Tuesday, 23 June 2015

மனைவியின் வாரிசு ( சிறுகதை )


                                                     மனைவியின் வாரிசு ( சிறுகதை )

இதோ நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போது அடுத்த குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் சொல் என கேட்கும்போதெல்லாம் இதுவரைப் பெற்றுக் கொண்டது போதாதா என்றே பதில் அளித்துக்  கொண்டு இருந்தாள்.

''நாலுதானே பெத்து இருக்கோம், இன்னும் ஒன்னே ஒன்னு பெத்துக்கிரலாம்''

''ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுக, போதாதா. ஊரு உலகத்தில் நம்மளைப் பத்தி என்ன பேசுறாங்க தெரியுமா?''

''எவன் என்ன பேசினா என்ன, அவனா வந்து நம்ம வீட்டில உலை வைக்கிறான்''

''நீங்க என்ன சொன்னாலும் சரி, என்னால இன்னொரு புள்ளைப்  பெத்துக்க முடியாது, இதுகளை சமாளிக்கவே எனக்கு சீவன் போதலை. இதுல இன்னொன்னு வேறயா''

''அந்த காலத்தில...''

''வாயை மூடுங்க, போதும் உங்க அந்த காலப் புராணம், ஆசை வார்த்தை சொல்லி சொல்லி அதை வாங்கித்தாரேன் இதை வாங்கித்தாரேன் சொல்லி புள்ளைக வாங்கித் தந்ததுதான் மிச்சம். மூத்தவனுக்கு இன்னும் ரண்டு வருஷம் போனா கல்யாணம், இந்த லட்சணத்தில இன்னொன்னு கேட்குதா''

''நீ என்ன வேணும்னா சொல்லு, எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு உடனே ஒரு புள்ளை  நீ பெத்து தரனும்''

''குடும்ப கட்டுபாடுனு  ஒன்னு இருக்கே அதை எல்லாம் பண்ணித் தொலைக்கக்கூடாதானு போகிற இடத்தில பேசுறாளுக, மானம் போகுது''

''நாம பேசாம ரஷ்யா போயிரலாம், அங்கன நிறைய புள்ளைக  பெத்தா வரிவிலக்கு எல்லாம் இருக்கும். வேற ஒன்னும் செய்வோமா நாம பேசாம மதம் மாறிட்டா என்ன''

''புள்ளை  பெக்கிரதுக்கு யாராச்சும் மதம் மாறுவாகளா''

''கல்யாணம் பண்ணுறதுக்கு மதம் மாறுற ஆளுகனு  ஊருல பேச்சு இருக்கு, அது எல்லாம் இப்ப எதுக்கு, எனக்கு இன்னொரு புள்ளை  வேணும்''

''நான் வீட்டுக்கு இனிமே தினமும் தூரம்''

''கிறுக்கச்சி  மாதிரி பேசித் தொலையாத அப்புறம் இன்னொரு புள்ளைப்  பெத்துக்க வேற ஒருத்தியைத்தான் நான் தேடணும்''

''ச்சீ என்னப்  பேச்சு பேசறீங்க, இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு, பேசாம தள்ளிப்படுங்க, நாம பேசறது யாருக்காச்சும் கேட்கப்போகுது, ரெண்டாமவன் சொல்றான் இன்னொரு பிள்ளை பெத்துக்கம்மா இல்லைன்னா எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கிக்கொடுனு சொல்றான். குழந்தைக பொம்மைன்னு நினைச்சிட்டான்''

''அவன் கேட்டத நாம நிறைவேத்தி வைக்க வேணாமா சொன்னா கேளு. இதுதான் கடைசி''

''நீங்க மொத பிள்ளையில் இருந்த இப்ப நாலாம் பிள்ளை வரைக்கும் இதேதான் சொன்னீங்க. எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க''

''அப்ப நான் வேற ஒருத்தியைத் தேட வேண்டியதுதான்''

''இன்னொருதடவை அப்படி பேசினீங்க, அப்புறம் கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன். சொல்லிட்டேன். பேசாம படுத்துத் தொலைங்க. எப்பப்பாரு பிள்ளை பிள்ளைனுட்டு''

வழக்கம் போல நன்றாகத் திட்டு வாங்கி உறங்கினேன். காலையில் எழுந்ததும் வீடு பரபரப்பாக இருந்தது. பெரியவன் முதற்கொண்டு சிறியவள் வரை பள்ளி கல்லூரி என இங்கும் அங்கும் அலைமோதிக் கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் ஒழுங்கு பண்ணி வியர்க்க விறுவிறுக்க  வேலை செய்து கொண்டு இருந்தாள்.

''மாமா, பெரியவனுக்கு ஒரு நூறு ரூபா கொடுங்க. சின்னவளுக்கு ஒரு ஐம்பது கொடுங்க, நேத்தே கேட்க மறந்துட்டேன்''

இப்படி இவள் ஆடி ஓடி உழைத்து எத்தனை வருடங்கள் கழிந்து விட்டன. இன்று விடுமுறை போட்டு இருந்தேன். எப்படியும் அடுத்த பிள்ளை தயாராக வழி செய்ய வேண்டும் என.

''இன்னைக்கு வேலைக்குப் போகலையாங்க''

''போகலை, அசதியா இருக்கு''

''அப்படினா ரண்டாமவனை ஸ்கூல்க்கு போய்  விட்டு வாங்க''

''நீ ரெடியா இரு''

''எங்கேயும் வெளியில கூப்பிட்டுப் போறீங்களா''

''இல்லை, அடுத்த பிள்ளைக்கு...''

''அப்பா, அம்மாவை எப்போதுமே தொந்தரவு பண்ணிட்டேதான் இருப்பிங்களா''

பெரியவள் வந்து சத்தம் போட்டுப் போனாள்.

''கேட்டுக்கோங்க, பிள்ளைக வளர்ந்துட்டாங்க''

ரண்டாமவனையும் சின்னவளையும் அழைத்துப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். நானும் அவளும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம். சப்பாத்திதான் செய்து இருந்தாள்.

அவளது சிறு வயது காலங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாள் அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நான் என்னையும் அறியாமல் முகம் மலர்ந்தேன்.

கொலுசுகள் வாங்கிட்டு வரலாமா என்றவுடன் எதுவும் மறுப்பு சொல்லாமல் வா போகலாம் என கொலுசுகள் வாங்கி கொண்டு வந்து வீட்டில் அமர்ந்தோம். காலையிலேயே மதிய சாதம் சமைத்துவிட்டதால் அதிக வேலை இல்லை. ஒவ்வொரு அறையாக சென்று மகன்கள்  மகள்களின் அறைகளை சுத்தம் செய்தாள். எல்லா துணிகளை ஒழுங்கா மடித்து வைத்தாள்.

''பிள்ளை பெறலாம் வா''

''நீங்க வேலைக்குப் போங்க, நொய்  நொய்யுனுட்டு''

''நான் ஒரு கனவு நேத்து கண்டேன்''

''என்ன கனவு''

''அது வந்து ஒரு பொண்ணு இருவத்தி அஞ்சி வயசு இருக்கும், என்கிட்டே வந்து உங்களோட ஒரு புள்ளை பெத்துக்கிட்டா எனக்கு சாகா வரம் கிடைக்கும். அதோட மட்டுமில்லாம அந்த பையன் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை கொண்டு இருப்பான். உங்களுக்கும் சாகா வரம் கிடைக்கும்னு  சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகிருச்சி, குழந்தைக இருக்காங்கனு சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு அது எல்லாம் தெரியும். அவங்களுக்கும் சாகா வரம் கிடைக்க ஏற்பாடு பண்றேன். எனக்கு உங்க குழந்தைதான் வேணும் அப்படின்னு அடம் பிடிச்சிச்சி. வேற யாருமே உலகத்தில வேணாம் அப்படின்னு சொல்ல எனக்கு என்ன ரோதனையாப் போச்சுனு  அதெல்லாம் முடியாது, என்னோட பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன் அப்படின்னு சொன்னேன்''

''அப்புறம் என்ன ஆச்சுங்க''

''பாத்தியா நான் உனக்கு கனவுல கூட துரோகம் செய்யலை''

''மீதி கதை என்ன ஆச்சுன்னு சொல்லுங்க''

''பாவிபுள்ள நான் குழந்தை தரமுடியாதுன்னு சொன்னதும் செத்துப் போச்சு''

''ஹாஹாஹா ஹாஹாஹா நீங்க ரொம்ப குறும்புங்க''

'சரி வா நாம...''

''இப்படி எல்லாம் உங்களுக்கு ஒரு நினைப்பு உண்மையிலே இருந்து இருக்கு அதுதான கனவு வந்துருக்கு''

அந்த வார்த்தைகள் கேட்டு நான் சற்று மிரண்டேன்.

 ''இல்லை அந்த பொண்ணு உன்னோட வாரிசா வர நினைச்சி இருக்கும்''

''உங்களுக்கு மதியம் சோறு கிடையாது, பட்டினியா கிடங்க''

இப்போதெல்லாம் நான் கனவு கண்டதாக எந்த ஒரு கதையும் அவளிடம் சொல்வதே இல்லை.

(முற்றும்)

பின்குறிப்பு: சிறுகதை என குறிப்பிட்டு இருப்பதால் உங்க சொந்த அனுபவமோ என எவரேனும் என்னைப் பார்த்து கேட்டீங்க அப்புறம் உங்களுக்கு சோறு கிடையாது, தண்ணி கிடையாது.






No comments: