Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Friday, 28 August 2015

தமிழ் மின்னிதழ் - 3 சுதந்திரம் இதழ் - 2

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் இந்த இதழில் 64 பக்கங்கள் வரை அலங்கரிக்கின்றன. எதற்கு இப்படி செய்தேன் என்பதற்கான விளக்கம் ஆசிரியரின் எழுத்து மூலம் புரிய முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை இறந்துவிட்டான் என அறிவிக்கலாம் ஆனால் அவரது எழுத்துகள் எப்போதுமே இறப்பது இல்லை என்பதையே இந்த எழுத்தாளரின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் தாங்கி வந்திருக்கும் இந்த தமிழ் மின்னிதழ் சொல்கிறது.

ஒவ்வொருவரின் பார்வையில் ஒரு எழுத்தாளரின் நூல்கள் குறித்த பார்வை வேறுபடத்தான் செய்யும். சிலர் பாராட்டுவார்கள், சிலர் திட்டுவார்கள். நான் இதுவரை இவரது நூல்களை படித்து இருக்கவில்லை என்பதால் இவரது கருத்து, நோக்கம் என்னவென தெரியாது. எப்படி ஒரு திரைப்படம் பார்க்கும் முன்னர் விமர்சனம் படிக்கிறோமோ அதைப்போலவே ஒரு நூல் குறித்த விமர்சனமும் அமையும். சில விமர்சனங்கள் பார்க்க, படிக்கத் தூண்டும். சில விமர்சனங்கள் அறவே வெறுக்க வைக்கும். மாதொருபாகன் எனும் நூல் குறித்த பிரச்சினை தெரியாது போயிருந்தால் இந்த எழுத்தாளர் பற்றி எழுத்துலகம் தவிர்த்த பிறருக்கு தெரிந்து இருக்குமா எனத் தெரியாது.

மிகவும் கவனமாக விமர்சனம் குறித்து விமர்சனம் எழுதும் முன்னர் தனிப்படைப்புகள் குறித்து ஒரு பார்வை.

1. விலைமகள் - சௌம்யா

முரணாக இல்லையா என்பதான கேள்வி வரும்போதே விலைமகளின் நிலையை எண்ணி இந்த கவிதை கலங்குகிறது என தெரிந்து கொள்ளலாம். காதல், காமம், கள்ளக்காதல் என விவரித்து எவர் உடலையும் காமுற்று ரசித்திருந்தால் எனும் வரிகள் மனதிற்கும் உடலுக்குமான ஒரு ஒப்பீடு. மிகவும் அருமையாக ஒரு கொடூர சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்ணின் நிலையை வடிவமைத்து கடைசியில் தாலிக்கு அனுமதியுங்கள் என கனத்துடன் முடிகிறது கவிதை.

2. ரஸ்கின் பாண்ட் ஒரு சந்திப்பு - என் சொக்கன் 

ஒன்று எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமா பல எழுத்தாளர்கள், அவர்தம் நூல்களை அறிந்து வைத்து இருப்பது மிகவும் சிறப்பு. ஒரு எழுத்தாளரே மற்றொரு எழுத்தாளரை சந்தித்தது பற்றி விவரிக்கிறது  இந்த கட்டுரை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். பிரமாதம். எனக்கு  மனிதர்களைப் பற்றிப் பேசும்  புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள்
வாசித்த கையோடு அதைப்பற்றி  ஒரு கருத்து சொல்லவே ண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அடடா! எத்துனை உண்மை. நிச்சயம் இந்த சந்திப்பு கட்டுரை பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

3. காமத்தின் பரிமாணம் - அப்பு 

இந்த கட்டுரை குஷ்வந்த்  சிங் என ஆரம்பித்து புத்தகங்களை குறித்து விவரிக்கிறது. அப்பு தனது அனுபவங்களை மிகவும் அருமையாக விவரிக்கிறார். இதில் நாமும் தெரிவோம் என்பது உறுதி. சில எழுத்தாளர்கள் அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து சிறப்பாக இருக்கிறது. காமம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எதுவுமே பிறர் தெரிய எவரும் வாசிப்பது இல்லைதான். ஒரு எழுத்தாளர் தனக்கான அடையாளம் ஏதுமின்றி எல்லாம் எழுதும் வல்லவராக இருத்தல் அவசியம் புரிய முடிகிறது. இது வேற கை, அது வேற கை. 

4. உயிர் தப்பிய கவிதை - ஷக்தி 

நான் உங்கள் கவிதைகளை அரவணைத்து கொள்கிறேன். கவிதைப் பற்றிய கவிதை. எப்படியானது, எங்கிருந்து வந்தது என இந்த கவிதை தன்னையே சொல்லி உயிர் தப்பியதாக கூறி  அரவணைப்பு கேட்கிறது. நல்ல நல்ல வரிகள்.
குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் 
கடவுளர்கள்  கோலோச்சும் நரகத்திலிருந்தோ . 
சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய
நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது 


5. செல்வமடி நீயெனக்கு - சொரூபா 

ஒவ்வொரு வீட்டின் கதவை ஓங்கி ஒரு உதைவிட்டு செல்கிறது இந்த கதை. வீட்டின் கதவுக்குப் பின் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஒரு நட்பை மென்மையாக சொல்லி அந்த நட்பினால் உண்டாகும் ஒரு சந்தோசம் அதோடு மணவாழ்க்கை தரும் வலி, சுமையை அழுத்தமாக  சொல்கிறது கதை. பால்  ஈர்ப்பு கொ ள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப் பிறந்த அன்னியோன்யம்  யானரயும் உறுத்துவதில்லை. பிளாட்டோனிக் காதல் என்பார்கள். அது அங்கங்கே கதையில் ஆழமாக ஊடுருவி செல்கிறது. விவகாரத்து பண்ணுவது அத்தனை எளிதா என்ன எனும் எனது எழுத்தை ஒருநிமிடம் சுண்டிவிட்டுப் போனது இந்த கதை.

6. நாராயணன் - முரளிகண்ணன் 

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் முரளிகண்ணன். எத்தனை அழகிய வர்ணனை, காட்சிகள் கண்முன் வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் நாராயணன் போல இருந்துவிட்டால் எத்தனை அருமையாக இருக்கும். ஊர் மரியாதையை விட உலக மரியாதை பெறுவது எத்துனை சிறப்பு.

நாராயணன் திக்கியவாறே  ஆவாசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய்ச் சொன்னான். 

ஏராளனமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட் டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது. 

7. 'போல' கவிதைகள் - தமிழ் 

பாதம் போல, நிறைக்கும் இசை போல, சில்காற்றைப் போல, இசை போல, நின்று பருகிய தேநீர் போல, சந்தப்பாடலைப் போல, உருக்கிய நெய் வாசம் போல. 

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு விசயங்களை ஒப்புமைபடுத்தி தமிழ் அவர்கள் தமிழை அழகுப்படுத்தி இருக்கிறார். நண்பனின் நினைவுகள் என கடைசிவரி கவிதையில் சொன்னாலும் காதல், நட்பு என உருகி இருக்கின்றது.

8. பாலாவின் நிழலோவியம் அருமை.

9. கன்னி நிலம் - மீனம்மா கயல் 

ஒருவர் பற்றிய உங்கள் மனதில் இருக்கும் பிம்பத்தை முதலில் தூக்கி எறியுங்கள், அவர்களுக்குள் தாங்க முடியாத ரணம் இருக்கலாம். ஒரு பெண்ணின் மனநிலை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதையின் கரு தலைப்பில் தெரிய வந்தாலும்  எழுதப்பட்ட கதையில் இருக்கும் விவரணைகள், மன ஓட்டங்கள், எழுதப்படும் வார்த்தைகள் கதையை வெகு சுவாராஷ்யமாக்கி விடுகின்றன.

அதுவும் ''கலக்கல் அண்ணா'' என்ற கமென்ட். அதனால் தான் அவளை மன்னித்தாள். 

பொண்ணு போட்டோல  ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம். 

மனம் பார்த்து எவருமே மணம் முடிப்பது இல்லை. அக்கா தங்கை பாசமும் அழகு.

10. குவியொளி - மகள் 

அம்மா அப்பாவின் பெருமையை ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் . ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கிறது.

11. அஜ்னபி கவிதைகள் 

இன்டர்நெட் பற்றிய ஒரு பார்வையில் பேராண்மை. மிகவும் நன்றாக இருக்கிறது. பசியின் கொடுமையை சொல்கிறது மற்றொரு கவிதை.

திறன்பேசித் தொடுதிரையின்
ஒத்திசைந்த ஒற்றல்களில்

12. கனவுகளின் நாயகன் - எஸ். கே. பி கருணா 

படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இவரது கட்டுரையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அரசியல், சினிமா என்ற உலகம் தொடாத ஒரு மனிதர் பரவலாக மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை, பத்திரிகை, ஊடகங்கள் பெரும்பாலும் அத்தனை முன்னுரிமையும் தருவதில்லை. இப்படி ஒரு மாமனிதர் இருந்தாரா எனும் எண்ணுமளவுக்கு அவரது வாழ்வியல் செயல்பாடுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. இதற்கெல்லாம் தனி மனோதிடம் வேண்டும். எவர் என்ன சொன்னாலும் தனக்குப் பிடித்ததை செய்த மாமனிதர். மாணவர்களே உலகம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று. மறைந்த அப்துல் கலாம் அவர்கள் குறித்து பல அறியாத தகவல்களை அறியத்தந்து இருக்கிறார்.

நாகராஜ் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் மிகவும் நன்றாகவும் அதுவும் இங்கே இணைக்கப்பட்டது பொருத்தமாகவும் இருந்தது.

13. பா சரவணன் கவிதைகள் 

முரண் தொகை ரசிக்க வைத்தது. பசலையுற்றவன் ஒரு மனிதனின் வாழ்வை சொல்லி கடைசி வரியில் காவியம் ஆனது. வெக்கை, மோகமுள்ளின் முனை, அற்பாயுளின் தாகம் எல்லாம் அதன் சுவை உணர  மீண்டும் வாசித்து கொள்ளவேண்டும்.

14. கடவுள் அமைத்து வைத்த மேடை - ஜிரா 

மெல்லிசை மன்னர்  இசையின் மீது இவருக்கு எத்துனை பாசம். வியந்து போகிறேன். இசையை அவர் எப்படி எல்லாம் நேசித்தார் என ஜிரா அவர்களின் வரிகளில் நாம் உணர முடியும். அதுவும் இசையில் கூட குறில் நெடில் எல்லாம் நான் கேள்விப்படாத ஒன்று. பிரமாதம். குருபக்தி, தமிழ்பக்தி இசைபக்தி என வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசைமேதை என்பதை அறிய முடிகிறது.

அதுவும் மிகவும் பொருத்தமாக பரணிராஜன் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் வெகு சிறப்பு. மெல்லிசை மன்னரின் சிரித்த முகத்தை எத்தனை சாதுர்யமாக வரைந்து காண்பித்துவிட்டார்.

அனைவருக்கும் பாராட்டுகள். ஒரே ஒரு மொழிபெயர்ப்பு கதையை இப்போது விட்டுவிட்டேன். எழுத்தாளர்களுடன் எழுத்துக்களுடன் தொடரும்.

(தொடரும்)



Wednesday, 2 November 2011

வேலைவெட்டி இல்லாத வலைப்பதிவர்களா நாம்?

யார் என்றே தெரியாத புதிய எண் அலைபேசியில் ஒலித்தது. சற்று தயக்கத்துடனே எடுத்தேன். தெரியாத எண்கள் வந்தால் சற்று யோசனையாகவே இருக்கும். ஆனால் பதில் பேசாமல் இருப்பதில்லை. அதுவும் அலைபேசியில் 'மிஸ்டு கால்' என இருந்தாலும் திருப்பி அந்த எண்ணுக்கு அழைத்து யார் என்ன என கேட்டுவிடுவது அவ்வப்போது வழக்கம்.

சரி என பேச ஆரம்பித்தேன். 

'எப்படி இருக்கீங்க' என விசாரணையோடு தொடங்கியது பேச்சு. பால்ய நண்பர் என தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார். எப்படி எனது எண் கிடைத்தது என கேட்டு வைத்தேன். நண்பர்களிடம் கேட்டு வாங்கினேன் என்றார். மிகவும் சந்தோசமாகவே பல விசயங்கள் பேசினார். 

அத்தோடு விட்டு இருந்தால் இப்படி ஒரு தலைப்பில் நான் ஒரு வீண் பதிவு போட வேண்டி வந்திருக்காது. இதற்கு முன்னர் ஒரு நண்பர் இப்படித்தான் அழைத்து புத்தகங்கள் எல்லாம் வெளியிட்டு இருக்கியாமே, சொல்லவே இல்லை என்கிற ரீதியில் தமிழை விடாமல் இன்னமும் கெட்டியாக பிடித்து இருப்பதற்கு பாராட்டி தள்ளிவிட்டார். ஆனால் இவரோ சற்று வித்தியாசமான தோரணையில் பேச ஆரம்பித்தார்.

'உன்னோட ப்ளாக் படிச்சேன்'

'ஓ அப்படியா, நான் ப்ளாக் எல்லாம் எழுதறது எப்படி தெரியும்'

நான் ப்ளாக் எழுதுவது எனது நண்பர்கள், உற்றார், உறவினர் என பலருக்கும் தெரியாமல்தான் சில மாதங்கள் முன்வரை இருந்தது. முகநூல், அடடா எப்படியெல்லாம் தமிழ்படுத்துகிறார்கள், ஒன்றில் எனது இணைப்பை தர அங்கிருந்து சிலருக்கு எனது ப்ளாக் தெரியும். தமிழுல எழுதுற, நல்லா இருக்கு என ஒரு சில பாராட்டுகள் மட்டுமே. மற்றவர்கள் எதுவும் மூச்சு விடவில்லை. அப்பாடா என இருந்தது. 

நான் புத்தகம் வெளியிடும் வரை அந்த புத்தக விசயத்தை அத்தனை ரகசியமாக வைத்திருந்து அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை தந்தேன். சொல்லவே இல்லை என்கிற பாணியில் தலையில் கொட்டாத குறைதான். நான் எனது ஆய்வு விசயமோ, புத்தக விசயமோ எவரிடமும் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தது, எழுதுகிறோம், ஏதோ வாய்ப்பு கிடைத்தது ஆராய்ச்சி செய்கிறோம் என்கிற போக்கில்தான் செல்வதுண்டு. அதனால் தான் இந்த பிளாக்கில் எல்லாவற்றையும் எழுதி குவித்துவிடுகிறேன் போல, தற்போது கூட முகநூல் தனை மூடிவிட்டேன். சில மாதங்கள் முன்னர் ட்விட்டர் தனை மூடிவிட்டேன். எதற்கு அநாவசியமாக உபயோகபடுத்தாத ஒன்றை வைத்திருக்க வேண்டும் என நிறுத்தி வைத்து விட்டேன். நான் பொதுவாக நெட்வொர்க் தளங்கள் எதிலும் என்னை இணைத்து கொள்வதில்லை. 

பழைய நண்பர்கள், புது நண்பர்கள் என வா, வந்து சேர் என அழைப்பு விடுவார்கள், நான் பெரும்பாலும் தட்டி கழித்துவிடுவேன். எதற்கு இதெல்லாம் என்கிற ரீதியில் இருப்பேன். இப்பொழுது கூட கூகுள் பிளஸ் என்ற ஒன்றில் இணைந்தேன். எத்தனை நாள் அங்கிருப்பேனோ தெரியாது. இப்படி நான் எனது இணைய உலக இணைப்பை மிகவும் சிக்கனமாகவே வைத்திருக்க அவரது பேச்சு இப்படியாக போனது. 

சரி விசயத்துக்கு வருவோம்.

'ஒருநாள் உன் பெயரை கூகுள் பண்ணிப் பார்த்தேன், அதுல இருந்து உன்னோட ப்ளாக் வந்தேன், இன்னும் தமிழுல கிறுக்கற அந்த பாழாய் போன பழக்கம் போகலையா' 

'என்ன சொல்ல வர' 

'அதான், ஒரு நோட்டுல எப்ப பார்த்தாலும் எழுதிகிட்டே இருப்ப, நான் கூட சொல்லலை நீ எழுத்து பைத்தியமா போக போறேன்னு'

'இப்போ அதுக்கு என்ன இப்போ'

'உன் ப்ளாக்ல வெட்டித்தனமா எழுதிட்டு இருக்கியே, உனக்கு வேலை வெட்டி இல்லையா'

'என்னாச்சு'

'நீ எழுதி இந்த நாட்டை திருத்த போறியா, கவிதை கவிதைனு எழுதி உனக்கு கவிஞர் பட்டம் காலேஜ்ல கொடுத்தாங்க, நான் கூட நீ மாறி இருப்பேன்னு நினைச்சேன், உன் பொண்டாட்டி உன்னை ஒன்னும் சொல்லமாட்டாளா'

'இரு இரு, என்ன பிரச்சினை'

'நீ வெட்டியா எழுதுறதை நிறுத்திட்டு உருப்படியா ஏதாச்சும் பண்ணு, எத்தனை புக் இதுவரைக்கும் உன்னோட ஆராய்ச்சி சம்பந்தமா எழுதி இருக்க, எத்தனை ஆராய்ச்சி பேப்பர் வெளியிட்டு இருக்க, எத்தனை கான்பெரென்ஸ் போயிருக்க'

'அதுதான் பேப்பர் எல்லாம் பாத்துருப்பியில, அதைப்பத்தி பேசறது. இந்த ப்ளாக் பத்தி பேசி எதுக்கு உன் நேரம் வீணாக்குற. அதுவும் என்னோட உதிரி நேரத்துல எழுதுறேன், இந்த வருசம் பாத்தியா, ரொம்ப கம்மியாதான் எழுதி இருக்கேன், அதுவும் சாப்பாடு டயத்துல அப்புறம் தூங்க போகறதுக்கு முன்னம், இப்படி அப்ப அப்ப தோணுறதை எழுதிவைச்சி வெளியிடுவேன், இப்படி தமிழுல எழுதுறது கூட எனக்கு உருப்படியா தெரியுது, நீயும் எழுதி பழகு, எல்லாம் உருப்படியா போகும்'

இதற்கு பதிலாக அவனிடம் இருந்து திட்டு வார்த்தையுடன் தொடங்கியது அடுத்த பேச்சு. 'உன்னை மாதிரி என்னை லூசுன்னு நினைச்சியாடா, இந்த தமிழை மறந்து பல வருசம் ஆச்சு, எத்தனை புக் போட்டுருக்கேன் தெரியுமா, எத்தனை பேப்பர் வெளியிட்டு இருக்கேன் தெரியுமா, இதோட அம்பது கான்பரென்ஸ் போயிருக்கேன், போய் கூகுளுல தேடிப்பாரு'

'ஆமா அத்தனை வெளியிட்டு என்ன சாதிச்ச'

'நான் ஒரு அசிடன்ட் ப்ரோபாசர் இப்போ'

'அது உன் வேலை, நீ என்ன சாதிச்ச அதை சொல்லு. ஒரு மருந்தை கண்டுபிடிச்சியா, நண்பர்கள் பழக்கம் பிடிச்சியா, உன்னை பத்தி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏதேனும் தெரியுமா, அதை விடு சமுதாயத்தில ஏதேனும் விழிப்புணர்வு கொண்டு வந்தியா, நாங்க தமிழுல எழுதி பெரிய புரட்சி பண்ணிட்டு வரோம், அது தெரியுமா எதுக்கும் ப்ளாக் படிச்சு பாரு, புரியும்' 

'அந்த கருமாந்திரத்தை என்னை எதுக்குடா படிக்க சொல்ற, எல்லாம் வெட்டி பயலுக, கிடைக்கற நேரத்தை இப்படி எழுதறோம்னு எழுதி வீணடிக்கிற'

அந்த திட்டு வார்த்தை என்னை கோபம் அடைய செய்தது. 

'சரிடா, இத்தோட நிறுத்திக்கோ, ஏதோ பல நாட்கள் அப்புறம் பேசறேன்னு பார்த்தா நான் தமிழுல எழுதறதை பாத்து வயித்தெரிச்சலுல பேசற மாதிரி தெரியுது. இந்த ப்ளாக் எழுதறவங்களைப் பத்தி ஒரு வரலாறு தெரியணும்னா எதுக்கும் அடுத்த மாசம் என்னோட ப்ளாக் பக்கம் எட்டிப்பாரு, ஒவ்வொரு சாதனையாளர்கள் பத்தி நான் எழுதறேன். இங்க எழுதறவங்க என்ன வேலை வெட்டி இல்லாதவங்கனு நினைச்சியா'

'போடா தெரியும், நீ எழுதினதுதான் படிச்சேனே, தமிழ் பதிவர்கள்னு. அதே கிறுக்கல், அப்போ நோட்டு, இப்போ நெட்டு' 

'என்னை இப்ப என்ன பண்ற சொல்ற'

'நிறுத்துடா, எழுதறதை நிறுத்து. உருப்படியா வேலையைப் பாரு. பொண்டாட்டி புள்ளைங்க குடும்பத்தை கவனி'

'அதெல்லாம் சரியாத்தான் நடக்குது, எதுக்கு இப்படி வீணா புலம்புற, உனக்கு வேணும்னா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறேன். அதுல எழுது. blogconsultancy எப்படி இருக்கு'

அதற்கடுத்து அவன் திட்டியவாறே போனை கட் பண்ணினான். பாவம் அவனுக்கு தெரியாது, இதைக்கூட எழுத்தில் வைப்பவர்கள் தான் இந்த ப்ளாகர்கள் என்று. 

மீண்டும் அவன் இதை படிக்க கூடும். மறுமுறை அவனது எண்கள் தெரிந்தால் பேசுவதா வேண்டாமா!

Sunday, 25 July 2010

புத்தக வெளியீட்டு விழா - நன்றி

தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தகம்தனை மிகவும் சிறப்பாக முறையில் வெளியீடு செய்தமைக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

நான் யார் என்றே தெரியாத போதிலும் எனது எழுத்துதனை படித்து அதனை வெகு சிறப்பாக பாராட்டி பேசியதுடன், புத்தகத்தை வெளியிட்ட  தாரா கணேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

முதல் பிரதியை பெற்று கொண்டு நல்வாழ்த்து தெரிவித்த கவிஞர் அய்யப்ப மாதவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஐந்தே நிமிடங்களில் பேச வேண்டும் என அழைப்பு விடப்பட்டதும் என்னிடம்  கொண்டிருக்கும் நட்புக்காக மிகவும் சிறப்பாக பேசிய எனது தோழியும், முத்தமிழ்மன்றத்தின் தலைமை நடத்துனர்களில் ஒருவரான சூரியகாந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அசைபடம் எடுக்க வேண்டும் என விண்ணப்பம் தந்ததும், உடனே சம்மதம் தெரிவித்து அசைபடம் எடுக்க உதவியாக இருந்த மணீஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுரையை வழங்கிய புதிய தலைமுறை பத்திரிகையின் ஆசிரியர் அதிஷா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களின் முயற்சியால் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மற்றும் முத்தமிழ் மன்ற நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த தருணத்தில் விதூஷ், மணீஜி, கேபிள்ஜி ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புதனை ஏற்படுத்தாமல் போனது குறித்து மனதில் சிறு வருத்தம் வந்தது என்னவோ உண்மை.

விழா குறித்து மேலும் தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

சினேகன் அவர்களின் புத்தக விமர்சனம் கண்டேன். ஒரு பக்கம் மனதில் மகிழ்ச்சி நிலவினாலும், ஒரு இனம் புரியாத பயமும் வந்து சேர்கிறது. நன்றி சினேகன்.

எங்கோ இருக்கிறேன் என
நினைக்கும்போது
அருகில்தான் இருக்கிறாய் என
அன்புடன்
அரவணைத்து கொண்ட
அனைத்து
தோழர் தோழிகளுக்கும்
எனது
உளமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.

Monday, 19 July 2010

பதிவுலகில் நான் எப்படிபட்டவர்?

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என யாருமே எதற்கு இன்னமும் எழுதவில்லை என யோசித்தபோது தொடர்பதிவுக்கு ஒரு அழைப்பு விட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என சுவாரஸ்யமாக பலரும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். படிப்பதற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என்பதையும் படித்துவிட வேண்டும் எனும் ஆவலும் கூடவே எழுகின்றது.

எனவே பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் என எழுத நான் சிலரை அழைக்கிறேன். அத்துடன் அவரவர் ஒருவரை அழைக்க மொத்த பதிவுலகமும் வரலாறுதனை பதிவு செய்துவிடும் எனும் அக்கறை எழுகிறது.

வேதம் மட்டுமின்றி பல அற்புத விசயங்களை எழுதி வரும் விதூஷ் 

கவிதைகள், தொடர்பதிவுகள் என நேஹாவின் நேரத்தை நம்முடன் பகிரும் தீபா 

படங்கள், கட்டுரைகள் என தமிழில் அழகுபடுத்தும் ராமலக்ஷ்மி 

சிறுமுயற்சிகள் செய்து தமிழ் சிறக்க செய்யும் முத்துலட்சுமி 

மரங்கள் மற்றும் உடன் பேசுவது போல கதைகள் எழுதும் ஜெஸ்வந்தி 

விருப்பமிருப்பின் நீங்கள் எழுதலாம். ஒருவேளை எழுத முடியாது போனாலும், வேறு ஒருவரை அழைத்து விடவும். :)


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


வெ.இராதாகிருஷ்ணன் 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆமாம், அதுதான் எனது உண்மையான பெயர். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


இது பற்றி ஒரு கதை சொல்லலாம். நான் இந்த இணையங்களில் எழுத ஆரம்பித்தது 2006ம் வருடம் என நினைக்கிறன். அப்பொழுது தமிழில் வலைப்பூ பற்றியெல்லாம் தெரியாது. ஆங்கிலத்தில் தமிழ்தனை எழுதி கொண்டிருந்த காலம். அப்படி எழுதி கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானதுதான் முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளம். அங்கு எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் மூலம் நுனிப்புல் நாவல் வெளியிட்டேன். நுனிப்புல் நாவல் நண்பர்களால் பாராட்டபட்டாலும் வெளியில் இருப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  அப்பொழுதுதான் எனது எழுத்தின் நிலை இப்படியும் இருக்கும் என அறிய முடிந்தது. அப்படிப்பட்ட நண்பர்களின் அறிவுரைப்படி எனது எழுத்துகளை சேமிக்கும் தளமாக வலைப்பூதனில் எல்லாம் இருக்கும் வரை என வலைப்பூவிற்கு தலைப்பிட்டு காலடி எடுத்து வைத்தேன். இங்கே எழுதப்பட்ட பல பதிவுகள் எல்லாம் முன்னால் எழுதியவைதான். சில பதிவுகளே நேரடியாக இங்கே எழுதி வருகிறேன். 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்


எப்படியெல்லாம் வலைப்பூதனை விளம்பரம் செய்வது என்பது பற்றி அதிகம் தேடிப்பார்த்தேன். பல தேடு பொறிகளில் எனது வலைபூதனை இணைத்தேன். எனது நண்பரின் அறிவுரைப்படி தமிழ்மணத்தில் இணைத்தேன். பின்னர் தமிழிசில் இணைத்தேன். தமிழ் 10 என்பதிலும் இணைத்தேன். சில தவிர்க்கமுடியாத
பிரச்சினைகளால் தமிழ் 10லிருந்து பின்னர் எடுத்துவிட்டேன். மேலும் சில திரட்டிகளில் இணைத்தேன். சங்கமமும், திரட்டியும் நான் இணைக்காமலே திரட்டி கொண்டன. திரட்டியில், சங்கமத்தில் நேரடியாக சில பதிவுகள் இணைத்தேன். 


இப்படி எப்படியாவது வலைப்பூதனை பிரபல படுத்த வேண்டும் என பேராசை கொண்டு திரிந்தேன். ஆனால் நான் எழுதிய முத்தமிழ்மன்றத்தில் அந்த மன்றத்தின் விதிகளுக்கு ஏற்ப எனது வலைப்பூதனை விளம்பரம் செய்யாமலே தவிர்த்தேன். மேலும் எவருடைய வலைப்பூவிலும் சென்று எனது வலைப்பூதனை விளம்பரம் செய்ய வேண்டும் என ஒருபோதும் எண்ணியதுமில்லை. ஆனால் பிறருக்கு இடப்படும் பின்னூட்டங்களே வலைப்பூவிற்கான விளம்பரம் என்பதும் அறிந்தேன். பல நண்பர்களை மனதில் நினைத்து கொண்டிருக்கிறேன். எனது நேரம் காரணத்தால் பலருடன் என்னால் பழக இயலாமல் இருக்கிறது. 


மேலும் எனது கண்களுக்கு தென்பட்டதெல்லாம் பலரும் வாசிக்கும் தளங்கள். மிக குறைவாகவே சிலர் வாசிக்கும் தளங்கள் தென்பட்டன. எனது தேவை எது என தமிழில் தெரியாததால் அதிகம் சச்சரவு நிறைந்த பதிவுகளையே படித்தேன். எப்படியெல்லாம் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் எனும் ஆவலும், அடுத்தவர்களை பற்றி அறிந்து கொள்ளும் மோகமும் என்னை சச்சரவு பதிவுகளை படிக்க செய்தது எனலாம். அங்கே நான் இட்ட பின்னூட்டங்கள் எனது வலைப்பூவிற்கான விளம்பரமா என தெரியாது. 


சில காலம் பின்னர் பின்னூட்டங்கள் இடுவதை குறைத்து கொண்டேன். படித்தால் உடனே எதாவது எழுத தோன்றும். மிகவும் சிரமப்பட்டு எழுதாமலே வந்து இருக்கிறேன். எனக்கு படிக்கும்போது எழுதிவிட வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே உண்டு. இருப்பினும் நான் ஒன்று நினைத்து எழுத ஊர் ஒன்று நினைத்து பேசும் என்பதுதான் எனது நிலை. 


நான் மதித்து போற்றும் மனிதர்கள் இந்த வலைப்பூவில் நிறையவே இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து முகம் பார்த்து சிரித்து பேசிட வேண்டும் எனும் ஆவல் உண்டு. இதுவும் எனது வலைப்பூவிற்கு நான் தேடும் விளம்பரமா என்றால் என்னவென சொல்வது?. இதன் காரணமாகவே பல நேரங்களில் என்னை நானே ஒதுக்கி கொள்வது உண்டு. அது தவறு என பலமுறை அறிந்து இருக்கிறேன். நிறைய நல்ல நண்பர்கள் பெற வேண்டும் எனும் ஆசை மனதில் எப்பொழுதும் உண்டு. 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


சுய சொறிதல் என இதை வலைப்பூவில் சொல்கிறார்கள். சென்ற கேள்விக்கான எழுதிய பதிலில் இருந்தே தெரிந்து இருக்கும் நான் எழுதும் எழுத்துகள் பல சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதுதான். எனது அனுபவங்கள் என பல விசயங்களையும், பயண கட்டுரைகள் என பல சொந்த விசயங்களையும் எழுதி இருக்கிறேன். சமூகம் எனும் பார்வையில் எழுதுவது நான் பார்த்த விசயங்களின் பாதிப்புதான். 


 சமூக அக்கறை என்பது நமது மீதான அக்கறை என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். தனி மனிதன் தன் மீது அக்கறை செலுத்தும்போதே சமூகம் அக்கறை கொண்டதாகிவிடுகிறது. சுயநலம் கருதாமல் பொதுநலம் கருதவே முடியாது என்பதுதான் எனது கோட்பாடு. மக்களுக்கு செய்கிறேன் எனும் எண்ணமே சுயநலத்தின் தோற்றம்தான். 


இப்படி சொந்த விசயங்களை எழுதுவதன் மூலம் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் எழவில்லை. எவரையும் திட்டி எழுதும் பழக்கமோ, தாக்கி எழுதும் வழக்கமோ நான் கொண்டிருப்பதில்லை என்பதால் எவ்வித விளைவுகளும் இல்லை. சாதாரணமாக எழுதுவதன் மூலம்  நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். 
    
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


 பதிவுகளின் மூலம் அதிகம் சம்பாதிக்க இயலும் எனும் நிலை வந்தால் எனது மருத்துவ ஆராய்ச்சியை விட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். ஏனெனில் எழுதுவதற்கு கற்பனை வளம் போதும்.  இணையங்களில் தேடினால் விபரங்கள் கிடைக்கிறது. நூலகங்கள் தேடி ஓட வேண்டியது இல்லை. மூன்று வேளை நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். 


கூகிள் விளம்பரம் இணைத்து இருக்கிறேன். அதன் மூலம் இதுவரை எந்த பணமும் சம்பாதித்தது இல்லை. அன்பளிப்பு அளியுங்கள் என ஒரு பொத்தான் நிறுவி இருக்கிறேன். நானாக அதில் சேர்க்கும் பணம் தவிர்த்து வேறு எதுவும் இதுவரை இல்லை. இவை எல்லாம் சமூக நலனுக்காக, பிறருக்கு உதவ வேண்டும் என நான் செய்திருக்கும் விசயங்கள். 


நான் வெளியிடும் நாவல்கள், புத்தகங்கள் மூலம் வரும் பணத்தினை பிறருக்கு உதவி செய்வதற்காகத்தான் என எனது குறிப்புகளில் குறித்து வைத்திருக்கிறேன். ஆனால் இந்த வழிகள் மூலம் இதுவரை எதுவும் செய்ய இயலாமல் தான் இருக்கிறது, எழுத்தின் மூலம் சம்பாதிப்பது அத்தனை சுலபமில்லை. எழுத்தின் மூலம் வரும் பணத்தை நிச்சயம் சமூக நலனுக்காகவே செலவிடுவேன் என மனதில் உறுதியுடன் இருக்கிறேன். மேலும் நான் எழுதும் பெரும்பாலான எழுத்துகள் தொடர்ந்து புத்தகமாக வெளிவரும் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. 


நான் எழுதுவது பொழுது போக்கு என சொல்ல முடியாது. எனக்கு கிடைக்கும் நேரத்தில் எழுதுவது என்பது நிச்சயம் பொழுதை பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். அதே வேளையில் சச்சரவு நிறைந்த பதிவுகளை படிப்பு பொழுது போக்கு என கொள்ளலாம் என கருதுகிறேன். 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


என்னிடம் இருப்பது இரண்டு வலைப்பதிவுகள். ஒரு தமிழ் வலைப்பதிவு, மற்றொன்று ஆங்கில வலைப்பதிவு. ஆங்கிலம் அவ்வளவாக எழுதுவதில்லை. இது தவிர்த்து கல்விக்கென ஒரு தனி இணையதளம் வைத்து இருக்கிறேன். அதிலும் அதிகம் கவனம் செலுத்தியதில்லை. 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


மற்ற பதிவர்கள் மீது கோபம் வந்தது உண்டு, அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என கோபம் இருந்த இடம் தெரியாமல் சில கணங்களில் மறைந்து போனது. மறைந்து போன கோபத்தை மீண்டும் நினைவு படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே பதிவர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. ;) 


மற்ற பதிவர்கள் மீது பொறாமை என சொல்வதற்கு பதிலாக பெருமதிப்பு உருவானது. எழுதப்படும் எழுத்துகள் பல பிரமிக்க வைத்து இருக்கின்றன. அந்த மதிப்பிற்குரிய பதிவர்களை மனதார போற்றுகிறேன். 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய 
மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


முதலில் அறிமுகம் தான் எழுதினேன். அதில் பின்னூட்டமிட்டவர்கள் உண்டு. என்னை வலைப்பூ எழுத சொன்னவர்களின் முதல் பின்னூட்டங்கள் அது.  பின்னர் எழுதப்படும் பதிவுகளுக்கு அங்கொன்று இங்கொன்றுமாய் வந்த பின்னூட்டங்கள் என இருப்பினும், நான் பதிவு செய்பவை எல்லாம் முன்னால் எழுதப்பட்டவை என்பதால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.  


அதே வேளையில் எனது கதைக்காக விருது கொடுத்து பாராட்டிய சகோதரி விதூஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விருது வழங்கும்போது எதற்காக வழங்குகிறேன் என அவர் சொல்லி தந்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 


பின்னர் சகோதரி அன்புடன் அருணா ஒருமுறை ஒரு பதிவுக்கு பூங்கொத்து தந்து இருந்தார்கள். இந்த பதிவுலகில் நான் பெற்ற ஒரே விருது ஒரு ஒரு பூங்கொத்து அதுதான். அந்த விருதினை விரைவில் பிறருக்கு பகிர்ந்து தர வேண்டும் எனும் ஆவல் இருக்கிறது, அதற்கான நாளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். 


தாரவி எனும் பதிவிற்கு தமிழ் 10 மகுடம் சூட்டி இருந்தது. இன்னும் சில பதிவுகள் யூத்புல் விகடன் சுட்டி இருந்தது. இவை தந்த சின்ன சின்ன மகிழ்வுகள் என கொள்ளலாம். 


பதிவுகளை வாசிக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கின்றேன். 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னை பற்றி நானே கூறி கொண்டாலும், அவரவர் மனதில் ஒரு எண்ணம் என்னை பற்றி உருவாகத்தான் செய்யும். அனைவருமே என்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பது எனது ஆணவத்தின் குறியீடு. அனைவருமே என்னை மட்டமாக நினைக்க வேண்டும் என்பது எனது கழிவிரக்கத்தின் குறியீடு. என்னை எவர் எவர் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி நினைக்கட்டும் என இருப்பது எனது நிதர்சன நிலையின் குறியீடு. 


என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் விசயங்கள் தினமும் மாறிக் கொண்டே இருந்தாலும் நான் எப்பொழுதும் நான் தான். 

Thursday, 8 July 2010

எழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.

எப்படித்தான் ஆரம்பிப்பது இந்த தொடர்பதிவுதனை. இப்படி தொடர்பதிவு எழுதுவதற்கு சுனிதா கிருஷ்ணனை பாராட்டி எழுதலாமே என நினைத்தால், சுனிதா கிருஷ்ணனுக்கு பாராட்டுகள் அவசியமில்லை, அவரைப் போல வாழ முற்படுபவர்கள்தான் அவசியம்.  அந்த அக்கறை எல்லாம் இம்மண்ணில் உள்ளவர்களுக்கு மிகவும் குறைவு.

மீண்டும் ஒரு அழையா விருந்தாளியாய் இந்த தொடர்தனை ஆரம்பித்துக் கொள்கிறேன். இப்படித்தான் அழையா விருந்தாளியாய் பலரின் மனதில் இந்த கடவுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டுவிட்டார். இவரை எப்படியாவது துரத்தி அடித்து விடவேண்டும் என ஆதி காலத்தில் இருந்தே ஒரு சாரர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் மனதிலும் இந்த கடவுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு விட்டார். எப்படி இந்த கடவுளை துரத்தி அடிப்பது என்பதுதான் அவர்களின் சிந்தனை. அசைந்து கொடுக்கமாட்டார் கடவுள்.

எனக்கு எப்படி இந்த கடவுள் அறிமுகமானார், எப்படி பரிச்சயமானார்.

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்

சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

இதோ மேலே எழுதபட்டிருக்கிற தெய்வங்கள் எங்கள் ஊரில் இருப்பவைதான். அய்யனார் எங்கள் தோட்டத்தில் இருக்கிறார். தெற்கே சுடுகாடு செல்லும் வழியில் இருக்கும் முனியாண்டிக்கு பயந்தது உண்டு. கிழக்கே சூரிய நமஸ்காரம் செய்யும் பெருமாளுக்கு கனிந்தது உண்டு.

முனியாண்டி கோவில் பூசாரியிடம் பேய் ஓட்ட வருபவர்கள் மிகவும் அதிகம். அந்த பூசாரி வீடு எங்கள் வீட்டுக்கு அருகில்தான். அடிக்கப்படும் உடுக்கை சப்தமும், பூசாரியின் சப்தமும் என்னை கண்கள் மூடியே இருக்க செய்தது உண்டு.

இதையும் தாண்டி இரு கடவுள்கள் என வணங்கப்படும் கடவுள்கள் எனது ஊரில் உண்டு.  சிறு குழந்தையாக இருக்கும்போதே தவறிப்போன  நாச்சாரம்மாள். இவருக்கென ஒரு வீடு கோவிலாக இருப்பது உண்டு. எனது நாவலில் இவரையும் எழுதியது உண்டு சற்று மாறுதலுடன். இவருக்கு  பூஜைகள் உண்டு.  மற்றொன்று எனது அம்மாவின் அப்பா சமாதி இருக்கும் தோட்டத்து கோவில்.  குரு பூஜை என நடத்தப்படும் அந்த பூஜையில் அத்தை ஒருவர் சொல்லும் அருள் வாக்கு கண்டு நடுங்குவது உண்டு.

இவர்கள் எல்லாம் கடவுள் என ஒருநாள் கூட மறக்காமல் திருநீர் வைத்து செல்லும் வாழ்க்கை மிகவும் இனிப்பாகத்தான் இருந்தது, கோவில்களில் தரப்படும் பிரசாதங்கள் போல.

மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி பாலாஜி கோவில், திருமோகூர் கோவில், அஷ்டலட்சுமி கோவில்  என பல கோவில்கள் என்னுள் கடவுளை உறுதிபடுத்தி கொண்டன. இந்தியாவில் இருந்தவரை கோவிலில் இருக்கும் சிலைகள் எல்லாம் கடவுளாகவே தெரிந்தார்கள். அந்த நம்பிக்கை கூட ஒருவிதத்தில் நிம்மதியாகத்தான் இருந்தது. எதையும் கேள்வியுடன் பார்க்க வேண்டும் எனும் அக்கறை இல்லை.

இப்படியாக என்னுள் இருந்துவிட்ட கடவுள் மெதுவாக மாற ஆரம்பித்தார். இலண்டன் முருகன் கோவிலுக்கு எதிராக தோன்றியதுதான் இலண்டன் மகாலட்சுமி கோவில். அப்பொழுதுதான் இந்த சிலைகளை கடவுள் எனும் பார்வை விலக ஆரம்பித்தது. ஈ.வெ.ராமசாமி எப்படி கோவில் நிர்வாகத்தில் இருந்தபோது அறிந்து கொண்டாரோ அப்படித்தான் நானும் கோவில் நிர்வாகத்தில் இருந்து பல விசயங்கள் அறிந்து கொண்டேன்.

கடவுள் தண்டிப்பார் எனும் அக்கறை தொலைந்து போனது. கடவுள் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை சிதறிப் போனது. மக்களின் நம்பிக்கையை கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. இதே மக்களின் மனம் குறித்த பார்வை கடவுளை வித்தியாசப்படுத்தியது. எனக்குள் இருந்த நம்பிக்கை விலகி ஒரு தெளிவு பிறந்தது. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையில் எனக்கு உடன்பாடு இருப்பதே இல்லை. கடவுள் இருக்கிறார் என்றே சொல்லி மக்களுக்கு அவர் அவரின் கடமையை உணர்த்துவதுதான் எளிதாக எனக்குத் தெரிந்தது.

அன்பினை வளர்க்கும் பக்குவம் அவசியம், வெறுப்பினை வளர்ப்பதல்ல. மற்றவர்களை முட்டாள் என சொன்னால் முட்டாளுக்கு கூட கோவம் வரத்தான் செய்யும். அதைத்தான் இந்த கடவுள் மறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள், அதனால் தங்கள் கொள்கை வெற்றி பெற இயலாமல் மிகவும் தடுமாறுகிறார்கள்.

இப்பொழுது எனக்குத் தெரிந்த கடவுள் இப்படித்தான் எழுதினார் என சொல்வது எத்தனை எளிது.

ஞானமற்ற என்னை ஞானிகள் கண்டதாய்
தானமற்ற நெஞ்சம் புண்ணியம் கொண்டதாய்
எல்லாம் கடந்து உள்ளிருப்பதாய் நானிங்கு
சொல்லியதாய் எழுதியது நானல்ல மனிதனே.

நான் எழுதிய எழுத்துக்களில் அதிகம் விமர்சனத்திற்கு உட்பட்டவர் கடவுள் தான். இதுவரைக்கும் அவர் எந்த மறுப்பும் தெரிவித்தது இல்லை. ஒருபோதும் தெரிவிக்கப் போவதுமில்லை. இந்த மனிதர்கள்தான் தேவையில்லாமல் அல்லாடுகிறார்கள்.

சுனிதா கிருஷ்ணன் ஒரு கடவுளாகத் தெரியலாம். நாம் இன்னலுக்கு உட்பட்ட வேளையில் எதிர்பாரா உதவி செய்பவர்களும் கடவுளாக தெரியலாம், அதை எல்லாம் மறுத்து பேசி கொண்டிருக்க மனமும் இல்லை.

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது

கடவுள் பற்றிய தெளிவு எனக்கு இருக்கிறது. அந்த ரகசியம் காப்பாற்றப்படும்.

சொல் என சொல் அதில்
மனமது மயங்கியே சொல்லுக்கு ஆட்பட்டால்
இரகசியம் அது எக்காலத்திலும் இரகசியமாகாது
ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்க இரகசியமாவது

எப்படிப்பட்ட தெளிவு கொண்டபோதிலும் கடவுள் பற்றிய மனிதரின் சிந்தனைகளில் பல எனக்கு விளங்குவதே இல்லை.

முடிவில்லா மாற்றம் கொள்ளும் சக்தி
தோற்றம் சொன்னதில்லை
கடவுள் கண்டதாய்
எந்த ஞானியும் சத்தியம்
செய்தது இல்லை
அன்பை சிவமென கூறி
ஏழையின் சிரிப்பில் இறைவனை சொல்லி
காசை கடவுளாக்கிட
விளங்கமுடிவதில்லை
அவதாரம் வருவதற்கான
காலம் வெகு அருகில் இல்லை.

அவதாரம் இனிமேல் வருமெனில் அதை ஆதாரத்துடன் காட்டிடும் பண்பு நம்மிடம் இருப்பதால் கடவுள் இனிமேல் அவதாரம் எடுக்காமல் போகலாம். ஆனால் கடவுள் மனிதர் மனதில் எப்போதும் இருப்பார்.

Tuesday, 1 June 2010

தமிழ் பதிவர்கள்

ஊரு வம்பை விலைக்கு வாங்குவது எப்படி தெரியுமா?

இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உலக பிரச்சினை போல உருவகம் செய்து  அதில் உலை வைத்து குளிர் காயும் யுக்தி பற்றி அறிய வேண்டுமா?

எழுதப்படும் எழுத்துகள் எப்படியெல்லாம் பல கோணங்களில் பார்க்கப்படும் என்பதையும் எத்தனை அருமையாக ஆராய்ச்சிகள் செய்து பல விதங்களில் ஒரு விசயத்தை சிந்தித்து எழுதும் கலை பற்றி அறிய வேண்டுமா?

முக்கியமாக வெளிநாட்டில் வாழும் தமிழ் வாசகர்களே, உங்களுக்கு தமிழில் எத்தனை கேவலமான வார்த்தைகள் இருக்கின்றது என்பதை தெரிந்திட வேண்டுமா?

நகைச்சுவை பற்றி ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதே நகைச்சுவையால் எப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

எழுதுவதன் மூலம் உங்கள் மொத்த குடும்பத்தையும் துன்பத்தில் சிக்க வைத்திடும் நிலை அறிய வேண்டுமா?

இப்படி எதிர்மறை நிலைகள் மட்டுமே எழுத்தாகிப் போனதை கண்டு கண்ணீர் வடிக்க வேண்டுமா?

எதற்கெடுத்தாலும், தேசிய பார்வையை ஒழித்துவிட்டு ஜாதீய பார்வையுடன் அணுகும் முறை தெரிந்து கொள்ள விருப்பமா?

நாம் அனைவரும் ஒன்று என்று ஒற்றுமையை நிலைநாட்டுவதாய் கூறிக் கொண்டு முதுகில் அடிகள் தந்திடும் கலை அறிய விருப்பமா?

மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்தி மனிதர்களை கீழ்மைபடுத்தும் நிலையை அறிய வேண்டுமா?

வாருங்கள் உலக தமிழ் வாசகர்களே.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மிக மிக சின்ன காரியம் தான். தமிழ் திரட்டிகளை ஒரு முறை பார்வையிட்டால் போதும். அங்கே காணப்படும் பதிவுகளை படியுங்கள். ஆனால் அதைப் பற்றி ஒன்றும் எழுதி விடாதீர்கள். மீறி எழுதினால் நீங்கள் ஊர் வம்பை விலைக்கு வாங்கி விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதெல்லாம் தேவையில்லை, பல நல்ல விசயங்கள் தெரிந்து கொள்கிறோம் என நினைத்தால் புற்களுக்கு மத்தியில் ஒரு சில நெற்கதிர்கள் தென்பட்டுத்தான் கொண்டிருக்கும். அதை தேடி கண்டு கொள்ளுங்கள்.

வாசகர்களாக இருப்பதுதான் மிகவும் சௌகரியம். பதிவர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ நீங்கள் மாற நினைத்தால் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். எவரேனும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் திட்டிக் கொண்டிருக்கலாம், அதே வேளையில் வாழ்த்திக் கொண்டும் இருக்கலாம். திட்டுகளை புறந்தள்ளி, வாழ்த்துகளை மட்டுமே தனதாக்கிக் கொள்ளும் திறன் இருப்பின் நீங்கள் நிலைத்து நிற்கலாம்.

இந்த பதிவுலகத்துக்கென பிரத்தியோகமாக எழுதப்பட்ட பதிவுகள் சில உள்ளன. அவை

விவகாரமான எழுத்தாளர்கள் 

யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க 

கருத்துகளும் அதன் சுதந்திரமும் 

ஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது? 

எழுத்துலகில் அரசியல் செய்பவர்களுக்கும், நட்பினை கொச்சைபடுத்துபவர்களுக்கும் எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இனிமேலும் ஏதேனும் பிரச்சினை வரும்போது நான் குரல் கொடுக்கவில்லையென கருதாதீர்கள். எனது பதிவுகள் அதற்காக பேசி முடித்துவிட்டன

தனித்தனி குழுவாக செயல்படுவதை அறவே தவிர்த்துவிடுங்கள். உங்கள் நட்புக்குரியவரோ, மற்றவர்களோ பிரச்சினையில் இருந்தால் அதை எழுதி பெரிதுபடுத்தி ஆதரவு தருகிறேன் பேர்வழி என களங்கப்படுத்த வேண்டாம். மின்னஞ்சல் உண்டு, தொலைபேசி உண்டு. பேசி தீர்த்து கொள்ளும் விசயங்களை எழுதி சிறுமைபடுத்தாதீர்கள்.  சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் எவரும் குழந்தைகள் அல்ல.

எழுதுவதால் பிரச்சினைகளில் சிக்குண்டு தவித்து என்ன செய்வதென புரியாமல் எழுத்துலகைவிட்டு விலகும் பதிவர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழில் எழுதி, தமிழை சிறந்திட செய்யும் அனைவருக்கும் எனது நன்றிகளும், வணக்கங்களும்.

Wednesday, 9 September 2009

சிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.

சிறுகதைப் பட்டறை குறித்த இன்றைய பதிவு ஒன்றைப் படித்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முன்னர் இதே சிறுகதைப் பட்டறை சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தெரிவித்தும் இருந்தேன்.

நானூறு ரூபாய் நுழைவுக் கட்டணம் என்று எழுதப்பட்டு இருந்ததைப் படித்துதான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். தொழில்ரீதியாக தங்களை மெருகேற்றிட பணம் செலவழித்து பல பட்டறைகளில் தங்களை இணைத்துக்கொள்பவர்களிடையே எழுத்துத் தொழிலையும் போற்றி இந்த சிறுகதைப் பட்டறை மூலம் தங்களை மெருகேற்றிட நினைத்து இருக்கும் பல ஆர்வலர்களை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கே அதிக பணம் செலவழிந்துவிடும் என்பதுதான் வருத்தத்துக்குரிய விசயம். சிறுகதை எழுதிட அமைதியான சூழல் அவசியம், ஆடம்பரமான சூழல் அல்ல!

பிறந்தநாள் விழா, தலைவர் படம் என விழாக்கள், சினிமா என செலவிடும் பணத்தைப் பார்க்கும்போது இந்த பணம் ஒருவிதத்தில் மிகவும் குறைவுதான். ஆனால் இந்த பணத்தைக் கூடத் தர இயலாமல் எழுதத் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருக்கவும் கூடும்.

இன்றைய வாழ்க்கை சூழலில் தானாக கற்றுக் கொள்வது என்பது குறைந்து போய்விட்டது. எதையும் எவரேனும் சொல்லித் தந்தால் மட்டுமே கற்றுக் கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் இதற்காக தனியாக நேரம் செலவிட முடியாததும், தன் முனைப்பு இல்லாததும் காரணமாகும். இது போன்ற பட்டறைகளில் கலந்து கொள்வதால் நாம் மெருகேறிவிடலாம் என கனவு காண்பவர்கள், இதன் மூலம் பெறும் அனுபவங்களை முயற்சியாக்க வேண்டும் என நினைவுடன் இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்.

இப்படித்தான் லண்டனில் மருத்துவத் துறைக்குச் செல்ல மருத்துவம் சம்பந்தமாக இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கும் பட்டறைகளில் பணம் செலவழித்து கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் இங்கு அதிகம் பேர் உள்ளனர். இதுபோன்ற பட்டறைகளில் கலந்து கொள்வதால் ஒரு விழிப்புணர்வும், நல்ல அனுபவமும் கிடைக்கக் கூடியதாகவே கலந்து கொள்பவர்கள் கூறுகிறார்கள், மேலும் இவ்வாறு கலந்து கொண்டதற்கான தரப்படும் சான்றிதழ் பெரும் மதிப்பு உடையதாக இருக்கிறது.

சிறுகதை பட்டறை சிறப்பாக நடந்திட வாழ்த்துகள்.

Wednesday, 26 August 2009

நிலையான நட்பு

முகம் பார்க்காமல் முதல் அறிமுகம்
வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையாய்
முகவரி தெரியாமல் முழு நிலவாய்
அகம் அறியாது இனம் புரியாத நட்பு

எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம்
இனிய நாட்கள் இன்ப ஒளி வீசி மலர்ந்து சிரிக்கும்
நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு
நெஞ்சை வருடி நெகிழ்வு தருமது நட்பு

இடங்கள் பல மாறியது உண்டு
தொடர்ந்தே என்றும் இணைந்து வந்ததுண்டு
அன்பே உருவான இனிய இதயத்தோடு
முதுமை வரைக்கும் வருமோ இளமை மாறா நட்பு

கண்ட உண்மையில் கற்பனை மறைந்துவிடும்
கொண்ட நட்பினால் உள்ளம் அளவிலா மகிழ்ச்சி கொள்ளும்
எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டால்
குறையின்றி நெறியோடு நீண்டநாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு.

Tuesday, 25 August 2009

வலைப்பூ கண்டு மிரண்டு போனேன்

உலகில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன, பிரச்சினை இல்லாத உலகம் காண வேண்டும் என நினைப்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்க முடியும். பிரச்சினைகளுடன் வாழ்ந்து அதிலிருந்து கொண்டே பிரச்சினைகளை வென்று அடுத்த பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்வதுதான் நிதர்சனம்.

நல்லது, பிரச்சினை முடிந்துவிட்டது என அமைதியாக எவராலும் இருக்க இயலாது. திறம்பட வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் நமது மனதில் உறுதியுடன் இருத்தல் அவசியம் என்பதை அறிவோம்.

சில மாதம் முன்னர் அன்பரின் 'நிகழ்காலத்தில்' எனும் வலைப்பூவிற்குச் சென்றபோது வலைப்பூ மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளது, மீறிச் சென்றால் உங்கள் கணினி பாதிக்கப்படும் எனும் எச்சரிக்கையைக் கண்டு பல நாட்களாக அவரது வலைப்பூவினைப் பார்க்காமலே இருந்தேன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது எனப் பார்த்தபோது அன்பர் சக்திவேலின் 'படிக்காத பக்கங்களில்' ஒரு இடுகை கண்டேன், எந்த எந்த திரட்டிகளில் எல்லாம் வலைப்பூவினைச் சேர்க்கக் கூடாது என. அவ்வாறு சில திரட்டிகளில் இணைக்கும்போது மால்வேர் பாதிப்பு வரும் என அறிந்தேன். அதன் காரணமாகவே பல தமிழ்திரட்டிகளினை முழுவதுமாகத் தவிர்த்தேன்.

மேலும் எனது வலைப்பூவில் முதன்முதலாக தன்னை இணைத்துக் கொண்ட ஜெஸ்வந்தி அவர்களின் வலைப்பூவும் இதே பாதிப்பு அடைந்ததைக் கண்டு அவரது படைப்புகளை படிக்க முடிவதில்லை.

இப்படியிருக்க நேற்று எனது வலைப்பூ விகடன்.காம் மூலம் மால்வேர் கொண்டுள்ளது என எனக்கு எச்சரிக்கை வர என்ன செய்வது எனத் தெரியவில்லை. இருப்பினும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் பின்னூட்டம் பார்த்தபின்னர் கூகிளைத் தொடர்பு கொண்டு மால்வேர் விசயம் பற்றி அறிவித்தேன். இன்று மால்வேர் எச்சரிக்கை இல்லாமல் வலைப்பூ திறந்தது.

இந்த மால்வேர் எச்சரிக்கை பாதிக்கப்பட்ட பிற தளங்களினால் நமது வலைப்பூக்களுக்குத் தெரிவது போலும்! இது கூகிள் குரோமினால் மட்டுமே அறிய முடிகிறது.

ஆஸ்த்மா தொடர் ஆரம்பித்த பின்னர் தான் இந்தப் பிரச்சினை வந்தது. விகடன்.காம் தளத்தின் ஆர்வம் புரிந்து கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினை உங்களுக்கும் நேர்ந்தது உண்டா?

Tuesday, 18 August 2009

கலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish

Sword Fish said...

Your question is: Why does anmikam (meaning of this word, as used by you, is confusing) put off people today, unlike in the past?

Instead of answering the question in simple terms, you have rambled so much that I dont understand what is in your mind - except at the end, where, the meaning of anmikam, according to you, appears to be one that goes beyond religion and the god the religions point to. You want that anmikam to be detached from religion, god, and rituals and ceremonies. But this does not answer the question: why is anmikam unpopular today?

Please write clearly.

சம்பந்தபட்ட பதிவு http://ellaam-irukkum-varai.blogspot.com/2009/08/blog-post_18.html

--------------------------------

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது. மீண்டும் படித்தாலும் சிரிப்பு வரத்தான் செய்கிறது. மிகவும் ரசிக்கிறேன்

இவர் தனது மனதில் உள்ளதை அப்படியே சொல்லிச் சென்றவிதம்தனைப் பார்த்து மிகவும் ரசித்துக் கொண்டிருக்கலாம். கடைசியில் தயவுசெய்து தெளிவாக எழுது என்று சொன்னவிதம் மிகவும் நன்றாக இருந்தது.

ஏதோ எழுதுகிறோம் என்ற நினைப்பைப் போக்கும் விதத்தில், சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என அழுத்தமாகச் சொல்லிச் சென்ற விதம் மிகவும் அருமை.

நானும் பலருடைய இடுகைகளுக்குப் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன், சில இடுகைகளில் பின்னூட்டம் இடாமல் வந்துவிடுவேன். எனது பின்னூட்டங்கள் பல சிதறிக் கிடக்கின்றன. பின்னூட்டங்கள் கூட பயனளிக்கும் விதமாக அமைந்தால் எத்தனை நல்லது என்பதை இன்று இரண்டாவது முறையாக காண்கிறேன்.

நாம் நமது வலைப்பூவில் எழுதுவது மட்டும் அல்ல எழுத்து, பிறரது வலைப்பூவிலும் எழுதுவதும் எழுத்துதான். எனவே நமது எண்ணங்கள் பயன்படுமாறு எழுதுவது இன்றியமையாததாகிறது.


Friday, 14 August 2009

திரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.

சிங்கையில் வாழும் நண்பர்கள் இதுகுறித்து நிச்சயம் கலந்தாலோசித்து இருப்பார்கள். இருப்பினும் சிங்கையில் வாழ்ந்த நண்பர் ஒருவரின் சில ஆலோசனைகளை இங்கே இணைக்கிறேன்.

-----------------------

நண்பர் செந்தில்நாதன் நிரந்தரவாசியா? அவர் நிரந்தரவாசியோ அல்லது சிறப்பு தகுதியில் அங்கு வேலை செய்தாலும் சரி பரவாயில்லை. அவர் எந்த இடத்தில் வசிக்கின்றார் என கேளுங்கள். அந்த தொகுதி எம்.பி யை சந்திக்க அவர் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் மக்களின் குறையை கேட்க, வாரத்திற்க்கு ஒரு நாள் ஒதுக்கப்படும். அன்று அவரை (அவரது துணைவியாராக இருந்தாலும் சரி) தகுந்த ஆதாரங்களுடன் போய் அந்த தொகுதி எம்.பி யை பார்க்க சொல்லுங்கள். நிச்சயம் அவர் உதவுவார். கவலை வேண்டாம் என சொல்லுங்கள். தயவு செய்து அந்த தொகுதி எம்.பி.யை போய் பார்க்க சொல்லுங்கள். நிரந்தரவாசி என்றால், நிச்சயம் அவருக்கு தனிச்சலுகை கிடைக்கும்.

சிண்டா என்ற ஒரு அமைப்பு, சிங்கை வாழ் தமிழ் மக்களின் நலனுக்காக செயல்படுகின்றது. அவர்களையும் தொடர்பு கொள்ள சொல்லுங்கள். அவர்களிடம் மிக குறைந்த அளவிலேயே ரெஸ்பான்ஸை எதிர்பார்க்க முடியும். இருந்தாலும், நமக்கு காரியம் ஆக வேண்டும். மனம் தளராது போராட வேண்டும். நண்பரின் துணவியாரிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களை ஒரு நகல் எடுத்து ஒலி 96.8-க்கு (சிங்கையில் இருக்கும் தமிழ் வானொலி நிலையம்) நேயர் விருப்பத்தின் பொழுது பேச சொல்லுங்கள். மீனாட்சி சபாபதி, பாலா, பாமா ஆகியோர் இரவு நேரங்களில் ஒளிபரப்பு செய்வார்கள். அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களையும், நேயர்களையும் உதவ கேட்கலாம்.

--------------------------

சிங்கையில் தகவல் ஊடகத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து விபரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

மிக்க நன்றி.

Thursday, 13 August 2009

சிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.

'Every Little Helps'

ஒரு பெரிய கடையின் விளம்பரம் இது. இதைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் ஒரு பெரிய தைரியம் வந்து சேரும். அது அவர்களின் வியாபார உக்தி என நினைத்துக் கொண்டாலும் நமது அன்புக்கும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன சின்ன உதவிகள், சின்ன சின்ன பாராட்டுகள் மனிதனை சந்தோசமாகவும், நலமுடன் இருக்கவும் வழிவகை செய்யும்.

மனிதநேயம் இறந்து போய்விட்டதாகவும், மானுடம் எந்த வழியில் செல்கிறது என வருத்தப்பட்டும் இருப்போர்களுக்கிடையில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சக மனிதன் துயரப்படுவதைக் கண்டு அவனுக்கு உதவிட துடிக்கும் உள்ளங்கள் உண்டு என்பதை பல பொழுதுகளில் பார்த்திருக்கிறேன்.

திரு.செந்தில்நாதன் அவர்கள் இதய நோயால் அவதியுறுவதைக் கண்டு அவருக்கு உதவிட இணைந்திருக்கும் நண்பர்கள் கண்டு பெருமிதம் கொள்கிறேன். திரு. கே.வி.ராஜா என்பவர் எழுதிய திரு.செந்தில்நாதன் பற்றிய பதிவினை

முத்தமிழ்மன்றத்தின் நிதியிலிருந்து உதவிடக் கேட்டு முத்தமிழ்மன்றத்தில் இணைத்தேன். நிச்சயம் முடிந்ததைச் செய்யலாம் என சொல்லி இருக்கிறார்கள். இதுபோல் நீங்கள் சார்ந்திருக்கும் வலைத்தளங்களிலும் நண்பர்களைக் கேளுங்கள். உதவி புரியும் நிலையிலிருப்பவர்கள் நிச்சயம் உதவுவார்கள் எனும் நம்பிக்கை நிறைய உண்டு.

திரு. செந்தில்நாதன் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Monday, 3 August 2009

எழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு?

வலைப்பதிவர் திரு.கிரி அவர்கள் எனது இடுகை ஒன்றிற்கானப் பின்னூட்டத்தில் ஒரு விண்ணப்பம் வைத்தார். அது என்னவெனில், எனது எழுத்து நடையை எளிமையாக்கினால் எனது இடுகைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதேயாகும்.

அவரது வேண்டுகோளுக்கிணங்க, எழுத்து நடையை எவ்வாறு எளிமையாக்குவது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்தபோது சில விசயங்கள் புலப்பட்டது. அவை,

1. சொல்ல வருவதை மிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம், எளிய தமிழ் சொற்கள் கொண்டு எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவது.

2. வாசிப்பவரைத் தேவையில்லாத குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களது நேரத்தை வீணாக்காமல் இருப்பது.

3. ஒரே சொல்லை அவசியமில்லாது மீண்டும் மீண்டும் உபயோகிக்காமல் இருப்பது.

4. அளவுக்கு அதிகமாக, நீண்ட தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது. அதாவது வள வள என இல்லாது வளமையுடன் எழுதுவது.

5. எழுதியதைப் படித்துப் பார்த்து ஏதேனும் புரிகிறதா என சோதித்துப் பார்த்துவிட்டு பின்னர் இடுகையை வெளியிடுவது.

6. 'ஏதோ எழுதுகிறோம்' எனும் மனப்பக்குவத்தை அகற்றிவிட்டு 'சாதனை புரிய எழுதுகிறோம்' எனும் நம்பிக்கையுடன் எழுதுவது.

7. பயன் தரும் விசயங்களை பக்குவத்துடன் எழுதுவது.

8. வாசிப்பவர்களின் மனதில் நல்லெண்ணத்தையும், நல்லதொரு நம்பிக்கையையும், நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்துவது. இதுமட்டுமின்றி எழுதும்போது மிகவும் இயல்பாகவே எழுதுவது.

மேலே சொல்லப்பட்ட விசயங்களை மனதில் முன்னிறுத்தி எழுதுவோம் எனில் வாசகர்கள் பயன் அடைவார்கள் என்பது உறுதி. இத்தருணத்தில் வலைப்பதிவர் திரு.கிரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்பு தினம்னா என்ன?

நண்பர்கள் தினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டதை வலைப்பூக்களில் கண்ணுற்றேன். எனது ஒரு பதிவில் பின்னூட்டமாக சந்ரு அவர்கள் நண்பர்கள் தின வாழ்த்துகள் சொல்லிச் சென்றார். நானும் அதே பின்னூட்டத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் சொல்லிக்கொண்டேன்.

ஆனால் வருடப் பிறப்பினைக் கொண்டாடும்போது சொல்லிக்கொள்ளப்படும் வாழ்த்துகளைப் போல் அல்லாமல் எவருமே எனக்கு நண்பர் தின வாழ்த்துச் சொல்லவில்லை, நானும் எவருக்கும் நண்பர் தின வாழ்த்துச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆக எனக்கு நண்பர்கள் இல்லையா? அல்லது நான் நண்பர்களைப் புறக்கணிக்கிறேனா?

முத்தமிழ்மன்றத்தில் நண்பர்கள் தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்ளப்படும், ஆனால் இம்முறை எவருமே அந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ளாத ஒருத் தோற்றத்தை இன்று சென்றுப் பார்த்தபோது அறிந்தேன். நானும் மெளனமாக சில பதிவுகள் வழக்கம்போல் படித்துவிட்டு, பதிவிட்டுவிட்டு வெளியேறிவிட்டேன். நண்பர்களை இந்த தினம் மட்டுமே நினைவு கொள்தல் அவசியம் இல்லை என கருதுகிறோமோ? அல்லது இதுவும் ஒரு நாள் சடங்கு முறையில் சேர்க்கப்பட்டுவிட்டதே எனும் வருத்தமா?

நண்பர்கள் எனப் பலரைச் சேர்த்து மகிழும் வேளையில், பகைவர்களாக அவர்கள் மாறிவிடக்கூடாதே எனும் அளவிலா பயம் எனக்கு வந்து சேர்வதுண்டு. எப்போதும் சற்றுத் தள்ளி நின்றேப் பழகிக்கொண்டேன். நட்புடன் சேர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் என்னை ஓரமாகவே நிற்கச் சொன்னது.

நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு கூட நட்பில் ஒருவித ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது. விசுவின் மக்கள் அரங்கத்தில் விசு சொன்னார் எனது நண்பர்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது. அவரவர் வேலை, குடும்பம் என்றே நாட்கள் செல்கிறது. திருமணம் ஆன பின்னர் வேலை, குடும்பம் என நட்பு சற்று தள்ளியே தான் நிற்கிறது.

என்னுடன் படித்த, பழகிய நண்பர்கள் எனது நினைவலைகளில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொடர்பு கொள்வதுதான் குறைந்துப் போய்விட்டது. எப்போதாவது பேசிக்கொள்வதா நட்பு என்பது போல் ஆகிவிட்டது.

இந்த நட்பு தினத்தை எனது மனைவியிடமும், ஒன்பது வயது நிரம்பிய மகனிடமும் சொன்னேன். புன்னகைத்தார்கள். சில மணி நேரங்கழித்து எங்கள் மகன் என்னிடமும், என் மனைவியிடமும் கை குலுக்கி நட்பு தின வாழ்த்துகள் சொன்னான். நானும் எனது மனைவியும் நட்பு தின வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டோம்.

எங்கெங்கோ இருக்கும் எங்கள் நண்பர்களும் மகிழ்ந்து இருப்பார்கள், என்னுடன் வாழும் இந்த இரண்டு அருமையான நண்பர்களை நினைத்து.

Sunday, 26 July 2009

வலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி

வலைப்பூவின் நோக்கம் எனது எண்ணத்தைச் சேகரிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்திய வேளையில், பலரின் பார்வைக்கு நமது சிந்தனைகள் கொண்டு செல்லும் கருவியாக இந்த வலைப்பூ அமைகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் இந்த வலைப்பூவினை அனைவரின் பார்வைக்கும் கொண்டு செல்வதை வலைப்பூ திரட்டிகள் மிகவும் எளிதாக்கி விடுகின்றன.

தமிழ்மணம் மட்டுமே எனக்கு அறியப்பட்டத் திரட்டியாக இருந்தது. சிறிதுநாளில் இதுபோன்ற சேவையை பல வலைப்பூ திரட்டிகள் செயல்படுத்தி வருகின்றன என்பதையும் தமிழ்மணம், சங்கமம், திரட்டி போன்றவைகள் தானியங்கிகளாகச் செயல்படுவதை அறிய முடிந்தது. ஆனால் தமிழிஸ், அதென்ன தமிழிஸ் என யோசித்தபோது, அட இங்கிலீஸ் என ஞாபகம் வந்தது, நாமோ அல்லது மற்றவரோ இணைக்க வேண்டும் என பல நாட்கள் பின்னரே அறிந்தேன்.

பல திரட்டிகளில் சென்று இணைக்கும் அளவுக்கு நேரம்தனை செலவிட முடியாமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. இவ்வாறிருக்க தமிழிஸ்லிருந்து திடீரென 10க்கும் மேற்பட்ட வாக்கு பெற்ற ஒரு எழுத்துப் பற்றி எனக்கு மின்னஞ்சல் வர அட என ஆச்சரியம் அளித்தது. எழுத்தை நேசிக்கும் வாசகர்கள் கண்டு வியந்து போனேன்.

வினவு, தமிழ் ஓவியா போன்ற எழுத்தாளர்களின் பதிவுகள் தமிழ்மண பரிந்துரையில் அதிக ஓட்டுகள் பெறுவது கண்டு வியந்ததுண்டு. நன்றாக எழுதினால் அன்றி எவரும் வாக்கு அளிக்கப் போவதில்லை. இதில் குளறுபடி, கூட்டுக்குழப்பம் என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. எப்படியோ வாக்குகளும் பரிந்துரைகளும் விழ அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள் என்பது மட்டும் உண்மை. அந்த நிலையை அவர்கள் நிச்சயம் கஷ்டப்பட்டே அடைந்திருக்க முடியும். நண்பர்கள் சேர்ப்பது என்பது எளிதாக இருக்கலாம், ஆனால் அதை நீட்டித்துக்கொள்வது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை.

எனது பதிவுகள் தமிழிஸ் பெற்ற வாக்குகளைப் பார்த்து ஒரு பதிவு அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என நான் முடிவுக்கு வந்துவிடலாம் என்றே இருந்தாலும் மேலும் எப்படியெல்லாம் எழுத வேண்டும் எனும் ஒரு உத்வேகத்தை அவை தராமல் இல்லை.

தமிழ்மண வாசகர்கள், தமிழிஸ் வாசகர்கள், திரட்டி வாசகர்கள், சங்கமம், தமிழ்10 என வாசகர்களை அடையாளம் பிரிக்கலாம் என்றாலும் நான் அனைத்துக்கும் பொதுவான எழுத்தாளானகவே பரிமாணம் செய்கிறேன்.

அங்கீகாரம் கிடைக்கச் செய்திட வேண்டும் எனும் போராட முற்படும்போது அங்கே சோர்வு என்பது இருக்கக் கூடாது, நம்மை எவரும் கவனிக்கவில்லை என்கிற மன ஆதங்கமும் அவசியம் இல்லாதது. ஒரு எழுத்து நிச்சயம் நன்றாக இருந்தால் பிறரால் நிச்சயம் வாசிக்கப்படும், நேசிக்கப்படும் என்கிற உண்மையை மட்டும் அறிந்து கொண்டேன்.

எனது எழுத்துக்குப் புதிய வழியைக் காட்டிக்கொண்டிருக்கும் வலைப்பூ திரட்டிகளுக்கும், வாசகர்களுக்கும், ஆர்வக்கோளாறினால் தலைகாட்டிச் செல்லும் வாசகர்களுக்கும், என்னை வளர்த்துவிட்ட, இன்னும் வளர்த்துக் கொண்டிருக்கும் முத்தமிழ்மன்றத்துக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம் என இறுமாந்து விடாதே, விசயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்'' இதுதான் எனது கொள்கை.

அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Thursday, 2 July 2009

ஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது?!

தமிழில் எழுத வேண்டும் எனும் ஆர்வமும், எழும் சிந்தனைகளை எழுத வேண்டும் என எண்ணிய போது அடித்தளம் எனக்கு தந்தது முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளம்.

பல எண்ணங்களை கதைகளாக, கட்டுரைகளாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அங்கே எழுதி வருவதுண்டு. எனக்குத் தெரிந்த நண்பர்கள் வலைப்பூ ஒன்றை ஆரம்பியுங்கள் என்று சொல்ல 'அதெல்லாம் எதற்கு' என்றே வேண்டாம் என இருந்தேன். மேலும் தனியாக வலைப்பூ வைத்து எழுதும் அளவுக்கு எல்லாம் சிந்தனையும் இல்லை, மேலும் எழுதும் எழுத்தில் அலங்காரம் பூசும் அளவுக்கு தமிழ் இலக்கியவாதியும் நான் இல்லை என்றே இருந்தேன். பின்னர் எனது எழுத்துக்களையெல்லாம் சேகரிக்கும் தளமாக பயன்படுத்தலாம் என்றே வலைப்பூ ஆரம்பித்தேன். அவ்வப்போது சேகரிப்பதும், அதிகமாக வலைத்தளத்தில் எழுதுவதுமாகப் பயணம் போய்க்கொண்டிருந்தது.

அந்த வலைத்தளத்தில் எழுதிய போது ஏற்படும் சிறு சிறு சலசலப்புகள் கண்டு 'அட என்ன இது' என்றுதான் தோன்றும். ஆனால் சில தினங்களாக வலைப்பூக்களுக்கு பின்னூட்டம் எழுதுவதில் கவனம் செலுத்த இங்கே நடக்கும் பல விசயங்களைப் பார்த்ததும் 'அட என்னதான் இது' என்றே தோணியது.

நடக்கும் விசயங்களைப் படிக்கும் போது அதற்கு மறுமொழி எழுதலாம் என எண்ணியபோது 'கருத்து கந்தசாமி' என்கிற பட்டங்களும் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்ததும் மிகவும் கவனத்துடனே செயல்பட வேண்டும் எனத் தெரிய வந்தது.

ஒரு நூலை வெளியிட்டுவிட்டு அதற்குரிய விமர்சனங்களையெல்லாம் பார்த்துப் பழகிய பின்னர் இப்போதுதான் உண்மையான எழுத்துலகம் எப்படியிருக்கும் என்பது தெரிகிறது. நல்லவேளை எவருமே எனது நூலை வாசித்து இருக்கமாட்டார்கள் போல என்கிற ஒருவித நிம்மதியும் இருக்கிறது.

தங்களது எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும்.

சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்.

மிகவும் நன்றி.