பகுதி 8 பகுதி 7 பகுதி 6 பகுதி 5 பகுதி 4 பகுதி 3 பகுதி 2 பகுதி 1
9.
ரகுராமன் தான் சொன்ன நாளுக்கு முன்னதாகவே கல்லூரியில் இருந்து தோணுகாலுக்குச் சென்றான். அவனைப் பார்த்த அழபா, பழனிச்சாமி சுப்பிரமணியன் என எல்லோரும் சந்தோசம் கொண்டார்கள். எத்தனை நாள் இருப்ப என்றவர்களுக்கு சனிக்கிழமை காலையில் கிளம்ப இருப்பதாக கூறினான். அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.
ரகுராமன் முதலில் தனது ஊரில் உள்ள அனைவரையும் தனது பக்கம் திருப்ப வேண்டும் என ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஊரின் மந்தையில் அனைவரையும் வெள்ளிக்கிழமை இரவு வருமாறு கூறினான். பெயர், சின்னம், கொடி எல்லாம் தனது மனதில் பதித்துக் கொண்டு தன்னோடு எடுத்துக் கொண்டான். ஆனால் எவருமே அவனது பேச்சை கேட்டது போலத் தெரியவில்லை. இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என ஊரில் இருந்தவர்கள் சத்தம் போட்டார்கள். எதையும் பொருட்படுத்தாமல் ரகுராமன் சின்ன கூட்டமாவது வர வேண்டும் எனத் தொடர்ந்தான். ரகுராமனுடன் கிரிக்கெட் விளையாடும் நபர்கள் ஆதரவு தருவதாக சொன்னார்கள்.
அன்று இரவு கொஞ்ச நபர்கள் வந்து மந்தையில் அமர்ந்தார்கள். ரகுராமனின் வீட்டில் அனைவருமே வந்துவிட்டார்கள். ரகுராமன் ஊருக்குப் பொதுவான ஒலிப்பெருக்கி மூலம் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் மக்கள் வந்து சேர்ந்தார்கள்.
''நான் மக்கள் ஒற்றுமை இயக்கம் அப்படின்னு கட்சியை இந்த இடத்தில் வைச்சி நான் ஆரம்பிக்கிறேன், அதுக்கு உங்களுடைய ஆதரவுதான் வேண்டும். கட்சியோட சின்னம் இதயம். இதை எப்படியும் நடத்திக்காட்டுவேன். நம்ம ஊருல இருக்க எல்லாரும் இனிமே இந்த மக்கள் ஒற்றுமை இயக்கத்தோட உறுப்பினராக மாறனும்''
கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்தார்.
''கால காலமா நாங்க ஆதரிக்கிற கட்சியை விட்டுட்டு வானு சொன்னா நாங்க வர முடியுமா? அதுவும் நீ சின்னப்பையன் வேற உனக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும்னு கட்சி ஆரம்பிக்கிற. பேசாம எங்க நேரத்தை நீ வேஸ்ட் பண்ணாத''
ரகுராமன் அவரை அமரச் சொன்னான். அவரும் மறு பேச்சு பேசாமல் அமர்ந்தான்.
''நீங்க வேற வேற கட்சி உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனா நான் நம்ம ஊருக்காரன் ஒரு கட்சி ஆரம்பிக்கிறப்ப நம்ம ஊரே என்னை ஏத்துக்கலைன்னா அப்புறம் எப்படி மத்த ஊர்க்காரங்களை எல்லாம் சம்மதிக்க வைக்கிறது. நம்ம ஊர்த்தலைவர் ராமசுப்பு ஐயா என்னோட கட்சியை ஆதரிக்கனும். அப்படி நீங்க ஆதரிக்காட்டியும் பரவாயில்லை இதுதான் கட்சி, இதுதான் சின்னம். கட்சிக்கொடி ஒரு வெள்ளை நிற பின்னணியில் ஒரு சாம்பல் நிற புறா''
ராமசுப்பு எழுந்தார்.
''நீ கட்சி ஆரம்பி ஆதரவு கேளு ஆனா ஆதரிக்கிறதா, வேணாமானு அவங்க அவங்க முடிவு செய்யட்டும், என்னோட கட்சியை விட்டுட்டு நான் மாறமாட்டேன். நான் கிளம்பறேன்''
ஊர்த் தலைவர் ராமசுப்பு கிளம்பிச் சென்றதும் அவரோடு பலரும் கிளம்பிப் போனார்கள். இன்னும் பலர் அமர்ந்தபடியே இருந்தார்கள்.
''அடுத்த வருசத் தேர்தலுக்குள்ள நம்ம கட்சியை பெரிசாக்கி எல்லாத் தொகுதியிலும் தனிச்சி நிக்கணும். எந்த கட்சிகாரங்களையும் நாம திட்டிப் பேசக்கூடாது. நீங்க எல்லோரும் வந்து இந்த கட்சி பெயர், சின்னம், கொடி இதை எல்லாம் ஆசிர்வதிக்கணும்''
பலர் எழுந்து வந்து ஆசிர்வாதம் பண்ணினார்கள். ரகுராமனின் அம்மா, அப்பாவும் வந்தார்கள்.
''சொல்லச் சொல்ல கேட்க மாட்ற, ஆனா முடிவு பண்ணிட்ட அதுக்கான வழியைப் பாரு''
ரகுராமனின் அப்பாவின் வார்த்தை அவனுக்குள் பெரும் பலம் ஒன்றை உருவாக்கியது. ரகுராமன் தனது நண்பர்களை எல்லாம் அழைத்தான்.
''ஒவ்வொரு சனிக்கிழமை இங்கே வருவேன். நீங்க என்ன பண்ணனும்னா நம்ம ஊரை சுத்தமா வைச்சிருக்கணும், ஒருத்தருக்கு உதவினா ஓடோடிப் போய் செய்யணும். கிரிக்கெட் விளையாடறது எல்லாம் மறந்துருங்க. காசு விசயத்தில் சரியா இருங்க. கல்குறிச்சி, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி அப்படின்னு முதலில் போவோம்''
அழகர்பாண்டி குறுக்கிட்டான்.
''அருப்புக்கோட்டை வேணாமா''
''போவோம், புதிய கட்சி உதயம்னு ஒரு பெரிய விளம்பரம் தருவோம்''
''பணம் செலவாகுமே, நீ வேலைக்குப் போனா பரவாயில்லை, படிக்க வேற செய்ற''
''விவசாய நிலத்தில வர பணம் கொஞ்சம் ஒதுக்குவோம், நீங்க எல்லாம் வேலை செய்ற பணம் இதுல போடுவோம். நமக்கு ஆதரவு தர பெரியவங்க எல்லாம் கட்சி உறுப்பினர்களாக மாத்துவோம்''
எல்லாம் விபரமாக சொல்லி முடிக்க இரவு பத்து ஆனது. ரகுராமன் வீட்டிற்குச் சென்றான்.
''விளையாட்டுத்தனமில்லை, இப்பவே உனக்கு எதிரிங்க தயாராகி இருப்பங்க''
அப்பாவின் எச்சரிக்கை மனதில் ஓடியது. எவரைப் பற்றியும் குறை சொல்லாமல் மக்களுக்கு நிறை செய்வதே பணி என்று இருந்தால் எதற்கு எதிரிகள் உருவாகப் போகிறார்கள் என யோசித்தான் ரகுராமன்.
ஊரில் இருந்தே தொடங்க வேண்டும் எனும் தனது எண்ணத்தால் தன்னுடன் சண்முகப்பிரியாவை அழைத்து வரவில்லை. நாளை சண்முகப்பிரியா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் எல்லாம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என உறங்க ஆரம்பித்தான்.
மக்களுக்காக உழைக்கும் நோக்கம் உடைய கட்சிகள் தனித்தனியாக இருப்பதன் அவசியம் என்ன, கொள்கைகள் அற்ற கட்சிகள், கொள்கைகள் வெவ்வேறான கட்சிகள் கூட்டணி என அமைத்துக் கொள்வதன் அவசியம் என்ன? மக்கள் எப்போதும் தமது சிந்தனைகளை தமக்குள் மட்டுமே வைத்துக் கொள்கிறார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment