Friday, 26 June 2009

பழங்காலச் சுவடுகள் - 7

சப்தம் கேட்டதும் பாதள அறையிலிருந்து பிரம்ட் மேல் தளத்துக்கு வந்தான். மற்ற இருவரும் பயத்துடன் பிரம்ட் ஐ பார்த்தார்கள்.

''என்ன ஆனது''

வாகனம் எரிந்து கொண்டிருப்பதை பிரம்டுக்கு காட்டினார்கள். கிரக் மிகவும் ஆத்திரம் கொண்டவனாக காணப்பட்டான். இவன் இரண்டாமவன். சொபிட் தனது கையில் போட்டிருந்த துணியை அவிழ்த்து மருந்து வைத்து எதுவும் நடக்காதது போல அமர்ந்து இருந்தான்.

''எல்லாம் இவனால் வந்தது''

மிக்கட் சொபிட்டை நோக்கிச் சொன்னான். கிரக் ஒரே பாய்ச்சலாக ஓடி சொபிட்டை உதைப்பதற்கு காலை தூக்கினான். சொபிட் இதை எதிர்பார்த்தவன் போல கிரக் காலினை பிடித்து சுழற்றிவிட்டான். கிரக் எதிர்பாராவிதமாய் கீழே விழுந்தான். இச்செயலை பார்த்த பிரம்ட் கத்தினான்.

''நாம் அழியப் போகிறோம்''

''பாதாள அறைக்குள் ஒளிந்து கொள்ளலாம்''

கிரக் எழுந்தவன் சொபிட்டை முறைத்தப்படியே பாதாள அறைக்குள் நுழைந்தான். பாதாள அறையை உள்புறமாக பூட்டினான் பிரம்ட். பிரம்ட் சொன்னான். மிக்கட் மட்டுமே பதில் பேசினான்.

''அனைவரும் நமது உறவுக்காரர்கள்''

''இனி உறவு கொண்டாட முடியாது''

''வாகனம் எரித்தவர்கள் நம்மை எரிக்காமல் விடமாட்டார்கள்''

''நாம் சில காலங்கள் கழித்து திரும்பியிருக்க வேண்டும்''

பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டின் கதவு நொறுங்கும் சத்தம் கேட்டது. அறையெல்லாம் தேடினார்கள்.

''பாதாள அறைக்குள் இருப்பார்கள், கல் கதவை உடைத்து நொறுக்குங்கள்''

''இது முறையல்ல என அப்பொழுதிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம் நீங்கள் நடந்து கொள்வது முறையில்லை''

சொன்னவரை முறைத்தார் அவர். பிரம்ட் ஒரு முடிவுடன் பாதாள அறையை விட்டு வெளியே வந்தான். பிரம்ட் ஐ கண்டதும் ஒருவன் வாளால் வெட்டப் பொனான். அவனை தடுத்து நிறுத்தியவர் பிரம்ட்டிடம் கேட்டார்.

''சொபிட் எங்கே, அவனை எங்களிடம் விட்டுவிட்டு நீ செல்லலாம்''

அதற்குள் பாதாள அறைக்குள் சிலர் இறங்காமலே குதித்தார்கள். வெளிச்சம் ஏற்ற உதவிய தீ அதி வேகமாக எரிந்தது. பிரம்ட் அப்படியே நின்றான். சொபிட் வெளியே இழுத்து வரப்பட்டான். பிரம்ட் பாதாள அறையை மூடச் சொன்னான். பாதாள அறைக்குள் சென்று வந்தவன் சொன்னான்.

''மரியாவையும் விவிட்டையும் காணவில்லை''

''அவர்களை விடு, இவன் தானே கையை வெட்டினான்''

சொபிட்டை ஓங்கி ஒரு அறை விட்டார். ஒருவன் உதைத்தான். சொபிட் கீழே விழுந்தான். பிரம்ட் கெஞ்சினான்.

''எங்களை விட்டு விடுங்கள் இனிமேல் நாங்கள் இப்பகுதிக்கு வரமட்டோம்''

''இப்படித்தான் உனது குடும்பம் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து தப்பித்து விடுகிறது. இம்முறை அது சாத்தியமில்லை''

''சொபிட் மட்டுமே குற்றவாளி மற்றவர்களை விட்டுவிடுவோம்''

''சொன்னது யார்''

''நானே சொன்னேன்''

''அப்படியென்றால் அவர்களுக்காக நீ மரணமடைய தயாரா உனது கூட்டம் இன்னமும் இவனுக்கு உதவியாக ஏன் பேசுகிறது முதலில் உங்களை வெட்ட வேண்டும்''

சலசலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கினார்கள். பிரம்ட் வாளினை எடுத்தான். கிரக்கும் மிக்கடும் வாளினை எடுத்தார்கள். சொபிட் அறையில் தீயை வைத்தான். இரு பிரிவுகளாக பெரும் சண்டை நடந்தது. வீட்டினில் தீ பரவிடவே வெளியே வந்தார்கள். வாகனம் எரிவதை பார்த்து விட்ட வந்த அந்த பகுதி மக்கள் எல்லாம் குவிந்தார்கள். குழந்தைகள் கதறின. பெண்கள் வாளினை எடுத்தார்கள். நிலவு வெளிச்சமும் தீ வெளிச்சமும் போதவில்லை.

பிரம்ட் பல நபர்களை வெட்டினான். சற்று நேரத்திற்கெல்லாம் பெரும் சேதம் நடந்தது. அனைவருமே கீழே விழுந்தார்கள். தீ வேகம் வேகமாக பரவியது. அவ்விடத்தை விட்டு தப்பித்தவர்கள் வெகு சிலரே. ஆனால் அதையும் பொறுக்காமல் காயங்களோடு அனைவரையும் வெட்டினான் கிரக். தீ முழுவதும் பரவியது. அந்த இடமே சாம்பலாகியது.

விவிட் பதட்டமடைந்தான். சென்றவர்களை காணவில்லையே என கலக்கமுற்றான். அகிலா கேட்டாள்.

''நடு இரவு தாண்டி விட்டது, இங்கிருந்து எப்படி செல்வது''

''வாகனங்கள் காலையில் வரும், சென்றுவிடலாம், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது''

பயத்துடன் இரவினை கழித்தார்கள். காலையில் வாகனங்கள் தென்பட ஆரம்பித்தன. ஒரு வாகனத்தை பிடித்து தனது பகுதிக்கு விரைந்தான் விவிட்.

அருகே செல்ல செல்ல எரி வாசனை அடித்தது கண்டு வாகன ஓட்டி அச்சமுற்றார். விவிட் ஓட்டச் சொன்னான். மொத்த பகுதியும் எரிந்து சாம்பலாகி கொண்டு இருந்தது. விவிட் ஓ வென அலறினான். மரியா மயக்கமுற்றார். அகிலாவும் சின்னச்சாமியும் பயத்தால் நடுங்கினர். வாகன ஓட்டி அவர்களை இறக்கிவிட்டு பணம் கூட வாங்காமல் வாகனத்தை எடுத்து சென்றார். மரியாவுக்கு மயக்கம் தெளிவித்து அப்படியே அமர்ந்துவிட்டான் விவிட்.

''என்ன கொடுமை இது இப்படி செய்து விட்டார்களே''

''பேசாமல் இரு அகிலா''

விவிட் சொன்னான்.

''நீங்கள் உங்கள் விடுதிக்கு செல்லுங்கள். நாம் வந்த இடத்தை அடைய இரண்டு மணி நேரம் ஆகும், அங்கிருந்து வாகனம் பிடித்து செல்லுங்கள்''

''நீங்கள் வரவில்லையா''

''தீ குழம்புகள் இருக்கின்றன, இதை தாண்டி உள்ளே செல்வது எளிதில்லை. மொத்த வம்சமும் அழிந்துவிட்டது''

மரியா பேச முடியாமல் இந்தியா இந்தியா என சொல்லிக்கொண்டே இறந்து போனார். அகிலாவும் சின்னசாமியும் அடக்கி வைத்திருந்த அழுகையை அடக்கமுடியாமல் கதறினார்கள். விவிட் ஓ என அலறினான். உடனே தாயை தூக்கிக் கொண்டு தீ குழம்புகள் பொருட்படுத்தாது ஓடினான். சின்னஞ்சிறு தீயில் போட்டான். தீயை மூட்டினான். உடல் எரிய தொடங்கியது. அகிலா மயக்கமானாள். சின்னசாமி கதறினார். விவிட மறுபுறம் ஓடினான். கற்கள் எடுத்தான். அதன் மேல் நடந்து தனது வீடு அடைந்தான். எல்லாம் எரிந்து அடங்கியிருந்தது. பாதாள அறையை ஒரு வழியாய் கண்டுபிடித்தான். திறந்து உள்ளே இறங்கினான். எதுவும் எரியாமல் அப்படி அப்படியே எல்லாம் இருந்தது.

அகிலா மயக்கம் தெளிந்தாள். விவிட் கண்ணுக்கு தெரியவில்லை. அங்கேயே அமர்ந்து இருந்தார்கள். விவிட் சிறிது நேரத்திற்கு எல்லாம் வந்தான்.

''பழங்கால பொக்கிசங்கள் எதுவும் சேதம் ஆகவில்லை''

''இவ்வளவு பேர் இறந்து விட்டார்களே, உனக்கு கவலை இல்லையா''

''தானே அழிவை தேடிக் கொண்டவர்கள் பற்றி எனக்கு என்ன கவலை''

''என்ன செய்யப் போகிறாய்''

''ஒரு பெண்ணை மணமுடித்து ஒரு சமுதாயம் இங்கே மீண்டும் உருவாக்கப் போகிறேன், இதுதான் சில ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் நடந்தது, பொக்கிசங்கள் காக்கப்படும் நீங்கள் கிளம்புங்கள்''

அகிலாவும் சின்னசாமியும் மெதுவாக பிரமிடுகள் நோக்கி நடந்தார்கள்.

''என்ன பொக்கிசங்கள் பார்க்கலாமா''

''அத்தனை பேரு செத்து கிடக்காங்க பொக்கிசங்கள் பாக்கப் போறியா, நம்மளை தீயில் போடாம விட்டானே''

''பெரு நாட்டுக்கு போக முன்னால இங்க வரனும்''

''ம்ம் தொலையனும்னு ஆசைப்படுற, நம்மால ஒரு சமுதாயமே தொலைஞ்சி போயிருச்சு''

''....''

கவலையில் கரைந்து கொண்டே நடந்தனர்.

(தொடரும்)

அறிவுரைக்கு

''இந்த உலகத்துல எல்லாரும் எப்படி இருக்கனும், எப்படி இருக்கக்கூடாதுனு வரையறை இருக்கானு பார்த்தா இருக்கு, ஆனா இல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நினைப்பு வைச்சிட்டு வாழ்ந்துட்டு வராங்க, ஆனா எல்லாரும் ஒரே நினைப்பா இருக்காங்களானு பார்த்தா இருக்கு, ஆனா இல்ல. இப்ப நான் கூட இந்த உலகத்திலே இருக்கேனானு கேட்டா, இருக்கேன் ஆனா இல்ல. ம்ம் என் பேச்சை யாரு கேட்கப் போறா, நானும் இப்படி திண்ணையில உட்கார்ந்துட்டு தினமும் என்பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் வர்ரவன் போறவன் எல்லாம் இந்த கிழம் எப்போ போய்ச் சேருமோனு மனசு கூசாம, வாய் கோணாம பேசிட்டே போறான். ம்ம் எப்பத்தான் விடிவு காலம் பொறக்குமோ?''

''தாத்தா பொலம்ப ஆரம்பிச்சாச்சா? இந்தா இந்த கஞ்சியை குடிச்சிட்டு படு''

''எனக்கு எதுவும் வேணாம்டா, பச்சை தண்ணிகூட குடிக்காம பட்டினியா கிடந்தாச்சும் இந்த உசிரை எமன் எடுத்துட்டுப் போவட்டும்''

''தாத்தா சாகறதைப் பத்தியே நினைச்சிட்டு இருக்கியே, வாழனும்னு ஆசை இல்லையா''

''ஏண்டா உன் வயசுல வாழ ஆசை இருக்கும், என் வயசுல சாக ஆசை இருக்கும், கஞ்சியை வச்சிட்டுப் போடா''

''குடிச்சிட்டுப் படு தாத்தா''

''பதினைஞ்சி வயசு ஆகுது, படிக்கிறானாம் படிப்பு. வீட்டுக்கு காவலுக்கு இருக்கிற மாதிரி வெளியே படுக்கையை போட்டுக்கொடுத்துட்டான் இவன் அப்பன், இவ அம்மா கஞ்சி வந்து கொடுத்தா அவ ஆயுசை நா எடுத்துருவேனேன்னு பயம், இந்த கஞ்சியை நா குடிச்சி போற உசிரை பிடிச்சி வைக்கவா''

''கஞ்சி எல்லாம் பலமா இருக்கு?''

''யாரு இது? ரோசாப்பூவா, இந்தாடா எடுத்துக் குடிச்சிட்டுப் போ, பலமா இருக்குனு எதுக்கு பீடிகை போடுற. எப்போ கஞ்சி வைப்பானு பார்த்து அதுல பங்கு போட வந்துருவியே, குடி குடி மிச்சம் வைக்க மனசு இருந்தா வையி, இல்லைன்னா முழுசும் துடைச்சிட்டுப் போ''

''என்னதான் இருந்தாலும் உனக்கு மிச்சம் வைக்காம குடிப்பேனா, ஊறுகாய் வைக்கலையா பொடிப்பைய, ஒரு அப்பளம் வைக்கக்கூடாது''

''ஊறுகாயாவது உன் வீட்டுல இருந்து எடுத்துட்டு வரவேண்டியதுதானே, வக்கனையாப் பேசற''

''நீயே கஞ்சிய குடி, இன்னைக்கு இது வேணாம். என் வீட்டை எதுக்கு ஞாபகப்படுத்துற நீ உசிரோட இருந்தா எனக்கு ஒரு வாய் கிடைக்கும்''

''நீ குடிச்சிட்டுப் போ, இல்லைன்னா உன்னைப் பத்தியே கவலையா இருக்கும்''

''பாவம் இவனுக்கும் தான் நாலைஞ்சு புள்ளைக, இங்க வந்து ஒட்டிட்டுப் போறான், இவனுக்காகத்தான் நா சாகாம இருக்கேனோ என்னவோ''

''என்ன தாத்தா குடிச்சிட்டியா, ரோசாப்பூ தாத்தா குடிச்சாரா''

''ஏண்டா உன் அம்மாவுக்கு தெரியாம எங்க ரெண்டு பேருக்கு ஊத்திட்டு வருவியா''

''அம்மாதான் ஊத்திக்கொடுக்கும், உள்ள வந்து படுத்துக்கோ தாத்தா''

''திண்ணைதாண்டா எனக்கு லாயக்கு ஓயாம இப்படி சொல்லாதே''

''உன்னை ஒதுக்கி வைச்சிருக்கோம்னு ஓயாம நினைக்காதே தாத்தா''

''இந்த இருட்டு மட்டும் இல்லாமலிருந்தா இன்னும் என்ன என்னமோ பேசிட்டே இருக்கலாம், இனி எவனும் இந்த பாதை பக்கம் நடக்கமாட்டான். இனி நான் பேசறதை நானே தான் கேட்டுக்கனும் வயசாயிட்டா வாழ்க்கையே இல்லைனு ஆகுறமாதிரில நினைக்கிறானுக. நானும் பாரு காலையில தோட்டத்துப்பக்கம் வரவங்க போறவங்ககிட்ட நக்கலு, மதியானம் ஒரு தூக்கம், அப்புறம் சாயந்திரம் புது புது பேச்சுனு சொகுசாத்தானே இருக்கேன். இப்படி வயசு இருக்கறப்ப இருந்து இருந்தா பேரு புகழு இதைப் பத்தியெல்லாம் கவலை வந்துருக்குமா, அது வேணும் இது வேணும் அந்த வீடு வேணும் இந்த வீடு வேணும், அவனை விட நான் முன்னுக்கு வரனும்னு ஓயாம ஓடி இப்போ உட்கார்ந்து பேசறச்சே ஒரு ஜீவன் கஞ்சி குடிச்சிட்டுப் போகுது மத்ததெல்லாம் எப்போ போகும்னு கேட்டுட்டுப் போகுது''

''தாத்தா நா படிக்கனும் நீ பேசறது என் காதை அடைக்குது தூங்கு''

''போடா போ, படி, படி உலகத்துல நீ மட்டும் தான படிக்கிற! படி நாலு விசயம் புலம்பறதுக்காச்சும் படி''

தாத்தா உறங்கினார். திடீரென கொட்டுச் சத்தம் கேட்டது. விழித்தார்.

''தூங்கின எனக்குத்தான் கொட்டு அடிக்கிறானுகளா''

''அப்பா, உங்க நண்பர் ரோசாப்பூ செத்துட்டார்''

''டேய் டேய் என்னடா சொல்ற, ரோசாப்பூ போய்ட்டானா, டேய் எனக்கொரு உதவி செய்டா இன்னும் கொஞ்ச நேரத்தில நானும் செத்துருவேன் என் பொணத்தை தூக்கிப் போடற செலவுல பாதி செலவு செஞ்சி அவ பொணத்தை தூக்கிப் போட்டுருடா இனி இந்த உசிரு தங்காதுடா''

''அப்பா, என்னப்பா பேசறீங்க''

''அதோடமட்டுமில்லைடா, கதை எழுதுறேனு ஒருத்தன் வந்து என் கதையை கேட்டு அதை அப்படியே எழுதியும் வைப்பாண்டா, என்னமோ உலகத்துல இல்லாததை இவன் பாத்துட்டானு, அவன்கிட்ட என் கதையும் சொல்லி அதுல பாதிய ரோசாப்பூ பத்தியும் எழுதச் சொல்லுடா''

''அப்பா.....''

அழுகை விண்ணை முட்டியது. கொட்டு சத்தம் பாதி பாதியாய் பிரிந்து கேட்டது.

முற்றும்.

Friday, 12 June 2009

இறைவனும் இறை உணர்வும் - 1

இறைவனும் இறைஉணர்வும் – 1


இத்தொடரைத் தொடங்கிட கடவுள் வாழ்த்து எழுத வேண்டும், ஆனால் இப்பொழுது எந்த இறைவனுக்கு வாழ்த்துச் சொல்லி எழுதுவது? எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இறைவன்கள் எல்லாம் எனக்கு மனிதர்களாகவேத் தெரிகிறார்கள் அல்லது இறைவனே மனிதவடிவில் கடவுளராக வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். மொத்தத்தில் இறைவன் இறைவனாகவே வந்ததாக எனக்கு பாடம் எவருமே நடத்தவில்லை அதாவது அப்படியொரு பாடத்தை நான் இதுவரை கற்றத் துணிந்தது இல்லை என எழுதுவதே மிகச்சரியாக இருக்கும். அசரிரீ என்றெல்லாம் கேள்விபட்டு, மனதில் உள்ளே குரல் ஒலிக்கிறது என்றெல்லாம் சொல்லிவிடும் தருணம் எதுவாக இருப்பினும் இறைவனின் குரல் இதுநாள்வரை நான் கேட்டதே இல்லை. இது இப்படியிருக்க எங்ஙனம் இறைவன் வாழ்த்துத் தொடங்குவது?.

தெய்வப்புலவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய கடவுள் வாழ்த்து போல் எழுதினால் திருவள்ளுவர் சமணர், இந்து என அவர் மீது சமய, மத முலாம் பூசுவது போல் இந்த எழுத்துக்கு ஆகிவிடும், அவரது அரிய கருத்துக்கள் பேச்சுப்போட்டிக்கும், கட்டுரைப்போட்டிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பது போல எனது எழுத்தும் ஆகிவிடும் எனும் அச்சமெல்லாம் எனக்கு இல்லை. என் பெயரைப் பார்த்ததும் வைணவன் என அவரவராக முடிவு கட்டிக்கொள்வார்கள், ஒருவேளை எனது எழுத்துக்களைப் பார்த்து இறைநம்பிக்கை அற்றவன் என முடிவுக்கும் பலர் வரக்கூடும்.


ஒருவருக்கு இறை நம்பிக்கை இருக்கிறதா? இறை நம்பிக்கை இல்லையா? என்பதா நமது வாழ்க்கையில் முக்கியம் என்பது பலருக்குத் தெரியாது என எழுதும்போதே அவரவருக்கு அததது முக்கியமாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுவிட்டேனெனில் மிகச் செளகரியமாக இருக்கும். இதைச் சொல்வதற்குக் காரணம் இறைவன் அவரவர் செளகரியத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டார் என்றால் எவரேனும் மறுப்புத் தெரிவித்து விடுவீர்களோ என எண்ணுவதற்கெல்லாம் இடமே இல்லை. எங்கேயும் இறைவன் இறைவனாக காட்சித் தருவதில்லை, ஆனால் காட்சிப் பொருளாகக் காட்டப்படுகிறார் அது வெற்றிடமாக இருப்பினும் கூட! இறைவன் மேல் அலாதிப் பிரியம் எனக்கு உண்டு. ஆகவே எந்த இறைவனுக்கு வாழ்த்துச் சொல்வது என்பதை ஒரு பொருட்டாக கருதாமல் அனைத்துலகுக்கும் சொந்தமான இறைவனுக்கு ஒரு வாழ்த்து எழுதுவதே முறையாகும்.


இறைவன் வாழ்த்து.


மறைந்திருக்கும் உண்மையே நீயாவாய்

மறைமூலம் வெளிப்படுத்தப்பட்ட உண்மையும் நீயாவாய்

உண்மையாய் இருப்போர்க்கே உண்மையராய்

உம்மையும் எமக்கு அறிவித்தார் இப்பாரினில்

முதலாய் முடிவாய் இருப்பவராய்

இடையில் எம்மை இருந்திடச் செய்தீரோ

புதையலாய் எங்கு புதையுண்டீர்

தடையின்றி உள்ளத்தில் இருப்பீராம் அறிவித்தார்

ஆக்கிட அழித்திட முடியாது

அணுவின் சிறப்பைப் போல நீயிருப்பாய்

நீக்கமற நிறைந்திருக்கும் சிந்தையே

பணிவுடன் யாம் வாழ்த்துவோம் உம்மை.


உண்மையாய் இருப்போர்க்கே உண்மையினைப் பற்றித் தெரிய வாய்ப்புண்டு. அதாவது உண்மை என நம்பிக்கைக் கொண்டோர்க்கு என அர்த்தப்படுத்திக் கொள்வதேச் சாலச் சிறந்தது. மனிதர்களாகிய ஞானிகள் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் பொருட்டு தாங்கள் அறிந்தவற்றை பேசியதன் மூலம் இறைவனை வெளிக்கொண்டு வர முயற்சித்தார்கள். பின்னர் எழுத்துக்கள் மூலம் எழுதி இறைவனை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள். இறைவன் அவரவருக்கு மட்டுமேத் தெரிந்த உண்மையாக இருப்பதாகக் காட்டப்பட்டது. அனைவருக்கும் தெரிந்த உண்மையாக இறைவனைக் கொண்டுவர வேண்டுமென எழுதப்பட்டதுதான் மறை நூல்கள்.


இந்த மறை நூல்கள் மறைந்திருக்கும் உண்மையை வெளிச்சொல்ல வந்ததேயெனினும் இறைவன் இரகசியமானவனாகவே இருந்து வருகிறான், இல்லையெனில் இறைவன் மறுப்புக்கொள்கை ஒன்று தோன்றியிருக்கவே இருக்காது, மேலும் ஒரு இறைவனைச் சொல்ல பல வேதங்கள், மதக் குருமார்கள், ஞானிகள் என அவசியமே இருந்திருக்காது. எல்லா மக்களும் இறைவன் என நிம்மதியாய் இருந்திருப்பார்கள். மனிதர்களுக்கு இறைவனின் அவதாரங்கள், தூதர்கள் என இறைவனை வலியுறுத்திய வசனங்களுக்குத் தேவை ஏற்பட்டிருக்காது. இறைவனை அடைய பல வழிகள் என இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் சரியே என சொற்பொழிவு ஆற்ற வழியின்றிப் போயிருந்திருக்கும். மேலும் இதுபோன்ற காரியங்களால் மட்டுமே இறைவன் தனிமைப்படுத்தப்பட்டு உண்மை அறிவு சாதாரண பார்வைக்கு மறைந்தே இருப்பது போல் தோற்றம் அளிக்கிறது.


அப்படியெனில் இறைவன் யாராக இருக்கக் கூடும்? என்றே கேட்டு வைத்தேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் எதைப் பற்றியும் சிந்திக்காமல் உடனடியாக பதிலும் வந்து விழுந்தது, இறைவன் யாராகவும் இருக்கக் கூடும். உண்மையிலேயே இறைவன் யாராகவும் இருக்கக் கூடுமோ?!


(தொடரும்)