Friday, 12 February 2016

மாறா மரபு - 2

 3.  இன்ட்ரான் எக்ஸான்

சுபாவுக்கு சிவராம் குறித்து யோசனை வந்தது. அன்று மாலையே சிவராமினை சந்திக்க முடிவு எடுத்தாள். சிவராம், சுபா இருவரும் ஒன்றாக பன்னிரண்டாவது வரை படித்தவர்கள். சிவராம் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) நுங்கம்பாக்கம் அருகில் உள்ள சந்திரா மூலக்கூறு உயிரியல் கல்லூரியில் இளநிலை,  முதுநிலை முடித்து இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறான்.

சிவராம் நல்ல உயரம், நல்ல நிறம். பழகுவதற்கு இனிமையானவன். படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் தான் எனினும் சில மதிப்பெண்களில் மருத்துவம் படிக்க வாய்ப்பின்றி போனது. வேறு எந்த படிப்பும் எடுக்க விரும்பாமல் மூலக்கூறு உயிரியல் அவன் எடுத்தது அவனது வீட்டில் அவன் மீது சற்று வெறுப்பினை உண்டாக்கி இருந்தது. சிவாராமிற்கு உமையாள் எனும் தங்கையும் உண்டு. உமையாள் இப்போது பன்னிரண்டாவது படித்து வருகிறார். சிவராம் படிக்க முடியாத மருத்துவம் படிப்புதனை எப்படியும் உமையாள் படிக்க வேண்டும் என சிவராம் வீட்டில் பெரும் ஆவலுடன் இருந்தார்கள். 

சுபா எப்போதாவது சிவராமினை சந்திப்பது வழக்கம். சிவராம், சுபா ஒருவரை ஒருவர் நேசித்தார்கள் என்றே அவர்களது பள்ளி நாட்களில் பிறர் பேசிக் கொண்டு இருந்தார்கள். எவரேனும் இப்படி பேசும் போதெல்லாம் சுபாவுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அவர்களை அவர்களது படிப்பு சேர்ந்து இருக்கவிடாமல் பிரித்துவிட்டது. 

நுங்கம்பாக்கத்தில் வந்து இறங்கினாள் சுபா. சிவராமினைப் பார்த்து இப்போது இரண்டு மாதங்கள் ஆகி இருக்கும் என மனதில் நினைத்த வண்ணம் அவனது கல்லூரியை அடைந்தாள். இன்றைய சூழலில் எத்தனையோ தொடர்பு தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட போதிலும் நேரில் சந்திப்பது தவிர்த்து வேறு எந்த தொடர்பும் இல்லை என்றே சொல்லலாம். இதற்குமுறை இந்த கல்லூரிக்கு சில தடவை மட்டுமே வந்து இருக்கிறாள். 

சுபாவின் வருகையை எதிர்பார்த்தபடி அங்கு அமர்ந்து இருந்தான் சிவராம். ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டபோது அவர்களுக்குள் ஏற்படும் வெட்கம் அது காதலுக்கு மட்டுமே உரியது. 

''சிவா, எனக்கு ஒரு உதவி வேணும். இந்த இன்ட்ரான்  பத்தி நீ கொஞ்சம் சொல்ல முடியுமா''?

நேரடியாகவே கேள்வியைக் கேட்டு வைத்தாள்  சுபா. 

''என்ன சுபா, வந்ததும் வராததுமா எப்படி இருக்கனு  கூட கேட்காம இப்படி இன்ட்ரான்  பத்தி கேட்கற, வா அங்கே போய்  காபி குடிச்சிட்டே பேசலாம். எதுவும் சாப்பிட்டியா, தினமும் அழகாகிட்டேப் போற, வீட்டில மாப்பிள்ளை எதுவும் பார்க்கிறாங்களா?'' 

''வேலை பதட்டம் சிவா, நல்லாதான்  இருக்கேன்''

இருவரும் கல்லூரி உணவகம் சென்று காபி அதனோடு சேர்த்து சாப்பிட என  ரொட்டிகளும் வாங்கிகொண்டு ஒரு இடத்தில் அமர்ந்தார்கள். அங்கே பல மரங்கள் நல்லதொரு தென்றல் காற்றினை வீசிக்கொண்டு இருந்தன. மழை எப்போது வேண்டுமெனிலும் வரலாம் என்பது போல இருந்து கொண்டு இருந்தது. 

''மாப்பிள்ளை பாக்கிறாங்களா?''

''அதுதான் இப்ப குறைச்சல் சிவா''

''உங்க வீட்டுல நான் ஒரு மாப்பிள்ளை இருக்கேன்னு ஞாபகம் படுத்து, அப்படி இல்லைன்னா அப்புறம் டாக்டர் வருணன் யாரையாவது டாக்டர் மாப்பிள்ளையை உங்க வீட்டுல சொன்னாலும் சொல்வாரு''

''சிவா, அதை இன்னொரு நாளைக்குப் பேசலாம். இப்ப எனக்கு தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு. எப்படி சிவா இன்ட்ரான்  எல்லாம் ரிமூவ் பண்ண முடியும். அது என்ன அவ்வளவு சாதாரண விசயமா. ஏதோ  குழந்தை பெற முடியாதவங்களுக்கு குழந்தை பெற வெளிகருத்தரிப்பு பண்ணி குழந்தை உருவாக்குறது நல்லதுன்னு நினைச்சி நான் டாக்டர் வருணன் கிட்ட விருப்பத்தைச் சொல்ல அவர் இந்த ராம் கிட்ட என்னை அசிஸ்டென்ட் மாதிரி இருக்கச் சொல்லிட்டார். ஆனா இந்த ராம் பண்ற அட்டூழியம் என்னால சகிக்கமுடியலை சிவா''

''ஹே  பொறுமை, போனவாட்டி சந்திச்சப்ப நீ எதுவுமே சொல்லலையே, இந்த ரொட்டி எடுத்து சாப்பிடு''

''சிவா என்னோட சீரியஸ்நெஸ் புரியுதா இல்லையா, இப்ப கேட்கறதுக்கு பதில் சொல்லு, நாம கடையில் போய்  டின்னர் சாப்பிட்டே வீட்டுக்குப் போகலாம்''

''சொல்லு சுபா''

''இன்ட்ரான்  எப்படி ரிமூவ் பண்றது?''

''இன்ட்ரான்  பத்தி என்ன தெரியும் சொல்லு சுபா''

''எனக்கு டீடைல்டா  தெரியாது சிவா. நான் என்ன ஜெனிடிக்ஸா படிச்சேன்''

''அதை ரிமூவ் பண்றது நம்ம மனித பரிமாணத்தோட விளையாடறதுனு  சொல்லலாம். பாக்டீரியாக்களுக்கு  எல்லாம் இந்த இன்ட்ரான்  இல்லை. நமக்கு இந்த இன்ட்ரான் காரண காரியத்தோடத்தான் இருக்கு. என்னை உனக்கு லெக்சர் கொடுக்கச் சொல்வ போல இருக்கே சுபா''

''ப்ளீஸ் சிவா, ரிமூவ் பண்ணினா குழந்தைக்குப் பாதிப்பு உண்டாகுமா, உண்டாகாதா சொல்லு''  

''காபி ஆறப்போகுது குடி சுபா''

காபியை எடுத்துக் குடித்தாள். கொஞ்சம் குடித்து வைத்தவள் சிவாவைப் பார்த்தாள். 

''சொல்லு சிவா, பிரச்சினை ஆகுமா?''

''கண்டிப்பா பிரச்சினை உண்டாகும் சுபா, என்ன பண்ணுறோம்னு தெரிஞ்சிதான் பண்றாரா?. இப்ப நம்ம உடம்புல இருக்க ஜீன் எல்லாம் இன்ட்ரான், எக்சான் அப்படின்னு இணைஞ்சிதான்  இருக்கும். உனக்கு பேசிக் தெரியும்தானே. இந்த எக்சான் எல்லாம் புரோட்டின் உண்டாக்கக்கூடிய எம்என்ஆர்ஏ (mRNA) வா மாறும். அப்படி மாறும்போது இந்த இன்ட்ரான்  எல்லாம் ரிமூவ் ஆகும். இதை ப்ரீ எம்என் ஆர்ஏ  ச்பிளைசிங் (pre mRNA splicing) னு  சொல்வாங்க. இந்த இன்ட்ரான்  ஒரு வேலை செய்யலைன்னு முன்ன நினைச்சாங்க, ஆனா இப்ப இந்த மனித இனம் இப்படி இருக்கிறதுக்கு இந்த இன்ட்ரான்  தான் காரணம்னு சொல்லி இருக்காங்க, ஆகப் பிரச்சினைதான் சுபா''

''எனக்கு தலை சுத்துது சிவா, இந்த பரிணாம வரலாற்றில் அப்படி இப்படினு  பேசுறான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு''

''நீ எதுவும் கவலைப்படாதே, அப்படி எல்லாம் இன்ட்ரான்  எல்லாம் ரிமூவ் பண்ண முடியாது. எந்த ஸ்டேஜ் அப்படின்னு சொன்னாரா?''

''எம்ப்ர்யோ (embryo) உருவாக்கி பண்றதா சொன்னான். இரண்டு கரு வித்தவுட் இன்ட்ரான் , ஒன்னு வித் இன்ட்ரான் வைப்போம், டீல் அப்படின்னு ஏதோ ஒரு நிகழ்ச்சி மாதிரி பேசறான்'' 

''சான்சே இல்லை சுபா, அவர் ஏதோ  விபரீத முயற்சியில் இருக்கார், நீ எதுவும் கவலைப்படாதே. அனிமல்ஸ்ல பரிசோதிக்காம எப்படி இப்படி இறங்கினார். நாங்க இங்க வேற வேற பண்றோம் சுபா. எனக்கும் இந்த இன்ட்ரான்  மேல இன்ட்ரெஸ்ட் உண்டு, ஆனா ரிமூவ் பண்றது இல்லை. எப்படி உபயோகம் ஆகுதுன்னு, ஒரு பண்டிங் கூட அப்ளை பண்ணி இருக்கோம்''

''உன்னோட புரபசர்கிட்ட கேட்க முடியுமா''

''இல்லை சுபா, நான் ஒரு புத்தகம் தரேன். எடுத்துப் போய்  பாரு. இதை நீ அங்க இங்க சொல்லிட்டு இருக்க வேணாம். உன்னை கொலை பண்ணக்கூட தயங்கமாட்டார் டாக்டர் ராம்''

''சிவா.... ''

''நீ அவரை எதிர்த்து எதுவும் பண்ணாதே, சரி வந்த கப்பிள்ஸ்கிட்ட எதுவும் கொடுத்தாரா''

''எப்பவும் போல கேப்ஸ்யூல்ஸ் கொடுத்து அனுப்பினார். ஆனா இந்தவாட்டி ஹஸ்பன்ட் கூட அந்த கேப்ஸ்யூல்ஸ் எடுத்துக்கச் சொல்லி கொடுத்தார். விட்டமின்ஸ்தான்''

''எனக்கு அந்த கேப்ஸ்யூல்ஸ் கொண்டு வந்து தரமுடியுமா''

''எதுக்கு சிவா?''

''கொண்டு வந்து தாயேன், சரி எங்கே சாப்பிட போவோம், அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன்''

''நாளைக்கு தாரேன். உன்னோட சாய்ஸ்''

''லேப்க்கு போவோம், அங்க கொஞ்சம் வேலை முடிச்சிட்டு சாப்பிட போலாம், உன்னோட ட்ரீட், இன்ட்ரான்  ரிமூவ் பண்ணிய சுபா''

சிவா கலகலவென சிரித்தான். சுபாவின் மனம் பயத்தில் இருந்து இன்னும் மீள இயலாவண்ணம் துடித்து கொண்டு இருந்தது. 

லேப்பில் இருந்து இருவரும் சாப்பிங் சென்றுவிட்டு உணவருந்த சென்றனர். சுபா தன்  அம்மாவுக்கு தகவல் சொல்லி இருந்தாள். சுபாவிற்கு சாப்பிட பிடிக்கவே இல்லை. எப்படி ஒரு குழந்தையை இப்படி செய்யலாம் என அவளுக்குள் இருந்த தாய்மை உணர்வு அவளை நச்சரித்துக் கொண்டு இருந்தது. சாப்பிட்டு வெளியே இருவரும் வந்தபோது மணி இரவு எட்டரை ஆகி இருந்தது. 

''ஹே சிவா, இஸ்  ஸீ  யுவர் கேர்ள்  பிரண்ட்?'' பக்கவாட்டில் இருந்து சிவாவின் தோளின்  மீது பட்ட கையை திரும்பிப் பார்த்தான் சிவா. 
4. விசித்திர உலகம்

''ஹே ஜெகன் , எப்படிடா இங்க''

''ஆன்சர் மை கொஸ்டின் பர்ஸ்ட்''

''நோ, சீ  இஸ் டாக்டர், மை ஸ்கூல்மேட். சுபா இவன் ஜெகன், டில்லியில் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான், ஒரு கான்பிறேன்ஸ்ல பார்த்து பழகிகிட்டோம்''

''யூ போத் லுக் மேட்  பார் ஈச் அதர்''

''சரி எப்படி இங்க, என்ன விஷயம், ஒரு கம்யூனிகேசன் எதுவும் இல்லை''

'' ஆம் கியர் டூ சி டாக்டர் ராம்,  காட் டிலேயெட்''

''என்ன விஷயம்''

''நத்திங் சீரியஸ், சீயிங் ஹிம் டுனைட் அண்ட் லீவிங்  டுமாரோ''

''எங்கே தங்கி இருக்க, எதுவும் ரிசர்ச்?''

''பார்க் ஹையாட், நாட் அட் ஆல். வெல் வில் கேட்ச் யூ லேட்டர், சீ  லுக்ஸ் வெரி பிரிட்டி''

''  கே ஜெகன், டேக் கேர்''

சில நிமிட சந்திப்புகள் தான் என்றாலும் இந்த ஜெகன் எதற்காக டாக்டர் ராமினை சந்திக்க வந்து இருக்கிறான் என சுபா சற்று சந்தேகம் கொண்டாள். ஒருவர் மீது சந்தேகம் என வந்துவிட்டால் அதற்குப் பின்னர் தெளிவு பெற வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. 

''சிவா, அவன் என்னை அழகா இருக்கானு சொல்றான் நீ பல்லைக் காட்டுற, அவன் பல்லை உடைக்காம. அவன் பாக்க வந்தது நம்ம ராம் தான''

''சுபா, உன்னை என்ன அசிங்கமா இருக்கேனு சொன்னானா, ஆனா என்னை இப்படி ஞாபகம் வைச்சிக்கிற அளவுக்கு அவன் மனசில பதிஞ்சி இருந்து இருக்கேன் பாரு. எந்த ராம்னு கேட்காம விட்டுட்டோம். ஆனா அவன் சொல்றதப் பார்த்தா நம்ம டாக்டர் ராம் தான். ஆனா நீ எதையும் காட்டிக்கிற வேணாம். நான் மெதுவா இவன்கிட்ட பேசி என்னனு தெரிஞ்சிக்கிறேன்''

''நான் ராம் கிட்ட போன்  போட்டு ஒரு சந்தேகம் உன்னை இப்ப பார்க்க வரலாம்னு கேட்கிறேன், என்ன சொல்றானு  பார்க்கலாம்''

''சுபா நீ துப்புறியும் நிபுணர் போல பேசற, நீ டாக்டர்''

''சிவா, ஒரு நிமிஷம் இரு''

சுபாவின் அழைப்பை எடுத்தார் டாக்டர் ராம்.

''ராம், உங்களை இப்போ பார்க்க வர முடியுமா''

''என்ன விஷயம், இந்த நேரத்தில போன், பார்க் ஹையாட்ல ஒரு நண்பரை சந்திக்கப் போறேன். நாளைக்கு கிளினிக்ல பேசிக்கிறலாம். தலைபோற விஷயம் ஒண்ணுமில்லையே''

''இல்லை, சரி''

பேசிய சில விநாடிகளில் அழைப்புத் துண்டிக்கப்பட்டது. சுபா சிவாவினை நோக்கி ஆச்சரிய கண்கள் உண்டாக்கினாள்.ஜெகன் நிச்சயம் இந்த இன்ட்ரான்  விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருப்பது போன்று சுபா எண்ணினாள். ஆனால் ஜெகன் இதுவரை மருத்துவமனைக்கு வந்தது இல்லை. ராம் ஜெகன் குறித்து சொன்னதும் இல்லை.

''என்ன சுபா, துப்பறிஞ்சிட்டியா?''

''அந்த ஹோட்டலுக்குத்தான் போறான், எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கார் அந்த ஜெகன்''

''இன்ட்ரான் தான். காப்புரிமை விசயம்னு எதுவும் சொல்லிக்கவே இல்லை. ஆனால் என்னோட ஆராய்ச்சி பத்தி நிறைய கேள்வி கேட்டார். அதுதான் எனக்கு நல்ல பழக்கம்''

''தப்பு நடக்குது சிவா''

''மணி பாரு ஒன்பது ஆச்சு. வா உன்னை வீட்டில விட்டுட்டு போறேன். தேவை இல்லாம குழப்பிக்காதே. ராம் என்ன வேணா பண்ணட்டும்னு இரு சுபா. உனக்கு எதுக்கு இவ்வளவு மன உளைச்சல்''

''முடியலை சிவா, மனசு எல்லாம் கிடந்து அடிச்சிக்கிது. ஆமா அவனுக்கு தமிழ் தெரியாதா''

''தெரியும், புரியும். அவங்க அப்பா அம்மா கூட ஸ்ரீரங்கம் தான்''

''அப்புறம் எதுக்கு அப்படி இங்லீஸ்ல பேசினான்''

''நீ அழகா இருந்தியா, அதான் பேசி இருப்பான்''

''நீயுமா சிவா''

''சரி வா போகலாம்''

பார்க் ஹையாட்  ஹோட்டலில் ஜெகனை டாக்டர் ராம் சந்தித்தார். ரம்மியமான சூழல். எப்போது வேண்டுமெனிலும் மழை விழும் போல இருந்தது. இருவருக்கும் காபி வரவழைத்து ஜெகன் அறையினில் அமர்ந்தார்கள். ஜெகன், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பான். வசீகரிக்கும் கண்கள். முகம் எல்லாம் மூடிய தாடி. ஆறடி உயரம். ஓங்கி எவரையேனும் அடித்தால் உயிர் போய்விடும் அளவிற்கு கைகள் கொண்ட பலம்.

''என்ன ஜெகன் பிரயாணம் எப்படி இருந்தது, விமானத்தை தவற விட்டுட்ட போல''

''ஆமா டாக்டர். சரி எதுவும் முயற்சி பண்ணினீங்களா, நான் இரண்டு மாசம் முன்ன உங்களுக்கு கொடுத்த கேப்ஸ்யூல் பத்திரமா இருக்குதானே''

''இப்போதான் ஒரு தம்பதிகள் கிட்ட முயற்சி பண்ணி இருக்கேன், பத்திரமா இருக்கு ''

''கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, யாருக்கும் விஷயம் தெரிய வேணாம். தெரியாதுதானே. என்னோட வேலை இடத்தில கொஞ்சம் பிரச்சினை''

''தெரியாது. நான் மட்டுமே இந்த வேலையைப் பார்க்கிறேன். அதனால யாருடைய தலையீடும் இருக்காது. எதுக்கு இவ்வளவு அவசரமா நேரில் பார்க்கணும்னு  வந்த''

''எனக்கு கேப்ஸ்யூல் கொஞ்சம் தேவைப்படுது. கிளினிக்ல இருக்கா, இல்லை வீட்டில் இருக்கா. எனக்கு கொஞ்சம் வேணும். போனவாட்டி மாதிரி இனி நான் அதை உண்டு பண்ண எப்படியும் பத்து மாசங்கள் ஆகும். உண்டு பண்ண முடியுமானு   தெரியலை. உங்ககிட்ட கொடுத்தப்பறம்  இப்ப நான் எதுவுமே பண்ணலை. நிறைய நெருக்கடி. இது எதுக்கு வாங்கின, அது எதுக்கு வாங்கின அப்படின்னு சூப்பர்வைசர் குடைஞ்சி எடுத்துட்டார்''

டில்லியில் ஒரு டாக்டர் கிட்ட டீலிங் பண்ணி இருக்கேன். எதேச்சையா பேசறப்ப அவர் யோசிச்சி சொல்றேனு சொன்னார். அவரும் போன வாரம் தான் சம்மதம் சொன்னார், 

நீங்க இந்த தம்பதியில் முயற்சி பண்ணுங்க, இன்னொரு தம்பதியில் அவர் முயற்சி பண்ணட்டும். பட்ஜெட் அதிகமா போயிருச்சி. சூப்பர்வைசர் கோவமா இருக்கார்''

''முடியாது ஜெகன். இது என்னோட கனவு. நான்தான் இந்த திட்டத்தையே உன்கிட்ட சொன்னேன். இப்போ வேற டாக்டர்கிட்ட போறேன்னு சொல்ற. எதுவும் பணம் தரேன்னு சொன்னாரா''

''சொன்னா கேளுங்க ராம். வம்பு பண்ணாதீங்க, அப்புறம் உங்க கிளினிக்ல சொல்ல வேண்டி இருக்கும்''

''சொல்லு, எனக்கு என்ன பயமா, உன்னோட சூபர்வைசருக்கு போன் பண்ண எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு நினைக்கிற, இதே கேப்ஸ்யூல் இங்கே என்னால உன்னை மாதிரி ஒருத்தனை வைச்சி உருவாக்க முடியும். பிரச்சினை  வரும்னுதான் உன்னை பிடிச்சேன். என்னமோ நீயே எல்லாம் பண்ணின மாதிரி இப்ப பேசிட்டு இருக்க. நான் கொடுத்த பணத்தை எல்லாம் நீ தின்னுட்டு உன்னோட சூபர்வைசர் பட்ஜெட்ல எதுக்கு கை வைச்ச. இங்க பாரு நீ என்கிட்ட போட்ட அக்ரீமெண்ட் இருக்கு மறந்துராத''

''ராம், எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு''

''நீ கிளம்பு. எனக்கு நேரம் ஆகுது''

''ராம், சரி, எனக்கு இன்னும் பணம்  கொடுங்க, நான் பண்றேன்''

''தேவை இல்லை ஜெகன். இப்போ இருக்கறது நாலு தம்பதிகளுக்கு வரும். குழந்தைக பிறந்தப்பறம் இதை உலகுக்கு தெரிவிச்சு நானே இங்க ஒருத்தரைப் பிடிச்சி பண்ணுவேன். உன்னோட உதவி போதும். நீ இப்படிபட்டவனு  முன்னமே  தெரிஞ்சி இருந்தா உன்னை வந்து பாத்து உதவி கேட்டு இருக்கமாட்டேன்''

''டாக்டர் ராம்...''

''இனி பேசாத. நான் இந்த ஹோட்டல் பில் கட்டிருறேன்.இதுக்கு மேல என்னைப் பேச வைக்காத''

டாக்டர் ராம் வெகுவேகமாக அறையை விட்டு வெளியேறினார். ஜெகன் தான் அவசரப்பட்டு விட்டோம் என எண்ணினான். காலையில் டாக்டர் ராம் ஜெகனை வழி அனுப்ப ஹோட்டலுக்கு வந்தார்.

''ஜெகன், நான் சொன்னது நினைவு இருக்கட்டும். நீ ஏதாவது  ஏடாகூடமா பண்ண நினைச்ச, அப்புறம் நடக்கறது வேற''

''பண்ணலை ராம்''

ஜெகன் டில்லி சேர்ந்த சில மணி நேரத்தில் டாக்டர் ராமிற்கு அழைப்பு வந்தது.

''சார் நான் ராஜ் பேசறேன். நீங்க சொன்னபடியே ஜெகனோட லேப்டாப்பில் இருந்த எல்லா டாக்குமெண்ட்ஸ் இன்பெக்ட் பண்ணிட்டேன்.  அவன் வேலை இடத்தில வைச்சி இருந்ததையும் சேர்த்து நான் இன்பெக்ட்  பண்ணிட்டேன்''

''சூப்பர் ராஜ், யாருக்கும் சந்தேகம் வராம பாத்துக்கோ''

''அதெல்லாம் பக்காவா நான் பண்ணிட்டேன் சார்.  அவனோட திட்டம் என்னனு தெரியலை. அவன்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன்''

''ராஜ் எப்பவும் போல என்னை உனக்குத் தெரியும்னு எந்த சூழ்நிலையிலும் காட்டிகிறாத, மெமரி ஸ்டிக்  சி டி ஏதாவது இருந்தாலும் கவனிச்சிக்கோ''

''நான் பார்த்துக்கிறேன் சார், வைரஸ் புரோகிராம் வைச்சி அட்டாக் பண்ணிதான் பண்ணினேன் அதனால அவனால எந்த சந்தேகமும் படமுடியாது''

தங்கராஜ் டில்லியில் ஒரு கணினி நிபுணராக வேலை பார்த்து வருகிறான். அவனுக்கும் ஜெகனுக்கும் நல்ல பழக்கம். எப்போது ஜெகனை டாக்டர் ராம் சந்தித்தாரோ அப்போதே இந்த தங்கராஜினையும் டாக்டர் ராம் சந்தித்தார். ஆனால் ராஜிடம் எவரிடமும் அவர்களது சந்திப்பு குறித்து வெளித்தெரியக்கூடாது என சொல்லி வைத்தார். ஜெகனின் அலுவலகம் தங்கி இருக்கும்  வீடு என அவனது கணினி குறித்த எல்லா தகவல்களும் ராஜிற்குத் தெரியும். 

''ராம், உள்ளே வரலாமா?''

''வாங்க டாக்டர் சுபா, வழக்கம் போல லேட்டா?''

''என்ன ராம், எப்போ நான் லேட்டா வந்தேன். இப்போதான் பேசன்ட்டுக்கு இன்ஜெக்ஸன் போட்டுவிட்டு வந்தேன்''

''தினமும் கேப்ஸ்யூல் எடுக்கிறாங்களா டாக்டர் சுபா''

''ஆமாம் ராம். எடுக்கிறாங்க''

''டாக்டர் ராம் அப்படின்னு கூப்பிட்டு பழகு சொன்னா கேட்கமாட்டியா''

''எனக்கு கொஞ்சம் கேப்ஸ்யூல் தர முடியுமா, டாக்டர் ராம், இப்ப ஓகே  வா''

''இதை நீ கடையில வாங்கிக்கிரலாம், அதில் எல்லாம் என் அனுமதி இல்லாம நீ கைய வைக்காத, அதான் பூட்டி வைச்சிருக்கேன். உன்கிட்ட இருக்கிற கேப்ஸ்யூல் எடுத்து உபயோகி. அடுத்த தம்பதிகளுக்கு நான் வைச்சி இருக்கிறத தரலாம். என்ன விஷயம் நேத்துப் பார்க்க வரலாமானு கேட்ட''

''இன்ட்ரான் ரிமூவ் பண்ற டெக்னிக் எனக்குச் சொல்லித்தர முடியுமானு  கேட்கத்தான்''

''டாக்டர் சுபா, அதை எல்லாம் இனிமே பேசிட்டு இருக்க வேணாம். எனக்கு இப்போ அதில் இன்ட்ரெஸ்ட்  இல்ல. நான் எதுவும் ரிமூவ் பண்ணப் போறது இல்ல. நேத்து ஒரு டாக்டரைப்  பார்த்தேன். வெரி  காம்ப்ளிகேட் அப்படின்னு சொல்லிட்டார்''

''பார்க் ஹையாட்ல பார்த்தவரா''

''இல்லை இவர் டாக்டர் ஜெரால்டு''

''அப்போ பார்க் ஹையாட்?''

''உங்களோட வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க டாக்டர் சுபா, இப்போ நீங்க போகலாம்''

டாக்டர் ராமின் முகம் கோபத்தில் கொப்பளித்து கொண்டு இருந்ததை கண்டாள் சுபா. இனிமேல் இது குறித்து கேட்டால் பிரச்சினை வரும் என எண்ணி அந்த இடம் விட்டு நகர்ந்தாள். யார் இந்த டாக்டர் ஜெரால்டு. வேணுமென கதை சொல்கிறானோ என எண்ணினாள். வாழ்வின் லட்சியம் என சொன்னவன் நிச்சயம் கைவிடமாட்டான். இந்த கேப்சயூலில்  என்ன இருக்கும் எனத் தெரியாமல் தவித்தாள். அந்த தம்பதிகளிடம் என்ன பேசினாலும் நேராக டாக்டர் ராமிடம் சொல்லிவிடுவார்கள் என்பதால் என்ன செய்வது என யோசித்துக்கொண்டு இருந்தாள். 

அடுத்த தம்பதிகள் வரும்வரை காத்து இருக்க வேண்டியது மட்டுமே இப்போதைக்கான வழி என இன்ட்ரான்  அவளது தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு இருந்தது. 

(தொடரும்)

No comments: