Thursday, 29 August 2013

எதைத் தேர்ந்தெடுப்பது?

வீட்டின் வாசலைத் தாண்டியதும் 
எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் 
மனம் கொள்ளும் குழப்பங்கள் 

கொட்டிக் கிடக்கின்றன வகை வகையாய் 
தொட்டு எதை எடுப்பது என்பதில் 
தட்டு தடுமாறியே போகும் எண்ணங்கள் 

எதை எல்லாம் எழுதுவது 
என்பதில் கூட 
கலங்கி நிற்கும் 
கவிதைகள் 

முத்தம் அன்பா, காமமா?

காதலின், அன்பின் போது நமது உடலில் டோபமைன் (dopamine), நார்எபிநேப்ரின் (norepinephrine), அதுவும் மிகவும் குறிப்பாக ஆக்சிடோசின் (oxytocin) போன்ற வேதி பொருட்களின் அளவு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. காமத்தின் போது டெஸ்டோஸ்டீரோன் (testosterone) எனும் வேதிப் பொருளின் அளவு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆக்சிடோசின் பெண்களில் குழந்தை பிறப்பின் போது, மழலைக்கு பால் தரும்போது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் பெயர்க்காரணமே 'பிள்ளை பெறுவதில் உதவி புரிவதில்' இருந்து வந்ததாக குறிப்பில் இருக்கிறது.

முத்தம் அன்பின் வெளிப்பாடு. முத்தம் இரு நபர்களுக்கு இடையிலான உறவை உறுதிபடுத்தி கொள்ளும் விசயம். கணவன் மனைவிக்கும், காதலர்களின் இதழுடன் இதழ் சேரும் முத்தம் குறித்து ஆராய்ச்சி சொல்லும் விசயம் மிகவும் சுவாரஸ்யமானது. நமது உடலில் நோய் எதிர்ப்பு தன்மை சக்தியை முத்தம் அதிகரிப்பதாக நம்பபடுகிறது. அதே வேளையில் சில நாடுகளில் இதழ்களின் முத்தம் 'அசிங்கம்' என்றே கருதப்படுகிறது.

கைகளில் தரப்படும் முத்தம், கன்னத்தில் தரப்படும் முத்தம், நெற்றியில் தரப்படும் முத்தம், இதழ்களில் தரப்படும் முத்தம் என முத்தம் ஒவ்வொரு நிலையில் அதனதன் அர்த்தம்தனை வேறுபடுத்தி கொள்கிறது. மேலைநாடுகளில் கன்னத்துடன் கன்னம் ஒட்டிக்கொண்டு முத்தம் தருவது போல் சப்தம் எழுப்பி கொள்வார்கள். எல்லா உயிரினங்களும் முத்தம் தந்து கொள்வதாகவே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த முத்தம் ஒரு அமைதியை நமது உடலில் பரவ செய்கிறது.

முத்தம் நம்பிக்கையின் வெளிப்பாடு. நினைத்த நபர்களுக்கு எல்லாம் முத்தம் எவராலும் தர இயலாது, சினிமாவில் தவிர. நாம் நெருங்கி பழகும் நபர்களிடம், நாம் நல்லதொரு நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களிடம் மட்டுமே முத்த பரிமாற்றம் நிகழ்த்துவோம் எனப்படுகிறது.

முத்தம் ஆனந்தத்தின் வெளிப்பாடு. பெற்ற பிள்ளைகளை கொஞ்சி குலாவும் போது தரப்படும் முத்தத்தில் இருக்கும் ஆனந்தம் இந்த ஆகிச்டோசின் அளவை அதிகரித்து நம்முள் அமைதியான ஆனந்தம் பரவிட செய்கிறது.

பரிணாம உணர்வின் முதல் உணர்வு தொடுதல். அந்த தொடுதல் உணர்வை தருவது முத்தம். வெளிச்சம், காற்று, வாசம் எல்லாம் தொடுதல் உணர்வில் தெரிந்து கொண்டதுதான். இதழ்களில் இருக்கும் தொடுதல் உணர்ச்சி போல நமது உடல் பாகத்தில் எங்கேயும் இல்லை என்கிறார்கள். முதல் முத்தம் எல்லாம் பெரிதாக பேசப்படுகிறது. முத்தம் பற்றி எல்லாம் எழுத வேண்டிய அவசியம் என்ன? என்றே சத்தம் ஒன்று கேட்டது. காமம் தனியுடைமை. அன்பு பொதுவுடைமை. பலர் முத்தம்தனை தனியுடமை என்றே நினைத்து கொள்கிறார்கள்.

முத்தம் பற்றி அறிந்து கொள்ள 

Friday, 23 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 19

''எதுக்கு சுபத்ராவை பார்க்கனும்?''

''முருகேசா, தெரியலை, பார்த்துட்டு வருவோம்''

நானும் பதில் எதுவும் பேசாமல் எங்கே பார்ப்பது என தெரியாமல் அங்கிருந்து நடந்தோம். இறுதியாக ரங்கநாதன் வீட்டிற்கு செல்வதென முடிவெடுத்து அங்கே சென்றோம். சுபத்ரா அப்போதுதான் வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.

''சுபா, உன்கிட்ட  பேசனும்''

''என்னடா பேச போற''

சுபத்ராவின் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

''கோபப்படாதே, எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை அதுதான் ரங்கநாதன் கிட்ட சொன்னோம்''

''உன்னோட வாழ்க்கைக்கு இனி நான் இடைஞ்சல் பண்ண மாட்டேன், பேசறதுக்கு ஒன்னுமில்ல''

''சுபா, சொன்னா கேளு. எங்களோட வா''

சுபத்ரா எங்களோடு வர மறுத்துவிட்டாள். காயத்ரியும் கேட்டுப் பார்த்தாள், ஆனால் அவள் வருவதாகவே இல்லை. இனிமேல் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என நாங்கள் கிளம்பினோம்.

''காயூ, சுபாவோட மாற்றத்தை பார்த்தியா?''

''இல்லை முருகேசா, அவ மாறி இருந்தா நம்மளோட வந்து இருப்பா, எதுக்கும் நீ எச்சரிக்கையா இரு''

காயத்ரி சொன்னதில் எனக்கு அர்த்தம்  .இருப்பதாகவே தெரிந்தது. மறுநாள் கல்லூரிக்கு சென்றோம். ஆசிரியர் சேகரன் பாடம் எடுக்க ஆரம்பித்தார். இவர் எனக்கு முதலில் பிடிக்காமல் இருந்து பின்னர் பிடித்து போனது. எனது அருகில் இருந்தவன் எதுவும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்து கொண்டேன்.

''Our thoughts are very strange at sometimes. No one knows why and how we think and where our thoughts come from. When you look at a picture, you could see that you can have various thoughts on it, same goes with when you see a girl''

''Can I stop you there Sir?''

மறுபடியும் ஆரம்பித்துவிட்டானே என்றே நினைத்தேன். இந்த கோரனுக்கு மிகவும் கோரமான சிந்தனைகள் வந்து சேர்கிறதே என நினைத்தேன்.

''Say Mr. Koran''

''Could you please explain why did you mention about a girl?''

''I gave an example''

''I don't think so''

''It is an example''

''I interpret that you see a girl as an object rather than a human being''

''That's what your brain processed the thoughts on it, not mine Koran. Please sit down and do not disturb the class''

அனைவரும் மேசைகளை தட்டி கோரனை உட்கார சொன்னார்கள். நானும் அவனது கையை பிடித்து இழுத்து அமர வைத்தேன், ஆனால் அவனோ என்னை தள்ளிக் கொண்டு வகுப்பை விட்டு  வெளியேறினான். இவனுக்கு என்ன ஆனது என்றே நான் யோசித்து கொண்டிருந்தேன். வகுப்பு ஆசிரியரோ எதையும் கண்டு கொள்ளாதவாறு பாடம் நடத்த ஆரம்பித்தார்.

''We all have brain network consists of neurons which will interact with inside and outside factors and thoughts are created. When the brain process the thoughts, chemicals are released from endocrine glands and nerve endings. These chemicals determine the next step of your body's physical activity. A mental process leads into physical process''

கல்லூரி பிரின்சிபல் உடன் கோரன் வகுப்பின் வாசலில் வந்து நின்றான். பிரின்சிபல் வகுப்பு ஆசிரியரை அழைத்தார். ஒரு சில நிமிடங்கள் வெளியில் சென்று பேசிவிட்டு உள்ளே வந்தார் ஆசிரியர். என்ன நடந்தது என சொல்லாமல் பாடத்தை மேலும் தொடங்கினார். கோரன் வகுப்புக்குள் வரவில்லை.

''Our thoughts have limitations, it has some boundaries which is not easy to cross''

''என்ன பிரச்சினை சார், எதுக்கு பிரின்சிபல் வந்தார்''

வகுப்பு தலைமை மாணவன் சூரியராஜ் எழுந்து கேட்கவே ஆசிரியர் சிரித்து கொண்டே சொன்னார்.

''நான் பெண்களை கொச்சையா பேசறேனாம், நான் கிளாஸ் எடுக்கறப்ப எல்லாம் கேர்ல்ஸ் எல்லாம் வகுப்புல உட்கார முடியாம நெளியராங்கனு இவன் போய் கம்ப்ளைன் பண்ணி இருக்கான். அதுதான் வகுப்புல என்ன நடக்குதுன்னு பாக்க வந்து இருக்காரு, என்ன அக்கிரமம்''

காயத்ரி எழுந்து ''Sir, how many thoughts are good for a person at a time?''

''Fewer thoughts are better as you can save energy. More uncontrollable thoughts are waste of energy. You should control your thoughts on particular issue so that you can easily handle it. Once you have control on what you think, your brain process that thought meaningfully and convert them into reality. For example if you are cheated by someone, you would tend to have unnecessary thoughts on it and try to explore why this happened to you and so on. In reality, your expectations were not met, it is simple as that, so further thoughts on this unnecessary and you should move away your thoughts from that person how important that person is''

''It is very difficult thing to do Sir as you always have those memories coming back to you, isn't''

காயத்ரியின் கேள்வியில் அவளுக்கு உண்டான வலி தெரிந்தது.

''Certainly Gayathri, why do you need give importance to someone who does not care to give importance to you. It is not about egoism or caring, it is about how you make yourself strong in the world community. Your thought process should not destroy yourself, it should make you very firm. Your thoughts should be focused on universal rather than personal''

காயத்ரி அமைதியாகவே அமர்ந்துவிட்டாள். அப்போது கோரன் உள்ளே வந்து அமர்ந்தான்.

''Koran, what were you thinking?''

''I was thinking about how to murder you and tonight I would definitely kill you. This is your last day''

''Could you ask your brain, what is the basis for this thought process and what does your brain wanted to achieve by murdering me?''

மொத்த வகுப்பும் கோரனை கோபத்துடன் பார்த்தது. கோரனிடம் மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

''டேய், நீ என்னடா பேசற. எதுக்குடா இவர் மேல கோபம்''

''பெரிய தாட் ப்ரோசெசஸ் பத்தி பேசறான். இவனை இன்னைக்கு முடிச்சிட போறேன்''

''Koran, answer me''

''Yes, you have killed your wife and tell me why did you do that, what was the basis of that thought process and what did your brain want to achieve by killing her?''

அனைத்து வகுப்பும் அப்படியே உறைந்து போனது.

(தொடரும்) 

Thursday, 22 August 2013

சூரியனின் வெகு அருகில் கோள்கள்

சாப்பிட்டுட்டு அப்புறமா போய் தூங்கு என அம்மா சொன்னதையும் கேட்காமல் தூங்க சென்றுவிட்டேன். சொன்னா கேட்கமாட்டியா என அம்மா வந்து மீண்டும் எழுப்பி நான் சாப்பிட்ட பின்னரே என்னை உறங்க அனுப்பினார்.

நல்ல அசதியாக இருந்தது. மீண்டும் என்னை யாரோ எழுப்பினார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. பார்த்தால் சாமியார் வந்து அருகில் நின்று கொண்டிருந்தார்.

''பக்தா, உடல் அலுப்போ''

''என்ன சாமி, இந்த நேரத்தில் வந்து எழுப்புகிறீர்கள்''

''என்னை கண்டால் உனக்கு வெறுப்பு வருமே, வரவில்லையா''

''இல்லை சாமி, அப்படி எல்லாம் வெறுப்பு இல்லை, நீங்கள் வராமல் இருப்பதே எனக்கு சங்கடமாக இருக்கிறது''

''பக்தா, நீ பூமி பற்றி அறிந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது''

''சாமி, சொல்லுங்கள்''

''ஒரு சூரிய குடும்பம் உருவாக பல பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. உருவான சூரிய குடும்பங்களில் இருக்கும் ஆற்றல் மீண்டும் மீண்டும் சூரிய குடும்பங்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றன. அப்படி உருவாகும் சூரிய குடும்பங்களில் உள்ள கோள்கள் சூரியனுக்கு வெகு அருகாமையில் இருப்பது இல்லை. கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பது போல இந்த கோள்கள் சற்று தள்ளியே அமைந்து விடுவதுண்டு. இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

சூரியனை அனைத்து கோள்களும் சுற்றி வரும் என்பது நீ அறிந்தது தான். அதுவும் அருகில் இருக்கும் கோள்கள் மிகவும் வேகமாக சுற்றும் தன்மை கொண்டது. இதன் காரணமாக அவை சூரியனின் இழுப்புகள் சென்று விடுவது இல்லை.

ஆனால் சில கோள்கள் மிக மிக அருகாமையில் அதுவும் நான்கு மணி நேரத்தில் சூரியனை சுற்றிவிடும் அளவுக்கு உள்ள கோள்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. இத்தனை அருகாமையில் சென்றால் சூரியன் தனது வெப்ப அலைகள் மூலம் கோள்களை பிரித்து மேய்ந்துவிடும். அந்த கோள்கள் அழிந்தே போய்விடும். ஆனால் அப்படி அழிவுக்கு உட்படாத இந்த கோள்கள் இருப்பது ஒரு அதிசயத்தக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

சூரியனை சுற்ற நமது பூமி எடுத்துக் கொள்வதோ 365 நாட்கள்.  சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதன் எடுத்து கொள்ளும் நாட்கள் 88. ஆனால் நான்கு மணி நேரம் என்பது நினைத்து கூட பார்க்க இயலா ஒன்று.

இப்படி இருக்கும் கோள்கள் இரும்பு தாதுக்களால் மட்டுமே ஆனதாக கூட இருக்கும் என யூகம் சொல்கிறார்கள். இவர்களின் கணக்கீட்டு படி பூமி செல்லும் வேகம் வினாடிக்கு 30கிலோமீட்டர், இந்த கோள்கள் ஒரு வினாடிக்கு 250கிலோமீட்டர் வேகம். அப்படி பார்த்தால் எட்டு மடங்கு குறைந்து, குறைந்தது நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து  நாட்கள் ஆகும். ஆனால் நான்கே மணி நேரத்தில் சுற்றுவது என்பது சுற்றும் அளவை கூட குறித்ததாக இருக்கலாம். பக்தா...

''என்ன சொன்னீங்க சாமி''

''சூரியனை வெகு வேகமாக சுற்ற கூடிய கோள்கள் உண்டு''

''அதனால என்ன சாமி''

''பக்தா, அப்படிப்பட்ட கோள்களில் உயிரினங்கள் வாழ சாத்தியம் இல்லை''

''அதனால என்ன சாமி''

''பக்தா, ஒரு அறிவுக்கு எட்ட வேண்டிய விசயம்''

''தண்ணீர் இல்லாத கோள்களில் கூட உயிரினம் வாழலாம், அந்த சூரியனில் கூட உயிரினம் வாழலாம் சாமி''

''பக்தா, உளறலை நிறுத்து''

''அப்படி அப்படியே உயிரினங்களை இந்த பூமியில் படைத்த இறைவனால் இது எல்லாம் சாத்தியமே''

''அவசியம் இல்லை பக்தா''

''அப்படி எனில், இது போன்று வெகு அருகாமையில் இருக்கும் கோள்கள் பற்றிய அறிவு கூட எனக்கு அவசியம் இல்லை சாமி''

''இந்த உலகில் எண்ணற்ற விசயங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன, அதை அறிந்து கொள்வதில் என்ன சிரமம்''

''தெரிந்து என்ன செய்ய சாமி''

''ஊருக்கெல்லாம் சொல், இந்த பிரபஞ்சம் மிக அதிசயம் என சொல்''

''சொல்லி''

''உன்னிடம் பேசியது வீணோ''

''இதேதானே சாமி, ஊருக்கு சொன்னாலும் நடக்கும்''

திடீரென சாமியார் மறைந்துவிட்டார். என் மீது கோபமோ என நினைத்துப் பார்கையில் காலை சூரியன் கன்னத்தை தழுவிக் கொண்டிருந்தான். மீண்டும் அதே வேலை, அதே வாழ்க்கை. அம்மாவோ, அப்பவோ எழுப்பும் முன்னர் நானே எழுந்து ஓடினேன். 

Wednesday, 21 August 2013

கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி?

அமரக் காதல், ஜீவித காதல், தெய்வ காதல் இன்னும் எத்தனயோ பெயர் வைத்துக் கொள்ளலாம். காதல் அத்தனை தித்திப்பானது. வேப்பாங்காயை கடித்துவிட்டு இனிக்கிறதே என டுபாக்கூர் விட சொல்லும் காதல். காதல் எதையும் தாங்கும் வல்லமை கொண்டது. காதல்தனை காதலிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். எத்தனையோ புராணங்களில் காதல் புராணம் மிகவும் அற்புதமானது.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மகன் அம்பிகாபதி மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் மகள் அமராவதியின் காதல் மிகவும் பிரசித்தி பெற்றது. முதலாம் குலோத்துங்க சோழனின் மனதுக்கு பிடித்தவராகிறார் கம்பன். கம்பனின் காவியத் திறமைக்கு மதிப்பளித்து தனது அரசவை கவிஞர் ஆக்குகிறார் சோழ மன்னர். கம்பனின் வளர்ச்சி கண்டு பொறுப்பற்ற தன்மையில் பொறாமை கொள்கிறான் ஒட்டகூத்தன்.

கம்பனின் மகன் அம்பிகாபதியும், சோழ மன்னரின் மகள் அமரவாதியும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததே சோழ மன்னர் தான். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கினங்க அம்பிகாபதி மிகவும் காவிய திறமை வாய்ந்தவனாகவே வளர்கிறான். அம்பிகாபதியும், அமராவதியும் காதல் கொண்ட விசயம் கம்பன் அறிந்தபோது தள்ளாடுகிறான், அல்லாடுகிறான்.

மன்னரின் காதிற்கு விசயம் போனால் பேராபத்து விளையும் என்பதை அறிந்து கொண்ட கம்பன் அம்பிகாபதியிடம் காதலை கைவிடுமாறு கோரிக்கை விடுகிறான். மேலே எழுதிய காதல் வகைகளில் ஒன்றை குறிக்க மறந்து விட்டேன், அது பொருந்தா காதல். அமராவதிதான், அம்பிகாபதியை காதல் புரிந்து இருக்க வேண்டும், காதல் புரிய தூண்டி இருக்க வேண்டும். அரச பரம்பரையில் வந்தவர்கள் அரச பரம்பரையில் தான் திருமணம் முடிப்பார்கள் என்பது எழுதப்படாத நியதி.

இந்த காதல் விசயம் ஒட்டக்கூத்தனுக்கு தெரிய இதுதான் தக்க தருணம் என குலசேகர இளவரசனுடன் இணைந்து கொண்டு பல திட்டங்கள் தீட்டுகிறான், ஒவ்வொன்றிலும் தப்பிக்கிறான் அம்பிகாபதி.

காதல் என வந்துவிட்டால் அனைவரும் கவிஞர்களாகி விடுவார்கள். ஆனால் கவிஞன் இங்கே காதலனாகி நிற்கிறான். காதல் ரசம் சொட்ட சொட்ட அமராவதியை சிலாகித்து கவிதைகள் பொழிகிறான். ஆண்டாள் கூட தான் காதல் ரசம் சொட்ட சொட்ட ரங்கநாதன் மீது கவிதைகள்  எழுதினாள். இந்த கவிதைகளே அம்பிகாபதிக்கு எதிரிகள் ஆகின.

சோழ மன்னருக்கு விசயம்  ஒட்டகூத்தன் மூலம் சென்றடைகிறது. கம்பர் மீதான மரியாதையில், கம்பரின் வேண்டுகோளுகிணங்க அம்பிகாபதியை நாடு கடத்த உத்தரவு இடுகிறார் மன்னர். புஷ்பக தீவுக்கு செல்லும் வழியில் சென்ற கப்பல் உடைந்து அதில் கிடைத்த மரக்கட்டையின் மீதேறி செண்பக தீவு அடைகிறான் அம்பிகாபதி. உறையூரில் நடக்கும் விசயம் அவனது காத்து எட்டுகிறது. புகழேந்தி புலவரின் மகள் கண்ணம்மாவின் மூலம் அமரவாதியை சந்திக்க ஆயத்தம் செய்கிறான் அம்பிகாபதி. காதலின் வலி, அவனை அமராவதியை அழைத்து கொண்டு ஓடி செல்ல தூண்டுகிறது. அவ்வாறு திரும்பி வந்து அழைத்து செல்லும் தருவாயில் இருவரும் பிடிபடுகிறார்கள்.

இந்த முறையும் கம்பர் மீதான மரியாதையில், அமராவதி அடம்பிடித்ததில் இருந்து  அம்பிகாபதி கொல்லப்படுவதில் இருந்து மீட்கபடுகிறான். சோழ மன்னரோ கவிதைக்கு பெரும் மரியாதை தருபவர், அதன் காரணமாக அம்பிகாபதி நூறு பாடல்கள் புறம் பற்றி, அதாவது போர், அரசியல் குறித்து பாடினால் தனது பெண்ணை மணமுடிக்க சம்மதம் சொல்கிறார், அப்படி இல்லாத பட்சத்தில், கொல்லப்படுவாய் என அரசர் அரசாணை இடுகிறார். காதல் பற்றி ஒரு பாடலும் பாடக் கூடாது என்கிறார். கம்பர் அச்சம் கொள்கிறார். பெண்ணின் மீது காதல் இருக்குமிடத்து புறம் தெரிவது இல்லை. அம்பிகாபதியை மிகவும் எச்சரித்து அனுப்புகிறார். ஓட்டகூத்தனோ தனது திட்டம் தவிடு பொடியாகிவிட்டதே, தனக்கு நிகரான ஒரு புலவனின் மகன் இளவரசனா? என எப்படியாவது இந்த காதல் கரைசேர விடக் கூடாது என திட்டம் தீட்டுகிறான்.

அரச சபை கூடுகிறது. பாடல் பாட ஆரம்பிக்கிறான் அம்பிகாபதி. ஒன்று இரண்டு என தொன்னூற்றி ஒன்பது வந்தாகிவிட்டது. அனைவரும் அமைதியாய் இருக்க, வாழ்த்துபாவுடன் இணைத்து நூறு என எண்ணிக்கொண்டு காதலில் திளைத்த அமராவதி, அம்பிகாபதி முன் சென்று வெற்றி களிப்பில்  நிற்கிறாள். நூறாவது பாடலை அவள் அழகை பாடி முடிக்கிறான் அம்பிகாபதி. ஒட்டக்கூத்தன் எழுகிறான், நூறு பாடல்கள் சொன்னபடி பாடவில்லை என ஆதாரத்துடன் காட்டுகிறான். அரசர் இதை காரணம் காட்டி அம்பிகாபதியை கழுவில் ஏற்றுகிறான். அமராவதியும் உடன் இறக்கிறாள்.

கம்பர் மிகவும் சமயோசிதமாக நடந்து கொண்டும் தனது மகனின் காதலை கைகூட வைக்க முடியவில்லை. கம்பர் இந்த காதலை பொருந்தா காதல் என்றே எண்ணினார். இன்றைய காலகட்டத்தில் காதல் எதிர்ப்பு பெருகி இருக்க, அன்றைய கால கட்டம் இதைவிட சற்று மோசமாகவே இருந்து இருக்க கூடும். கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் முன்னர் அரங்கேறிய நிகழ்வு இது. அதுவும் அரசரின் மகள்.

போட்டிகள் வைத்தே மணம் முடித்து வைக்கும் பாங்கு அன்றைய தேதியில் இருந்து இருக்கிறது. அம்பிகாபதியின் காதல் ஒரு காவியமாகி போனது. இந்த நிகழ்வுகள் வைத்தே 'பெண் புத்தி பின் புத்தி' என சொல்லப்படுவது உண்டு. அதாவது செய்து முடித்த பின்னர் யோசிப்பது. இந்த அம்பிகாபதி குறித்து இரண்டு முறை தமிழ் சினிமா குறித்து வைத்துள்ளது. இரண்டுமே மாபெரும் வெற்றி படங்கள். ஒன்று தியாகராஜா பாகவதர் நடித்தது, மற்றொன்று சிவாஜி கணேசன் நடித்தது.

கம்பரின் நிலையில் இருந்து இந்த நிகழ்வை எல்லாம் அசை போடும்போது மனம் மிகவும் அதிகமாகவே வலிக்கிறது. கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி?


Tuesday, 20 August 2013

ஜீரோ எழுத்து - 4 (ஒண்ணுமில்லை கோட்பாடு)

ஐசக் அசிமோவ் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவர் சொன்னது என்னவெனில் 'நான் இறந்து போய்விட்டால் சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமாட்டேன், மாறாக ஒரு ஒன்றுமில்லா தன்மையான வெறுமையே மிஞ்சி இருக்கும்'. ஆனால் அசிமோவ் எப்படி சொர்க்கம், நரகம் என்பது இல்லை என்று கருதினாரோ அதைப் போலவே ஒன்றுமில்லா தன்மையும் இல்லையென்றே எண்ணினார். அதற்கடுத்து தத்துவமேதை நோஜிக் என்பவரும் இதே கருத்தை கொண்டிருந்தார். அதாவது வாழும்போது மட்டுமே வாழ்க்கை, இறந்தபின்னர் எல்லாம் வெறுமையாகவே இருக்கும் என்பதுதான் அது.

இறந்தபின்னர் என்ன நடக்கும் என்பதை இதுவரை எவருமே அறிந்து சொன்னது இல்லை. இதன் காரணமாகவே பல அறிஞர்கள், தத்துவ மேதைகள் இறந்த பின்னர் சூன்யம் மட்டுமே நிலவுவதாக சொன்னார்கள். சிபயாமா எனும் ஜென் மேதை இந்த சூன்யத்தை ஒரு வட்டமாக வரைந்து காண்பித்தார். இதைத்தான் இந்து தத்துவமும் சொல்கிறது. இருப்பினும் 'ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து எதுவும் தோன்றிட வாய்ப்பில்லை' என்பதுதான் இன்றைய அறிவியல் கோட்பாடு.

என்ன இதற்கு முன்னர் இருந்தது என்பது அழிக்கப்படும் பட்சத்தில், உண்மையிலேயே என்ன இருந்தது என எவரால் அறிய முடியும். ஒரு நட்சத்திரம் ஒரு ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கி கருந்துளை என ஒன்றாய் முடிவது என்பது அறிவியல் பாடத்தில் படிக்க நன்றாக இருக்கும். ஆனால் இதில் இருக்கும் உண்மையை அறிந்து கொள்ளும் அறிவு நம்மில் இல்லாதபட்சத்தில் 'ஒருவித வெறுமை' நிலவத்தான் செய்யும்.

ஆனால் அதை எல்லாம் உடைத்து அந்த உண்மையை சொல்ல வந்ததுதான் குவாண்டம் கொள்கை. கருந்துளையிலும் சரி, இவ்வுலகம் தோன்றியதாக சொல்லப்படும் பேரு வெடிப்பு கொள்கையிலும் சரி, கட்டுகடங்கா ஆற்றல் அடங்கி இருந்ததாக, இருப்பதாக இப்போது அறிவியல் சொல்லி முடிக்கிறது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்! கடவுள் என்பதன் தத்துவமும் அதையே சொல்கிறது.

நம்மில் இருக்கும் ஆத்மாவும், நமது வெளியில் இருக்கும் பிரம்மனும் ஒன்றே எனும் தத்துவமே குவாண்டம் கொள்கையின் அடிப்படை, அதை வைத்தே டி என் ஏ எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு பேச்சு உண்டு.

இப்போது சொல்லுங்கள், கந்தகம் நிறைந்த இடத்தை தேடி செல்வீர்களா?

(தொடரும்)

Sunday, 18 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 18

காயத்திரியின் சோகமான முகம் கண்டு அம்மா பதட்டம் கொண்டார்கள். 

''என்ன காயத்ரி, ஒருமாதிரி இருக்க, அக்காவை நினைச்சி கவலைப்படறியா?''

''இல்லம்மா''

''அப்புறம் எதுக்கு உன் முகம் ஒருமாதிரி இருக்கு''

நான் இடைமறித்தேன். 

''அந்த சுபத்ரா, காயத்ரி அக்கா வாழ்க்கை என் கையில அப்படின்னு மிரட்டிட்டு போனா''

''என்ன சொல்ற நீ''

''ஆமா''

''அவளை இப்பவே ரெண்டுல ஒன்னு பாத்துட்டு வரேன்''

அப்பா அம்மாவை தடுத்தார். 

''என்ன காயத்ரி நீ, உடனே அவங்களை அடிக்க போக துடிக்கிற, பாவம் சின்ன பொண்ணு, அவளே வருத்தமா இருக்கா''

நான் மட்டுமே என் காயத்ரியை காயூ என அழைக்கிறேன். அப்பா, அம்மாவை காயத்ரி என்றே அழைக்கிறார். 

''பிறகு என்னாங்க, என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு''

வீட்டிற்கு வந்தபின்னும் அம்மா முனுமுனுத்து கொண்டே இருந்தார். காயத்ரி எதோ புத்தகம் வாசித்து கொண்டிருந்தாள், அல்லது நடித்து கொண்டிருந்தாள். மிகவும் குறைவாகவே இரவு சாப்பிட்டாள். எனக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. நாளை விடுமுறை என்பதால் அவளை எங்காவது அழைத்து செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். 

காலையில் எழுந்து அனைவரும் தயாரானோம். வாசற்கதவு தட்டப்பட்டு திறக்கப்படுகையில் சுபத்ரா நின்று கொண்டிருந்தாள். அம்மாவுக்கு கோபம் ஜிவ்வென தலைக்கேறியது. 

''அடுத்த அடி எடுத்து வைச்ச காலை வெட்டிருவேன்''

அம்மாவின் அந்த ஆவேசம் சுபத்ராவை மட்டுமல்ல எங்களையும் நிலைகுலைய வைத்தது. 

''அத்தை...''

''யாரு அத்தை, யாருடீ அத்தை. அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறவங்க எல்லாம் என்னை அத்தைனு கூப்பிட என்ன அதிகாரம் இருக்கு, ஒழுங்கா திரும்பி போ, இல்லை உதைபட்டே சாவ''

அம்மாவின் கோபம் கண்டு பல நாட்கள் ஆகிப் போனது. காயத்ரி கூட பயத்துடன் இருந்தாள். அப்பாதான் அம்மாவை சமாதானம் பண்ணினார். 

''உள்ளே வாம்மா சுபா''

''என்னங்க, இது மாதிரி அசிங்கங்களை இப்பவே துடைச்சிரனும், வளரவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது''

சுபத்ரா அங்கே மறுகணம் நிற்கவில்லை. வேகமாக சென்றுவிட்டாள்.

''என்ன காயத்ரி நீ, வீட்டுக்கு வந்த பொண்ணை இப்படி கேவலபடுத்தி அனுப்பிட்ட''

அம்மா காயத்ரியை தனது பக்கத்தில் இழுத்து வைத்து கொண்டு 

''இதோ இந்த புள்ளையோட முகத்தை பாருங்க, இவங்க அம்மா செத்ததுல இருந்து என்னைக்கு இந்த புள்ளையால சிரிச்சி சந்தோசமா இருக்க முடிஞ்சது, இதுல இப்போ இந்த சனியன் வேற வந்து ஏழரைய கூட்ட நினைச்சா எப்படிங்க பாத்துட்டு சும்மா இருக்கிறது''

அம்மாவின் காயத்ரி மீதான பாசம் எனக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அப்பாவும் சரி என பேசாமல் இருந்தார். நானும் காயத்ரியும் வெளியில் செல்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்பினோம். 

''காயூ எங்க போகலாம்?''

''கோவிலுக்கு''

''கோவிலுக்கு வேணாம், ஏதாவது பார்க்குக்கு போகலாம்''

''கோவிலுக்கு போய்ட்டு பார்க்குக்கு போகலாம்''

சரியென கோவிலுக்கே சென்றோம். அங்கே கோவிலில் காயத்ரியின் அக்காவும், ரங்கநாதனும் நின்று கொண்டிருந்தார்கள். 

''காயூ, நீயும் உங்க அக்காவும் பேசி வைச்சீங்களா?''

''இல்லை''

அவர்கள் இருவரையும் சந்தித்து சுபத்ரா விசயமும் சொன்னோம். ரங்கநாதன் மிகவும் கோபப்பட்டார். சுபத்ராவை தனது வீட்டுக்குள் விடாதவாறு பார்த்து கொள்வதாக சொன்னார். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு கிளம்பினோம். 

அங்கே இருந்து ஒரு மணி நேரத்தில் பார்க் அடைந்தோம். அங்கே எனக்கு பிடித்த ஆசிரியர் அவரது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார். வாங்க என வரவேற்றார். நாங்கள் இருவரும் அவரது கண்ணில் படாமல் தப்பிக்க நினைத்தோம் ஆனால் அவர் எங்களை கண்டதும் அழைத்துவிட்டார்.

''என்ன அதிசயமா இந்த பக்கம்''

''சும்மா வந்தோம் சார்''

அவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். மனைவி, பத்து வயது நிரம்பிய பையன், பதினான்கு வயது நிரம்பிய பெண். அவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. துறுதுறுவென பையனும், பெண்ணும் ஓடியாடி திரிந்தார்கள். 

''எங்களுக்கு இதுதான் பொழுதுபோக்கு இடம், மாசத்தில இரண்டுவாட்டி வந்துருவோம்''

''இப்பதான் சார், நாங்க முதல் முதலா வரோம்''

அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரம் அற்புதமான நேரம் என்றே சொல்லலாம். காயத்ரி மிகவும் லேசாக உணர்ந்தாள். ஆசிரியரின் மனைவி மிகவும் நகைச்சுவையாக பேசினார். அவர்களது திருமணம் காதல் திருமணம் என்றும், எப்படியெல்லாம் நாடகம் ஆடி திருமணம் செய்தார்கள் என்பதை விவரித்தபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 

''சார், நம்ம காலேஜ்ல உங்களைதான் ரொம்ப பிடிக்கும்''

''பக்கத்தில காயத்ரி இருக்கா, அதைக்கூட கவனிக்காம இப்படி சொல்றியேப்பா''

''காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்''

''என்னங்க உங்க சூடன்ட் உங்களை மாதிரியே அறுக்கிறார்''

''ஒரே வெட்டா வெட்டத்தான் செய்வார்'' 

காயத்ரியின் பதில் எனக்கு சௌகரியமாக இருந்தது. 

அரைமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். 

''காயூ''

''என்ன முருகேசா''

''இந்த உலகம் இரண்டே இரண்டு வகை மனிதர்களால் ஆனது''

''சொல்லு''

''ஒன்று சந்தோசம் உடைய மனிதர்கள், மற்றொன்று துக்கம் உடைய மனிதர்கள்''

''மொத்தமா பிரிச்சி வைக்க முடியாதுல''

''ஆமா, இங்கிட்டும், அங்கிட்டும் ஆடிக்கிட்டே இருப்பாங்க''

''என்னை மாதிரி''

''இல்ல, என்னை மாதிரி''

''முருகேசா, இப்படி வெளில வந்து இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு''

''ம்ம்''

''வாரம் வாரம் இப்படி வந்துருவோம், ஷாப்பிங், லைப்ரரி எல்லாம் வேணாம்''

''ம்ம்''

''அம்மா என் மேல பிரியமா இருக்காங்கள''

''அம்மா எப்பவும் அன்புக்கு கட்டுபட்டவங்க''

''சுபத்ராவை போய் பார்ப்போமா''

நான் காயத்ரியின் முகத்தை மட்டுமே பார்த்தேன். 

(தொடரும்)






Saturday, 17 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 2

அங்கே சில இடங்களில் விசாரித்துவிட்டு ஒருவரின் வீட்டை அடைந்தோம். வாசற்கதவை தட்டினோம். அவரது வீட்டின் வெளியில் ஒரு திண்ணை இருந்தது. உயரமான நல்ல நிறத்துடன் ஒருவர் கதவை திறந்து நின்று கொண்டிருந்தார். நெற்றியில் நாமம் இட்டு இருந்தார்.

''வணக்கம்''

''யார் நீங்க?''

''கர்நாடக இசை கத்துக்க வந்து இருக்கோம்''

''என்ன சாதி?''

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீட்டின் வெளியிலே நின்று கொண்டிருந்தோம். உள்ளே கூட அழைக்காமல் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறாரே என எனக்குள் வருத்தமாக இருந்தது. சங்கீதம் தெரிந்தவர் இங்கீதம் கூட தெரியாமல் இருக்கிறாரே என மனதில் புலம்பினேன். நான் பதில் சொல்லும் முன்னர் கருத்தபாண்டி பதில் சொல்லிவிட்டான்.

''நான் பறையர், இவன் தேவர்''

''கீழ் சாதிக்காரங்களுக்கு எல்லாம் நான் சங்கீதம் கத்து தரது இல்லை. இது பாரம்பரிய மிக்க இசை, பிராமணர்கள் மட்டுமே கத்துக்க வேண்டிய இசை. நீங்க போகலாம்''

''புரந்தரதாசர் அப்படி நினைக்கலையே''

''புரந்தரதாசர் பத்தி என்ன தெரியும் உனக்கு''

''தியாகராஜ பாகவதர் கூட இப்படி சொல்லலையே''

''அவங்க ரண்டு பேரு பேரை சொன்னா உங்களை உள்ள விட்டுருவேனா''

பட்டென கதவை சாத்தினார் அவர். கருத்தபாண்டி என்னை முறைத்து பார்த்தான்.

''கதவை உடைக்கட்டுமா''

''வேணாம் விட்டுரு''

''யாரு புரந்தரதாசர், யாரு தியாகராஜ பாகவதர்''

''கர்நாடக இசை மாமேதைகள், புரந்தரதாசர் கர்நாடக இசை தந்தை''

''ஓ...''

கருத்தபாண்டிக்கு இவர்களைத் தெரியாமல் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏமாற்றத்துடன் அவரது வீட்டில் இருந்து கிளம்பினோம். இவர் மிகவும் சிறந்த கர்நாடக இசை ஆசிரியர் என சொன்னதால் மீண்டும் ஒருமுறை கதவை தட்டுவோம் என திரும்பினோம். இந்த முறை கதவை தட்டியதும், திறந்தார்.

''நாங்கள் வெளியில் இந்த திண்ணையில் இருந்து கற்று கொள்கிறோம்''

''நான் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லை''

அடுத்த நிமிடமே கருத்தபாண்டி அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் எறிந்தான். அலறலுடன் அவர் தலையை பிடித்தவாறு கீழே விழுந்தார். அவரது தலையில் ரத்தம் கொட்டியது. வீட்டில் எவரும் இல்லை என புரிந்தது. நான் எனது சட்டையை கிழித்து அவரது தலையில் கட்டினேன். வீட்டு கதவை சாத்திவிட்டு மயக்கத்தில் இருந்தவரை மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் தூக்கி கொண்டு சென்றோம். அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். கருத்தபாண்டியை திட்டி தீர்த்தேன். அவனோ இது போன்ற ஆட்களுக்கு இதுவே தண்டனை என்பது போல் பேசாமல் நின்று கொண்டிருந்தான். கண் விழித்து பார்த்தவரை சென்று பார்த்தோம்.

''எங்களை மன்னிச்சிருங்க ஐயா''

எங்கள் இருவரையே பார்த்து கொண்டிருந்தார். போ போ என கையை அசைத்தார்.

''கர்நாடக இசை...''

''நா ன் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்ல''

இனிமேல் அங்கே நின்று பிரயோசனம் இல்லை என கிளம்பினோம்.

''கொன்னு போட்டு இருக்கனும்''

''விடுறா''

''என்ன மனுசங்க''

''மண்ணில் வந்த உடம்பு, மண்ணில் போகும் உடம்பு, ஒருவர் எந்த சாதி என்றால் என்ன, ஒருவர் எந்த நிலையில் இருந்தால் என்ன, இசை எல்லாருக்கும் பொதுவானது''

''நான் பாட்டுக்கு பேசாம தப்பட்டையை தட்டிகிட்டே இருந்து இருப்பேன், நீ என்னவாச்சும் பண்ணு''

கருத்தபாண்டி என்னை தனியாக விட்டுவிட்டு கிளம்பி போனான். எத்தனை எத்தனையோ மனிதர்கள் கண்டேன். அவர்கள் எல்லாம் என்னை என்ன சாதி என்றே கேட்க வில்லை. உணவகத்தில் உணவு அருந்தினேன். அவர்கள் என்ன சாதி என நானும் கேட்கவில்லை. சாப்பிட்டு கொண்டு இருந்தபோது கர்நாடக இசை கற்று தருபவர் பற்றி எனக்கு எதிரில் அமர்ந்து இருந்தவரை கேட்டேன். தெரியாது என்றார். மேலும் சிலரிடம் விசாரித்து ஒரு முகவரி வாங்கி கொண்டு சென்றேன்.

வீட்டு வாசலை தட்டினேன். உயரமான ஒருவர் வாசற்கதவை திறந்தார். 

''நான் தேவர் சாதி, கர்நாடக இசை கத்துக்கிரனும்''

''புரந்தரதாசர் காலத்தில் இருந்தே இந்த சாதி கொடுமையை எதிர்த்து போராடி இருக்காங்க, இன்னுமா சாதி பத்தி பேசற, உள்ளே வா''

எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. வீட்டிற்குள் இருந்த திண்ணை ஒன்றில் அமர சொன்னார். வீட்டினுள் சென்று பழங்கள் கொண்டு வந்தார். அவரது துணைவியாரும், அவரது மகளும் உடன் வந்தார்கள். அவர்களுக்கு வணக்கம் சொன்னேன்.

''கர்நாடக இசை கத்துக்க வந்துருக்கான்''

புன்னகை புரிந்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

''இதுக்கு முன்னால எங்கேயாவது சங்கீதம் கத்து இருக்கியா''

''இல்லை''

''எத்தனை ராகம், எத்தனை தாளம் எல்லாம் தெரியுமா?''

''கொஞ்சம்''

''கர்நாடக சங்கீதம் பாடுறது, அது இதை வைச்சி தட்டுறது இல்லை''

''புல்லாங்குழல், மிருதங்கம், வீணை எல்லாம் உபயோகம் பண்ணுவாங்களே''

''ஆமா, ஆனா நீ பாட கத்துக்கிற போறியா, இல்லை இசைக்கருவிகளை இசைக்கப் போறியா''

''பாட கத்துக்கிறேன், அதோட இசைக்கருவிகளும்''

''என் பேரு ஆதிராஜன், உன் பேரு''

''ஆதி''

''இதோ பழங்கள் எடுத்து சாப்பிடு''

''இதே ஊருல ஒருத்தர் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லைன்னு சொன்னார்''

''யாரு, சீர்மலைவேதிகரா''

''பேரு கேட்கலை''

''உயரமா நாமம் போட்டுண்டு... அவா அப்படித்தான், சிலரை திருத்த முடியாது''

''இப்படி இருந்தா எப்படி கர்நாடக இசை வளரும்''

''இனிமே யாரு கர்நாடக இசைக்கு மாறப் போறா, கொஞ்ச பேரு என்கிட்டே படிக்க வராங்க. ஆனா என் பொண்ணு சினிமாவுல பாடப் போறா''

''அப்படின்னா இந்த இசை''

''தெரியலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குன்னு எத்தனையோ புரட்சி வந்தது உண்டு,  ஒடுக்கப்பட்ட இசைக்கு இசை புரட்சி எதுவும் வரலை, வெஸ்டர்ன் இசை எல்லாம் வந்துருச்சு, எதோ அங்க அங்க இசை கச்சேரி நடத்துறா, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுல இருக்காங்க. நானே என் பொண்ண கர்நாடக இசையில இருக்க வைக்க முடியல''

''எனக்கு கத்து தாங்க, நான் நிறைய பேருக்கு கத்து தாரேன்''

''ம்ம்''

கற்று கொள்ள ஆரம்பித்தேன். கடினமாகவே இருந்தது. ஸ்ருதி, லயம் எல்லாம் சரி செய்ய வேண்டும் என சொன்னார். பணம் வேண்டாம் என மறுத்து விட்டார். மாலை நேரத்தில் நம்பிக்கையுடன் ஊர் வந்தேன். கருத்தபாண்டியை தேடி சென்றேன். அவன் முழுவதுமாக மறுத்துவிட்டான். அம்மாவும் அப்பாவும் எனக்காக காத்து இருந்தார்கள். அப்பாதான் சொன்னார்.

''ஆதி, ஒரு முக்கியமான சேதிடா. நம்ம ஊரு முதலாளி விவசாய நிலத்தை எல்லாம் பட்டா போட்டுட்டு வரார், நிறைய வீடு கட்ட போறாங்களாம்''

''அப்போ விவசாயம்...''

''எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்''

இருளாகிப் போனதைக் கண்டு மனம் விம்மியது.

(முற்றும்)

Friday, 16 August 2013

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - எகிப்தியர்கள்

பாபிலோனியர்கள் குறித்து பார்க்கும் முன்னர் எகிப்தியர்கள் பற்றி கண்டு கொள்வோம். தற்போதைய எகிப்தில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து கொள்வோம். தற்போது எகிப்தில் என்னதான் நடக்கிறது என்பதற்கு மிகவும் சுருக்கமாக 'அரசு கொண்டு வரும் மத கட்டுபாடுகள் மீதான அதிருப்தி' என்றே பார்க்கப்படுகிறது. இதே எகிப்தில் தான் சில வருடங்களுக்கு முன்னர் முப்பது வருடங்கள் அரசாண்ட ஒருவரை விரட்டி அடித்தனர் மக்கள். நம்பிக்கையோடு ஒருவரை தேர்ந்தெடுக்க அவர் தலைவலியாக மாறுவதால் ஏற்படும் ராணுவ உதவியுடனான சீற்றங்கள். 

எகிப்து பிரமிடுகளுக்கு என பிரசித்தி பெற்றது. எகிப்து நைல் நதியால் நன்மை பெற்றது. எகிப்து வரலாற்றை இவ்வாறு பிரிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் வருடங்கள் முன்னர் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் இருந்த நகட கால கட்டம். மேல் எகிப்து இது நைல் நதிக்கு இருபக்கத்தில் அமைந்த பகுதி , கீழ் எகிப்து இது தற்போதைய கைரோ போன்ற இடங்கள், என்றே பிரித்து இருந்து இருக்கிறார்கள். இவ்வாறு பிரிந்து கிடந்த இரண்டு பகுதிகளை ஒரே அரசாக பிரித்த சிறப்பு மேனேஷ் எனும் அரசரையே குறிக்கும். பரோ என்றே அரசரை குறிப்பிடுகிறார்கள். இந்த காலகட்டம் ஆயிரத்து அறநூறு வருடங்கள் நிலைத்தது, இதனை தினைட் கால கட்டம் என்கிறார்கள். அப்போதைய தலைநகரம் மெம்பிஸ். என்னதான் ஒன்றாக இணைத்தாலும் எப்போது பிரிந்து செல்லலாம் என்றே முனைப்புடன் இரண்டு பகுதிகளும் இருந்து இருக்கின்றன. 

பழங்கால அரசு. இந்த தினைட் காலகட்டத்திலேயே இந்த ஒரே அரசுதனை முப்பத்தி எட்டு பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தான், கலை, கலாச்சாரம், மதம் எல்லாம் தோன்றி இருந்து இருக்கிறது. இந்த அரசர் சூரியனின் பிள்ளைகளாக போற்றப்பட்டும் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பெரிய பிரமிடுகள், கல்லறைகள் எல்லாம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் செலவழிக்கப்பட்டு சக்கரா எனும் இடத்தில் ஜோசெர் எனும் பிரமிடு நான்காயிரம் வருடங்கள் முன்னர் உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னர் ஐம்பது ஆண்டுகள் செலவழிக்கப்பட்டு ச்நேப்று எனும் பிரமிடு உருவாக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளில் உருவான சாப்ஸ் பிரமிடு. உலக அதிசயங்களில் ஒன்றானபிரமிடு இது. இது கிசா எனப்படும் இடத்தில் வேறு இரண்டு பிரமிடுகளுடன் சேர்த்து கட்டப்பட்டது. இந்த பிரமிடுகள் அடிமைகளால் கட்டப்பட்டது அல்ல. மிகவும் கைதேர்ந்த கட்டிட நிபுணர்களால் கட்டப்பட்டதுதான் என்றே வரலாறு குறிக்கிறது. 

இந்த அரசர்கள் கடவுளை பெரிதும் போற்றி இருக்கிறார்கள். கடவுளை உயர்ந்த நிலையில் வைத்து மகிழ்ந்து இருக்கிறார்கள். இவர்களுடைய கடவுளுக்கு எல்லாம் தலைகள் விலங்கு தலைகளாகவே இருக்கும். இங்கே ஒரு ஒற்றுமையை குறித்தாக வேண்டும். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் சில அவதாரங்கள் விலங்கு தலையை உடையதாகவே இருந்து இருக்கும். அப்படியே பரிணாமத்தை தொட்டு பார்த்தால் நமது மூதாதையர்கள் விலங்குகளாகவே இருந்து இருப்பதும், அதில் இருந்து பிரிந்த பிரிவுதான் நாம் மனித விலங்கு என்றும் சொல்லப்படுகிறது. 

கடவுளின் கலாச்சாரம் தொடங்கப்பட்ட எகிப்தில் நிறைய மத நிறுவனங்கள் வெவ்வேறு கடவுளை உருவாக்கி கொண்டன. ஒவ்வொரு கடவுளுக்கு என ஒரு கதை சொல்லப்பட்டது. அதில் மிக முக்கியமான கதை ஐசிஸ் ஒச்ரிஸ் பற்றியதாகும். ஒச்ரிஸ் உலகத்தையே கட்டுபாட்டில் வைத்து இருந்தபோது, அவரது பொறாமை கொண்ட சகோதரர் செட், ஒஸ்ரிசை துண்டு துண்டாக வெட்டி உலகில் எல்லா இடங்களிலும் சிதறிவிட்டானாம். இதை அறிந்த ஒச்ரிஸ் மனைவி ஐசிஸ் , ஒஸ்ரிசின் பிறப்பு உறுப்பு தவிர எல்லா பகுதியையும் எடுத்து ஒன்று சேர்த்தாளாம். அப்படி உருவாக்கப்பட்ட ஒச்ரிஸ் பாதாள உலகை காத்து வருகிறானாம். 

ஐசிஸ் மற்றும் ஒச்ரிஸ் மகன் ஹோரஸ் தனது மாமா செட் தனை எதிர்த்து போராடி இருக்கிறார். செட் மேல் எகிப்து கடவுளாகவும், ஹோரஸ் கீழ் எகிப்து கடவுளாகவும் இருந்து இருக்கிறார்கள். மேல் எகிப்து வளமானதும், கீழ் எகிப்து பாலைவனமாகவும் இருந்து இருக்கிறது. அனுபிஸ், தோத், கணும் போன்ற கடவுளர்கள் இருந்து இருக்கிறார்கள். அனுபிஸ் ஒச்ரிஸ் பாகங்களை தனது தாயுடன் சேர்ந்து ஒன்று சேர்க்க உதவியவர். தோத் நமது சித்திரகுப்தன் போல. பாவ புண்ணியங்களை எழுதுபவர். கணும் நமது பிரம்மா போல. மக்கள், உயிரனங்கள் என அனைத்தையும் தோற்றுவிப்பவர். இவர் உயிரை உருவாக்குவதுடன் ஆத்மாவையும் அதனுடன் சேர்த்து வைப்பவர். நமது நாட்டில் இருப்பது போலவே ஆத்மாவுக்கு அழிவில்லை என்றே நம்புகிறார்கள். 

இப்படி இருந்த காலகட்டத்தில் தெற்கில் இருந்து தீபேஷ் வடக்கில் இருந்து ஹெரக்லாபோளிஸ் போன்றவர்கள் எகிப்தின் இந்த பழைய அரசினை சிதறடித்தார்கள். இவர்களுக்கென தனிக்கடவுள் எல்லாம் இருந்து இருக்கிறது. இந்த காலகட்டம் மத்திய அரசு. நேண்டுஹோடேப் எனப்படும் தீபேஷ் அரசர் சிதறடிக்கப்பட்ட அரசாங்கத்தை ஒன்றிணைக்க பாடுபட்டார். அவர் செய்த முயற்சி வெற்றி பெற்று அமுன் எனப்பாடும் கடவுளை தலைமையாக கொண்டார்கள். இதற்கு காரணம் அமேநேம்ஹெட் எனப்படும் அரசர். இவரது காலத்தில் எகிப்தில் வியாபாரம் பெருகியது. நிறைய கோவில்கள், பிரமிடுகள் எழுப்பப்பட்டன. மத்திய கிழக்கு பகுதியில் எகிப்து கோலோச்சி விளங்கியது. ராணுவம், விவசாயம், அணைகள் கட்டுதல் என ஒரு வலிமைமிக்க வளமைமிக்க பேரரசாக எகிப்து விளங்கியது. ஆனால் இது அதிக நாள் நிலைக்கவில்லை. 

கிழக்கு பகுதியில் இருந்து ஹைகொஸ் எனப்படும் மக்கள் இந்த பேரரசுக்குள் நுழைந்து அவரின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தார்கள், இருப்பினும் அவர்கள் எகிப்து கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். எகிப்தில் இருந்த வம்சாவளிகள் பெரும் எதிர்ப்பை காட்டின. அஹ்மொசே எனப்படும் அரசர் இந்த ஹைஹோச்களை விரட்டி அடித்தார். இவர் பதினெட்டாவது பரம்பரையாகும். அப்போது புதிய அரசாங்கம் உருவானது. துத்மொசிஸ் எனப்படும் அரசர் சூடான், சிரியா போன்ற பகுதிகளை எல்லாம் கைபற்றினார். ஆப்ரிக்கா நாடுகளில் இருந்த வளத்தை தங்களுடன் இணைத்து கொண்டார். இவரின் மரணத்திற்கு பின்னர் துத்மொசிஸ் மகள் ஹெட்ஷ்புட் அரசு பொறுப்பிற்கு வந்தார். தன்னை மாபெரும் அரசர், தான் ஒரு ஆண் என அறிவித்தார். இவரது அரசாட்சியில் எகிப்து கோலோச்சி விளங்கியது. பெண் என்ற ஒரு காரணத்தினால் இவரது காலகட்டத்தை பூசி மேழுகிவிட்டார்கள். 

அமேன்தொப் மூவாயிரம் வருடங்கள் முன்னர் அரச பதவிக்கு வந்தார். இவரது சிலை இன்னமும் இருக்கிறது. இவரது கால கட்டத்தில் கட்டிட கலை மாபெரும் சிறப்பு பெற்றது. இவரது காலகட்டத்தில் ஒரே கடவுள் எனும் தத்துவம் கொண்டு வந்ததோடு பொற்காலம் என போற்றப்படும் அளவிற்கு போர் என இதுவும் இல்லாமல் விளங்கியது. 

மனித குல வரலாற்றிலேயே மிகவும் பழமையான, அனைவருக்கும் தெரிந்த ஒரு எகிப்திய கலாச்சாரம் மூவாயிரம் வருடங்கள் மேலாக சிறப்பு பெற்று விளங்கியது. அப்படிப்பட்ட எகிப்தியர்கள் இன்றைய நிலை வருத்தத்திற்கு உரியது. எகிப்தியர்கள் பற்றி மேலும் தொடர்வோம்.

(தொடரும்)

Thursday, 15 August 2013

தலைவலி தந்த தலைவா

தமிழகத்தில் மட்டும் இந்த 'தலைவா' எனும் தமிழ் திரைப்படம் வெளியாகவில்லையாம். அதற்கான காரணங்கள் இவையிவையென 'பொழுதுபோக்கு' ஊடகங்கள் வரிசைபடுத்திக் கொண்டே இருக்கின்றன. 

முதல் காரணம் தலைவா திரைப்படம் வெளியிடப்பட்டால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்போம் என ஒரு 'சித்தரிக்கப்பட்ட' மிரட்டல் செய்தி. அதைத் தொடர்ந்து தியேட்டர்களுக்கு எங்களால் பாதுகாப்பு தர முடியாது என கைவிரித்துவிட்ட 'பம்மல்' தமிழக காவல்துறை. அதைகண்டு பயந்து நடுங்குவதை போல 'பாவலா' செய்த திரையரங்கு உரிமையாளர்கள். 

இரண்டாவது காரணம் தலைவா படத்தின் கதாநாயகன் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விடுத்த 'நான் அண்ணா, என் பையன் எம் ஜி ஆர்' எனும் அறிக்கை. 

மூன்றாவது காரணம் 'அதிமுக வெற்றி பெற அணில் போல உதவினோம்' எனும் கதாநாயகனின் 'மறக்கப்பட்டு பின்னர் தூசி தட்டப்பட்ட' தன்னடக்கமான அறிக்கை. 

ஆனால் பாவம் தயாரிப்பாளர். திரைப்படத்தின் மூலம் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைத்தவர் எம் ஜி ஆர். அதன் காரணமாகவே திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் அடைபவர்கள் தமிழக முதல்வர், இந்திய பிரதமர் எனும் கனவு காண்கிறார்கள். தன்னை ஒரு தலைவனாக சித்தரித்துக் கொண்டு கனவு காண்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? 

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் தலைவனாக வேண்டும் எனும் ஒரு சிறு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் பலர் நாட்டிற்கு நல்லது செய்ய தலைவன் எனும் பதவி ஒரு அவசியமான ஒன்று என்றாகிறது. குடும்பத் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர், ஒன்றிய தலைவர், மாவட்ட தலைவர் இப்படி தலைவர் எனும் தலைவா கோசம் எங்கும் ஒலித்து கொண்டுதானிருக்கிறது. 

இப்படி இத்தனை தலைவர் என இருந்தாலும் அரசியல் தலைவர் எனும் 'தகுதியற்ற' சிறப்பு தலைவர் பதவி ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி அதற்கு உண்டு. காங்கிரஸ், பாஜக திமுக, அதிமுக என கட்சிகளின் தலைவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

இப்படி தலைவர் ஆசை விஜய்க்கு இருப்பது என்னவோ உண்மைதான். மக்களுக்கு உதவ வேண்டும் எனும் தனது கனவு சாத்தியப்பட நினைக்கிறார். திரைப்படத்தில் இருந்து எண்ணற்றோர் அரசியல் உலகுக்கு வந்து வெற்றி பெற முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகவே கமல் அரசியல் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கி கொண்டார், ரஜினி அரசியல் மனசுக்கு ஆகாது என அறிக்கையுடன் நிறுத்திக் கொள்கிறார். ஆனால் விஜயகாந்த், விஜய டி ஆர் போன்றோர் எல்லாம் ஒரு கட்சியை நடத்தி அந்த கட்சிக்காக அங்கீகாரம் தேடி தேடி தங்களை தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி நடத்த ஏகோபித்த மக்கள் ஆதரவு மட்டும் அல்லாது பணம் வேண்டும், ஆள் பலம் வேண்டும், மிக மிக முக்கியமாக அடிமைகள் வேண்டும். இப்படி விசுவாசிகள் எனும் கொத்தடிமைகள் இல்லாத பட்சத்தில் ஒரு கட்சியானது சர்வ வல்லமை பொருந்தியதாக ஆகாது. இதையெல்லாம் தயார் செய்ய மனோதிடம் வேண்டும். எம்ஜி ஆர் செய்து காட்டினார், ஜெயலலிதா அதை பின்பற்றுகிறார். ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் நிலை ஒரு கேள்விக்குறிதான். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. 

தமிழகத்தில் ஓரளவுக்கு எல்லாமே தன்னிறைவு அடைந்ததாக இருக்கிறது. மின்சாரம் இல்லை என்றாலும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி கொள்ளும் மனப்பக்குவம் உண்டு. சகித்து கொள்ளும் மனோபாவம் அதிக அளவில் தமிழக மக்களிடம் உண்டு. இல்லையெனில் ஒரே மாதிரியான திரைப்படங்களை மீண்டும் மீண்டும் கண்டு ரசிப்பது எப்படி? மீண்டும் மீண்டும் அதே அரசியல் கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுப்பது எப்படி? எனவே இங்கே தமிழகத்தில் ஒரு போராளி அவசியமில்லாமல் போகிறது. 

விஜய் நடித்த தலைவா எனும் திரைப்படத்தில் முதலும் கடைசியுமாய் 'Time to Lead' என்பது ஒரு அச்சுறுத்தலான விசயமாக தமிழக அரசுக்கு இருந்து இருக்குமா என்பது சந்தேகமே! ஆனால் படைப்பாளிகளை ஒடுக்க வேண்டிய அவசியம் என்ன! அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை கேவலப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்து இருக்கின்றன. அவை எல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த படத்திற்கு அப்படி என்ன ஒரு தடை. ஆந்திரா, கேரளா, வேறு நாடுகள் என இந்த திரைப்படம் திரையிடப்பட்டு இருக்கிறதே. பாவம் இரண்டு விஜய்கள். தமிழக மக்கள் ஒரு 'முற்பாதி பொழுபோக்கு' படத்தை முழுவதுமாக புறக்கணிக்க செய்துவிட்டார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

தலைவா எனும் திரைப்படத்தின் கதை ஒரு அரசியல் களத்தை சார்ந்தது. அது 'உடன் இருந்து குழி பறிப்போர்' வகையை சார்ந்தது. 'துரோகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கதை வடிவம் இது' மும்பையில் தொடங்கி மும்பையில் முடிகிறது. முதல் பாதி காதல் கலந்த நகைச்சுவை, இரண்டாம் பகுதி பழிவாங்கல் படலம். துப்பாக்கிகள் பெருகி போன இந்த புவியில் இன்னும் கத்திகளுக்கு கொண்டாட்டம் தான். 

கதாநாயகிகள் பொய் சொல்லும் பேர்வழிகள் என்பதை எப்போதுதான் தமிழ் சினிமா மாற்றி கொள்ளுமோ? சகிக்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள்போன்றே ஆஸ்திரேலியாவில் கூட இருக்கத்தான் செய்கிறதாம். கடல் கடந்து வணிகம் திரட்ட சென்றவர்கள் 'கும்பலாக' காதலுக்கு அலைவது கேலி கூத்து. 

அடேங்கப்பா, ஆஸ்திரேலியாவில் ஒரு அரைகுறை ஒரு ஹோட்டல் நடத்தி அதன் மூலம் கதாநாயகன் மனம் மயக்கி, அவரது தந்தையை வசப்படுத்துவது எப்படிப்பட்ட 'கிரியேட்டிவ் மூவ்'! மங்காத்தா எனும் திரைப்படத்தில் அஜீத் தனது காதலி மற்றும் தந்தையை ஏமாற்றுவார். இந்த கதையில் வேசம் போட்டு விஜய் ஏமாற்றபடுவார். எல்லாம் சரிதான். விசயங்களை சொல்லும் விதம் தான் படைப்பாளிகளிடம் வேறுபடுகிறது. 

அண்ணா! அன்னா ஹசாரே! படத்தின் தொடக்கத்தில் பல தலைவர்கள் பெயர் வருகிறது, அதில் போராளிகள் எல்லாம் வருகிறார்கள்.  அவர்களது பெயர்களை படிக்கும்போதே உடலில் 'ஜிவ்வென' உணர்ச்சி மேலிடுகிறது. எப்படிப்பட்ட தலைவர்கள், எப்படிப்பட்ட போராளிகள் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த உயர்ந்த உள்ளங்கள் அவை, ஆனால் இப்போதைய தலைவர்கள் மக்களை ஒடுக்கவே தலை எடுக்கிறார்கள். 

விஜய், உங்களுக்குள் மக்களை வழி நடத்த வேண்டும் ஒரு எண்ணம் இருப்பின் அதற்குரிய உரிய முயற்சிகள் எடுத்தாக வேண்டும். படத்தில் காட்டியது போன்று நிஜ வாழ்வில் கூட சித்தப்பர்கள் எட்டப்பர்களாக இருப்பார்கள். எப்படி இருப்பினும் தலைவா எனும் பட்டம் பெரிய தலைவலிதான். 

அந்த தலைவலியை தாங்கி கொள்ளும் சக்தி இருப்பின் 'Time to Lead...'




Wednesday, 14 August 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 6

இலகிமா, அணிமா, மகிமா, கரிமா, பிராப்தி, பிரகஷ்யம், இசித்வம், வசித்வம் என்பதாக இந்த எட்டு சித்திகள் எண்ணங்கள் பற்றிய ஒன்றுதான். 

இசித்வம் எனும் சித்தியானது இறந்தவர்களை பிறக்க வைக்க கூடிய தன்மையது என்றே சொல்லப்படுகிறது. இந்த சித்தியின் மூலம் மொத்த உலகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கூடிய வல்லமை கிட்டும் என்றே சொல்லப்படுகிறது. இது கூட ஒருவகையில் சாத்தியம் என்றே கருதலாம். ஒரு தலைவனுக்கு கட்டுப்படும் தொண்டர்கள் இருப்பதை போல எல்லோரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டவர்கள் மூலம் இது சாத்தியம். ஆனால் இந்த உலகம் அப்படி ஒரு வசீகர தன்மை உடைய மனிதரையோ, சித்தரையோ இதுவரை கண்டதில்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்கு ஒவ்வொருவரும் ஒரு தெய்வம் என கொண்டாட வேண்டிய சூழல் இருக்கிறது என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி. தெய்வத்தன்மை உடைய சித்தி இது எனப்படுகிறது. 

வசித்வம் என்பது ஆளுமை, அதாவது பிற உயிரினங்கள், பிற கோள்கள் என இந்த பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தக் கூடிய ஆளுமை. அறிவியலும் இதைத்தான் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. செயற்கை தனமாக செய்து விடுவது. விலங்கினங்கள், மனிதர்கள் என கட்டுபாட்டில் கொண்டு வந்து தனக்கு கட்டுப்பட கூடியவர்களாக மாற்றிவிடுவது. 

இத்தனை சித்திகள் எல்லாம் ஒரே ஒரு விசயத்தில் அடங்கி போக கூடியவை தான். எண்ணங்கள். சித்தர்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி இருப்பவர்களாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். மாந்திரீகர்கள் எனப்படும் மந்திரவாதிகள் செய்யும் கண்கட்டு வித்தை போன்றது அல்ல இந்த சித்திகள். இந்த மந்திரவாதிகள் கூட தங்களது எண்ணங்களால் மட்டுமே அனைத்தையும் கட்டுபாட்டில் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். இதில் எத்தனை உண்மை என்பது எனக்கு புரியாத ஒன்று தான். 

தண்ணீரில் நடக்ககூடிய மனிதன். இதற்கு எத்தனயோ காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் இவர் தண்ணீர் மீது நடந்தார் என்றே காட்டப்படுகிறது. ஆனாலும் இந்த சித்தர்கள் செய்த பல விசயங்கள் எப்படி விவாதத்திற்கு உரியதோ அதைப்போலவே இவரது செயல்களும் விவாதத்திற்கு உரியது என்றே ஒருவர் சொல்கிறார். அதாவது அனைவரும் மெய்மறந்து பார்த்து கொண்டிருப்பார்கள், அந்த வேளையில் வேறொரு விசயம் நடக்கும் என்றே சொல்லப்படுகிறது. 


இதனை நிரூபிக்கும் வகையில் ஒருவர் சொன்ன விசயம் இது. அதாவது எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்ற படுகிறார்கள் என்றே சொல்லப்படுகிறது. இவரது மந்திர ஜாலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதை கண்டு களித்து, இந்த திறமையை பாராட்டி செல்வது சரிதான், ஆனால் ஏமாற வேண்டிய நிர்பந்தம் எதுவும் இல்லை. ஐயோ ஏமாற்றுகிறார்கள் என கத்த வேண்டிய அவசியமும் இல்லை. அது மந்திரம், தந்திரம், மாயாஜாலம். அவ்வளவுதான். 


நம்மில் பலர் மந்திரவாதிகள் என தெரிந்து கூட, அவர்கள் செய்யும் மந்திரங்கள் தம்மை பாதிக்கும் என்கிற ஒரு மன பதட்ட நிலைக்கு சாமானியர்களை கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் உடலை பாதிக்கும் பொருள்களை இந்த மந்திரவாதிகள் சாப்பிட சொல்லி தந்துவிடுகிறார்கள். செய்வினை என்றெல்லாம் சொல்லி கிராமங்கள் அல்லோகலப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. 

நம்மிடம் இருக்கிறது சித்தி. அது நமது எண்ணங்களால் ஆனது சித்தி. இறைவன் மீது மனதை ஒருமுகப்படுத்தி நல்ல விசயங்களே நடக்கும், நல்ல விசயங்களை மட்டுமே செய்வோம் என்கிற உறுதிப்பாடு அவசியம். அனைவருக்கும் இறைவன் மீது பற்று வராது என்பதற்காக செய்யும் தொழிலே தெய்வம் என சொல்லி வைத்தார்கள். 

நமது செயலில், சிந்தனையில் எண்ணங்களை மேம்படுத்தி இவ்வுலகம் செழிப்புற வாழ்வோம். நன்றி வணக்கம். 

(முற்றும்)




Tuesday, 13 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 17

''அத்தை  ரொம்ப நல்லா சமைச்சி இருந்தாங்க''

எனது கவனம் எல்லாம் காயத்ரியின் அக்காவின் செயல்பாட்டில் இருந்தது.

''முருகேசா, நான் சொல்றது காதுல வாங்கலையா''

''அம்மா எப்பவும் நல்லா சமைப்பாங்க''

எந்த ஒரு ஜீவனும் இல்லாமல் பேசி வைத்தேன். அதற்குள் அம்மா, பால் காய்ச்சி கொண்டு வந்தார்கள்.

நாங்கள் மூவரும் மாடிக்கு வந்தோம். சுபத்ராவிடம் சொல்வதா வேண்டாமா எனும் யோசனையுடன் காயத்ரி அக்கா விசயத்தை காயத்ரியின் அனுமதி இல்லாமல் சொல்லி முடித்தேன்.

''இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்சன்''

''சுபா, என்ன சொல்ற நீ''

''அவங்களுக்கு பிடிச்ச லைஃப் தேடிக்கிட்டாங்க, இதுல என்ன இருக்கு''

''ஒரு முறை இருக்கு சுபா''

''என்ன முறை''

''வாழ்க்கை முறை, நெறிமுறை''


''ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்து கொண்டு, தனது சந்ததிகளை பெருக்குவதில் மிகவும் குறியாக இருக்கும், அப்படிப்பட்ட உயிரினமே இந்த பூமியில் வாழ தகுந்த அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும். அதுமாதிரிதான், மனுசங்களும். தனக்கு ஏதாவது சாதகம் நடைபெறக் கூடியதா இருந்தா அதுபக்கம் தனது நிலையை வைத்து கொள்வார்கள். இப்படி வாழ்ந்து கொண்டிருந்தவங்க ஒரு சமூகமா அமைஞ்சப்போ, இந்த மாதிரி தனக்கு மட்டுமே சாதகமா நடந்து கொண்டிருந்ததை ஒரு சிலரால் சகிச்சிக்க முடியலை. அதனால கொண்டு வரப்பட்டதுதான் நெறிமுறைகள், மரியாதை, கலாச்சாரம் எல்லாமே. ஆனா பரிணாம விதிப்படி இது எல்லாம் சரியானதுதான்''

சுபத்ராவின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது, ஆனால் அதுதான் நிதர்சனமோ என எண்ண வைத்தது.

''சுபா, நீ சொல்றது சரிதான், ஆனா...''

''என்ன ஆனா...  இப்போ நீ காயூவை காதலிக்கிறே, நாளைக்கே நீ காயூவை விட்டுட்டு வேற பொண்ணோட வாழ மாட்டேன்னு எப்படி உன்னால உறுதியா சொல்ல முடியும். ஆனா அப்படி நடக்காது, நடக்க கூடாதுன்னு நீங்க இரண்டு பேருமே முடிவோட இப்போ இருப்பீங்க, அப்படிப்பட்ட நினைவுகளுக்கு இடையூறு வந்தா என்ன பண்ணுவீங்க, நீங்க இரண்டு பேரும் முயற்சி பண்ணுவீங்க, எந்த விசயம் டாமினேட் பண்ணுதோ அதுவே கடைசியில ஜெயிக்கும், உதாரணத்திற்கு என்னை உனக்கு ஒரு போட்டியானவளா காயூ இப்போ நினைச்சிட்டு கலங்கிட்டு இருப்பா''

இப்படி சுபத்ரா சொல்வாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எனக்கு மனதில் எவரோ கடப்பாரை கொண்டு பெயர்ப்பது போன்று இருந்தது. காயத்ரியின் முகம் கூட சற்று மாறிப் போனது. திடீரென சுபத்ரா ஆங்கிலத்திற்கு மாறினாள்.

''This world is full of uncertainties, anything can happen to anyone at anytime. However the probability of that happening is very limited on that given occasion and on that given situation''

''ரொம்ப தத்துவம் எல்லாம் பேசற சுபா. நீ எத்தனை நாளைக்கு இந்த ஊருல இருக்க போற, நீ போன காரியம் என்ன ஆச்சு''

''முருகேசா,  என்ன பேச்சை மாத்துற. இதைத்தான் இப்போ சொன்னேன், உனக்கு ரொம்ப அசௌகரியமா இருக்குல. எது எப்ப வேணும்னாலும் நடக்கும், நடக்க வேண்டிய சந்தர்ப்பம் அமையனும், அமைச்சிகிரனும். இப்போ you feel me as a threatening to your relationship''

காயத்ரிக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''சுபா, என்ன பேசுறீங்க நீங்க, உங்களுக்கு முருகேசுவை பிடிச்சி இருந்தா நேரடியா பேசுங்க, அதைவிட்டுட்டு சுத்தி வளைச்சி பேசறீங்க. நானே என்னோட அக்கா பண்ணினது பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கேன், நேரம் காலம் புரியாம பேசறீங்க''

''காயூ, ஆமா நான் முருகேசனை காதலிச்சேன், இன்னமும் காதலிக்கிறேன், அவன் மனசை மாத்துறேனா இல்லையா பாரு, இந்த ஊருலதான் இன்னும் ஒரு மாசம் இருப்பேன், தேவைப்பட்டா ஒரு வருசம் கூட இருப்பேன். என்ன நடக்குதுன்னு பாரு, வரேன் பை''

சுபத்ராவின் பேச்சு எனக்கு கனவில் நடந்தது போன்றே இருந்தது. அவ்வாறு பேசியவள்  வேகமாக கிளம்பினாள்.

''சுபா ஒரு நிமிசம் உட்கார், நீ என்ன பேசினனு தெரிஞ்சிதான் பேசினியா. படிக்கிற காலத்தில ஒரு நல்ல பிரண்டா பழகிட்டு இப்படி பேசற, அதுவும் காயூ முன்னால''

''ஏன், காயூ இல்லாதப்ப பேசி இருந்தா இனிச்சி இருக்குமா, ஆசை ஆசையா உனக்கு சோறு கொண்டு வருவேனே, உனக்கு ஒன்னுனா நான் ஓடி வருவேனே. என்னோட காதல் உனக்கு புரியலையா! I will take you away from her, this is for sure. Bye''

சுபத்ரா காயத்ரியின் அக்கா போனது போலவே வேகமாக கீழிறங்கி சென்றாள். நாங்களும் கீழிறங்கினோம். என் அம்மாவிடம் சென்று வருகிறேன் அத்தை என சொல்லிவிட்டு கிளம்பினாள். சிறிது நேரம் கழித்து என் அப்பா வந்தார். என் அப்பாவிடம், அம்மாவிடம் சுபத்ரா பற்றிய விசயத்தை சொல்லி வைத்தேன். அம்மாவிற்கு மிகவும் கோபமாக இருந்தது. அப்பா யோசனையோடு இருந்தார்.

''என்னப்பா பண்ணலாம்''

''என்கிட்டே கேட்டா எப்படி, நீங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தா அவ என்ன பண்ண முடியும்''

''முருகேசு, நீ கவலைப்படாத, அவளோட காலை நான் ஓடிச்சி விடுறேன், அடுத்தவாட்டி வரட்டும், நல்ல பொண்ணுன்னு நினைச்சா இப்படியா பேசிட்டு போறா''

''அம்மா, கால் எல்லாம் ஒடிக்க வேண்டாம். அப்பா, காயத்ரியோட அக்கா வீட்டை விட்டு கிளம்பி போய்ட்டாங்க, ரங்கநாதன் வந்து கூப்பிட்டு போய்ட்டார், உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க''

''என்ன சொல்ற''

''ஆமா, இனிமே வரமாட்டாங்க, அப்படியே கல்யாணம் பண்ணி வாழ போறாங்க''

''என்னம்மா காயத்ரி இது எல்லாம்''

காயத்ரி அழத் தொடங்கினாள். அவளுக்கு எத்தனை வலிக்கும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

''நீ ஏன்மா அழற, அதுதான் சரின்னா நல்லா இருந்துட்டு போகட்டும், கல்யாண தேதி இடம் தெரிஞ்சா போயிட்டு வருவோம். நீ கவலைப்படாதம்மா''

அப்பா ஆறுதல் வார்த்தை சொன்னார். அம்மா காயத்ரியின் அருகில் வந்து அமர்ந்தார்கள்.

''இங்க பாரு காயத்ரி, நீ எதை நினைச்சியும் மனசை குழப்பிக்காத, உன்னை பத்திரமா பாத்துக்க வேண்டியது எங்களோட பொறுப்பு. இந்த வயசுல உனக்கு இத்தனை சோதனையா? கவலைபடாத  நாளைக்கு ரங்கநாதன் வீட்டுக்கு போவோம், உன் அக்காகிட்ட பேசுவோம். சந்தோசமா இருக்கட்டும், எப்ப இருந்தாலும் அந்த வீட்டுக்கு போகப் போற பொண்ணுதான''

காயத்ரி சற்று சமாதானம் அடைந்தது போன்றே தெரிந்தது. நானும் காயத்ரியிடம் உறுதி கொடுத்தேன். நான் காதலித்த ஒரே பெண் காயத்ரி மட்டுமே என்பதை சத்தியம் செய்தேன். இருப்பினும் சற்று பயம் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது. அதிகாலையில் காயத்ரியின் முகம் தனை பார்த்தபோது இரவெல்லாம் அழுது இருக்க கூடும் என்றே காட்டியது.

காலையில் நாங்கள் நால்வரும் ரங்கநாதன் வீட்டிற்கு போனோம். ரங்கநாதனின் அம்மாவிடம் பேசினோம். அவர்கள் காயத்ரியின் அக்கா அவர்களுடன் இருப்பதையே விரும்பினார்கள். காயத்ரியின் அக்கா தான் அவ்வாறு கிளம்பி வந்தமைக்கு வருத்தம் தெரிவித்தாள். திருமணத்திற்கு கட்டாயம் அழைக்கிறோம் என சொன்னார்கள். காயத்ரி, அவளின் அக்காவிடம் தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தாள். அப்போது சுபத்ரா அங்கே வந்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அத்தை என்றே ரங்கநாதனின் அம்மாவை அழைத்தாள். பேசினாள். தனியாக பேசிவிட்டு காயத்ரியும் அவளது அக்காவும் திரும்பி வந்தார்கள். காயத்ரிக்கு அங்கே சுபத்ராவை கண்டதும் அச்சத்துடன் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டு இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். வீட்டு வாசலை கடந்து கொண்டிருந்த போது, சுபத்ரா காயத்ரியிடம் வந்து சொன்னாள். எனக்கு மெல்லிதாக கேட்டது.

''உன்னோட அக்கா வாழ்க்கை என் கையில, ரொம்ப வசதியா போச்சு''

சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள். நாங்கள் நடக்க ஆரம்பித்தோம், காயத்ரியின் உள்ளம் நடுங்கியதை என் உள்ளம் நடுக்கத்துடன் கண்டது.

(தொடரும்)

Thursday, 8 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 1

எனக்கு இப்போது பதினெட்டு வயது. கருகருவென கருத்த முடி போன்றே எனது கருத்த தேகம். கொழுப்பு இல்லாத தசை என சொல்லும்படியான உடல்வாகு. பளபளக்கும் கண்கள், கூரிய காதுகள். விவசாயம்தான் எனது தொழில். பெரிய நகரம் என்று சொல்லாவிட்டாலும், நகரத்து தொனியுடன் உள்ள ஊர்தான் என்னுடையது. தனித்தனியாக இருந்த கிராமங்கள் எல்லாம் இந்த இருபது வருடத்தில் ஒன்றாகிப் போனது. சிறுவயதில் இருந்தே இசை பற்றிய ஆர்வம் அதிகம் இருந்தது. எனது இசை குறித்த ஆர்வம் கண்டு இசை குறித்த புத்தகம் ஒன்றை எனக்கு ஆறு வயது இருக்கும்போது எங்கள் ஊர் டில்லி தாத்தா தந்தார். நான் ஐந்து வயதில் அவ்வளவு நன்றாக தமிழ் வாசிப்பேன் என்று அம்மா பெருமையாக சொல்வார். அவர் உயிரோடு, ஊரோடு இருந்து இருந்தால் எனக்கு இசையை கற்று தந்து இருந்திருப்பார். அந்த வாய்ப்பு கிட்டாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.

இப்போதெல்லாம் கூட என்னிடம்  நீ இந்த படத்தோட பாட்டு கேட்டியா, அந்த படத்தோட பாட்டு கேட்டியா என நண்பர்களின் அன்புத் தொல்லை என்னை இலகுவாக விடுவதில்லை. நான் சினிமா பாடல்கள் எல்லாம் கேட்பது இல்லை என்று சொன்னால் என்னை கேலி செய்வார்கள் என்று கருதியே நான் மனம் நிறைந்து அவர்களிடம் ஆமாம் கேட்டேன் என பொய் சொல்லி விடுவதுண்டு. பத்து வயதில் இருந்து இதுவே பழக்கம் ஆகிப் போனது. இசை என்பது இரைச்சல் சத்தம் போலவே கேட்டது எனக்கு. பாடல் பாடுபவர் காட்டு கத்தல் கத்துகிறார் என்றே எண்ணம் இருந்தது. எனக்கு எட்டு வயது இருக்கும்போது உன்னை லூசுன்னு ஊருல பேசிக்கிறாங்க என ஒரு அண்ணன் சொன்னபோது எனக்கு அன்று முதன் முதலில் கண்ணீர் வந்தது. ஒரு தாளம், ஸ்ருதி, ராகம் இல்லாம் என்ன பாடல், என்ன இசை என்றே நான் நினைத்துக் கொண்டேன், இன்னமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சிறு வயதில் இருந்து நான் பார்த்தது என்னவெனில் எவரேனும் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதையும் மீறி, பேருந்தில் பயணம் செய்தாலோ அல்லது சாலையில் நடந்து செல்லும்போதோ, தேநீர் கடையில் தேநீர் பருகும்போதோ சினிமா பாடல்கள் வந்து எனது காதில் எனது அனுமதி இல்லாமல் நுழைந்து விடுகின்றன.  என்னமா மியூசிக் போட்டுருக்கான் பயபுள்ள என இசை மாமேதைகள் போன்றே ஒவ்வொரு நண்பரும் பேசிக்கொள்ள எனக்குள் 'குபுக்' என சிரித்து கொள்வதுண்டு. இசையை பற்றி என்ன கற்று கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்?

எனது பால்ய பருவத்தில் இருந்தே எனது வீட்டில் கூட என் அம்மா பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் பாட்டு கேட்காமல் சமைப்பதே இல்லை. எனக்கு கூட ஆராரோ பாடியே வெறும் தரையில் தூங்க வைத்ததாக பாட்டி முதற்கொண்டு கதை சொல்வார்கள். எனக்கு அந்த ஆராரோ எல்லாம் காதில் விழுந்ததாக நினைவில் இல்லை. அதைவிட  வயல் வரப்புகளுக்கு போனால் அங்கே வக்கணையாக பேசிக்கொண்டு ஏலேலோ ஐலசா என அலுப்பு தீர பாடிக் கொண்டதை கண்டது உண்டு, அதை நாட்டுப்புற பாடல் என்றே சொல்லி வைத்து இருந்தார்கள். ஆனால் அவை எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடித்தமானதாக இல்லை. நினைத்த நினைப்புக்கு இழுத்துக் கொண்டு பாடுவது என்ன பாடலா?

நிலா நிலா ஓடிவா, கை வீசம்மா கை வீசு தாண்டி பாபா பிளாக் சீப் என்றெல்லாம் பள்ளியில் படித்தபோது எரிச்சலாகவே இருந்தது. நீ எல்லாம் என்ன ஜென்மமோ என்றே அம்மா பலமுறை திட்டியதுண்டு. ஒரு நல்ல பாட்டு கேட்கமாட்டேன்கிற என்றே அலுத்து கொள்வார்கள். பாரதியார் பாட்டு  கூடவா உனக்கு பிடிக்கவில்லை என்றே அம்மா ஒருநாள் என்னை அடியடி என அடித்து விட்டார்கள். ஒருமுறை பூனை சட்டி உருட்டுவதில் இசை இருக்கிறது என அம்மா சொன்னபோது எங்கே என்ன தாளம் என சொல்லும்மா பார்க்கலாம் என்றே அம்மாவிடம் சண்டை போட்டது உண்டு. ஆனால் வீட்டில் இருந்த வறுமை காரணமாக பாடல் சொல்லித் தரும் பாட்டு ஆசிரியர் எவரும் சுற்று வட்டாரத்தில் இல்லை என்றே என் அம்மாவும் அப்பாவும் என்னை பாடல் கற்றுக் கொள்ள அனுமதி மறுத்து விட்டார்கள்.

ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கு என மேளம், நாதஸ்வரம் என வருபவர்களிடம் என்ன தாளத்தில் மேளம் இசைக்க இருக்கிறீர்கள், என்ன ராகத்தில் பாட இருக்கிறீர்கள் என கேட்டபோது இது பரம்பரை ஞானம், இதில் தாள கதி, ராகம் எல்லாம்  என்ன தேவை இருக்கிறது என்றே முறைத்து பார்ப்பார்கள். நாதஸ்வரம் வாசிக்க வருபவர்கள் வாசிப்பதை கேட்டு எனக்கு இருப்பு கொள்ளாது. 

பறை இசை என்றே எனது நண்பன் கருத்தபாண்டி ஒருமுறை அடிக்கும்போது என்ன தாளம் சொல்லு என்றே நான் கேட்க எனது கையில் குச்சிகள் கொடுத்து அடி தாளம் வரும் என்றான். அவனது அப்பாதான் யாரேனும் எங்கள் ஊரில் இறந்துவிட்டால் அவரது குழுவோடு வந்து பறை இசை அடிப்பார். என்ன நடை, என்ன தாளம் என்றே அவரிடம் ஒருமுறை கேட்டேன். என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு தெரியலைப்பா, பரம்பரையா அடிச்சிட்டு வரோம் என்றே சொல்லி விட்டார். அவரைப் போலவே கருத்தபாண்டியும். இப்படி நான் தாளம், ராகம் என்றெல்லாம் கேட்பதை கண்டு அம்மாவிடம் வந்து உன் வீட்டு பையனுக்கு புத்தி பேதலிச்சு போச்சோ என்றே சிலர் திட்டிவிட்டு போவார்கள். அம்மாவும் ஏன்டா இப்படி இருக்க என்றே கோபம் கொள்ளாத நாள் இல்லை.

அஞ்சாம் வகுப்பு வரை தான் என்னால் படிக்க முடிந்தது. அதற்கடுத்து படிக்க எனக்கு வாய்ப்பே அமையவில்லை என்பதை விட வறுமை என்னை வறுத்து எடுத்து விட்டது. காடு வேலைகள், வீட்டு வேலைகள் என எடுபிடியாகிப் போனேன். ஒரு நூலகம் செல்ல வேண்டும் என்றால் வேறொரு ஊருக்கு நான் ஒன்றரை மணி நேரம் நடந்து போனால் தான் உண்டு. எவரேனும் சைக்கிளில் சென்றால் தொத்திக் கொள்வேன். இந்த இருபது வருடங்களில்  நான் நூலகம் சென்ற தினங்கள் மிக மிக குறைவுதான். இசை பற்றிய புத்தகங்கள் தேடினால் ஒன்றுமே கிடைக்காது. அதன் காரணமாகவே எனக்கு ஆர்வம் குறைந்து போனது. மேலும் நிறைய வேலை இருக்கும், வேலை முடித்ததும் அலுப்பு வந்து ஒட்டிக் கொள்ளும்.

எப்போது பள்ளி செல்வதை நிறுத்தினேனோ அப்போதே எவரிடமும் தாளம், ராகம் பற்றி எல்லாம் கேட்பது இல்லை. ஒருமுறை காலண்டரில் இருந்த சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையை பார்த்து கண்கள் கலங்கி நின்றேன். 'எவர் ஒருவர் வீணையை கற்றுக் கொண்டு அதை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார்களோ  அவர்களுக்கு மோட்சம் கிட்டும்' என்றே படித்து இருக்கிறேன். வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன், மோட்சத்திற்காக அல்ல!

எனக்கு பதினைந்து வயது இருக்கும். ஒருமுறை நூலகத்தில் நாச்சியார் திருமொழி என ஒன்று படித்தேன். அதில் கனாக் கண்டேன் என நாச்சியார் எழுதியதை படித்தேன்.

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

நானும் அப்போது கனவில் மிதந்தேன். மத்தளம் எந்த தாளத்தில் கொட்டி இருப்பார்கள். எந்த நடையை பயன்படுத்தி இருப்பார்கள். சங்கு என்ன ஜதியில் ஒலி த்து இருக்கும், இதையெல்லாம் எதற்கு நாச்சியார் விவரிக்காமல் போனார் என்றே ஆதங்கப்பட்டேன். மந்திரங்கள் என்ன ராகத்தில் அமைந்து இருக்க கூடும், அதை எப்படி ஓதி இருப்பார்கள் என்றே அன்று யோசித்தேன்.

ஒருமுறை 'சுத்த கர்நாடகமா இருக்கானே உன் பையன்' என அம்மாவிடம் ராஜு மாமா சொன்னது எனக்கு வலித்தது. இத்தனை வருடங்கள் உழைத்ததில் அக்காக்களின் திருமண செலவுக்கே பணம் செலவழிந்தது. அம்மா, அப்பாவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் எனும் கனவு அவர்களுக்கு வயதாக வயதாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனது.

இன்று எப்படியும் எனது இசை பற்றிய கனவை அம்மாவிடம் பேச வேண்டும் என்றே முடிவு செய்தேன்.

''இப்போதான் வரியா இருடா காபி போட்டு வரேன்''

''அம்மா 'காபி' அப்படிங்கிறது ஒரு ராகம் தெரியுமாமா?''

அம்மா என்னை ஒரு முறை முறைத்துவிட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் பாலில்லாத காபி போட்டு வந்தார்கள்.

''அம்மா என் பேரு எதுக்கு ஆதி அப்படின்னு வச்சீங்க. ஆதி ஒரு தாள வகைம்மா''.

சட்டென சிந்தாமல் சிதறாமல் காபியை வைத்துவிட்டு என்னை முறைத்தார்கள்.

''என்ன தவம் செய்தனை யசோதா 
என்ன தவம் செய்தனை 
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மாவென்றழைக்க''

நான் முதன் முதலில் அம்மாவிடம் வரிகள் வாசித்தேன். முறைத்து பார்த்த அம்மா அப்படியே என் அருகில் அமர்ந்தார்கள்.

''நான் இசை கத்துக்கிறனும்மா''

அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டேன்.

''யார் சொல்லித் தருவாடா''

''பரப்பிரம்மம்''

''யாருடா  அவரு?''

அம்மாவின் அந்த கேள்வி என்னுள் என்ன பதில் சொல்லிவிட உன்னால் முடியும் என்றே கேட்பது போலிருந்தது. பையில் இருந்த தாளினை எடுத்தேன். வாசித்தேன்.

''போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 
கங்காதர சங்கர கருணாகர 
மாமவ பவ சாஹர தாரக 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

நிர்குண பரம்ப்ரம்ஹ் ஸ்வரூப 
கமா கம பூத பிரபஞ்ச ரஹித 
நிஜ குஹ நிஹித நிதாந்த 
ஆனந்த அதிசய அக்ஷய லிங்கா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

திமித திமித திமி திமி கிட தக தோம் 
தோம் தோம் தரிகிட தரிகிட கிட தோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா 
நித்ய நிரஞ்சன ந்ருத்ய நடேசா 
ஈசா, சபேசா, சர்வேசா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ' 

வாசித்து முடித்ததும் அம்மாவின் முகத்தை பார்த்தேன். நான் வாசித்தது பாடியது போன்றே அம்மாவிற்கு இருந்து இருக்க வேண்டும்.

''நல்லா பாடுறடா, வரி ஒண்ணுமே விளங்கலியே. யாராவது பாட்டு சொல்லி கொடுக்கிறவங்க இருந்தா போ சேர்ந்துக்கோடா''

''நிசமாத்தான் சொல்றியாம்மா''

''ஆமாடா, உனக்கு பாட்டு எதுவுமே பிடிக்காதேடா, இப்போ எப்படிடா''

மீண்டும் ஒரு தாளை எடுத்தேன். வாசித்தேன்.

''உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா 
உலகெலாம் ஈன்ற அன்னை 
உன்னையல்லால் வேறே கதி இல்லை அம்மா''

''டேய் ஆதி, ரொம்ப நல்லாருக்குடா''

சந்தோசம் என்னில் பொங்கியது. அம்மா தந்த காபியை அருந்திவிட்டு கிளம்பினேன்.

'போ, சம்போ சிவசம்போ ஸ்வயம்போ''

இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை என்ற பாரம்பரியமிக்க இசை உண்டு. இந்த கர்நாடக இசையை ஒரு சாரர் மட்டுமே கற்று கொள்ளும் அளவுக்கு தனிப்படுத்த பட்டது. பறை இசை அடிக்கும் கருத்தபாண்டியை கூப்பிட்டேன்.

''என் கூட வரியா''

''எங்கே''

''இசை கத்துகிருவோம்''

தப்பட்டையை எடுத்தான். அடித்தான்.

''இதைவிட என்ன கத்துக்கிரனும்''

''நிறைய இருக்கு, வா என் கூட''

''இரு சொல்லிட்டு வரேன்''

நானும் கருத்தபாண்டியும் ஒரு நகரம் நோக்கி விரைந்தோம். நான் வைத்து இருந்த ஐந்து பாடல் தாள்களில் ஒன்று மட்டும் காற்றில் பறந்து கொண்டிருந்தது. என்ன பாடல் உடைய தாளாக இருக்கும் என்றே பார்த்தேன். பறந்து கொண்டிருந்த தாளில் எழுதிய வரிகள் 

''உன்னைத் தேடி - இசையே 
 உன்னைத் தேடி தேடி 
உன்னை காணாமல் இளைத்தேன்'' 

இறைவனை மாற்றி இசை என்றே குறித்து வைத்தேன். 

(தொடரும்)

Wednesday, 7 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 16

நான் ஒருவேளை காயத்ரியை சந்திக்காது போயிருந்தால் எவரை காதலித்து இருப்பேன், அல்லது எனக்குள் காதல் என்பதே வந்து இருக்காதோ என்றே எண்ணத் தோன்றியது.

காதல் எப்படி வரும்? காதல் எதற்கு வரும்? காதல் ஒரு கர்ம வினை என்றே மனதில் திட்டமிடும் அளவுக்கு தள்ளப்பட்டு இருந்தேன். மாலை சந்திக்கிறேன் என்று சொன்ன சுபத்ராவையும் காணவில்லை.  கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம், காயத்ரியிடம் எதுவும் அதிகம் பேசாமல் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிக்கு போனேன்.

கர்ம வினை என்பது உண்டு எனில் அதற்கான முற்பிறவியும், அடுத்து வரப்போகிற பிறவியும் இருந்துதான் தீர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இந்த கர்ம வினை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்ற எண்ணம் தோணியது.

மாடியில் அமர்ந்தோம், வானத்தை பார்த்தோம், நட்சத்திரங்கள் எண்ணினோம் என்றெல்லாம் மனம் ஓடவில்லை. காதல் கர்மவினையாக இருக்கக் கூடுமோ? அப்படியெனில் நான் சென்ற பிறவியில் காயத்ரியை காதலித்தேனா? இப்படி என்னுள் எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருந்தபோது காயத்ரி மாடிக்கு வந்தாள்.

''என்ன காலேஜுல இருந்து வந்த பிறகு எதுவும் பேசலையே முருகேசு''

''அதெல்லாம் ஒண்ணுமில்லை காயூ, காதல் கர்ம வினையா?''

''ஆமாம் காதல் கர்ம வினைதான்''

''என்ன காயூ சொல்ற''

''புராணங்கள் எல்லாம் படிக்கிறது இல்லையா?''

''கதை சொல்றியா?''

''பீஷ்மர் பத்தி தெரியுமா?''

''இப்போ என்ன அதுக்கு''

''காதல் ஒரு கர்ம வினை''

''காயூ, போரடிக்காதே''

''இந்த பீஷ்மர் தனது முற்பிறவியில் தனது காதல் மனைவிக்காக ஒரு பசுவை வசிஷ்டர் முனிவரிடம் இருந்து திருடினதால தனது அடுத்த பிறவியில் யார் மீதும் காதல் கொள்ளாத தன்மை உடையவரா இருப்பார் அப்படின்னு வசிஷ்டர் சாபம் விட்டுட்டார், இதுதான் அந்த பிறவியில் செய்த திருட்டு பாவத்திற்கு இவருக்கு அடுத்த பிறவியில் கிடைச்ச தண்டனை''

''ஒரு பசுவை திருடினதுக்கா இந்த சாபம்''

''ஆமா''

''ஆமா, காயூ, அப்படின்னா அந்த பசுவை திருடுறதுக்கு முற்பிறவியில் ஏதாவது செஞ்சி இருப்பாரோ''

நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள் காயத்ரி. நானும் எனது கேள்வியை மெச்சிக் கொண்டேன்.

''என்ன காயூ பதிலை காணோம், உன்னை நான் போன பிறவியில் காதலித்து இருப்பேனோ?''

''இறைவனுடைய அவதாரங்கள் எல்லாம் அப்படித்தான் சொல்றது, காதல் ஒரு கர்மவினைதான்''

''காயூ, என்னை நீ பார்க்காம இருந்து இருந்தா யாரை காதலிச்சி இருப்ப?''

''தெரியலை''

''காதலிச்சி இருந்திருப்பியா இல்லையா?''

''தெரியலை''

''சரி, என்கிட்டே அந்த கேள்வியை கேளு''

''நீ என்ன பண்ணி இருந்து இருப்ப''

''யாரையும் காதலிச்சி இருந்து இருக்க மாட்டேன் காயூ''

''முருகேசு...''

''காதல் கர்மவினையாகவே இருக்கட்டும், நீ மட்டுமே எனது காதலியா எல்லா பிறவியிலும் இருப்ப, அது நிச்சயம்''

''முருகேசு...''

காயத்ரியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதை கண்டு என் மனம் வாடியது.

''என் அப்பா கூட இப்படித்தான் என் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாருன்னு அம்மா சொல்லி சந்தோசப்படுவாங்க, ஆனா என்ன நடந்தது பாத்தியா. அது கர்மவினைதானு மனசை தேத்திக்கிறேன்''

காயத்ரியின் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். ஆனால் அவளது மனதில் ஏற்பட்ட காயத்தை துடைக்க முடியாது கலங்கினேன்.

''காயூ, கர்மவினை அப்படியெல்லாம் இனிமே பேச வேண்டாம், நமக்குள்ள ஒரு உறுதிப்பாடு இருந்தா எதுவும் நம்மை அசைக்க முடியாது, தைரியமா இரு''

''ம்ம்... சுபத்ராவை பாத்தீங்களா''

''இல்லை, வரேன்னு சொல்லிட்டு போனா ஆனா வரலை''

''உங்க வீடு அவளுக்கு தெரியுமா''

''ம்ம், தெரியும் ஆனா அடிக்கடி எல்லாம் வரமாட்டா''

பேசிக்கொண்டிருந்தபோது அம்மா என்னை கீழிருந்து அழைத்தது கேட்டது. நாங்கள் இருவரும் இறங்கி வந்து பார்க்கையில் சுபத்ரா வீட்டினுள் அமர்ந்து இருந்தாள்.

''சாரி லேட்டாயிருச்சி, பாக்கிறேன்னு சொன்னேன்ல, அதான் வந்துட்டேன்''

''காலையில வந்து இருக்கலாமே, அதுவும் எதுக்கு இந்த இருட்டு நேரத்தில, சரி சாப்பிட்டியா சுபா''

''இன்னும் இல்லை''

அம்மா உடனடியாக சுபத்ராவை வா வந்து சாப்பிடு என அழைத்து சென்றார். சுபத்ராவும் சாப்பிட்டு வந்து பேசுகிறேன் என எழுந்து சென்றாள். காயத்ரியின் அக்காவும் அப்போதுதான் வந்தார். வந்தவர், நேராக அம்மாவிடம் சென்று சிறிது நேரம் பேசியதை கண்டேன். பின்னர் எங்களிடம் வந்தார்.

''காயத்ரி, நானும்   அவரும் ஒரு வீடு பாத்து இருக்கோம், அவங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க, அடுத்த வாரம் அங்க குடி இருக்க போறோம், இனிமே இப்படி நான் இங்க இருக்கிறது அவருக்கு பிடிக்கல''

அவசரம் அவசரமாக பேசிய காயத்ரியின் அக்காவின் வார்த்தைகள் என்னுள் ஊசியாக குத்தி தொலைத்தன. எனது பெற்றோர்கள் இவருக்காக எத்தனை சிரமம் பட்டு இருப்பார்கள். சில மாதங்கள் எனினும் இதுதானா முறை என்றே எண்ணத் தோன்றியது.

''அக்கா...''

இப்போதெல்லாம் காயத்ரியின் வார்த்தைகளில் அதிர்ச்சியே நிறைய தெரிந்து கொண்டிருந்தது. காயத்ரியின் அக்கா விறுவிறுவென மாடிக்குப் போனார். ஒரு பெட்டியுடன் கீழே வந்தார்.

''நான் கிளம்பறேன் காயத்ரி, மத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வந்து எடுத்துட்டு போறேன்''

''என்னக்கா...''

பதில் ஏதும் சொல்லாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''அப்பா வரட்டும்''

''அப்பாகிட்ட நீ சொல்லிரு''

காயத்ரியின் அக்கா வீட்டு வாசலை தாண்டி சென்றபோது எனக்கு காதல் கர்மவினை என்றே கனத்தது. ரங்கநாதன் என்னை அறியாதவர் போல் காயத்ரியின் அக்காவை அழைத்துக் கொண்டு போனார். அது இன்னமும் அதிகமாக வலித்தது. காயத்ரி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

''சாப்பாடு சூப்பர்''

சுபத்ராவின் வார்த்தைகள் எனக்கு கேட்கவே இல்லை.

(தொடரும்)