இஞ்சிக்கொல்லை சிவராம சாஸ்திரிகளால் 1908ம் வருடம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஸ்ரீமத் பாகவதம்தனை தொடர்ந்து இந்த வலைப்பூவில் எழுதப் போகிறேன்.
இந்த ஸ்ரீமத் பாகவதத்தில் நிறைய விசயங்கள் இருப்பதாக கேள்விப்பட்ட காரணத்தினால் அதைப் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் மிஞ்சியது. ஆனால் சில பல காரணங்களால் என்னால் படிக்கவே இயலவில்லை. அவ்வப்போது ஆவல் எழும் போதெல்லாம் ஸ்ரீமத் பாகவதம் தேட ஆரம்பிப்பேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதம் கண்ணுக்கு தென்படும்.
ஸ்ரீரங்கத்தில் எனது தாத்தா ஒருவர் விஷ்ணுபுராணம் புத்தகம் வைத்து இருந்தார். அதைப் படிக்கும்போது 'என்ன எழுதி இருக்கிறார்கள்' என அன்று தூக்கி போட வைத்துவிட்டது. அன்றைய காலத்தில் குமுதமும், ஆனந்தவிகடனும், ராணியும், கல்கியும் பெரிய விசயங்களாக இருந்தன.
இந்த ஸ்ரீமத் பாகவதம் புத்தக வடிவில் கிடைக்கின்றன. அவையெல்லாம் இணையத்தில் தொகுத்து வைத்தால் என்ன எனும் எண்ணத்தின் விளைவாக இந்த பணியை எடுத்து இருக்கிறேன். மொத்தமாக எழுதினால் கூட எத்தனை வருடங்கள் ஆகும் என தெரியாது. எனது நேரத்தில் இதற்காக தினமும் செலவிடலாம் எனும் எனது எண்ணத்திற்கு அந்த நாராயணரே அருள் பாலிக்கட்டும்.
ஸ்ரீமத் பாகவதம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு எந்தவிதமான ஆவலும் இருக்கப் போவதில்லை. இத்தனை புத்தகங்களை வாங்கி படிப்பார்களா என தெரிய வாய்ப்பும் இல்லை.
சினிமா பதிவுகள், அனுபவ பதிவுகள், பயண கட்டுரைகள், அறிவியல் பதிவுகள் என எத்தனையோ எழுதி வைத்துவிட்டாகி விட்டது. அந்த பதிவுகள் எல்லாம் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதை நிறுத்தி வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஸ்ரீமத் பாகவதம் என்ற ஒரு அற்புதத்தை வெட்டி ஒட்டுதல் என இல்லாமல் கைப்படவே எழுத இருக்கிறேன்.
எவரோ செய்த அற்புத பணி, நூற்றி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அதை இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் இங்கு எழுதுகிறேன். இந்த முயற்சிக்கு பாலமாக இருக்க போகும் சிவராம சாஸ்திரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஸ்ரீமத் பாகவதம் விரைவில் தொடரும்.