அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை
இந்த நாவலைப் படித்தபோது
உணர்ந்த எனது உண்மையான உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளேன். முதல் இருபது
பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யமாகவும் இல்லாமல் இருந்தது. இதற்கு
நான் ஒரு இந்துவாக இல்லாமல் இருப்பதும் மற்றும் இந்து கலாச்சாரம் அறியாமல்
இருப்பதுவும் காரணம் ஆகும். எனது மனதை இந்த முதல் இருபது பக்கங்கள் அவ்வளவாக
ஈர்க்கவில்லை. பக்தி பாடல்கள் எனக்குப் புரியாத காரணத்தினால் அவற்றை வாசிக்காமல்
கூட கடந்துவிட்டேன்.
ஈஸ்வரி வந்தபிறகு எனக்கு கதையில்
ஈடுபாடு ஏற்பட்டு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். காதல் கடவுளை வெல்ல இயலுமா
என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.
காதல் சிவனை வென்றது என சொல்லலாமா
என யூகம் செய்கின்றேன். ஈஸ்வரியின் மற்றும் கதிரேசனின் காதல் மிகவும் அழகாகச்
சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களது புரிதலை உணர்ந்து கொள்ள முடிகிறது, அதுவும்
குறிப்பாக ஈஸ்வரி. அவள் தன் கணவன் மீது சந்தேகமோ, பொறாமை குணம் கொண்டவள் போல
தென்படவே இல்லை. உண்மைக் காதல். காதலே எல்லாம். என்னை மெய்மறக்கச் செய்த பகுதி என
குறிப்பிடலாம்.
மதுசூதனன் மற்றும் வைஷ்ணவி
இருவருக்கும் இடையில் காதல் முதலில் இருந்தே அவ்வளவாக சொல்லப்படவில்லை. மதுசூதனின்
பிடிவாத முரட்டு குணம் தென்படுகிறது. அவனது வாழ்வு சீரழிந்தது போல இன்னும் கதையில்
காட்டி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
என்னை கவர்ந்த அம்சங்களில்
ஒன்று கதிரேசன் வைஷ்ணவியிடம் கொண்டு இருக்கும் ஒரு உன்னத நட்பு. மிகவும் அருமை.
அவன் அவளோடு பேசும் போதும் அவளை அவன் நடத்தும் விதமும் அற்புதமான தருணங்கள்.
காதல்தான் எல்லாம். காதல்
இருந்தால் வாழ்வு இருக்கும் என முடித்தவிதம் வெகு சிறப்பு.
அன்புடன்
ஹனுமலர்
No comments:
Post a Comment