விருதுநகர் பேருந்து நிலையத்தில் ஊருக்குச் செல்வதற்காக ஆறு மணி பேருந்துக்கு காத்திருந்தேன். எங்கள் ஊருக்குச் செல்லும் நபர்கள் ஆங்காங்கே தென்பட்டார்கள். எப்படியும் கூட்டம் கூடிவிடும். இந்த ஆறு மணி பேருந்தை விட்டுவிட்டால் வரலொட்டியோ மில்லோ சென்று அங்கிருந்து நான்கு மைல்கள் நடந்து போக வேண்டும்.
ஏபிஆர் அவர்களை இன்றுதான் கணக்கு பார்ப்பது சம்பந்தமான வேலை குறித்து சந்தித்துவிட்டு வந்தேன். நாளை வரச் சொன்னார். எங்கள் ஊர் ஆடிட்டர் மாமாதான் இந்த வேலையை எனக்கு ஏற்பாடு செய்து இருந்தார். ஏபிஆர் வியாபார மண்டி என்றால் விருதுநகரைச் சுற்றி இருக்கும் கிராமத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
பேருந்துகள் வருவதும் மக்கள் ஏறிக்கொள்வதும் போவதுமாக இருந்தன. சில பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் வெளியே நின்று போவதாகவும் இருந்தன. இந்த விருதுநகர் என்றால் வியாபாரம், வெயில், ஐந்தாம் திருவிழா, காமராசர் என்றே ஊர் பெருமை பேசும்.
மல்லாங்கிணர் எம் எஸ் பியில் தான் படித்துவிட்டு அருப்புக்கோட்டை எஸ் பி கே கல்லூரியில் அக்கவுன்டசி படித்துவிட்டு உடனே வேலை கிடைக்கும் என்று யாரும் எதிர்ப்பார்க்க முடியாது. ஒரு வருடம் சில இடங்கள் ஏறி இறங்கி ஆடிட்டர் மாமாவிடம் சம்பளமின்றி உதவியாளனாக இருந்தேன். வாய்ப்பு வரப்ப சொல்றேன்பா என்றே சொல்லி சொல்லி மாதங்கள் ஓடிப்போயிருந்தன.
இந்த பேருந்து நிலையத்தைச் சுற்றி இரண்டு தியேட்டர்கள், புரோட்டா கடைகள் மருத்துவமனைகள், மர வியாபாரம் என பல இருக்கிறது. ஏபிஆர் கடையில் இருந்து மர வியாபார கடையைத் தாண்டித்தான் இந்த பேருந்து நிலையத்திற்கு வர முடியும். அப்படி இல்லாது போனால் ரத்னா போட்டோ ஸ்டூடியோ வழியாகவும் வரலாம். எல்லா பேருந்துகளும் நிரம்பி வழியும்.
பேருந்து வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மனிதர்களை சுற்றிப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தேன். என்னை நோக்கி வருவது போல வந்து விலகிச் சென்ற மனிதர்களும் இருந்தார்கள்.
மழை பெய்ய வேண்டும் என வேண்டாத நாளில்லை. பேருந்து நிலையம் எனில் பேருந்துகளின் இரைச்சல் சத்தம் அதுவும் ஒலி அழைப்பான் சத்தம் எல்லாம் காது கிழியும். அதையும் தாண்டி மனிதர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். பேருந்து நிலையத்தில் கழிவறையும் உண்டு. இதுவரை பல முறை பேருந்து நிலையம் வந்து இருந்தாலும் ஒருநாள் கூட அந்த கழிவறைக்குள் சென்றது இல்லை.
''அப்படி ஓரமா நிக்கிறது'' அடையாளமே தெரியாத ஒருவர் என்னை நோக்கித்தான் சத்தம் போட்டாரா என்று கூட தெரியவில்லை.
''எனக்கு ஒரு உதவி வேனும்''
எனது உயரத்திற்கு என்னைப்போலவே ஒல்லியாக மாநிறத்தில் ஒரு பெண் வந்து என்னிடம் தான் கேட்டாள் . அவளது தோழிகள் எவரேனும் விளையாடுகிறார்களா என சுற்றி பார்த்தேன். எங்கேனும் கேமராக்கள் இருக்கின்றவா என்ற தேடலும் அப்போது இருந்தது.
''பணத்தைத் தொலைச்சிட்டேன் ஒரு பத்து ரூபா தாங்க''
இதே பேருந்து நிலையத்தில் சில தடவை ஊருக்குப் போக காசில்லை என சிலர் ஏமாற்றித் திரிபவர்களை கண்டு இருக்கிறேன். ஆனால் இந்தப் பெண் பார்த்தால் அப்படி தெரியவில்லை. பாம்பு வடிவ போட்டு ஒன்று வைத்து இருந்தாள். இந்த ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் எந்த மடையன் கண்டுபிடித்தானோ என்றே நினைத்தேன்.
''இருந்தா கொடுங்க''
பையில் ஐம்பது ரூபாய் இருந்தது. அப்படியே எடுத்து அவளிடம் தந்தேன். பணத்தை வாங்கியவள் ஒரு நிமிஷம் என ஒரு கடையை நோக்கிப் போனாள். அவள் நீல நிறத்தில் சேலை அணிந்து இருந்தாள் . நான் நீல நிறத்தில் சட்டை அணிந்து இருந்தேன். அப்போதுதான் நீல நிற சேலைகளும் சட்டைகளும் அங்கே நிறைய தென்பட்டன.
பணத்தைத் தந்துவிட்டு அப்படியே நின்று கொண்டிருந்தேன். என்ன நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது என என்னால் கொஞ்சம் கூட யூகிக்க இயலவில்லை. நாற்பது ரூபாய் திருப்பித் தந்தாள்.
''உங்க மொபைல் நம்பர் தாங்க''
கொஞ்சம் கூட யோசிக்காமல் மொபைல் நபரைத் தந்தேன். குறித்து கொண்டவள் நன்றி என்று சொன்னபோது அவளது கண்களில் நிம்மதி இருந்தது.
திருமங்கலம் செல்லும் பேருந்தில் சென்று ஏறிக்கொண்டாள். அவள் என்னைப் பார்ப்பது போலவே இருந்தது. சிறிது நேரத்தில் எனது மொபைல் போனில் பண உதவிக்கு நன்றி - சபிதா என்று வந்தது.
இவ்வுலகில் ஏமாற்றுக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பது பொய். இப்படித்தான் மதுரை பேருந்து நிலையத்தில் சென்ற வருடம் ஒருமுறை என்னிடம் ஒரு நடுத்தர வயதுமிக்கவர் தம்பி உன் அப்பா எனக்குத் தெரியும் எனக்கு ஒரு ஐம்பது ரூபாய் தா உங்க அப்பாகிட்ட கொடுத்துருறேன் என்றதும் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே பணம் இல்லையினா மூட்டையை வண்டியில் ஏத்தமாட்டாங்க அவ்வளவு பணம் இல்லை கொடு தம்பி என்றதும் மரமண்டைத்தனமாக பணத்தை எடுத்துக் கொடுத்தேன். பெயர் கூட வாங்கி கொள்ளவில்லை. அந்த நிகழ்வை அப்பாவிடம் சொன்னபோது கடுமையாகத் திட்டினார். இரக்கம் இருக்கலாம் ஏமாற மட்டும் கூடாது என அறிவுரை சொன்னார்.
இன்று ஐம்பது ரூபாயை எடுத்துத் தந்தேன். அவள் அப்படியே ஓடிப்போய் இருந்தால் என்ன ஆவது. இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த சமயம் நான் ஊர் செல்லும் பேருந்து எனது ஊருக்கு பேருந்து நிலைய வாயிலை விட்டு கிளம்பிப் போய்க்கொண்டு இருந்தது.
இனி ஓடிப்போய் பிடிக்கவும் முடியாது. ஊருக்கு நடந்துதான் போக வேண்டும். பேராலி ட்ரிப் இன்னைக்கு கட்டாம் அதான் வக்காலி வேமா வந்துட்டுப் போயிட்டான் என ஒருவர் அவரது ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டு இருந்தார். காரியாபட்டி செல்லும் பேருந்து வந்து நின்றது.
ஓட்டுநரிடம் சென்று வேகமாக செல்ல முடியுமா என கேட்க வேண்டும் போலிருந்தது. சில வேளைகளில் இந்த அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு போகும். எப்படியும் கலெக்சன் பார்க்க வேண்டும் என அவர்களுக்குள் இருக்கும் போட்டியினால் சாலை சீர் கெட்டதுதான் மிச்சம்.
மில்லில் இறங்கி நீர் அற்ற ஓடையை கடந்து வீட்டுக்குப் போனேன். அதற்குள் அவளிடம் இருந்து இன்னொருசெய்தி வந்தது.
'நாளை விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு மாலை ஐந்து மணிக்கு வந்தால் பணத்தைத் திருப்பித் தருகிறேன் - சபிதா ' என்று இருந்தது.
'சரி- சபேசன்' என பதில் அனுப்பினேன்.
அவளது முகமும் பாம்பு பொட்டோடு நினைவுக்கு வந்தது. எங்கள் ஊரில் சிலரது முகமும் பாம்பு பொட்டோடு வந்து போனது. வெள்ளையம்மாள் அக்கா எப்போதும் பாம்பு பொட்டு வைத்திருக்கும். தன் புருசனோடு சண்டை போடாதே நாளே இல்லை. ஒருநாள் நான் கூட எதுக்குக்கா இப்படி எப்பப் பார்த்தாலும் மாமா கூட சண்டை போடுற என சொல்லி இருக்கிறேன். அப்போது அதற்கு அந்த கடன்கார மனுசனை பத்தி என்கிட்ட பேசாதே என சீறியதில் இருந்து நான் கேட்டதே இல்லை.
இந்த குட்டிப்பெண் சுகி கூட பாம்பு பொட்டு வைத்து இருப்பாள். ஒருமுறை சோழிங்கன் மாமா தொலைக்காத பணத்தை தொலைத்துவிட்டதாக அழுது புலம்பியபோது வீட்டுக்குள் தவறுதலாக வைத்துவிட்டுப் போயிருந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுத்து தந்தாள் சுகி. தொலைப்பது வேறு. ஏமாறுவது வேறு.
எதற்கு இந்த பாம்பு பொட்டு எல்லாம் வைக்கிறார்கள். பாம்பு எல்லாம் விசுவாசம் கொண்டது இல்லை. இந்த உலகில் எந்த ஒரு உயிரினங்களும் விசுவாசம் கொண்டது இல்லை. எலும்புத் துண்டுக்காக வாலை ஆட்டும் நாயைத்தான் நன்றியுள்ளது என சொல்லி வருகிறோம்.
''போன காரியம் என்னாச்சுப்பா?''
''நாளைக்கு வர சொல்லி இருக்காருமா''
''இன்னைக்குப் போக வேணாம்னு சொன்னேன் கேட்டியா''
அம்மா சொல்லியும் கேட்காமல் நான் சென்றது சபிதாவை சந்திக்கத்தானா என்பது போலிருந்தது.
''கிடைக்கிற வேலையில் சேர்ந்துரு பிறகு பாத்துக்கலாம், நீயும் எத்தனை நாளு இப்படியே இருப்ப''
''சரிம்மா''
அப்போதுதான் அப்பாவும் வந்து இருந்தார்.
''நான் கல்குறிச்சி அழகர்கிட்ட சொல்லி இருக்கேன். இங்கே கிடைச்சா பாரு இல்லைன்னா அங்க போ''
அப்பாவும் எனக்காக வேலை தேடிக்கொண்டு இருந்து இருக்கிறார் என சிலர் சொன்னபோது தெரிந்தது. உங்கப்பாரு சொன்னாரு என்றே சொல்லி இருக்கிறார்கள், ஆனால் வேலைதான் தந்தபாடில்லை.
என் அம்மாவும் என் அக்காவும் பாம்பு பொட்டு வைத்துக் கொண்டதே இல்லை. என் அக்கா திருமணம் ஆகிப் போனதுடன் சரி. மீண்டும் பாப்பா பிறந்தபின் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றாள். இந்த மண்ணில் விளையாடிய காலங்களை எல்லாம் மறந்து போய்விட்டாள் என்றுதான் நினைத்தேன்/
ஒருமுறை அக்காவைப் பார்க்கச் சென்றபோது எங்களை எல்லாம் மறந்துட்டியாக்கா என்றே கேட்டு வைத்தேன். நோய்வாய்ப்பட்ட மாமியாரைப் பார்க்க வேண்டும் அதனால் அவரை விட்டு எங்கும் என்னால் வர முடியாது என வளைகாப்பு கூட அங்கேயே வைத்துக் கொண்டாள். அவளது நியாயம் சரியாகத்தான் இருந்தது.
விசுவாசம், தேவைகள் இருப்பின் விசுவாசம். மச்சான் உன் அக்காவை கட்டியது என்னோட அதிர்ஷ்டம் என்பார் மாமா. இதே அக்கா தனிக்குடித்தனம் போக வேண்டும் என அடம்பிடிக்கும் அக்காவாக இருந்தால் என்ன செய்து இருப்பார் என்றே யோசித்தேன். ஆள் வைச்சிக்கிற வேண்டிதானேக்கா என்று சொல்ல நினைத்து சொற்களை விழுங்கி இருக்கிறேன்.
இரவு எல்லாம் சபிதா குறித்தே நினைத்து இருந்தேன். அவள் எதற்கு என்னிடம் வந்து கேட்க வேண்டும். இந்த உலகில் சில விசயங்கள் எதற்காக நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாது போலிருந்தது.
காலையில் எழுந்து மில் வரை நடந்து வந்து பின்னர் விருதுநகர் வந்து ஏபிஆர் அவர்களை சந்தித்தேன். வேலையில் அன்றே சேர்ந்தேன். மனது கொண்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. அப்போதும் சபிதா பற்றியே எண்ணம் இருந்தது. அவளிடம் இருந்து எந்த செய்தியும் வந்து இருக்கவில்லை. இன்று வருவாயா என கேட்க நினைத்து வேண்டாம் என விட்டுவிட்டேன்.
வேலை அத்தனை கடினமான ஒன்றாக இல்லை. அப்போது வந்த ஒருவர் பையன் புதுசா மளமளன்னு வேலையை செய்றாப்ல என சொன்னபோது இன்னும் சந்தோசமாக இருந்தது. மதிய வேளை உணவு கருவாடும் தயிர் சாதமும் கொண்டு வந்து இருந்தேன். அங்கேயே சாப்பிட்டேன். எப்போதும் காத்தாடி சுற்றிக்கொண்டே இருந்தது.
அந்த கடைக்கு முன்னால் ஒரு அரச மரம் இருக்கிறது. பிள்ளையார் இல்லாத அரச மரத்தை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் ஊரில் கூட ஒரு அரச மரம் இருக்கிறது. ஆனால் பிள்ளையார் உண்டு.
''இந்தாணே டீ'' சரியாக மூனு மணிக்கெல்லாம் டீ மேசைக்கு வந்து சேர்ந்தது. டீ வைத்த பையனை ராமர் டீ ஸ்டாலில் வைத்துப் பார்த்து இருக்கிறேன்.
''எப்படிடா இருக்கே''
''புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கியாணே''
''ம்ம் எப்படிடா இருக்கே''
''நல்லா இருக்கேணே''
அங்கே சென்று டீ குடிக்கும்போதெல்லாம் இவன் தான் கொண்டு வந்து தருவான். அவனது சிரித்த முகமும் நன்றாக துவைத்து அயர்ன் போட்ட சட்டை டவுசரும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒருவரை அறிவாக பார்க்கிறோமோ இல்லையோ அழகாக பார்க்க விருப்பம் கொள்கிறோம்.
அங்கே வருபவர்கள் அவனை பெரிய கலெக்டர் உத்தியோகம் பாக்குற டிப்டாப்பா இருக்கே என கேலி பண்ணுவார்கள். இவனும் பதிலுக்கு விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் ஒன்னும் தப்பில்லை சார் என்பான். அவனை அந்த கடையில் பார்க்கும்போது எப்படிடா இருக்கே என்பதுதான் அவனிடம் நான் கேட்கும் கேள்வி. அவன் என்னணே இன்னும் வேலை கிடைக்கலையா என்பான்.
எண்ணெய், சூடு என இருந்தாலும் அவனது வேகம் கண்ணைப் பறிக்கும். எட்டு வரைப் படித்து இருக்கிறான். அவனிடம் படிக்கிறயா என்று கேட்டபோது படிக்க வசதி இல்லைணே எனும் சொற்களில் என்னை நினைத்துக் கொள்வேன். என் அப்பா அம்மா தோட்ட வேலை காட்டு வேலை என கடினமாக உழைத்து சேர்த்த பணம்இல்லையெனில் நானும் படித்து இருக்க முடியாது. கொஞ்சம் பணம் இருந்தா தாணே நானே ஒரு கடை போட்டு காட்டுறேன் என்று ஒருமுறை சொன்னான். அப்போதுதான் நான் வேலை தேடும் விசயத்தை அவனிடம் சொல்லி வைத்தேன்.
இன்னும் கொஞ்சம் நேரத்தில் பஜ்ஜி, போண்டா என ராமர் டீ ஸ்டால் களைகட்டிவிடும்.
கடை நாலு மணிக்கு எல்லாம் மூடிவிட்டோம். ஏழு மணிக்கு ஆரம்பித்து நாலு மணிக்கு முடியும் வேலை. சரியாக நாலு மணிக்கு வந்து டீ கிளாஸ் எடுத்துட்டுப் போனான்.
''உனக்கு வேலை கிடைச்சது எனக்கு சந்தோசமா இருக்குணே''
அவனது கண்களில் நிறைய சந்தோசம் இருந்தது. அவனிடம் நான் சம்பாதிச்சு பணம் தரேன் கடை போடுடா என சொல்ல வேண்டும் போலிருந்தது.
''இனி தினமும் உன்னைப் பார்ப்பேன்டா''
''ஆமாணே''
அவனுக்குள் எத்தனை உற்சாகத்தை என்னால் தந்து இருக்க முடிந்து இருக்கிறது. என்னிடம் என்ன தேவையை அவன் எதிர்பார்க்கிறான். நான் சந்தோசமாக இருப்பதைத் தவிர அவனுக்கு வேறு என்ன தேவை என்னிடம் இருக்க இயலும். நான் சம்பாதித்து அவனுக்கு கடை போடும் அளவுக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்பதை ஒன்றும் அவன் அறியாதவன் இல்லை.
அவனுடனே நடந்து போனேன்.
''இருணே, பஜ்ஜி கட்டித் தரேன். அம்மாவுக்கு கொடுணே''
என்னவேண்டுமெனிலும் சொல்லிக்கொள்ளுங்கள் இந்த உலகில் அன்பு போன்ற ஒரு உன்னதமான விசயம் எதுவும் இல்லை.
ஒரு பையில் போட்டு வந்து தந்தான்.
''எவ்வளவுடா?''
''என் கிப்ட்ணே, கொண்டு போணே''
பத்து ரூபாயை வலுக்கட்டாயமாக அவனது கையில் திணித்துவிட்டு நடந்தேன். அவனுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என மனம் நினைத்துக் கொண்டே இருந்தது. யார், எங்கு இருக்கிறான் என்ற எந்த விபரமும் அறியாத ஒருவனிடம் நான் கொண்டு இருக்கும் இந்த அன்பு எனக்கு விளங்கிட முடியாமலே இருந்தது. ஒரு பள்ளிக்குச் செல்லும் பையன் போலவே அந்த கடையில் அவன் எனக்குத் தென்படுவான். பெருமாள் என்றே பெயரை ஒருமுறை சொல்லி இருக்கிறான்.
பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். சபிதா சரியாக ஐந்து மணிக்கு வந்தாள்.
''இந்தாங்க பத்து ரூபாய்''
வாங்கிக்கொள்ள மனம் மறுத்தது.
''என்னை ஏமாத்துக்காரினு நினைச்சீங்களா, கடன்காரியாக்க வேணாம்''
வாங்கி சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். வெவ்வேறு நிற உடையே அணிந்து இருந்தோம். இன்று அழகாக பொட்டு வைத்து இருந்தாள். ஸ்டிக்கர் பொட்டு இல்லை. வரிசையாக அமைந்த வெள்ளைநிறப் பற்கள். ஒரு அழகுப் பொம்மை போலவே தென்பட்டாள்.
''எங்கே வேலை பாக்கிறீங்க?''
நான் இந்த கேள்வியை அவளிடம் எதற்கு கேட்டோம் என்றே இருந்தது. அதற்குள் அவள் லைஸாண்டர் ஹாஸ்பிடல் ரிசெப்ஷனிஸ்ட் என்றாள். சரளமான பேச்சு தெளிவான குரல். நான் இன்னைக்குத்தான் அக்கவுண்ட் செக்சன்ல ஏபிஆர் கடையில் சேர்ந்து இருக்கிறேன் என்றேன்.
''என்கிட்ட எதுக்கு பணம் கேட்டீங்க?''
நானா இந்த கேள்வியை கேட்கிறேன்.
''உங்களை பார்த்தப்போ பணம் கிடைக்கும்னு தோனிச்சி''
''பாம்பு பொட்டு எதற்கு வைச்சி இருந்தீங்க''
''பிடிச்சி இருந்துச்சி வைச்சி இருந்தேன்''
அவளுடன் நிற்பது பெருமிதமாக இருந்தது. அவளது ஊர் திருமங்கலம் கள்ளிக்குடி என்று சொன்னாள். அதற்குள் மதுரை செல்லும் பேருந்து சில கடந்து போயிருந்தது. எனது ஊர் கீழப்பட்டி என சொல்லி வைத்தேன்.
தினமும் அவளை சந்திக்க வேண்டும் போலிருந்தது.
சபிதா, பெருமாள், சபேசன் என்கிற நிழல் மனிதர்களோடு உண்மை போல எண்ணி அவர்களுடனே தொடர்ந்து வாழ்வதற்கு எவனோ ஒருவன் இந்த உலகில் பிறந்து இருக்கக்கூடும்.
(முற்றும்)

No comments:
Post a Comment