Wednesday, 1 July 2009

வேத நூல் - 6

சாங்கோ அசையாது அப்படியே நின்றான். மூவரும் திரும்பிப் பார்த்தபோது சாங்கோ தொடர்ந்து வராததைக் கண்டு ரேண்ட்டர் கோபம் கொண்டார். ஏனிவன் இப்படி நடந்து கொள்கிறான் என அவனை அழைக்கச் சென்றார். சாங்கோ ரேண்ட்டரிடம் ''இது நம்மைப்போன்றவர்கள் வாழும் பகுதியாகத் தெரிகிறது, இல்லையெனில் இத்தனைப் பெரிய கல் தானாக உயர்ந்து இருக்காது. எதற்கு ஆயுதங்களைத் தயார்நிலையில் வைத்திருப்போம்'' என்றான். ''ஏன் விலங்கினங்களை வேட்டையாடியது போதாதென்று மனிதர்களையும் வேட்டையாடப் போகிறாயா? எனது குறிக்கோள் இங்கிருந்து செல்வங்களை அள்ளிச் செல்வது மட்டுமே'' என்றார் ரேண்ட்டர். ''சரி நடக்கலாம்'' என்றான் சாங்கோ.

சிறிது நேரத்தில் அவர்களை வழிமறித்து நிறுத்தினான் ஒருவன். தன்னை கிரகமெஸ்ட் என அறிமுகப்படுத்தியவன், யார் எவர் என விபரங்கள் விசாரித்துவிட்டு அவர்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டுச் சென்றான். அவர்கள் பேசியதை கிரகமெஸ்ட் புரிந்தவன் போல் தலையாட்டினான். எந்த இடம் செல்கிறோம், என்ன நடக்கும் என அறியாமல் அவனைப் பின் தொடர்ந்தார்கள். ஆனால் சாங்கோ தன் தந்தையிடம் அந்த நபரை அடித்துப் போட்டுவிடலாம் என சொன்னான்.

இதைக்கேட்ட மிபலோ சாங்கோவிடம் ''தேவையில்லாது பிரச்சினைகளை வளர்க்காதே, அமைதியாக இரு, இது புதிய இடம்'' என்றான். கிரகமெஸ்ட் அவர்களை ஒரு கல் கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்றான். அவர்களைப் பார்த்ததும் ''அட்லாண்டீஸ் காரர்களா'' என்றான் தலைமை அதிகாரியாய் அமர்ந்து இருந்த ரேவிரன். ''இல்லை, தமிழ்காரர்கள்'' என்றான் கிரகமெஸ்ட். ''அட்லாண்டிஸ்காரர்கள் போல் இவர்களும் பிரமிட் கட்டப் போகிறார்களா?'' என்றான் ரேவிரன். ''இங்கேயிருந்து திருடிச்செல்ல வந்திருக்கிறார்கள்'' என்றான் கிரகமெஸ்ட்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என அறியாது இருந்தாலும் சூழ்நிலையை அறிந்தான் மிபலோ. ''திருட வந்திருக்கிறார்களா?, அவர்களைக் கொன்றுவிடு'' எனச் சொல்லி அனுப்பினார். ''வாருங்கள் போகலாம்'' என அழைத்தான் கிரகமெஸ்ட். மிபலோ, குவ்விலான் எழுதியிருந்த எழுத்தை வாங்கிக்கொண்டு ரேவிரனை நோக்கி முன்னேறினான்.

(தொடரும்)

வேத நூல் - 5

அந்த நிலப்பரப்பை ஒட்டியே படகை செலுத்தச் சொன்னான் மிபலோ. சாங்கோ அதிக ஆத்திரம் அடைந்தான். இங்கேயே இறங்கிக் கொள்ளலாம், இனியும் படகை செலுத்துவது என்பது அவசியமற்றது என்றான் சாங்கோ. ஆனால் ரேண்ட்டர் மிபலோ என்ன சொன்னானோ அதையே செய்வேன் என்றார். அது சாங்கோவுக்கு மேலும் ஆத்திரத்தை அதிகமாக்கியது.

என்னை இந்த நிலப்பரப்பில் இறக்கிவிட்டுத் தாராளமாகச் செல்லுங்கள் என்றான் சாங்கோ. குவ்விலான் பேச முடியவில்லையே என வேதனையில் இருந்தான். குவ்விலான் சாங்கோவுக்கு எழுத்து மூலம் எண்ணம்தனை காட்டிட எண்ணி எழுதினான். மிபலோ சொல்லுமிடத்துக்கேச் செல்லலாம்.

அதைப்படித்த சாங்கோ சட்டென அமைதியானான். மிபலோவுக்கும் ரேண்ட்டருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உணவு சேகரித்துக் கொண்டு நிலப்பரப்பின் ஓரத்திலேயே படகைச் செலுத்தி ஓரிடம் அடைந்ததும் மிபலோ நிறுத்தச் சொன்னான். நிலப்பரப்பில் இறங்கி நடக்க ஒரு பெரிய பிரமிட் தெரிந்தது.

இங்கேதான் நான் வர நினைத்தேன் எனத் துள்ளினார் ரேண்ட்டர். மிபலோ இதுநாள்வரை என்ன சொல்லி இருந்தானோ அதையெல்லாம் கோர்வையாக எடுத்து வைத்திருந்தான் குவ்விலான். ஆனால் சாங்கோ முரணாக எழுதியதோடு தொகுப்பாக வைக்காது இருந்தான். பிரமிட் நோக்கி மூவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)

வேத நூல் - 4

ரேண்ட்டர் எல்லா வசதிகளுடன் பயணத்தைத் தயார் செய்தார். ஆனால் சிரகமெராவை வரவேண்டாம் என ரேண்ட்டர் சொன்னதால் சாங்கோவும் செல்ல மறுத்தான். பின்னர் சமாதனமாகி சாங்கோ மட்டுமே செல்வதாக முடிவு செய்தான்.

ரேண்ட்டர் தான் நிறைய செல்வங்களை ஒரு நிலத்தில் இருந்து அள்ளிக்கொண்டு வரப்போவதாக மட்டுமேச் சொன்னார். ஆனால் எந்த திசையில் செல்வது எப்படிச் செல்வது என எதையும் முடிவு செய்யாமலே கடலில் பயணிக்க எண்ணியது சாங்கோவுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் மிபலோ மிகவும் சந்தோசமாக இருந்தான். எழுதுவதற்குத் தேவையான அளவு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டான் சாங்கோ.

அந்த ஊரில் இருந்தவர்கள் ரேண்ட்டரை கடுமையாக எச்சரித்தார்கள். மேலும் இனிமேல் நீ திரும்பி வரப்போவதில்லை என்பதை உறுதி செய்கிறோம் எனவும் பயமுறுத்தினார்கள். மிபலோவையும், குவ்விலானையும் செல்ல வேண்டாம் என அவர்கள் வீட்டில் தடுத்தார்கள். ஆனால் இந்த பயணம் சிறப்பாகவே முடியும் என மிபலோ உறுதியுடன் சொன்னதைக் கேட்டு இருவர் வீட்டிலும் அமைதியானார்கள்.

பயணத்திற்காக பலநாட்களாகத் தயாரிக்கப்பட்ட படகில் நால்வரும் அமர்ந்ததும் மிபலோ மேற்கே நோக்கி படகைச் செலுத்தச் சொன்னான். அலைகளின் மேல் மிதந்தது. அலைகளும் வழி தந்தது. மிபலோவின் எண்ணங்களைச் சொல்லச் சொன்னான் சாங்கோ.

''இரவும் பகலும் சூரியக் கதிர்களால் உருவாகிறது. சூரியக் கதிர்களை ஓரளவுக்கு மறைக்கும் தன்மை பூமியின் மேலிருக்கும் வான்படலத்துக்கு உண்டு'' என்றான் மிபலோ. குவ்விலான் எழுதினான். ரேண்ட்டர் மிபலோவை ஆச்சரியமாகப் பார்த்தார். சாங்கோ யோசித்து வரிகளை மாற்றினான்.

''இரவு பகலை உருவாக்குகிறது, பகல் இரவை உருவாக்குகிறது. இந்த இரண்டும் உருவாகக் காரணம் சாத்தான்'' என எழுதினான் சாங்கோ. சாங்கோ என்ன எழுதினான் என்பதைப் படிக்க நினைத்த குவ்விலான் பார்த்தான். எழுதியதைப் படித்ததும் குவ்விலான் மிபலோவிடம் சைகையால் எதுவும் சொல்லாதே என நிறுத்தச் சொன்னான். ஆனால் மிபலோ நான் சொல்வதை நீ அப்படியே எழுதிக் கொண்டு வா, அவன் இஷ்டத்துக்கு எழுதட்டும் என்றான்.

ரேண்ட்டர் படகினை வேகமாகச் செலுத்தத் தொடங்கினார். நிலப்பரப்பு தென்பட்டது. படகை நிறுத்தினார். அங்கே ஆட்கள் யாருமே தென்படவில்லை. ஆனால் விலங்கினங்கள் தென்பட்டது. தன்னிடம் இருந்த ஆயுதங்களை எடுத்து வேட்டையாடத் தயாரானார் ரேண்ட்டர். மிபலோ தடுத்தான். ரேண்ட்டர் அதிசயமாக ஆயுதங்களை கீழே வைத்தார். சாங்கோவுக்குப் புரியாமல் இருந்தது. ஆனாலும் மிபலோ தடுத்தும் ஒரு விலங்குதனை வீழ்த்தினான் சாங்கோ.

சாங்கோ அந்த விலங்கினை அங்கேயே சமைத்தான். இது மிபலோவுக்குப் பிடிக்காது இருந்தது. அங்கேயிருந்த பழங்களை உண்டான். குவ்விலானும் மிபலோவின் வழியிலேயே சென்றான். ரேண்ட்டர் மிபலோவிடம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார். ஆனால் மிபலோவும் குவ்விலானும் மறுத்தார்கள்.

அங்கேயிருந்து படகினைச் செலுத்த பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. கொண்டு வந்த உணவும், சேகரித்த உணவும் குறையத் தொடங்கியது. எங்கேதான் செல்கிறோம் எனக் கேட்டான் சாங்கோ, பொறுமையுடன் இரு என ரேண்ட்டர் அறிவுறுத்தினார். இந்த பயணத்தின்போது மிபலோ மிகச் சில விசயங்களையே சொல்லி இருந்தான். வழக்கம்போல சாங்கோ மாற்றிக்கொண்டே வந்தான். பலநாட்கள் பயணத்தின் பின்னர் ஒரு நிலப்பரப்பு தென்பட்டது. அனைவரும் உற்சாகமானார்கள்.

(தொடரும்)