மதுரை மீனாட்சி கோவிலுக்குள் இருந்த உணர்வினை பெற்றார். இதுதான் அந்த புனித ஆலயம் என தேவியை சென்று வணங்கினார். மனமுருக வேண்டினார். உனது கருணையின்றி நான் இத்தனை தொலைவு வந்து இருக்கமாட்டேன் என அவர் நினைத்தபோதே கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. கற்பக கிரகத்திற்கு வெளியே ஒரு பக்கம் சிவலிங்கம் இருந்தது, மறுபக்கம் விஷ்ணு இருந்தார், ஒருவருக்கொருவர் நேருக்கு நேராய்ப் பார்த்து புன்னகைத்தபடி. இருபக்கமும் நின்று இருவரையும் ஒருசேர வணங்கலாம். வலது புறம் சிவன், இடது புறம் விஷ்ணு. என்னே பாக்கியம் இது! என புதையலை எடுக்க வேண்டும் எனும் நோக்கமே இல்லாமல் நின்றார். இதைவிட பெரிய புதையல் என்ன இருந்துவிடப் போகிறது?
கோவில் பிரகாரத்தை சிறு குழந்தை போல் சுற்றி வந்தார். சுற்றிக்கொண்டே இருந்தார். அந்த நபரும் கோவிந்தசாமியுடன் சேர்ந்து சுற்றினாலும் அந்த நபரின் மனதெல்லாம் சித்தர் போட்டு வைத்த தங்கப் புதையல் மேல்தான் சென்றது. பலமுறை சுற்றிய கோவிந்தசாமி உடலில் மனதில் இருந்த வலி எதுவுமே இல்லாத உணர்வைக் கொண்டார்.
''தொழுவேன் சிவனார் உனையேக் கண்ணா
இதயத்திலிருந்தாய் நீயே கண்ணா
வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய்''
எது வருவாய்? உலகமெல்லாம் ஓடோடி ஈட்டிக்கொள்வதா வருவாய்! அவனை உள்ளத்திலே ஈட்டிக்கொள்வதல்லவா வருவாய். கோவிந்தசாமியின் மனம் அளவில்லா பேரானந்தத்தில் திளைத்தது. ஒரு இடத்தில் மெளனமாக அமர்ந்துவிட்டார். கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. கனவில் கோவில் வெளி்ப்பிரகாரம் மட்டுமே தெரிந்தது. ஆனால் உள்ளே இருந்த அமைப்பும் அளவில்லா அமைதியும் கோவிந்தசாமியை கட்டிப்போட்டது. ஆடுகளும் கோழிகளும் மீன்களும் அவரை மனதில் துவம்சம் செய்தன. கர்மம் என சொல்லிக்கொண்டு தான் நடந்து கொண்ட முறையை நினைத்து கண்ணீர் விட்டார். மதுரை மீனாட்சி கோவிலில் வராத எண்ணம் இங்கு ஏன் வந்தது, இத்தனை காலம் இதற்குத்தான் என்னை வரவிடாமல் வைத்தாயோ என சிறு பிள்ளைபோல் கேவி கேவி அழுதார். பாபங்கள் கரைக்கப்பட்டு விடுகின்றன. அந்த நபர் கோவிந்தசாமியைத் தொட்டார். வேகமாக கண்களைத் துடைத்துவிட்டு கோவிலை விட்டு வெளியேறினார் கோவிந்தசாமி. எந்த இடம் புதையல் இருந்த இடம் என்றார் அந்த நபர்.
கோவிலுக்குச் சற்று வெளியே வந்து மணல்தரையைக் காட்டினார். இங்கேதான் என்றார் கோவிந்தசாமி. அந்த நபர் தோண்ட ஆரம்பித்தார். அதிக அளவு தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. கோவிந்தசாமியும் தோண்டிப் பார்த்தார். எதுவும் கிடைக்காதது கண்டு அந்த நபர் வேதனையுற்றார், ஆனால் கோவிந்தசாமி கோவிலின் கோபுரத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தார். தோண்டிய இடத்தை மூடினார்கள். இப்படியாக சில இடங்களில் தோண்டிப் பார்த்துவிட்டு ஏதும் இல்லாது கண்டு அந்த நபர் மிகவும் வருத்தமுற்றார். ஆனால் கோவிந்தசாமி அமைதியாகவே இருந்தார், எந்த ஒரு ஏமாற்றமும் அடைந்ததாக அவருக்குத் தோணவில்லை. மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். புதையல் கிடைக்கவில்லையே என சலித்துப் போனார் அந்த நபர். உங்களுக்கு ஒன்றும் தோணவில்லையா எனக் கேட்ட நபருக்கு உள்ளே புதையலைத் தேடிக்கொண்டேன் என்றார் கோவிந்தசாமி மிகவும் அமைதியாக ஆனந்தமாக.
சித்தரைச் சென்றுப் பார்த்தார்கள். புதையல் கிடைத்துவிட்டதா என்றார் சித்தர். இல்லை என்றார் நபர். நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என கோவிந்தசாமியைக் கேட்டார். கிடைத்துவிட்டது என்றார் கோவிந்தசாமி. சித்தர் சொன்னார், அருள் புதையல் கண்ட நீ, நிச்சயம் பொருள் புதையலைக் கண்டுபிடிப்பாய் என்றார் புன்னகைத்துக் கொண்டு. கோவிந்தசாமி மனம் இலேசாக இருந்தது.
''தேடிக்காணும் பொருளில்லை நீயே
தேடாமலே இருப்பாய் சிவனே
உணர்வை விழித்திட நீயும்
ஓரிடத்தில் அமர்ந்தாய் சிவனே''
இன்னும் தேடப்போகிறீர்களா என்றார் சித்தர். இல்லை என்றார் கோவிந்தசாமி. தேடப்போகிறோம் என்றார் அந்த நபர். இரண்டு நாட்களும் தேடினார்கள். புதையல் கிடைக்கவே இல்லை. அந்த நபருக்கு பயம் அதிகரித்தது. சித்தர் மாற்றும் தங்கம்தான் புதையலாக இருக்குமோ என. ஒருவேளை அதுவும் கிடைக்காது போனால் என அச்சம் கொண்டார். கோவிந்தசாமி எதையும் கணக்கில் கொள்ளவில்லை.
மூன்றாம் நாள் அந்த கட்டிடத்துக்குச் சென்றார்கள். சித்தர் கோவிந்தசாமியை புதைத்த இடத்தில் தோண்டச் சொன்னார். தங்கம் மின்னியது. சந்தோசத்தில் தாவி குதித்தார் அந்த நபர். கோவிந்தசாமி எந்த சலனமும் இல்லாமல் தங்கத்தை எடுத்து சித்தரிடம் தந்தார். சித்தர் அதனை அந்த நபரிடம் கொடுத்தார். எப்படி உலோகங்களான காரீயமும், பாதரசமும் தங்கமானது? அந்த பாத்திரமும் தங்கமாகவே மாறியதே என யோசித்தார் அந்த நபர். விளக்கம் கேட்டார். இதற்கு விளக்கத்தை பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இரசாயன தொழில்நுட்பம் படிக்கும் தனது மகனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்ற சித்தர் அவன் இனிவரும் காலத்தில் விஞ்ஞானி, நான் எப்பொழுதும் சாதாரண மனிதர் என சிரித்துக்கொண்டே கோவிந்தசாமியிடம் நீங்கள் இப்போது சித்தர் என்றார்.
கோவிந்தசாமிக்கு பணத்தைக் கொடுத்து நீங்கள் ஊருக்குச் செல்லுங்கள், நான் எப்படி உருவானது போன்ற வழிமுறைகளை கற்றுக்கொள்கிறேன் என்றார் அந்த நபர் ஆனந்தத்துடன். கோவிந்தசாமி காசி கோவிலைச் சுற்றிக்கொண்டே இருந்தார் பேரானந்தத்தில். ஊருக்குச் செல்ல வேண்டும் என காசியை விட்டுச் செல்ல மனமில்லாது நடந்தார். அப்பொழுது ஒரு குடிசையில் அழும் குரல் கேட்டது. என்னவெனப் பார்த்தார் கோவிந்தசாமி. கட்டிலில் கிடந்த வயதான ஒருவர் கோவிந்தசாமியை அருகில் அழைத்தார்.
எனக்கு சிறுவயதிலே கனவு ஒன்று வந்தது. மேலும் மேலும் வந்தது. தெற்குப்பக்கத்தில் கோடியலூர் என ஊரும் அங்கே சிவன் கோவிலும் இருந்தது. அந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணற்றுக்கு தெற்குப் பக்கத்தில் நான் தோண்டினேன். அளவில்லா தங்கம் எடுத்ததாக கனவு கண்டேன். ஆனால் இந்த கனவினை நம்பி ஏன் செல்ல வேண்டும் என இருந்துவிட்டேன். ஒரு முறை முயற்சி செய்து இருக்கலாமோ எனத் தோணியது, ஆனால் உடல்நிலை இப்போது சரியில்லாமல் போய்விட்டது எனச் சொன்ன அந்த வயதானவர் சொல்லிவிட்டு மரணமடைந்தார். கோவிந்தசாமிக்கு புதையல் இருக்கும் இடம் தனது தோட்டம் தான் என கண்டு கொண்டார்.
அந்த நபரிடமும் சித்தரிடமும் நடந்த விபரத்தைச் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினார் கோவிந்தசாமி. அந்த நபர் மகிழ்ச்சி அடைந்தார். சித்தர் நிச்சயம் நீ புதையலை கண்டுபிடிப்பாய் என்றார். அந்த நபர் சித்தரின் மகனிடம் விளக்கம் கேட்டார். சித்தரின் மகன் விளக்கம் சொல்ல ஆரம்பித்து இருந்தார்.