Wednesday, 26 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 3

சனிக்கிழமை வந்தது. எனக்கு எழவேப் பிடிக்கவில்லை. என்னவொரு கொடுமை.  கல்யாண வீடு போல அம்மா மாற்றிக்கொண்டு இருந்தார். புது சேலை  உடுத்த செய்து முடித்த பலகாரங்கள் என அன்று ஒரு பொம்மையாக செயல்பட்டேன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை படித்து என்ன பிரயோசனம்? என்று எனக்குள் உண்டான மனநிகழ்வு என்னை அவ்வப்போது தின்று கொண்டிருந்தது. வந்து அமர்ந்தார்கள். அப்போது அவனைப் பார்த்தேன். இவனா எனக்கு கணவன் என்று எனக்குள் எழுந்த கேள்வி இன்னும் அதிர்ச்சியை தந்தது.

 பொண்ணை வரச்சொல்லுங்க என்ற சம்பிரதாயம் எல்லாம் இல்லை. நானும் பலகாரங்களுடன் சென்று அமர்ந்தேன். உன் அப்பா எல்லா விபரமும் சொன்னார். உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அதான் உன்னை பொண்ணு பார்க்க வந்தோம் என்றார். என் பையன் கூட கல்யாணம் பிடிக்காதுனு உன் அப்பாகிட்ட சொல்லி இருந்தேன். உன்னோட போட்டோ பார்த்ததும் மனசு மாறிட்டான் என்றவரிடம் எனக்கு கல்யாணம் பிடிக்கலை என்றேன். அப்பா  முகம் பார்க்க எனக்கு தெம்பில்லை எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை. அவன் நான் சொன்னதும் ஹேய் என துள்ளி எழுந்தான் மகிழ்ச்சியுடன். 

வாங்க போகலாம் என்றே அழைத்தான். இருப்பா என அதட்டினார் அவனின் அப்பா அப்படியே அமர்ந்தான் இங்க பாரும்மா இப்படி பேசாத என தொடங்கி எனக்கு தரப்பட்ட அறிவுரையில் எனக்கு வெறுப்பு அதிகமாகியது எப்போ கல்யாண தேதி என்றார் அப்பா. அதிர்ந்தேன். வர்ற 4ம் தேதி என்றார் அவனின் அப்பா. அவன் ஏதும் பேசாமல் இருந்தான். எனக்கு பையனைப் பிடிக்கலை என நேரடியாகவே சொல்ல இயலாமல் தவித்தேன். ஏன் அப்பா?! என் பார்வைக்கு வலிமை இல்லை. அப்பா சொன்னார் பிடிச்சி கல்யாணம் பண்றவங்க எல்லாம் கடைசி வரைக்கும் சேர்ந்தா இருக்காங்க? என்ற கேள்வி என்னை பலவீனமாக்கியது. இதோ இவ கூட என்னைப் பிடிக்கலைனு சொன்னா, கூட சேர்ந்து வாழலை என அம்மாவை காட்டினார். எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. நானும்தான் இதோ இவ பண்ணாத அழிச்சாட்டியமா? என்று அவன் அப்பா சொன்னதும் எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. 

அப்பா நீங்களா இப்படி? அம்மாவை அடிமைப்படுத்தியதோடு அடுத்தவர் முன் அவமானப்படுத்துவது என்றே கேட்க துடித்தேன். அம்மாவும் முதல பிடிக்கலை அப்புறம் இவரே உலகம்னு ஆகிருச்சி என்றதும் அவனின் அம்மாவும் அதே பல்லவி பாடினார். எனக்கு இந்த திருமணம் பிடிக்காமல் போனது இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், வேறு வழியின்றி எதனையும் ஏற்றுக்கொள்வது. இப்படி கூட மனிதர்கள் இருக்க இயலுமா? என்ற எனது கேள்விக்கு அப்போதே பதில் சொன்னேன். என்னால் கல்யாணம் பண்ண இயலாது என்று தீர்மானமாக எழுந்தேன். அவனும் திருமணம் பண்ண இயலாது என எழுந்தான். அப்படியே வெளியே சென்றான். இந்த கல்யாணம் நடக்கும் என அவனின் அப்பா சொல்லி சென்றார். என்னை அவமானப்படுத்திட்டல்ல என அப்பா என்னை அடிக்க வந்தார் ஏன்டீ இப்படி கேவலப்படுத்தற என அம்மா பங்குக்கு சத்தம் போட்டார் எனக்கு கல்யாணமே வேண்டாம் என சொல்லி பார்த்தேன் நீ கேட்கலை என அழுதேன். அப்புறம் ஏன்டீ சம்மதிச்ச என்றார் அம்மா. திட்டம்போட்டு கேவலப்படுத்திட்ட என்ற அப்பா குரலில் வேதனை தெரிந்தது. எனக்கு அவனைப் பிடிக்கலை என்றேன். வேற யாராச்சும் பாருங்க, அவனுக்கே என்னைப் பிடிக்கலை என்றேன். நீ கல்யாணம் பண்ணு, இல்லைன்னா எக்கேடு கெட்டுப் போ என அப்பா சொன்னது எனக்கு நிறைய வலித்தது. 

அப்பா என்னால உங்களை மாதிரி வாழ முடியல என்ற எனது நிலையை எப்படி சொல்வது, அம்மா என்னால் எப்படி உன் வாழ்க்கை வாழ இயலும். அம்மாவிடம் நிறைய அழுது எல்லாம் புலம்பினேன் எக்கேடு கெட்டுப் போ என்றார் அம்மா. வீட்டில் அன்றிலிருந்து திருமணப்பேச்சு எடுக்கவே இல்லை. என் தோழி என்னிடம் போன் பண்ணி சொன்ன விசயம் எனக்கு ஆச்சரியம் தந்தது சில நாட்களில் ஊருக்கு வந்தவள் இதோ இவனே என் காதலன் என ரமணனை காட்டினாள் என்னால் நம்ப இயலவில்லை. ரமணன் என்னைப் பார்த்து சிரித்தான். அவளது வீட்டில் ஏற்றுக்கொண்டது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. எப்படி இப்படி வாழ இயலும்?

எனக்கு இந்த திருமணம் என்பதெல்லாம் பிடிக்கவே இல்லை. எல்லோரும் திட்டினார்கள். கல்யாணமற்ற வாழ்வு முழுமை பெறாது என்றே சொன்னார்கள். தோழியின் திருமணம் வந்தது. உலகில் திருமணம் என்பது என்னவென எனக்குப் புரியவே இல்லை. வாழ்த்து சொல்லி வீடு வந்தேன். நல்ல வரன் வந்து இருப்பதாக அப்பா சில மாதங்கள் கழித்து சொன்னார். வீடு வந்து பெண் பார்க்கும் படலம் முடிந்தது. இரு வீட்டார் சம்மதம் சொன்னார்கள். எனக்கு சம்மதமே இல்லை. கல்யாணம் முடிந்து ஒரே வருடத்தில் ஒரு பெண் குழந்தை. என் கதையை அவள் செய்ய மறுத்த திருமணத்திற்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

திருமணத்தை வெறுக்கும் பெண்களே நீங்கள் எப்படி என சொல்லிவிட்டுப் போங்கள். (முற்றும்)

Friday, 21 November 2014

வெட்டித் தருணங்கள் - 1

முன்னுரை :

இது ஒரு நிழல் அல்ல, நிஜமும் அல்ல. இந்த கதையில் வருபவர்கள் என் கற்பனையில் உதித்தவர்கள் அல்ல. அன்றாடம் இவர்களுடன் எழுத்து மூலம் மட்டுமே பழகி இருக்கிறேன் என சொல்லவும் முடியாது. இருப்பினும் திடீரென இவர்களை எல்லாம் கதை மாந்தர்கள் ஆக்கினால் என்ன என எனக்குத்  தோணியது. அதன் விளைவாக இந்த நாவல் எழுதத் தொடங்கினேன். எவரேனும் இந்த கதைப் பாத்திரம் நான்தானா என என்னிடம் கேட்பீர்களேயானால் எனக்குத் தெரியாது.

கதைக்கான கரு என்னவாக இருக்கும் என்றே நான் யோசனை செய்யாமல் எழுதத் தொடங்கிய கதை இது. எப்போது பார்த்தாலும் அன்புதனை மையமாக வைத்தே எழுதி முடித்தாகிவிட்டது. கதை எழுதி முடிக்கும் முன்னரே எழுதிய முன்னுரையும் இதுதான்.

அன்புடன்
இராதாகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------------------------------------------
1.

''அம்மா எனக்கு ஒரு லேப்டாப் வாங்கித் தருவியா?''

''காசுக்கு எங்கடா போறது?''

''அப்பாட்ட கேளுமா''

எனது ஆசையை அம்மாவிடம் சொல்லிவைத்தேன். அம்மா எரிச்சலாக என்னைப் பார்த்தார்கள். இப்போதுதான் பொறியியல் துறையில் முதலாம் வருடம் சேர்ந்து இருக்கிறேன். எனது வீட்டில் இருந்து அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு சென்று விடலாம். முதல் நாள் கல்லூரியில் நிறைய பேர் கைகளில் விலை உயர்ந்த மொபைல் போன்கள்  வைத்து இருந்தார்கள். எனக்கு ஒரு பாடாவதி போன் அப்பா வாங்கி தந்து இருந்தார். என்னை எப்படியாவது மருத்துவர்  ஆக்கிட வேண்டும் என அப்பாவும் அம்மாவும் போராடினார்கள். நான் பொறியியல் துறைக்குத்தான் போவேன் என அடம் பிடித்தேன். நான் நினைத்ததுதான் நடந்தது.

என்னுடன் உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். பையன் வேண்டும் என வேண்டி பிறந்தவன் நான். ஒரு அக்காவிற்கு மட்டும் திருமணம் முடிந்துவிட்டது. அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு இப்போது பேச விருப்பம் இல்லை.

என்னை கொக்கு போகுது பாரு என கேலி பண்ணாதவர்கள் எவருமே எனது ஊரில் இல்லை. நானும் ஆமா நான் கொக்குதான் என சைக்கிளில் பறந்து செல்வேன். சிலரை அடித்து துவைத்து இருக்கிறேன். இருந்தாலும் போடா கொக்கு எலும்பு உடையப்போகுது என கேலி பேசுவார்கள்.

நான் விஜய் ரசிகன். எனக்கு கமல் அஜீத் ரஜினி விக்ரம் சூர்யா ஆர்யா எல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது. நான் பத்தாவது படிக்கும்போது விஜய் குறித்து கேலி பேசியவனை பல்லை பெயர்த்து இருக்கிறேன். என்னை கேலி பேசியவர்களை விட விஜயை கேலி பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது. இதோ என் கையை பாருங்கள். இளைய தளபதி விஜய் என பச்சை குத்தி இருக்கிறேன். நீங்களும் குத்திக் கொள்ளுங்கள். வேறு எவர் ரசிகராக நீங்கள் இருந்தாலும் என்னிடம் விஜய் பற்றி மட்டுமே அதுவும் மிகவும் உயர்வாக பேச வேண்டும், இல்லை என்றால் என்னிடம் பேசக்கூடாது.

நான் ஏ  ஆர் ரகுமானின் பரம விசிறி. என்னமோ இளையராஜாவாம், என் அப்பா இளையராஜா குறித்து நிறைய பெருமை பேசுவார். இளையராஜா பாட்டு கேட்டால்தான் தூக்கம் வரும் என சொல்வார். நான் ரகுமான் பாட்டு கேட்டுதான் தூங்குவேன். இளையராஜா பாடல் என்றால் எனக்கு அறவேப் பிடிக்காது என்றில்லை, பிடிக்காது.

மற்றொன்று நான் பெரியாரின் தீவிர விசிறியும் கூட. பெரியாரின் கொள்கைகளை பதினோராம் வகுப்பில் படிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து கோவிலுக்கு செல்வதை தவிர்த்தேன். இருந்தாலும் வம்படியாக கோவிலுக்கு அம்மா அழைத்துப் போவார்கள். அங்கு வரும் இளம் பெண்களை சைட் அடிப்பது என்  வழக்கம். என் அக்காக்கள் என்னடா பார்வை அங்க என திட்டுவார்கள். அந்த பொண்ணு அழகா இருக்காக்கா எனும் எனது வெள்ளேந்தி பேச்சு வீட்டில் அப்பாவிடம் அவ்வப்போது மொத்துகள் பெற்றுத் தரும். அதனால்தான் எனக்கு அவர்கள் குறித்து பேச விருப்பம் இல்லை. சதிகார அக்காக்கள்.

எனக்கு இந்த மதம் சாதி எல்லாம் அறவேப் பிடிக்காது. அதனால் நாங்கள் எந்த ஆளுங்க என நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

''என்னடா லேப்டாப் கேட்டியாமே''

''ஆமாம்பா''

''எவ்வளவுடா ஆகும்''

''ஒரு முப்பதாயிரம் ஆகும்பா, லேப்டாப் வசதியா இருக்கும்பா''

''சரிடா வாங்கித்தாரேன்''

அப்பாவின் பழக்கம் இதுதான். தனது பிள்ளைகளுக்கு என எதுவும் குறை வைக்கமாட்டார். எனது பிறந்தநாள் 23 மார்ச். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வருடம் தவறாமல் நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்லவேண்டும்.

''பள்ளிக்கூடத்தில தந்த லேப்டாப் மாதிரி இதை பண்ணின, கொன்னுருவேன்''

''இல்லைப்பா, பத்திரமா பாத்துக்குவேன்''

''பொண்ணுகளுக்கு வாங்கித் தராம இவனுக்கு மட்டும் என்ன பவிசு''

''விடுடீ, ஆசைப்படுதாம்ல, அவக கேட்கலைல''

எனக்கு சந்தோசம் பொங்கியது. எனது ஊர் திருநெல்வேலி பக்கம். கிராமத்தின் பெயர் எல்லாம் உங்களுக்கு சொல்லமாட்டேன். நீங்கள் என்னைத் தேடி வந்துவிட்டால் நான் என்ன பண்ணுவது. அதனால் திருநெல்வேலி போதும்.

லேப்டாப் எந்த பிராண்ட் வாங்கலாம் என யோசித்தேன். என்ன வாங்கலாம் சொல்லுங்க?

(தொடரும்)



Thursday, 20 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 2

ஒரு மணி நேரத்தில் அம்மா என்னை எழுப்பினார். இப்ப தலைவலி எப்படி இருக்கிறது என்றவரிடம் பரவாயில்லைமா என்றபடி எழுந்தேன். சீக்கிரம் கிளம்பு என்றவரிடம் நாளைக்குப் போகலாம்மா என்றதும் நாளைக்கு எனக்கு வேற வேலை இருக்கு நீ கிளம்பு என்றார். முகம் கழுவி கிளம்பினேன். சிலர் தம்பதிகளாக சிலர் குழந்தைகளுடன் திருமணமானவர்கள் நிறைய கண்ணில் பட்டார்கள். முதலில் சேலை கடைக்குப் போனார் அம்மா. சனிக்கிழமைக்குத் தேவையானதை வாங்கினார் அம்மா. தலைவலி மீண்டும் தலையெடுத்தது.

வீட்டிற்கு வந்தபோது இரவு 9 மணி, அப்பா வந்து இருந்தார். நான் தலைவலி என சொல்லிவிட்டு நேராக தூங்கப் போய்விட்டேன். இரவு ஒரு மணி இருக்கும். என்னோட தோழி ஒருத்தி அழைத்தாள், தூக்க கலக்கத்தில் என்னடி என்றேன். பணம் கொஞ்சம் வேணும்டி நாளைக்கு பத்து மணிக்கு உன் ஆபிஸ் பக்கம் வரேன் என்றவளின் குரலில் பதட்டமும் நடுக்கமும் தெரிந்தது. என்னடி பிரச்சினை எவ்வளவு வேணும் என்றேன். பத்தாயிரம் வேணும், காலையில் எல்லா விபரங்கள் சொல்கிறேன் என போனை வைத்துவிட்டாள்.

தூங்க முயற்சித்து என்ன காரணம் என தெரியாமல் தூங்காமல் தவித்தேன். எப்படி தூங்கினேன் என தெரியாது.அம்மா என்னை எழுப்பிவிட்ட பின்னர் அவசரம் அவசரமாக கிளம்பி ஏடிஎமில் பணம் எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். பத்து மணிக்கு அவள் வந்து இருந்தாள். என்னடி இப்படி படபடப்பா இருக்க என்றதும் வீட்டுல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க என்னக்கு பிடிக்கலைன்னு சொன்னேன், கேட்கமாட்றாங்க அதான் மதுரைக்கு போறேன், போயிட்டு விபரம் சொல்றேன் என பணத்தை வாங்கிக்கொண்டு எனது கைகளை  பிடித்துக் கொண்டாள். அவள் எனது பேச்சை கேட்கும் மனநிலையில் இல்லை. அவளது வலி எனக்குள்ளும் இருந்தது. ஆனால் என் அப்பாவை நினைக்கையில் எனக்கு அழுகை வந்தது. மிகவும் கண்டிப்பானவர்.என்னிடம் நீ தைரியம் மிக்கவள் என பிறர் சொன்னது பொய் என்றே தோணியது. என் தோழியின் தைரியம் குறித்து எனக்கு பொறாமையாகவும் இருந்தது. சரியாக நாலு மணிக்கெல்லாம் அவள் அழைத்தாள். ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்க ஏற்பாடு பண்ணிட்டேன், இந்தா வேற நம்பரு யாருட்டயும் தராதே என்றவள் நன்றி சொல்லி வைத்தாள். நீ பண்றது தப்பு என அவளிடம் சொல்லும் முன்னர் அவள் எண்கள் தந்து கொண்டிருந்தாள். எழுதி வைத்தேன். எனக்கு அன்று இரவு விபரீத ஆசை தோணியது.

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அம்மா அப்பாவிடம் யாரு மாப்பிள்ளை என்றேன். சனிக்கிழமை வரப்ப பார்த்துக்கிரலாம் என்றார் அப்பா. அம்மாவை தனியாக அழைத்துக் கேட்டால் எனக்கு தெரியாதுடி, ஏன்டி பறக்கிற ரெண்டு நாளு தானே பொறு  என்றார். அங்கே என்ன சத்தம் என அப்பா சத்தம் போட்டார். மாப்பிள்ளை யாருன்னு கேட்கிறா என்றார் அம்மா. அம்மா நாடகம் பார்க்கப் போனார் நான் ஏமாற்றத்துடன் மாடிக்கு போனேன்.

திருமணம் குறித்த கனவுகள் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. எனக்கு ஆண்கள் குறித்து எவ்வித வெறுப்பும் இல்லை. எனக்கு சுதந்திரமாக இருக்கப் பிடித்தும் முடியாமல் போனது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதைய நிலையில் இருந்து எப்படி தப்பிப்பது என எனக்குத் தெரியவில்லை. எப்படிபட்டவர் எனினும் ஏற்று வாழத்தான் வேண்டுமா என்பது எனக்கு புதிது அல்ல. அம்மா, அப்பாவை மீறி எதுவுமே செய்வதில்லை. என்னால் அப்படி இருக்க இயலுமா என்றால் இதோ தடுமாறிக்கொண்டு இருக்கிறேன். அன்புக்குரிய அப்பா எதற்கு இப்படி நடந்து கொள்கிறார் என எனக்கு சத்தியமாகப் புரியவில்லை. அப்பா தூங்கும் முன்னர் அவரிடம் பேச ஆவல் கொண்டேன். மணி பன்னிரண்டு தாண்டியது. அம்மா அங்கேயே உறங்கிக்கொண்டு இருந்தார். அம்மா அப்பா இல்லாமல் தனியாக சென்று தூங்கியது இல்லை. தொலைகாட்சி அணைக்கப்பட்டது. எழுந்திரி என அப்பா சொன்னதும் அம்மா எழுந்து தூங்க வந்தார்கள். என்னம்மா தூங்கலையா என்றார் அப்பா.

கல்யாணம் வேணாம்பா என்று நான் சொன்ன பார்வையில் எனது உடல் கொண்ட நடுக்கத்திற்கு என்ன உவமை சொல்வது. உடனே போம்மா தூங்கு என்றார். என்னுடன் படித்த நண்பர்கள் தோழிகள் அதில் காதல் சொன்ன சிலர் என் நினைவுக்கு வந்து போனார்கள். என்னோட காதலை உதாசீனப்படுத்துறல என அழுத ரமணன் முகம் என் கண் முன்னால் வந்தது. கல்யாணம் பண்ண முடியாது நீ வேணா காதலி என்றே சொன்னாலும் அவன் கேட்கவில்லை. வேறு எவரையாவது காதலித்து திருமணம் பண்ணுவேன் என சவால் விட்டுப் போனான். அவனுக்குள் அப்போது ஏற்பட்ட வலி எனக்கு ஏற்பட்டுக்கொண்டு இருந்தது. வலி அடக்கிப் பழகிக் கொண்டு இருந்தேன்.

தோழியின் பெற்றோர்கள் நான் வேலைக்கு செல்லும் முன்னரே என்னை தேடி வந்து விட்டார்கள். தங்கள்  மகள் குறித்து கேட்டார்கள். எனக்கு பொய் சொல்ல விருப்பமில்லை. அவர்கள் இருவரிடம் என் தோழியின் மனம் குறித்து சொல்லி வேலை தேட மதுரை சென்று இருப்பதாக சொல்லி வைத்தேன். பாதகத்தி பிடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதானே, நல்லவேளை அவளோட நம்பர் வேலை செய்யலை வேற நம்பர் இருந்தா கொடு பேசணும் என்றார்கள். ஆபிஸ்ல இருக்கு தரேன் என எனது நம்பரை அவர்களிடம் தந்து வைத்தேன்.

விபரம் கேட்ட அம்மாவிடம் எல்லா கதையும் சொன்னேன். நீ ஏண்டீ ஓடலை என அம்மா கேட்டபோது என் விழிகளை என்னால் நம்பவே இயலவில்லை. அம்மா? ஆமாம்டி நீ எதுக்கு ஓடலை  என்றபோது அப்பா அங்கு வந்து நின்றார். யாரு எதுக்கு ஓடினா என அப்பா கேட்டதும் அம்மா எல்லா கதையும் சொனனர். அப்பா பார்த்த பார்வையில் நடுநடுங்கிப் போனேன். நான் பெத்த பிள்ளைடி  எப்படி ஓடுவா என கர்ஜித்து வெளியில் சென்றார். அம்மா என்னிடம் எதற்கு தோழியை தடுக்கவில்லை என என கேட்டபோது பதில் சொல்ல இயலாமல் தவித்தேன். இதுதான் நீ பழகினதுக்கு அர்த்தமா என்றபோது எனக்குப் பிடிக்காத கல்யாணத்தை எதுக்கு பண்ணி வைக்கிற என்றேன். அது வேற இது வேற. ஒழுங்கா அந்த புள்ளைய வீடு வந்து சேர சொல்லு என்றார். வேலைக்கு வந்து தோழியிடம் விபரம் சொன்னேன். ஏன்டி  இப்படி பண்ணின  என்றவளிடம் நீ ஊருக்கு வா என்றேன்.

அதற்கு அவள் அவங்க என்னை கொன்னு போட்டுருவாங்க என புலம்பினாள். நம்பரை தொலைச்சிட்டேன் என பொய் சொல்லு என்றவளின் குரல் உடைந்து இருந்தது. அவளுக்கு அக்கா அண்ணன் தம்பி உண்டு. இழப்பு கடினம் எனினும் தாங்கிக் கொள்ளக்கூடும். அவளது அம்மா எனக்கு அழைத்தார். அவள் நம்பர் மாறிவிட்டது அழைத்தால் சொல்கிறேன் என பொய் சொன்னேன்.

சனிக்கிழமை வந்தது. (தொடரும்) 

Thursday, 13 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 1

எனக்கு கல்யாணம் வேண்டாம் என அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். கல்யாணம் பண்ணாமல் பெண்ணால் வாழ இயலாது என்றார் அம்மா. இயலும் என்றேன். ஒழுங்கா சொன்னபடி கேளு என அம்மா திட்ட ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நெருங்கிய பள்ளித்தோழிகள், கல்லூரித்தோழிகளில் ஒரு திருமணம் இன்னும் சில மாதங்களில்  நடைபெற இருக்கிறது. அதை அம்மா காரணம் காட்ட ஆரம்பித்து இருந்தார்கள். அப்பா ஏதும் சொல்லாமல் இருந்தது எனக்கு ஒரு மன ஆறுதல்.

எனக்கு வயது 23தான் ஆகிறது. முதுநிலை படிப்பு முடித்து நல்லதொரு வேலையில் இருக்கிறேன். என்னிடம் சென்ற வருடம் ஒருவன் என்னை மிகவும் விரும்புவதாக சொன்னான். விரும்பிக்கொண்டிரு, திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றேன். நீ அழகாக இருக்கிறாய் என்பதற்காக எனது பார்வையை குறை சொல்லாதே என திட்டிவிட்டான். சிலமுறை முயற்சி செய்தான். எனது பிடிவாத குணம் அவனை என்மீது பிடிமானமில்லாமல் செய்தது.

கல்யாணம் பண்ணும் ஆசையில்தான் பலரும் காதலிக்கவே விரும்புகிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரிந்தது. அன்று வேலை முடித்து வீடு திரும்பினேன். வழக்கம்போல காபி, பலகாரம் அம்மா செய்து கொடுத்தார்கள். நம்ம வம்சம் விருத்தி அடைய வேணாமா, பெத்தது ஒண்ணே ஒண்ணு  என்றார் அம்மா. ஏம்மா நீங்க பெத்துக்கோங்க அவளுக்கோ, அவனுக்கோ கல்யாணம் பண்ணி வம்சம் விருத்தி பண்ணுங்க என நான் சொன்னது அம்மாவுக்கு சற்று வலித்திருக்க வேண்டும். ஏன்டீ இப்படித்தான் நீ பேச கத்துக்கிட்டயா என அம்மா அடுக்களைக்குப் போய்விட்டார். பாதி சாப்பிட்ட பலகாரத்தை விட்டுவிட்டு அடுக்களைக்குப் போனேன். அம்மா கோபத்துடன் இருந்தார்கள். எனக்கு கல்யாணம் பிடிக்கலைம்மா என்றேன். இங்க பாரு, நீ என்னைக்கு கல்யாணம்னு முடிவு பண்றியோ அன்னைக்கு என்கிட்டே பேசு என அம்மா சொன்னதும் சரிம்மா என வந்துவிட்டேன்.

அன்று இரவு அப்பா என்னை அழைத்தார். இந்த சனிக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வராங்க, எங்கயும் போகாத என கண்டிப்புடன் சொன்னார். அப்பா என்றேன். எதுவும் பேச வேண்டாம் என சொன்னவரை  விட்டுவிட்டு அம்மாவை முறைத்துப் பார்த்தேன். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. அன்று நிறைய அழுதேன். என்னால் அப்பாவை எதிர்த்துப் பேச இயலாது. எனது ஆசைகளுக்கு குறுக்கே நிற்காத அப்பா இன்று மட்டும் எப்படி? எனது வீங்கியிருந்த கண்கள் என் இரவின் அழுகையை பறைசாற்றிக் கொண்டு இருந்தது. என்னடி அழுதயா என்ற அம்மாவிடம் நீ சந்தோசமாக இருக்கேதானம்மா என் சாப்பிட்டுவிட்டே கிளம்பினேன். சீக்கிரம் வா, கடைக்குப் போகணும் என்ற அம்மாவின் குரல் எனக்கு ஏன்  கேட்டதோ?

என்னடி ஒருமாதிரி இருக்க என்ற அலுவலக தோழியின் கேள்விக்கு அழுதுவிடுவேன் போலிருந்தது. என்னை பொண்ணு பார்க்க வராங்க என்றேன். அதுக்கு ஏன்டீ  கவலைப்படற என்றவளுக்கு வேறேதும் பதில் சொல்ல தோணவில்லை. மனம் வேலையில் லயிக்கவில்லை. நிறைய தவறுகள் அன்று நடந்தது. தலைவலி வேறு வந்து சேர்ந்தது. சில மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அனைவரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து இருந்தார்கள். அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். ஒருமணி நேரம் முன்னதாக விடுப்பு எடுத்து வீடு வந்து சேர்ந்தேன். அம்மா எனக்காக காத்து இருந்தார். அதே காபி அதே பலகாரம், அம்மா தலைவலிக்குது என்றேன். உடனே காபியை எடுத்து போய்விட்டு சுக்கு காபி போட்டு வந்தார். அம்மா நான் கொஞ்சம் தூங்குகிறேன் என்றேன். கடைக்குப் போகணும்னு சொன்னேனே என்றவரிடம் ஒரு மணி நேரம் என சொல்லி தூங்கப் போனேன்.

(தொடரும்)


Thursday, 6 November 2014

குறையொன்றுமில்லை - திரைக்காவியம்

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்கக் கூடாது என்பது பற்றி எல்லாம் எனக்கு உண்மையிலேயே தெரியாது. ஆனால் எப்படி ஒரு திரைப்படத்தை ரசிக்க வேண்டும் என எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ் படங்களில் பாடல்களை வெறுத்து ஒதுக்கும் நான் இந்த படத்தில் பாடல்களை, பாடல்களை படம் எடுத்த விதம் தனை சற்று உன்னிப்பாகவே கவனித்தேன். பாடலாசிரியருக்கும், இசை அமைப்பாளருக்கும், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கும்  என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். வெகு பிரமாதம். ஒரே ஒரு பாடல் மட்டும் எல்லாம் நடந்து முடிவது போல வழக்கமான சினிமா இருக்கத்தான் செய்கிறது. எனினும்...

படம் ஆரம்பித்து படம் முடியும் வரை ஏதோ ஒன்று வெகுவாக நெருடிக்கொண்டே இருந்தது. சில படங்களின் பாதிப்பு வெகுவாகவே என்னுள் ஏற்படும். பல வருடங்கள் பின்னர் நான் பார்த்த படங்களில் இந்த குறையொன்றுமில்லை படம் என்னுள் பாதிப்பு ஏற்படுத்திய படங்களில் ஒன்று. தமிழ் படங்களில் வணிகத்தை முன்னிறுத்தி ஆறு பாடல்கள் நான்கு சண்டைகள் எனும் கட்டமைப்பை உடைத்து இதுபோன்ற படங்கள் அத்திப்பூத்தாற்போல் வந்து சேர்கின்றன.

இந்த படத்தின் கரு எப்படியோ அதே நிலைதான் இந்த படத்தின் உண்மையான நிலையும். தயாரிப்பாளர்கள் இந்த படத்தை அதிக விலை கொடுத்து விற்க முற்பட்டு இருந்தாலும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் படம் நல்லா இருக்கு ஆனால் ஓடுமானு தெரியலை என சொல்லி இருப்பார்கள். இப்போதெல்லாம் படம் பல நாட்கள் ஓடும் வழக்கம்தனை  தமிழ் திரையுலகம் மறந்து கொண்டு இருக்கிறது. படம் வெளியான மூன்றே நாட்களில் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். வணிக வெற்றி தான் ஒரு படத்தின் வெற்றி என தமிழ் திரையுலகம் தலையில் வைத்து கொண்டாட தொடங்கிய காலம் எப்போதும் மாறப்போவதில்லை.

ஸ்டார் வேல்யூ என்பதுதான் தமிழ் திரையுலகின் சாபக்கேடு. 'பெரிய' நடிகர்கள் 'பெரிய' இயக்குனர்கள் என தமிழ் திரையுலகம் போற்றி களித்திருக்கட்டும். நல்லதுதான். அதே வேளையில் இது போன்ற திரைக்காவியங்களை தமிழ் திரையுலகம் புறக்கணிக்கக் கூடாது. அவ்வப்போது அருமையான படங்களை வெளியிடும் இயக்குனர்களை தயாரிப்பாளார்களை உற்சாகமூட்டும் அளவிற்கேனும் அவர்களுக்கு வருவாய் கிடைத்தாலே போதும்.

இந்த படத்தின் திரைக்கதை ஒரு நாவலை போல பயணிக்கிறது. ஒரு புத்தகம் வாசிக்கும் வாசகன் பக்கங்களை வேகமாக புரட்டிவிட நினைக்காத புத்தகம் போல சினிமாவிற்கு எனும் யுக்தியோடு திரைக்கதை அமைந்து இருக்கிறது. படம் நிதானமாகவே நகர்கிறது. அவசர உலகில் சாப்பிடுவதற்கே அள்ளிப்போட்டு கொண்டு ஓடும் மனநிலை கொண்ட மக்கள் மத்தியில் நிதானம் எல்லாம் எப்போது வரப்போகிறது. எதிலும் ஒரு அவசரம், எதிலும் புரிதலின்மை என வாழ்க்கை கழிந்து கொண்டு இருக்கிறது.

விவசாயம் அதன் மூலம் அந்த மக்கள் அடையும் தன்னிறைவு தாண்டிய ஒரு நிலையை குறையின்றி சொல்ல முற்பட்டு இருக்கிறார் கார்த்திக் ரவி. வாழ்த்துக்கள். படத்தில் அடுத்தவர்களை கேலி பேசி அடி கொடுத்து அடி வாங்கி எனும் கோமாளித்தனமற்ற நகைச்சுவை காட்சிகள் ஆங்காங்கே புன்னகையை வரவழைத்து போகிறது. வறட்டு பிடிவாதம் முரட்டு பிடிவாதம், புதுமைக்கு செல்லும் தயக்கம் என யதார்த்த வாழ்வை மிகவும் அழகாகவே படம் பிடித்து இருக்கிறார்கள்.

எனது கிராமத்தில் எனது தாத்தா கடை ஒன்று இருக்கிறது. அங்குதான் வத்தல், பருத்தி என சென்று விவசாயிகள் கூலியாட்கள் கொண்டு போடுவார்கள். அவர்களுக்கு தாத்தா ஒரு விலை நிர்ணயம் செய்வார். ஓரளவு எல்லாம் சேர்ந்தபின்னர் மாட்டு வண்டி, டிராக்டர் என விருதுநகருக்கு அவ்வளவும் கொண்டு சென்று ஒரு கமிசன் மண்டியில் கொண்டு சேர்ப்பார். அங்கே கமிசன்காரர் ஒரு விலை நிர்ணயம் செய்வார். பின்னர் அங்கிருந்து அவை வெவ்வேறு இடங்களுக்கு செல்லும். இப்போதும் கூட கிராமத்தில் விளைபவைகள் எல்லாம் அருகில் உள்ள நகரங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்று வரும் வழக்கமே உள்ளது. ஒரு மூட்டை கத்தரிக்காய் இவ்வளவு விலை எனபது போன்று நிர்ணயம் செய்யப்படும்.

பெரிய விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் எனது விவசாய பணி என்பது நீர் பாய்ச்சுவது, வேலையாட்களுக்கு சாப்பாடு கொண்டு செல்வது என்பதோடு முடிந்தது. மற்றபடி இதுவரை இந்த வியாபார நுணுக்கம் எல்லாம் சென்று நேரடியாக பார்த்தது இல்லை. எங்கள் ஊரில் இன்னும் விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்கள் தான் கிடைக்கமாட்டேன்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கையை சீரமைக்க முடியவில்லை என்றாலும் குடிப்பழக்கங்கள் புகைப்பழக்கங்கள் சீரழித்து விடுகின்றன. முறையாக விவசாயம் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் ஆனால் விவசாயம் என்பது வானம் பார்த்த பூமி. மழை பொய்த்தால் எல்லாம் பொய்க்கும். எப்படி விலங்குகள் தங்களுக்கு தேவையானதை சேகரித்து கொள்கிறதோ அது போல மழை இல்லாமலும் வரும் விவசாயம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கதைநாயகன் கதைநாயகி என படத்தின் காதல் காட்சிகள் அட! முதலிலேயே கதைநாயகனின் குண நலன்களை ஒரு காதல் காட்சியில் சொல்லி விடுகிறார்கள். புதிய விஷயத்தை சாதிக்க நினைக்கும் எவருடைய குணமும் அப்படித்தான் இருக்கும். இந்த உலகில் எதையும் சாதிக்க வேண்டும் எனில் திறமை மட்டும் போதாது எவரேனும் அதை ஊக்குவித்தால் மட்டுமே இயலும். மிக இயல்பாக ஒரு திரைப்படம் செல்கிறது. நமது கனவுதனை வேறு ஒருவர் காண இயலாவிட்டாலும் நமது கனவுக்கு சரி என சொல்ல ஒருவர் போதும்.

படத்தில் பர்மிங்க்ஹாம் நகரம், லண்டன் நகரம் எல்லாம் கதைநாயகியின் தயவால் வந்து போகிறது. இந்த நகரங்களின் ஒளிப்பெருக்கை விட தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தின் ரம்யமான காட்சிகள் மனதை வருடிச் செல்கின்றன. கிராம வளர்ச்சி என சில வருடங்கள் முன்னர் ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அந்த கதையின் நாயகன் கிராமத்திற்கு சென்று மருத்துவ பயிற்சி பெற வேண்டும். அந்த கதையை நினைவுபடுத்துவது போல இந்த கதைநாயகியின் மருத்துவ சேவை. அதையொட்டிய விவசாயிகள் கடன் பட்டு படும் தொல்லைகள் தற்கொலைகள், கதாநாயகனின் நண்பனின் தங்கை கல்யாணம் பண்ண இயலாது என நினைத்து தற்கொலை பண்ண முயலும் காட்சி என விவசாயியின் துயரம். புதிய விஷயம் நமக்கு சரிப்பட்டு வருமா என யோசிக்கும் ஊர்க்காரர்கள்.

பணத்தை தந்தால் என்ன பண்ணுவீர்கள் என மிகவும் இயல்பாக எடுக்கப்பட்ட காட்சிகள். புதிய விஷயத்தை கொண்டு வர பெரிய நிறுவனங்கள் லாப கணக்குதனை மனதில் வைத்து புறம் தள்ளும் முயற்சிகள் என ஒரு யதார்த்தமான சூழலை இந்த படம் சொல்லிச்செல்கிறது. இப்போதெல்லாம் நிறைய தமிழ் குறும்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் தமிழ் குறும்படங்களின் ஒரு நீட்சி என சொல்லலாம். ஒரு சமூகம் முன்னேற எவரெவர் தடை இருப்பார்கள் என அழகாகவே சித்தரித்து இருக்கிறார்கள்.

ஜிகர்தண்டா, அஞ்சான், கத்தி, பூஜை போன்ற படங்கள் மத்தியில் இது போன்ற படங்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பது வெகு கடினம். அடுத்தவர் கவலையை படுவதற்கு நமக்கே நேரம் கிடையாது என்பதுடன் அல்லாமல் சினிமா ஒரு பொழுதுபோக்கு அதில் இப்படி எல்லாம் எடுத்தால் எவர் பார்ப்பார்கள் என்கிற மனப்பக்குவமும் இருக்கத்தான் செய்யும். தமிழில் இது போன்ற படங்கள் எல்லாம் விருதுக்குரிய படங்கள் என ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இதுபோன்ற படங்கள் நிச்சயம் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

படம் முழுக்க காதல் ததும்பி வழிகிறது, அத்தோடு உணர்வுப்பூர்வமான காட்சிகளும். குறையொன்றுமில்லை மிகவும் சிறப்பான தமிழ் சினிமா. இந்த திரைப்பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Wednesday, 5 November 2014

கனவில் வந்தனையோ ஆண்டாள்

ஆண்டாளின் வார்த்தைகள் மீது ஒரு தீராத ஆசை. அதிலும் எற்றைக்கும் என வரிகள் வாசிக்க ஆரம்பித்தால் அப்படியே ஒரு தனி அறையில் சென்று அமரத் தோணும். 

இந்த ஆண்டாள் மீது இத்தனை ஆசை வர காரணம் அவள் கொண்ட அந்த பரந்தாமன் காதல் தான்.  ஒரு மாட வீதி தென்படுகிறது. அந்த மாட வீதியில் கூரைப்பட்டு சேலை உடுத்திய வண்ணம் ஆண்டாள் வந்தாள். அவளிடம் என்னை காதலிக்க கூடாதா என்று கேட்டேன். என்னை உன்னால் காதலிக்க முடியுமா யோசி என்றாள். 

நண்பர்களிடம் ஆண்டாள் காதல் குறித்து பெருங்கவலை கொண்டு இருந்தேன். எல்லோரும் ஆண்டாளை பைத்தியம் என்றார்கள் என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. பெரியாழ்வாரிடம் சென்று உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து தாருங்கள் என கேட்டேன். மானிடனுக்கு வாக்கப்படமாட்டேன் என சொல்லிவிட்டாளே என்றார். 

மற்றொரு நாள் ஆண்டாளை சந்தித்தபோது நீ கொண்டிருக்கும் காதல் மாயையானது அறிந்து கொள் என்றேன். நான் காண்பவை உன் கண்களுக்கு தெரியாது என்றாள். பெரியாழ்வாரிடம் சென்று நீங்கள் ஆண்டாளை சரியாக வளர்க்கவில்லை, இதுவே ஒரு தாய் இருந்து இருந்தால் இப்படியாகுமா என்றேன். வேதனையுற்றார். 

என் பெற்றோர்களிடம் ஆண்டாள் குறித்து என் துயரத்தை சொன்னால் அந்த பொண்ணு வாங்கி வந்த வரம் என்றார்கள். என்னால் ஏற்க முடியவில்லை. ஆண்டாளின் தோழிகளிடம் சென்று என் ஆசையை கூறினேன். அந்த தோழிகள் எல்லாம் என்னை ஏளனமாக பார்த்தார்கள். அவள் காதல் உனக்கு இளப்பமா என்றார்கள். 

ஒருநாள் திருவில்லிபுத்தூர் கோவில் வாசலில் நிறு இருந்தபோது ஆண்டாள் வந்தாள் .சிலையாக நிற்பதுதான் உன் காதலனா என்றேன், உயிராக என்னுள் வசிப்பவன் என்றாள். எவரேனும் ஆண்டாளுக்கு அவள் கொண்ட காதல் முறையற்றது என் எடுத்து சொல்லமாட்டார்களா என ஏங்கி  தவித்த எனக்கு நான்தான் முறையற்றவன் என்றார்கள். 

ஆண்டாளின் பிடிவாதமான போக்கு என்னுள் பெரும் அச்சத்தை விளைவித்தது. ஆண்டாளிடம் என் மனக்குமுறல்கள் சொல்லி முடித்தேன். . நாராயணனே பறைதருவான் என்றாள் . பெரியாழ்வாரிடம் நீங்களாவது எடுத்து சொல்லுங்கள் என மன்றாடினேன். ஸ்ரீரங்கத்து ரெங்கமன்னார் மாப்பிள்ளை என்றார். 

ஆண்டாளிடம் சென்று, ஆண்டாள் அந்த நாராயணனை மணம்  முடிக்க நீ மானிட பிறவி கொண்டது பிழை அல்லவா? ஒரு பரமாத்மாவை உன் காதலுக்காக ஜீவாத்மாவாக்கிட நீ துணிந்தது குற்றம் என்றேன். 

என் வார்த்தைகள் கேட்டு வெகுண்டெழுந்தாள். என் காதலை பழித்து கூற உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது, போ முதலில் காதலித்து பார் என்றாள்  

எந்திரிடா இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும் என அம்மா என்னை எழுப்பிக் கொண்டு இருந்தார். 

நீ மட்டும் இன்றும் மாறாத ஆச்சரியம்

Tuesday, 4 November 2014

கதைத் திருடன்

அன்புக்குரிய மதுசூதனபெருமாள்

எனதருமை நண்பா
எப்படி இருக்கின்றாய்
என்னை உனக்கு இன்னமும்
நினைவு இருக்கிறதா?

இரண்டு மாதங்கள் முன்னர்
இருள்  ஒன்றை பொருட்படுத்தாது
இரண்டு மணி நேரம்
சாலைகளின் பயம் கடந்து
நிறையவே சிந்தித்த கதை ஒன்றை
உன்னிடம் கொண்டு வந்தேன்
எந்த மண்டபத்தில் எழுதி
வாங்கி வந்தாய் என்றே
ஏளனமாக என்னைக் கேட்டாய்

படித்துப் பார் என சொல்லிவிட்டு
கதை எப்படி என்றே உன்னிடம்
கருத்து ஒன்றை கேட்டேன்
குப்பையில் தூக்கிப் போடு
என என் மனதை நீயும்
கசக்கி எறிந்தாய்

பழக்கமான நீயே இப்படி
சொன்னபிறகு எவரிடம்
இந்த கதையை கொண்டு
காண்பிப்பது என உன்னிடமே
இருளோடு மனம் இருள
விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்

அடுத்த ஒரு அற்புதமான சிந்தனை
என புதிய கதை ஒன்றை
எழுதி உன்னிடம் தந்தேன்
எந்த மண்டபத்தில் என்ற
அதே கேள்வியும் குப்பை என்ற
அதே பதிலும் நீ சொன்னாய்

மனம் உடைந்து உன்னிடமே
அந்த கதையையும் ஒப்படைத்து வந்தேன்
இன்னுமொரு கதை சிந்திக்க
இரவு பகல் பாராது முற்பட்டேன்
நீ நன்றாக இருக்கிறது
என சொல்லும்வரை என் முயற்சி
முடங்குவதில்லை உறுதி கொண்டேன்

உன்னை வந்து பார்த்த
மூன்றாவது வாரத்தில்
என் வீட்டு கோபாலன்
எப்போதும் போல என்னிடம் ஒரு
வார இதழ் கொண்டு வந்து
தந்துவிட்டு போனான்
அதில் வந்த கதை ஒன்றை
வாசிக்கையில் உன் பெயர் போட்டு இருந்தது
நான் எழுதி நீ குப்பை
என்று ஒதுக்கிய கதை

கோபாலன் மறுவாரம் வந்து
தந்துவிட்டு போன வார இதழில்
அதில் வந்த கதை
நான் எழுதி நீ குப்பை என
ஒதுக்கிய இரண்டாவது கதை
உன் பெயர் போட்டு

பெற்ற பிள்ளையை
தாயின் அனுமதியின்றி
தத்து கொடுத்தது போல
வார இதழில்
என் கதைகளில் உன் பெயர் கண்டு 
பரிதவித்து போனேன்

அன்றே புதிய கதையுடன்
உன்னை சந்தித்தேன்
நீயும் வழக்கம் போல கேள்வியும்
நிராகரிப்பும் செய்தாய்
வார இதழ்கள் காட்டி
என்ன இது என்றேன்
எனது கதை தான்
எனக்கான புனைப்பெயர்
உனது பெயர் என்றாய்
மன்னித்துவிடு என நீ
என்னிடம் மன்றாடினாய்
பழகிய பழக்கத்திற்கு
பரிதவிப்புடன் நானும்
வீடு வந்து சேர்ந்தேன்


இந்த முறையும் நீ குப்பை
என நிராகரித்த கதையை
நானே அதே வார இதழுக்கு
உனது பெயர் பொறித்து
அனுப்பி வைத்தேன்
முகவரி மாற்றிய விபரம் குறித்து


கோபாலன்
வார வாரம் என்னிடம்
உன் பெயர் பொறித்த
குப்பை கதை சுமந்து
வரும் வார இதழுடன்
வந்து போகிறான்
அதில் உனக்கான பெயரும் பணமும்
எனக்கான அங்கீகரிக்கப்பட்ட
சின்னதொரு திருப்தியும்

அன்புடன்
சீனிவாசபெருமாள்