Tuesday, 26 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 5

கோவில், உறவினர் அடுத்த நாள் பார்க்கலாம் என அன்று Sentosa Island போக முடிவு செய்தோம். முதலில் இங்குதான் ஹோட்டல் பார்த்தோம், பின்னர் எதற்கு என மனம் மாறி சிங்கப்பூரில் தங்க முடிவு செய்தோம்.

ஹோட்டலில் இருந்து அரை மணி நேரத்தில் அந்த தீவு அடைந்தோம். மிகவும் அருமையான தீவு. பல இடங்கள் சுற்றிப் பார்த்து மகிழும் வண்ணம் அமைந்து இருந்தது. சிங்கப்பூர் பெயர்க்காரணம் அறிந்து கொண்டேன். சிங்கம் ஒன்று அந்த தீவில் இருந்து சிங்கப்பூரை கண்காணித்து பாதுகாப்பதாக ஒரு கதை உண்டு. வீராச்சாமி என்பவர் பெயர் கூட அந்த கதையில் உண்டு. வீராச்சாமி சாலை ஒன்று சிங்கப்பூரில் உண்டு. சிங்கப்பூரா என்றே முன்னர் அழைக்கப்பட்டது என்பது அந்த நாட்டு வரலாறு. சிங்கப்பூர் தான் சிங்கப்பூரின் தலைநகரம். சிங்கம் ஒன்றின் வடிவமைப்பு. சிங்கத்தின் தலை மீன் உடல் கொண்ட உருவம் அது. மீன் அவதாரம், சிங்க அவதாரம். இது குறித்து நிறையப் படித்து பின்னர் எழுதலாம் என விட்டுவிடுகிறேன்.

அங்கிருந்து ஹோட்டல் வந்தோம். சென்னையில் இருந்து பதில் இல்லை. இரவு night safari சென்றோம். அரை மணி நேரம் tram வண்டியில் சுற்றி காண்பித்தார்கள். பல விலங்குகள். ஒரு யானை வணக்கம் காட்டி வரவேற்றது. சிங்கப்பூர் மற்றும் Sentosa தீவுக்கு ஒரு cable car இணைப்பு உண்டு. மலைகள் மரங்கள் என பார்த்த போது அத்தனை பேரின்பமாக இருந்தது. அங்கேயும் விலங்குகள் இருக்கக்கூடும்.

இரவு ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். சென்னை ஹோட்டலில் இருந்து மின்னஞ்சல் வந்து இருந்தது. Please collect your tablet device by showing your identity when you return from Singapore on Saturday morning என இருந்தது. உலகில் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருட்டு என்பது தனது தேவைக்காக செய்யப்படுவது. தனது தேவை இருந்தும் திருடாமல் வாழ்வது ஒழுக்க நெறிமுறை எனப்படுகிறது. அடுத்த நாள் கோவில் சுற்றினோம். முருகன் கோவில்கள். மாலை Chinatown நடந்தே சுற்றினோம். சிங்கப்பூர் அற்புதமான நாடு/நகரம். மிகவும் பிடித்து இருந்தது. அன்று இரவு உறவினர்கள் பார்க்க சென்றோம். 45 வருடத்தின் முந்தைய வாழ்க்கை வரலாறு பேசிக் கொண்டார்கள். சிங்கப்பூர் முற்றிலும் மாறிப்போனது, எதுவும் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதே பேச்சு. உறவினர்கள்களை பார்த்து முடித்தபோது இரவு ஒரு மணி. மற்றொரு உறவினர் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. அங்கிருந்து marina bay செல்லலாம் என காரை ஓட்டிட சுற்றி சுற்றி வந்தது. வழிகாட்டி எல்லா நேரமும் வழிகாட்டாது என ஹோட்டல் வந்தோம். இரவு மூன்று மணி. மொத்த சிங்கப்பூரை காரில் சுற்றி விட்டோம்.

எங்கு ஹோட்டல் எடுக்க நினைத்தோமோ அங்கேதான் உறவினர்கள் எனது மாமனார் மாமியார் இருந்த இடம் இருந்தது. மத்திய நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது என நினைத்து அங்கே தங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் மலேசியா சென்று விடலாம் என்பது போல் இருந்தது. அடுத்த நாள் marina bayவுக்கு வழிகாட்டியை நம்பாமல் வழி பார்த்து சென்றேன். பிரமாண்டம். மூன்று wheel chair எடுத்துக்கொண்டு பெற்றவர்களுக்கு சுற்றிக்காட்டினோம். உலகில் ஆச்சரியங்கள் நிறையவே உண்டு. தாவரங்கள் உலகின் பேரதிசயங்கள்.

இருபது நிமிடங்களில் விமான நிலையம் வந்து அடைந்தோம். மனதில் சிங்கப்பூர் நிறையவே நிறைந்து போனது. கார் தந்தவர் காரில் எல்லாம் சரியாக இருக்கிறது என பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் கிளம்பினார். திருப்திகரமான பயணம் முடிவுக்கு வந்தது. மீண்டும் செல்ல வேண்டும் எனும் ஆவல் தந்த நாடு அது.

சென்னையில் வந்து இறங்கினோம். இரவு 11 மணி. சிங்கப்பூரில்  எளிதாக இடம் கண்டுபிடிக்க முடிந்தது. செல்லும் நாடுகளில் இந்தியா ஒன்று மட்டுமே நான் வாகனம் ஓட்டாத நாடாக இருக்கப்போகிறது. அந்த இரவில் தட்டுத்தடுமாறி ஹோட்டல் வந்தோம். அடுத்த நாள் காலை tablet device தொலைத்த ஹோட்டல் சென்றோம். காத்திருக்கச் சொன்னார்கள்

( தொடரும்)

No comments: