22. வயதற்ற கனவுகள்
நாச்சியார் பாமாவை தன்னுடன் ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு அழைத்தார். பாமாவும் சம்மதம் சொன்னாள். நாச்சியாருக்கு பாமா மீது நிறைய அன்பும், மதிப்பும் பெருகிக் கொண்டே இருந்தது. அதிகாலையிலேயே சென்றுவிட்டு அன்றே இரவே திரும்பி விடுவதாக முடிவு செய்தனர். குண்டத்தூர் வந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
''பாமா, சடகோபன் அப்படிங்கிறவரைத்தான் பார்க்கப் போறோம், இன்னைக்கு இரவுக்குள்ள திரும்பிரலாம். நீ உன்னோட திட்டம் போல சனிக்கிழமை யசோதை கூடப் போய் என்ன ஏதுனு பாரு''
''சரிங்கம்மா''
''நீ எதிர்பார்த்த சம்பளம்தான நாங்க பேசினது''
பாமா சிரித்தாள்.
''என்னாச்சு பாமா''
''இங்கே என்ன செலவு இருக்கும்மா, தங்குற வீடு, சாப்பிட சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே நீங்க தரது, அதோட சம்பளம்னு பணம் வேற சொல்லி இருக்கீங்க. எங்க அப்பா நிறைய சம்பாதிக்கிறார் ஆனா மிச்சம் எதுவும் இல்லைனு சொல்லிட்டே இருப்பார். இதுக்காகவே அம்மா, அப்பா கொண்டு வர பணத்தில் எனக்குன்னு சேர்த்து வைச்சிருவாங்க, என்னதான் இருந்தாலும் கிராமம் வேற, சிட்டி வேறதானம்மா''
''உன்னோட தோழிகள் எல்லாம் உன்னோட முடிவு பத்தி எதுவும் சொல்லலையா''
''யாரு என்ன சொன்னாலும் நம்ம மனசுக்குனு பிடிக்கனும்னு நினைப்பேன், என்னமோ நீங்க என்கிட்டே பேசினதுல இருந்து எனக்கு நீங்க சொல்றத கேட்கனும்னு தோனிச்சி, இன்னைக்கு இப்படி ஒரு அற்புதமான பெருமாள் கோவிலைப் பார்க்க உங்களாலதான் கொடுத்து வைச்சி இருக்கு, நிறைய திருப்தியா இருக்கும்மா. இந்த வாழ்வை ஒரு பயனுள்ள வகையில் வாழனும்னு நினைச்சேன், நாராயணியை நினைக்கிறப்போ பயனுள்ள வாழ்வாவே இருக்கு''
''மெடிக்கல் உலகத்தில நிறைய முன்னேற்றம் வந்துருச்சி, யசோ கூட வேலன் சொல்லித்தான் இந்த கை , கால் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்றம்னு படிக்க ஆரம்பிச்சா, வேலன் இல்லைன்னா நிச்சயம் இதை எல்லாம் படிச்சி இருக்கமாட்டேனு சொல்வா, யாராவது ஒருத்தர் ஒரு உற்சாகம், ஊக்கம் தரக்கூடியவங்களா அமைஞ்சிருறாங்க. எனக்கு எப்பவுமே பெருமாள் தான்''
''எனக்கும் எப்பவும் பெருமாள் தான்ம்மா''
நாச்சியார் அமைதியாக இருந்தார். அவரது மனம் நிறைய யோசிக்கத் தொடங்கியது. கல்லுப்பட்டி தாண்டி விருதுநகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது.
''கல்யாணம் பண்ணு பாமா''
''இரெங்கன் கிடைச்சா பண்ணிக்குவேன்ம்மா, இல்லைன்னா உங்களை மாதிரியே இருந்துக்கிறேன்''
''என்னை மாதிரியா?, இன்னொரு நாச்சியார் வேணாம்''
பாமா சிரித்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், கன்னங்களும் அழகிய கதையை சொல்வது போல் இருக்கும்.
''எல்லா பாசுரமும் மனப்பாடமா தெரியுமா?''
''எல்லாம் தெரியாதும்மா, குறிப்பிட்டது மட்டும் அதுல நிறைய நம்மாழ்வாரோடது''
விருதுநகர் வந்து அடைந்தார்கள். நாச்சியாரின் பள்ளிக்கூட கனவு என்பது வயது கடந்த கனவுகள் போல தோன்றினாலும் கனவுகள் வயது அற்றவைகள். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று ஆழ்வார் திருநகரி அடைந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. சடகோபனைத் தேடிச் சென்றனர். அறுபது வயதுக்கும் மேலானவராக இருந்தார். காரைவீடு. நிறைய ஆட்கள் அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்தனர். நாச்சியார் தன்னிடம் இருந்த கடிதம் கொடுத்ததும் சடகோபன் இவர்களை வரவேற்று உபசரித்தார். பாமா தங்களது திட்டம், என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என அத்தனை அருமையாக பல எடுத்துக்காட்டுகள் மூலம் பள்ளிக்கூடம் பற்றி சொன்னதும் தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இது நாச்சியாருக்கு சற்று வியப்பாக இருந்தது. விருதுநகரில் உள்ள ஒருவர் மூலமே எல்லா அனுமதியும் பெற்று தருவதாகவும் உறுதி அளித்தார். கனவுகள் நிச்சயம் வயது அற்றவைதான்.
ஒரு விசயத்தை பல வருடங்களாக செய்ய முயற்சி செய்து எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பதை எண்ணி மனம் தளர்ந்து போவார்கள், அதன் காரணமாக அந்த விசயத்தை வேண்டாம் என கைவிட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த விசயங்கள் குறித்த கனவை தங்களுடனே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒரு மரம் எப்படி பலன் தர பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதோ அது போலவே சில காரியங்கள் நடக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை நிறைவேற்ற தகுந்த மனிதர்கள் வரும் வரை அந்தக் கனவுகள் தங்களை இருக்கப் பிடித்துக் கொள்ளும். நாச்சியார் பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பாமா பேசிய முறை தன்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என புகழாரம் சூட்டினார். பாமா நம்மாழ்வாரை எண்ணி மனமுருக வேண்டிக் கொண்டாள். அவளது மனதில் கம்பர் தனது கனவினை நிறைவேற்ற சடகோபன் அந்தாதி பாடிய நிகழ்வினை எண்ணினாள்.
கம்பர் தனது இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கர் சன்னதியில் அரங்கேற்ற விருப்பம் கொள்ள அது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது இத்தடை போக்க என்ன செய்ய என நாதமுனிகளிடம் கேட்க அவர் அரங்கன் சன்னதியில் அரங்கேற்றம் பண்ண அனுமதி அளித்தார். அதன்பின்னும் தடை உண்டானது. கம்பர் ஸ்ரீரெங்கனிடம் வேண்ட, பெருமாளே அவரது எண்ணத்தில் வந்து நம் சடகோபனை பாடினாயோ எனக்கேட்க நம் சடகோபன் நம்மாழ்வார் ஆனார். இதன் காரணமாகவே கம்பர் சடகோபன் அந்தாதி இயற்றினார். அதன்பின்னரே அவரால் எவ்வித தடைகள் இல்லாமல் அரங்கேற்றம் பண்ண முடிந்தது. கம்பர் அரங்கம் இன்றும் அரங்கன் கோவிலில் உண்டு.
கம்பனின் கனவை நிறைவேற்றியவர் அச்சடகோபன். நாச்சியாரின் கனவை நிறைவேற்ற இருப்பவர் பாமாவின் மூலமாக இச்சடகோபன். கம்பர் நம்மாழ்வாருக்கு என இயற்றிய முதல் துதி.
தருகை நீண்ட தயரதன் தரும்
இருகை வேழத்தி இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குரைகழல் காப்பதே.
சாதாரண நிகழ்வைக் கூட நம் மனம் எத்தனையோ ஆண்டுகள் முன்னர் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளும். பல வருடங்களாக ஒன்றின் ஒன்றாகத் தொடர்ந்து நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகும்.
சடகோபன் அவர்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிசேத்திரத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த ஊரின் பழைய பெயர் திருக்குருகூர். தான் அவதரித்த இந்த ஊரை நம்மாழ்வார் பாசுரங்களில் குருகூர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். பாமா அந்த ஆலயத்தில் கால் வைத்ததும் மெய் சிலிர்த்தாள். தான் இதுவரை மனதில் வேண்டிய ஒருவரின் தலத்திற்கு வந்து இருப்பது அவளுக்குள் பேரின்பத்தை உண்டு பண்ணியது. அங்கே இருந்த புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 வருடங்கள் வாசம் இருந்தார். எல்லாப் பாடல்களும் அவர் இங்கேயே இயற்றினார். இந்த புளிய மரம் கூட பெருமாளே புளிய மரமாக வந்ததாக கதை உண்டு. புளிய மரத்தைத் தொட்டு வணங்கினாள் பாமா.
''அம்மா, நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா?'' பாமா நாச்சியாரிடம் கேட்டாள்.
''இல்லை பாமா, உன்னோட நான் வரனும்னு இருந்து இருக்கு''
சடகோபன் பாமாவிடம் இந்தக் கோவிலோட பூர்வ ஜென்ம தொடர்பு உனக்கு இருக்கும்மா என்றார். பாமா வியப்பாக அவரைப் பார்த்தாள். தனக்கு அப்படி ஒரு எண்ணம் எப்போதுமே உண்டானது இல்லை என அவள் அறிவாள், ஆனால் நம்மாழ்வார் மீது அவளுக்கென தனிப்பிரியம் சிறு வயதிலேயே உண்டானது. சடகோபன் பாமாவின் யோசனையைப் பார்த்துவிட்டு ஆலயம் நோக்கி வணங்கினார்.
''நீ ஒரு பாமரத்தி''
சடகோபன் பாமாவை நோக்கி சொல்லிவிட்டுச் சென்றதும் பாமா அப்படியே புளியமரத்தைப் பற்றிக் கொண்டு நின்றாள். புளியமரத்தின் அடியில் நான்கு சுவர்களில் நிறுவப்பட்ட முப்பத்தி ஆறு திவ்ய தேசப் பெருமாள் சிற்பங்கள் எல்லாம் அவளை நோக்கி அருளாசி வழங்குவது போல இருந்தது. இந்த நிகழ்வு ஒருவன் சொன்ன கவித்துவ நிகழ்வுக்கு ஒப்பாக இருந்தது.
'கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம்
எனக்கு பெருங்குழப்பம் நேர்வது உண்டு
நீ தெய்வங்களை கும்பிடுகிறாயா அல்லது
உன்னை தெய்வங்கள் கும்பிடுகின்றனவா என்று'
பாமாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. ஒன்றின் மீதான காதலின் உயர்நிலையில் பாமா நின்று கொண்டு இருந்தாள்.
(தொடரும்)