Friday, 26 June 2009

பழங்காலச் சுவடுகள் - 10

''மாயன்கள் அஜ்டெக்குகள் கலாச்சாரம் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த மனிதர்களும் கடவுள் வழிநடத்துவதாக தங்களுக்கென கடவுளை கொண்டாடி வந்தனர். சிற்பக்கலை போன்ற கலைகளில் மிகவும் கை தேர்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்கள் இருந்த பகுதி மெக்ஸிகோ பகுதியாகும். குவாட்டமேலா, ஹோண்டுராஸ் பகுதிகளில் மாயன்கள் வாழ்ந்தனர். அஜ்டெக்குகள் கட்டிய பிரமிடும் உருவாக்கிய நகரமும் மிகவும் பிரபலமானவை. இந்த மனிதர்கள் தங்களது அரசை போரிட்டு விரிவாக்கிக் கொண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் எப்பொழுது கால் எடுத்து வைத்ததோ அப்பொழுதே இந்த கலாச்சாரம் அழிவுக்கு வித்திட்டது''

அகிலா கேட்டாள்.

''ஒற்றுமையின்மையினால் தானே அழிந்தார்கள், பெருவில் இது போன்று இருந்தார்களா''

''பெருவில் நாஜ்கா, இன்கா என மனித கூட்டம் இருந்தது. இங்கே சூரியக்கடவுள்தான் பிரசித்தம். ஏனைய கடவுள்கள் இருந்தாலும் சூரியனே எல்லாம். நீங்கள் இங்கே மச்சு பிச்சு பகுதியைப் பார்க்கலாம். ஆண்டிஸ் எனப்படும் மலைப்பகுதியில் அந்த நூற்றாண்டிலேயே இத்தனை பெரும் வியப்புகளை ஏற்படுத்தியது இன்கா வம்சவழியினர். மாயன்கள் அஜ்டெக்குகள் போன்றே விவசாயம் தான் இவர்களுக்கு எல்லாம்''

''எல்லா இடங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்ல முடியுமா''

''என்னால் வர இயலாது, எனக்கு இங்கே வேலை இருக்கிறது, ஒரே ஒரு இடம் அதை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். ஒளிக் கற்களால் ஆன ஒரு கோபுரம் இருக்கிறது. அங்கே சென்றால் அத்தனை சக்தியும் நமக்குள் வந்துவிடும் போன்ற உணர்வு ஏற்படும். இதை இன்கா வம்சத்தினர் அஜ்டெக்குகளிடம் இருந்து திருடினார்கள் என சொல்வார்கள். ஆனால் அன்றைய மக்கள் கடவுளுடன் தொடர்பு கொள்வதையே பெரும் பேறாக கருதினார்கள்''

''இன்கா சமுதாயம் என்ன ஆனது''

''மாயன் அஜ்டெக்குகள் சின்ன கூட்டங்களாக இருந்தார்கள், அதைப்போல இன்கா வும் கூட்டங்கள்தான். மாயன், அஜ்டெக்குகளை வெற்றி கொண்டதை கண்ட அதற்கடுத்த வந்த தளபதி பெருவின் மேல் கண் வைத்தான், இன்கா சமுதாயத்தை வெற்றி கொண்டான்''

''இவர்களது கலாச்சாரம் வழிமுறைகள் என்ன ஆனது''

''ஸ்பெயின் தளபதிகள் கத்தோலிக்கத்தை முற்றிலும் விதைத்தனர், மாயன்களும் அஜ்டெக்குகளும் தங்களது சுயம்தனை இழந்தார்கள், ஆனால் இன்கா சமுதாயத்தினர் தங்களது வழிமுறையை வைத்துக்கொண்டார்கள், இந்தியர்களைப் போல''

'வேதம் என பெயரைச் சொல்லி சமுதாயத்தை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்' விவிட் சொன்னது அகிலாவின் காதுகளில் ஒலித்தது. சின்னசாமி திக்கிக்கொண்டே கேட்டார்.

''கலாச்சாரம் தொலைந்தது ஆனால் கலாச்சார சின்னங்கள் இருக்கிறதா''

''மாயன்கள் அஜ்டெக்குகள் உருவாக்கிய நகரம் சின்னபின்னமானது, முற்றிலும் மாறிவிட்டது. டெக்னிக்குவான் இடத்தை அஜ்டெக்குகள் உருவாக்க கடவுளே கட்டளையிட்டார் என சொல்வார்கள், இப்பொழுது உருக்குலைந்து இருக்கிறது, மாயன் பெண்மணி நோபல் பரிசு எல்லாம் வென்று இருக்கிறார் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர். குவாட்டமேலா பெரும் சர்ச்சைக்குரியதாக இப்பொழுது இருக்கிறது, இன்கா அமைத்த பெரிய சாலைகள் கோவில்கள் எல்லாம் இங்கே அப்படியேதான் இருக்கிறது''

''இரகசியங்கள் என சொன்னீர்களே என்ன''

''எனக்கு வேலை இருக்கிறது, நீங்கள் எத்தனைநாள் இங்கே இருப்பீர்கள், முகவரி தருகிறேன், இரவு வீட்டிற்கு வாருங்கள், நான் விடுதிக்கெல்லாம் செல்வதில்லை''

அகிலாவும் சின்னசாமியும் நன்றி சொல்லிக்கொண்டு பெரு நகரத்தை வலம் வந்தார்கள். இந்தியாவில் இருப்பது போன்று உணர்ந்தார்கள்.

''ஒளிக்கற்கள் கோபுரம் போகலாமா''

''இந்த ஊரிலேயே இருக்கலாம் போல இருக்கு''

''ஏன் சண்டையிட்டே வாழ்ந்து இருக்காங்க, ஒருத்தரை தன்வசப்படுத்திதானே பெரும் சாம்ராஜ்யம் உருவாக்கி இருக்காங்க, அடிமைகளா நடத்தி இருக்காங்க, ஆனா தெய்வீக உணர்வு மட்டும் தன்னோட வச்சிகிட்டாங்க''

''நம்ம ஊருல மட்டும் என்னவாம், ஜைனர்களை ஆறாம் ஏழாம் நூற்றாண்டில வேட்டையாடுனவங்கதானே நாம, எத்தனை பேரை கொன்னோம், மாற்றத்தை உருவாக்க பலியாக்கப்பட்ட மனிதம்தான் எத்தனை, அதான் விவிட் சொன்னானே கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைபவர்கள்''

''நல்ல விசயத்தை ஏன் எடுத்துக்கலை யாரும்''

''நல்ல விசயத்தை மட்டுமே ஏன் போதிக்கலை எவனும்''

சின்னசாமியின் மேல் ஒருவன் மோதினான். மோதியவன் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு விலகி நடந்தான். சற்று தூரத்திற்குச் சென்றவன் திரும்பினான்.

''வலிக்கிறதா''

''இல்லை''

''வலி குறைந்திருக்கும் என்றே சற்று தொலைவு சென்று திரும்பினேன்''

சின்னசாமியும் அகிலாவும் புன்னகைத்தனர். அந்த மனிதரும் புன்னகைத்தார். தனது பெயர் ஜொவியன் என அறிமுகப்படுத்திக் கொண்டுவிட்டு சென்றார்.

''உலகம் எத்தனை அமைதியாக இருக்க வேண்டியது''

''நம்மளை நாமே தொலைச்சிட்டோம்''

''உன்னை தொலைக்க வேண்டாம்னு சொல்றியா''

அகிலா சிரித்தார். பெரு வில் பெரும் மழை கொட்டத் தொடங்கியது.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 9

விவிட்டிடம் அகிலா பேசினாள். இனிமேலாவது ஒரு சமுதாயம் உருவாக்கும்போது அன்பே உருவான சமுதாயமாக உருவாக்குமாறு கேட்டுக்கொண்டாள். விவிட் சிரித்தான். அது மட்டும் ஒருபோதும் உருவாக்கப்போவதில்லை என்றான். பொக்கிஷங்கள் எல்லாம் வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்க்கக்கூடியதாக இருப்பதாக கூறினாள். வேதநூல்கள் சொல்லும் நல்வழியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினாள். ஆனால் விவிட் எதையுமே கேட்பதாக இல்லை. அனைவருக்கும் அங்கே சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்து நாம் விடுதிக்கு செல்வது என நல்லது என கூறினார். இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். வாகனத்தில் வாகன ஓட்டி காத்துக்கொண்டிருந்தான். விடுதியை அடைந்தனர். சின்னச்சாமி நிம்மதியாய் உணர்ந்தார்.

''உலகம் எவ்வளவு மாறிவிட்டது, இப்படி பழமையிலே ஊறிப்போய் ஒருவரையொருவர் எப்படி வெட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்''

''வாழ்கிறார்களா? சாகிறார்களா? ம்ம் நீயும் தான் முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் இன்னும் சொல்லித்தந்து கொண்டிருக்கிறாய், போரினால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லி இனிமேல் போர் என்பதே நடக்கக்கூடாது என எந்த வரலாறு புத்தகமாவதுச் சொல்லித் தருகிறதா? இந்த மனிதர்கள் எப்பொழுது மூன்றாவது உலகப்போர் வரும் என விஷ விதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் போரினால் படும் அவலநிலைகள் என ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான், இலங்கை என நாடுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம், விவிட் சொன்னதுபோல் மனிதம் அற்றவர்களாக நாம் தான் இருக்கிறோம், பழங்காலத்தில் நடந்தது இன்று அதிக அளவில் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை நீயும் நானும் மறுக்க முடியுமா''

''தேன்நிலவுக்குத்தான் வந்தோம் ஆனால் இப்படி கொடூரமான வாழ்க்கை முறையை கண்டதும் இனிவரும் சந்ததியினர் பற்றி அச்சமாக இருக்கிறது''

''அன்பை போதிக்கும் முறை அழிந்து போய்விடுமோ என அச்சமாகவும் இருக்கிறது, அதே மனிதர்களிடம் நான் எப்படி நடுங்கிக்கொண்டே இருந்தேன் தெரியுமா, ஒன்று பேசுவதற்குள் ஒன்றாக நின்றுகொண்டே வாளினை எடுக்கிறார்கள், எதிரெதிர் நின்று கொள்கிறார்கள் பார்க்கவே உயிர் பறந்து போய்விடும் போலிருக்கிறது''

''பெரு நாட்டிற்குச் செல்ல வேண்டுமா''

''செல்லத்தான் வேண்டும்''

எகிப்தில் சிலநாட்கள் இருந்து பிரமிடுகள், கோவில்கள் எல்லாம் பார்த்தார்கள். நைல்நதியின் ஓரத்தில் செல்லவே அச்சமாக இருந்தது. ஆனால் பெரு செல்லும் நாளன்று வாகன ஓட்டியை விவிட் இருக்கும் பகுதிக்கு வாகனம் செலுத்தச் சொன்னாள். அங்கே அதே இடத்தில் சில குடிசைகள் முளைத்திருந்தன. பெரிய அழிவு நடந்ததிற்கான ஆதாரமே இல்லாது போன்று இருந்தது. ஒரு சுவடும் தெரியாமல் அழித்துவிட்டார்களே, ஆனால் என்றோ நடந்த போர்கால சரித்திரங்களை மட்டும் இன்னும் பாதாள அறையில் பாதுகாத்து வருவது ஏனோ என எண்ணிக்கொண்டே இருக்க விமானநிலையம் வந்து அடைந்தார்கள். வேதநூல்களும், நூலக நூல்களும் வைத்திருப்பதை நினைக்கையில் அகிலாவுக்கு மனம் என்னவோ செய்தது.

பெரு நாட்டினை அடைந்தார்கள். தென் அமெரிக்க நாடுகள் பெரும்பாலும் ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்தவை. பெரு நாட்டினை அடைந்ததும் கோவில்கள் தென்பட்டன. அனைவரு்ம் புன்னகை புரிந்தார்கள். என்ன உதவி வேண்டும் என தேடி வந்து கேட்டார்கள். வணங்கினார்கள். அகிலா ஆச்சரியம் அடைந்தாள்.
விடுதியை அடைந்தபோது விடுதியில் இருந்தவர்களும் மிகவும் அன்போடு உபசரித்தார்கள்.

சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு ஒரு கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இருந்தவர் பல உலக ரகசியங்கள் இங்கே புதைந்து இருப்பதாக சொன்னார். இந்தியாவுக்கும் பெருவுக்கும் பெரிய தொடர்பு இருப்பதாக கூறினார். கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. மாயன்கள் அஜ்டெக்குகள் பற்றி சொன்னார். அவர் சொல்ல சொல்ல ஆர்வமாக கேட்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 8

இருவரும் ஒருவழியாய் விடுதியை அடைந்தார்கள். பிரமை பிடித்தது போல் இருந்தது. இனிமேல் இப்படி ஒரு தவறை செய்யக் கூடாது என சின்னசாமி எச்சரிக்கை செய்தார்.

''விவிட் அம்மா இறக்கும்போது இந்தியா இந்தியா என சொன்னார்களே''

''இப்ப என்ன வேணும் உனக்கு, இப்பதான் உயிர் தப்பிச்சி வந்திருக்கோம்''

''விவிடோட அப்பா எங்க இருக்காருனு சொல்லலையே''

''இப்ப என்ன வேணும் உனக்கு''

''நாளைக்கு அந்த இடத்துக்கு நாம போகனும்''

''உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அகிலா''

''போய்த்தான் ஆகனும்''

''பெரு நாட்டுக்கு கூட போக வேண்டாம், நாளைக்கே நாம இந்தியா போவோம்''

''நீங்க போங்க நான் வரலை''

''இங்க இருந்து என்ன பண்ண போற, நானே பயத்துல செத்துகிட்டு இருக்கேன்''

''பயம் தற்காப்புனு என்ன என்னமோ சொன்னீங்க''

''நீ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிட்ட''

''பொக்கிசங்கள் பாக்கனும்''

''தீயில போட்டு பொசுக்கப் போறான்''

அகிலா பிடிவாதம் பிடித்தாள். சின்னசாமி கோபம் அடைந்தார். ஆனால் அகிலா விடாமல் அடம்பிடித்தாள். இரவெல்லாம் யோசித்தார் சின்னசாமி. காலை முதல் வேலையாய் விடுதியை காலி பண்ணும் திட்டத்துடன் உறங்கினார். ஆனால் அகிலா வேறு திட்டம் வைத்து இருந்தாள். காலையில் எழுந்ததும் அகிலா தனது விருப்பபடியே நடக்க வேண்டும் என கூறினாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சின்னசாமிக்கு. சாவது என முடிவாகிவிட்டது என மெத்தையில் பொத்தென விழுந்தார் சின்னசாமி. அகிலா அவசரப்படுத்தினாள்.

வாகன ஓட்டி யாரும் வர மறுத்தார்கள். பெரும் சேதம் நடந்து இருப்பதாகவும் அந்த இடத்துக்கு செல்வது ஆபத்து எனவும் கூறினார்கள்.

''காவல் துறை எதுவும் செய்வதில்லையா''

''அப்பகுதியில் வாழும் மக்களிடம் யாரும் தொடர்பு வைத்து கொள்வதில்லை. இது போன்று இவர்களுடன் சேர்த்து மொத்தம் மூன்று கூட்டமைப்பு இருக்கிறது. அது அவர்களின் தனி பிரதேசம். இம்முறை பெரிய சேதம் நடந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. நைல் நதியை ரத்த நதியாக்கும் கூட்டங்கள். இந்நேரம் மற்ற இரு கூட்டங்களும் அங்கே வந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது''

''சற்று தொலைவில் எங்களை விட்டு விட்டு வாருங்கள்''

சின்னசாமி மிகவும் எரிச்சல் அடைந்தார்.

''அதான் வரமாட்டோம்னு சொல்றாங்கள இனி உன் பாடு''

''...''

ஒரு வாகன ஓட்டி சம்மதம் சொன்னார். சற்று தொலைவில் இறக்கிவிடுவதாக அழைத்துச் சென்றார். அகிலா வற்புறுத்தவே சற்று அருகிலேயே கொண்டு நிறுத்தினார்.

''காத்திருக்க முடியுமா''

''என்னை யாராவது தாக்காமல் இருந்தால் இங்கேயே இருப்பேன்''

சின்னசாமி திட்டிக்கொண்டே நடந்தார். அகிலா அப்பகுதியை அடைந்தாள். மக்கள் நடமாட்டம் இருந்தது. இடம் சுத்தமாக்கப்பட்டு இருந்தது. அருகில் நடந்து சென்றபோது இவர்களை நோக்கி ஒருவன் ஓடிவந்தான். சின்னசாமி தைரியம் வரவழைத்துக் கொண்டார். விவிட் அவன் பின்னால் ஓடி வந்தான். ஓடி வந்தவன் திரும்பி பார்த்து நின்றான். விவிட் அகிலாவிடம் கேட்டான்.

''இப்போ எதற்கு இங்கே வந்தீர்கள்''

''பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''...''

''என்ன நடக்கிறது இங்கே''

''எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது''

''நேற்றுதானே அமங்கலம் நடந்தது''

''நேற்று இன்றைய கணக்கில் வருவதில்லை''

''இவர்கள் எல்லாம் யார்''

''எங்கள் உறவினர்கள்''

''நேற்று நடந்தது பற்றி கவலை இல்லையா''

''பழையதை பற்றி பேச வேண்டாம்''

''அப்படியெனில் எதற்கு பொக்கிசங்கள் காக்கப்படுகிறது''

விவிட் திணறினான்.

''நீ சிந்து பெண்ணல்லவா அதுதான் இப்படி பேசுகிறாய்''

''நாங்கள் பெரு நாட்டுக்கு செல்ல வேண்டி இருக்கிறது, பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''சரி வாருங்கள்''

விவிட் அகிலாவையும் சின்னசாமியையும் பற்றி சொன்னான். ஒருவன் வாளை எடுத்தான். மற்றொருவனும் வாளை எடுத்தான். விவிட் கத்தினான். இரண்டு கூட்டமும் தனித்தனியாய் வேக வேகமாக நின்றது.

''என்னை பார்க்க வந்து இருக்கிறார்கள், விடுங்கள்''

அகிலாவுக்கு சுய நினைவில் இருப்பது போன்று எதுவும் தெரியவில்லை. சின்னசாமி முகம் வெளிறிப் போனது. சின்னசாமியின் கைகளைப் பிடித்தாள் அகிலா.

''அப்பவே சொன்னேன் கேட்டியா, சாமி வந்தது போல குதிச்ச''

''...''

பாதாள அறைக்குள் நுழைந்தார்கள். இருவரின் முகம் ஆச்சரியத்தில் அப்படியே கண்களை நிலை குத்தி நிற்க வைத்தது.

''இவை எல்லாம் சிந்து பகுதியையும் அதன் அருகில் இருக்கும் பகுதியையும் சார்ந்ததுதான், இதுதான் அலெக்சாண்டர் தந்த கேடயம்''

''உங்கள் தந்தை எங்கே''

''சிந்து பகுதிக்கு சென்று இருக்கிறார் அவர் வர ஒரு வருட காலம் ஆகும்''

''இவை வேத நூல்கள் அல்லவா''

''ஆம் எனது தந்தை மொழி பெயர்த்து எழுதியது அதோ அங்கே இருக்கிறது''

''மரண செய்தி கேட்டால் அவரின் நிலை''

''அதற்கெல்லாம் கவலைப்படமாட்டார்''

''நீங்கள் மானிட பிறவிகள் தானா''

''நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''வேத நூல்கள் வைத்து இருக்கீர்கள் ஆனால் மனிதம் அற்றவர்கள் என சொல்கிறீர்கள்''

''ஆம் மனிதம் அற்றவர்கள் நாங்கள்''

''வேதம் படித்தவர்களுக்கு நீங்கள் செய்வது இழுக்கு அல்லவா''

''மேலே வாளுடன் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லுங்கள்''

''என்ன பைத்தியகாரத்தனம் இது''

''இந்த சமவெளியில் நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம் எங்களிடம் துவேசத்தை நிரப்பினார்கள். நாகரிகம் வளர்த்த எங்களை மனிதம் அற்றவர்கள் ஆக்கியவர்கள் வேதம் என வேசம் போடுகிறார்கள்''

''புரியவில்லை''

''கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைகிறார்கள்''

''ஒரு சமுதாயமே அழிந்ததன் காரணம் நீங்கள்''

''ஒரு சமுதாயம் மட்டும் தான் அழிந்ததை பார்த்தீர்கள், மொத்த சமுதாயத்தையும் வேதம் பெயர் சொல்லி அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்''

''நீங்கள் பேசுவது தன்னையே அழித்துக்கொண்டு பிறரை குற்றம் சாட்டுவது போல இருக்கிறது''

''இதைப் பாருங்கள்''

அகிலா அதிர்ச்சியில் உறைந்து போனாள். சின்னசாமி சின்னாபின்னமாகிப் போனார்.

''இது ரோமப் பேரரசு. இது கிரேக்கப் பேரரசு. கிரேக்கன் காட்டிய கடவுளையெல்லாம் ரோமன் பெயர் மாற்றி காட்டினான் எங்கு பார்த்தாலும் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றனர் இவையெல்லாம் ரத்தம் தோய்ந்த ஆடைகள்''

''...''

''இதோ வாளுடன் புறப்பட்ட மனிதமே அற்றவர்கள், தலையை சீவினார்கள். உங்கள் சிந்து பகுதியில் எடுத்தது''

''...''

''அடுத்தவர்களை வெட்டிக் கொல்வதிலே மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்ட கூட்டம் அதுதான் சொல்கிறேன் நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''இப்பொழுது மாறிவிட்டது அல்லவா''

''ஆம் வாளுக்கு பதில் வான வேடிக்கை நடக்கிறது நாங்கள் வாளுடன் மட்டுமே இருக்கின்றோம்''

''மனிதம் வளர்க்கலாம் அல்லவா''

''என் தந்தை சொல்வார். நிறம் பார்த்து வெட்டிக் கொல்லும்் கூட்டம் இருக்கிறதாம். இனம் வேறுபாடு பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நிலை பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நாங்கள் அழிய வேண்டும் என வெட்டிக் கொள்பவர்கள்''

''சிந்து பகுதிக்கு ஏன் சென்று இருக்கிறார்''

''ரத்தம் தோய்ந்த ஆடைகள் எடுக்க''

''...''

''பொக்கிசங்கள் பார்த்தாகிவிட்டதா''

''பார்க்க சகிக்கவில்லை''

''வேத நூல்களிலும் ரத்தம் படிந்து இருக்கிறது பாருங்கள்''

''துடைத்து தூய்மையாக்குங்கள்''

''எழுத்துக்கள் சேர்ந்து அழிந்து போகும்''

அகிலாவும் சின்னசாமியும் மேலே வந்தார்கள். பெண் தயாராக இருந்தார். விவிட் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டான். பாதாள அறைக்கு மேல், வீட்டினை உடனே எழுப்பினார்கள். குடிசையாய் தான் வெளியில் தெரிந்தது. உள்ளே குகையாய் அமைத்தார்கள். அகிலா அசையாமல் நின்று கொண்டிருந்தாள். சின்னசாமி மனிதம் பற்றி யோசிக்கலானார்.

(தொடரும்)