சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங்கள். பரிச்சயமில்லாதவர்கள். பழகுவது ஒன்றும் அவனுக்கு சிரமமாக இல்லை.
நாட்கள் நகர நகர நண்பன் என ஒருவனை சேர்த்துக் கொண்டான். அவனது பார்வை தன்னுடன் படிக்கும் ஒரு பெண் குழந்தையின் மீது பட்டது.
அழைத்தான் அந்த சின்னஞ்சிறு சிறுமியை. 'அம்மா, அப்பா விளையாட்டு விளையாடலாம் என்றான். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது.
உடன் அழைத்தான் நண்பனை. சிறுமியின் ஆடைகளை கலைத்துவிட்டு நிற்க சொன்னான். சிறுமியும் நின்றாள். இந்த நிகழ்வினை ஒரு ஆசிரியை கவனித்தார், அதிர்ச்சி அடைந்தார்.
என்ன செய்கிறாய்? என்றார் ஆசிரியை. சிறுவன் நிதானமாகவே சொன்னான். ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்.
இது தவறு. பிறரது உடல் உறுப்புகளை இப்படி ஆராய கூடாது. அது போல உனது உடல் உறுப்புகளை பிறருக்கு காட்ட கூடாது.
புரியாத வயது. புரிந்ததா என அறிந்து கொள்ள இயலாத வயது.
அந்த சிறுவனின் அன்னையிடம் விசயம் சொன்னபோது, அன்னை கோபம் உற்றார். இது நடவாத காரியம் என சாதித்தார்.
சில நாட்கள் அமைதியாகவே சென்றது. மீண்டும் ஒரு நாள்.
தனது நண்பனை அழைத்தான். ஆடைகளை களைய சொன்னான். ஆடைகள் களைந்து நின்றான் அந்த நண்பன். அந்த சின்ன சிறு நண்பன் சொன்ன வார்த்தைகள் திடீரென அங்கு வந்த ஆசிரியையை நிலைகுலைய வைத்தது. என்ன பேசுகிறாய் என்றார் ஆசிரியை.
இதோ இவன்தான் சொல்ல சொன்னான் என ஆடைகள் கலைந்த வண்ணமே நின்றான். அவ்வாறு சொல்ல சொன்ன அந்த சின்ன சிறுவன் மீண்டும் கண்டிக்கப்பட்டான். மீண்டும் அன்னையிடம் சொல்லப்பட்டது. அன்னை மறுத்தார். அறியாத வயது. புரியாத வயது.
நாட்கள் அமைதியாக சென்றது. மீண்டும் ஒரு நாள். போர்வை ஒன்றை எடுத்தான். அழைத்தான் உடன் படிக்கும் சிறுமியை. போர்வைக்குள் நுழைந்தார்கள். அப்போது இதை கண்ட ஆசிரியை போர்வையை விலக்கி என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.
சிறுமியும் சொன்னாள். எனக்கு முத்தம் கொடுத்தான் என. அதிர்ந்தார் ஆசிரியை. இது தவறு என்றார்.
அன்னையிடம் தகவல் தரப்பட்டது. எங்குமே இவன் இப்படி நடந்து கொள்வதில்லை. இங்கு மட்டும் எப்படி என நம்ப மறுத்தார்.
ஒரு விபரீதம் அந்த சிறுவனுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.
எங்கிருந்து கற்றான்?
தான் செய்வது தவறு என புரியாது. எங்கிருந்து பார்த்தான் இவை எல்லாம்!
எங்குமே இப்படி நடந்து கொள்ளாதவன்? பள்ளியில் மட்டும் அப்படி நடப்பானேன். எதற்கு குழந்தையின் மீதான பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள் அந்த பெற்றோர்கள்.
முளைத்து மூன்று இலை விடவில்லை என நமது ஊர் பக்கம் சொல்வார்கள். பிஞ்சிலே பழுத்துவிட்டது என பழமை பேசுவார்கள்.
யாரிடம் கற்றான்!
பெற்றோர்களா! தொலைக்காட்சி, கணினி போன்ற தொழில் நுட்பங்களா!
எதிர்கால சந்ததியினர்!!! குழந்தைகளை காம வயப்படுத்தி அவர்களது வாழ்க்கையையே பாழடிக்கும் வக்கிரம் நிறைந்த மனிதர்கள்.
(இது ஒரு உண்மை சம்பவம், குழந்தையின் வயதோ நான்கு)
கலிகாலம்டா சாமி, கிலி பிடித்து சொல்கிறார்கள்.