும் தளமாக பயன்படுத்தலாம் என்றே வலைப்பூ ஆரம்பித்தேன். அவ்வப்போது சேகரிப்பதும், அதிகமாக வலைத்தளத்தில் எழுதுவதுமாகப் பயணம் போய்க்கொண்டிருந்தது.
அந்த வலைத்தளத்தில் எழுதிய போது ஏற்படும் சிறு சிறு சலசலப்புகள் கண்டு 'அட என்ன இது' என்றுதான் தோன்றும். ஆனால் சில தினங்களாக வலைப்பூக்களுக்கு பின்னூட்டம் எழுதுவதில் கவனம் செலுத்த இங்கே நடக்கும் பல விசயங்களைப் பார்த்ததும் 'அட என்னதான் இது' என்றே தோணியது.
நடக்கும் விசயங்களைப் படிக்கும் போது அதற்கு மறுமொழி எழுதலாம் என எண்ணியபோது 'கருத்து கந்தசாமி' என்கிற பட்டங்களும் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்ததும் மிகவும் கவனத்துடனே செயல்பட வேண்டும் எனத் தெரிய வந்தது.
ஒரு நூலை வெளியிட்டுவிட்டு அதற்குரிய விமர்சனங்களையெல்லாம் பார்த்துப் பழகிய பின்னர் இப்போதுதான் உண்மையான எழுத்துலகம் எப்படியிருக்கும் என்பது தெரிகிறது. நல்லவேளை எவருமே எனது நூலை வாசித்து இருக்கமாட்டார்கள் போல என்கிற ஒருவித நிம்மதியும் இருக்கிறது.
தங்களது எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும்.
சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்.
மிகவும் நன்றி.