ஶ்ரீரங்கத்து அரங்கனே
உன் தரிசனம் கண்டு
பாடுகிறேன் தமிழில் வாழ்த்துப்பா
காவிரியாற்றின் அருகில்
நீ கொண்ட கோலம்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு
பிடித்துப் போனது
இதோ இங்கே குழுமி இருக்கும்
இவர்கள் கொண்ட தமிழ் கோலம்
எனக்கு மிகவும் பிடித்துப் போனது
பொன்மலை உச்சிமலைக்கோட்டை
கொள்ளிடம் என்றே இயற்கை எழில்
கொஞ்சும் திருச்சி கொண்ட குதூகலம்
சமயபுரத்து மாரி அம்மனும்
உறையூர் வெக்காளியம்மனும்
சுற்றி காத்திருக்கும் ஊரும் இது
பள்ளிவாசல் தேவலாயம் கல்லூரிகள்
பள்ளிகள் என சிறந்த
பேருவகை கொள்ளும் ஊரும் இது
காவிரியும் கல்லணையும்
களித்து சொன்ன பெருமை இன்று
எழுத்துக்களால் எண்ணங்களால்
மீண்டும் சங்கமித்து மகிழ்ந்தோம் நன்று
திருவானைக்கோவில் பெயர் கொண்டு
யானை புகாவண்ணம் கோவில் உண்டு
சேவலும் சாமியாகும் பஞ்சவர்ணமாய்
எறும்பீஸ்வரர் அருளால் திருவெறும்பூர்
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
இனிய தமிழ் கொண்டு
நேசித்து இருக்கச் சொன்ன
வள்ளுவ ஔவையும் உண்டு
மாம்பழசாலையும் வயலூர் முருகனும்
திருபட்டூர் பிரம்மனும் அமைதியே
உருவான சிவனது திருநெடுங்குளமும்
சோழப்பேரரசின் உறையூர் தலைநகரமும்
சுற்றியே அமைந்த திருச்சி சொல்லும்
மக்களின் உழைப்பின் உன்னதமும்
நமது தமிழின் வியத்தகு மேன்மையும்
முக்கொம்பு பூங்காவும் மறைகதை பேசும்
குணம் தவறினால் இருக்கிறது குணசீலம்
இரவிலும் வெப்பக்கதிர்வீச்சு இங்கே
தமிழால் இளங்காற்று வீசுகிறது இன்று
சரித்திரத்தில் இது திருசிபுரம்
நாம் கூடிய கூட்டத்தால் எழுச்சிபுரம்
ஶ்ரீரங்கத்து அரங்கனே
என்வாழ்த்து கேட்டு
சயனநிலை கலைத்து
எம்மோடு தமிழ் பருகு.
வாழிய நண்பர்கள்
வாழிய தமிழ்ப்பற்று
கவிதையை வடிவமைத்து தந்த Mr K K Gire அவர்களுக்கும், கவிதையை வாசித்த திரு பாண்டித்துரை அவர்களுக்கும் மிக்க நன்றி
No comments:
Post a Comment