Monday, 22 February 2016

மாறா மரபு - 4

6. எவருக்குத் தெரியும்

ஜெகன் சிவராமிடம் பேசிட்டு வா என அனுப்பினான்.

‘’சிவா நீ இப்போ எங்கே இருக்க’’

‘’ஒரு முக்கியமான விசயமா வெளியூர் வந்து இருக்கேன்’’

‘’அதான் எங்கே?’’

‘’திருச்சி’’

‘’எப்போ திரும்பி வருவ?’’

‘’நாளைக்கு வந்துருவேன். என்ன விஷயம்’’

‘’கொஞ்சம் கேப்ஷ்யூல்ஸ் இன்னைக்கு எடுக்கலாம்னு இருக்கேன், அதான் எடுத்த உடனே உங்கிட்ட கொடுக்கணும் இல்லைன்னா பிரச்சினை வந்துரும். ராம் கண் கொத்தி பாம்பா இருக்கான். அவனே இனி வரப்போற தம்பதிகளுக்கு கேப்ஷ்யூல்ஸ் தந்துக்கிறேனு சொல்லிட்டான். அவன் வந்து அதை எடுத்து இடம் மாத்துறப்ப ஏதாவது பண்ணனும்’’

‘’சுபா, நீ எதுவும் பண்ண வேணாம். அந்த கேப்ஷ்யூல்ஸ் வைச்சி நாம ஒண்ணும் பண்ணமுடியாது. அதனால கவலைப்பட வேண்டாம்’’

‘’என்ன சிவா சொல்ற’’

‘’ஆமா, நீ கொஞ்சம் பதறாம இரு. பார்த்துக்கிரலாம்’’

‘’சரி, நீ வந்ததும் எனக்கு தகவல் சொல்லு’’

‘’சரி’’

‘’பேசியாச்சா சிவா. நான் காட்டுற விஷயத்தை கொஞ்சம் கவனமாப் பாரு.

பெரும்பாலான பாக்டீரியாக்களில் எம்ஆர்என் ஏவில் இந்த இன்ட்ரான்கள் கிடையாது, ஆனால் எல்லா உயர்நிலை உயிரினங்களில் இந்த எம்ஆர்என் ஏக்களில் இன்ட்ரான்கள் உண்டு. இந்த எம்ஆர்என் ஏக்களில் உள்ள இன்ட்ரான்களை நீக்கியபின்னரே ஒரு எம்ஆர்என் ஏ புரதம் உண்டாக்கும் நிலைக்குச் செல்லும்.

ஒரு பாக்டீரியா தனது உயிரை பிறவற்றில் இருந்து எப்படி காத்துக் கொள்கிறது என்பதே அவை இன்னமும் இவ்வுலகில் தொடர்ந்து இருக்கக்காரணம். வைரஸ் பாக்டீரியாவை தாக்கும் தன்மை கொண்டது. ஆனால் இந்த பாக்டீரியா தனது டி என் ஏவை வேறு எந்த ஒரு டி என் ஏ வும் தாக்கி கலந்து விட முடியாதபடி தன்னில் இருக்கும் புரத வினையூக்கி மூலம் சரியாக வெட்டிவிடும் தன்மை கொண்டது. இதனால் பிற டி என் ஏ பாக்டீரியா டி என் ஏ வில் கலந்துவிட முடியாது. இதை இந்த பாக்டீரியா மெதிலேசன் வினையூக்கி மூலம் ஒரு மீதைல் மூலக்கூறுதனை தனது டி என் ஏ வில் உள்ள நியூக்ளிக் அமிலங்களில் சேர்க்கும். இப்படி செய்யும் பொது எவை எல்லாம் மீதைல் மூலக்கூறு இல்லையோ அவை எல்லாம் வெளி டி என் ஏ என பாக்டீரியாவில் உள்ள வினையூக்கி முடிவு செய்யும். இப்போது வேறு ஒரு வினையூக்கி வந்து வெட்டப்பட்ட தேவையற்ற டி என் ஏ வை தன்னில் கிரகிக்க வெட்டப்பட்ட தேவையான டி என் ஏக்கள் இணைந்து இப்போது ஒரு முழு டி என் ஏ இருக்கும்’’

‘’அது பாக்டீரியா, ஒரு செல் உயிர். ஆனால் மனிதர்கள் அப்படி இல்லையே. எவ்வளவு பெரிய பிரச்சினை வரும் தெரியும்தானே ஜெகன்’’

‘’அதனால் என்ன, பாக்டீரியா சில நேரங்களில் வைரஸ் டி என் ஏ வை தனதாக்கி கொள்ளும் தன்மை கொண்டது. அப்போது அந்த வைரஸ் டி என் ஏ வை கூட மெதிலேசன் பண்ணி தனதாக்கிக் கொள்ளும். அதைப் போல தான் இந்த இன்ட்ரான்கள். உனக்குத் தெரியாதது இல்லை. இந்த இன்ட்ரான்கள் எப்படி வந்தது ஏன் வந்தது எதற்கு இருக்கிறது என புரியாமல் இருந்தது. உன்னோட ரிசர்ச்ல கூட பண்ணி இருப்ப. இப்போ இந்த இன்ட்ரான்கள் பல முக்கிய வினையூக்கி, புரதம் உருவாக காரணமாக இருக்கிறது. எப்படி பாக்டீரியா செயல்படுதோ அதைப்போல நமது செல்கள் செயல்படுது. எம் ஆர் என் ஏ உருவாகும் முன்னர் இந்த இன்ட்ரான்கள் எப்படி ஒரு வினையூக்கி வெட்டுதுன்னு நான் ரிசர்ச் பண்ணி இருக்கேன். அதை வைச்சிதான் நான் இந்த மூலக்கூறு உருவாக்கி அதே வினையூக்கி போல செயல்பட வைச்சி இருக்கேன். அதாவது டி என் ஏவில் இதை செய்றது. எதுக்கு எம் ஆர் ஏ வரைக்கும் காத்து இருக்கணும்’’

‘’ஜெகன் எனக்கு இது சாத்தியம்னு தோணலை. நீ உருவாக்கின மூலக்கூறு எப்படி வேலை செய்யும்னு உனக்குத் தெரியும்’’

‘’இந்த படத்தைப் பாரு சிவா, இது விந்து அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அது அண்ட அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அதில் எல்லாம் இன்ட்ரான் எக்சான் எல்லாம் இருக்கு. அடுத்ததா நான் மூலக்கூறு  சேர்த்தப்போ எல்லா இன்ட்ரான்களிலும் இந்த மூலக்கூறு போய் இணைகிறது. எப்படி பாக்டீரியா மெதிலேசன் பண்ணுதோ அதே டெக்னிக் நான் பண்ணினேன். அடுத்தது பாரு, நான் இணைச்சதும் வினையூக்கி வந்து நான் மூலக்கூறு இன்ட்ரான் எல்லாம் வெட்டுது பாரு, அடுத்து இன்னொரு வினையூக்கி வந்து அவை எல்லாம் விழுங்குது, இப்போ எக்சான் மட்டும் தான்’’

‘’ஜெகன், என்னால் நம்பமுடியலை’’

‘’அதுக்குத்தான் நான் இதை எல்லாம் படம் எடுத்து வைச்சி இருக்கேன். எப்படி ஒவ்வொரு இன்ட்ரான் எல்லாம் வெட்டப்பட்டு விழுங்கப்படுதுன்னு’’

‘’எல்லா விந்து அணுவிலும் இப்படி நடக்குமா?’’

‘’ஆமா, எழுபது சதவிகிதம் வெற்றி கிடைச்சிருக்கு. அடுத்த கட்டமே எப்படி இந்த மூலக்கூறுதனை கொண்டு போறது அப்படின்னு யோசிச்சி டாக்டர் பாண்டே கிட்ட மூலக்கூறு டெலிவரி பத்தி பேசி இந்த கேப்ஸ்யூல் உருவாக்கினேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற வேற முறை. சிவா நீ இதைப் பத்தி எல்லாம் கவலைப்படாத, இந்த டாக்குமென்ட் ல எல்லா விபரமும் எப்படி ஒவ்வொரு ஸ்டெப் பண்ணனும்னு இருக்கு. நீ அதை மட்டும் கவனமா பண்ணு போதும். இது ஒரு நாள் வேலை இல்லை. எங்கேயாவது ஒரு சின்ன தவறு நடந்தாக்கூட இந்த மூலக்கூறு வேலைக்கு ஆகாது. கேப்ஸ்யூல் எப்படி பண்றதுன்னு இந்த டாக்குமென்ட்ல இருக்கு’’

‘’ஜெகன், எனக்கு இதை பண்ண முடியும்னு தோணலை. அதுவும் நீ சொல்றது எல்லாம் சத்தியமா நடக்க வாய்ப்பே இல்லை. நீ காட்டினது உண்மையா இருந்தாலும் அதுவும் நியூக்ளியஸ்க்குள்ள இந்த மூலக்கூறு போய் இப்படி எல்லாம் பண்ணும்னு உனக்கு எப்படி தெரியும், நீ ஒரு எலி அல்லது வேறு சின்ன உயிரில் முயற்சி பண்ணி இருக்கலாம். இப்படி நேரடியா மனித உயிரோட விளையாடுறது எனக்கு சரியாப்படல’’

‘’சிவா, ஜஸ்ட் மேக் தீஸ் மாலிக்குல்ஸ், ரெஸ்ட் ஐ வில் சீ. ஐ வில் செட்டில் த அமவுண்ட் டு யூ. ப்ளீஸ் டோன்ட் சே நோ அண்ட் டோன்ட் பேக் அவே ப்ரம் திஸ் (just make these molecules, rest I will see. I will settle the amount to you. Please don’t say NO and don’t back away from this)

ஜெகன் எல்லா விபரங்களையும் சிவராமிடம் காட்டினான். ஒவ்வொரு விசயங்களையும் தெளிவாக சொல்ல சொல்ல சிவராம் மனதில் மாற்றம் உண்டானது. எப்படி நியூக்லியஸ் உள்ளே இந்த மூலக்கூறு செல்லும், எப்படி மற்ற செல்களில் சென்று இவை செயல்படாது என ஜெகன் சொன்னபோது சிவாராமிற்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ஜெகன் அத்தனை நேரம் பேசவில்லை என்றால் நிச்சயம் சிவராம் எழுந்து போயிருப்பான். ஆனால் ஜெகனின் விடாத பேச்சு, எல்லாம் அப்படியே நடக்கும் எனும் உறுதிப்பாடு சிவராமிற்கு ஆசையை உண்டாக்கியது.

‘’சரி ஜெகன். பண்ணித்தரேன்’’

‘’வெல்டன், டேக் திஸ் சிவா  கீப் இட் சேப், லெட் அஸ் ஈட் நவ்’’

அன்று மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதாக திட்டம் போட்டான் சிவராம். ஜெகனிடம் சொல்லிவிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனான். இந்த உலகில் இத்தனை விசயத்தையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு எந்த ஒரு மனிதரும் அமைதியாக இருந்து விடவில்லை. அதது அதன்பாட்டில் நடக்கும் எனில் நாம் எதற்கு எனும் சிந்தனையே மனிதனை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த இன்ட்ரான்கள் ஏதுமற்று மரபணுவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கே இருந்த ஒருவர் பாடிய பாடல் கேட்டு சிவராம் அங்கேயே நின்றான்.

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

இந்த பாடலில் உள்ள அர்த்தம் போல இருக்கிறது வாழ்வு என எண்ணினான் சிவராம். தான் செய்யும் செயலில் கொள்ளும் நம்பிக்கைகள் பொய்த்துப் போகாதவண்ணம் இருக்கவே இறைவனின் மீதான நம்பிக்கைகள் மனிதர்களுக்கு உண்டாகி இருக்கக்கூடும். அப்படி என்னதான் இந்த இன்ட்ரான்கள் தம்மில் பெரும் ரகசியத்தைக் கொண்டு இருக்கக்கூடும் என சிவராம் தனது ஆராய்ச்சி மீது ஒரு புதிய கண்ணோட்டம் உண்டாகவேண்டி சிந்தித்தான்.

மீண்டும்அதே வரிகளை அவர் அங்கே பாடிக்கொண்டே இருந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் கூட்டம் அதிகமானது. அங்கிருந்து கிளம்பியவன் பணம் கொடுத்து தரிசனம் செய்வதா, பணம் கொடுக்காமல் தரிசனம் செய்வதா எனும் குழப்பத்தில் நின்றவன் பணம் கொடுக்காமலே வரிசையில் சென்று நின்றான். அங்கே ஒவ்வொருவரின் பேச்சுக்கள் அவனுக்கு சற்று சுவாரஸ்யமாக இருந்தன. இந்த இன்ட்ரான்கள் எக்சான்கள் பற்றி எல்லாம் இவர்களுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதினான்.  இருவரின் பேச்சு அவனுக்கு திகைப்பூட்டியது.

‘’இத்தனை வயசுல உனக்கு என்ன இந்த வரிசையில் நின்னு பெருமாளை சேவிக்கணும்னு தலைவிதியா, அதோ அங்கே பணம் கொடுத்து போக வேண்டியதுதானே’’

‘’உமக்கு என்ன தலைவிதியோ அதுவே எனக்கு இருக்கட்டும். எத்தனை மணி நேரம் வெட்டியா உலகத்தில மனுசா செலவழிக்கிறா, என் ரெங்கநாதனுக்கு இப்படி நான் நின்னு போறதுலதான் இஷ்டம்’’

‘’உன்னைத் திருத்த முடியாது’’

‘’அது என்னோட மரபணுவில ஊறினது, உமக்கு அது பத்தி எப்படி தெரியும், பேசாம வாரும், மத்தவா பாக்கிறா’’

அதிக வயதான முன் தலை எல்லாம் வழித்து பின்னால் குடுமி போட்டு நெற்றியில் நீண்ட ராமம் இட்ட மரபணு என சொன்ன அவரின் பேச்சு சிவராமிற்கு ஆச்சரியம் வரவழைத்தது.

பொதுவாக எல்லோரும் என் ரத்தத்தில் ஊறியது என்றல்லவா சொல்வார்கள், இவரோ என்னோட மரபணுவில் ஊறினது என்கிறாரே
என அவரிடம் பேச்சுக் கொடுத்தான்.

‘’தாத்தா, நீங்க சொன்னதில தப்பு இருக்கு. மரபணுவில் எப்படி ஊறும், ரத்தத்தில் அல்லவா ஊறும்’’

‘’பாக்கறதுக்கு படிச்சவா மாதிரி இருக்க, என்னை சோதிக்கிற மாதிரி கேள்வி கேட்கறளே. என்னை சோதிக்க அந்த ரெங்கநாதனுக்கு மட்டுமே உரிமை உண்டு. உமக்கு மரபணு அப்படின்னா என்னான்னு  தெரியாதா, இல்லை தெரியாதமாதிரி நடிக்கிறேளா’’

‘’தெரியும், ஆனா நீங்க அப்படி சொன்னது எனக்கு ஆச்சரியமா இருந்தது’’

‘’இப்போதான் எல்லாம் ஜீன் ஜீன் அப்படின்னு ஊரு உலகம் எல்லாம் பேசறாளே, ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களுக்கு கருவே கிடையாது அப்படின்றது நோக்கு தெரியுமோன்னோ, இப்போ நான் அதை பேச விரும்பலை. ரெங்கநாதனை சேவிக்க வந்துட்டு எதுக்கு எனக்கு இந்த வியாக்கியானம் எல்லாம், நீர் சேவிச்சிட்டு என்னோட ஆத்துக்கு வந்தா எல்லாம் சொல்றேன். பொது இடத்தில மத்தவாளுக்கு நாம இடைஞ்சலா இருக்கப்படாது. புரியுதுன்னோ’’

‘’சரிங்க தாத்தா’’

கோவிந்தா, கோவிந்தா எனும் சத்தம் அனைவரும் ஒரு சேர எழுப்பினார்கள். ஆனால் அந்த வயதானவர் ஒரு பாடலை தனக்குள் முனுமுனுத்தார்.

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

சிவராமிற்கு அந்த பாடல் தெரியவில்லை, சரியாக கேட்கவும் இல்லை. இவ்வுலகில் எத்தனையோ அதிசயமிக்க மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொருவரும் இவ்வுலகைப் பற்றிய ஒரு கருத்தைக் கொண்டு இருக்கிறார்கள். டாக்டர் ராம் இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிட நினைக்கிறார். இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட பின்னே புரதங்கள் எல்லாம் உருவாகிறது என்றாலும் அந்த இன்ட்ரான்கள் கருவிலேயே இருக்கக்கூடாது என கருதுகிறார். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிறந்தோம், வேலை பார்த்தோம், சந்ததிகள் உருவாக்கினோம் என பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பிறந்து இறந்து போனார்கள் எனும் யோசனையில் நகர்ந்தான் சிவராம்.

வயதானவர் ‘ரெங்கநாதா’ எனும் மெல்லிய குரல் கொண்டு அழைத்து கைகள் மேல்தூக்கி கூப்பியபோது அந்த வயதானவரின் முகத்தில் எத்தனை சந்தோசம் என்பதையே நோக்கினான் சிவராம். ஒரு சில வினாடிகளில் அந்த வேண்டுதல் கடந்து விட்டது. சிவராம் தான் என்ன வேண்டினோம் என்பதையே நினைவில் கொள்ளவில்லை.

‘’ஆத்துக்கு வரேள்தானே, ஆத்துல நா மட்டும் தான் இருக்கேன், ஆத்து அப்படின்னா மாளிகைனு நினைச்சிண்டு வராதேள்’’

சிவராம் சரி என சொல்லியபடி அவருடன் நடந்தான்.

‘’என்ன வேண்டிண்டு வந்தேள்’’

‘’வேண்ட மறந்துட்டேன் தாத்தா’’

‘’நீர் வேண்டித்தான் அந்த ரெங்கநாதன் தருவாரில்லை’’

‘’நீங்க என்ன வேண்டினீங்க தாத்தா’’

‘’ரெங்கநாதானு வேண்டிண்டேன், அது போதும் எனக்கு’’

‘’நீங்க என்ன படிச்சி இருக்கீங்க, என்ன வேலை பாத்தீங்க’’

‘’நான் வேதம் படிச்சி இருக்கேன், கோவிலில பூசாரியா வேலை பார்த்தேன், ரெங்கநாதனுக்கு சேவகம் பண்றதுதான் என்னோட வேலை. நீர் என்ன படிச்சி இருக்கேள்’’

‘’மூலக்கூறு உயிரியல் படிச்சி இப்போ ஆராய்ச்சி பண்றேன் தாத்தா’’

‘’மரபணு ஆராய்ச்சியா, என்கிட்டே ஒரு ரகசியம் இருக்கு, சொல்றேன் வாரும்’’

சிவா திடுக்கிட்டான் (தொடரும்) 

No comments: