Monday, 29 June 2009

கள்ளிப்பாலின் கயமை

முன்னுரை:

கள்ளிப்பால் என சொன்னதும் உசிலம்பட்டி எனும் தமிழக வரைபடத்திலே இல்லாத ஒரு கிராமம் அனைவருக்கும் நினைவில் வந்து செல்லும், அந்த பச்சிளம் குழந்தைகளின் வேதனைகள் மனதை நீங்காமல் வட்டமிட்டு இருக்கும். கள்ளிப்பால் மருந்தாகவும் பயன்படக்கூடியது, மேலும் கள்ளிப்பால் தரும் கள்ளிச்செடி தன்னைக் காத்துக்கொள்ள முட்கள் எல்லாம் வைத்து இருக்கும். இப்படி மருந்தாக பயன்படக்கூடியதை மரணத்திற்காக பயன்படுத்தியது கள்ளிப்பாலின் கயமைத்தனம் என்றால் இல்லை என்று சொல்லலாம். மாறாக இதனை இப்படி உபயோகப்படுத்தலாம் என மனிதர்களின் கயமைத்தனம்தனை வன்மையாக கண்டிக்கலாம்.

இளைஞர்(ஞி)களும் கள்ளிப்பாலும்

'ஆசை ஆசையாய் புள்ளை பிறக்க வேணுமின்னு
அய்யனாருக்கு படையல் வைச்சி வருசம் பல
காத்திருந்து கண் விழிச்சி காத்திருக்கையிலே
பிறந்த புள்ளை பொட்டை புள்ளையாய் போச்சுதுன்னு
இறந்த சேதி சொல்ல கள்ளிப்பாலு கொடுத்தாளே பாட்டி'

எனும் நாட்டுப்புற பாடலில் இருக்கும் அகற்றமுடியாத சோகம் ஒவ்வொரு மனித உயிரையும் உலுக்கி வைக்கும். இந்த கள்ளிப்பால் நிலையில் தான் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் இருக்கிறார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்டு, படித்தபின்னர் இவர்கள் தனது சொந்த சிந்தனையை தொலைத்து போதைப் பொருளுக்கும், சிற்றின்ப விசயத்திற்கும் விலை பேசாமலே இவர்களை தாங்களே விற்றுவிடுகிறார்கள். கள்ளிச்செடியின் முள்ளானது ஓரளவிற்கு எதிர்ப்பு தர முடியும், ஆனால் இந்த இளைஞர்கள் கூட்டம் தகர்க்க முடியாத எதிர்ப்பை தர முடியும். அப்படி இருக்கும் இந்த இளைஞர்கள் இப்படி வீணாகிப்போவது இவர்களது கயமைத்தனத்தையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களது திறமையை உலகம் முழுவதும் அறிய வேண்டி செயலாற்றுதல் மிகவும் முக்கியமான செயலாகும்.

தனக்கு தீங்கிழைக்காத செயல்கள் மட்டுமின்றி, பிறருக்கு தீங்கிழைக்காத செயலையும் செய்யாது இருப்பது போற்றத்தக்கது. நல்ல விசயங்களை மட்டுமே நாம் தாங்கிக்கொண்டு வந்து இருந்தால், தீமையைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்காது. கள்ளிப்பால் நல்ல விசயத்துக்கு மட்டும் என இருந்து இருந்தால் தீமைக்கு துணை போயிருக்க வேண்டியிருக்காது. ஆனால் இப்படி இயற்கையாய் அமைந்து விட்ட விசயம்தனில் 'அல்லவை தேய நல்லவை நாடி வரும்' என போராடி தீய விசயங்களை அகற்றி செயலாற்றுதல் சிறப்பு.

உயிர்களின் சிறப்பு:

'பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது' 'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என நம்பிக்கையூட்டும் விசயங்கள் இருந்தாலும் எல்லா உயிர்களும் நன்மை தீமை என அனைத்தையும் தன்னுடன் இணைத்தே வைத்திருக்கிறது.

நுண்ணுயிர்கள் நமது உடலுக்கு தீங்கிழைக்க கூடியதுதான், ஆனால் அவை நமது உயிர் காக்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரும் கொண்டுள்ள பண்புகளால் அவை கயமைத்தனம் கொண்டவை என கருதமுடியாது. எப்பொழுது ஒரு உயிர் தீயனவாக செயல்படுகிறதோ அப்பொழுதுதான் அந்த உயிர் கயமைத்தனம் உடையதாக கருத முடியும். 'இருந்தும் இல்லாதிருப்பது' என்பது இங்கே சரியாகப் பொருந்தும். தீய விசயங்களுக்கு ஆட்படாமல் உயிர்களின் சிறப்பை நிலை நாட்டும் வண்ணம் நற்பண்புகளுடன் செயல்புரிவது அத்தியாவசியமாகிறது.

முடிவுரை:-

'இவ்வுலக படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் எதுவுமில்லை, ஏனோ மனிதன் பார்த்த பார்வையில் ஏற்றம் கூட தாழ்வாகிப் போனது'

அனைத்தும் சமமாக இருந்திட இன்னல்கள் இல்லாத சமுதாயம் உருவாக்கிட நமது கயமைத்தனம் அகற்றி நல்ல பார்வையுள்ள மனிதர்களாக வாழ்ந்து சிறப்போம்.

Sunday, 28 June 2009

கலையாத கனவும் விளங்காத இயல்பும்

முன்னுரை:

கனவும், இயல்பும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகத் தோன்றும். இயல்பாக நடக்கும் விசயத்தை இது கனவா என எண்ணும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவருக்குள் கேள்விக்குறியை ஏற்படுத்திவிட்டுப் போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. கனவு சாதாரணமாக கலைந்து போகும் நிலைத்தன்மையற்றது. நடக்கின்ற விசயத்தின் அடிப்படையில், இயல்பு சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியும் தன்மை உடையது. ஆனால் அப்படி இல்லாமல் கலையாத கனவாகவும், விளங்காத இயல்பாகவும் இருக்கும் இறைத்தன்மை முரண்பட்ட இரண்டு விசயங்களை ஒன்றாக்கி வைத்து இருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது.

கனவுலகில் சஞ்சரிப்பவர்கள்:

இப்பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து இந்நாள்வரை இந்த உலகம் எப்படி தோன்றியது என்பது எவரும் அறியாத நிலையில் 'அவனின்றி ஒரு அணுவும் அசையாது' என சொன்னதின் அர்த்தம், கலையாத கனவின் அடிப்படை, விளங்க முடியாத இயல்பின் துவக்கம் என கொள்ளலாம்.

இருந்ததை எண்ணி, நடக்கின்ற இயல்பின் அடிப்படையை வைத்து 'தகுதியுள்ள இனமே வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ளும்' என சார்லஸ் டார்வினின் விளக்கமும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மிகவும் பிரபலமான சக்தி, நிறை மற்றும் ஒளி தொடர்பான வாய்ப்பாடும், கிரிகரி மெண்டலினின் மரபியல் தத்துவமும் என ஒவ்வொரு மனிதரும் இருக்கின்ற இயல்பை விளங்கிக் கொண்டனரேயன்றி எவராலும் இதுவரை முதல் கனவை கலைக்க இயலவில்லை எனலாம்.

மொத்த மனித இனமும் விதவிதமாக கண்ட அந்த இறையை பற்றிய கனவு கலைந்து போவதற்கு வழியற்றுப் போனது. உண்மையான கனவு என்பது தானாக வருவது, ஆனால் இந்த கனவு வாழையடி வாழையாய் காணாமலே கண்டது போல் ஆகிப் போனது. விழித்த நிலையில் காணும் கனவு என சொல்வது போல் ஆனது. இப்படி கலையாத கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்களாக நாம் இருப்பது விளங்கிக் கொள்ள முடியாத இயல்பாகிறது.

இதை மாணிக்கவாசகர் அருமையாக தனது திருவாசகத்தில் பாடுகிறார்.

'புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிப்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய்ச்
செல்லாய் நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்'

வெடித்துச் சிதறிய வேதாந்தம்:

பூமியும், சூரியனும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த மனித இனத்திற்கு, எண்ணற்ற நட்சத்திரங்களும், நட்சத்திரங்களுக்கான கோள்களும் கண்டு இது எப்படி சாத்தியமானது என எண்ணிக் கொண்டு இருக்காமல் ஒரு அற்புதமான கனவு காணத் தொடங்கியதன் விளைவாக 'நட்சத்திரம் வெடித்துச் சிதறியது' என கண்ட கனவு ஒரு கலையாத கனவுதான். வெஞ்சினரின் 'எல்லா நிலப்பரப்பும் ஒன்றாக இருந்தது' எனும் கனவும் கலையாத கனவுதான், ஆனால் இவை விளங்க முடியாத இயல்பாக இருக்கின்றன.

இந்த விளங்க முடியாத இயல்பை விளக்கிக் கொள்ள எண்ணற்ற பொருட்செலவில் நடக்கும் ஆய்வுகளும், வெளி கோள்கள் மற்றும் வெளி நட்சத்திரங்கள் நோக்கியப் பார்வைகளும் பெரும் ஆர்வத்தை நம்மிடையே ஏற்படுத்தி இருக்கின்றன. இயல்புநிலை விளங்கிக் கொண்டதன் காரணமாக பல கனவுகள் தகர்ந்து போயின. எழுத்தாளர்களின் அதீத கற்பனை வளமும், கிடைக்கும் சிறு விசயத்தை வைத்து அறிவியலாளர்கள் காணும் கனவும் சாதாரண மனிதனை கனவு காணும்படி வைத்துள்ளது. இந்த கனவுகள் கலையாமல், விளங்கிக் கொள்ள முடியாமல் தொடர்வது ஒரு இலக்கைத் தொட்டுவிட உதவும், அந்த இலக்கோடு நிற்காமல் தொடர்ந்து பயணிக்க கலையாத கனவுகள் மிக அவசியம். வேறு கிரகத்தில் உயிரினங்கள், அதிக அறிவுள்ள உயிரினங்கள் என காணும் இந்த கனவுகள் நனவாக வேண்டும் என்ற எந்த ஒரு அத்தியாவசியமும் இல்லை. அது ஒருவகையில் அநாவசியம் கூட.

'எந்நிலை கொண்டு என்னை விளக்கும் முயற்சியில்
தன்னிலை மறந்து வாழும் மனிதருள்
ஒளியாக கண்டிடும் காணும்
ஒளியால் பிறிதொரு
உலகமது'

இறைவனான என்னை விளங்கிக் கொள்கின்ற இந்த முயற்சியில், ஒளியாய் என்னை உள்ளத்துள் காண்பது போல், ஒளியினை அடிப்படையாக கொண்டு பிறிதொரு உலகத்தை இம்மனிதர்கள் காண்பார்கள் என்பது இக்கவிஞனின் கலையாத கனவு, ஆனால் விளங்க முடியாத இயல்பு.

முடிவுரை:

'கனவுகள் இல்லையேல் வாழ்வு சுகப்படாது' என்பது என் மொழி. கலைந்து போகும் வீணான கனவுகளை கண்டு வேதனைப்படுவதைவிட, இருக்கின்ற இயல்பின் அடிப்படையில் நாம் காணும் கனவு நிச்சயம் நனவாகி மகிழ்வைத் தரும். இறைவன் எனும் கலையாத கனவுடனும், விளங்கிக் கொள்ள முடியாத இயல்புடனும் நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நமது அன்றாட கனவானது உலகம் செழிப்புற இருக்க வேண்டுமென ஒவ்வொருவரும் நனவாக்க பாடுபட்டு இருப்போமெனில், நமது இயல்பு நிலை விளக்கம் பெறும், அந்த இறைவனும் மகிழ்ச்சி கொள்வான்.

ஒரு நாவல் என்ன செய்துவிட முடியும்?!

புத்தகமாக இன்னும் வெளிவராத ஒரு நாவலுக்கு (நுனிப்புல் பாகம் 2) எழுதிய முன்னுரை:

காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது. இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.

என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள். ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.

அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை. ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.

இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா? தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? அப்படியெல்லாம் விடமுடியாது, இனியும் ஐம்பது வருட காலகட்டத்திற்குள் இந்த மொத்த பூமியும் ஒரு அமைதி நிலையும், கலியுகத்திலேயே சத்யயுகமும் இருக்கும் என நிரூபிக்காமல் போகப்போவது இல்லை.

'என்ன கதை சொல்ல வருகிறாயா, நாங்கள் கூட என்னமோ ஏதோனு நினைச்சிட்டோம்' எனும் இந்த மனப்பான்மையை அகற்றுவோம்.