ஒரு புத்தகம் கொண்டு வந்து இதைப் படி என அம்மா கொடுத்துவிட்டு போனார். இந்த இரவு நேரத்தில் தூங்குவதை விட்டுவிட்டு எவரேனும் புத்தகம் படிப்பார்களா என்றே அந்த புத்தகம் பார்த்தேன். அந்த புத்தகத்திற்கு எந்த ஒரு பெயரும் இல்லை. எவரேனும் தலைப்பு இல்லாமல் ஒரு புத்தகம் எழுதுவார்களா? அந்த புத்தகத்தினை எழுதியவர் பெயர் கூட இல்லை. முன் அட்டை, பின் அட்டை வெறுமையாக இருந்தது. உள்ளே எடுத்த எடுப்பில் வைகுண்டத்தில் நாராயணன் வாசம் செய்கிறான் என்றே வரி ஆரம்பித்து இருந்தது. பதிப்பகம், விலை என இத்யாதிகளும் இல்லை. ஆயிரத்து எட்டு பக்கங்கள். தலைக்கு அடியில் வைத்து பார்த்தேன். மெத்தென்று இருந்தது.
''பக்தா, நல்ல தூக்கமோ''
இந்த வார்த்தைகளை நான் வெகு நாட்களாக கேட்டு இருக்கவில்லை. திடீரென எதற்கு சாமியார் வந்து இருக்கிறார் என்றே ஆச்சர்யத்துடன் அவரை வரவேற்றேன். அங்கிருந்த ஒரு நாற்காலி ஒன்றை அவருக்கு போட்டுவிட்டு கீழே நான் அமர்ந்து கொண்டேன்.
''என்ன விஷயமாக வந்து இருக்கிறீர்கள்''
''நான் வைகுண்டம் போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன், அதுதான் நீயும் வருகிறாயா என்று அழைத்து போகவே வந்தேன்''
''எங்கே, ஸ்ரீரங்கமா?''
''அது பூலோக வைகுண்டம், நான் உன்னை அழைப்பது நாராயணன் வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு பக்தா''
''என்ன உளறுகிறீர்கள், அந்த வைகுண்டம் எங்கே இருக்கிறது, அது ஒரு கற்பனையான உலகம்''
''பக்தா, இந்த உலகம் எப்படி தோன்றியது''
''பெரு வெடிப்பு கொள்கையின் படி ஒரு புள்ளியில் இருந்தே எல்லாம் தொடங்கின, அதற்கு முன்னர் எதுவும் இல்லை''
''எந்த பாட புத்தகத்தில் படித்தாய் பக்தா, கடவுள் இவ்வுலகை படைத்தார் என்றதும், கடவுளை யார் படைத்தார் என கேட்கும் நீயா, அந்த புள்ளிக்கு முன்னர் எதுவும் இல்லை என சொல்வது''
''நான் எப்போது கடவுளை யார் படைத்தார் என கேட்டேன், இந்த பிரபஞ்சத்தை படைக்கத் தெரிந்த கடவுளுக்கு தன்னை படைக்கத் தெரியாதா?''
''பக்தா, சரி மனம் மாறிவிட்டாய் போலிருக்கிறது, வா வைகுண்டம் போகலாம்''
''இல்லாத ஒரு இடத்திற்கு எல்லாம் என்னால் வர இயலாது, அதுவும் அது எங்கு இருக்கிறது என்பதே எவருக்கும் தெரியாது''
''பக்தா, வைகுண்டம் அழைக்கும் தொலைவில் உள்ளது என்பதுதான் கதை, ஆனால் உண்மையான வைகுண்டம் இந்த பிரபஞ்சத்தைத் தாண்டி உள்ளது''
''இது யுனிவர்ஸ்''
''அப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது மல்டிவர்ஸ்''
''மல்டிப்ளக்ஸ் மாதிரி பேசறீங்க, என்னால் உங்களுடன் வர இயலாது''
''நாராயணன் இந்த வைகுண்டத்தில் வாசம் செய்கிறார். அந்த வைகுண்டத்திற்கு ஆத்மாக்கள் செல்லும். உடலை இங்கே கிடத்திவிட்டு ஆத்மா அங்கே வாசம் செய்யும். அதற்கு நற்காரியங்கள் புரிந்து இருக்க வேண்டும். நீ நற்காரியங்கள் புரிந்து இருக்கிறாயா''
''எதற்கு இப்போது இப்படி என்னை தொந்தரவு செய்கிறீர்கள்''
''வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அந்த சொர்க்கவாசல் எனும் பிரபஞ்சத்தை தாண்டி செல்லும் கதவு திறக்கும், நான் தயார் ஆகிவிட்டேன், அதுதான் உன்னை உடன் அழைத்து செல்ல வந்தேன்''
''நான் வரவில்லை, நீங்கள் போய்விட்டு வாருங்கள்''
''அந்த வைகுண்டம் சென்றுவிட்டால் ஆத்மா திரும்பி வர இயலாது, அந்த நாராயணனுடன் ஐக்கியம் ஆகிவிடும். அப்படி செல்ல இயலாத ஆத்மாக்கள் இந்த பிரபஞ்சத்திற்குள் சிக்குண்டு மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கின்றன''
''எனக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத் தெரியாது''
''வானம் ஏறி வைகுண்டம் போக நான் வழி சொல்கிறேன்''
''வேண்டாம்''
''சரி பக்தா, இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவான இந்த உலகம் முடிவில் என்னவாகும்''
''அப்படியே உறைநிலை அடையும்''
''அதுதான் இல்லை, இந்த உலகம் மீண்டும் ஒரு புதிய தொடக்கம் தொடங்கும், இப்படித்தான் இவ்வுலகை படைக்க பிரம்மன், நாராயணன் அமர்ந்து இருக்கும் தாமரை மலரில் சென்று இடம் கேட்பார். ஒரு இயக்கம் முடிந்து, மறு இயக்கம் தொடரும்போது அழித்தலில் இருந்து கொண்டே ஆக்கம் செய்ய இயலாது என்பதை அறிந்த பிரம்மன், நாராயணனிடம் உதவி கோருகிறார். நாராயணன் தனது இருப்பிடம் வருமாறு வைகுண்டத்திற்கு பிரம்மனை வரவழைக்கிறார். பிரம்மன் இப்படித்தான் ஒவ்வொரு யுகம் படைக்கிறார். அதுபோலவே இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவாகும் இந்த பிரபஞ்சமும் இதே மாற்றங்களை கொண்டு அமையும்''
''இந்த பிரபஞ்சம் வைகுண்டத்தில் இருந்து உருவாக்கப்படுவதா, பெருவெடிப்பு கொள்கையா''
''வைகுண்டத்தில் இருந்து நடத்தப்படும் பெருவெடிப்பு கொள்கையும் அதைத் தொடர்ந்த விரிவாக்கமுமே பக்தா, இப்போது வருகிறாயா''
''இல்லை, அழைத்த தூரத்தில்தான் வைகுண்டம் இருக்கும் கதை எனக்குப் போதும்''
''பக்தா, அது ஒரு முட்டாள் அரசரை, ஒரு அறிவாளி மடக்கியது, ஆனால் நாராயணன் ஒளியை விட வேகமாக செல்லக்கூடியவர். இந்த பிரபஞ்சத்தில் அப்பாற்பட்டு இருக்கும் வைகுண்டத்தில் இருந்தே நமது தேவைகளை அவர் அறிய இயலும், அந்த தேவைகளை நிறைவேற்ற அவர் தேரில் வர வேண்டியது இல்லை. எனவே வைகுண்டம் அருகில் எல்லாம் இல்லை''
''ஒளியை விட வேகமாகவா''
''ஆம், இந்த பிரபஞ்சத்தில் பார்க்கும் ஒளி என்றோ வெளியிடப்பட்டது, அது நமக்கு வர பல்லாயிரம் வருடங்கள் ஆகும், ஆனால் நாராயணன் அப்படி அல்ல''
''அப்படிப்பட்ட வைகுண்டம் அடைய பல்லாயிரம் வருடங்கள் ஆகுமே''
''நமது உடலை கிடத்திவிட்டு ஆத்மா ஒளியை விட வேகமாக நாராயணன் நோக்கி செல்லும், சில வினாடிகளில் சென்று அடையும். வருகிறாயா''
''கிருஷ்ணர் தேர் மற்றும் உடலுடன் சென்றதாக தானே மகாபாரதம் குறிக்கிறது''
''கிருஷ்ணரின் உடல் இந்த பஞ்சபூதங்களால் ஆனது அல்ல. தேர் கூட இங்கிருக்கும் பொருளால் ஆனது அல்ல. இந்த பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் வைகுண்டத்தில் பஞ்ச பூதங்களே இல்லை. அங்கிருக்கும் நிலை வேறு, ஆமாம் கிருஷ்ணர் கதை சொன்னாயே, ராமர் கதை தெரியுமா''
''ராமர் என்ன செய்தார்''
''அப்படி கேள் பக்தா, ராமர், தனது மக்கள் அனைவருடன் வைகுண்டம் சென்றார், ஆனால் கிருஷ்ணர் தனது குலம் அழிந்து தான் மட்டுமே சென்றார்''
''அப்படியெனில் நீங்கள் மட்டுமே செல்லுங்கள், நான் வாழும் வரை பூலோக வைகுண்டம் சென்று வருகிறேன் அது போதும்''
எந்திருப்பா, படிக்க புத்தகம் கொடுத்தா தலைக்கு வைச்சா படுப்பே, சீக்கிரமா குளிச்சிட்டு வா கோவிலுக்கு போகலாம், இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி, ஏழு மணிக்கு சொர்க்கவாசல் திறந்திரும்.
சாமியார் சொன்ன சொர்க்கவாசல், வைகுண்டம் விட இந்த கோவில் சொர்க்கவாசல், வைகுண்ட ஏகாதசி எல்லாம் மிகவும் சுகம். எப்படியும் பிரசாதம் தருவார்கள். வேகமாக எழுந்து குளிக்க ஓடினேன்.