7. அறியாதவரை ரகசியம்
‘’தாத்தா உங்க பேரு என்னனு சொல்லலையே’’
‘’ரங்கநாதன்’’
‘’உங்க பேரு’’
‘’ரங்கநாதன்’’
‘’அது இல்லை தாத்தா, உங்களுக்கு உங்க அம்மா
அப்பா வைச்ச பேரு’’
‘’ரங்கநாதன்’’
‘’ரங்கநாதன்?’’
‘’ஏன் என் பேரு ரங்கநாதன் அப்படினு
இருக்கக்கூடாதா? பேசாம வாரும்’’
சாலை இருமருங்கிலும் கடைகள். மல்லிகைப்பூ வாசமும்,
குளிர்ந்த காற்றும் என மிகவும் ரம்மியமாக இருந்தது. இத்தனை கடைகளிலும்
வியாபாரங்கள் நடந்துகொண்டு இருக்கத்தான் செய்கின்றன, வாங்குவதற்கு மக்கள் கடையில்
நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் முகமும் பரிச்சயமற்ற முகங்களாகவே
சிவராமிற்கு காட்சி அளித்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டே இவர்களை பலர் கடந்து
கொண்டு போனார்கள்.
இந்த அறிவியல் உலகில் ஆன்மிகம் எனும் ஒன்று
இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் என்னவென ஒவ்வொருவரும் ஒரு காரணம்
சொல்வார்கள் என சிவாரம் எண்ணிக்கொண்டே நடந்தான். ரங்கநாதன் கோவிலின் பிராதன வாசற்படியைத் தாண்டியதும் வலப்புறம்
திரும்பினார். அங்கிருந்து நேராக நடந்து இடப்புறம் திரும்பினார். ஒரு வார்த்தை கூட
பேசவில்லை. சிவராம் தன்னைத்தான் பேச வேண்டாம் என சொன்னார், அவராவது பேசலாமே என மனதில்
எண்ணிக்கொண்டான். அந்த தெருவானது அத்தனை சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது.
அங்கிருந்த தண்ணீர்க் குழாய் ஒன்றில் ஆடவர்,
பெண்டிர் என தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு சின்ன இடம் ஒன்றில் சிறுவர்கள் சிறுமியர்கள் விளையாடிக்
கொண்டு இருந்தார்கள். தெருவின் இரண்டு பக்கங்களிலும் வெட்டப்படாத மரங்கள் பூத்து
குலுங்கிக் கொண்டு இருந்தன.
ரங்கநாதன் குடிசையின் முன் சென்று நின்றார்.
அந்த குடிசைக்கு கதவு அவசியமில்லை என்றாலும் கதவு ஒன்று இருக்கத்தான் செய்தது. குடிசையின்
இருபுறமும் சன்னல்கள் கூட வைக்கப்பட்டு இருந்தன. கதவைத் தள்ளினார், திறந்தது.
‘’கதவுக்கு பூட்டு போடும் பழக்கம் இல்லையா
தாத்தா?’’
‘’இல்லை’’
ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். உள்ளே சமையல் அறை
என எதுவும் இல்லை. ஒருபுறம் துணிகள் என சில அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
மறுபுறம் பல புத்தகங்கள் இருந்தது.
‘’ரகசியம் அப்படின்னு சொன்னீங்களே’’
‘’சத்ய யுகம் தெரியுமோ?’’
‘’தெரியாது’’
‘’கலியுகம் தெரியுமோ?’’
‘’இப்ப நடக்கிறதுதானே தாத்தா’’
‘’வேத சாஸ்திரங்கள் படிக்கிறது உண்டோ?’’
‘’எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை, சாமி
கும்பிடறது எல்லாம் ஒரு சம்பிரதாயம்’’
‘’கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும்’’
‘’படிக்கிறது இல்லை’’
‘’சத்ய யுகத்திலே இருந்த மனுசாளுடோ மரபணுக்கள்
வெறும் முப்பதாயிரம் மட்டுமே. அவா உயிரோட வாழ்ந்த வருடங்கள் நூறு வருஷ கணக்கு
இல்லை ஆயிர வருஷ கணக்கு. அவாளுக்கு மூப்பு எல்லாம் உடனே வருவது இல்லை. நோய் இல்லை.
நொடி இல்லை. இது எல்லாம் ரகசியம்’’
சிவராம் தனது தலையில் கை வைத்துக் கொண்டான். நாம்
இன்ட்ரான் எக்ஸ்சான் பத்தி எதுவும் ரகசியம் சொல்வார் என்று நினைத்தால் பழம்பெரும்
கதை ஒன்றை சொல்கிறார் என நினைத்து பெருமூச்சு விட்டான்.
‘’இப்போ லோகத்திலே மரபணு பத்தி பெரிசா பேசறா, அதுவும்
இன்ட் ரான் எக்ஸான் அதிலும் இன்ட்ரான் எல்லாம் விலக்கப்பட்டு எக்ஸான் மட்டுமே
புரதம் உருவாக்க போதும் அப்படினும் இந்த இன்ட்ரான் எல்லாம் எப்படி உருவாச்சுனும்
தலையைப் போட்டு பிச்சுக்கிறா. அதுவும் இந்த இன்ட்ரான் எல்லாம் இருக்கிறதாலதான் மனுசா நிறைய அறிவாளியா உருவானாங்கனு சொல்லிக்கிறா,
ஆனா இந்த இன்ட்ரான் இல்லாம இருந்ததால் தான் மனுசா எல்லாம் பேதம் குரோதம் எல்லாம்
பாக்காம இருந்தா அப்படின்னு சத்யயுகத்திலே சொல்லப்பட்டு இருக்கு. எந்தவொரு வர்ணாஸ்ரமம் எல்லாம் இல்லை, மதம்
இல்லை, சிலைகள் இல்லை, கோவில்கள் இல்லை அப்போ மனுசாள் மட்டுமே கடவுள். எல்லோரிடத்திலும் இறைவன் உண்டு அப்படின்னு
சொல்றதுதான் சத்ய யுகம், எக்ஸான் யுகம், சத்ய யுகத்திற்கு அப்புறம் இந்த இன்ட்ரான்
மெல்ல மெல்ல உள்ள சேர்ந்தப்ப உண்டானதுதான் மனித வேறுபாடுகள், மனுசாள் எல்லாம் இந்த
இன்ட்ரான்களால் தான் குரோதம் கொண்டு இருக்கா’’
சிவராம் தான் என்ன கேட்டுக்கொண்டு இருக்கிறோம்
என ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தான். ஒரு விஷயத்தை அப்படியே புராண கதைகளோடு
சம்பந்தபடுத்தும் ஒரு புத்திசாலித்தனம் வெகுவாக பரவிக்கொண்டு வருகிறது என சிவராம்
மனதில் நினைத்தான், ஆனால் இவர் எப்படி?
‘’இதை வேறு யாருகிட்ட எல்லாம் சொல்லி
இருக்கீங்க தாத்தா?, இல்லை இது யாரு உங்களுக்கு சொன்னா தாத்தா?’’
‘’என்னை என்னனு நினைச்சேள்?, விளைச்சல் இல்லா
நிலத்தில நீரைப் பாய்ச்சி அறுவடை பண்றதுக்கு எல்லாம் நான் கத்துக்கிட்டது இல்லை.
ரகசியம் அப்படின்னு சொன்னேனே, உம்ம காதில விழுந்துச்சோ இல்லையோ, எப்படி வேறு
யாருகிட்டயும் இதை சொல்லி இருக்க முடியும்னு நினைக்கிறேள், முத முதலில் இதை
உம்மகிட்டதான் நான் சொல்றேன். எனக்கு இது என்னோட தாத்தா சொன்னது, என் தாத்தாவுக்கு
அவங்க அப்பா சொன்னது இப்படி பல காலங்களாக சொல்லப்பட்டு வரக்கூடிய ஒன்னு. அவா
எல்லாம் சொல்லும்போது இந்த இன்ட்ரான் எக்ஸான் அப்படின்னு சொல்லலை. உள்ளுக்குள்ள
இருக்கிற மாற்றம் மனுசாளை மாத்துதுனு சொல்லிட்டு வந்தா. நான்தான் அது என்னவாக
இருக்கும்னு யோசிச்சி இந்த ஞானம் தோன்றினது. இன்ட்ரான் இல்லாத குழந்தைகள்
உருவாகும் காலம் ஒன்று தோன்றும்போது இந்த கலியுகம் மறைஞ்சி சத்யயுகம் தோன்றும்.
இது கால சுழற்சி’’
‘’சரி, பேச்சுக்காகவே வைச்சிக்குவோம், இது இயற்கையாகவே
நடக்குமா தாத்தா’’
‘’என்ன பேச்சுக்குனு சொல்றேள், எல்லாம் இயற்கை
தான், செயற்கைனு நாம பேரு வைச்சிக்கிட்டோம், இங்கே இருந்துதானே எல்லாம் நாம
செய்றோம்னோ, உமக்கு அது எப்படி நடந்தா என்ன, கால காலமாக அதுதான் நடக்கிறது.
இதுதான் இந்த பிரபஞ்ச உலக ரகசியம். நான் இதை எல்லாம் எழுதலை, இதை நீர் எழுதி பெரிய
பேரு வாங்கிக்கும். உம்மகிட்ட சொல்லிய திருப்தி எனக்கு போதும். இந்தாரும் தண்ணீர்
அருந்தும்’’
‘’விலங்குகள் கூடவா அப்படி?’’
‘’அவா எப்பவுமே அப்படித்தான், சத்ய யுக
தொடக்கத்திலே இந்த கலியுக விலங்கு, மனுசா எல்லாம் இருப்பா, கொஞ்ச வருசத்திலே
எல்லாம் அழிஞ்சி போயிருவா. பல்லாயிர வருஷம் பின்னால் மறுபடியும் தோன்றுவா, அடுத்த
யுகம் அடுத்த யுகம் அப்படின்னு தொடரும். ஆனா சத்ய யுகம் மட்டுமே எக்ஸான் யுகம்’’
‘’சாப்பாடு, சமைக்க அப்படின்னு சமையல் அறை
எதுவும் இல்லையே தாத்தா’’
‘’யாராவது வந்து கொடுத்தால் மட்டுமே நான் சாப்பிடுவேன்.
இந்த தண்ணீர் கூட ஒருத்தர் வந்து வைச்சிட்டுப் போனதுதான். இந்த குடிசை வீடு என்னோட
நிலம் இல்லை. நான் இங்கே தங்க ஒருத்தர் கொடுத்த இடம்தான் இது. மாளிகை எல்லாம்
தந்தா, அது நீயே அனுபவினு சொல்லிட்டேன். இந்த புத்தகங்கள் எல்லாம் ஒருத்தர் வந்து
தந்தா. நான் எதுவும் விலை கொடுத்து வாங்குறது இல்ல. எனக்கு இருக்க துணி எல்லாம்
தட்சணையா வந்தது. ஒரு தடுமல், காய்ச்சல் அப்படின்னு இதுவரை படுத்தது இல்லை, ஆனா
முதுமை வந்துடுத்து’’
‘’இப்படி இருக்கிறதால என்ன சாதிச்சிட்டதா
நினைக்கிறீங்க?’’
‘’என்ன சொல்றேள், சாதிக்கவா இந்த லோகத்தில
பிறக்கிறோம்?, வாழனும், நம்ம விருப்பப்படி வேறு எவருக்கும் கட்டுப்படாம சுதந்திரமா
வாழனும்’’
‘’அப்படி வாழ்ந்து என்ன உலகத்தில் கண்டீங்க’’
‘’என் ரங்கநாதனை கண்டேனில்லையோ, சத்ய யுகத்தை
எனக்குள்ள கண்டேனில்லையோ’’
‘’தாத்தா, வேறு ஏதாவது ரகசியம் இருக்கா?’’
அமர்ந்தவர் கண்களை மூடினார். காற்று வீசும் சப்தம்
மட்டுமே கேட்டது. எப்படியும் ஒரு பத்து நிமிடங்கள் மேல் ஆகி இருக்கும். சிவராம்
தாத்தா என அழைக்க நினைத்து அமைதி ஆனான். அமர்ந்து இருந்தவர் சட்டென வலது புறம்
சாய்ந்தார். சிவராம் அதிர்ச்சி ஆனான். தாத்தா என அலறியவன் தண்ணீர் எடுக்க நினைத்து
எழும் முன்னர் சட்டென சாய்ந்தவர் எழுந்து நின்றார்.
‘’இன்ட்ரான் இல்லாத பெண் குழந்தை ஒன்று ஆண்
குழந்தை ஒன்று இன்னும் இரண்டு வருடத்திற்குள் இந்த பூமியில் பிறக்கும். அந்த
குழந்தைகளே சத்ய யுகத்தைத் தொடங்கி வைக்கப்போகின்ற குழந்தைகள். இன்னும் பல ஆயிரம்
வருடங்களில் எக்ஸான் யுகம் மட்டுமே. எதுவுமே பேசாமல் நீர் இனி போகலாம்’’
சிவராம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்.
‘’தாத்தா, நீங்க சொல்றது’’
அதற்குள் ரங்கநாதன் அப்படியே கீழே படுத்து
கண்களை மூடிக்கொண்டார். சிவராம் பலமுறை அழைத்தும் அவர் கண்களை திறந்து பார்த்தவர்
எதுவும் பேசவில்லை. இனி அங்கு இருப்பதால் எவ்வித பயனும் இல்லை என கருதி
வெளியேறினான். சுபாவிடம் தான் நாளை சென்னையில் இருப்பேன் என தகவல் மட்டும்
சொன்னான்.
இந்த ரங்கநாதன் தாத்தா சொன்னது எல்லாம்
அவனுக்குள் சுழன்று கொண்டு இருந்தது. தான் ஸ்ரீரங்கம் வந்தது, ஜெகனிடம் பேசியது, இவரை
சந்தித்தது எல்லாம் கனவாக இருக்கக்கூடும் என்றே எண்ணுமளவு அவனுக்குள் ஒரு பெரும்
குழப்பம் வந்து சேர்ந்து இருந்தது.
நமது சிந்தனைக்கு உதவும் மனிதர்கள் நமது
வழியில் தென்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில்
உள்ளது நமது சிந்தனையின் செயல்பாடு. யூகத்தில் பேசும் பேச்சுக்கள் எல்லாம்
பலிப்பது இல்லை. பலித்தபின் யூகம் வந்த காரணம் எவரும் விளங்க முடிவது இல்லை.
இதை எல்லாம் சுபாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என
எண்ணி பேருந்தில் சென்னை நோக்கி பயணம் செய்தான் சிவராம். அதிகாலையில் வீடு சென்று
விரைவாக குளித்து சுபா மருத்துவமனை செல்லும் முன்னர் அவளை வழியில் சந்தித்தான்.
எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தான்
‘’சிவா, இது எல்லாம் உண்மையா இல்லை நீயா கதை
எதுவும் சொல்றியா?’’
‘’நான் சொன்ன விபரங்களை வைச்சி நீ வேணும்னா
ஸ்ரீரங்கம் போயிட்டு வா’’
‘’அப்போ அந்த ராம் சொன்னது எல்லாம் நடக்குமா?’’
‘’நடக்கும்னு எனக்கு தோணுது சுபா, ஜெகன்
காட்டின படங்கள், மூலக்கூறுகள் வேலை செய்யும் விதம் அப்படியே என் மனசுக்குள்ள
இன்னும் இருக்கு. இது உண்மையிலேயே மனித வரலாற்றில் ஒரு மாபெரும் மரபணு புரட்சி, நீ
அந்த தம்பதிகளைப் பார்த்தியா, அவங்க உடம்புல எதுவும் மாற்றம் இருக்கா, ஏதாவது சிம்ப்டம்ஸ்
சொன்னாங்களா’’
‘’எதுவும் சொல்லலை சிவா, அவங்களை ராம் நேரடியா
டீல் பண்றான். நான் அங்கே ஒரு வேடிக்கைப் பார்க்கிற மாதிரிதான் இருக்கேன். ரொம்ப
நார்மலா இருக்காங்க. சிவா, அடுத்த தம்பதிகள் பாலகுரு, திவ்யா வர இருக்காக்கங்க, திங்கள்
வர வேண்டியவங்களை மாத்திவிட்டுட்டான் ராம். அவங்ககிட்ட பேசட்டுமா?’’
‘’நோ நோ சுபா. நீ இனி பண்ண வேண்டியதெல்லாம்
டாக்டர் ராமுக்கு உதவி பண்றது மட்டும்தான். டாக்டர் ராம் கிட்ட போய் நல்லா
யோசிச்சிப் பார்த்தேன், ஐ வில் கோ ஆப்பரேட் வித் யூ அப்படின்னு சொல்லு’’
‘’சிவா திஸ் இஸ் நாட் ரைட்’’
‘’சொன்னா கேளு சுபா, அந்த ரங்கநாதன் தாத்தா
சொன்னதை கேட்டதுல இருந்து ஐ திங் யூ சுட் ப்லீவ் இட்’’
‘’சரி சிவா, நான் ராம் கிட்ட சொல்றேன். நானும் இந்த
வீக்கென்ட்ல ஸ்ரீரங்கம் போயிட்டு வரேன்’’
சுபா மருத்துவமனைக்குள் நுழைந்தாள். டாக்டர்
ராம் நிறைய ஆலோசனையில் தனது அறையில் அமர்ந்து இருந்தார். அறையை விட்டு
வெளியேறியவர் சுபா வருவதைப் பார்த்ததும் சுபாவை நோக்கி சென்றார்.
‘’டாக்டர் சுபா, இன்னைக்கு வரவங்க கிட்ட
எதுவும் சொல்லமாட்டேன்னு எனக்கு உறுதி கொடு’’
‘’சொல்லமாட்டேன் டாக்டர் ராம், நானும் நல்லா
யோசிச்சேன் எனக்கு உன் மூலமா வரப்போற பேரை எதுக்கு நான் கெடுத்துக்கணும்’’
‘’வாவ், கிரேட் டாக்டர் சுபா. வாட் எ
சர்ப்ரைஸ். ஆனா உன்னோட கிரிமினல் புத்தியை பயன்படுத்த நினைச்சா அப்புறம் நான்
டாக்டராக இருக்க மாட்டேன். என்னோட நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும்’’
‘’இல்லை டாக்டர் ராம். சத்தியம். நோ வேர்ட்ஸ். ஐ
டேக் இன்சார்ஜ்’’
‘’வெரிகுட், எப்படி இப்படி ஒரு மாற்றம்’’
‘’சுகுமார், தீபா ரொம்பவும் இயல்பா எவ்வித
பிரச்சினை இல்லாம இருக்காங்க அதனால எனக்கு நம்பிக்கை வந்தது’’
‘’நைஸ். பாலகுரு இன்னைக்கு தன்னோட மனைவியோட
மதியம் இரண்டு மணிக்கு வரார். அதோட இதை நிறுத்திக்குவோம். நாம் கொஞ்ச நாளைக்கு
எதுவும் பண்ண வேண்டாம். குழந்தைகள் பிறந்தப்பறம் நாம் அவங்க டெவெலப்மென்ட்
பார்த்துட்டு அவங்க இப்படி பிறந்த காரணத்திற்கு என்னவெல்லாம் செய்தோம்னு உலகத்துக்கு காட்டணும் டாக்டர் சுபா, அந்த
ஜெகன் எப்படியும் உன்னை மாதிரி என்கிட்டே வருவான்’’
‘’ஓகே டாக்டர் ராம்’’
சுபாவின் மனமாற்றம் குறித்து ராம் பெரிதாக
யோசிக்கவில்லை. தன்னை மீறி சுபா எதுவும் செய்ய இயலாது என ராம் நம்பினார்.
பாலகுரு, திவ்யா நிறைய கேள்விகள் கேட்டார்கள்.
அதுவும் குறிப்பாக கேப்ச்யூல்ஸ் பற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராம் தெளிவாக
பதில் சொன்னாலும் பாலகுரு இதெல்லாம் தேவையா என்றே கேட்டார். ஒருவழியாக அவர்களை
சம்மதிக்க வைக்கும் முன்னர் ராம் சரி கேப்ச்யூல்ஸ் வேண்டாம் என சொல்லுமளவுக்கு
வந்துவிட்டார். சுபா தான் சில விசயங்களை பேசி அவர்களை முழு மனதோடு சம்மதிக்க
வைத்தாள். அவர்கள் சந்தோசமாக கிளம்பி சென்றார்கள். கோபத்தின் உச்சியில் இருந்தார்
ராம்.
‘’டாக்டர் சுபா, நான் ஒரு முட்டாள்னு நீ என்னை
நம்ப வைக்க பாக்கிறல, இதுல கேம் விளையாடின உன்னோட லைப்ப முடிச்சிருவேன்’’
சுபா அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் (தொடரும்)