Friday, 14 July 2017

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை 

இன்று அனைத்து நகரங்களும் வளர்ந்து நிற்பதற்கு பின்னால் கிராமங்கள் தான் இருக்கின்றன. மனிதனின் பழக்க வழக்கங்கள் அழியாமல் இருப்பதற்கும் உறவின் உன்னத நிலையையும் கிராமங்கள் தான் புரிய வைக்கின்றன. கிராம மக்களின் வாழ்வியல் முறையையும் சமயம் மனிதனின் வாழ்வோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது அடியார்க்கெல்லாம் அடியார்.

இக்கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கிராமத்திற்குள் பயணம் செய்த உணர்வை கொடுக்கும்.நகரத்தில் ள்ள இளைய சமுதாயத்தினர்க்கு இந்நாவல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்

கிராம மக்களின் நடைமுறை வாழ்க்கையில் தொடக்கி உறவுகளின் முக்கியத்துவத்தையும் சமயம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தையும் இக்கதையின் மையகருத்தாக எடுத்து உணர்த்தியிருப்பது சிறப்பு.


இக்கதையின் சில இடங்களில் உலகநியதிகளை எடுத்துரைப்பது மிகவும் சிறப்பு.அறிவியல் சார்ந்த விஷயங்களை சொல்லவும் மறக்கவில்லை.அதை வாசகர்களுக்கு புரியும்படி மிக எளியமுறையில் விவரித்துள்ளார் இராதாகிருஷ்ணன்.சார்லஸ் டார்வின் இயற்கை தேர்வு முறை பற்றி கூறியிருப்பது அற்புதம். இதன் மூலம் இவர் மிகச் சிறந்த அறிவியலார் என்பதை நிரூபித்துளார்

கடவுள் சமயம் சார்ந்த விஷயங்களை எழுதுவதற்கு அதை பற்றிய அறிவும் புரிதலும் மிக முக்கியம். ஆனால் இராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அழகாக தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார். ஆங்காங்கே இறைவனை பற்றி மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் அவற்றின் விளக்கங்கள் அவர்களின் சிறப்புகளை சொல்லியிருக்கிறார். மனிதன் வாழ்வதற்கு அன்பு ஒரே அடிப்படை என்பதை மிக அழகாக உணர்த்துகிறார்

அடியார்க்கெல்லாம் அடியார் என்னும் இந்நாவலில் பல அரிய தத்துவங்களையும் வாழ்வியல் முறைகளையும் தன்னுடைய மிகச் சிறப்பான எழுத்துக்களால் புரியவைத்தமைக்கு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.”யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகஎன்று தான் ஒவ்வொரு கதை ஆசிரியரும் தம் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுகின்றனர். இராதாகிருஷ்ணன் அவர்களும் அந்த எண்ணத்திலேயே தன்னுடைய நாவலை வெளி உலகிற்கு கொண்டுவந்திருக்கிறார் என்பதே என்னுடைய எண்ணம். இது போன்ற பல நாவல்கள் எழுதி எழுத்து துறையில் சாதிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

நன்றி  

                                 
அன்புடன்                                                                                                                                                  
சு.சந்திரகலா  

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை 

இந்த நாவலைப் படித்தபோது உணர்ந்த எனது உண்மையான உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளேன். முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யமாகவும் இல்லாமல் இருந்தது. இதற்கு நான் ஒரு இந்துவாக இல்லாமல் இருப்பதும் மற்றும் இந்து கலாச்சாரம் அறியாமல் இருப்பதுவும் காரணம் ஆகும். எனது மனதை இந்த முதல் இருபது பக்கங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பக்தி பாடல்கள் எனக்குப் புரியாத காரணத்தினால் அவற்றை வாசிக்காமல் கூட கடந்துவிட்டேன்.

ஈஸ்வரி வந்தபிறகு எனக்கு கதையில் ஈடுபாடு ஏற்பட்டு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். காதல் கடவுளை வெல்ல இயலுமா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.

காதல் சிவனை வென்றது என சொல்லலாமா என யூகம் செய்கின்றேன். ஈஸ்வரியின் மற்றும் கதிரேசனின் காதல் மிகவும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களது புரிதலை உணர்ந்து கொள்ள முடிகிறது, அதுவும் குறிப்பாக ஈஸ்வரி. அவள் தன் கணவன் மீது சந்தேகமோ, பொறாமை குணம் கொண்டவள் போல தென்படவே இல்லை. உண்மைக் காதல். காதலே எல்லாம். என்னை மெய்மறக்கச் செய்த பகுதி என குறிப்பிடலாம்.

மதுசூதனன் மற்றும் வைஷ்ணவி இருவருக்கும் இடையில் காதல் முதலில் இருந்தே அவ்வளவாக சொல்லப்படவில்லை. மதுசூதனின் பிடிவாத முரட்டு குணம் தென்படுகிறது. அவனது வாழ்வு சீரழிந்தது போல இன்னும் கதையில் காட்டி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

என்னை கவர்ந்த அம்சங்களில் ஒன்று கதிரேசன் வைஷ்ணவியிடம் கொண்டு இருக்கும் ஒரு உன்னத நட்பு. மிகவும் அருமை. அவன் அவளோடு பேசும் போதும் அவளை அவன் நடத்தும் விதமும் அற்புதமான தருணங்கள்.

காதல்தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும் என முடித்தவிதம் வெகு சிறப்பு.

அன்புடன்
ஹனுமலர்