Sunday, 29 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 13

13 மன்னுபுகழ் பட்டாம்பூச்சி

பெருமாள்பட்டிக்குள் சென்றாள் பாமா. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஊர். கோழிகள் சேவல்கள் தரையைக் கொத்திக் கொண்டு இருந்தன. நாய்கள் ஒவ்வொரு வீதியிலும் நிழல் பார்த்து படுத்து இருந்தன. எவரேனும் அதன் வழி கடந்தால் தலையைத் தூக்கிப் பார்ப்பதோடு சரி. ஆடுகள், மாடுகள் சில வீடுகளோடு ஒட்டி கட்டப்பட்டு இருந்த தொழுவங்களில் படுத்தவாறு அசைபோட்டு கொண்டு இருந்தன. உழவுக்கு என மாடுகள்தான் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. வீதிகளில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கல்லினால் மூடப்பட்டு சுகாதாரம் மிக்க இடமாகவே வீதிகள் காட்சி அளித்தன.

கிணற்றில் நீர் இறைத்துச் சென்றவர்களின் உரையாடல் வெள்ளேந்தி மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தது. தேநீர்க்கடையோ, உணவுக்கடையோ இல்லாமல்தான் அங்கே இருந்தது. ஊருக்கென்று ஒரு மந்தை, அந்த மந்தையை ஒட்டிய ஒரு பலசரக்கு கடை. விவசாயத்தில் விளைந்து வரும் எந்த ஒரு பொருளையும் இங்கே வந்து தந்துவிட்டால் போதும், விருதுநகருக்கோ, கல்லுப்பட்டிக்கோ மொத்த வியாபாரத்திற்கு கடையின் சொந்தக்காரர் மாறன் விற்று பணம் தந்து விடுவார். தனக்கென ஒரு சதவிகிதம் பணத்தை இலாபத்தில் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம்.

வியாபாரம் என்றாலே நேர்மையற்ற தொழில் என்பதைவிட இந்த உலகில் பிறந்த உயிரினங்கள் தாம் உயிர் பிழைக்க வேண்டி என்னவெல்லாம் செய்யுமோ அதுபோல வியாபாரம் செழித்தோங்க பல்வேறு வழிகளை கடைபிடிப்பது உண்டு, ஆனால் மாறன் அப்படி எல்லாம் செய்வது இல்லை. ஊருக்குள் இருப்பவர்களுக்கு தேவையானப் பொருள்களை தனது கடையில் வாங்கி வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.

மந்தையை வந்து அடைந்தாள் பாமா. அப்போதுதான் தான் எதுவுமே வாங்கி வராமல் வந்து இருப்பது அவளுக்கு உரைத்தது. குண்டத்தூரில் ஏதாவது வாங்கி இருந்து இருக்கலாம் அப்போதும் அதை மறந்து இருந்தாள். மாறனிடம் சென்று சேவு, சீரணி என வாங்கினாள்.

''ஊருக்குப் புதுசா இருக்கம்மா, யாரைப் பார்க்கனும்''

தானே வீடு விபரம் கேட்கும் முன்னர் மாறன் கேட்டது பாமாவுக்கு எளிதாகப் போனது.

''நாச்சியார் அம்மா''

''இப்படியே நேராப் போய் வடக்கத் திரும்பினா அந்த வீதியோட கடைசி வீடு, பெரிய வீடு, இரண்டு திண்ணைக வைச்சது இருக்கும், வீட்டுலதான் இருப்பாக''

நன்றி சொல்லிவிட்டு நடந்தாள். மந்தைக்கு அந்தப்பகுதியில் எப்படி வீதிகள் இருந்தனவோ அதேபோலவே இந்தப்பகுதியிலும் மிகவும் அகலமான வீதிகள். நாச்சியார் வீட்டை அடைந்தாள் பாமா. வீட்டின் கதவுகள் திறந்தே இருந்தன. எந்த ஒரு ஊரில் வீட்டின் கதவுகள் திறந்து போடப்பட்ட போதும் திருடுப் போகாதோ அந்த ஒரு ஊரில் உள்ள மனிதர்கள் நேர்மையும், சத்தியமும் நிறைந்தவர்களாவே இருப்பார்கள்.

பாமாவைக் கண்டதும் வியப்பு அடைந்தார் நாச்சியார்.

''என்னைப் பார்க்க வந்ததா அம்மா சொன்னாங்க, அதான் உங்களைப் பாத்துட்டுப் போகனும்னு மனசுக்குப் பட்டுச்சு, கிளம்பி வந்துட்டேன், உங்க ஊர்ல வாங்கின பலகாரம்'' எனச் சொல்லியவாறு நாச்சியார் கைகளில் தந்தார். பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார் நாச்சியார்.

''பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வரியாம்மா, உட்காரும்மா''

தான் பெருமாள் கோவில் சென்று வந்தது இவருக்கு அதற்குள் எவர் தகவல் தந்து இருப்பார்கள் என யோசித்தாள் பாமா.

''நான் உன்னைப் பார்க்க வந்ததே நீ படிப்பை முடிச்சிட்டு எங்க ஊருல வந்து விவசாயம் சம்பந்தமா வேலை செய்யச் சொல்லி கேட்கனும்னுதான்'' நாச்சியார் சொன்ன மறுகணம் பாமா எவ்வித மறுப்பு சொல்லாமல் சரி என சம்மதம் சொன்னாள்.

''இந்த ஊர் பெருமாள் எனக்கு ரொம்பப் பிடிச்சி இருக்கு''

''எல்லா ஊர்லயும் ஒரே பெருமாள்தானே பாமா''

''இல்ல இந்தக் கோவில் அமைப்பு எல்லாம் மனசுக்கு இதமா இருக்கு''

''கோவிலுக்கு வரவங்க இதைச் சொல்லாமப் போனது இல்ல''

புன்னகை புரிந்தாள் பாமா. தண்ணீர் கொண்டு வந்து தந்தார் நாச்சியார்.

''நான் கேட்டதும் மறுப்பு சொல்லாம சம்மதம் சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, கொஞ்ச நேரம் இருந்தா சமையல் முடிச்சிருவேன், அண்ணாவும், அண்ணியும் விருதுநகர் வரை ஒரு கல்யாணத்துக்குப் போய் இருக்காங்க, வர எப்படியும் சாயந்திரம் ஆகிரும்''

''பசி எல்லாம் இல்லைம்மா''

''ஒரு வாய் சாப்பிடனும், அங்க வந்து நில்லு பாமா, இல்லைன்னா கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு''

சமையல் அறைக்குள் சென்று மீதம் இருந்த வேலைகளை பார்க்கச் சென்றார் நாச்சியார். பாமா வீட்டினை கண்களால் அளந்தார். வீடு தேக்கு மரங்களால் தாங்கப்பட்டு கொண்டு இருந்தது. சுவரில் பெருமாள் தாயார் படம் தவிர வேறு எந்த ஒரு படங்களும் தென்படவில்லை.

சமையல் முடித்து இருவரும் சாப்பிட்டுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்கள். செல்லும் வழியில் வீடுகளில் இருந்த சிலர் இது யாரு என பாமாவை கேட்க எல்லோரிடமும் என் மக என பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டார் நாச்சியார். அதில் ஒரு வயதான மூதாட்டி கல்யாணம் பண்ணாம பிள்ளை பெத்தாளாம் பொன் நிறமா என கேலி பண்ணிச் சிரித்தவர் அன்னைக்கே என் பையன கட்டி இருந்தா இன்னைக்கு இப்படியான பிள்ளைக நாலஞ்சு பெத்து போட்டு இருப்ப என்றார்.

''அம்மா'' நாச்சியார் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பாமா.

''எனக்கு அந்த பெருமாளே போதும் அத்தை'' நாச்சியார் புன்முறுவலோடு சொன்ன பதில் பாமாவுக்கு அதிசயமாக இருந்தது. பூங்கோதையின் வீட்டை அடைந்தார்கள். பூங்கோதை இவர்களைப் பார்த்து எழுந்து வந்தாள்.

''பாமா, நம்ம ஊர்ல விவசாயம் சம்பந்தமா வேலைப் பார்க்க இன்னும் மூனு வாரத்தில வரப்போறா''

நிறைய பட்டாம்பூச்சிகள் பாமாவைச் சுற்றி வட்டம் அடித்தன. அதில் ஒரு பட்டாம்பூச்சி அவளது இடது தோளில் அமர்ந்தது.

''அம்மா, என் தோள் மேல உட்கார்ந்தது போல இவங்க தோள் மேல உட்காருதும்மா'' என பெருமகிழ்வோடு சொன்னாள் பூங்கோதை.

துளசி இலைகளில் பல ஓட்டைகளோடு காணப்பட்டதை கண்டாள் பாமா.

ஒரு தாவரம் தன்னில் உள்ள எல்லாப் பாகங்களையும் பிற உயிரினங்களின் உணவாக மாற்றிக் கொள்கிறது. துளசிச் செடிகளின் அருகில் சென்ற பாமா தன் அழகிய கண்கள் மிளிர கம்பளிப் பூச்சி போன்று ஊர்வதைக் கண்டு பெரு மகிழ்வு கொண்டாள். அப்படியே பூங்கோதையின் கர்ப்பம் தரித்த வயிறு கண்டாள்.

''மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே'' என பாமா பாட சிலுசிலுவென தென்றல் வீசியது. நாச்சியார் பாமாவின் குரல் கேட்டு அகம் மகிழ்ந்தார். குழந்தை தன் வயிறுதனை முட்டுவதை முதன் முதலாக உணர்ந்தாள் பூங்கோதை.

(தொடரும்)


பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 12

12. கண்ணி நுண் சிறுத்தாம்பு

பாமா சனிக்கிழமை காலையிலேயே பெருமாள்பட்டி நோக்கி பயணம் ஆனாள். மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை அபாயகரமானது என இந்த உலகம் நிறைய அவநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டே இருந்தாலும் மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை பொய்க்காது எனச் சொல்லவும் சில மனிதர்கள் எடுத்துக்காட்டாக இருந்து கொள்கின்றனர். செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் பாமா.

இந்த பயணம் தனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பாமா நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. நாச்சியார் தன்மீது கொண்ட பிரியம் ஒன்றே அவளது இந்த திடீர் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. இதற்கு முன்னர் குற்றாலம் சென்று இருக்கிறாள் மற்றபடி இந்த பெருமாள்பட்டி எல்லாம் அவள் கேள்விப்படாத ஊர். பேருந்தின் வேகத்தை அவளது பறக்கும் தலைமுடி காட்டிக்கொண்டு இருந்தது, அதோடு கூடிய சிறு தூறல்.

திருமங்கலம் தாண்டியதும் மனதில் நாச்சியாரிடம் என்ன சொல்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கி இருந்தாள். செங்கோட்டை செல்லும் வழியில் திரும்பிய பேருந்து குண்டத்தூர் வந்ததும் இறங்கிக் கொண்டாள். அங்கே இருந்து பெருமாள்பட்டிக்கு நடக்கத்  தொடங்கினாள்.

முன்பின் அறியாத ஊர், அறியாத மக்கள் வழி கேட்டதும் சரியாகத் திசையை காண்பித்தார்கள். சிறு தூறல் விழுந்து கொண்டே இருந்தது. சட்டென யோசனை செய்து உடனே செய்யும் மனிதர்கள் ஒருவகை. யோசித்துக் கொண்டே எந்த ஒரு முடிவும் எடுக்காமல் காலம் கடத்தும் மனிதர்கள் மற்றொரு வகை.

பெருமாள்பட்டி என காட்டிய வழிகாட்டி அவள் சரியான பாதைக்குச் செல்ல வழிவகுத்தது. அவள் செல்லும் வழியில் தோட்டத்தில் வேலை பார்க்கும் மனிதர்கள் தென்பட்டார்கள். வழியில் கண்ட ஒருவயதான பெண்மணி பாமாவை வழி மறித்து விசாரணை செய்தார்.

''யாரு நீ, யாரைப் பார்க்கப் போற, ஊருக்குப் புதுசா இருக்க''

எவர் எனத் தெரியாத ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதா என யோசிக்காமல் பாமா தெளிவாகவே சொன்னாள்.

''பெருமாள்பட்டியில நாச்சியார் அம்மாவை பார்க்கப் போயிட்டு இருக்கேன், என் பேரு பாமா, ஊர் மதுரை, அவங்க மதுரைக்கு வந்தப்ப பார்த்தேன்''

''சொந்தமா''

''இல்லை''

''சரி சரி போய்ப் பாரு, நானும் அந்த ஊருதான், ஆனா இன்னைக்கு வர நான் ஸ்ரீரங்கம் போயிட்டு அடுத்த வருசம் இதே நாளில வருவேன், கொஞ்ச நேரத்தில வந்து பெருமாளைக் கும்பிட்டுட்டு கிளம்பிருவேன்'' எனக் கூறிக்கொண்டே நிற்காமல் நடந்து போனார்.

ஆச்சரியமாக அவர் போகும் பாதையைப் பார்த்தவள் சிறிது தூரம் நடந்ததும் பெருமாள் கோவிலின் கோபுரம் தென்பட்டது. நேராக பெருமாள் கோவிலுக்குச் சென்றாள். அவளுக்குள் ஒருவித இனம் புரியாத உணர்வு ஊறிக்கொண்டு இருந்தது. தான் நெற்றியில் வைத்து இருந்த ஒரு கோடு போன்ற நீண்ட சிவப்பு பொட்டும் அதன் கீழ் வைத்து இருந்த பிறை வடிவ வெள்ளைப் பொட்டும்  என அவள் பெருமாள் மீது கொண்டு இருந்த பிரியம் வெளிப்பட்டுத் தெரிந்தது.

கருவறை முன் நின்று தாயாரோடு இருந்த பெருமாளை பார்த்த வண்ணம் நின்றாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் நிறைந்தது. பல்லாண்டு பல்லாண்டு பாடியபடியே பரந்தாமன் தீபாராதனை காட்டினான். அந்தப் பாடலே பாமாவுக்குள் இக்கண்ணீர் வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. துளசி நீர் கொடுத்தான் பரந்தாமன். எவரேனும் புதிதாக வந்தால் யார் எவர் என விசாரிப்பது பரந்தாமன் வழக்கம். பாமாவிடமும் அப்படியே விசாரித்தான்.

''எந்த ஊர்ல இருந்து வரீங்க, உங்களை இதுக்கு முன்னம் பார்த்தது இல்லையே''

''மதுரை''

துளசிச் செடியின் இலைகள் என சில பாமாவுக்குத் தந்தான்.

''இந்தக் கோவில் மனசுக்கு நிறையப் பிடிச்சி இருக்கு, ஆளுக வரமாட்டாங்களா''

''வரப்போ வருவாங்க''

கோவிலைச் சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் பாமா.

அவள் வழியில் கண்ட வயதான பெண்மணி கோவிலுக்குள் வந்தவர் பாமா அமர்ந்து இருப்பதைக் கண்டு நேரடியாக அவளிடம் வந்தார்.

''நாச்சியாரைப் பார்க்க வந்தேனு சொன்ன, இந்த நாச்சியாரைத்தான் பார்க்க வந்தியா, '' எனச் சொல்லிக்கொண்டே பாமாவின் அருகில் அமர்ந்தார்.

''இல்லை, கோவில் தெரிஞ்சது அதான் சேவிச்சிட்டுப் பிறகு போய் அவங்களைப் பார்க்கலாம்னு நினைச்சேன்''

''உன்கிட்ட ஒன்னு கேட்கனும், கேட்கட்டுமா''

''ம்ம் கேளுங்க''

''செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும், சொல்லு'' என்றார்.

பாமா ஒரு கணம் சிலிர்த்துப் போனாள். இது மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் கேட்டது. இதை ஏன் தன்னிடம் இவர் கேட்கிறார் எனத் திகைத்தாள்.

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்ற பாமாவின் குரல் எத்தனை இனிமை மிக்கது என வாக்கியங்களில் விவரிக்க இயலாது.

''ஆழ்வார் பத்தி தெரிஞ்சி வைச்சி இருக்க, பெருமாள்ன்னா அத்தனை விருப்பமோ''

''ம்ம் நிறைய''

''உனக்குப் பிடிச்ச ஆழ்வார் பாசுரம் சொல்லு''

''நிறைய இருக்கு, எதைச் சொல்றதுனு தெரியலைங்க''

''ஏதாவது ஒன்னு''

''கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே''

''நம்மாழ்வார் உனக்கு நிறையப் பிடிக்கும் போல'' என்றவர் எழுந்து போனார். பாமாவின் இடது தோளின் மீது ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.

(தொடரும்)

Friday, 27 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 11

11. உயிர்களின் பேரன்பு

நாச்சியார், யசோதையிடம் பெரியவர்கள் பேசி முடிக்கும்வரை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார். பொதுவாகவே பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கும் அளவிற்கு இப்போதைய இளம் வயதுக்காரர்களுக்கு பொறுமை இல்லை, ஆனால் அறிவு நிறைய இருக்கிறதாகவே எண்ணிக் கொள்கின்றனர்.

''கவலைப்படாதீங்க அத்தை, அதெல்லாம் கவனமா இருப்பேன்''

யசோதையின் உறுதியாகத்தான் தென்பட்டாள். நாச்சியார் மீது அவளுக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது. உறவுகளை உடைத்து தனக்கென ஒரு வாழ்வு வாழ்வது என்பது இப்போதெல்லாம் எளிதாக நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.

''யசோ, பாமாவை ஒரு எட்டுப் பார்த்துட்டுச் சொல்லிட்டுப் போகலாம்னு இருக்கு, நீ என்கூட வர முடியுமா''

''அவ வீட்டில இருக்காளோ என்னவோ, என்னங்க அத்தை, பாமா மேல இத்தனை கரிசனம்''

''பேசின அந்த கொஞ்ச நேரத்தில மனசுக்கு நெருக்கமா உணர வைச்சிட்டா, விவசாயப் படிப்புதான் படிக்கிறா அவளுக்கு நம்ம ஊரு பிடிச்சி நம்ம ஊரிலேயே இருந்துட்டா விவசாயம் சம்பந்தமா நிறைய பண்ணலாம் அவ மனசுல என்ன இருக்கோ''

''அதை நீங்க கேட்கலையா அத்தை''

''உடனே எப்படி கேட்க முடியும், பட்டாம்பூச்சி பத்தி பேசவே சரியாப் போச்சு, அப்புறம் யோசிச்சிப் பார்க்கிறப்ப இப்படியெல்லாம் தோனுது''

''உங்களுக்குப் பையன் இருந்தா இந்நேரம் பாமாவே உங்க மருமகளா வந்து இருப்பா, இல்லையா அத்தை''

நாச்சியார் மிகவும் அமைதியானார். இந்த உலகில் திருமணம் பண்ணாமல் வாழ்தல் என்பது சற்று சிரமமான ஒன்றுதான். கல்யாணம் பண்ணலையா எனக் கேட்டே கல்யாணம் பண்ண வைத்து விடுவார்கள். அப்படியும் வேறு காரணங்கள் சொல்லி கல்யாணம் கட்டாமல் போனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு கல்யாணம் என்பது நடக்காமலே போய்விடும். கால சூழல் பலரை திருமண வாழ்வில் நுழைய விடாமல் தடுத்து விடுகிறது. நாச்சியார் போன்றோர் திருமணமே வேண்டாம் என சிறு வயதில் இருந்தே இருந்து விடுகிறார்கள். இதற்கு உடல்ரீதியான, மனரீதியான விளக்கங்கள் எனப் பல இருந்தாலும் அவரவரைப் பொருத்தே எல்லாம் அமைகிறது.

''என்னங்க அத்தை, பதில் காணோம்''

''நடக்காத கதையைப் பேசிப் பயன் இல்லைதானே யசோ, நான் மட்டும் பாமாவை பாத்துட்டு ஊருக்குப் போறேன்''

''சரிங்க அத்தை, பத்திரமா போய்ட்டு வாங்க''

நாச்சியார் பாமாவின் முகவரியை சரியாக கண்டுபிடித்து அவளது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். பாமாவின் அம்மா ருக்மணிதான் வந்தார்.

''பாமா இருக்காங்களா''

''உள்ளே வாங்க, ஏன் வெளியே நின்னுட்டீங்க, அவ வர சாயந்திரம் அஞ்சு மணி ஆகிரும்''

''ஊருக்குப் போகனும், நாச்சியார் வந்தேனு பாமாகிட்ட சொல்லிருங்க''

''ம்ம், சொல்றேங்க''

நாச்சியார் பெருமாள்பட்டி வந்து சேர்ந்தபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. வீட்டிற்குச் சென்றுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்.

''வாங்கம்மா, போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா, பாப்பாத்தி என்னை நல்லாப் பாத்துக்கிட்டாங்க''

''ம்ம், தூத்துக்குடிக்கு போகனும், கொஞ்ச நாள் ஆகட்டும், அந்த பட்டாம்பூச்சி முட்டை எப்படி இருக்கு, வா பாக்கலாம்''

''முட்டையில் இருந்து சின்ன கம்பளிப்பூச்சி மாதிரி வந்து துளசி இலையை சாப்பிட ஆரம்பிச்சிருச்சிம்மா, அவர் செடியைப் பிடுங்கிப் போட்டுரலாம்னு சொன்னார், நான்தான் பாவம் இருக்கட்டும்னு சின்ன வேலி கூட போட்டு வைச்சிருக்கேன்மா''

பூங்கோதையை தனது இடுப்பைப் பிடித்தபடி மெதுவாக நடந்து வந்து காட்டினாள். சிறு பூச்சி ஒன்று துளசி இலைகளைத் தின்று கொண்டிருந்தது.

''கோதை, எந்த ஒரு உயிருக்கும் நீ தீங்கு பண்ணக்கூடாதுனு நினைக்கிற பாரு அந்த நல்ல மனசுக்கு என்னோட நன்றி, அந்த பட்டாம்பூச்சி எதுவும் வந்துச்சா''

''தினமும் காலையில இந்த துளசி இலை பக்கத்தில வந்து துளசி இலையை பறந்தபடியே பார்க்கும் அப்புறம் என் மேல வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகும்''

''கோதை இந்த உலகத்துல படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கும், சில உயிர்கள் நம் மேல நிறைய நேசம் வைச்சிருக்கும், அது போல சில உயிர்கள் மேல நாம நேசம் வைச்சிருப்போம், இந்த பட்டாம்பூச்சிக்கு உன்னை நிறையவே பிடிச்சி இருக்கு''

''ஆமாம்மா அதான் அவர் சொன்னப்ப கூட எனக்கு அதை கலைச்சி விட மனசு வரலை, நம்ம குழந்தை வளருற மாதிரி அது வளர்ந்து வருது''

''பட்டாம்பூச்சியா வர இன்னும் மூணு வாரம் ஆகும், உனக்கும் குழந்தை பிறந்துரும், நீ செக்கப் பண்ணவே போகலையே கோதை, இப்ப இருக்க உலகம் மருந்து, மாத்திரை, ஸ்கேன் அப்படினு போகுது, உனக்குத் தோனலையா, பிள்ளையாவது ஆஸ்பத்திரில போய் பெத்துக்கோ, கிராமம்தானு நீபாட்டுக்கு அந்தக் காலத்தில மாதிரி வீட்டில பெத்துக்காத''

''சரிம்மா, அவரும் அதான் சொல்லிட்டு இருக்காரு, ரொம்ப வருசம் கழிச்சி உண்டானதால எதுவும் பாக்க வேணாம்னு அப்படியே இருந்துட்டேன்''

''என்ன கோதை சின்ன குடை மாதிரி மேல கட்டி இருக்க, மழை வந்து ஏதாவது பண்ணிரும்னா, தனக்கு என்ன என்ன பாதுகாப்பு பண்ணனுமோ அதை இயற்கை மூலமாவே உயிர்கள் பண்ணிக்கிரும்''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை மெல்லிய புன்னகை செய்தாள். தான் தாய் ஆகப்போகிறோம் எனும் ஒரு பேராவல் இந்த உலக உயிர்கள் மீது எல்லாம் தாய்மையை காட்டத்துவங்குமோ எனத் தெரியாது. பூங்கோதை காட்டத்துவங்கி இருந்தாள்.

நாச்சியார் பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு பரந்தாமனிடம் சொன்னார்.

''இந்தக் கோவில் பக்கத்திலேயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கலாம்ல பரந்தாமா''

''அம்மா நல்ல யோசனை, அய்யாகிட்ட கேட்டுப் பாருங்க, வேணாம்னா சொல்லப் போறாரு''

''நிறைய யோசிக்கிறாரு''

''இன்னொருதடவை முயற்சி பண்ணிப் பாருங்கம்மா''

சரி என சொல்லிவிட்டு அங்கேயே சில மணி நேரங்கள் அமர்ந்து இருந்தார் நாச்சியார். கோவிலுக்கு வந்து செல்வோர் இவரையும் வணங்கிச் சென்றார்கள். மனிதர்கள் பிறர் போற்றும்படி வாழ்தல் பெரும் தவம்.

பாமா, நாச்சியார் வந்த விசயத்தை தனது அம்மா மூலம் அறிந்து கொண்டாள். தன்னைத் தேடி வந்தவரை சென்று பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டானது. வருகின்ற சனிக்கிழமை பெருமாள்பட்டிக்கு போய் வர அனுமதி கேட்டதும் அவளது அம்மா எதுவும் மறுக்காமல் அனுமதி தந்தார்.

நம்மை புரிந்து கொள்வதோடு, நமது எண்ணங்களுக்கு இடையூறுகள் தராத உறவுகள் அமைவது பேரின்பம்.

(தொடரும்)

Tuesday, 24 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 10

10 மும்முலையாள்

''அத்தை, நீங்க ஏன் பாமாவை நம்ம ஊருக்கு வரச் சொன்னீங்க''

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக யசோதை நாச்சியாரிடம் கேட்டாள்.

''நல்ல பொண்ணா மனசுக்குப் பட்டுச்சு யசோ''

''நான் கூட வண்ணத்துப்பூச்சி பத்தி எதுவும் இருக்குமோனு நினைச்சேன் அத்தை''

''அதெல்லாம் இல்லை, ஆனா இந்த உலகத்தில நமக்கு எது எது எல்லாம் வளர்க்கனும்னு ஆசை இருக்குப் பார்த்தியா''

''நான் எதுவும் வளர்க்கிறது இல்ல, நீங்களும் எதுவுமே வளர்த்தது இல்லையே அத்தை''

''உன்னை வளர்த்தேனே அது போதாதா அது போல நிறைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி வளர்த்து இருக்கேனே யசோ. நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போவோமோ''

''என்னங்க அத்தை, அதிசயமா, பெருமாள் கோவில் தவிர்த்து எங்கேயும் நீங்க போனது இல்லையே, இப்ப மட்டும் என்னவாம்''

''அன்னைக்கு அழகர் கோவிச்சிட்டுப் போன மாதிரி எனக்கென்ன மீனாட்சி மேல கோவமா என்ன, எனக்குப் பிரியம் பெருமாள் மட்டும்தான் மத்த கோவில்களுக்குப்  போகமாட்டேனு எல்லாம் இல்ல, போக வேண்டிய சூழல் எதுவும் அமைஞ்சது இல்ல. பேதம் பார்த்தல் பிழைனு இருக்கு யசோ ஆனா ஒன்றின் மீது மட்டுமே அன்பு செலுத்துதல் பிழை இல்லை ''

''மீனாட்சி கோவிலுக்குப் போகனும்னு என்ன சூழல் இப்போ அத்தை''

''கோதை, குங்குமம் பிரசாதம் வாங்கிட்டு வரச் சொன்னா, வாங்காம போனா அவ மனசு பாடுபடும் இல்லையா அதுவும் பிள்ளைத்தாச்சியா இருக்கா, நாளன்னைக்கு ஊருக்குக் கிளம்பனும். அங்க வேற துளசிச் செடியில முட்டை எப்படி இருக்கோ, எப்படியும் நான் போகப் போறப்ப கம்பளிப்பூச்சி மாதிரி உருமாறி இருக்கும்''

''வண்ணத்துப்பூச்சி நினைப்பாவே இருக்கீங்க, கோதை கிட்ட பேச வேண்டியதுதானே அத்தை, ஒரு போன் வைச்சிக்கோங்கனு சொன்னா உலக அதிசயமா வேணாம்னு சொல்றீங்க என்ன பண்றது. நீங்க சொன்னது போல நாளைக்கு கோவிலுக்குப் போகலாம் ஆனா சாயந்திரம்தான் போகனும், நீங்க பள்ளிக்கூட விசயமா யாரையோ பாக்கனும்னு சொன்னீங்க,  பாத்துட்டு வந்துருங்க''

''ஆழ்வார் திருநகரிக்குத்தான் போகனும். சடகோபனு ஒருத்தரைப் பார்க்கச் சொல்லி இங்க இருந்து ஒருத்தர் கடிதம் கொடுத்து இருக்கார். அவர் மூலமா ஏதாவது ஆகுதானு பாக்கனும்''

''இந்த வயசுக்கு அப்புறம் எதுக்குங்க அத்தை அலைச்சல், அதுவும் தூத்துக்குடி பக்கம் போகனும் வேண்டாத வேலையாக எனக்குப்படுது''

''நல்ல விசயங்களுக்கு வயசு தடை இல்லை யசோ''

யசோதை வேறு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து கொண்டாள். சடகோபன் எனும் பெயர், ஆழ்வார் திருநகரி எனும் ஊர் நாச்சியார் மனதில் அளவிலா மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. நாச்சியாருக்கு நம்மாழ்வார் என்றால் ஒருவித ஈர்ப்பு உண்டு. நம்மாழ்வார் குறித்து அவர் படித்த விசயங்கள் அவருக்குள் எப்போதும் ஒரு கேள்வியை எழுப்பியபடியே இருக்கும்.

அடுத்த தினம் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார் நாச்சியார். யசோதை வேலைக்குப் போய்விட்டு மாலை சற்று வேகமாகவே வந்து விட்டாள். யசோதை நாச்சியாருடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனாள்.

''அந்தக் காலத்தில் பெண்களின் ஆட்சி இருந்ததாக எழுதி இருக்காங்க, வீட்டில கூட மீனாட்சி ஆட்சியானு கேட்கறது அதுக்குத்தான அத்தை''

''பெண்கள்தான் உலகம்னு இருந்துச்சி, அப்புறம் ஆண்கள் உலகம்னு மாத்திக்கிட்டாங்க மறுபடியும் பெண்கள் உலகம்னு ஆகிரும்''

''அப்போ உங்க பெருமாள்''

''பெருமாள் எப்பவும் பெருமாள்தான் யசோ''

மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். மக்கள் எப்போதுமே கோவிலில் கூட்டமாகத் தென்படுகிறார்கள். தெய்வம் பல மனிதர்களின் தேவையின் ஒன்றாகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்து வந்து இருக்கிறது. தெய்வத்தின் மீதான நம்பிக்கை என்பது ஏமாற்றத்தின்போது கூட தொலைந்து விடாமல் இருப்பது என்பது ஆச்சரியங்களில் ஒன்றுதான்.

நாச்சியார் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வந்தபோது மூன்று மார்பகங்கள் கொண்ட ஒரு சிலையின் முன்னர் நின்றார். யசோதை நாச்சியார் நின்றதைப் பார்த்து வியப்பு கொண்டாள்.

''அத்தை, இந்தக் கதை உங்களுக்குத் தெரியுமா?''

''குழந்தை இல்லாம மன்னன் பையன் வேணும்னு யாகம் செஞ்சப்ப மூன்று வயசு பெண் குழந்தையா யாகத்தில் இருந்து தோன்றி  மூன்று மார்பாகங்களோடவே வளர்ந்து பெரும் ஆட்சி செஞ்சி கடைசியில் சிவனை மணக்கப் போறப்ப சிவனைப் பார்த்ததும் மூன்றாவது மார்பகம் மறைஞ்சி போனதுதான''

''ம்ம் ஆழ்வார்கள் பெருமாள் கதை தவிர்த்து இது எல்லாம் படிச்சி இருக்கீங்க அத்தை, ஆனா எனக்குச் சொன்னது எல்லாம் இராமானுசரும் ஆண்டாளும் மத்த ஆழ்வாரும் மட்டும்தான், இதுல இருந்து ஒன்னு புரிஞ்சிக்கிறலாம். நம்ம உடம்புல உடல் உறுப்புகள் தேவை இன்றி வளரவும் செய்யும், உடல் உறுப்புகள் குறையவும் செய்யும். நிறைய மாற்றங்கள் கொண்ட மனிதர்கள் பிறக்கத்தான் செய்றாங்க ஆனா குறைந்த அளவில்தான் அந்தமாதிரி மாற்றங்கள் இருக்கு இப்போ கூட இப்படி மூன்று மார்பகங்கள் கொண்டவங்க அங்க அங்க இருக்காங்கனு ஒரு ஆய்வு சொல்லுது ஆனா மீனாட்சியை மும்முலையாள் அப்படினு கூப்பிட்ட  மாதிரி இப்போ கூப்பிட முடியாது அதுவும் இதை பாலினங்களில் உள்ள குறைபாடுனு சொல்றாங்க''

''முக்கண்ணன்னு சொல்றாங்க, இப்போ அப்படி யாரும் இருக்கிறது இல்லை யசோ''

''இதெல்லாம் உண்மையானு தெரியலைங்க அத்தை, ஆனா படிக்க, கேட்க ஆர்வமாத்தான் இருக்கு''

கோதைக்கு என குங்குமம் பிரசாதம் வாங்கிக் கொண்டார் நாச்சியார். யசோதையின், வேலனின்  உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட ஆர்வம் நாச்சியாருக்கு சற்றுப் புதிராக இருந்தது.

மனிதர்கள் என்றால் இப்படித்தான் என வரையறை வைத்துக் கொண்டார்கள். அதை மீறிய எந்தவொரு உருவமும் குறை உள்ளதாகவே இந்த உலகில் கருதப்படுகிறது. எவ்வித குறைகள் இன்றி பிறப்பது வரம் எனில் மனதில் குறைகள் இல்லாமல், இவ்வுலகின் மீது நிறைய நல்ல நம்பிக்கைகள் கொண்டு இருப்பது மாபெரும் வரம்.

(தொடரும்)




Sunday, 22 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 9

9. மனிதர்களின் உலகம்

நாச்சியார் சுந்தரவேலன் சொன்ன பட்டாம்பூச்சி வளர்க்கும் பெண்ணைக் காண வேண்டும் என தன்  விருப்பம்தனைத் தெரிவித்தார். சுந்தரவேலன் தற்போது வேறு வேலையாக வேறு ஒரு இடம் செல்வதாக இருப்பதால் வேறொரு நாள் சந்திக்க ஏற்பாடு பண்ணுவதாக கிளம்பிப் போனான்.

யசோதை நன்றாகச் சமைத்து இருந்தாள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் சிம்மக்கல்லில் சென்று தான் சந்திக்க இருந்த நபர்களை பள்ளிக்கூடம் கட்டுவது குறித்துப் பேசிவிட்டு வந்தார். யசோதையும் உடன் சென்று இருந்தாள்.

''அத்தை அவ்வளவு பணம் கேட்கிறாங்க, என்ன பண்ணப் போறீங்க''

''கோவில் நிலத்தில ஒரு பகுதியை பள்ளிக்கூடம் கட்ட உபயோகிக்கலாம்னு இருக்கேன். ஊருல ஒரு ட்ரஸ்ட் மாதிரி ஆரம்பிச்சி பண்ணனும்''

''நிறைய செலவு ஆகும் அத்தை, அவங்க சொல்றது எல்லாம் பார்த்தா ஒவ்வொரு கட்டத்தில அனுமதி வாங்கி பண்றதுக்கே போதும் போதும்னு ஆயிரும், அப்புறம் பிள்ளைக வந்து சேரனும். இப்போ இருக்க பிள்ளைக காசு கொடுத்துப் படிக்கப்  போறாங்க, அவங்களை நம்ம ஊரிலேயே இருக்கச் சொல்றது இலேசான விசயம் இல்லை''

''ஆறு வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம்''

''நல்லா யோசியுங்க அத்தை''

நாச்சியார் பள்ளிக்கூடம் விசயமாக சில நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்களின் உலகம் பணத்தினால் கட்டப்பட்டு இருக்கிறது. தனது கனவு பணம் என்ற ஒன்றினால் தடுத்து நிறுத்தப்படும் என்றே அவருக்குத் தோனியது.

புதன்கிழமை அன்று அவர் மாலை அங்கங்கள் வளர்ச்சி குறித்த நிகழ்வு/கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது எப்படி எல்லாம் உடல் முழு வளர்ச்சி அடையாத குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்து நிறைய அறிந்து கொண்டார். எவ்வித குறைகளும் இன்றி பிறக்கும் குழந்தைகள் நல்ல நம்பிக்கைகளோடு வளர்வது மிகவும் முக்கியம். நல்லதொரு கல்வி சீரான செல்வம் என எல்லாக் குழந்தைகளும் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்தலே பெரும் வரம் தான்.

தனக்கு இருக்கும் குறைகளை எண்ணி மனம் தளர்ந்து போகாத குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் உற்றார்களின் பங்கு அதிகம் எனவும் மருத்துவ வளர்ச்சி குறித்தும் நிறைய பேசப்பட்டது. நாச்சியார் மனம் கனத்தது.

''அத்தை உங்க பெருமாள் இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாரா''

''அதான் உன்னைப் போல மருத்துவர்களை உருவாக்கி இருக்காரு யசோ''

நாச்சியார் குரல் உடைந்து இருந்தது. பசியால், வறுமையால் குழந்தைப் பருவம் படுகின்றபாடு இந்த உலகம் கவனிக்கத் தவறிய, சரி பண்ணத்தவறிய ஒன்று. குழந்தைகளைத் திருடி விற்றல், காமங்களினால் சிறுவர் சிறுமியர் எனப் பாராமல் அவர்தம் வாழ்வைச் சிதைத்தல் என இந்த மனிதர்களின் உலகம் நிறையவே அல்லல்படுகிறது.

''குறையுள்ள படைப்புகள் என்ன செய்ய முடியும் அத்தை, சொல்லுங்க''

''பெருமாளை நினைக்காத பிறப்புகள் மட்டுமே குறை உள்ளவை யசோ, நல்ல எண்ணங்களும், பிறருக்கு உதவி புரிதலும், துயர் கொண்டோர் துயர் துடைத்தலும்னு மனித மற்றும் பிற உயிர்களோட நலத்துக்கும், வளத்துக்கும் உழைக்காத எந்த ஒரு பிறப்பும் மட்டுமே குறைகள் உள்ளவை யசோ. மனித வாழ்க்கை பத்தி நிறைய சொல்லி இருக்கு, அன்பின் வழி நடப்பதுனு ஆயிட்டா எதுவுமே குறையாகப் படாது, எல்லாமே குறை நீக்கிய ஒன்றாகத்தான் இருக்கும்''

நாச்சியார் சொன்ன விசயங்கள் யசோதையையும், சுந்தரவேலனையும் நிறையவே யோசிக்க வைத்தன.

''மனநிலையினைப் பாதிப்பு செய்யாத குழந்தைப் பருவத்தை நன்றாக அனுபவிக்கக் கூடிய ஒரு சூழலை நாம உருவாக்கனும் அம்மா''

சுந்தரவேலன் சொன்னபோது நாச்சியார் புன்முறுவல் செய்தார்.

பணம் மனிதர்களை நிறையவே மாற்றி அமைந்துவிட்டது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பது போலவே எழுதி வைக்கப்பட்ட எழுத்துக்கள்  கூடச் சொல்லிச் செல்கிறது. உடல் உறுப்புகளை விற்பது என பல காரியங்களில் ஈடுபடும் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கிறது.

அன்று இரவு தூங்கப் போகும் முன்னர் நாச்சியாருக்கு மனம் என்னவோ செய்து கொண்டு இருந்தது. இந்த பட்டாம்பூச்சிகள் எத்தனை அழகாக தன்னை உருமாற்றம் செய்து கொள்கிறது. அது போல இந்த மனிதர்களும் தங்களில் உருமாற்றங்களைச் செய்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லோரும் கால் கைகளோடு சுகமாக இருப்பார்கள் என மனம் நினைத்தது.

யசோதை படுத்தவுடன் தூங்கிப் போனாள். அந்த இரவின் அமைதியில் குறை ஒன்றும் இல்லை என்ற பாடல் ஒலித்தது.

நாச்சியார் இந்த உலகம் எவ்வித குறைகளும் இன்றி இருக்க வேண்டிக் கொண்டார். அடுத்த நாள் சுந்தரவேலன் வீட்டிற்குச் சென்றார். அங்கே பட்டாம்பூச்சிகள் வளர்க்கும் பாமாவைச் சந்தித்தார்.

இருபத்தி ஒரு வயது நிரம்பிய பாமா தனக்கு சிறு வயதில் இருந்தே வண்ணத்துப் பூச்சிகள் என்றால் கொள்ளைப்பிரியம் எனவும் அதை தான் தேடி அலைந்த காலங்களை நினைவு கூர்ந்தாள். மொத்தம் இருபது வண்ணத்துப் பூச்சிகள் அங்கே இருந்தன. நிறைய செடிகள் வீட்டில் தென்பட்டன. பட்டாம்பூச்சிகளுக்கென அவை வளர்க்கப்பட்டது போல இருந்தது.

''பாமா, இந்தப் பட்டாம்பூச்சி தான் முட்டை இட்டதும்  தனது சந்ததிகளை அதன் சுதந்திரத்துக்கு விட்டுரும் வளர்க்க எல்லாம் செய்யாது ஆனா நாம அதை நம்ம கட்டுப்பாட்டுல வைக்க நினைக்கிறோம் எல்லா உயிர்களையும் நாம நம்ம கட்டுப்பாட்டுல வைச்சி வளர்க்க நினைக்கிறோம், அதன் சுதந்திரம்படி வளர நாம இடம் தரது இல்லை. நம்மோட தேவைகள் எதையுமே சுதந்திரமா இருக்க விடுறது இல்லை''

''ஆசையா இருந்துச்சும்மா எல்லாத்தையும் இங்கே வைச்சி இருக்கமாட்டேன், கொஞ்சம் கூட்டம் கூடினா அவைகளை வெளியே பறக்க விட்டுருவேன்''

''அதனோட ஆசைகளை நாம என்னனு யோசிச்சோமோ பாமா''

நாச்சியார் தான் சொன்னதில் எவ்விதப் பொருளும் இல்லை என அறிந்தவர்தான். மனிதர்களின் உலகம் பேரன்பினால் நிறைந்து இருப்பின் எல்லா உயிர்களும் அதனதன் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு இருந்து இருக்கும்.

பாமா தான் சொன்னதை கேட்டு எவ்வித மறுப்பும் சொல்லாமல் இருந்தது, தனது கருத்துக்களோடு உடன்பட்டது என நாச்சியாருக்கு பாமாவை நிறையவே பிடித்துப் போனது. பாமாவை பெருமாள்பட்டிக்கு வருமாறு அழைத்தார். தனது படிப்பு முடிந்து விடுமுறை சில வாரங்களில் வருவதால் ஒரு மாதம் கழித்து வருவதாக பாமா உறுதி சொன்னாள்.

இந்த உலகில் நாம் நேசிக்கும் மனிதர்கள் நமது எண்ணங்களுக்கு மதிப்பு தருபவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்களையே நாம் தேடிக் கொள்கிறோம்.

(தொடரும்)

Saturday, 21 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 8

8. காதல் ஒரு கொடை

யசோதை செல்லும் முன்னர் நாச்சியார் யார் எனப் பார்க்கச் சென்றார். சுந்தரவேலனைப் பார்த்த கணம் அவருக்கு அவனை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. நாச்சியாரை அங்கே சற்றும் எதிர்பார்க்காத சுந்தரவேலன் உடனடியாக சுதாரித்துக் கொண்டு நிலைமையை சாதாரண நிலைக்கு கொண்டு வர முயற்சிஸ் செய்தான்.

''அம்மா, எப்போ வந்தீங்க''

''வந்து கொஞ்ச நேரம்தான் ஆகுதுப்பா, உள்ளே வா''

''யசோதை இருக்காளா?''

சுந்தரவேலன் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே யசோதை அங்கு வந்து நின்றாள். முகம் சற்று வியர்த்து இருந்தது. இந்த உலகில் மனிதர்கள் தாங்கள் இயல்பாகச் செய்யும் விசயங்களைக் கூட இந்தச் சமூகத்தின் சொற்களுக்கு அச்சம் கொண்டு தாங்கள் தவறு இழைப்பது போல எண்ணிக் கொள்கின்றனர்.

எப்போது ஒன்றை நாம் பிறரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்கிறோமோ அப்போது நாம் தவறு செய்வது போலவே உணர்கிறோம். நமது விருப்பங்கள் பல இப்படிப்பட்ட ஒரு மறைப்பு தன்மை கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் செய்யும் இயல்பான விசயங்கள் நமக்கு அச்ச உணர்வை கொண்டு வந்து சேர்க்கின்றன.

வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது எனும் சொல் வழக்கு நாம் ஒன்றை அச்சத்தோடு அணுகும் போது அது காமம் ஒத்த நிகழ்வு போன்றே இருக்கிறது. பெரும்பாலும் காமம் குறித்த நிகழ்வுகளை நாம் மறைத்தே செய்ய முயல்கிறோம். காமுறுதல் என்பது இயல்பான நிகழ்வு. இதை ஆண்டாள் வெட்ட வெளிச்சமாகவே சொல்லி இருப்பாள். அப்படி சொன்னவள் மீதான சமூக கண்ணோட்டம் பல்வேறு நிலைகளை கொண்டு இருக்கிறது, அதனை பக்தி இலக்கியம் என்றும் காதல் பக்தி என பிரித்துக் கொள்கிறோம்.

எப்போது ஒரு சமூக அச்சம் தொற்றிக் கொள்ளுமோ அப்போது நமது வயிற்றுக்குச் செல்லும் இரத்தம் குறைந்து அந்த இரத்தம் திசுக்களுக்குச் சென்று ஒருவித படபடப்பை உண்டாக்கி பட்டாம்பூச்சியின் இறகுகள் படபடவென அடிப்பது போன்று அடித்துக் கொள்ளும். இப்படி திசுக்களுக்குச் செல்லும் இரத்தம் திசுக்களுக்கு நிறைய ஆக்சிஜன் தேவைப்படும் என இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கி அதற்கென சுரப்பிகள் அட்ரீனலின் எனப்படும் சுரப்பியை சுரக்கின்றன. இப்படியான பட்டாம்பூச்சி வயிற்றில் பறந்து கொள்வது என்பது ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நிகழ்வது இல்லை.

''வா வேலா'' சொற்கள் சற்று குழறியபடியே வந்து விழுந்தன. தனது ஆசைகளை எப்போதும் நிறைவேற்றித் தரும் நாச்சியார் அவளுக்குள் சிறிது தைரியத்தைத் தந்து கொண்டு இருந்தாள்.

சுந்தரவேலன் வீட்டுக்குள் வந்து அமர்ந்தான்.

''அத்தை, நானும் வேலனும் காதலிக்கிறோம். அப்பா அம்மா என்ன சொல்வாங்கனு தெரியலை, வேலனும் பயப்படுறான்''

நாச்சியார் என்ன ஏது எனக் கேட்கும் முன்னர் விசயத்தை அவருக்குச் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வம் யசோதைக்கு இருந்தது, பயம் வெளித்தெரியக்கூடாது என எண்ணி படபடவென சொல்லி முடித்தாள்.

நாச்சியார் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

''நல்ல விசயம்தானே யசோ. நான் பெருமாள் மேல வைச்சிருக்கிற காதல் போல உன்னோடது ஒரு மானுடக் காதல். காதலிக்கிறது ஒரு கொடை. அன்பை பரிமாறுதல் போல பேரழகான விசயம் எதுவும் இல்லை யசோ. அதோட மாணிக்கவாசகர் ஒன்னும் இதுக்கு மறுப்பு சொல்லமாட்டாரே. என் அண்ணன், அண்ணிகிட்ட நான் பேசிக்கிறேன் அவங்க எதுக்கு மறுப்பு சொல்லப்போறாங்க. எதுக்கு தப்பு பண்றது போல நினைக்கிற''

''அதில்லைங்க அத்தை, ஊருல மத்தவங்களும் ஏத்துக்கிறனுமே, அதை நினைச்சி வீட்டுல மறுப்பு சொல்வாங்களோனு பயமா இருக்கு''

''பயப்படாதே யசோ, உன்னோட விருப்பத்தை நான் நிறைவேத்துறேன்''

இந்த உலகில் சாய்ந்து கொள்ள ஒரு தோள், நம்பிக்கை தளர்கின்ற போதெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் ஒரு உறவு என இதெல்லாம் அமைந்து விடுவது என்பது பெரும் வரம்.

சுந்தரவேலன் நாச்சியாரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினான். நம்மை புரிந்து கொள்ளும் நபர் நமக்கு எல்லாமும் ஆவது என்பதும் வரமே.

''நான் வந்த விசயமே, இந்த வாரம் புதன்கிழமை சாயந்திரம் அங்கங்கள் வளர்ச்சி குறித்த ஒரு நிகழ்வு பத்தி சொல்லி இருந்தேன் நீ எதுவும் முடிவு சொல்லாமயே இருந்த, அதுக்கு நீ வரியானு கேட்டுட்டு போக வந்தேன்''

சுந்தரவேலன் சொன்னதும் கட்டாயம் வரேன் என்றாள் யசோதை. நாச்சியார் ஆவலுடன் நானும் வரலாமா எனக் கேட்டு வைத்தார். மூவரும் அந்த நிகழ்வுக்குச் செல்வது குறித்து முடிவானது. பட்டாம்பூச்சி குறித்து நாச்சியார் சுந்தரவேலனுக்கும் சொல்லி வைத்தார்.

நமக்கு வியப்பு தரும் விசயங்களை இந்த உலகோடு பகிர்ந்து கொள்ளும் போது நமக்குள் ஒருவித மகிழ்ச்சி உண்டாகிறது. அதோடு வியப்பு தரும் விசயங்களை கேட்பதற்கென்றே சிலர் நமக்கு வாய்ப்பது எல்லாம் பேரின்பம்.

''நான் தங்கி இருக்க வீட்டுல உள்ளபொண்ணு வண்ணத்துப் பூச்சிக நிறைய வளர்க்கிறா''

நாச்சியாரின் உலகம் பட்டாம்பூச்சிகளால் வண்ணமயமாக நிறைக்கப்பட்டு கொண்டு இருந்தது.

(தொடரும்) 

Friday, 20 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 7

7. இடப்பெயர்ச்சி

உயிரினங்கள் பொதுவாக கால சூழலுக்கு ஏற்ப இடம் பெயர்கின்றன. இந்த இடத்திற்குச் சென்றால் தான் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஒரு உயிரினத்திற்கு எப்படி முன் அறிவு உண்டானது என்பதை எவரும் முழுவதுமாக கண்டுபிடித்தது இல்லை. பறவைகள் இந்த இடம் பெயர்ச்சியில் முன்மாதிரியாக இருக்கின்றன. வியப்பான விசயம் என்னவெனில் இந்த பட்டாம்பூச்சிகளில் சில இடம் பெயரவும் செய்கின்றன.

வெப்ப சூழல் விரும்பும் பட்டாம்பூச்சிகள் குளிர்காலம் தொடங்குகிறது என அறிந்த மறுகணம் வெப்ப சூழல் நோக்கி பயணிக்கின்றன.  காலசூழல் மாறியதும் பறவைகள் மீண்டும் தாங்கள் பறந்து வந்த இடத்துக்கே திரும்பிச் செல்லும் அளவுக்கு வாழ்வு காலமும் நினைவுத்திறனும் கொண்டு இருக்கின்றன. ஆனால் பட்டாம்பூச்சிகள் ஓரிடத்தில் இருந்து கிளம்பிப் போனதும் மீண்டும் அதே இடத்திற்கு அவை திரும்ப முடிவது இல்லை, ஆனால் அதனுடைய சந்ததிகள் அதே கால சூழலுக்கு தனது முன்னோர் கிளம்பி வந்த இடத்திற்கே சென்று விடுகின்றன. அதன் பின் அதே சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களைப் பொருத்தவரை திரவியம் தேடுவதற்கென இடப்பெயர்ச்சி அல்லது புலம் பெயர்தல் எனும் நிலை இருந்தது. அதன்பிறகு மனிதர்களில் இனம், மொழி, நிறம், மதம் போன்ற வேற்றுமை உணர்வுகள் தலைதூக்கிய பிறகு தங்களது வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்தார்கள். பெரும்பாலும் திரவியம் தேடிய பிறகு மீண்டும் கூடு வந்து அடையும் பறவைகள் போல திரும்பவே செய்தார்கள். அதில் பலர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அங்கே தமது குடும்பம், சந்ததி என இருக்கவும் செய்தார்கள்.

யசோதை இனி தனது சந்ததி எல்லாம் பெருமாள்பட்டி என்ற ஊரை மறக்க நிறைய வாய்ப்பு உண்டு. வசுதேவனின் சித்தப்பா ஸ்ரீரங்கம் சென்று வாழ்ந்து கொண்டு இருப்பதை போன்று இதுவும் நடக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

''நம்ம ஊரில் இருந்து பறந்து வந்த வண்ணத்துப் பூச்சியா அத்தை''

''தெரியலை யசோ, என்னை பின் தொடர்ந்து வந்து இருக்கும்னு நினைக்கிறப்போ உடம்பு எல்லாம் சிலிர்க்குது''

''என் மேல உட்காந்துட்டு போச்சே அத்தை, ஒருவேளை நானும் பிள்ளைத்தாச்சி ஆயிருவேனா''

யசோதை சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள்.

''ஜோக் சொல்றியா யசோ, அப்படி எல்லாம் ஆகமாட்ட, அப்படி ஆனா நானும் ஒரு பட்டாம்பூச்சியை என் மேல உட்காரச் சொல்லிட்டு போறேன்'' நாச்சியார் சிரித்தபடி சொன்னார்.

''உங்களுக்கு 'வண்ணத்துப்பூச்சி விளைவு' தெரியுமா அத்தை''

''எது, பட்டாம்பூச்சி சிறகுதனை ஏதோ ஒரு ஊருல அசைச்சா இன்னொரு ஊருல பெரும் புயல் வரும்னு சொன்னதா''

''ஆமாங்க அத்தை, ஒரு சிறு விசயம் அல்லது அதிர்வு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணும் அளவுக்கு அதற்கு சக்தி உண்டு, ஒரு சிறு பொறி மொத்த காட்டையும் எரிக்கும் தன்மை கொண்டது மாதிரி, இப்போ நம்ம மரபணுவில் ஒரு சிறு அதிர்வு உண்டாக்கி நம்ம உடம்புல அத்தனை மாற்றத்தையும் உண்டாக்கிரலாம்''

''யசோ நீ மரபணு மாற்றம் பத்தி எல்லாம் சொல்ற, இந்த உலக பரிணாமம் எல்லாம் அத்தனை எளிதா சொல்லிர முடியாது, செய்துரவும் முடியாதுனு நினைக்கிறேன்''

''மறுபிறப்பு தத்துவம் எல்லாம் நீங்க கொண்ட நம்பிக்கைதானே அத்தை, மரபணு கடத்தல் மறுபிறப்பு தத்துவம் போல தான், ஆனால் மறுபிறப்பு இல்லை''

யசோதையின் அறிவுதனை எப்போதுமே வியப்போடு பார்ப்பதுதான் நாச்சியாரின் வழக்கம். நாச்சியாருக்கு யசோதை ஒரு ஆண்டாள் போலவோ அல்லது மீரா போலவோ பெருமாள் மீது பயபக்தியோடு இருக்க வேண்டும் எனும் பேராசை இருந்தது உண்டு. மனிதர்களின் மூளை பொதுவாக தாங்கள் எவரிடம் எதைக் கற்றுக் கொள்கிறோமோ அதை அப்படியே மென்மேலும் கற்றுத் தெளிவு பெறும். அப்படித்தான் யசோதை தன்னிடம் பயின்றதால் வருவாள் என நாச்சியார் எண்ணிக்கொண்டு இருந்தார். ஆனால் யசோதை முற்றிலும் வேறுபட்ட மனநிலையுடன் வளரத் தொடங்கினாள்.

நாச்சியார் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாகச் சொல்லி இந்த பட்டாம்பூச்சி குறித்து யோசித்தபடி இருந்தார். யசோதை சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

சுந்தரவேலன் பள்ளியில் ஒருமுறை சொன்னது அவளது மனதில் தற்போது நிழல் ஆடியது.

'உன்னைப் பார்க்கறப்ப எல்லாம் வண்ணத்துப்பூச்சி வயித்துக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கு யசோதை, உனக்கு அப்படி ஏதேனும் இருக்கா'

'எனக்கு பசிக்காக கடமுடானு வயிறு புரட்டும் சத்தம் மட்டுமே மெல்லிசா கேட்குது'

'உனக்கு எப்பவுமே விளையாட்டுதான் யசோதை'

அதன் பிறகுதான் பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறப்பது குறித்து யோசிக்கத் தொடங்கி வயிறுக்கும் இந்த பட்டாம்பூச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிந்தாள்.

அழகாக இருக்கிறதே என்பதற்காக எதையும் உங்களுடையது என ஆக்கி இறுக்கிக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். பட்டாம்பூச்சியினை பிடித்து கைகளில் இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டால் அது எப்படி விரைவில் உயிரற்றுப் போகுமோ அப்படித்தான் எதையும் இறுக்கமாகப் பிடித்து வைக்க அவை அதன் நிலையிலேயே இல்லாமல் போகும்.

''யசோதை''

சுந்தரவேலன் மூடப்பட்டு இருந்த ஒரு கதவினைத் தட்டினான்.

யசோதைக்கு இப்போது பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறக்கத் தொடங்கி இருந்தன.

(தொடரும்)

Thursday, 19 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 6

6. யசோதையின் மனம்

நாச்சியார் சிம்மக்கல்லில் ஒரு வீட்டில் வாடகை எடுத்து தங்கி மதுரை மருத்தவமனையில் பயிற்சியாளர் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த யசோதையை முதலில் பார்க்கச் சென்றார். நாச்சியாரின் வருகை யசோதைக்கு பெரும் மகிழ்வைத் தந்து இருந்தது. தனக்கு எது எல்லாம் தேவையோ அதை எல்லாம் நாச்சியார் மூலம் நிறைவேற்றிக் கொள்வது என்பது யசோதைக்கு சிறு வயது முதல் மிகவும் எளிதாக இருந்தது.

யசோதைக்குப் பெயர் வைத்தது கூட நாச்சியார் தான். யசோதை தங்கி இருந்த மாடி வீடு எல்லா வசதிகளும் ஒரு சிறு தனிக்குடும்பத்திற்கு ஏற்றது போலவே கட்டப்பட்டு இருந்தது. மாடிப்படி வீட்டின் உள்ளே வந்து செல்லும்படியாக இருந்ததால் ஒருவகை பாதுகாப்பாகவும் இருந்தது.

''அத்தை, உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை, குடிக்க மோர் கொண்டு வரேன்'' யசோதையின் ஆச்சரியம் கலந்த வரவேற்பு புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். நாச்சியாருக்கு மோர் கொண்டு வந்து தந்தாள். 

''சொல்லிட்டு வரனும்னுதான் இருந்தேன், இன்னைக்கு எப்படியும் நீ வீட்டுல இருப்பனு தைரியத்துல கிளம்பி வந்துட்டேன், அப்படியே நீ இல்லைன்னாலும் கூடலழகர் பெருமாள் கோவிலுக்குப் போய்ட்டு வந்து இருப்பேன், நீ ஊருக்கு எல்லாம் வரவே வேணாம்னு முடிவு பண்ணிட்ட போல அதுவும் வந்தா ஒரு நாளு கூட வீட்டுல முழுசா தங்கினது இல்லை, நான் ஒரு வாரம் இங்க தங்கலாம்னு இருக்கேன் உனக்குச் சம்மதம் தான'' என்றார்.

''தாராளமா தங்குங்க அத்தை, என்ன விசயமா வந்தீங்க''

''உனக்குத்தான் தெரியுமே, நம்ம ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் தொடங்கனும்னு ரொம்ப நாளா ஒரு ஆசை. எல்லாம் பாப்பநாயக்கன்பட்டியில் போய் படிச்சி பழகிட்டோம். இனி வரக்கூடிய பிள்ளைக நம்ம ஊர்ல அஞ்சு வரைக்காவதும் படிக்கட்டுமேனு தோனிகிட்டே இருக்கு, நம்ம ஊரை விட்டு ஆளுகளும் வெளியேறிட்டே இருக்காங்க, பெருமாள் கோவில் மட்டும் தான் நம்ம ஊருக்கு அடையாளம், ஒரு பள்ளிக்கூடம் இருந்தா நல்லதுதானே''

''அதான் முயற்சி பண்ணி முடியலைனு சொல்லிட்டே இருந்தீங்களே''

''முடியலைனு சொல்லலை, முடியமாட்டேங்குது, விருதுநகர் பிரயோசனப்படாதுனு மதுரையில முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு எனக்குத் தெரிஞ்சவங்களை பார்த்துப் பேசனும்''

''சரிங்க அத்தை, இன்னைக்கு மதியம் என்னோட சமையல்தான், சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு சாயங்காலமா போகலாம், நானும் வரேன்''

''ம்ம், பட்டாம்பூச்சி பத்தி ஏதாச்சும் தெரியுமா யசோ''

''வண்ணத்துப்பூச்சியா''

''ம்ம்''

''எதுக்கு அத்தை''

பூங்கோதையின் வீட்டில் நடந்த பட்டாம்பூச்சி விசயத்தைச் சொல்லி முடித்தார் நாச்சியார். ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த யசோதை மன மகிழ்ந்தாள்.

''கோதை அக்காவுக்கு குழந்தைனு நினைச்சாலே உள்ளுக்குள்ள வண்ணத்துப்பூச்சி பறக்குது அத்தை, அதான் பள்ளிக்கூட விசயத்தை மறுபடியும் கையில் எடுத்துட்டீங்களா''

நாச்சியார் சிரித்தார். நாம் ஏதேனும் பேசிக்கொண்டு இருக்கும்போது நமது மனம் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்திக் கொள்ளும். அது நல்லதுக்கு எனில் மகிழ்வும், நல்லதுக்கு இல்லை எனில் சோகமும் தங்கிவிடும்.

''பட்டாம்பூச்சி பத்தி என்ன நினைக்கிறனு சொல்லு''

''அது ஒரு அரிய வகை பூச்சி இனம் அத்தை, உங்களுக்குத் தெரியாத ஒன்னா''

''ஒரு முட்டை உருமாற்றம் அடைஞ்சி பட்டாம்பூச்சியா மாறுறது பிரமிப்பா இல்ல''

''இந்த அண்டவெளி, நாம நம்மோட மூளை எல்லாமே பிரமிப்புதானே அத்தை''

''இல்லை யசோ, இந்த பட்டாம்பூச்சி எனக்கு இந்த எட்டு மாசமா எதையோ சொல்ல வர மாதிரி இருக்கு''

''அத்தை, எப்பவும் போல பெருமாளேனு இருங்க, அப்படி எல்லாம் பட்டாம்பூச்சி ஒன்னும் சொல்ல வராது, நீங்களே உங்களுக்கு உங்க பெருமாள் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டாதான் உண்டு''

அப்போது அங்கே அறைக்குள் ஒரு பட்டாம்பூச்சி வட்டமடித்து வந்தது. யசோதை பட்டாம்பூச்சியை வியப்புடன் நோக்கினாள். யசோதையின் வலது புற தோளில் பதினைந்து வினாடிகள் மட்டுமே அமர்ந்துவிட்டு சட்டென வெளியில் பறந்தது.

''அத்தை''

நாச்சியார் பட்டாம்பூச்சி சென்ற வழியை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்.

(தொடரும்) 

Sunday, 15 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 5

5. துளசிச் செடி

நாச்சியார் சொன்ன கதை பூங்கோதையின் மனதைத்  தைத்துக் கொண்டு இருந்தது. பூங்கோதையின் தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சி வீட்டை விட்டு எங்கும் செல்வதாக இல்லை. தானும் ஒருவேளை அம்மாவாகும் வாய்ப்பு இன்றி போகும் எனில் தனக்குப் பின் தனது சந்ததி எனச் சொல்ல ஏதும் அற்றுப் போயிருக்கும் என நினைக்கும்போது பூங்கோதைக்கு மிகவும் கவலையாக இருந்தது.

''அம்மா என் மேல அமர்ந்த இந்த பட்டாம்பூச்சி ஆணா, பெண்ணா'' பூங்கோதையின் கேள்வி எதனால் எழுந்தது என ஆராயாமல் பட்டாம்பூச்சியினை ஆராய எழுந்தார் நாச்சியார்.

அந்த பட்டாம்பூச்சி வீட்டின் அறையில் இருந்த இரண்டு சன்னல்களில் ஒரு சன்னலில் சென்று அமர்ந்து இருந்தது. பட்டாம்பூச்சியின் அருகில் சென்று அதன் வயிறுப் பகுதியைப் பார்த்தார் நாச்சியார்.

''பொண்ணு'' நாச்சியார் சொன்னபோது பெரும் மகிழ்வோடு சொன்னார்.

''கோதை, ஒரு பட்டாம்பூச்சிக்கு மொத்தம் ஆறு கால்கள் இருக்கும், நாலு கால்கள் போல தோற்றம் இருந்தாலும் ஆறுதான். அதன் வயிறு தட்டையா நேரா இருந்தா அது ஆண், கொஞ்சம் தூக்கலா வளைஞ்சி இருந்தா அது பொண்ணு. இந்த பட்டாம்பூச்சிக்கு கழிவு எல்லாம் வெளியேற்ற தனித்தனி வழிகள் எல்லாம் இல்லை. எல்லாமே நீர் ஆகாரம்தான் அதனால் சிரமம் இல்லை. நீல நிறம், மஞ்சள் நிறம்னு கலந்து கலந்து இருக்கிற இந்த பட்டாம்பூச்சி இங்கேயே இருந்து என்ன சொல்ல நினைக்குதுனு தெரியலை''

''அதுபாட்டுக்கு ஒரு ஓரத்திலே இருக்கட்டும்மா''

''சரி கோதை, கவனமா இரு. நிறைய வருசம் கழிச்சி நான் ஒரு வேலையா நாளைக்கு மதுரை வரைக்கும் போறேன், வர ஒரு வாரம் ஆகும், எது வேணும்னாலும் பாப்பாத்தி கிட்ட கேளு, நானும் போய் அவகிட்ட சொல்லிட்டுப் போறேன், உன்னை வந்து பாத்துக்குவா''

''சரிம்மா''

ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் பரந்தாமனுக்கு வசுதேவன் கட்டித்தந்த வீடு. கிராமத்தில் கட்டப்படும் வீடுகளில் மொட்டைமாடி வைத்துக் கட்டுவது வழக்கம். ஏதேனும் காயப்போடுவதற்கு ஏதுவாக இருக்கும். கோவிலில் இருந்து பதினைந்து நிமிடங்களில் நடந்து செல்லும் தொலைவில் தான் வீடு கட்டப்பட்டு இருந்தது. இந்த மொட்டை மாடியில் நின்று முழுக்கோவிலையும் வெகுவாக இரசிக்கலாம்.

இரண்டு மாடிகள் கொண்ட வீடு. வீட்டுக்குள் நுழைந்ததும் காலணிகள் கழற்றி வைக்க ஒரு அறை. அங்கேயே கால், முகங்களை கழுவிக் கொள்ள தண்ணீர் வசதி கொண்ட சிறு இடம். அதைத்தாண்டி வீட்டுக்குள் நுழைந்ததும் நல்ல விசாலமான வரவேற்பு அறை. பத்து நபர்கள் கூட தாராளமாக படுத்து உறங்கலாம். அந்த அறையில் கீழேதான் அமர வேண்டும், எவ்வித நாற்காலிகளோ, கட்டில்களோ இல்லை. அங்கேதான் பெரும்பாலும் எவரேனும் வந்தாலும் கீழே அமர்ந்து பேசிச் செல்வார்கள்.

அந்த அறை முடியும் இடத்தில் வலப்புறமாக கிழக்கு நோக்கி கட்டப்பட்ட சமையல் அறை. நான்கு நபர்கள் தாராளமாக நின்று சமைக்கலாம். கோவில் அன்னதானம், நெய்வேத்தியம் எல்லாம் இங்கே செய்யப்படுவது இல்லை. பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் மட்டுமான சமையல் அறையாக இருந்தது.

வரவேற்பு அறை, சமையல் அறைக்குப் பின்புறம் உறங்குவதற்கான ஒரு அறை அதை ஒட்டிய ஒரு பூஜை அறை. முதல் மாடியில் இரண்டு அறைகள் மட்டுமே கட்டப்பட்டு இருந்தன. வீட்டினைச் சுற்றி சின்ன சின்ன மரங்கள் மா, கொய்யா ஆலிவ் என நடப்பட்டு இருந்தன. வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கோவிலுக்கு என சமைப்பதற்கான சமையல் அறையும், பொருட்கள் சேர்த்து வைக்கும் ஒரு அறையும் இருந்தது. இவற்றில் எல்லாம் இருந்து சற்று தள்ளி மற்றொரு பக்கத்தில் கழிப்பறை.

வீட்டின் முன்பக்கத்தில் வாசல் தாண்டி ஒரு மாடத்தில் துளசிச் செடிகள் இருந்தது. இந்த துளசிச் செடிகளை பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறாள் பூங்கோதை. ஒரு துளசிச் செடி வைத்த இடத்தில் இன்று பல துளசிச் செடிகள் ஆகி இருந்தது. இந்த பெரும் அண்டவெளியில் தங்களைத் தாங்களே நட்சத்திரங்கள் முதற்கொண்டு பெருக்கிய வண்ணம் இருக்கின்றன.

நாச்சியார் கிளம்பியதும் அவரோடு துளசிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வெளியில் வந்தாள் பூங்கோதை. பட்டாம்பூச்சியும் அவள் பின்னால் வந்தது. அங்கே இருந்த ஒரு துளசிச் செடி இலையின் மீது அமர்ந்தது. அதனை பூங்கோதை வெகு ஆச்சர்யத்துடன் பார்த்தாள். நாச்சியார் கூட என்னவென ஒரு கணம் அங்கேயே நின்றார்.

தண்ணீர் ஊற்றித் திரும்பியவள் மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போனா எனக்கு குங்குமம் பிரசாதம் கொண்டு வாங்கம்மா என்றாள். நாச்சியார் தலையை மட்டும் ஆட்டியவர் துளசிச் செடியில் அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சியை பார்த்தவாறு இருந்தார்.

சிறிது நேரத்தில் பட்டாம்பூச்சி அங்கே இருந்து பறந்தது. துளசிச் செடியின் இலையின் பின்புறம் குனிந்து பார்த்தார் நாச்சியார்.

''பெருமாளே'' இரு கைகளைத் தன்  தலைக்கு மேலே தூக்கி வணங்கி நின்றார்.

''என்ன ஆச்சுமா''

''ஒரே ஒரு முட்டையை மட்டும் போட்டுட்டு அந்த பட்டாம்பூச்சி போயிருக்கு'' இலையில் ஒட்டிக்கொண்டு இருந்த முட்டையை பூங்கோதைக்கு காட்டினார் நாச்சியார்.

''எத்தனையோ முட்டைகள் போடும் வழக்கம் பட்டாம்பூச்சிகளுக்கு உண்டு அதுவும் பிரத்யோகமா இலைகள் தேடிப் போகும். இந்த துளசிச் செடியில இருந்து இதுவரைஇத்தனை வருசமா  பட்டாம்பூச்சி எதுவாச்சும் வந்து இருக்குனு நீ கவனிச்சு இருக்கியா கோதை''

''இல்லைம்மா''

''முட்டை போட்டுட்டு போறதோட சரி, அதற்கப்புறம் அந்த முட்டையை பாதுகாக்கனும், பொறிக்கனும் அப்படி எல்லாம் பட்டாம்பூச்சிக்கு வழக்கம் இல்லை. நீ இந்த இலையில் தண்ணியை ஊத்திராதே,  முட்டையை சிதைக்கமா பார்த்துக்கோ, நா அடுத்த வாரம் வந்து பாக்கிறேன்''

''சரிம்மா''

துளசிச் செடியின் இலையை பார்த்தவாறு நின்று கொன்று இருந்தாள் பூங்கோதை.

கிருஷ்ணருக்கு தானே சமம் என தன்னைத் தானே உலகுக்கு உணர்த்திய இந்த துளசிச் செடி ஒரு உயிரைத் தாங்கிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

Saturday, 14 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 4

4. பட்டாம்பூச்சியின் பரிணாம மாற்றம்

பெருமாள்பட்டியின் சிறப்பு என்னவெனில் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள கண்மாயில் நீர் வற்றியது கிடையாது. அந்தக் கண்மாய் நீரைத்தான் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.  ஓரளவுக்கு நல்ல இடம் தாங்கிய கண்மாயினைத்தான் வெட்டி இருந்தனர். கண்மாய்க்கரை எல்லாம் போட்டு முடித்த சில நாட்களில் நல்ல மழை பெய்ததாகவும் அன்றில் இருந்து இன்றுவரை கண்மாயில் நீர் வற்றியதை எவரும் பார்த்தது இல்லை என்றே சொல்வார்கள்.

கிராமத்துக்கு ஏற்றது போன்ற கோவில். கருங்கல்லினால் ஆன கருவறை, அர்த்தமண்டபம், விமானம், இராஜகோபுரம். இராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் இடைப்பட்ட ஒரு இருபது அடியில் ஒரு மண்டபம். அங்கேதான் அன்னதானம் எல்லாம் வழங்குவார்கள். இந்த பெருமாள் கோவிலில் இன்றும் கூட திருமணம் நடத்திக் கொள்பவர்கள் உண்டு. வசதி வாய்ப்புகள் வந்தபிறகு கல்யாண மண்டபம் என நகரங்கள் தேடிப் பயணப்பட்டு போன பிறகு திருமணம் நடத்துவதில் கோவில்கள் முன்னுரிமை இழந்து போயின.

இருந்தாலும் அவ்வப்போது திருமண வைபவங்கள் காணும் இந்த பெருமாள் கோவிலை குண்டத்தூர் மரிக்கொழுந்து ஸ்தபதியார் தானே முன்னின்று செய்து முடித்து வைத்தார். வசுதேவனின் ஓட்டன் வாமனசித்தன் மரிக்கொழுந்துவிடம் தனது கோவில் ஆசையை சொன்னதும் அதற்கு முதலில் கண்மாய் வெட்ட வேண்டும் என ஆரம்பித்ததுதான் இந்தக் கண்மாய். வறட்சிக் காலங்களில் கூட கண்மாய் வற்றாமல் இருப்பது கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தது உண்டு, அதன்பின்னரே ஊற்றுநீர் குறித்த தகவல் பரப்பப்பட்டது.

பொதுவாக கிராமம் என்றாலே கருப்பசாமி, முனியாண்டி, அய்யனார், காளியம்மன், அரசமரத்து பிள்ளையார் என சாமிகள் இருக்கும். இந்த ஊரில் பெருமாள் கோவிலைத் தவிர வேறு எந்த கோவில்களும் இல்லாமல் போனதற்கு வசுதேவனின் குடும்பமே காரணமாக இருந்தது எனும் பேச்சு இருக்கிறது. இந்த கிராமத்தில் இறந்து போன எவரையும் குலசாமியாக எல்லாம் இங்கே உள்ளவர்கள் கொண்டாடியது இல்லை. வாமனசித்தன் சொன்னதன்பேரில் எல்லாம் பெருமாளுக்கு மட்டுமே சமர்ப்பணம் செய்து கொண்டு இருப்பதாகச் சொல்வார்கள்.

அன்றைய தினங்களில் வீட்டுக்கு குறையாமல் ஐந்து பிள்ளைகளாவது இருப்பார்கள். ஆனால் வசுதேவனின் பரன்பரையில் மூன்று பிள்ளைகள் மேல் இருந்தது இல்லை. அதிலும் ஒருவர் மட்டுமே திருமணம் முடித்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. இது தற்செயலாக நடந்து வருவதா, அல்லது திட்டமிட்டு நடக்கிறதா எனத் தெரியாது. வசுதேவனின் தந்தை குசேலபாகனுடன் உடன்பிறந்த சித்தப்பா பார்த்தன் தனக்கு இருபது வயது இருக்கும்போதே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றவர்தான், அவரோடு எவ்வித தொடர்பும் அதற்குப்பின்னர் இல்லாமல் போனது. இவர்களுது பரன்பரை முன்னால் இருந்தவர்கள் எல்லாம் ஸ்ரீஇராமானுசரிடம் பழக்க வழக்கம் கொண்டு இருந்ததாகப் பேச்சு இன்னமும் கிராமத்தில் இருக்கிறது.

நாராயணி எனும் பெயரைக் கேட்டதும் நாச்சியார் தனது யோசனையில் இருந்து விடுபட்டார்.

''கோதை, இந்த பெயர் எப்படி தேர்ந்து எடுத்த'' நாச்சியார் ஆச்சரியம் கலந்து கேட்டார்.

''அவர்தான் இந்தப் பெயரை எனக்கு முன்னமே சொன்னார், எங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும்னு ஒரு நம்பிக்கை. அவருக்கு அவர் அம்மா மேல நிறைய பிரியம், அவர் அம்மா திரும்ப பிறக்கனும்னு சொல்வார், அதெல்லாம் சாத்தியம் இல்லைன்னாலும் அவரோட ஆசையை சரினு சொல்லுவேன்'' பூங்கோதையின் மீது அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சி அகலவே இல்லை. அந்த அறை பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களால் நிறைந்து இருந்தது.

''இந்த பட்டாம்பூச்சிக்கு உன் மேல என்ன பிரியமோ கோதை, நகராம உட்கார்ந்து இருக்கு. பட்டாம்பூச்சியோட வாழ்நாள் ஒரு வாரத்தில் இருந்து ஒன்பது மாதங்கள் வரை இருக்கும். இங்கே இருக்க இந்த பெரிய பட்டாம்பூச்சிகள் நிறைய மாதங்கள் உயிர் வாழும். அவை குளிர் இரத்த வகை, அதனால வெயில் காலத்தில் துடிதுடிப்பா இருக்கும், குளிர் காலம் வந்துட்டா உறைஞ்சி உயிர் போகாம இருக்கிறது எல்லாம் அதிசயம் தான். வெளிச்சூழல் வைச்சிதான் அவை தன்னோட வெப்ப நிலையை சமன்படுத்திக்கும்''

''அப்போ இந்த பட்டாம்பூச்சி எட்டுமாசம் முன்னாடி என் மேல வந்து உட்கார்ந்த ஒன்னாம்மா'' பூங்கோதையின் கேள்விக்கு என்னவென பதில் சொல்வதென தெரியாது புன்னகை புரிந்தார்  நாச்சியார்.

''தெரியலை கோதை, பட்டாம்பூச்சி கதையைச் சொல்றேன். கோதை இப்போ உன்னை மறுபடியும் முதலில் இருந்து இதே வாழ்க்கையை வாழச் சொன்னா இதே போல வாழ்வியானு கேட்டா உன்னால ஆமா, இல்லைனு பதில் சொல்ல முடியும் ஆனா உண்மையில் என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. நம்ம மனிதர்களுக்கு எப்பவுமே கடந்த காலத்தில் என்னவாக நடந்து இருக்கும் எப்படி இருந்து இருக்கும் அப்படினு தெரிஞ்சிக்க ஆசை, அதனால எழுதப்பட்ட பெரும் பழங்கதைகள், சமீபத்திய சிறுகதைகள் என நிறையவே உண்டு.

அதில் ஒன்னுதான் இந்த பட்டாம்பூச்சி கதை. 50மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி போய் அப்போ வாழ்ந்த குறுகிய வாழ்நாட்கள் வாழும் டைனோசர்களை சுட்டு தள்ளிட்டு வருவதற்கு ஒரு நிறுவனம் கால இயந்திரம் உருவாக்கி அதில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வழிகாட்டி இரண்டு நபர்கள் அதோடு கதைநாயகன் இன்னும் இரண்டு நபர்கள் போவாங்க. எந்த எந்த டைனோசர்களை கொல்லனும் அப்படினு முன்னமே அந்த நிறுவனம் குறியிட்டு வந்து இருப்பாங்க.

அந்த கதைநாயகன் இப்படி நாம பின்னோக்கி போய்ட்டு திரும்பி வந்தா எல்லாம் அப்படியே இருக்குமானு கேட்பான், அது உறுதி சொல்ல முடியாது, அதே வேளையில் தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்யனும் மீறி செயல்படக்கூடாதுனு சொல்வாங்க. எடுத்துக்காட்டா ஒரு எலியை மிதிச்சுக் கொன்னா அதனைச் சுற்றிய ஒரு பரிணாம சூழல் மாறிப்போகும் அதனால சுடுவதை தவிர வேறு எதுவும் பாதை மீறிப் போகக்கூடாதுனு கடுமையான விதிகள் போடப்பட்டு இருக்கும்.

அப்படி போனப்ப பாதை மாறி கதைநாயகன் சேற்றில் மிதிச்சு வந்துருவான். வழிகாட்டி பயங்கரமா கோவப்படுவான். திரும்பி மீண்டும் அதே தற்காலத்திற்கு வந்ததும் முதலில் இருந்ததை விட எல்லாம் மாறி இருக்கும். ஏன் இப்படி ஆயிருச்சின்னு பார்த்தா சேற்றில் மிதிச்சதால அதில் இருந்த ஒரு பட்டாம்பூச்சி செத்துப் போய் அவனது காலில் ஒட்டி இருக்கும். அந்த ஒரு பட்டாம்பூச்சி செத்துப் போனது மொத்த நிகழ்வுகளையே மாற்றி வைச்சிரும். அவனுக்கு என்ன இதுனு புரியறதுக்கு முன்னாலே அந்த வழிகாட்டி அவனை சுட்டுக் கொன்னுருவான். அந்த பட்டாம்பூச்சி உயிரோடு இருந்து இருந்தா கதைநாயகன் உயிரோட இருந்து இருப்பானு கதை முடியும்''

நாச்சியார் சொல்லி முடித்ததும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் அந்த அறையை விட்டுப் பறந்தோடின. பூங்கோதையின் கன்னம் தொட்டு மீண்டும் தோளில் அமர்ந்து கொண்டது அந்த ஒரே ஒரு பட்டாம்பூச்சி.

''அம்மா'' என கண்கள் கலங்கினாள் பூங்கோதை.

''எனக்குப் பிறகு எனக்கான என் சந்ததி இல்லைனு ஆயிருதல கோதை, அப்படி என் சந்ததி ஒன்னு உருவாகி இருந்தா இந்த உலகத்தில் எத்தனை மாற்றம் உருவாகி இருக்கும்னு சொல்ல முடியாதுல, அதுபோல நிறைய மகான்கள், பெரியோர்கள், அறிவியல் அறிஞர்கள் எல்லாம் பிறக்காமல் போயிருந்தானு யோசிச்சா இந்த உலகத்தைப் பத்தி நம்முடைய பார்வை எப்படி இருக்கும். இப்படித்தான் எங்க குடும்பத்தில ஒரே ஒரு சந்ததி தொடர்ச்சி மட்டுமே இருந்துட்டு வந்து இருக்கு அதனால பெரும் மாற்றம் நிகழாமல் போய் இருக்குமோ''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை அவரது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

(தொடரும்) 

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 3

3. நாராயணி

நாச்சியார். வசுதேவனின் தங்கை. பெருமாள்பட்டியில் இருந்து முதல் பட்டதாரியாக விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். வசுதேவன் தனக்குப் படிப்பு ஏறவில்லை என விவசாயம் மட்டுமே தனக்குப் போதும் என இருந்து கொண்டார். வசுதேவனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதே தனது பெற்றோர்களை இழந்தார். நாச்சியாருக்கு எல்லாமே வசுதேவன் என ஆனது. அந்த ஊரில் வசுதேவனின் தாத்தாவின் தாத்தா கட்டியதுதான் பெருமாள் கோவில். இப்பிணைப்பின் காரணமாகவோ என்னவோ நாச்சியாருக்கு பெருமாள் மீது நிறைய பிடித்தம் ஆனது.

நாச்சியார் தான் படித்த படிப்பை வீணாக்க வேண்டாம் என பாப்பநாயக்கன்பட்டியில் சென்று பள்ளியில் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது வழக்கம். அதோடு பெருமாள்பட்டியில் உள்ள பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித்தருவதும் உண்டு. இதற்கு எல்லாம் பணமாகப் பெற்றுக் கொள்ளக்கூடாது என ஒரு சேவையாகவே செய்து வந்தார். அதைத் தவிர்த்த நேரங்களில் எல்லாம் விவசாயம், பெருமாள்தான் அவரது கனவும், வாழ்வும். இப்படிப்பட்ட சேவை மனமோ என்னவோ திருமண வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நாச்சியாரின் மனம் ஈடுபடவே இல்லை.

வசுதேவன் பல வருடங்கள் காத்து இருந்து, தங்கையின் மனம் மாறாது என அறிந்த பிறகு தான் ஒரு திருமணம் பண்ணிக்கொண்டார். மணப்பெண் கோமதி உள்ளூர் மற்றும் அதிகம் படிக்கவில்லை என்பதாலும், நாச்சியார் நல்ல பழக்கம் என்பதாலும் நாச்சியார் அந்த வீட்டின் இளவரசியாகவும் பின்னர் மகாராணியாகவும் வலம் வந்தார், வருகிறார். வசுதேவனுக்கு 23 வயதில் யசோதை எனும் ஒரு பெண் பிள்ளை மட்டுமே. படிப்பில், விளையாட்டில் மிகவும் சுட்டி. யசோதை மதுரை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவப் படிப்புதனை முடித்து இருந்தார். யசோதைக்கு பாப்பநாயக்கன்பட்டி அறிவியல் வாத்தியார் மாணிக்கவாசகரின் மகன் சுந்தரவேலன் மீதான காதல் பாப்பநாயக்கன்பட்டி பள்ளியில் மலர்ந்த ஒன்று அது மதுரை மருத்துவ கல்லூரி வரை வளர்ந்து இருந்தது. இவர்களின் காதல் குறித்து வசுதேவனும் அறிந்தது இல்லை, மாணிக்கவாசகரும் அறிந்தது இல்லை. தனது காதல் நிறைவேற தனது அத்தை நாச்சியாரை நிறையவே நம்பி இருந்தார் யசோதை.

தனது இடது தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சியை கூர்ந்து கவனித்தாள் பூங்கோதை. அது பூங்கோதையைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தது. அதனுடைய வண்ணம் பேரழகாக இருந்தது. இந்த உலகில் எதையும் எட்டி நின்று பார்த்துக் கொண்டால் மட்டுமே பேரழகாக தெரியும், அருகில் சென்றால் பேரழகு மறைந்து போகும் எனும் ஒரு சிறு வழக்கம் உண்டு, ஆனால் பேரின்பம் கொண்ட மனதுக்கு தொலைவிலும் சரி, அருகிலும் சரி பேரழகாக மட்டுமே தெரியும்.

''கோதை, இந்த பட்டாம்பூச்சி இப்போ எதுக்கு வந்து உன்மேல உட்கார்ந்து இருக்கு, நான் சொல்ற கதையை கேட்கவா'' எனச் சிரித்தார் நாச்சியார்.

''தெரியலைம்மா, கதை கேட்கனும்னு வந்து இருக்குமோ, கதையைச் சொல்லுங்கம்மா''

பட்டாம்பூச்சி பறந்து போய்விடக்கூடாது என ஆடாமல், அசையாமல் அமர்ந்து இருந்தாள் பூங்கோதை. இந்த உலகில் நடனம் என ஆடுவதற்கு நடராசர் பெரும் பெயர் பெற்றவர். ஆனால் அவரே கயிலையில் இருந்து வந்து கண்ணனின் நடனம் காண வந்ததாக பேரழகு மிக்க கற்பனை. அந்தளவுக்கு அருமையான நடனம் ஆடும் வல்லமை கண்ணனுக்கு உண்டு, அவன் ஆடி வந்தால் இந்த உலகம் எல்லாம் ஆடும் எனவே கண்ணனை ஆடாமல், அசங்காமல் வா கண்ணா என அவன் மீதான காதலை வெளிப்படுத்தும் கவித்துவம் பேரழகு. அதே சூழலை பூங்கோதை பட்டாம்பூச்சிக்காக செய்து கொண்டு இருந்தாள்.

''இந்த பட்டாம்பூச்சி உருமாற்றம்தனை கொள்ள பல வருடங்கள் எடுத்துக்கிறது இல்லை. இந்த உலகில் உள்ள உயிரினம் எல்லாம் வெவ்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தவை என்பதற்கு இந்த பட்டாம்பூச்சி எடுத்துக்காட்டு. டைனோசர் காலத்து பட்டாம்பூச்சி, அப்போ உண்டான வெகு மோசமான கால சூழலில் டைனோசர் அழிந்து போனாலும் அழியாம இருந்து கொண்டது இந்த பட்டாம்பூச்சி''

நாச்சியார் சொன்ன விசயத்தைக் கேட்ட பூங்கோதை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

''இத்தனை வருசமாகவா இருக்கு இந்த பட்டாம்பூச்சி''

''ஆமா கோதை, பட்டாம்பூச்சிகள் எல்லாம் பூக்கள் உள்ள தாவரங்கள் வரும் முன்னமே இந்த உலகில் வந்த ஒன்று. நீ கவனிச்சிப் பார்த்தா நல்ல இலைகளைத் தேடித் தேடிப் போய் முட்டை இடும். அந்த முட்டையில் இருந்து வெளி வரும் இலார்வா, அதன் பின்னான பூச்சி எல்லாம் இலையை மட்டுமே உணவாகக் கொள்ளும். அதற்குப் பிறகு பட்டாம்பூச்சி உருவமாற்றம்தான் பூக்களில் போய் உணவு கொள்ளும் வழியை கற்றுத் தந்தது''

நாச்சியார் சொன்னதும் பட்டாம்பூச்சி சட்டென பூங்கோதையின் இடது தோளில் இருந்து பறந்து போனது. தன்னை கொஞ்சம் அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டாள் பூங்கோதை. அடுத்து சில நிமிடங்களில் நிறைய பட்டாம்பூச்சிகள் அந்த அறையை பேரழகாக மாற்றிக் கொண்டு இருந்தது.

''உங்க கதையைக் கேட்க எல்லோரையும் கூட்டி வந்து இருக்கும்போலம்மா'' என்றாள் பூங்கோதை.

''கோதை, எனக்கு நிறைய ஆச்சரியமா இருக்கு, என்ன சொல்றதுனு தெரியலை, உனக்குப் பெண் குழந்தை பிறந்தா என்ன பெரு வைப்ப கோதை''

நாச்சியார் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அதே பட்டாம்பூச்சி மட்டும் பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. ஓரிடத்தில் அமராமல் பல பட்டாம்பூச்சிகள் அந்த அறையில் பறந்து கொண்டு இருந்தன.

நாச்சியார் தான் பட்டாம்பூச்சிகள் பற்றி மேலும் சொல்வதா, வேண்டாமா என யோசனையில் மூழ்கினார்.

''நாராயணி'' என்றாள் பூங்கோதை.

(தொடரும்)

Sunday, 8 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 2

2. பட்டாம்பூச்சி

உச்சிகால பூஜைகள் முடிந்த பிறகு கோவிலை மாலை ஐந்தரைமணி வரை மூடி வைத்து விடுவார்கள். வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பூஜைகள் என ஆரம்பிப்பது என வழக்கம். இரவு எட்டு மணிக்கு எல்லாம் கோவில் நடை சாத்தப்பட்டு விடும்.

எல்லா நாட்கள் மாலையிலும் ஏதேனும் ஒரு உணவுப்பொருள் தயார் செய்து வருவோர் போவோர்க்கு எல்லாம் தருவது வழக்கம். சுதாமன் பட்டர் இதனை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என சொன்னார் ஆனால் அது சாத்தியப்படவே இல்லை. சனிக்கிழமை மட்டும் பொங்கல் சுண்டல் என நின்று போனது. பரந்தாமன் வந்த பிறகு இதை அறிந்து இருந்தான். பூங்கோதை வந்த பிறகுதான் தினமும் அன்னம் இடும் பணி தொடங்கியது. கிராமத்தில் இருந்து நாச்சியார் வந்து உதவி செய்து விட்டுப் போவார், பல சமயங்களில் பரந்தாமன் சமைப்பதும் உண்டு.

'சாமி கும்பிட வராங்களோ இல்லையோ, வயிறு நிறைய சாப்பிட்டுட்டுப்  போகட்டும்' என சுதாமன்  பட்டர் அடிக்கடி சொல்வது உண்டு. அன்னம் இடுதல் என்பது பெரிய சேவை. இதனால் சுற்றி இருக்கும் ஊரில் இருந்து பலர் மாலையில் வந்து போவார்கள்.

''கோதை நீ ஓய்வு எடுத்துக்கோ, நானே இன்னைக்கு அன்னம் தயார் பண்ணிருறேன்''

பரந்தாமன் நன்றாகச் சமைக்கக்கூடியவன். பெருமாளுக்கு நெய்வேத்யம் எல்லாம் அவனே தயார் செய்வான்.

''ஒன்னும் இல்லை, நானே செய்றேன்''

''வேணாம் கோதை, நீ சொன்னமாதிரி பிள்ளையா இருந்தா நல்லா இருப்பு கொள்ளட்டும்''

''கோதை''

நாச்சியார் வந்து இருந்தார். நாச்சியார்க்கு வயது அறுபது ஆகிறது. திருமணம் எதுவும் பண்ணாமல் பெருமாளே தன் வாழ்வு என இருந்து கொண்டவர். சில முடிவுகள் எதனால் எடுக்கப்படுகிறது என்பது அந்த முடிவுகளை எடுப்பவர் மட்டுமே மிகவும் தெளிவாகவோ அல்லது குழப்பமாகவோ அறிந்து வைத்துக் கொள்கிறார்கள். நாச்சியார்க்கு இந்த உலகம் குறித்த அறிவு என்பது நிறையவே உண்டு.

''வாங்கம்மா'' பரந்தாமன் வீட்டுக்குள் அவரை அழைத்து வந்தான். பூங்கோதையின் முகத்தைப் பார்த்தார் நாச்சியார்.

''என்னது முகத்தில மாத்தம் தெரியுது'' என்றவர் பூங்கோதையின் நாடி பிடித்து பார்த்துவிட்டு முகம் மலர்ச்சியுடன் சொன்னார்.

''நீ அம்மா ஆகப்போற கோதை''

பரந்தாமன் மனம் அளவிலா மகிழ்ச்சி கொண்டது. பெருமாளே என வேண்டிக் கொண்டான். பூங்கோதையின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.

''உனக்கு நான் துணையா இருக்கேன் கோதை, இந்த முறை நிச்சயம் நல்லபடியா நீ குழந்தை பெத்துருவ''

''எனக்காக வேண்டிக்கோங்கம்மா'' என பூங்கோதை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. சில முறை இப்படி கருத்தரித்து கரு எதுவும் தங்காமல் போன துயரம் அனுபவம் கொண்டவள் பூங்கோதை. மருத்துவர்கள் உன் உடம்பு கருத்தரிச்சி அதை வைச்சிருக்க சக்தி இல்லை எனச் சொன்னது உண்டு.

''கவலைப்படாத கோதை'' என ஒரு தாயின் பரிவோடு சொன்னார் நாச்சியார்.

அப்போது ஒரு பட்டாம்பூச்சி பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. நாச்சியார் மெதுவாக புன்னகை புரிந்தார்.

''பட்டாம்பூச்சி பத்தி ஒரு சொல்வழக்கு உண்டு கோதை. மகிழ்ச்சின்றது ஒரு பட்டாம்பூச்சி போல, அதை யாரும் விரட்டிப் பிடிக்க போனா கையில் அகப்படாமல் பறந்து போகும். அதே வேளையில் நாம பேசாம அது பறப்பது இருப்பதுனு பார்த்துட்டு இருந்தா நம்மேல வந்து தானா உட்காரும், அப்படித்தான் இப்போ உன்மேல உட்கார்ந்து இருக்கு, பட்டாம்பூச்சியும், மகிழ்ச்சியும்''

பட்டாம்பூச்சி சிலமுறை பூங்கோதையை சுற்றி வலம் வந்துவிட்டு பறந்து போனது. மனிதர்களோடு இந்த பறவைகள், பூச்சிகள் இனம் எல்லாம் ஒருவித பரிவோடுதான் இருக்கின்றன.

காலம் கடந்து கொண்டு இருந்தது. பூங்கோதையின் மீது அதிக கவனமும் அக்கறையும் கொண்டான் பரந்தாமன். நாச்சியார் துணைக்கு வந்து போனார். இத்தனை வருடங்கள் காத்து இருந்தாலும் தான் தாயாகப்போகும் நிம்மதி பூங்கோதையின் மனம் எல்லாம் நிறைந்து இருந்தது.

எட்டாவது மாதம் ஆகி இருந்தது. ஒரு நாள் பட்டாம்பூச்சி பத்தி ஒரு கதை சொல்றேன் என்றார் நாச்சியார்.

''பட்டாம்பூச்சி பத்தி எதுக்கும்மா'' என்றார் பூங்கோதை.

''ஆண்டாளோட இடது தோளில் இருக்கும் கிளி, மீனாட்சியின் வலது தோளில் இருக்கும் கிளி பத்தி உனக்குத் தெரியுமா கோதை, அது போல உன் இடது தோளில் வந்து உட்கார்ந்துட்டுப் போச்சே பட்டாம்பூச்சி, நீ எத்தனை வருசம் இந்த ஊர்ல இருக்க என்னைக்காச்சும் உன் மேல பட்டாம்பூச்சி உட்கார்ந்துட்டு போயிருக்கா, நானும் இந்த ஊருல அறுபது வருசமா இருக்கேன், என் மேலே எப்பவாச்சும், இல்லையே''

''கிளி கதை என்னம்மா''

''பட்டாம்பூச்சி கதை சொல்றேன், கேளு''

''எங்கே இதை எல்லாம் படிப்பீங்க''

''பெருமாள்தான் என்னோட அறிவு எல்லாம், அவனோட படைப்புகளை பத்தி தெரிஞ்சிக்கிறது எல்லாம் பேரின்பம் கோதை''

அப்போது ஒரு பட்டாம்பூச்சி பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. பூங்கோதையின் உடல் சிலிர்த்தது.

(தொடரும்)

Saturday, 7 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்

தலைப்பு தந்த அருணா எனும் இராதை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. 

1. அருந்தவப்புதல்வி 

சின்னஞ்சிறு கிராமம். பெருமாள்பட்டி. வயல்வெளிகளும், மரங்களும், செடிகளும், கொடிகளும், ஆடுகளும், நாய்களும், பூச்சிகளும், பறவைகளும், கோழிகளும், மாடுகளும் அதோடு மனிதர்களும் செழிப்புடன் இருந்தார்கள். 

கிராமத்தில் மொத்தம் நாற்பது வீடுகள் மட்டுமே. வீட்டுக்கு ஐந்து நபர்கள் என கணக்கில் கொண்டால் கூட மொத்தம் இருநூறு நபர்களே தேர்வார்கள். அதில் பலர் வெளியூருக்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கியும் போனார்கள். கிராமத்து திருவிழா என தலைகாட்டிப் போவார்கள். கிராமத்திற்கு என்று பள்ளிக்கூடம் எல்லாம் கட்டப்பட்டு இருக்கவில்லை. பெருமாள்பட்டியில் இருந்து ஆறு கிலோமீட்டர்கள்  தொலைவில் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்குத்தான் படிக்க எல்லாம் போக வேண்டும். செம்மண் சாலை மட்டுமே. கிராமத்திற்கு என ஒரே ஒரு கோவில், ஊருக்குப் பெயர் வாங்கித்தந்த பெருமாள் கோவில். அதே ஊரைச் சேர்ந்த பரந்தாமன்தான் அக்கோவிலின் அர்ச்சகர். கோவில் சுற்றி இருந்த நிலங்கள் எல்லாம் ஊருக்குப் பொதுவானது. 

பதினைந்து வருடங்கள் முன்னர் அந்தக் கோவிலின் அர்ச்சகராக இருந்த பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுதாமன் பட்டர் வைகுண்ட பதவியை அடைந்த பிறகு கிராமத்தின் தலைவர் வசுதேவன் தேடி அலைந்து பரந்தாமனை திருத்தங்கலில் இருந்து அழைத்து வந்தார். 

பரந்தாமனுக்கு அப்போது பதினெட்டு வயதுதான். கோவில் அருகே ஒரு வீடு ஒன்றை கோவில் நிலத்தில் பரந்தாமனுக்கு கட்டித்தந்தார் வசுதேவன். பரந்தாமனுக்கு இருபத்தி ஒரு வயது ஆனபோது வசுதேவனே மறுபடியும் தேடி அலைந்து கல்லுப்பட்டியில் இருந்து பூங்கோதையை சம்மதிக்க வைத்து தானே முன் நின்று பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் திருமணம் பண்ணி வைத்தார். பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. 

அன்று காலையும் எப்போதும் போல சூரியன் உதித்து இருந்தது. எல்லா வீட்டின் வாசல்களில் கூட்டிப் பெருக்கப்பட்டு, நீர் தெளிக்கப்பட்டு கோலம் போடப்பட்டு இருந்தன. பரந்தாமன் எப்போதும் போல கோவிலுக்கு கிளம்பினான். பூங்கோதை பட்டு ஆடை உடுத்தி பரந்தாமன் கண்ணே பட்டுவிடுவது போல பேரழகியாகத் தெரிந்தாள். 

''இன்னைக்கு நம்ம பன்னிரண்டாவது வருச திருமண தினம், பெருமாள் நமக்கு கருணையே காட்ட மாட்டாரா''

''நமக்கு குழந்தை இல்லைனு ஆகிப்போச்சு, எதுக்கு வீணா கவலைப்பட்டுக்கிட்டு, ஊருல இருக்க குழந்தைக்கு சேவகம் பண்ணினாள் போதும்''

''நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்ல''

''நீயும் தான் அஞ்சாறு வருசமா சொல்லிட்டு இருக்க, அதெல்லாம் நடக்கிற காரியமா''

''நாம சரியா தேடலை, வசுதேவன் ஐயா கிட்ட சொன்னா தேடிக்  கொண்டு வந்து இருப்பாருல''

''அன்னைக்குச் சொன்னதுதான் இன்னைக்கும் அவருகிட்ட நாம எதுவும் கேட்க வேணாம்'' 

''பெரியாழ்வாருக்கு கிடைச்ச கோதை போல நமக்கு ஒரு பொண்ணு கோவில் நிலத்தில் கிடைக்காதா''

''இப்படி வெட்டியா கனவு காணாம கிளம்பி வா, கோவில் நடை திறக்க நேரம் ஆகிருச்சு''

''நாளு வேற தள்ளிப் போயிருக்கு, நமக்கு ஒரு பிள்ளை பிறக்கும்''

''இப்படி அப்போ அப்போ சொல்லி சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்கிற''

பரந்தாமன் பூங்கோதையின் தலையினைத் தடவியபடி தனது மார்பில் சாய்த்துக் கொண்டான். பல வருடங்கள் பூக்காத, காய்க்காத மரம் சட்டென பூத்து குலுங்குவது எத்தனை மகிழ்ச்சியை அந்த மரத்திற்குத் தருமோ தெரியாது ஆனால் அந்த மரத்தை பல வருடங்களாக வளர்த்து வந்தவருக்கு பெரும் மகிழ்வைத் தருவதாகும். 

கோவில் நடையைத் திறந்தான் பரந்தாமன். புறாக்கள் பறந்தன. கோவில் வளாகத்தை கூட்டிப் பெருக்கினாள் பூங்கோதை. கோவிலுக்குள் இருந்த கிணற்றில் நீர் இறைத்து தெளித்தான் பரந்தாமன். கர்ப்பகிரகத்தை திறந்து சிறு விளக்கேற்றி வைத்தான். பெருமாள் அருகில் சிறு குழந்தை போல தாயார் அமர்ந்து இருக்கும் கோலம். வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக்கூடம் செல்பவர்கள் என இக்கோவிலுக்கு வந்து வணங்கியே செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கென நாலாயிர திவ்விய பிரபந்தம்தனில் சில பாடல்கள் பாடி தீபம் ஆராதனை காட்டுவது வழக்கம். 

வெளியூரில் இருந்து சில வேண்டுதல்கள் என வந்து போவோர்கள் உண்டு. பரந்தாமன் புரியும் சேவை எல்லோரையும் மிகவும் கவர்ந்த ஒன்று. இருவருமே பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தும் இருந்தார்கள். கோவில் சேவை தவிர்த்து கோவில் நிலத்தில் பணிபுரியும் வழக்கம் கொண்டு இருந்தார்கள். அந்த நிலத்தில் இருந்து வரும் பொருட்கள் யாவும் கிராமத்து மக்களுக்கு என பகிர்ந்து தரப்பட்டு இருந்தது. இதை எல்லாம் முறையாக வசுதேவனே பல வருடங்களாக கண்காணித்து வந்தார். பரந்தாமன் வந்த பிறகு அந்த முழு பொறுப்பையும் பரந்தாமனிடம் தந்தார். பரந்தாமனின் நேர்மை வசுதேவனுக்கு பெரும் நிம்மதியைத் தந்து கொண்டு இருந்தது. 

கிராமத்தில் இருந்து சிலர் இந்த நிலத்தில் வந்து வேலை செய்து விட்டுப் போவார்கள். குழந்தைக்கென என்ன என்னவோ கிராமத்துப் பெண்கள் பல யோசனைகளை தந்து போனார்கள். அதெல்லாம் சில வருடங்கள் மட்டுமே, அதற்குப்பிறகு அந்த பெருமாள் மனசு வைச்சாதான் உண்டு என எவரும் குழந்தை பற்றி பேசுவது இல்லை. 

அன்று மதியம் உச்சிகால பூசை முடித்துவிட்டு கோவில் கர்ப்பகிரகத்தின் முன் இருந்த பெரும் வெளியில் பரந்தாமன் அமர்ந்து இருந்தான். தக்காளி, கத்தரிக்காய் என பறித்து வந்து சிறு மூட்டைகளை அங்கே வைத்துவிட்டு பரந்தாமனை பற்றியபடி மயங்கி விழுந்தாள் பூங்கோதை. 

''பூங்கோதை, பூங்கோதை'' பதறினான் பரந்தாமன். 

அங்கே இருந்த தண்ணீர் எடுத்து அவளது முகத்தில் தெளித்தான். சிறிது நேரத்தில் விழித்தவளுக்கு குடிக்கத் தண்ணீர் தந்தான். 

''தலை சுத்தி வந்துருச்சி, வெயிலு இன்னைக்கு அதிகம்'' என மெல்லிய குரலில் சொன்னாள் பூங்கோதை. 

''பேசாம உட்காரு, சாயந்திரம் வெயிலு சாஞ்சப்பறம் வேலை செய்யலாம்ல, எல்லாரும் பதினோரு மணிக்கு வீட்டுக்கு போயிருறாங்க நீ மட்டும் ஏன் இப்படி இருக்க'' 

தன்  வயிறு பிடித்தவள் ''என்னமோ மாதிரி வருது'' என எழுந்து கோவில் நடையைத் தாண்டி நடந்தாள். பரந்தாமன் அவளை கைத்தாங்கலாக பற்றியபடி இருந்தான். வாந்தி எடுத்தாள். வாய் முகம் கழுவிட உதவினான் பரந்தாமன். 

''பித்தமா இருக்கும்'' என்றான் பரந்தாமன். 

''பிள்ளையா இருக்குமோ'' என கண்களில் நீர் மல்க பரந்தாமனிடம் கேட்டாள் பூங்கோதை. 

எங்கிருந்தோ வந்த ஒரு பறவை கோவிலில் இருந்த மணியினை அசைத்துவிட்டுச் சென்றது. கோவில் மணியின் ஓசை எப்போதுமே பேரின்பம் தரவல்லது. 

(தொடரும்)