Thursday, 1 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27

''சுபாவை கூப்பிடுடா''

''வேண்டாம் கோரன்''

''நீ அவளை வரச் சொல்லிட்டுப் போடா''

''கோரன் நீ ஏன்டா இப்படி நடந்துக்கிற''

''நான் சொன்னதை செய்டா''

சுபத்ராவை  அழைத்தேன்.சுபத்ரா வெளியே வந்தாள். நான் அங்கிருந்து மறைந்து கொண்டேன். கோரனைப்  பார்த்த சுபத்ரா நேராக வந்து கோரன் எதிர்பார்க்காத வண்ணம் மூர்க்கமாகத் தாக்கினாள். கோரன் சுதாரிக்கும் முன்னர் நான் அவன் மீது கல் எடுத்து எறிந்தேன். நிலைகுலைந்து விழுந்தான் கோரன். எவ்வித சப்தமும் போடாமலே கோரன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

சுபத்ரா போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு காத்து இருந்தாள். கோரனின் கால் கைகளை கட்டிப்போட்டேன். அதோடு நானும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது. ரங்கநாதன், சுபலட்சுமிக்கு  இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுபத்ராவை நாளையே வீட்டை காலி பண்ணி வேறு எங்காவது தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். சுபத்ரா மறுப்பேதும் சொல்லாமல் சரி என சொல்லிவிட்டாள்.

போலிஸ் உடனடியாக வந்தது. சுபத்ரா எல்லா விபரங்களையும் சொன்னதும் கோரனை போலிஸ் அழைத்துச் சென்றது. என்னையும் சுபத்ராவையும் காலையில் காவல் நிலையத்திற்கு  வரச் சொன்னார்கள்.

''டேய் நான் உன்னோட இப்போ உன் வீட்டுக்கு வரட்டுமா?''

''சுபா''

''அவங்கதான் இங்க என்னை தங்க வேணாம்னு சொல்லிட்டாங்க, அங்க வந்து தங்கிட்டு நாளை வேற இடம் போயிக்கிறேன்''

''சரி சுபா''

சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் நடக்கலானாள். ரங்கநாதன் சுபத்ராவை தடுக்கவே இல்லை. காயத்ரி அக்காவாவது தடுப்பார் என்றால் அதுவும் இல்லை.

''சுபா, என்னை காதலிக்கிறது உண்மையா?''

''ஆமாடா, என்னடா சந்தேகமா?''

''சுபா, நான் காயூவை காதலிக்கிறேன், ப்ளீஸ் எங்க வாழ்க்கையை குழப்பாதே''

''உன்னை என்னை காதலிக்க சொன்னேனாடா''

''எத்தனை பிரச்சினை?''

''சரி செய்துடலாம்டா''

''சரி செய்துரலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான், எதையும் சரி செய்யமுடியாது''

பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தோம். சுபத்ராவை கண்டதும் காயத்ரி குழப்பம் அடைந்தாள். அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரி இருக்கட்டும் என்றார். அப்பா என்னை தனியாக அழைத்து என்னப்பா தேவையில்லாத பிரச்சினைகளோட வாழுற, படிக்கிறதுக்கு பாரு என அறிவுரை சொல்லி அனுப்பினார்.

காயத்ரியின் அறையில் தான் சுபத்ரா தூங்க வேண்டி இருந்தது. காலையில் எழுந்து கிளம்பியபோது காயத்ரிதான் சுபத்ரா இங்கேயே இருக்கட்டும் என்றாள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அப்பாவும் காயத்ரி சொன்னாள் என்பதற்காக சம்மதம் சொன்னார்கள்.

நாங்கள் மூவரும் காவல் நிலையம் செல்ல இருந்தோம். அப்பாவும் உடன் வருகிறேன் என்றதால் நால்வரும் சென்றோம். அப்பாவுக்கு அங்கிருந்த காவல் அதிகாரியை தெரியும் என்பதால் எவ்வித பிரச்சினை இன்றி எல்லாம் முடிந்தது. ஆனால் கோரனை வெளியில் விட இயலாது என்றார் அவர்.

நாளிதழ் ஒன்றை பார்த்தபோது கோரன் சொன்னது போலவே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விசயம் வெளி வந்து இருந்தது. அதை காவல் அதிகாரியிடம் தந்து கோரன் தான் இந்த கொலையை செய்தான் என நான் சொன்னதும் என்னை போகச் சொன்னவர் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள்.

சுபத்ரா காயத்ரியின்  நெருங்கிய தோழி ஆனது ஆச்சரியம். அன்று கல்லூரியில் எப்படி ஒரு மனிதன் கொடூர எண்ணம் கொண்டு உருவாகிறான் என பாடம் எடுத்தார் எனக்குப் பிடித்த ஆசிரியர்.

''சார், கோரன் ஒரு கொலைகாரனாக மாறியதற்கு என்ன காரணம்?''

''கொலைகாரனா?''

மொத்த வகுப்பும் என்னை பயத்துடன் பார்த்தது.

''நமது கல்லூரி ஆசிரியர் ஒருவரை கோரன் கொலை செய்து தற்போது ஜெயிலில் இருக்கிறான் சார். அவன் நிறை புத்திக்கூர்மை கொண்டவன் ஆனால் எதற்கு இப்படி நடந்து கொண்டான் என நினைக்கும்போது இந்த கொடூர எண்ணம் அவனுள் எப்படி வந்து இருக்கக் கூடும் சார்''

''நீ அதுகுறித்து இங்கு பேசுவது தேவை இல்லை, கொடூர எண்ணம் கோபத்தின் வெளிப்பாடு, இன்று வேறு பாடம் பார்க்கலாம்''

கோரன் பற்றிய பேச்சு கல்லூரி முழுக்க பரவியது. பலர் பரிதாபம் கொண்டார்கள். மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சுபத்ராவைப் பார்த்தோம். சுபத்ராவிடம் கோரன் பற்றி கேட்டபோது ஒரே வரியில் சொன்னாள்.

''பரிணாமத்தின் கர்ம வினை''

''கர்மவினையா?''

''ஆமாடா, நமது மூளை வளர வளர நமக்கு நம்மை பாதுகாக்க வேண்டி எண்ணம் வந்தது, அதன் விளைவாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டோம்''

காயத்ரி குறுக்கிட்டாள்.

''சிலருக்கு அன்புள்ளமே அவர்களுக்கு பெரும் எதிரி''

நான் காயத்ரி என்ன அர்த்தத்தில் சொன்னாள் என புரிந்து கொள்ள முடியவில்லை. சுபத்ராதான் சொன்னாள்.

''கோரன் நிச்சயம் வெளியே வருவான், அவன் ஒரு ஜீனியஸ், ஆனால் முட்டாள்தனமா நடந்துக்குவான்''

''அவன் வெளியே வந்தா உன்னை கொலை பண்ணிருவான்''

''இல்லைடா, நான் அவனை கொலை பண்ணுவேன்''

காயத்ரி பயம் கொண்டாள்.

(தொடரும்)

1 comment:

Anonymous said...

We a glance at|have a glance at} data safety and regulation, bonus phrases and conditions, sport selection and progressive jackpots. You can {check out|take a glance at|try} all the casinos that didn't make the grade proper here on our list of web sites|of websites} to keep away from. PASPA was declared unconstitutional end result of|as a result of} it interfered with a state's proper to repeal its own thecasinosource.com anti-gambling legal guidelines. Shortly thereafter, New Jersey supplied legal sports activities betting to its residents.