Tuesday, 13 May 2014

டிவிட்டப் மதுரையில் நானிருந்தேன்

பக்தா, மதுரையில் நடக்கும் டிவிட்டப் விழாவிற்கு கலந்து கொள்ள வில்லையா என்று சாமியார் கேட்டதும் நான் பயந்து போனேன்.

''என்ன சொல்கிறீர்கள் சாமி?''

''ட்விட்டரில் 140 எழுத்துக்குள் எழுதும் கீச்சர்கள் ஒன்று கூடினார்களே, எப்படி இந்த உலகத்தை மேம்படுத்தி செல்வது என, அதில் நீ கலந்து கொள்ளவில்லையா?''

''எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் சாமி?''

''நீயும் ஒரு கீச்சர் தானே''

''எப்பொழுது நான் என்னை கீச்சர் என சொன்னேன், நான் உங்கள் பக்தனே இல்லை, இதில் எப்படி கீச்சர் என்பதெல்லாம்?''

''நீ முழு நேர கீச்சர் ஆகிவிட்டாய்?, என்னோடு நீ பேசுவதே இல்லை''

''இங்கே பாருங்கள், என்னை தொல்லை செய்யாதீர்கள், வைகுண்டம் போக வேண்டியதுதானே''

''மானிடர்கள் தங்களில் பொய் உருவம் உருவாக்கிக் கொள்கிறார்கள், அதில் அந்த கீச்சர்கள் மிகவும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது நீ அறிந்ததுதானே''

''எனக்கு அதில் ஆர்வம் இல்லை, எவரோ என நினைத்துக் கொண்டு என்னிடம் வந்து பேசுகிறீர்கள்''

''பக்தா, யாம் உமது சித்து விளையாட்டு எல்லாம் அறிவோம்''

''என்னை நீங்க கலங்க படுத்த நினைத்து வந்து இருக்கிறீர்கள்''

''பக்தா, பொய்யாய் வாழ்வது பெரிய பாவம். நீ வேடம் தரித்து சென்றதை யாம் அறிவோம்''

''என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் கீச்சரும் அல்ல, கோச்சரும் அல்ல''

''பக்தா, இந்த கவிதை உன்னுடையது தானே''

''எந்த கவிதை''

''ஒன்றென கூடி இருக்கும் தமிழே
உலகம் நமதென ஒலிக்கும் தமிழே
நம் சிந்தையால் வளரும் தமிழ்
மகிழ்ந்தது நமது கூட்டம் கண்டு

எழுத்தில் நம்மை கண்டோம்
வருத்தமின்றி ரசித்து மகிழ்ந்தோம்
தமிழால் சாதித்தது நிறைய
சேர்ந்தோமே இன்று மீண்டும் அதை உரைக்க

ஊர் புகழ் உலகப் புகழ்
எல்லாம் தமிழ் தந்தது
எழுத்து கொண்ட பிம்பம்
எல்லாம் முன்னால் நின்றது
தமிழ் வளர்ப்போம், சிறப்போம்''

''சாமி, இது நான் எழுதலை, ஏன் இப்படி''

''பக்தா, இந்த கவிதை நீ எழுதியது, இதை நீ அங்கே பிறிதொருவரை வாசிக்க வைத்து ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்து இருந்தாய், எனக்கு தெரியாதா?''

''உங்கள் கற்பனைக்கு அளவில்லை, நான் எழுதலை, நான் போகவும் இல்லை''

''எத்தனை சிறப்பாக இருந்தது தெரியுமா, ஆடலும், பாடலுமாய் சந்தோசத்தில் திளைத்து இருந்தார்கள், நீயும் தான். நீ அவளைத் தேடித்தான் அங்கே சென்றதும் அறிவேன்''

''போதும் நிறுத்துங்கள், நான் செல்லவே இல்லை''

''நீ இருந்தாய், பெண்கள் பெயரில் எழுதும் கீச்சரில் நீயும் ஒருவன்''

''இல்லவே இல்லை, பழி வேண்டாம்''

''பக்தா, என்னிடம் பொய் சொன்னது போதும். அது நீதான்''

''பெண் வேடமிட்டு எழுதி நான் என்ன சாதிக்கபோகிறேன்''

''பிறரை ஏமாற்றும் நோக்கம் இருக்கிறதே''

''எனக்கு எழுதவே தெரியாது''

''பக்தா, மெச்சினேன் உமது வீர தீரத்தை, நீ அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தாய்''

சட்டென விழித்துப் பார்த்தேன், இருளாக தெரிந்தது. என்னவென எழுந்து எனது மாடி அறையின் சன்னல் திறந்து பார்த்தேன்.

எவரோ ஒருவர் சத்தமாக பேசிய ஊர்ப்புகழ் உலகப்புகழ் எல்லாம் தமிழ் தந்தது என எனது அறையின் உள்ளே பாய்ந்து சென்றது.

மதியம் உறங்காதேனு எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா என அம்மா சப்தம் போட்டுக்கொண்டே மாடிக்கு வந்து கொண்டு இருந்தார்.


No comments: