Wednesday, 8 October 2014

எட்டப்பர்களும் விசுவாசிகளும் கொண்ட தமிழகம்

''நம்ம பையன் தான், அஞ்சு வயசில இருந்து நம்ம தோடத்தில வேலை பாக்கிறான். ஒரு வார்த்தை எதிர்த்து பேசமாட்டான், இப்ப கல்யாண வயசு வந்திருச்சி, அதான்  உன்  வீட்டு பொண்ணை இவனுக்கு கட்டி வைக்கலாம்னு மனசில தோணிச்சி, நீ என்ன சொல்ற''

''ஏன்டா உன் பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கிறது, ரொம்ப பகுமானமா அவனை கூட்டிட்டு இங்க வந்துட்ட, என் பொண்ணு என்ன அத்தனை இளக்காரமா போச்சாடா உனக்கு''

''விருப்பமில்லைன்னா விட்டுரு''

சோலையூர் கிராமத்து பண்ணை ராசு  பாலையூர் கிராமத்து பண்ணை முத்துவிடம் அவமானப்பட்டுத் திரும்பியது போல நினைத்துக் கொண்டார்.

''ஐயா, அவரை தீர்த்துருவோம்யா''

''எதுக்கு, உனக்கு பொண்ணு கொடுக்காத காரணத்துக்கா''

''உங்களை மட்டு மருவாதி இல்லாம பேசினதுக்குயா ''

''நாளைக்குள்ள  அவனை நம்ம தோட்டத்தில புதைச்சிரு''

''சரிங்கய்யா''

-----------------------

''காலையில பாலையூர் பண்ணை வீட்டுக்கு போயிருந்தோம்டா, அந்த பன்னிகிட்ட நம்ம பண்ணை எனக்கு பொண்ணு கேட்டாருடா, ஆனா அவன் மட்டு மருவாதை இல்லாம பேசிட்டான்டா, நம்ம பண்ணை அவரை தோட்டத்தில புதைக்க சொல்லிட்டாருடா''

''தனியாகவா இதை பண்ண போறடா''

''ஆமாடா''

''எத்தனை மணிக்குடா''

''ராத்திரி பன்னிரண்டு மணிக்குடா''

''கவனமா இருடா''

''இங்கே இருந்து இன்னைக்கு பத்து  மணிக்கு கிளம்பி போனா சரியா இருக்கும்டா''

''சரிடா''

எட்டுபாண்டியிடம் இந்த விஷயத்தை  மதியமே சொல்லிவைத்தான் சோலையூர் பண்ணை ராசுவின் விசுவாசி கோவிந்தன். கோவிந்தன் எட்டுபாண்டியிடம் எல்லா விசயங்களும் சொல்லும் வழக்கமுண்டு. இருவரும் ஒரு சோடுதான், ஆனால் தனக்கென ஒரு சிறு நிலத்தில் மட்டுமே வேலை பார்ப்பவன் எட்டுபாண்டி.
-------------------------

''பண்ணையார் இருக்குறாங்களா''

''என் பேரு எட்டுபாண்டி, சோலையூரில் இருந்து வரேன், ஐயாவைப் பார்க்கணும்''

''இருக்காரு, உள்ளே போங்க''

''ஐயா நான் சோலையூர் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''என்ன விஷயம்''

''உங்களை இன்னைக்கு நைட்டு பன்னிரண்டு மணிக்கு எங்கூரு பண்ணை கொலை பண்ண திட்டமிட்டு இருக்காரு''

''என்ன சொல்ற நீ''

''நீங்க அவர் உங்களை கொல்றதுக்கு முன்னால அவரை ஒரு பத்தேகால் மணிக்கு கொன்னு போட்டுட்டா உங்களுக்கு உயிர் பாதுகாப்பு''

''அவ்வளவு தூரத்திற்கு துணிஞ்சிட்டானா அவன், சரி நீ போ, ஆனா இந்த விஷயத்தை வெளியில சொன்ன நீ உயிரோட இருக்கமாட்ட''

''நான் வெளியூர் போறேன் ஐயா, நாளன்னைக்கு தான் ஊருக்கு வருவேன்''

---------------------

''சுடுதண்ணி இங்க வாடா''

''சொல்லுங்கய்யா''

''சோலையூர் பண்ணையை இன்னைக்கு நைட்டு போட்டுத் தள்ளிரு, பத்தே கால் மணிக்கு,''

''சரிங்கய்யா''

---------------------

மணி இரவு பத்து.

''ஐயா, பத்திரமா இருங்க ஐயா, நான் என் வேலையை முடிச்சிட்டு வந்துருறேன்''

''கோவிந்தா, நீ பண்ணினதுக்கு எந்த ஆதாரமும் இல்லாம பாத்துக்க''

''சரிங்கய்யா''

---------------------

மணி இரவு பத்தேகால்

''ஐயா, ஐயா''

''என்ன கோவிந்தா அதுக்குள்ளார திரும்பி வந்துட்ட, எதுவும் மறந்துட்டியா''

''நான் கோவிந்தன் இல்லை, நான் பாலையூர் பண்ணையார் விசுவாசி சுடுதண்ணி''

''நீ எதுக்குடா இங்க வந்த...''

பண்ணை ராசுவின் கழுத்தில் கத்தி இறங்கியது. கதவைச் சாத்திவிட்டு பண்ணை ராசுவை தூக்கிக்கொண்டு பாலையூர் கிளம்பினான் சுடுதண்ணி.

----------------------

மணி இரவு பன்னிரண்டு

''ஐயா''

''சுடுதண்ணி போன காரியம் கச்சிதமா முடிஞ்சதா...''

பண்ணை முத்துவின் கழுத்தில் கத்தி இறங்கியது. கதவைச் சாத்திவிட்டு பண்ணை முத்துவை தூக்கிக்கொண்டு சோலையூர் கிளம்பினான் கோவிந்தன்.

------------------------

மறுநாள் காலை சோலையூர் பாலையூர் சோகத்தில் மூழ்கியது. கோவிந்தன் அழுதபடி இருந்தான். காவல் அதிகாரிகள் சுடுதண்ணியை கைது செய்தார்கள். எட்டுபாண்டியை காவல் அதிகாரிகள் தேட ஆரம்பித்து தகவல் சொல்ல சொல்லி இருந்தார்கள்''

இரண்டு நாட்கள் கழித்து ஊருக்குள் இரவில் வந்தான் எட்டுபாண்டி.

''கோவிந்தா, நம்ம பண்ணைக்கு என்னடா ஆச்சு''

''எங்கடா போயிருந்த''

''மதுரைக்கு''

''எதுக்குடா போயிருந்த''

''அக்கா, ஒரு பொண்ணு பார்த்து இருந்தாங்க''

''சொல்லுடா, நீதானடா பாலையூருக்கு தகவல் சொன்னது''

''இல்லைடா''

எட்டுபாண்டியின் கழுத்தில் கத்தி இறங்கியது.

------------------------

''எட்டுபாண்டியை எவனோ கொன்னுட்டாங்கே சார்''

கோவிந்தன் காவல் நிலையத்தில் புகார் தந்து கொண்டிருந்தான்.




No comments: