Showing posts with label பதிவர் மாவட்டம். Show all posts
Showing posts with label பதிவர் மாவட்டம். Show all posts

Friday, 17 February 2012

பன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்

முதலில் இந்த 'பன்முக பதிவர்' விருதினை எனக்கு அளித்து சிறப்பித்த சகோதரி ஷக்திபிரபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

பொதுவாகவே விருது என்றால் எனக்கு என்னை அறியாமல் பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி செல்லும் எழுத்துகள் காலப்போக்கில் சுயத்தை தொலைத்துவிடும் என்கிற அவசியமற்ற பயம் தான் அது. இதோ இவர்கள் கவனிக்கிறார்கள், அதோ அவர்கள் கவனிக்கிறார்கள் என ஒரு எண்ணம் மனதில் வட்டமிடும்போது அங்கே எதிர்பாராத ஒரு பயம் வந்து சேர்ந்துவிடுகிறது, எங்கே ஏதேனும் எவரேனும் சொல்லிவிடுவார்களோ என அத்தியாவசியமற்ற மனநிலை அனைவருக்கும் நிகழ்வது இயல்பு. ஆனால் அதை எல்லாம் தாண்டி பயமற்ற ஒரு எழுத்து என்பதுதான் ஒருவரின் சுயத்தை அடையாளம் காட்டும். ஒரு எழுத்தை மென்மையாக, இலைமறை காயாக வெளிப்படுத்துவது என்பதைத்தான் நாகரிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவர் சொல்லும் விதம் தனில் உங்களது முகம் சுளிக்கிறதா, விரிவடைகிறதா என்பதுதான் அந்த சொல்லிய விதத்திற்கு வெற்றி. ஆனால் எல்லா விதங்களில் எழுதுபவர்களைப் போலவே எல்லா விதங்களிலும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

உங்களை நீங்கள் எப்படி அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள் என எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். அனைவருமே தான் செய்யும் தொழில் சம்பந்தபடுத்தித்தான் தங்களை அறிமுகபடுத்துவார்கள்.  அதை எல்லாம் தாண்டி தனிப்பட்ட மனித குண நலன்கள் எல்லாம் எவருக்கு தேவை என்கிற போக்குதான் நம்மிடம் இருப்பது. இப்போது ஒருவர் பலதுறைகளில் புலமை பெற்றவராக இருப்பதால் ஒரு துறையில் தனித்தன்மை பெற இயலாது போகிறது என்றே சொல்வோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு தொழிலை முதன்மையாக வைத்து கொண்டு மற்ற விசயங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வோரும் உண்டு. முதன்மையான தொழிலை வைத்தே அவரது அடையாளம் பேசப்படும். இதுவரை என்னை நான் பதிவர் என எவரிடமும் அறிமுகமும் செய்தது இல்லை, நான் பதிவுகள் எழுதுகிறேன் என நேரடியாக எவரிடமும் சொல்லிக்கொண்டது இல்லை. எனக்கு இந்த பதிவு எழுதுவது எல்லாம் ஒரு எழுத்து விளையாட்டு போலத்தான். அப்படி எழுத்துவிளையாட்டில் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் பெரியது. ஏனெனில் சின்ன சின்ன பாராட்டு கூட மன மகிழ்ச்சியை தரும்.

நான் பதிவர்களுக்கு விருது தர வேண்டும் என ஆரம்பித்து இரண்டே இரண்டு பதிவர்களுக்கு மட்டும் தந்துவிட்டு நிறுத்தி கொண்டேன். விருது வழங்குவதை கூட ஒரு ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்கிற நினைப்பில் அப்படியே நிறுத்திவிட்டேன். இந்த வலைப்பூவில் நான் பெற்ற விருதுகள் என இந்த விருதுடன் சேர்த்து மூன்று விருதுகள். இந்த விருதை நான் எனக்குப் பிடித்த பதிவர் ஐந்து பேருக்குத் தந்தால்தான் நான் இந்த விருதை ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு சமம் என்ற வாசகம் என்னை சில நாட்கள் யோசிக்க வைத்துவிட்டது.

பொதுவாக மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் இப்படித்தான் வரும். இதை நான்கு பேருக்கு அனுப்புங்கள், எட்டு பேருக்கு அனுப்புங்கள் என. நான் அதுபோன்ற மின்னஞ்சல்களை இதுவரை கண்டுகொண்டதே இல்லை. ஒன்றை ஆத்மார்த்தமாக செய்வதற்கும், செய்ய சொல்லிவிட்டார்களே என செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. விருதுகள் பெற்ற நண்பர்கள் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களால் ஆத்மார்த்தமாக பதிவர்களை தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் பல பதிவர்களை மனதில் பரிசீலித்து கொண்டே இருக்கும்போதே அவர்கள் எல்லாம் விருதுகள் பெற்று கொண்டிருந்தார்கள். ஆஹா இப்படி வெட்டி வியாக்கியானம் நினைப்பு கொண்டிருந்தால் பதிவர்கள் மிச்சம் இருக்க மாட்டார்கள் எனும் நினைப்பு வந்து வெட்டிப் போனது. இருப்பினும் பரிசீலித்து கொண்டேதான் இருக்கிறேன்.

பன்முக பதிவர் என்றதும் எனக்கு 'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்' என்ற பாடல் மட்டுமே நினைவில் வந்தது. அந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னையறியாமல் ஒரு உணர்வு சில்லிட்டுப் போகும்.

எங்கிருந்தோ வந்தான்,
இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய்  மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான்

இப்படி பல வேசங்கள் தரித்து வாழும் வேடதாரியான நம்மில் பல விசயங்கள் பற்றி எழுதும் தன்மை இருப்பது இயல்போ என தெரியவில்லை. ஆனால் நம்மில் பலர் மிகவும் குறிப்பாக, ஒரு சம்பந்தப்பட்ட துறை மட்டுமே எழுதும் இயல்புடனும் இருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் பன்முக பதிவர் விருது பெரும் தகுதி அற்றவர்களா என்றால் அதுதான் இல்லை. ஒரே துறை பற்றி எழுதினாலும் அதில் கூட சில பல புதுமைகள் பற்றி எழுதுபவர்கள் கூட பன்முக பதிவர்கள் தான்.

நான் தேர்ந்தெடுக்க இருக்கும் ஐந்து பதிவர்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன். இந்த விருதினை நான் ஏற்று கொண்டேன் என முழு மனதுடன் உறுதி செய்கிறேன். அதற்கு முன்னர் எனக்கு பிடித்த ஏழு விசயங்கள் பற்றி சொல்லிவிடுகிறேன்.

1. எனக்கு சாப்பிடுவது மிக மிக பிடிக்கும்.

2. எனக்கு எழுதிக்கொண்டிருப்பது மிக மிக பிடிக்கும்

3. புராண காலத்து வேதங்கள், எழுத்துகள் எல்லாம் வாசித்து மகிழ்ந்திருக்க மிக மிக  பிடிக்கும்

4  மக்களுக்கு என்னை முன்னிறுத்தாமல் சேவகம் செய்வது மிக மிக பிடிக்கும்

5 . மலைகள், காடுகள், நாடுகள் என சுற்றிப் பார்க்க மிக மிக பிடிக்கும்

6  யாதும் ஊரே யாவரும் கேளிரும், நன்றும் தீதும் பிறர் தர வாராவும், இறைவனும் மிக மிக பிடிக்கும்.

7 பிடிக்காத விசயங்களை கூட 'வந்து இந்த பூமியில் வந்து பிறந்தோமே' என்பதற்காக செய்வது பிடிக்கும்.

Thursday, 26 January 2012

நண்பனால் தடுமாறிய தமிழ்வெளி

ஹிட்ஸ் ஹிட்ஸ் ஹிட்ஸ்! 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்களா என்பது பற்றிய விவாதம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் தரமிக்க பதிவுகளை எழுதுகிறார்களா என்பது பற்றிய கலந்துரையாடல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

எந்த பதிவர் எப்படி தலைப்பு வைத்து எழுதி எப்படி ஹிட்ஸ் அள்ளி குவிக்கிறார் என்பதுதான் இன்றைய விவாதம் எல்லாம். ஹிட்ஸ் வைத்து வீடா கட்டப் போகிறோம் என அறைகூவல் விடுத்தாலும் ஹிட்ஸ் என்பது ஒரு அங்கீகாரத்தின் அடையாளம். 

எழுத்துகள் அத்தனை எளிதாக எவரையும் வசீகரிப்பதில்லை. எந்த ஒரு எழுத்தாளரும் அனைத்து சமூகத்தையும் தன்னருகே ஒருங்கே நிறுத்தியது இல்லை இதுவரை. பிரிவினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நான் இவரது ரசிகன் என ஒருவர் சொல்லும்போதே மற்றவர்களை ரசிக்கும் தன்மை குறைந்தவராகவே தென்படுகிறார். 

எழுதுவது அவரவர் உரிமை. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்பதை எழுதுபவரே தீர்மானிக்கிறார். 

இப்பொழுதெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறது. இதை மறுமொழி இடுபவர்க்கு என வெப்துனியா தனது மறுமொழி இணைப்புக்கு முன்னர் எழுதி இருக்கிறது. 

//விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.//

இதே விசயத்தை பதிவு எழுதுபவர்கள் மீதும் ஒருவர் தொடங்கலாம் என்பது அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று. 

இணையத்தில் நல்ல விசயங்களை மட்டுமே வாசிக்க நினைப்பவர்கள் கையில் தான் மவுஸ் உள்ளது. இவர்கள் அவ்வாறு செய்யாமல் சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி பேசி பொழுதை வீணடிக்கிறார்கள் என்கிறார் இணையதளத்தை அதிகமாக உபயோகிக்கும் ஒருவர். 

மேலும் இணையதளத்திற்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகிவிட்டு இதற்கெல்லாம் அடிமையாகி விடாதீர்கள் என பிறருக்கு அதே அடிமைத்தனத்தில் இருந்து கொண்டே எச்சரிக்கை விடுப்பது குடிகாரன் பிறரை குடிக்காதே என அறிவுரை சொல்வது போன்றதுதான். அவரவருக்கு தெரியும் எது செய்ய வேண்டும், எது செய்ய கூடாது என. எந்த போதையும் கண்களை மறைக்கும். 

இந்த ஹிட்ஸ் பற்றி என்ன சொல்வது?

எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவுக்கு தமிழ்வெளி மூலம் வந்த வாசகர்கள் என ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேலே காட்டியது. அதைவிட கூகுள் பக்கம் பார்வைகள் ஒரே நாளில் நான்காயிரம் அருகில் என காட்டியது. இதுவரை எந்த ஒரு பதிவுக்கும் இப்படி ஒரு நிலை வந்தது இல்லை. இத்தனைக்கும் எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவு எனது கணக்கில் ஒரு கமர்சியல் பதிவு. அவ்வப்போது ஒரு கமர்சியல் பதிவு எழுதுவது வாடிக்கை.



இப்படி எந்த பதிவு எத்தனை பேரால் வாசிக்கப்பட்டது என்பது பெரிய விசயமாக பேசப்பட்டாலும் அதில் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என பார்த்தால் சைபர். சைபர் என்றால் இருவேறு அர்த்தங்களும் உண்டு. 

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடித்து இருக்கிறது. பிடித்த விசயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தனக்கு அதாவது தனக்கு தவறென தெரிந்தால் எதிர்த்து பதிவு போடுகிறார்கள். இவர்களது கருத்து பரிமாற்றங்கள் தனிமனித தாக்குதல் வரை சென்று அச்சத்தை விளைவிக்கிறது. 

ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்கள் 

சினிமா சம்பந்தமான கிசுகிசுக்கள், பரபரப்பு செய்திகள். 

பாலியல் சம்பந்தமான போக்கிரித்தனமான பதிவுகள். 

பதிவர்கள் சம்பந்தமான உள்குத்து வெளிகுத்து கும்மாங்குத்து பதிவுகள். 

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது. 

Sunday, 18 December 2011

பின்னூட்ட புண்ணாக்கு

புண்ணாக்கு எனப்படுவது மாட்டு தீவனத்தில் ஒன்று. இந்த புண்ணாக்கு பொதுவாக எண்ணை நிறைந்த வித்துகளில் இருந்து எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படுகிறது. அதாவது தமிழில் சக்கை என சொல்வார்கள். இந்த சக்கையில் என்ன சத்து இருந்து விடப்போகிறது என நினைக்காமல் அதை ஒரு தீவனமாக பயன்படுத்திய முன்னோர்களின் அறிவு!

தாவரங்கள் ஒளியின் உதவியால் உணவை உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உட்கிரகித்து அவற்றை நீருடன் இணைத்து ஆக்சிஜனையும், குளுக்கோசையும் உருவாக்குகிறது.  இந்த உணவு உருவாக்கும் முறையானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று ஒளியின் உதவியால் நடைபெறுகிறது மற்றொன்று ஒளியின் உதவியின்றி நடைபெறுகிறது. நீரினை பகுத்திட ஒளி பயன்படுகிறது. அத்துடன் ஒளியின் வேலை முடிவடைந்து விடுகிறது. அதன் பின்னர் எலக்ட்ரான்கள் உயர் ஆற்றல் நிலை அடைவது, புதிய ஆற்றல் மூலக்கூறு நடைபெறுவது என வேலை தொடர்கிறது. அதற்கு பின்னர் ஒளியற்ற நிலையில், கால்வின் சக்கரம், குளுக்கோஸ் உருவாக்கப்படுகிறது. இலையின் பசுமை நிறத்து காரணியான குளோரோபில் எனப்படும் பொருளின் மூலமே இந்த உணவு தயாரிக்கும் முறை நடைபெறுகிறது, ஏனெனில் இந்த குளோரோபில் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. மனிதரின் செல்களில் இந்த குளோரோபில் போன்ற ஒன்றை உருவாக்க இயலுமா என்பதுதான் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சி கனவு. அதாவது மரங்களே இல்லாத சூழல் ஒன்று வருகிறது என வைத்து கொள்வோம், அப்பொழுது மனிதர் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கு தாங்களே உணவு தயாரிக்க இயலுமா என்பதுதான் பரிணாம, மரபணு வழியில் வந்த ஒரு புது சிந்தனை. பார்க்கலாம்.

ஒளி தாயரிப்பு எப்படி ஏறடுகிறது என்பதற்கான வேதிவினை இது.

                                                       ஒளி
கார்பன் டை ஆக்சைடு + நீர் --------------------------> குளுக்கோஸ் + ஆக்சிஜன்
                                                    குளோரோபில்

இந்த குளுக்கோஸ் பலவகையில் மாற்றம் கொள்கிறது. இந்த குளுக்கோஸ் செல்களில் உள்ள செல்லுலோசாக மாற்றம் கொள்கிறது. அதாவது பாலிமர் என இதை குறிப்பிடுகிறார்கள். இந்த குளுக்கோஸ் பல குளுக்கோஸ்களுடன் ஒரு இணைப்பு சங்கிலி ஏற்படுத்தி உருவாவதுதான் செல்லுலோஸ்.

மேலும் இந்த குளுக்கோஸ் எளிதாக நீரில் கரையும் தன்மை உடையதால் எதிர்கால சேமிப்புக்கு என இவை அப்படியே இருக்க முடியாது என்பதால் இவை ஸ்டார்ச் எனும் மற்றொரு பாலிமர் போன்று தன்னை மாற்றி கொண்டு சேமிப்பாக மாறிவிடுகிறது. இந்த ஸ்டார்ச் பிறிதொரு நாளில் தாவரங்கள் உணவு தயாரிக்க முடியாது போகும் பட்சத்தில் குளுக்கோஸாக மாற்றம் உடைந்து பயன்படுகிறது. இந்த ஸ்டார்ச் கரையும் தன்மை அற்றது. இந்த ஸ்டார்ச் அமைலோஸ், அமைலோபெக்டின் எனும் இரு பொருட்களால் ஆனது. இந்த இரண்டுமே பல குளுக்கோஸ் இணைந்து உருவான சிறிது வேறுபாட்டுடன் கூடிய இரட்டை பிள்ளைகள்.

இப்படியான குளுக்கோஸ் தாவர விதைகளில் எண்ணையாக மாற்றம் கொள்கிறது. மேலும் இந்த குளுகோஸ் பழங்களில் வேறொரு இனிப்பாக சுக்ரோஸ், பிரக்டோஸ் என மாற்றம் கொண்டு அதிக இனிப்பு தன்மையை உருவாக்குகிறது. மேலும் இந்த குளுக்கோஸ் நைட்ரெட் போன்ற தாது பொருட்களுடன் இணைந்து அமினோமிலங்கள் உருவாக்கி பின்னர் புரதம் உருவாக்குகிறது. மிக முக்கியமாக ஆற்றலை தருவது இந்த குளுக்கோஸ் தான். செல்களில் நடைபெறும் சுவாச வேதி வினையின் காரணமாக இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாறுகிறது.

குளுக்கோஸ் + ஆக்சிஜன் ------------------> கார்பன் டை ஆக்சைடு + நீர் + ஆற்றல் (சக்தி)

இப்படி தாவர விதைகளில் எண்ணையாக மாறிய குளுக்கோஸ் தனை விதைகளை நசுக்கி, பிழிந்து எண்ணையை பிரித்தெடுத்து விடுகிறார்கள். சில நேரங்களில் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணையை ஆவியாக்கி பின்னர் குளிரூட்டி பிரித்து விடுகிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சக்கையானது இந்த குளுக்கோஸ் மூலம் உருவான பல பொருட்களால் ஆனது. அதைத்தான் புண்ணாக்கு என அழைக்கிறார்கள். இது சக்கை என்றாலும் இதில் உள்ள பொருட்களை செரிக்கும் தன்மையை இந்த மாடு போன்ற விலங்கினங்கள் கொண்டுள்ளன. நம்மால் இந்த பொருட்களை செரிக்கும் திறன் கிடையாது, எனவேதான் கரும்பில் இருக்கும் திரவத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை துப்பி விடுகிறோம். வாழைப்பழ தோலை தூக்கி எறிவதும் இதன் காரணமே. ஆனால் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் இவைகளை உண்டு செரித்து கொள்கின்றன.

புண்ணாக்கு பெயர்க்காரணம் கூறுக. தாவர விதையை காயப்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள் என்பதால் புண்ணாக்கு என அழைக்கப்பட்டது. புண் + ஆக்கு = புண்ணாக்கு என கொள்ளலாம்.  பிண்ணாக்கு =பிண்ணம் +ஆக்கு , அதாவது சிதைத்து பின்னர் உருவாக்கியது, விதைகளை கூழாக நசுக்கி பின்னர் கிடைப்பது எனப்பொருள், ஹி..ஹி இது ஏதோ நினைவில் இருந்து எழுதுகிறேன், சரியானு தமிழ் ஆர்வலர்கள் தான் சொல்லனும்! (நன்றி வவ்வால்) இந்த புண்ணாக்கு கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு போன்ற எண்ணை விதைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

புண்ணாக்கு என ஒருவரை அழைப்பது அவரிடம் சரக்கு எதுவும் இல்லை என்பதை குறிக்கவே. அதாவது மிகவும் பயன்பாடான எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உள்ள சக்கையை போல அவர் இருக்கிறார் என சொல்லாலம், ஆனால் அது கூட ஒருவகை தவறுதான், ஏனெனில் புண்ணாக்கு கூட பயன்பாடான பொருளாகவே இருக்கிறது என்பதை அறிந்தோம். ஜீரோ எழுத்தில் எழுதப்பட இருப்பதை போல எந்த ஒரு பொருளும் ஒன்றும் இல்லாமல் இல்லை. அதாவது எதுவுமே இல்லாமல் எதுவுமே இல்லை.

மதிப்பிற்குரிய எனது நண்பர் ஒருவர் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது தவறு என சொன்னார். அதாவது இந்த வலைப்பூ எழுதுவதன் மூலம் பிறர் பயன்பட வேண்டும் என்றும் கருத்து பரிமாற்றம் நிகழ வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். பலர் வந்து மறுமொழியோ, பின்னூட்டங்களோ எழுத வேண்டும், அப்படி எழுதி கருத்துகளை பரிமாற வேண்டும். ஒரு எழுத்துக்கு  பின்னூட்டங்கள், மறுமொழிகள், எழுதுபவரை உற்சாகத்தில் வைத்திருக்கும், இல்லையெனில்  ஈ ஓட்டுவது, காற்று வாங்குவது என பொருள்படும் என்பது அவரது கருத்து. ஆனால் எனக்கு சொல்லி தந்த ஆசிரியரோ எவருமே செருப்பு அணியாத இடத்தில் சென்று செருப்பு விற்பவனே அதி புத்திசாலி என சொல்லிக் கொடுத்தார். ஒன்றை விரும்பாத, ஒன்றை அறியாத மக்களிடம் சென்று புதுமையை புகுத்துவது. அதன் மூலம் அவர்களை அந்த விசயத்திற்கு அடிமையாக்குவது என்பதாகும்.

நீங்கள் வலைப்பூக்களில் சென்று இடும் உங்கள் பின்னூட்டங்கள் புண்ணாக்கா? எண்ணையா?

Wednesday, 2 November 2011

வேலைவெட்டி இல்லாத வலைப்பதிவர்களா நாம்?

யார் என்றே தெரியாத புதிய எண் அலைபேசியில் ஒலித்தது. சற்று தயக்கத்துடனே எடுத்தேன். தெரியாத எண்கள் வந்தால் சற்று யோசனையாகவே இருக்கும். ஆனால் பதில் பேசாமல் இருப்பதில்லை. அதுவும் அலைபேசியில் 'மிஸ்டு கால்' என இருந்தாலும் திருப்பி அந்த எண்ணுக்கு அழைத்து யார் என்ன என கேட்டுவிடுவது அவ்வப்போது வழக்கம்.

சரி என பேச ஆரம்பித்தேன். 

'எப்படி இருக்கீங்க' என விசாரணையோடு தொடங்கியது பேச்சு. பால்ய நண்பர் என தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார். எப்படி எனது எண் கிடைத்தது என கேட்டு வைத்தேன். நண்பர்களிடம் கேட்டு வாங்கினேன் என்றார். மிகவும் சந்தோசமாகவே பல விசயங்கள் பேசினார். 

அத்தோடு விட்டு இருந்தால் இப்படி ஒரு தலைப்பில் நான் ஒரு வீண் பதிவு போட வேண்டி வந்திருக்காது. இதற்கு முன்னர் ஒரு நண்பர் இப்படித்தான் அழைத்து புத்தகங்கள் எல்லாம் வெளியிட்டு இருக்கியாமே, சொல்லவே இல்லை என்கிற ரீதியில் தமிழை விடாமல் இன்னமும் கெட்டியாக பிடித்து இருப்பதற்கு பாராட்டி தள்ளிவிட்டார். ஆனால் இவரோ சற்று வித்தியாசமான தோரணையில் பேச ஆரம்பித்தார்.

'உன்னோட ப்ளாக் படிச்சேன்'

'ஓ அப்படியா, நான் ப்ளாக் எல்லாம் எழுதறது எப்படி தெரியும்'

நான் ப்ளாக் எழுதுவது எனது நண்பர்கள், உற்றார், உறவினர் என பலருக்கும் தெரியாமல்தான் சில மாதங்கள் முன்வரை இருந்தது. முகநூல், அடடா எப்படியெல்லாம் தமிழ்படுத்துகிறார்கள், ஒன்றில் எனது இணைப்பை தர அங்கிருந்து சிலருக்கு எனது ப்ளாக் தெரியும். தமிழுல எழுதுற, நல்லா இருக்கு என ஒரு சில பாராட்டுகள் மட்டுமே. மற்றவர்கள் எதுவும் மூச்சு விடவில்லை. அப்பாடா என இருந்தது. 

நான் புத்தகம் வெளியிடும் வரை அந்த புத்தக விசயத்தை அத்தனை ரகசியமாக வைத்திருந்து அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை தந்தேன். சொல்லவே இல்லை என்கிற பாணியில் தலையில் கொட்டாத குறைதான். நான் எனது ஆய்வு விசயமோ, புத்தக விசயமோ எவரிடமும் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தது, எழுதுகிறோம், ஏதோ வாய்ப்பு கிடைத்தது ஆராய்ச்சி செய்கிறோம் என்கிற போக்கில்தான் செல்வதுண்டு. அதனால் தான் இந்த பிளாக்கில் எல்லாவற்றையும் எழுதி குவித்துவிடுகிறேன் போல, தற்போது கூட முகநூல் தனை மூடிவிட்டேன். சில மாதங்கள் முன்னர் ட்விட்டர் தனை மூடிவிட்டேன். எதற்கு அநாவசியமாக உபயோகபடுத்தாத ஒன்றை வைத்திருக்க வேண்டும் என நிறுத்தி வைத்து விட்டேன். நான் பொதுவாக நெட்வொர்க் தளங்கள் எதிலும் என்னை இணைத்து கொள்வதில்லை. 

பழைய நண்பர்கள், புது நண்பர்கள் என வா, வந்து சேர் என அழைப்பு விடுவார்கள், நான் பெரும்பாலும் தட்டி கழித்துவிடுவேன். எதற்கு இதெல்லாம் என்கிற ரீதியில் இருப்பேன். இப்பொழுது கூட கூகுள் பிளஸ் என்ற ஒன்றில் இணைந்தேன். எத்தனை நாள் அங்கிருப்பேனோ தெரியாது. இப்படி நான் எனது இணைய உலக இணைப்பை மிகவும் சிக்கனமாகவே வைத்திருக்க அவரது பேச்சு இப்படியாக போனது. 

சரி விசயத்துக்கு வருவோம்.

'ஒருநாள் உன் பெயரை கூகுள் பண்ணிப் பார்த்தேன், அதுல இருந்து உன்னோட ப்ளாக் வந்தேன், இன்னும் தமிழுல கிறுக்கற அந்த பாழாய் போன பழக்கம் போகலையா' 

'என்ன சொல்ல வர' 

'அதான், ஒரு நோட்டுல எப்ப பார்த்தாலும் எழுதிகிட்டே இருப்ப, நான் கூட சொல்லலை நீ எழுத்து பைத்தியமா போக போறேன்னு'

'இப்போ அதுக்கு என்ன இப்போ'

'உன் ப்ளாக்ல வெட்டித்தனமா எழுதிட்டு இருக்கியே, உனக்கு வேலை வெட்டி இல்லையா'

'என்னாச்சு'

'நீ எழுதி இந்த நாட்டை திருத்த போறியா, கவிதை கவிதைனு எழுதி உனக்கு கவிஞர் பட்டம் காலேஜ்ல கொடுத்தாங்க, நான் கூட நீ மாறி இருப்பேன்னு நினைச்சேன், உன் பொண்டாட்டி உன்னை ஒன்னும் சொல்லமாட்டாளா'

'இரு இரு, என்ன பிரச்சினை'

'நீ வெட்டியா எழுதுறதை நிறுத்திட்டு உருப்படியா ஏதாச்சும் பண்ணு, எத்தனை புக் இதுவரைக்கும் உன்னோட ஆராய்ச்சி சம்பந்தமா எழுதி இருக்க, எத்தனை ஆராய்ச்சி பேப்பர் வெளியிட்டு இருக்க, எத்தனை கான்பெரென்ஸ் போயிருக்க'

'அதுதான் பேப்பர் எல்லாம் பாத்துருப்பியில, அதைப்பத்தி பேசறது. இந்த ப்ளாக் பத்தி பேசி எதுக்கு உன் நேரம் வீணாக்குற. அதுவும் என்னோட உதிரி நேரத்துல எழுதுறேன், இந்த வருசம் பாத்தியா, ரொம்ப கம்மியாதான் எழுதி இருக்கேன், அதுவும் சாப்பாடு டயத்துல அப்புறம் தூங்க போகறதுக்கு முன்னம், இப்படி அப்ப அப்ப தோணுறதை எழுதிவைச்சி வெளியிடுவேன், இப்படி தமிழுல எழுதுறது கூட எனக்கு உருப்படியா தெரியுது, நீயும் எழுதி பழகு, எல்லாம் உருப்படியா போகும்'

இதற்கு பதிலாக அவனிடம் இருந்து திட்டு வார்த்தையுடன் தொடங்கியது அடுத்த பேச்சு. 'உன்னை மாதிரி என்னை லூசுன்னு நினைச்சியாடா, இந்த தமிழை மறந்து பல வருசம் ஆச்சு, எத்தனை புக் போட்டுருக்கேன் தெரியுமா, எத்தனை பேப்பர் வெளியிட்டு இருக்கேன் தெரியுமா, இதோட அம்பது கான்பரென்ஸ் போயிருக்கேன், போய் கூகுளுல தேடிப்பாரு'

'ஆமா அத்தனை வெளியிட்டு என்ன சாதிச்ச'

'நான் ஒரு அசிடன்ட் ப்ரோபாசர் இப்போ'

'அது உன் வேலை, நீ என்ன சாதிச்ச அதை சொல்லு. ஒரு மருந்தை கண்டுபிடிச்சியா, நண்பர்கள் பழக்கம் பிடிச்சியா, உன்னை பத்தி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏதேனும் தெரியுமா, அதை விடு சமுதாயத்தில ஏதேனும் விழிப்புணர்வு கொண்டு வந்தியா, நாங்க தமிழுல எழுதி பெரிய புரட்சி பண்ணிட்டு வரோம், அது தெரியுமா எதுக்கும் ப்ளாக் படிச்சு பாரு, புரியும்' 

'அந்த கருமாந்திரத்தை என்னை எதுக்குடா படிக்க சொல்ற, எல்லாம் வெட்டி பயலுக, கிடைக்கற நேரத்தை இப்படி எழுதறோம்னு எழுதி வீணடிக்கிற'

அந்த திட்டு வார்த்தை என்னை கோபம் அடைய செய்தது. 

'சரிடா, இத்தோட நிறுத்திக்கோ, ஏதோ பல நாட்கள் அப்புறம் பேசறேன்னு பார்த்தா நான் தமிழுல எழுதறதை பாத்து வயித்தெரிச்சலுல பேசற மாதிரி தெரியுது. இந்த ப்ளாக் எழுதறவங்களைப் பத்தி ஒரு வரலாறு தெரியணும்னா எதுக்கும் அடுத்த மாசம் என்னோட ப்ளாக் பக்கம் எட்டிப்பாரு, ஒவ்வொரு சாதனையாளர்கள் பத்தி நான் எழுதறேன். இங்க எழுதறவங்க என்ன வேலை வெட்டி இல்லாதவங்கனு நினைச்சியா'

'போடா தெரியும், நீ எழுதினதுதான் படிச்சேனே, தமிழ் பதிவர்கள்னு. அதே கிறுக்கல், அப்போ நோட்டு, இப்போ நெட்டு' 

'என்னை இப்ப என்ன பண்ற சொல்ற'

'நிறுத்துடா, எழுதறதை நிறுத்து. உருப்படியா வேலையைப் பாரு. பொண்டாட்டி புள்ளைங்க குடும்பத்தை கவனி'

'அதெல்லாம் சரியாத்தான் நடக்குது, எதுக்கு இப்படி வீணா புலம்புற, உனக்கு வேணும்னா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறேன். அதுல எழுது. blogconsultancy எப்படி இருக்கு'

அதற்கடுத்து அவன் திட்டியவாறே போனை கட் பண்ணினான். பாவம் அவனுக்கு தெரியாது, இதைக்கூட எழுத்தில் வைப்பவர்கள் தான் இந்த ப்ளாகர்கள் என்று. 

மீண்டும் அவன் இதை படிக்க கூடும். மறுமுறை அவனது எண்கள் தெரிந்தால் பேசுவதா வேண்டாமா!

Wednesday, 19 October 2011

தமிழ்மணமே தளராதே இருக்கிறோம் நாங்கள்

முத்தமிழ்மன்றத்தில் இருக்கும்போது ஏதாவது கருத்துப் பிரச்சினை வரும். அப்பொழுது எதற்கு இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்கிற ஒரு ஆதங்கம் வந்து சேரும். பின்னர் யோசித்துப் பார்த்தால் அவருக்கு தெரிந்தது அவர் செய்கிறார் என்கிற ஒரு விசயம் எச்சமாக நிற்கும். இப்பொழுது கூட அந்த பதிவுகளை எல்லாம் படித்தால் சிரிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. எங்கே போனார்கள் அவர்கள்? 

அந்த மன்றத்தில் பல உறுப்பினர்கள் சேர்ந்து இருந்தாலும் பங்களிப்பார்கள் மிகவும் குறைவு. இரண்டாயிரத்து ஆறாம் வருடத்தில் அங்கே இணைந்த நான் இதுவரை பத்தாயிரம் பதிவுகள் பதிந்து உள்ளேன். அதில் ஒரு வரி பதிவுகளான நன்றிகள், மறுமொழிகள் மிக அதிகம். அங்கே இருந்து இந்த வலைப்பூவில் நான் கொண்டு வந்து சேர்த்ததில் ஐநூறுக்கும் குறைந்த பதிவுகளே தேறின. அதிகம் தமிழ் வாசித்தது முத்தமிழ்மன்றத்தில் தான். பின்னர் தமிழ்மணத்தின் மூலம் பல தமிழ் பதிவுகள் வாசிக்கத் தொடங்கினேன். ஆச்சர்யமூட்டும் வகையில் பல எழுத்துகள் இருந்தாலும், நகைச்சுவை பதிவுகளும், சர்ச்சைக்குரிய பதிவுகளுமே அதிகம் ஈர்த்தது. காரணம் அது மனித இயல்பு. 

பொதுவாகவே சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்து, சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்து எதுவும் எழுதுவதில்லை. பல பிரச்சினைகள் பார்த்து இருந்தாலும் எல்லாம் காலப்போக்கில் நீர்த்துப் போய்விடும் என்பதன் காரணமாகவே. இப்படி பிரச்சினைகள் வரும்போது அது குறித்து எழுதி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவர்கள் பலர் உண்டு. ஒரு பிரச்சினை பதிவுலக பிரச்சினை ஆகிவிடும் அளவுக்கு அதிகம் பேசப்படும், பின்னர் வேறு விசயங்களுக்கு சென்று விடுவார்கள். அப்பொழுதுதானே எழுத்து பயணம் தொடரும். எத்தனை நாளுக்குத்தான் ஒரே விசயத்தை பற்றி எழுத்து போர் நடத்துவது. இதனால் தமிழ் பதிவர்கள் குறித்த சிந்தனை ஒன்று நானும் எழுதியது உண்டு. ஒரு கூட்டணியாக வலம் வரும் பதிவர்கள் ஒன்றுமில்லாத விசயத்தை கூட பலரும் படிக்கும் வகையில் அதை பெரிதுபடுத்திவிடுவார்கள். அதில் தவறும் இல்லை. ஏனெனில் நோக்கம் என்பது எழுதுவது. அவ்வளவே. வாசிக்கும் வாசகர் எதை வாசிப்பது, எதை வாசிக்க கூடாது என்பதை அவரே  தீர்மானம் செய்து கொள்ள வேண்டியதுதான். 

இதில் இன்ன இன்ன பதிவர் இப்படிப்பட்டவர் என்கிற தனி முத்திரையும் உண்டு. இந்து மதத்தை கேலி செய்யும் ஒரு கூட்டம் உண்டு. ஆனால் அதைப்பற்றி எதிர் பதிவு போடும் அளவுக்கு நிறைய பதிவர்கள் கூட்டு சேர்ந்ததை கண்டதில்லை. மதம் சார்ந்த, இயக்கம் சார்ந்த, அமைப்புகள் சார்ந்த, நட்புகள் சார்ந்த தளங்கள் நிறையவே உண்டு. அவையெல்லாம் ஒரு சாதாரண வாசகர் எனக்கு வெளிச்சம் போட்டு தந்தது இந்த தமிழ்மணமே. 

இந்த தமிழ்மணத்தில் இணைந்த பதிவர்கள் பலர் எழுதாமலேயே நிறுத்தி இருக்கிறார்கள். எதாவது பிரச்சினையின் போது விலகியும் போய் இருக்கிறார்கள். இதனால் தமிழ்மணம் இழந்தது ஒன்றுமில்லை. எழுதுபவர்கள் இழக்கிறார்கள். தனது கருத்துகள் பலருக்கு செல்லும் வழியை தாங்களே அடைத்து கொள்கிறார்கள். ஒரு நாட்டுக்கு தலைவர் அவசியம். ஆனால் அந்த தலைவரை விட மக்கள் அவசியம் எனில் தலைவர் எதற்கு? எத்தனையோ மிக சிறந்த பதிவர்கள் இந்த திரட்டிகளில் எல்லாம் இணைத்து கொண்டதில்லை. மிகவும் பிரபலமான நபர்கள் எவருமே தங்களை திரட்டியில் சேர்த்ததும் இல்லை. இணைய வழியில் எழுதாதபோது எழுத்தாளர்கள் இருக்கத்தானே செய்தார்கள். 

விமர்சனம் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என சொல்பவர்கள், பிறர் விமர்சிப்பதை தாங்கி கொள்ள மறுத்துவிடுகிறார்கள். 

நகைச்சுவையாகத்தான் இருந்தது. தமிழ்மணத்திற்கு சமீபத்திய பிரச்சினைக்கு தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைத்தே கண்டனம் தெரிவித்தது. இப்படி எதிர்ப்பை தமிழ்மணத்தில் இணைக்காமல் எழுதி இருக்க வேண்டும். நாங்களும் படித்து இருக்கமாட்டோம். மேலும் இந்த பிரச்சினை தங்கள் சுயத்தை உரசிப் பார்த்துவிட்டது என தெரிந்து இருந்தால் தமிழ்மணம் பக்கமே எட்டிப் பார்த்து விடக்கூடாது. ஆனால் யார் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என தமிழ்மணத்தில் தேடி தேடி பதிவு போடுகிறார்கள். இப்படி அவர்களது கருத்தை தெரிவிக்க இந்த தமிழ்மணம் வேண்டும்? இது போன்றவர்களை முட்டாள் பதிவர்கள், வெட்டிப் பதிவர்கள், வீண் பதிவர்கள் என்று எல்லாம் இப்போது நான் சொன்னால் இவர்கள் வருந்தமாட்டார்களா? அதோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தை தடை செய்வார்களாம். தமிழ்மணம் தார்மீக மன்னிப்பு கேட்கவேண்டுமாம். வெங்காயங்கள் என இவர்களை திட்டினால் வருந்தமாட்டார்களா? தமிழ்மனங்கள் வருந்துகின்றனவாம். எத்தனை இழிவாக, நாகரிம் அற்று  எல்லாம் எழுதிய பதிவுகள் இதே இணைய வீதியில் சிதறித்தான் கிடக்கின்றன. அதில்தான் நான் மிதிப்பேன் என்றால் யாருக்கு என்ன கவலை? தெருவுக்கு தெரு, நாட்டுக்கு நாடு ஒருவரை ஒருவர் மதத்தினால், சாதியினால் கேவலப்படுத்துவதை மதப் போர்வையில், சாதிப் போர்வையில், ஆணாதிக்கப் போர்வையில் ஒளிந்திருக்கும் மனித மிருகங்கள் குறித்து எந்த கவலையும் இல்லை இவர்களுக்கு. ஒரு வேலை உணவு க்கு வழி இல்லாமல், வானம் பொய்த்து, பூமியும் பிய்த்து வாடும் நாடுகள் பற்றிய அக்கறை இல்லை எவருக்கும். எந்த வாசகத்துக்கு சண்டை தொடங்கியதோ அந்த வாசகத்திற்கே அர்த்தம் தெரியாத சடங்களை குறித்து இறைவன் இப்போது என்ன நினைத்து கொண்டிருக்கக் கூடும்? தவறு செய்தவரை கூட்டமாக குறி வைத்து தாக்கியவர்கள் கூட குற்றவாளிகள். மன ஒழுங்கு இல்லாதவரிடம் இருந்து ஒதுங்கிப் போகக் கூடியவரே புத்திசாலி. ஒரு குற்றம் தொடங்கி ஓராயிரம் குற்றங்கள் ஏற்பட எவர் காரணம்? தான் தவறு செய்தேன் என பிறர் சொல்லி தெரிகிற அளவுக்கு ஒருவரின் மனநிலை இருக்குமெனில் அவரை எப்படி திருத்துவது? 

அதெல்லாம் இருக்கட்டும். ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்கு மொத்த நிர்வாகம் எதற்கு பங்கு ஏற்க வேண்டும்? முதலில் தனிமனிதன் தவறுக்கு அவரே பொறுப்பு. நிர்வாகத்தில் அவர் கலந்து ஆலோசித்து பின்னர் செயல்பட்டாரா? நிர்வாகம் இதற்கு அனுமதி தந்ததா? நிர்வாகத்தில் இருப்பவர் பொறுப்புடன் செயல்படவில்லையெனில் நிர்வாகத்தின் பெயர் கெட்டுவிடும் என்பது அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும். மொத்த நிர்வாகமும் இதேபோல் செயல்பட்டால் அந்த நிர்வாகம் குறித்து கண்டனம் எழுப்பலாம். அதைவிடுத்து நிர்வாகம் குறித்த கருத்துகள் கேலிக்குரியவையாக இருக்கும். 

மதம் சார்ந்த விசயங்கள் மனிதனை மிகவும் புண்படுத்துகின்றன. நம்பிக்கை சார்ந்த விசயங்கள் மனிதனை மிகவும் அச்சுறுத்துகின்றன. இறைவனுக்கு எதுவுமே வலிப்பதில்லை. ஆனால் இந்த இழிநிலை மனிதர்களுக்குத்தான் எல்லாமே வலிக்கின்றன, ஏனெனில் இறைவன் ஏற்படுத்தாத பல விசயங்கள் இவர் ஏற்படுத்தி வைத்திருப்பதுதான். இறைவன் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள், இவர் கொண்டிருக்கும் சாத்திர சம்பிராதயங்கள், அப்பப்பா. உலகம் பிளவுப்பட்டு போனதில் இவர்களின் பங்கு மிக மிக அதிகம். பொருளாதாரம், நிறம், இனம் என இவர்களின் கொலைக்குற்றங்கள் கணக்கில் அடங்காது. 

புதிய பதிவர்கள், நடுநிலை பதிவர்கள், பிரச்சினைக்கு என போகாமல் எழுத்தே தலையாயப் பணி என இருப்பவர்கள் திரட்டிகளினால் பயன் அடைவார்கள். உங்கள் நிர்வாகி ஒருவரின் எழுத்து அவரது கருத்து. பொது இடத்தில் வந்து விட்டாலே பொல்லா வினையும் வந்து சேரும் என்பது நான் உட்பட அனைவருமே கருத்தில் கொள்ள வேண்டியதுதான்.

ஒரு எழுத்து ஒருவரை ஓரளவுக்கே அடையாளம் காட்டும். நேரில் பேசுங்கள், நேரில் பழகுங்கள். வாழ்க்கை சுகமாகும். சாந்தி நிலவும், சமாதானமும் நிலவும். 



Tuesday, 5 July 2011

தமிழ்மண சேவை நிராகரிப்பு

பல வலைத்தளங்களை அடையாளப்படுத்தி வரும் தமிழ்மண சேவை மிகவும் பாராட்டுக்குரியது. 

பல வலைப்பூக்கள் பிரபலமாக இந்த திரட்டிகள் மிகவும் உபயோகமாக இருந்து இருக்கின்றன. 

ஆனால் பல நல்ல வலைதளங்கள், வலைப்பூக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதில்லை. நல்ல எழுத்தினை அனைவரும் தேடி கண்டு கொள்வார்கள் என இருந்து இருக்கலாம்.

இப்பொழுது கட்டண சேவையும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த நேரத்தில் தமிழ்மணபதிவுப்பட்டை எனது வலைப்பூவில் இயங்கவில்லை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. 

இத்தனை நாள் ஆதரவு தந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. 
 

Wednesday, 24 November 2010

எனது பின்னூட்டங்கள் - 1

சில நேரங்களில் அதிக சிரத்தை எடுத்து பின்னூட்டங்கள் நாம் எழுதுவோம். மட்டுறுத்தல் வைத்திருக்கும் வலைத்தளங்களில் அது பரிசீலனைக்கு உட்படாமல் போகலாம். நாம் பின்னூட்டம் எழுதிய இடுகை மறைந்து போகலாம். அவ்வாறான நேரங்களில் பின்னூட்டத்தை சேமித்து வைத்திருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். 

தமிழ்மணத்தில் நமது பெயரில் வெளியான அனைத்து பின்னூட்டங்களும் சேமித்தே வைக்கப்பட்டு இருக்கின்றன. இருவர் ஒரே பெயரில் இருந்துவிட்டால் சிறு பிரச்சினை வருவது உண்டு. 

பின்னூட்டங்கள்தனை தனியாக சேமிக்கும்போது ஏதாவது உபயோகமாக இருக்குமா என்பது கேள்விக்குரிய விசயம். 

இறைவன் ரகசியம் 

விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடையாக இருப்பவர் இறைவன் என்றுதான் இந்த உலகம் அறிந்து கொண்டிருக்கிறது. இறைவன் இந்த உலகம் இருக்கும் வரை அழிய போவதில்லை. இந்த உலகம் மொத்தமாக அழிந்தபின்னரும் இறைவன் இல்லாமல் ஒழியப் போவதில்லை. இதுதான் சத்திய வாக்கு என நம்புவர்களும் உளர்.

இறைவன் பற்றி தெரியாத, உணராத மனிதர்களும் உலகில் உண்டு. இறைவன் பற்றியே சதா சிந்தித்து வாழும் மனிதர்களும் உண்டு. எனவே இறைவன் தத்துவம் அவரவர் விருப்பம்.

ஒருவர் வணங்கினால் தான் இறைவன் இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல. ஒருவர் வணங்காமல் போனால் இறைவன் இல்லை என்று அர்த்தமும் அல்ல. மனிதர் இறப்போடு பிறப்பும் இறை சிறப்பும்.

அணு, உலகின் மூலம் இல்லை என இப்போதைய அறிவியல் சொல்லி கொண்டிருக்கிறது. மேலும் 'பெரு வெடிப்பு கொள்கை' ஏற்கபட்டாலும் அதற்கு முன்னர் என்ன நடந்திருக்கும் என எந்த அறிவியலும் விளக்க இயல்வதில்லை. காரணம் காலம் என்ற ஒன்று இல்லாத நிலை என்றே அறிவியல் தர்க்கம் பண்ணுகிறது. பல ஆராய்ச்சிகள் இன்றைய சூழல் வைத்தே நடத்தபடுகின்றன. உலகம் தோன்றிய பின்னர் நடத்தப்படும் ஆராய்ச்சிகள், உலகம் தோன்றுவதற்கு முன்னர் என்ன நடந்திருக்கும் என்பதை விளக்க முனைவது அறிவியல் கோட்பாடுக்கு உட்படாது என்பதை அறிவியல் வல்லுனர்கள் அறிவார்கள். இருப்பினும் இப்படி நடந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் சொல்லிவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் தலையாட்டி பொம்மைகள் தான் மனிதர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை.

இருப்பினும் அறிவியலும், ஆன்மிகமும் கேள்விக்கு உட்படாமல் போவதில்லை. அறிவியல் பதில் சொல்ல முயற்சிக்கும். ஆன்மிகம் நம்பிக்கை என ஒரு வார்த்தையில் சொல்லி விலகி போகும்.

அறிவியல் படித்தால் விளங்கிக் கொள்ளலாம். ஆன்மிகம் படித்தாலும் புரிய முடியாதது. உணர்வுக்கு உட்பட்ட விசயம் என்றே பலரும் சொல்கிறார்கள். இறை உணர்வு என்று ஒன்று இருக்கிறதா என்ன! இருக்கிறது என்கிறார்கள் பலர். 


ஆனால் ஒன்றை நீங்கள் மிகவும் நன்றாக கவனித்தால் இந்த அவதாரங்கள் எல்லாம் மனிதர்களே என நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

கடவுள் ஏன் மனிதன் என்கிற போர்வையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் கதை தெரியும் என்றே நினைக்கிறேன். நீங்கள் செல்லும் வழியில் எதிரில் எவர் வருகிறார்களோ அவர் தலை கொய்து உயிர்ப்பியுங்கள் இச்சிறுவனை என்பதுதான் விநாயகர் புராணம். யானை அந்த வழி வந்து சேர யானை தலை விநாயகருக்கு பொருந்தி போனது. இது இன்றைய அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முன்னோடி என சொல்வோரும் இருக்கிறார்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள் விசித்திரமாக பிறப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு இனம் தான் அனுமர் வழி வந்தவர்கள். ஆனால் அவர்கள் முழுவதும் அழிந்து போய் இருக்க கூடும். அனுமார் கடவுள் இல்லை, அவர் அவதாரத்திற்கு ஒரு தொண்டர்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாம் கோவிலில் வைத்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் தெய்வங்கள் கிடையாது. மாரியம்மன் போன்ற ஊர் மக்கள் எல்லாம் ஊர் தெய்வங்கள் என சொல்வார்கள், ஆனால் அவை எல்லாம் தெய்வங்கள் கிடையாது. மனிதர்களே.

கடவுள் கற்பனைக்கே எட்டாதவர். இறைவன், நம்மால் அவர் இருப்பதையே அறிய இயலாதவர். 

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்:

இப்பொழுது இந்த இரண்டு நிலைகளையும் அறிந்த ஒருவரால் தான் இவ்வாறு சொல்ல இயலும் என நாம் எடுத்துக் கொண்டால் முழு வாக்கியமும் பொய்யாகிவிடுகிறது.

ஏதாவது ஒரு நிலையை அடைந்து இருந்தால் ஒன்றை மட்டுமே சொல்லி இருக்கலாம்.

அப்படி இல்லாதபட்சத்தில் 'இப்படி இருக்கலாம்' என்கிற ஒரு 'தியரி' மட்டுமே இந்த வரிகளின் மூலம் காணப்படும் சாத்தியம். 

பார்த்தவர்கள் அதைப் பற்றி பேசமாட்டார்கள் என்பது எப்படி உறுதியாக சொல்ல இயலும்?

பேசுபவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என எப்படி உறுதியாக சொல்ல இயலும்?

அதனால்தான் இந்த வாக்கியம் தவறு.

பார்த்தவரிடம் பார்த்தாயா என்று கேட்டால் பார்க்கவில்லை, பார்த்தேன் என ஒரு பதில் வந்தாக வேண்டும்.

பேசுபவரிடம் பார்த்தாயா என கேட்டால் ஒரு பதில் வந்தாக வேண்டும்.

பதிலே வராமல் போனால் என்ன அர்த்தம் என்பதை பின்னர் சொல்கிறேன்.

ஒரு சின்ன உதாரணம்...

உங்களுக்கு ராமானுஜர் கதை தெரியும் என்றே கருதுகிறேன்.

ராமானுஜர் தான் அறிந்த மந்திரத்தை உலகத்துக்கு எல்லாம் சொல்ல வேண்டுமென்றே வெளியில் சொன்னார்.

அதைப்போலவே பரமபுருஷர்கள் என கருதப்படுபவர்கள் தாங்கள் உணர்ந்த பேரருளை உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென தங்கள் உணர்வுகளை சொன்னார்கள்.

இப்பொழுது அவர்கள் பேசினார்கள் என்பதற்காக அவர்கள் பார்த்தது பொய் ஆகிவிடுமா?

பலர் பார்க்கமாலே பேசாமல் இருப்பதும் உண்டு.

எனக்கு தெரிந்து ஒரு அருமையான வசனம் உண்டு. ஒரு முறை ஒருவனை கேட்பேன். அவன் அமைதியாக இருந்தால் அவனை அறிவாளி என நினைப்பேன். பல முறை கேட்பேன், அப்பொழுதும் அவன் அமைதியாக இருந்தால் ஞானி என நினைப்பேன். ஆனால் கேட்டு கொண்டே இருந்தும் பதில் தராமல் இருந்தால் அவனை ஒரு மூடன் என நான் கருதுவேன். இதில் இருக்கும் நீதி என்னவெனில் ஒருவருக்கு தேவையானபோது பிரிதொருவரிடம் இருக்கும் நல்ல விசயமானது கிடைக்கவில்லையெனில் அதனால் பயனில்லை என்பதாகும். எனவே கண்டவர் விண்டிலர்; விண்டிலர் கண்டிலர் அனைவருக்கும் பொருந்தாது.

எனக்கு தெரிந்து மனிதர்களை தவிர எந்த ஜீவராசிகளும் இறைவன் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. அதற்காக அந்த ஜீவராசிகள் எல்லாம் இறைவனை பற்றி உணர்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தமா?

அவ்வாறு அந்த ஜீவராசிகள் இறைவன் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை என எனக்கு தெரிந்து இருப்பதால் அந்த ஜீவராசிகள் இறை உணர்வுகளுடன் இல்லை என சொல்வது நியாயமா?
இந்த உருவ வழிபாடு எல்லாம் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அதைப் போலவே உருவமில்லாத வழிபாடும் அவசியமற்றது என்றே கருதுகிறேன்.

இறைவன் எவரும் தன்னை வணங்க வேண்டும் என வற்புறுத்தவும் இல்லை, தன்னை வணங்குபவர்களை வணங்க வேண்டாம் என மறுக்கவும் இல்லை. வணங்காமல் இருப்பவர்களை ஒதுக்கவும் இல்லை.

உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு சடங்கு, சம்பிரதாயம், மத கோட்பாடுகள் என எல்லாவற்றையும் கடந்த ஒரு அன்புமிக்க தெய்வீக நிலையைத்தான் மனிதர்கள் மனதில் உறுதியுடன் நினைத்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனக்குள் நான் நினைக்கும் ஒரு உண்மையான நிலை. இந்த அன்பு மட்டும் மனிதர்களிடம் ஆறாக பெருகி ஓடுமெனில் எவ்வித சட்டங்களும் அவசியமில்லை.

இத்தகைய சாத்தியமற்ற அறிவின் ஒளி அனைத்து மனிதர்களின் மனதில் படரும்போது சமத்துவம் நிலவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

உருவ வழிபாடு குறித்து ஏகப்பட்ட கதைகள் உண்டு. அவ்வை கதை ஒன்று அதி அற்புதம். ஒரு முறை அவ்வை கடவுள் சிலை இருக்கும் பக்கம் பார்த்து கால் நீட்டி அமர்ந்து இருந்தாராம். இவ்வாறு அமர்ந்து இருப்பது இறைவனை அவமதிப்பது என அவ்வையிடம் சொன்னவுடன், எம்பிரான் இல்லாத இடம் எது என சொன்னால் அந்த பக்கம் கால நீட்டுகிறேன் என்றாராம் அவ்வை.

கோவிலில் தான் கடவுள் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் கோவிலில் சென்று உருவத்தை வழிபாடு செய்ய வேண்டும் என சொன்னது, அதாவது படிக்க நினைப்பவர் பள்ளிக்கு சென்றுதான் படிக்க வேண்டும் என்பது போல. பள்ளிக்கு சென்று படித்தால் சான்றிதழ் கிடைக்கும். அவ்வளவே. கோவிலுக்கு சென்றால் வெளியில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு பக்திமான் எனும் சான்றிதழ் அவ்வளவே.

ஒரு விசயத்தை கற்று கொள்ள வேண்டும் என ஆர்வமுள்ளவர் பள்ளிக்கு சென்றுதான் படிக்க வேண்டுமென்பதில்லை. இதைப்போலவே ஒரு நாயன்மார் தனது மனதில் கோவில் கட்டி பூஜித்தார் அங்குதான் தெய்வம் வந்தார் என்கிறது ஒரு புராணம்.

உலகின் வரலாற்றை படித்தால் பலர் தங்களது சொந்த முயற்சியால் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை ஆராய்ந்து முன்னேறி இருக்கிறார்கள் என தெரியும்.

ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் படித்தால் தான் மேதையாக வேண்டும் என இருந்தால் அங்கே படிக்கும் அனைவரும் மேதையாவதில்லை என்பதை குறித்து கொள்வது நலம்.

இறைவனை நம்மில் ஒருவராக்கி, நம்மில் ஒருவரை இறைவனாக்கி வணங்குவது என்பது நமது மக்களிடத்தில் பழகிப் போனதால் இந்த உருவ வழிபாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி போகிறது.

உணர்வுள்ள மனிதரிடம் இருக்கும் சக்தியை விடவா , உணர்வற்ற கல்லிடம் இருக்க போகிறது? என்கிற சிந்தனை அங்கே எழுவதில்லை. ஏனெனில் உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை எனும் ஒரு சிந்தனையற்ற தத்துவம் மனிதரால் ஏற்கப்பட்ட ஒன்று.

அடிப்படையில் அது ஒரு கல். செதுக்கிய பின்னர் அது ஒரு சிற்பம். இத்துடன் நிறுத்தி கொள்ள இயலாத மக்கள் இருக்கும் வரை உருவ வழிபாடு ஒருபோதும் அழியாது.

கடவுள் கல்லில் மட்டுமே இல்லை.
 

Thursday, 11 November 2010

சிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)

பயணம் என்றால் பெரும்பாலோனோருக்கு கொள்ளை பிரியம். எனது தந்தை ஓரிடத்தில் ஓய்வாக அமர்ந்திருக்க மாட்டார். ஆசிரியராக வேலை புரிந்தபோது அவர் சைக்கிளில்தான் வேலைக்கு செல்வார். அதனால் எண்பது வயதாகியும் கூட திடகாத்திரமாகவே இருக்கிறார். அவ்வபோது அவர் இறந்து போவதாக எனக்கு கெட்ட கனவு வந்து தொலைக்கும். அப்பொழுதெல்லாம் மனம் திடுக்கிட்டு எழும். சில நாட்கள் எல்லாம் கவலைகள் மனதை கொத்தி பிடுங்கும். எங்களை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க சொல்லும் அவரை நினைக்கும்போது பல நேரங்களில் மனது கவலைப்படும். உடல்நலனை பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டோமே என தோன்றும்.

அந்த சைக்கிள் பயணம் மட்டுமின்றி நடை பயணமும் அதிகம் மேற்கொண்டவர். ஓய்வு காலங்களில் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என சொன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாதவர். வாகனம் வாங்கி தருகிறோம், அதில் சென்று வாருங்கள் என வாகனமும் வாங்கி தந்த பின்னரும் விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர் என பல நேரங்களில் பேருந்தில் பயணம் புரிபவர். லண்டன், அமெரிக்கா என வருடம் இருமுறை பயணம் மேற்கொள்வார். வீட்டினில் தங்கவே மாட்டார். காலை எழுந்ததும் பூங்கா செல்கிறேன் என நடை பயணமும், மாலை வேறொரு பூங்கா செல்கிறேன் என நடை பயணமும் என அவரது வாழ்க்கை பயணங்களில் தான் மிகவும் அதிகமாக கழிந்து இருக்கிறது.

சில இடங்களுக்கு சென்றதுமே அலுப்பு தட்டி விடும் பலருக்கு. எப்படி அலைவது என அங்கலாய்ப்போர் பலர். எனது தந்தையை பார்த்தால் எப்படி இப்படி இவரால் அலைய முடிகிறது என ஆச்சர்யம் எழத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட பயணம் மேற்கொண்ட அவரிடம் அவரது பயணம் பற்றி ஒருநாளேனும் ஒருநாள் அமர்ந்து கேட்டுவிடத்தான் ஆசை. நான் பல இடங்கள் பயணம் செய்தது உண்டு. அதை இணையதளங்களில் எழுதிய பின்னர் எழுத்தில் வைத்தது உண்டு. ஆனால் எத்தனை சுவராஸ்யமாக எழுதினேன் என எனக்கு தெரியாது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விதத்தில் ஒரு பயண கட்டுரை படித்தேன் சில ஆண்டுகள் முன்னர். அந்த பயண கட்டுரை படித்ததும், அந்த இடத்தினை சென்று பார்க்கும் ஆவல் மேலிட்டது. அடுத்த வருடமே பயணம் மேற்கொண்டோம்.

இவர் குழுமத்தில் முன்னர் எழுதினாலும், வலைப்பூவில் என்னைப் போலவே எழுதிய பல விசயங்களை சேகரித்து வருகிறார். இவரது எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவரது மற்ற கட்டுரைகளும் குறைந்தவைகள் அல்ல. நிச்சயம் பல விசயங்களை இவரது பதிவின் மூலம் தெளிந்து கொள்ளலாம்.

அவருக்கு சிறந்த பதிவர் விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் வேறு யாருமல்ல மின்மினிபூச்சிகள் வலைப்பூவின் சொந்தக்காரரான ஷக்திப்ரபா. அவர் எழுதிய பயணக் கட்டுரை தங்கள் பார்வைக்கு.

திருவண்ணாமலை பற்றிய அற்புதமான பயணக் கட்டுரை.

1



3

4

5

Tuesday, 2 November 2010

சிறந்த பதிவர் விருது - 2 (தமிழ் உதயம்)

சிறந்த வலைப்பதிவாளர் விருது - தமிழ் உதயம், மன உணர்வுகள் பிரிவு. 


மனித மன உணர்வுகளை பற்றி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை எனலாம்.  இந்த மன உணர்வுகளினால் ஏற்படும் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் தெள்ள தெளிவாக இருக்கிறது என வரையறுத்துவிட முடியாது. இந்த மனம் சம்பந்தப்பட்ட விசயங்கள் வாழ்வில் பெரிதும் முன் வகிக்கின்றன. 


'மனம் போல் வாழ்வு 

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

மனசு வைச்சா எல்லாம் நடக்கும்

எல்லாம் மனசுக்குள்ள இருக்கு

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள்

மனசுன்னு ஒன்னு இருந்தா இப்படி நடக்குமா

மனசு ஒரு குரங்கு 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் (நெஞ்சு என்பது மனது என பொருள்படும்) 

மனம் கல்லாகிப் போன மனிதர்கள் 

இரண்டு மனம் வேண்டும்' 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மனம் எதை குறிக்கிறது?  மனம் என்று ஒன்று உண்டா? 

எண்ணங்களைத்தான் மனம் என்று குறிப்பிடுகின்றனரா?. எண்ணங்களினால் ஏற்படும் சிந்தனைகளைத்தான்  மனம் என்று குறிப்பிடுகின்றனரா? எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்படி பல கேள்விகளை ஒரு மனிதனின் மூளை பரிசீலித்து கொண்டிருக்கிறது. இந்த மூளை தான் மனமா? இந்த மூளையில் இருக்கும் நரம்பு செல்கள் தான் மனதின் அடிப்படை நாதமா? இந்த மூளையின் வளர்ச்சியை பொருத்தே ஒரு மனதின் எண்ணங்கள், சிந்தனைகள் அமையுமா? அல்லது கற்று கொள்ளும் விசயங்கள் மூலம் இந்த மனதின் எண்ணங்கள் அமையுமா? 



இப்படிப்பட்ட மனதை தெரிந்து கொள்வது மிகவும் கடின காரியமாக இருக்கிறது. அதுவும் 'பெண் மனது மிகவும் விசித்திரமானது' என புலவர்கள் பாடி வைத்து இருக்கிறார்கள். ஆண் மனது, பெண் மனது என இரு வேறு மனங்கள் இருக்கிறதா? இந்த மனம் எதற்கு எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மனம் எதற்காக ஒருவரை வெறுப்பாகவும், ஒருவரை அன்பாகவும் பார்க்கிறது. இந்த மனதின் செயல்பாடுதான் என்ன? அதை நிர்ணயிக்கும் காரண கர்த்தா யார்? சூழலா? அப்படியெனில் ஒரு சூழலில் வளரும் குழந்தைகள் ஒரே மாதிரி எதற்கு இருப்பதில்லை? ஒரு சூழலில் ஒவ்வொருவரும் வெவ்வேறாக செயல்படுவதன் காரணம் யாது? 

எனக்கு தெரிந்து தனக்கு தானே பேசி கொள்ளாத மனிதர்கள் எவருமே இவ்வுலகில் இல்லை எனலாம். அதில் மனதை ஒரு தனி மனிதராக அதாவது மனசாட்சி என உருவகப்படுத்தி சுய பரிசோதனை செய்யும் சோதனைகள் நிச்சயம் அனைவரிடமும் உண்டு. ஆனால் மனம் என்பது ஒன்றுதானே. சிந்தனைகள் என்பது ஒன்றுதானே. இதில் சுய பரிசோதனை என வரும்போது அதென்ன மனம் என்பது முன்னிலை படுத்தப்பட்ட ஒன்றாக உருவகம் கொள்கிறது. 

இந்த மனம் சொல்லும் கதைகள் ஆயிரம். அந்த மனதை பற்றிய ஒரு கட்டுரையாக வெளிவந்தபோது 'அட' என எண்ண தோன்றியது. அப்பொழுதே மனதில் நினைத்தேன். நிச்சயம் இந்த கட்டுரை விருதுக்கு உரிய கட்டுரை என. 

சிறந்த பதிவர் விருது தமிழ் உதயம், விருதுக்குரிய கட்டுரை 

மனநிலையா... சூழ்நிலையா...


விருது சான்றிதழ்:



(தொடரும்) 

Friday, 29 October 2010

சிறந்த பதிவர் விருது - 1

நான் பதிவுலகில் இதுவரை பெற்ற விருதுகள் இரண்டு.

முதலில் விதூஷ் அவர்கள் எனது ஆண்டாளுக்கு கல்யாணம் எனும் கதைக்கு கொடுத்த விருது. மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றுதான் சொல்வேன்.

பின்னர் ஸ்டார்ஜன் அவர்கள் கொடுத்த விருது. இந்த இரண்டு விருதுகளையும் பலருடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டதில் சந்தோசமாக இருந்தது.

இவர்கள் கொடுத்த விருதினை மனப்பூர்வமாக பெற்று கொண்டேன். ஆனால் அதை எவரிடமும் பகிர்ந்து தரவேண்டும் எனும் எண்ணமோ, 'போனால் போகுது' என்கிற பாணியில் விருதினை மற்றவர்களிடம் தர வேண்டும் என்கிற எண்ணமோ என்னிடம் எப்போதும் இருந்தது இல்லை.

பொதுவாக விருது என்பது ஒருவரை சிறப்பிக்கவும், கௌரவிக்கவும் தரப்படுவது. இந்த பதிவுலகில் பதிவர்களுக்கு இடையில் தரப்படுகின்ற விருதுதனை கேலி பேசியவர்கள் உண்டு. அதற்கான பதிவுகளை இப்போது தேடி பார்ப்பது அவசியமில்லாத ஒன்றுதான். அதனால் அப்படி சம்பந்தப்பட்ட பதிவுகளை இப்போது விட்டுவிடலாம். மேலும் திறமையானவர்களை கண்டுபிடித்து ஊக்கம் தந்து அவர்களின் எழுத்துகளை மென்மேலும் மெருகுபடுத்திட அவர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் தரும்போது அவர்களின் எழுத்தில் நிச்சயம் தனித்தன்மை வெளிவரும். இந்த விருதெல்லாம் வெறும் கண்துடைப்பு, இந்த விருதுக்கு எல்லாம் நான் எழுதுவது இல்லை என்கிற மனோபாவமும் பலரிடம் உண்டு. இப்பொழுது பிரச்சினை என்னவெனில் 'பிரபலம்' என கருதப்படும் பதிவர்களுக்கு விருதுகள் அவசியமா? 'பிரபலம்' என அவர்கள் கருதப்படுவதால் அவர்கள் எழுதுவது எல்லாமே விருதுக்கு தகுதியானவைகளா? எனும் கேள்விகள் எழத்தான் செய்யும்.

இங்கே தமிழ் பதிவுலகில் எழுதப்படும் பதிவுகள் மிகவும் அதிகம். ஒவ்வொன்றும் தனித்திறமையுடனே எழுதப்படுகின்றன என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனாலும் சில பதிவர்களின் பதிவுகள் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கத்தான் செய்கின்றன.

அப்படி ஒரு நல்ல பதிவு என பார்க்கும்போது அதில் என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை விருது கொடுப்பவர் மட்டுமே நிர்ணயிக்கிறார் எனும்போது சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். எனது பதிவுகளை விட மற்றவரின் பதிவுகள் எந்த விதத்தில் உசத்தி என்கிற மனோபாவம் ஒவ்வொருவரிடமும் எழுவது இயற்கைதான், நாம் மூடி வைக்க நினைத்தாலும் கூட.  அதே வேளையில் தனக்கு பிடித்த, தான் மிகவும் ரசித்த ஒரு பதிவரின் பதிவுகளுக்கு ஒருவர் விருது தருவதில் எந்தவித பாரபட்சமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பதிவுலகை கடந்த இரண்டு வருடங்களாக மட்டுமே கண்காணித்து வருகின்றேன். இந்த பதிவுலகில் நான் படித்த இடுகைகள் அதிகம் பிரச்சினைக்குரியவைகள்தான். அனால் அவையெல்லாம் உலக பிரச்சினைகள் அல்ல, தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைகள். அதன் காரணமாகவே  எரிச்சலூட்டும் தமிழ் பதிவர்கள் என எழுதியது முதற்கொண்டு, பதிவர்களை நண்பர்களாக எப்படி சேர்த்து கொள்வது என்கிற யோசனை வரையிலும் பதிவர்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள் நிறையவே எழுதி இருக்கிறேன். இதன் முழு காரணம் ஒரு விசயத்தில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளும்போது அது சம்பந்தப்பட்ட விசயங்கள் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வது அவசியம். நல்ல விசயங்கள் பற்றி அதிகம் கவலை படத்தேவையில்லை. கெட்ட விசயங்கள் பற்றி நமது முழு கவனமும் இருக்க வேண்டும். அல்லவை நீக்கி நல்லவை நாடுவது; கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பது எல்லாம் மிகவும் சரியே. ஆனால் ஒரு சமூகத்தில் அல்லவைகளை அறவே நீக்காமல் நல்லவைகளை பாதுகாப்பது ஒருபோதும் பயனளிக்காது.

தமிழ்மணம் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது வாசிக்கும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு. இங்கே பாரபட்சம் என்று எதுவும் காண இயலாது என முற்றிலும் ஒதுக்கிவிட இயலாது, அதே வேளையில் இந்த விருது தனிப்பட்ட நபரின் திறமையை அங்கீகரிக்கும் ஒன்றாகத்தான் கருத வேண்டும். பொதுவாகவே சிறுகதை, கவிதை போட்டிகள் நடத்தப்படும்போது 'பிரபலங்கள்' எழுதி இருக்கிறார்கள் எனும் பார்வை வந்துவிடுகிறது என்பதை மறுக்க இயலாது. அதை தவிர்க்கவே தற்போது சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டியில் யார் யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை மறைக்கும் வண்ணம் செயல்படுவதாக போட்டியாளர்கள் அறிவித்து இருந்தார்கள்.

இங்கே நடுவர்களின் அளவு கருவி எது? எழுதப்பட்ட விதமா? கொடுக்கப்பட்ட விசயத்தினை எப்படி உட்கிரகித்து கொண்டார்கள் என ஆய்வு செய்வதா? என்னைப் பொருத்தவரை போட்டி என அறிவித்தல் வந்தவுடன் போட்டி சம்பந்தப்பட்ட கதைகளோ, கவிதைகளோ எங்குமே வெளியிடக்கூடாது என ஒரு அறிவிப்பு தர வேண்டும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அவரவர் அவர்களுடைய தளத்தில் வெளியிட்டு கொள்ளலாம் என்றுதான் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் போட்டியின் தன்மை பாதுகாக்கப்படும். இனிமேல் போட்டிகள் அறிவிப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது என கருதுகிறேன். நடுவர்களுக்கும் மிகவும் எளிதாக இருக்கும்.

பதிவர்களுக்கு விருது வழங்கும்போது பணமுடிச்சு ஏன் வழங்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு அமைப்பு நடத்தும்போது அதற்குரிய வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மணற்கேணி என சிங்கை பதிவர்கள் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு பற்றி இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதிக பணம்  செலவழித்து பதிவர்களுக்கு கௌரவம் தந்த அமைப்பு அது. நிச்சயம் இதுபோன்ற அமைப்புகளுக்கு பதிவர்களின் ஒத்துழைப்பு இருப்பது அவசியம்.

பதிவர்களின் 'ஈகோ' பிரச்சினையால் பதிவுலகம் அவ்வப்போது தள்ளாடத்தான் செய்கிறது. ஆனால் அதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் அற்புதமான பதிவுகளை தந்து கொண்டிருக்கும் பல பதிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் எவருக்கேனும் மாற்று கருத்து இருக்கும் என தெரியவில்லை.

அறிவியல் பதிவுகள், ஆன்மிக பதிவுகள், தொழில்நுட்ப பதிவுகள், மருத்துவ பதிவுகள், சமூக பிரச்சினைகள் சுட்டிக்காட்டும் பதிவுகள், திரைப்படம் சம்பந்தப்பட்ட பதிவுகள், மதம் , இனம் சம்பந்தபட்ட பதிவுகள் என பல்வேறு பதிவுகளில் தனிப்பட்ட நபர்களை தாக்கும் பதிவுகளும் வலம் வருகின்றன. இதில் மிகவும் சுவாரஸ்யமானவை மொக்கை பதிவுகள் என அழைக்கப்படுபவை.

'மொக்கை' பதிவுகள் தான் உங்களுடையது என குற்றம் சாட்டுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். 'மொக்கை மகளிர் சங்கம்' என்கிற அமைப்பும் இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறேன். மொக்கை என்றால் என்ன? என்பதை விளக்கினால் அதுவும் ஒரு மொக்கையாகத்தான் இருக்கும்! நான் மொக்கை பதிவுகள் தான் எழுதுகிறேன், அதற்கென்ன இப்போ என்கிற மனோபாவம் பதிவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவரவருக்கு தெரிந்த விசயத்தை வைத்து வாழ்வில் முன்னேறி வருவது இயல்புதான்.

பின்னூட்டங்கள் பற்றிய பெரும் சச்சரவு உண்டு. யார் யார் எவருக்கு பின்னூட்டம் போடுவது என்பதை பின்னூட்டம் போடுபவர்கள் மட்டுமே தீர்மானிக்க இயலும். நண்பர்கள் சேர்த்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து பின்னூட்டங்கள் பெற இயலும் எனும் பார்வை பலரிடம் இருந்தாலும், ஒரு 'நல்ல' பதிவுக்கு பின்னூட்டம் என்பது அரிது எனும் குற்றச்சாட்டு உண்டு. பொதுவாக ரசிக்கும் மனோபாவம் பொருத்தே ஒவ்வொருவரின் தேவைகளும் பதிவுகளில் விழுகின்றன. பின்னூட்டம் என்பது அவரவர் விருப்பத்துடன் எழுதுவது. எனவே இந்த சர்ச்சை தீராது.

அதிக 'ஹிட்ஸ்' எனும் ஒரு மாயை வேறு உண்டு. 'ஹிட்ஸ்' வாங்கி சமைக்கவா முடியும்? அது ஒரு விளையாட்டு. பிறரை விட நானே பெருமளவில் பார்க்கப்படுகிறேன் என்கிற ஒரு புதிர். அதிலும் பதிவுகள் எழுதி 'கல்லா கட்டுகிறார்கள்' எனும் குற்றச்சாட்டு உண்டு. 'கல்லா கட்டி' சேர்த்து வைத்து சென்னையிலோ, லண்டனிலோ, சிங்கப்பூரிலோ அரண்மனையா கட்ட இயலும். அதே போல வாக்குகள் பற்றியும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதையெல்லாம் ஒரு விளையாட்டாக கருதி புறந்தள்ளிவிட வேண்டும்.

நமக்கு முக்கியம், உண்மையான , நேர்மையான சமூக அக்கறையுடைய பதிவர்கள் மென்மேலும் வளரவேண்டும், அவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்கள் எழுத்தில் மட்டுமில்லாது சமூகத்திலும் இணைந்து தொண்டாற்ற வேண்டும்.

சிறந்த பதிவர் விருது யாருக்கு வழங்குவது? நான் பல பதிவுகளை படித்து கொண்டே வருகிறேன். பலர் பிரமிக்க வைக்கிறார்கள். பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இனியும் வாசித்து கொண்டே வருவேன்.

முதன் முதலில் வாசித்ததும் இந்த பதிவுக்கு நிச்சயம் விருது வழங்க வேண்டும் என இந்த வருடம் ஜனவரி மாதம் மனதில் நினைத்து இருந்தேன். இதோ பத்து மாதங்கள் ஓடிவிட்டன. அந்த பதிவரால் எழுதப்படும் ஒவ்வொரு பதிவும் எத்தனை அருமையாக இருக்கின்றன என நினைத்து பார்க்கும்போது மனதில் திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட பதிவருக்கு விருது வழங்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இருக்கிறதா என்பதை அவரே தீர்மானித்து கொள்ளட்டும். அந்த விருதினை, எந்த பிரிவின் கீழ் வழங்குகிறேன் என ,  மற்றொரு  பதிவில் அறிவிக்கின்றேன். அந்த விருதினை தொடர்ந்து சில விருதுகள் மற்ற பதிவர்களுக்கும் தொடர்ந்து வழங்குவதாக இருக்கின்றேன்.

விருதுகள் பெற்றுக் கொள்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ, இல்லையோ விருதினை வழங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

(தொடரும்)

Friday, 15 October 2010

கவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை

அழகிய கட்டுரையை எழுதியமைக்கு பாராட்டுகளுடன்.

முழு விசயத்தையும் எழுதி மறுமொழி அனுப்பினேன். மிகவும் பெரிதான மறுமொழி என கூகிள் மறுத்துவிட்டது. எனவே அதை இங்கே வெளியிடுகிறேன்.

கவிதா அவர்களின் கட்டுரையில் (முழு கட்டுரை படிக்க) நான் நினைக்கும் முரண்பாடுகள்.

௧. //அவளே முதல். அவளே முடிவும்.//

இந்த வார்த்தைகள் மூலம் கட்டுரையின் மொத்த சாரமும் தொலைந்து விடுவதாக கருதுகிறேன். 

௨. //ஒரு பெண் நினைத்தால் நல்லவனை கெட்டவன் ஆக்கலாம், கெட்டவனை நல்லவனாக ஆக்க முடியும். அது தான் பெண்ணிற்குண்டான தனித்தன்மை//

இதுவும் கூட ஒரு விதத்தில் மிகவும் பொய்யான பிரச்சாரம். ஒரு ஆண்  கூட இதை எளிதாக செய்துவிட முடியும். எத்தனை மனைவிமார்கள் கணவனை புரிந்து கொண்டு வாழ்க்கையை திருத்தி அமைத்து இருக்கிறார்கள் என்பதை ஒரு படம் எடுத்துதான் சொல்ல வேண்டும். 

௩ //பெண் என்பவள் எப்படி ஆணால் ஆதிக்கம் செய்ய படுகிறாளோ அதே போன்று, ஆணும் பெண்ணால் ஆதிக்கம் செய்ய படுகிறான் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை//

ஆதிக்கம் என்பதற்கும், அன்பின் வெளிப்பாடு என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. பொதுவாக ஒரு விசயத்தை சொல்லும்போது இது போன்ற 'இதுதான் முடிவு' என்பது போன்ற வாசகங்கள் பெரும் சறுக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. பல வேளைகளில் வாழ்வில் அன்பின் வெளிப்பாடு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். எங்கிருந்து ஆதிக்கம் வந்தது? புரிதலை தொலைத்து நிற்கும் கூட்டங்கள் நாம்.

௪ //ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு எதிரி.//

இதுவும் ஒரு போலியான பார்வைதான். உலகில் இந்த விசயம் பரவலாகவே பேசப்படுகிறது. ஒரு பெண் மட்டுமல்ல, ஆணும சரி. அவரவர் அவரவருக்கு எதிரி. இதில் எந்த பாகுபாடும் இல்லை. 

௫. //பெண்ணிற்கு தேவையானவற்றை அறிந்து செய்பவன், அல்லது செய்ய விடுபவன் ஆணாக இருக்கிறான்.//

இங்கே பெண்ணுக்கு எனப்படும் சுதந்திரமும், ஆணுக்கு எனப்படும் சுதந்திரமும் தொலைந்து விடுகிறது. ஒரு ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் வாழும் சூழல் பழக்க வழக்கங்கள் எனும்போது சில முரண்பாடுகள் எழும். 

௬. //குறிப்பாக மனைவியை பற்றி பேச விரும்புவதில்லை. முடிந்த அளவு தானே சமாளிக்கிறார்கள்.//

இதுவும் ஒரு பொது காரணி தான். எனக்கு தெரிந்த பலர் அவரவர் மனைவியை பற்றி சொல்வது உண்டு. உங்கள் விசயம், பார்த்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது பதில். 


ஒரு கணவன் மனைவி என்பவர்கள் அவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளை அவர்களே தீர்த்து கொள்ளும் வலிமை பெற்று இருக்க வேண்டும். இதை யார் வலியுறுத்துவது? தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வெளி காரணிகள் அதிகம். 

கவிதா,

//ஒவ்வொரு ஆணையும் தனியாக விசாரித்து... எனும் வரியில் இருந்து

பரிதாப நிலையில் கூட இருக்கிறார்கள். முடிக்கும் வரை//

இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கீர்களா? 


இதற்கு ஒரு காரணம் நம்பகத்தன்மை. மறைத்து செயலாற்றுவது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது. இந்த ஆண்கள் படும் பாட்டிற்கு பெண்கள் காரணம் அல்ல, ஆண்களே காரணம். வெளிப்படையாக வாழும் எந்த ஆணும் சரி, பெண்ணும் சரி பிரச்சினைக்கு உட்படமாட்டார்கள் எனக் கொள்ளலாம். வேசம் கட்டும்போதுதான் வாழ்க்கை நாசமாகிறது. 

௬. //பெண்ணின் புலம்பல்கள் பெண்ணியமாகிறது, ஆணின் அமைதி ஆணாதிக்கமாகிறது என்று தான் என் புரிதலாக இருக்கிறது.//

இது சரியில்லாத புரிதல் என்றே கருதுகிறேன். நான் பெண்ணியம் பற்றியோ, ஆணாதிக்கம் பற்றியோ எழுதாதற்கு காரணம் ஒன்று தான். உயிரினங்கள் தன்னை நிலை நிறுத்தி கொள்ள எது வேண்டுமெனினும் செய்து தொலைக்கும். இதில் பாகுபாடு பார்ப்பது எவ்வாறு. 


சற்று சிந்தித்து பாருங்கள். 


பெண் எல்லா நேரத்திலுமா புலம்பி கொண்டே இருக்கிறார்.


ஆண் எல்லா நேரத்திலுமா அமைதியாக இருக்கிறார்.

௭. //பெண்ணால் சட்டென்று முடியாத பல விஷயங்கள் ஆணால் முடியும்.//

நீச்சல் குளம் விசயம் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. முதலில் உயிரை காப்பாற்ற குதித்தது ஒரு பெண் தானே! 


பெண்ணாலும் முடியும் என்பது தொலைந்து போன நம்பிக்கையா? 


இதை இதை பெண்கள் செய்தல் கூடாது என வரையறை வைத்து கொள்ள சொன்னது யார்? 


எனக்கு தெரிந்த பெண்கள் பலர் சாமர்த்தியசாலிகள், தைரியசாலிகள். 

--------------------------------

நான் பல விசயங்களை இந்த கட்டுரையில் ரசித்தேன். குறிப்பாக 

//ஆண்களின் ஆதிக்கம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. பெண்களின் ஆதிக்கம் அவர்களின் இயல்பு//

//பெண்ணியம் பேசியும் ஆணாதிக்கவாதி என பறைசாற்றிக்கொண்டும் அவரவர் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாமல், இருவரும் அவரவர் வேலையை ஆண் பெண் ஈகோ இல்லாமல் செய்து வந்தாலே பிரச்சனை வராது//

இருவரும் என்பதில் அனைவரும் என்று சொல்லி இருக்கலாம் தான். :) 


 நன்றி கவிதா.

கடைசியாக 


முரண்பட வேண்டும் என எண்ணினால் மட்டுமே எந்த ஒரு விசயத்திலும் முரண்பட்டு கொள்ள முடியும். ஏற்று கொள்ளும் பக்குவம் வரும்போது, எதுவுமே செய்ய இயலாது என்கிற பொது எல்லாமே சரி என்றுதான் போக தோன்றும். வாழ்வில் நாம் இரு நிலைகளிலும் வாழ்ந்து விடுகிறோம் என்பதுதான் கொடுமை. 

Monday, 19 July 2010

பதிவுலகில் நான் எப்படிபட்டவர்?

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என யாருமே எதற்கு இன்னமும் எழுதவில்லை என யோசித்தபோது தொடர்பதிவுக்கு ஒரு அழைப்பு விட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என சுவாரஸ்யமாக பலரும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். படிப்பதற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என்பதையும் படித்துவிட வேண்டும் எனும் ஆவலும் கூடவே எழுகின்றது.

எனவே பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் என எழுத நான் சிலரை அழைக்கிறேன். அத்துடன் அவரவர் ஒருவரை அழைக்க மொத்த பதிவுலகமும் வரலாறுதனை பதிவு செய்துவிடும் எனும் அக்கறை எழுகிறது.

வேதம் மட்டுமின்றி பல அற்புத விசயங்களை எழுதி வரும் விதூஷ் 

கவிதைகள், தொடர்பதிவுகள் என நேஹாவின் நேரத்தை நம்முடன் பகிரும் தீபா 

படங்கள், கட்டுரைகள் என தமிழில் அழகுபடுத்தும் ராமலக்ஷ்மி 

சிறுமுயற்சிகள் செய்து தமிழ் சிறக்க செய்யும் முத்துலட்சுமி 

மரங்கள் மற்றும் உடன் பேசுவது போல கதைகள் எழுதும் ஜெஸ்வந்தி 

விருப்பமிருப்பின் நீங்கள் எழுதலாம். ஒருவேளை எழுத முடியாது போனாலும், வேறு ஒருவரை அழைத்து விடவும். :)


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


வெ.இராதாகிருஷ்ணன் 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆமாம், அதுதான் எனது உண்மையான பெயர். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


இது பற்றி ஒரு கதை சொல்லலாம். நான் இந்த இணையங்களில் எழுத ஆரம்பித்தது 2006ம் வருடம் என நினைக்கிறன். அப்பொழுது தமிழில் வலைப்பூ பற்றியெல்லாம் தெரியாது. ஆங்கிலத்தில் தமிழ்தனை எழுதி கொண்டிருந்த காலம். அப்படி எழுதி கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானதுதான் முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளம். அங்கு எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் மூலம் நுனிப்புல் நாவல் வெளியிட்டேன். நுனிப்புல் நாவல் நண்பர்களால் பாராட்டபட்டாலும் வெளியில் இருப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  அப்பொழுதுதான் எனது எழுத்தின் நிலை இப்படியும் இருக்கும் என அறிய முடிந்தது. அப்படிப்பட்ட நண்பர்களின் அறிவுரைப்படி எனது எழுத்துகளை சேமிக்கும் தளமாக வலைப்பூதனில் எல்லாம் இருக்கும் வரை என வலைப்பூவிற்கு தலைப்பிட்டு காலடி எடுத்து வைத்தேன். இங்கே எழுதப்பட்ட பல பதிவுகள் எல்லாம் முன்னால் எழுதியவைதான். சில பதிவுகளே நேரடியாக இங்கே எழுதி வருகிறேன். 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்


எப்படியெல்லாம் வலைப்பூதனை விளம்பரம் செய்வது என்பது பற்றி அதிகம் தேடிப்பார்த்தேன். பல தேடு பொறிகளில் எனது வலைபூதனை இணைத்தேன். எனது நண்பரின் அறிவுரைப்படி தமிழ்மணத்தில் இணைத்தேன். பின்னர் தமிழிசில் இணைத்தேன். தமிழ் 10 என்பதிலும் இணைத்தேன். சில தவிர்க்கமுடியாத
பிரச்சினைகளால் தமிழ் 10லிருந்து பின்னர் எடுத்துவிட்டேன். மேலும் சில திரட்டிகளில் இணைத்தேன். சங்கமமும், திரட்டியும் நான் இணைக்காமலே திரட்டி கொண்டன. திரட்டியில், சங்கமத்தில் நேரடியாக சில பதிவுகள் இணைத்தேன். 


இப்படி எப்படியாவது வலைப்பூதனை பிரபல படுத்த வேண்டும் என பேராசை கொண்டு திரிந்தேன். ஆனால் நான் எழுதிய முத்தமிழ்மன்றத்தில் அந்த மன்றத்தின் விதிகளுக்கு ஏற்ப எனது வலைப்பூதனை விளம்பரம் செய்யாமலே தவிர்த்தேன். மேலும் எவருடைய வலைப்பூவிலும் சென்று எனது வலைப்பூதனை விளம்பரம் செய்ய வேண்டும் என ஒருபோதும் எண்ணியதுமில்லை. ஆனால் பிறருக்கு இடப்படும் பின்னூட்டங்களே வலைப்பூவிற்கான விளம்பரம் என்பதும் அறிந்தேன். பல நண்பர்களை மனதில் நினைத்து கொண்டிருக்கிறேன். எனது நேரம் காரணத்தால் பலருடன் என்னால் பழக இயலாமல் இருக்கிறது. 


மேலும் எனது கண்களுக்கு தென்பட்டதெல்லாம் பலரும் வாசிக்கும் தளங்கள். மிக குறைவாகவே சிலர் வாசிக்கும் தளங்கள் தென்பட்டன. எனது தேவை எது என தமிழில் தெரியாததால் அதிகம் சச்சரவு நிறைந்த பதிவுகளையே படித்தேன். எப்படியெல்லாம் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் எனும் ஆவலும், அடுத்தவர்களை பற்றி அறிந்து கொள்ளும் மோகமும் என்னை சச்சரவு பதிவுகளை படிக்க செய்தது எனலாம். அங்கே நான் இட்ட பின்னூட்டங்கள் எனது வலைப்பூவிற்கான விளம்பரமா என தெரியாது. 


சில காலம் பின்னர் பின்னூட்டங்கள் இடுவதை குறைத்து கொண்டேன். படித்தால் உடனே எதாவது எழுத தோன்றும். மிகவும் சிரமப்பட்டு எழுதாமலே வந்து இருக்கிறேன். எனக்கு படிக்கும்போது எழுதிவிட வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே உண்டு. இருப்பினும் நான் ஒன்று நினைத்து எழுத ஊர் ஒன்று நினைத்து பேசும் என்பதுதான் எனது நிலை. 


நான் மதித்து போற்றும் மனிதர்கள் இந்த வலைப்பூவில் நிறையவே இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து முகம் பார்த்து சிரித்து பேசிட வேண்டும் எனும் ஆவல் உண்டு. இதுவும் எனது வலைப்பூவிற்கு நான் தேடும் விளம்பரமா என்றால் என்னவென சொல்வது?. இதன் காரணமாகவே பல நேரங்களில் என்னை நானே ஒதுக்கி கொள்வது உண்டு. அது தவறு என பலமுறை அறிந்து இருக்கிறேன். நிறைய நல்ல நண்பர்கள் பெற வேண்டும் எனும் ஆசை மனதில் எப்பொழுதும் உண்டு. 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


சுய சொறிதல் என இதை வலைப்பூவில் சொல்கிறார்கள். சென்ற கேள்விக்கான எழுதிய பதிலில் இருந்தே தெரிந்து இருக்கும் நான் எழுதும் எழுத்துகள் பல சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதுதான். எனது அனுபவங்கள் என பல விசயங்களையும், பயண கட்டுரைகள் என பல சொந்த விசயங்களையும் எழுதி இருக்கிறேன். சமூகம் எனும் பார்வையில் எழுதுவது நான் பார்த்த விசயங்களின் பாதிப்புதான். 


 சமூக அக்கறை என்பது நமது மீதான அக்கறை என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். தனி மனிதன் தன் மீது அக்கறை செலுத்தும்போதே சமூகம் அக்கறை கொண்டதாகிவிடுகிறது. சுயநலம் கருதாமல் பொதுநலம் கருதவே முடியாது என்பதுதான் எனது கோட்பாடு. மக்களுக்கு செய்கிறேன் எனும் எண்ணமே சுயநலத்தின் தோற்றம்தான். 


இப்படி சொந்த விசயங்களை எழுதுவதன் மூலம் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் எழவில்லை. எவரையும் திட்டி எழுதும் பழக்கமோ, தாக்கி எழுதும் வழக்கமோ நான் கொண்டிருப்பதில்லை என்பதால் எவ்வித விளைவுகளும் இல்லை. சாதாரணமாக எழுதுவதன் மூலம்  நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். 
    
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


 பதிவுகளின் மூலம் அதிகம் சம்பாதிக்க இயலும் எனும் நிலை வந்தால் எனது மருத்துவ ஆராய்ச்சியை விட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். ஏனெனில் எழுதுவதற்கு கற்பனை வளம் போதும்.  இணையங்களில் தேடினால் விபரங்கள் கிடைக்கிறது. நூலகங்கள் தேடி ஓட வேண்டியது இல்லை. மூன்று வேளை நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். 


கூகிள் விளம்பரம் இணைத்து இருக்கிறேன். அதன் மூலம் இதுவரை எந்த பணமும் சம்பாதித்தது இல்லை. அன்பளிப்பு அளியுங்கள் என ஒரு பொத்தான் நிறுவி இருக்கிறேன். நானாக அதில் சேர்க்கும் பணம் தவிர்த்து வேறு எதுவும் இதுவரை இல்லை. இவை எல்லாம் சமூக நலனுக்காக, பிறருக்கு உதவ வேண்டும் என நான் செய்திருக்கும் விசயங்கள். 


நான் வெளியிடும் நாவல்கள், புத்தகங்கள் மூலம் வரும் பணத்தினை பிறருக்கு உதவி செய்வதற்காகத்தான் என எனது குறிப்புகளில் குறித்து வைத்திருக்கிறேன். ஆனால் இந்த வழிகள் மூலம் இதுவரை எதுவும் செய்ய இயலாமல் தான் இருக்கிறது, எழுத்தின் மூலம் சம்பாதிப்பது அத்தனை சுலபமில்லை. எழுத்தின் மூலம் வரும் பணத்தை நிச்சயம் சமூக நலனுக்காகவே செலவிடுவேன் என மனதில் உறுதியுடன் இருக்கிறேன். மேலும் நான் எழுதும் பெரும்பாலான எழுத்துகள் தொடர்ந்து புத்தகமாக வெளிவரும் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. 


நான் எழுதுவது பொழுது போக்கு என சொல்ல முடியாது. எனக்கு கிடைக்கும் நேரத்தில் எழுதுவது என்பது நிச்சயம் பொழுதை பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். அதே வேளையில் சச்சரவு நிறைந்த பதிவுகளை படிப்பு பொழுது போக்கு என கொள்ளலாம் என கருதுகிறேன். 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


என்னிடம் இருப்பது இரண்டு வலைப்பதிவுகள். ஒரு தமிழ் வலைப்பதிவு, மற்றொன்று ஆங்கில வலைப்பதிவு. ஆங்கிலம் அவ்வளவாக எழுதுவதில்லை. இது தவிர்த்து கல்விக்கென ஒரு தனி இணையதளம் வைத்து இருக்கிறேன். அதிலும் அதிகம் கவனம் செலுத்தியதில்லை. 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


மற்ற பதிவர்கள் மீது கோபம் வந்தது உண்டு, அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என கோபம் இருந்த இடம் தெரியாமல் சில கணங்களில் மறைந்து போனது. மறைந்து போன கோபத்தை மீண்டும் நினைவு படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே பதிவர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. ;) 


மற்ற பதிவர்கள் மீது பொறாமை என சொல்வதற்கு பதிலாக பெருமதிப்பு உருவானது. எழுதப்படும் எழுத்துகள் பல பிரமிக்க வைத்து இருக்கின்றன. அந்த மதிப்பிற்குரிய பதிவர்களை மனதார போற்றுகிறேன். 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய 
மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


முதலில் அறிமுகம் தான் எழுதினேன். அதில் பின்னூட்டமிட்டவர்கள் உண்டு. என்னை வலைப்பூ எழுத சொன்னவர்களின் முதல் பின்னூட்டங்கள் அது.  பின்னர் எழுதப்படும் பதிவுகளுக்கு அங்கொன்று இங்கொன்றுமாய் வந்த பின்னூட்டங்கள் என இருப்பினும், நான் பதிவு செய்பவை எல்லாம் முன்னால் எழுதப்பட்டவை என்பதால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.  


அதே வேளையில் எனது கதைக்காக விருது கொடுத்து பாராட்டிய சகோதரி விதூஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விருது வழங்கும்போது எதற்காக வழங்குகிறேன் என அவர் சொல்லி தந்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 


பின்னர் சகோதரி அன்புடன் அருணா ஒருமுறை ஒரு பதிவுக்கு பூங்கொத்து தந்து இருந்தார்கள். இந்த பதிவுலகில் நான் பெற்ற ஒரே விருது ஒரு ஒரு பூங்கொத்து அதுதான். அந்த விருதினை விரைவில் பிறருக்கு பகிர்ந்து தர வேண்டும் எனும் ஆவல் இருக்கிறது, அதற்கான நாளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். 


தாரவி எனும் பதிவிற்கு தமிழ் 10 மகுடம் சூட்டி இருந்தது. இன்னும் சில பதிவுகள் யூத்புல் விகடன் சுட்டி இருந்தது. இவை தந்த சின்ன சின்ன மகிழ்வுகள் என கொள்ளலாம். 


பதிவுகளை வாசிக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கின்றேன். 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னை பற்றி நானே கூறி கொண்டாலும், அவரவர் மனதில் ஒரு எண்ணம் என்னை பற்றி உருவாகத்தான் செய்யும். அனைவருமே என்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பது எனது ஆணவத்தின் குறியீடு. அனைவருமே என்னை மட்டமாக நினைக்க வேண்டும் என்பது எனது கழிவிரக்கத்தின் குறியீடு. என்னை எவர் எவர் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி நினைக்கட்டும் என இருப்பது எனது நிதர்சன நிலையின் குறியீடு. 


என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் விசயங்கள் தினமும் மாறிக் கொண்டே இருந்தாலும் நான் எப்பொழுதும் நான் தான்.