தலைப்பு தந்த அருணா எனும் இராதை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
1. அருந்தவப்புதல்வி
சின்னஞ்சிறு கிராமம். பெருமாள்பட்டி. வயல்வெளிகளும், மரங்களும், செடிகளும், கொடிகளும், ஆடுகளும், நாய்களும், பூச்சிகளும், பறவைகளும், கோழிகளும், மாடுகளும் அதோடு மனிதர்களும் செழிப்புடன் இருந்தார்கள்.
கிராமத்தில் மொத்தம் நாற்பது வீடுகள் மட்டுமே. வீட்டுக்கு ஐந்து நபர்கள் என கணக்கில் கொண்டால் கூட மொத்தம் இருநூறு நபர்களே தேர்வார்கள். அதில் பலர் வெளியூருக்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கியும் போனார்கள். கிராமத்து திருவிழா என தலைகாட்டிப் போவார்கள். கிராமத்திற்கு என்று பள்ளிக்கூடம் எல்லாம் கட்டப்பட்டு இருக்கவில்லை. பெருமாள்பட்டியில் இருந்து ஆறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்குத்தான் படிக்க எல்லாம் போக வேண்டும். செம்மண் சாலை மட்டுமே. கிராமத்திற்கு என ஒரே ஒரு கோவில், ஊருக்குப் பெயர் வாங்கித்தந்த பெருமாள் கோவில். அதே ஊரைச் சேர்ந்த பரந்தாமன்தான் அக்கோவிலின் அர்ச்சகர். கோவில் சுற்றி இருந்த நிலங்கள் எல்லாம் ஊருக்குப் பொதுவானது.
பதினைந்து வருடங்கள் முன்னர் அந்தக் கோவிலின் அர்ச்சகராக இருந்த பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுதாமன் பட்டர் வைகுண்ட பதவியை அடைந்த பிறகு கிராமத்தின் தலைவர் வசுதேவன் தேடி அலைந்து பரந்தாமனை திருத்தங்கலில் இருந்து அழைத்து வந்தார்.
பரந்தாமனுக்கு அப்போது பதினெட்டு வயதுதான். கோவில் அருகே ஒரு வீடு ஒன்றை கோவில் நிலத்தில் பரந்தாமனுக்கு கட்டித்தந்தார் வசுதேவன். பரந்தாமனுக்கு இருபத்தி ஒரு வயது ஆனபோது வசுதேவனே மறுபடியும் தேடி அலைந்து கல்லுப்பட்டியில் இருந்து பூங்கோதையை சம்மதிக்க வைத்து தானே முன் நின்று பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் திருமணம் பண்ணி வைத்தார். பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.
அன்று காலையும் எப்போதும் போல சூரியன் உதித்து இருந்தது. எல்லா வீட்டின் வாசல்களில் கூட்டிப் பெருக்கப்பட்டு, நீர் தெளிக்கப்பட்டு கோலம் போடப்பட்டு இருந்தன. பரந்தாமன் எப்போதும் போல கோவிலுக்கு கிளம்பினான். பூங்கோதை பட்டு ஆடை உடுத்தி பரந்தாமன் கண்ணே பட்டுவிடுவது போல பேரழகியாகத் தெரிந்தாள்.
''இன்னைக்கு நம்ம பன்னிரண்டாவது வருச திருமண தினம், பெருமாள் நமக்கு கருணையே காட்ட மாட்டாரா''
''நமக்கு குழந்தை இல்லைனு ஆகிப்போச்சு, எதுக்கு வீணா கவலைப்பட்டுக்கிட்டு, ஊருல இருக்க குழந்தைக்கு சேவகம் பண்ணினாள் போதும்''
''நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்ல''
''நீயும் தான் அஞ்சாறு வருசமா சொல்லிட்டு இருக்க, அதெல்லாம் நடக்கிற காரியமா''
''நாம சரியா தேடலை, வசுதேவன் ஐயா கிட்ட சொன்னா தேடிக் கொண்டு வந்து இருப்பாருல''
''அன்னைக்குச் சொன்னதுதான் இன்னைக்கும் அவருகிட்ட நாம எதுவும் கேட்க வேணாம்''
''பெரியாழ்வாருக்கு கிடைச்ச கோதை போல நமக்கு ஒரு பொண்ணு கோவில் நிலத்தில் கிடைக்காதா''
''இப்படி வெட்டியா கனவு காணாம கிளம்பி வா, கோவில் நடை திறக்க நேரம் ஆகிருச்சு''
''நாளு வேற தள்ளிப் போயிருக்கு, நமக்கு ஒரு பிள்ளை பிறக்கும்''
''இப்படி அப்போ அப்போ சொல்லி சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்கிற''
பரந்தாமன் பூங்கோதையின் தலையினைத் தடவியபடி தனது மார்பில் சாய்த்துக் கொண்டான். பல வருடங்கள் பூக்காத, காய்க்காத மரம் சட்டென பூத்து குலுங்குவது எத்தனை மகிழ்ச்சியை அந்த மரத்திற்குத் தருமோ தெரியாது ஆனால் அந்த மரத்தை பல வருடங்களாக வளர்த்து வந்தவருக்கு பெரும் மகிழ்வைத் தருவதாகும்.
கோவில் நடையைத் திறந்தான் பரந்தாமன். புறாக்கள் பறந்தன. கோவில் வளாகத்தை கூட்டிப் பெருக்கினாள் பூங்கோதை. கோவிலுக்குள் இருந்த கிணற்றில் நீர் இறைத்து தெளித்தான் பரந்தாமன். கர்ப்பகிரகத்தை திறந்து சிறு விளக்கேற்றி வைத்தான். பெருமாள் அருகில் சிறு குழந்தை போல தாயார் அமர்ந்து இருக்கும் கோலம். வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக்கூடம் செல்பவர்கள் என இக்கோவிலுக்கு வந்து வணங்கியே செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கென நாலாயிர திவ்விய பிரபந்தம்தனில் சில பாடல்கள் பாடி தீபம் ஆராதனை காட்டுவது வழக்கம்.
வெளியூரில் இருந்து சில வேண்டுதல்கள் என வந்து போவோர்கள் உண்டு. பரந்தாமன் புரியும் சேவை எல்லோரையும் மிகவும் கவர்ந்த ஒன்று. இருவருமே பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தும் இருந்தார்கள். கோவில் சேவை தவிர்த்து கோவில் நிலத்தில் பணிபுரியும் வழக்கம் கொண்டு இருந்தார்கள். அந்த நிலத்தில் இருந்து வரும் பொருட்கள் யாவும் கிராமத்து மக்களுக்கு என பகிர்ந்து தரப்பட்டு இருந்தது. இதை எல்லாம் முறையாக வசுதேவனே பல வருடங்களாக கண்காணித்து வந்தார். பரந்தாமன் வந்த பிறகு அந்த முழு பொறுப்பையும் பரந்தாமனிடம் தந்தார். பரந்தாமனின் நேர்மை வசுதேவனுக்கு பெரும் நிம்மதியைத் தந்து கொண்டு இருந்தது.
கிராமத்தில் இருந்து சிலர் இந்த நிலத்தில் வந்து வேலை செய்து விட்டுப் போவார்கள். குழந்தைக்கென என்ன என்னவோ கிராமத்துப் பெண்கள் பல யோசனைகளை தந்து போனார்கள். அதெல்லாம் சில வருடங்கள் மட்டுமே, அதற்குப்பிறகு அந்த பெருமாள் மனசு வைச்சாதான் உண்டு என எவரும் குழந்தை பற்றி பேசுவது இல்லை.
அன்று மதியம் உச்சிகால பூசை முடித்துவிட்டு கோவில் கர்ப்பகிரகத்தின் முன் இருந்த பெரும் வெளியில் பரந்தாமன் அமர்ந்து இருந்தான். தக்காளி, கத்தரிக்காய் என பறித்து வந்து சிறு மூட்டைகளை அங்கே வைத்துவிட்டு பரந்தாமனை பற்றியபடி மயங்கி விழுந்தாள் பூங்கோதை.
''பூங்கோதை, பூங்கோதை'' பதறினான் பரந்தாமன்.
அங்கே இருந்த தண்ணீர் எடுத்து அவளது முகத்தில் தெளித்தான். சிறிது நேரத்தில் விழித்தவளுக்கு குடிக்கத் தண்ணீர் தந்தான்.
''தலை சுத்தி வந்துருச்சி, வெயிலு இன்னைக்கு அதிகம்'' என மெல்லிய குரலில் சொன்னாள் பூங்கோதை.
''பேசாம உட்காரு, சாயந்திரம் வெயிலு சாஞ்சப்பறம் வேலை செய்யலாம்ல, எல்லாரும் பதினோரு மணிக்கு வீட்டுக்கு போயிருறாங்க நீ மட்டும் ஏன் இப்படி இருக்க''
தன் வயிறு பிடித்தவள் ''என்னமோ மாதிரி வருது'' என எழுந்து கோவில் நடையைத் தாண்டி நடந்தாள். பரந்தாமன் அவளை கைத்தாங்கலாக பற்றியபடி இருந்தான். வாந்தி எடுத்தாள். வாய் முகம் கழுவிட உதவினான் பரந்தாமன்.
''பித்தமா இருக்கும்'' என்றான் பரந்தாமன்.
''பிள்ளையா இருக்குமோ'' என கண்களில் நீர் மல்க பரந்தாமனிடம் கேட்டாள் பூங்கோதை.
எங்கிருந்தோ வந்த ஒரு பறவை கோவிலில் இருந்த மணியினை அசைத்துவிட்டுச் சென்றது. கோவில் மணியின் ஓசை எப்போதுமே பேரின்பம் தரவல்லது.
(தொடரும்)
No comments:
Post a Comment