Friday, 20 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 7

7. இடப்பெயர்ச்சி

உயிரினங்கள் பொதுவாக கால சூழலுக்கு ஏற்ப இடம் பெயர்கின்றன. இந்த இடத்திற்குச் சென்றால் தான் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஒரு உயிரினத்திற்கு எப்படி முன் அறிவு உண்டானது என்பதை எவரும் முழுவதுமாக கண்டுபிடித்தது இல்லை. பறவைகள் இந்த இடம் பெயர்ச்சியில் முன்மாதிரியாக இருக்கின்றன. வியப்பான விசயம் என்னவெனில் இந்த பட்டாம்பூச்சிகளில் சில இடம் பெயரவும் செய்கின்றன.

வெப்ப சூழல் விரும்பும் பட்டாம்பூச்சிகள் குளிர்காலம் தொடங்குகிறது என அறிந்த மறுகணம் வெப்ப சூழல் நோக்கி பயணிக்கின்றன.  காலசூழல் மாறியதும் பறவைகள் மீண்டும் தாங்கள் பறந்து வந்த இடத்துக்கே திரும்பிச் செல்லும் அளவுக்கு வாழ்வு காலமும் நினைவுத்திறனும் கொண்டு இருக்கின்றன. ஆனால் பட்டாம்பூச்சிகள் ஓரிடத்தில் இருந்து கிளம்பிப் போனதும் மீண்டும் அதே இடத்திற்கு அவை திரும்ப முடிவது இல்லை, ஆனால் அதனுடைய சந்ததிகள் அதே கால சூழலுக்கு தனது முன்னோர் கிளம்பி வந்த இடத்திற்கே சென்று விடுகின்றன. அதன் பின் அதே சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களைப் பொருத்தவரை திரவியம் தேடுவதற்கென இடப்பெயர்ச்சி அல்லது புலம் பெயர்தல் எனும் நிலை இருந்தது. அதன்பிறகு மனிதர்களில் இனம், மொழி, நிறம், மதம் போன்ற வேற்றுமை உணர்வுகள் தலைதூக்கிய பிறகு தங்களது வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்தார்கள். பெரும்பாலும் திரவியம் தேடிய பிறகு மீண்டும் கூடு வந்து அடையும் பறவைகள் போல திரும்பவே செய்தார்கள். அதில் பலர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அங்கே தமது குடும்பம், சந்ததி என இருக்கவும் செய்தார்கள்.

யசோதை இனி தனது சந்ததி எல்லாம் பெருமாள்பட்டி என்ற ஊரை மறக்க நிறைய வாய்ப்பு உண்டு. வசுதேவனின் சித்தப்பா ஸ்ரீரங்கம் சென்று வாழ்ந்து கொண்டு இருப்பதை போன்று இதுவும் நடக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

''நம்ம ஊரில் இருந்து பறந்து வந்த வண்ணத்துப் பூச்சியா அத்தை''

''தெரியலை யசோ, என்னை பின் தொடர்ந்து வந்து இருக்கும்னு நினைக்கிறப்போ உடம்பு எல்லாம் சிலிர்க்குது''

''என் மேல உட்காந்துட்டு போச்சே அத்தை, ஒருவேளை நானும் பிள்ளைத்தாச்சி ஆயிருவேனா''

யசோதை சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள்.

''ஜோக் சொல்றியா யசோ, அப்படி எல்லாம் ஆகமாட்ட, அப்படி ஆனா நானும் ஒரு பட்டாம்பூச்சியை என் மேல உட்காரச் சொல்லிட்டு போறேன்'' நாச்சியார் சிரித்தபடி சொன்னார்.

''உங்களுக்கு 'வண்ணத்துப்பூச்சி விளைவு' தெரியுமா அத்தை''

''எது, பட்டாம்பூச்சி சிறகுதனை ஏதோ ஒரு ஊருல அசைச்சா இன்னொரு ஊருல பெரும் புயல் வரும்னு சொன்னதா''

''ஆமாங்க அத்தை, ஒரு சிறு விசயம் அல்லது அதிர்வு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணும் அளவுக்கு அதற்கு சக்தி உண்டு, ஒரு சிறு பொறி மொத்த காட்டையும் எரிக்கும் தன்மை கொண்டது மாதிரி, இப்போ நம்ம மரபணுவில் ஒரு சிறு அதிர்வு உண்டாக்கி நம்ம உடம்புல அத்தனை மாற்றத்தையும் உண்டாக்கிரலாம்''

''யசோ நீ மரபணு மாற்றம் பத்தி எல்லாம் சொல்ற, இந்த உலக பரிணாமம் எல்லாம் அத்தனை எளிதா சொல்லிர முடியாது, செய்துரவும் முடியாதுனு நினைக்கிறேன்''

''மறுபிறப்பு தத்துவம் எல்லாம் நீங்க கொண்ட நம்பிக்கைதானே அத்தை, மரபணு கடத்தல் மறுபிறப்பு தத்துவம் போல தான், ஆனால் மறுபிறப்பு இல்லை''

யசோதையின் அறிவுதனை எப்போதுமே வியப்போடு பார்ப்பதுதான் நாச்சியாரின் வழக்கம். நாச்சியாருக்கு யசோதை ஒரு ஆண்டாள் போலவோ அல்லது மீரா போலவோ பெருமாள் மீது பயபக்தியோடு இருக்க வேண்டும் எனும் பேராசை இருந்தது உண்டு. மனிதர்களின் மூளை பொதுவாக தாங்கள் எவரிடம் எதைக் கற்றுக் கொள்கிறோமோ அதை அப்படியே மென்மேலும் கற்றுத் தெளிவு பெறும். அப்படித்தான் யசோதை தன்னிடம் பயின்றதால் வருவாள் என நாச்சியார் எண்ணிக்கொண்டு இருந்தார். ஆனால் யசோதை முற்றிலும் வேறுபட்ட மனநிலையுடன் வளரத் தொடங்கினாள்.

நாச்சியார் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாகச் சொல்லி இந்த பட்டாம்பூச்சி குறித்து யோசித்தபடி இருந்தார். யசோதை சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

சுந்தரவேலன் பள்ளியில் ஒருமுறை சொன்னது அவளது மனதில் தற்போது நிழல் ஆடியது.

'உன்னைப் பார்க்கறப்ப எல்லாம் வண்ணத்துப்பூச்சி வயித்துக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கு யசோதை, உனக்கு அப்படி ஏதேனும் இருக்கா'

'எனக்கு பசிக்காக கடமுடானு வயிறு புரட்டும் சத்தம் மட்டுமே மெல்லிசா கேட்குது'

'உனக்கு எப்பவுமே விளையாட்டுதான் யசோதை'

அதன் பிறகுதான் பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறப்பது குறித்து யோசிக்கத் தொடங்கி வயிறுக்கும் இந்த பட்டாம்பூச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிந்தாள்.

அழகாக இருக்கிறதே என்பதற்காக எதையும் உங்களுடையது என ஆக்கி இறுக்கிக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். பட்டாம்பூச்சியினை பிடித்து கைகளில் இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டால் அது எப்படி விரைவில் உயிரற்றுப் போகுமோ அப்படித்தான் எதையும் இறுக்கமாகப் பிடித்து வைக்க அவை அதன் நிலையிலேயே இல்லாமல் போகும்.

''யசோதை''

சுந்தரவேலன் மூடப்பட்டு இருந்த ஒரு கதவினைத் தட்டினான்.

யசோதைக்கு இப்போது பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறக்கத் தொடங்கி இருந்தன.

(தொடரும்)

No comments: