Wednesday, 24 September 2014

கற்றறிந்த கயவர்கள்

ஒருவன்  தனது நண்பனிடம் சொல்லி தான் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரப்ப சொல்கிறான். அந்த நண்பனோ வற்புறுத்தலின் பேரில் அவனது நண்பன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை வெளியிடுகிறான். இதைப் படிக்கும் நபர்கள் சிலர் பதறுகிறார்கள். அவரவருக்கு எவ்வளவு வேலை இருக்கும், அதை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு செல்பேசியில் அழைக்கிறார்கள். அந்த செல்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இதெல்லாம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நடந்து இருக்கும். அதில் ஒரு சிலர் இப்படி நடந்து இருக்காது எனவும் சொல்கிறார்கள். எனக்கோ என்னை அறியாமல் ஒருவித படபடப்பு. எங்கள் ஊரில் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட அத்தனை நபர்களும் கண் முன் வந்து போகிறார்கள். இத்தனைக்கும் இந்த செய்தி வெளியிட சொல்லும் நபர் அவ்வப்போது நல்ல நல்ல விசயங்கள் எழுதக்கூடியவர்.

திடீரென் எழுத சொன்ன நபரே வந்து உண்மையை வெளியிடுகிறார். எனக்கு கோபம் அதுதான் அப்படி எழுத சொன்னேன். கோபம் வந்தால் மௌனமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் அடுத்தவரை வருத்தம் கொள்ள வைக்கத் தோன்றும். அடப்பாவி, சே என உலகம் இது. என்ன உள்ளம் இது என்றே அந்த இடத்தை கடந்து போய்விடுகிறேன்.

இருப்பினும் அதனால் ஏற்பட்ட அந்த சில நிமிட மன அதிர்வுகளை அவன் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. எனக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எழுத்துக்கு எழுதுவதோடு சரி. முகம் தெரியாத மனிதர்களுடன் என்ன அத்தனை பிடிமானம் வேண்டி கிடக்கிறது என எண்ணியபோது நல்லவரோ கெட்டவரோ ஒரு மனிதரின் மரண செய்தி எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிடும். நாம் சாதாரண மனிதர்கள், ஞானிகள் அல்ல என்றே எழுத தோணியது. எவரேனும் அடிபட்டு கிடந்தால் கண்ணை திருப்பிக் கொள்ளும் உலகம் அல்ல இது. பதறிக்கொண்டு ஓடும் பாரதம் இன்னும் உள்ளது.

இணையம் என்பது எத்தனை அபாயகரமானது என்பது பலர் உயிருடன் இருக்கும்போதே இறந்து போனதாக செய்தி வெளியிடும் வக்கிரம் எண்ணம் கொண்டது.

மனிதர்களின் மரணம் என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறுபிறப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். உடல் உறுப்புகளே வெட்டப்பட்ட பின்னர் மறுபிறப்பு எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

இப்படி மரண நிகழ்வுகள் தொடர்பாக பல வதந்தி விசயங்கள் இந்த கற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது. 

போதும் உங்கள் வக்கிர விளையாட்டு கற்றறிந்த கயவர்களே. 


2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது.

தாங்கள் சொல்வது உண்மைதான்
அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Radhakrishnan said...

நன்றிங்க ரூபன்