Monday, 30 September 2013

டிவிட்டர்களில் அறிவு ஜீவிகள்

பொதுவாகவே இந்த சமூக இணைய தொடர்புகளுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை என்றே ஒதுங்கி கொள்வது உண்டு. எவரேனும் நண்பர்கள் லண்டன் வந்தால் கூட என்னால் நேரம் ஒதுக்கி சென்று பார்க்க இயலாத நிலையில் தான் எனது வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. அதே போன்று, ஊருக்கு சென்றாலும், இருக்கின்ற மூன்று வார விடுமுறையில் உறவினர்கள் தேடி சென்று பார்ப்பதில் கழிந்து விடுகிறது. இதன் காரணமாக எப்போதும் தனித்தே இயங்கி பழகியாகிவிட்டது. 

கணினியில் வந்து அமர்ந்து ஒரு விசயம் படித்த காலம் மலையேறி விட்டது, இப்போதெல்லாம் தமிழில் மொபைல் போனில் எழுதும் வசதியெல்லாம் பெருகிவிட்டதால் படித்த விசயத்திற்கு உடனே பதில் எழுதும் வசதி வந்துவிட்டது. வீட்டில் மொபைலில் அப்படி என்ன இருக்கிறது என திட்ட ஆரம்பித்து விட்டார்கள். தமிழை படிப்பது எத்தனை சுகம்? 

டிவிட்டரில் நான் இணைய வேண்டாம் என ஒதுங்கியே இருந்த காலம். இணைந்த பின்னர் என்ன எழுதுவது என புரியாத போது பலரின் எழுத்துகள் வாசிக்க நேர்ந்தது. எண்ணற்ற நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது அட என்று தான் தோணியது. பெரும்பாலும் தமிழ் டிவிட்டுகள் சினிமாவை பற்றியே இருந்தாலும் இன்னும் எனது வாசிப்பு விரிதல் அடையவில்லை. கூகுள் பிளஸ், பேஸ்புக் இவையெல்லாம் விட டிவிட்டர் மிகவும் வசதியாக இருப்பது போல் எனக்கு தோணுகிறது.

சமூக இணைய தளத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் ட்விட்டரில் சற்று அதிகமாகவே இருக்கும் போல தெரிகிறது. வீணாக பேசி பொழுதை கழிக்கும் நபர்கள் உண்டு என்றே புலம்புவதை காண இயல்கிறது. இதை எல்லாம் தவிர்த்து அறிவியல் அறிஞர்கள் கூட வலம் வருகிறார்கள். சற்று அறிவை வளர்த்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். 

திருக்குறள் போல டிவிட்டர் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எழுத இயலாது என்பதால் ஒரு சில வரிகளில் எண்ணத்தை பகிர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

நான் சில விசயங்களை பொதுவாக சொல்லும் போது அதை சற்றும் நம்புவதில்லை. இவ்வுலகில் இதுதான் இப்படித்தான் என எவராலும் வரையறுக்க இயலாது. அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள். பொதுவில் சில விசயங்கள் தவறாகவே தெரிகிறது. 

தாய் மட்டுமே கருணை உடையவரா? தாயின் கருணையை ஒரு ஆணினால் மிஞ்ச இயலாதா? என்பன போன்ற விசயங்கள் பகிரப்படுகின்றன. சட்டென சிரிப்பு மூட்டும் வசனங்கள் வலம் வருகின்றன.நேரடியாக நேரம் கிடைக்கும் போது பல தமிழ் மக்களுடன் பேசும் வாய்ப்பு போன்றே இருக்கிறது. 

டிவிட்டரில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள், அவர்களை மட்டும் கண்டு கொள்ளுங்கள். தேவையில்லாமல் சண்டை போட்டு மன உளைச்சலுக்கு உட்படாதீர்கள். டிவிட்டர் அது ஒரு சமூகம் என்கிறார் ஒருவர். சரி என்றே படுகிறது! 

No comments: