Sunday, 7 July 2013

பரிணாமத்தில் ராமர் போட்ட கோடு

எனது மனநிலையும், எனது செயல்பாடுகளும் என்னை மிகவும் வாட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. எதற்காக நான் இப்படி இருக்கிறேன், எதற்காக இப்படி செயல்படுகிறேன் என்ற எண்ணம் என்னை சுற்றிக் கொண்டே வருகின்றன. என்னை எவரேனும் கட்டுப்பாட்டில் வைத்து இப்படித்தான் நான் வாழ வேண்டும் என தீர்மானித்து கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்களா என்றெல்லாம் என்னுள் தீவிர யோசனை சில நாட்களாய் வந்து கொண்டே இருக்கிறது. நானா இப்படி நடந்து கொள்வது என்கிற எண்ணம் என்னை உருக்குலைய செய்து கொண்டிருந்தது.

அப்போது 'பக்தா' எனும் அழைப்பு என்னை உலுக்கி விட்டது. என்னைத் தேடி எதற்கு இந்த சாமியார் வந்து தொலைய வேண்டும் என்ற எண்ணத்துடன் 'என்ன' என மட்டு மரியாதை இல்லாமல் கேட்டு வைத்தேன். 'நீ ஏதோ சஞ்சலத்தில் அல்லாடிக் கொண்டிருப்பது போன்று தெரிகிறதே' என்றார். 'யார் இந்த சாமியார், நான் சஞ்சலத்தில் உட்பட்டால் இவருக்கு என்ன' என எண்ணிக்கொண்டு 'உன்கிட்ட வந்து நான் ஏதாவது சொன்னேனா, பெரிசா கேட்க வந்துட்ட' என கோபத்துடன் அவரை நோக்கி சொன்னேன். 'நீ சொன்னால்தான் நான் வர வேண்டும் என்பது என்றில்லை, உனக்கு ஏதாவது நேரும் எனில் நான் அங்கே இருப்பது எனக்கு சௌகரியமான ஒன்று' என்றார் மேலும்.

'நா உன்கிட்ட பேச எதுவும் இல்லை, நீ பேசாம போயிரு' என கத்தினேன். சாமியார் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 'போனு சொல்றேனில்ல' என மறுபடியும் உறுமினேன். சாமியார் வீட்டு வாசற்கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றார். 'போய் தொலையட்டும்' என்றே கோபம் தணிந்தேன்.

சிறிது நாழிகைக்குப் பின்னர் 'பக்தா' என்றே ஒரு அழைப்பு வந்து சேர்ந்தது. இம்முறை சாமியார் எதுவும் பேசாமல் நின்றார். 'என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்றேன். 'நீ சஞ்சலத்தில் உட்பட்டு இருப்பது எனக்கு சௌகரியமாக இல்லை, அதனால் ராமருக்கு அணில் செய்த சிறு உதவி போல் உனக்கு செய்யலாம் என்றே வந்தேன்' என்றார்.

'ராமர், அணில்' எனக்கு சாமியாரிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என தோன்றியது. 'அணில் அப்படி என்ன ராமருக்கு உதவி செய்தது?' என்றேன். 'லங்கேஷ்வரம் செல்ல ராமர் பாலம் கட்டியபோது, அணில் ஒரு புறம் மண்ணில் புரண்டு, உடம்பில் ஒட்டிய மண்ணை அடுத்த பக்கத்தில் சென்று கொட்டி விட்டு மீண்டும் மறுபுறம் வந்து மண்ணை உடலில் ஒட்டிக்கொண்டு அடுத்த பக்கம் சென்று கொட்டியது. அணிலின் இந்த செய்கையை கண்டு ராமர் மனம் நெகிழ்ந்து அந்த அணிலின் முதுகில்  மூன்று விரல்களால் தடவி கொடுத்தபோது விழுந்த கோடுகள் தான் அந்த வெள்ளைக் கோடுகள்' என்றார் சாமியார்.

அணில் கதை கேட்டு நான் நெகிழ்ந்து போனேன். ஒரு சின்ன அணிலுக்கு எப்படி அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்றே எனது மனம் நினைத்தது. 'என்ன யோசனை' என்றார் சாமியார். 'தன்னால் இயன்ற உதவியை அணில் நம்மால் என்ன ஆகும் என எண்ணாமல் செய்தது கண்டு மனம் பரவசமானது' என்றேன். 'எவருக்கேனும் துன்பம் நேர்கையில் அவருக்கு முடிந்த அளவு சிறு உதவி செய்தல் நலம்' என்றார் சாமியார். 'மனதில் எந்த சஞ்சலமும் இனி வேண்டாம்' என்றார்.

'ஆமாம் சாமி, இவ்வுலகில் எல்லா அணிலுக்குமா மூன்று கோடுகள் இருக்கின்றன' என்றேன். இந்த அணில் வம்சம் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது. வெவ்வேறு வகையான அணில்கள் இவ்வுலகில் உண்டு. ஆனால் மூன்று கோடுகள் கொண்ட அணில்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே உண்டு. வட இந்தியாவில் ஐந்து கோடுகள் கொண்ட அணில்கள் வகையும் உண்டு. சில பறக்கும் அணில்கள் கூட இந்த புவியில் உண்டு; என்றார் சாமியார்.

'ஆமாம் சாமி, இந்த ராமாயணம் நடந்த கால கட்டத்திற்கு முன்னர் இந்த மூன்று கோடுகள் கொண்ட அணில்கள்  இந்தியாவில், இலங்கையில் இல்லையா?' என்றேன். 'மனம் சஞ்சலம் ஆகாது, வெள்ளை அணில்களும் தற்போதைய காலத்திலும் உண்டு' என்றார் சாமியார். பட்டென விழித்துக் கொண்டேன்.

இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும், என்னைப் பற்றி எனக்குள் உயர்வான எண்ணம் வேண்டும் என்றே உறுதி கொண்டேன். அணில் ராமருக்கு செய்தது சிறு உதவிதான், எனக்கு செய்தது பெரும் உதவி. கோடுகள் போட அணில்கள் தேடுகின்றேன்.






4 comments:

நம்பள்கி said...

அமெரிக்காவில் உள்ள அணில்களுக்கும் மூன்று கோடுகள் உண்டு...!

Anonymous said...

கனடாவில் கறுப்பு அணில்கள் உண்டு கோடில்லை, சாம்பல் வண்ண அணில்களுக்கு மூன்று கோடுகள் உண்டு. ராமர் கதை இடைச் செருகல், ஆனால் கதை பறையும் கரு தேவையானது. :)

sathishsangkavi.blogspot.com said...

நல்லதொரு தகவல், அறியாத்தகவல்..

Radhakrishnan said...

புலம் பெயர்ந்த அணில்களாக அவை இருக்கக் கூடும் நம்பள்கி. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பிற்காலத்தில் இந்த அணில்கள் சென்றதாக வரலாற்று குறிப்பு இருக்கிறது.

இடைச்செருகல் எனினும் மிகவும் சரியாகவே 'சொருகி' இருக்கிறார்கள். ஒரு கிரியேட்டிவிட்டி எவ்வளவு நேர்த்தியாக கையாளப்பட்டு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று நிரஞ்சன்.

பூங்கா ஒன்றில் நடந்து போகும்போது கண்ணில் பட்ட ஒருவித கோடும் இல்லாத பழுப்பு வண்ண அணில் எழுத தூண்டிய கனவுதான் இது சங்கவி.