Tuesday, 29 January 2013

பேய்கள் அரசாண்டால்

நான் தூங்கும்போது காலை மணி மூன்று இருக்கும். வெட்டியாக பொழுதைப் போக்கி கொண்டிருந்தேன். பின்னர் உறங்கினேன். 'பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என பட்டென்று ஒருவர் எனது காதில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் திடுக்கிட்டுப்  பார்த்தேன். சாமியார் நின்று கொண்டிருந்தார். என்ன சொல்வது என்றே புரியவில்லை.

மீண்டும் அதே வரியைச் சொன்னார். பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள். எனக்கு மிகவும் குழப்பமாகிப் போனது. அதெப்படி பேய்கள் அரசாள  முடியும்? சாத்திரங்கள் பிணம் தின்ன முடியும்? என்றே சாமியாரை நோக்கினேன். எனக்கு இவரிடம் பேசுவது அவ்வளவாக பிடிக்காது. அதன் காரணமாகவே அவர் பேசுவதை தடை செய்ய வழக்கு தொடரலாமா என எனது வக்கீலிடம்  மிகவும் விரிவாக பேசி அப்போதே நினைத்தேன்.

நீங்கள் இனிமேல் என்னிடம் பேசக் கூடாது என்று வழக்கு தொடர இருக்கிறேன் என்றேன். சாமியார் திகைக்காமல் சிரித்தார். இவ்வளவுதானா? தாராளமாக வெட்டியாய் இருக்கும் உனது வக்கீலுக்கு ஒரு வெட்டி வேலை ஒன்று கொடு என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவர் மீது வழக்கு போடுவேன் என்கிறேன், அது வெட்டி வேலை என்கிறாரே என நினைத்தேன்.

பக்தா, எனது பேச்சு உரிமையை நீ தடை செய்ய நினைத்தால் நான் எங்கேனும் பேசிக் கொண்டிருப்பது உனது காதில் விழும் வாய்ப்பு நேரடியாக இல்லாது போனாலும் மறைமுகமாக அமைந்துவிடும் என்றார். சரியென இவரின் மீதான தனிப்பட்ட வெறுப்புக்கு நமது மதிப்பை குறைத்து கொள்வானேன் என நினைத்து கொண்டு பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பற்றி கேட்டேன்.

உனது மனதினை எப்போதும் நல்ல சிந்தனைகளுடன் வைத்து இரு. தனிப்பட்ட நபர்கள் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் கொள்ளாதே. நல்ல சிந்தனைகளை தெய்வீக சிந்தனைகள் என்றும் கெட்ட சிந்தனைகளை பேய் சிந்தனைகள் என்றும் மனதில் ஓடும் எண்ணங்களை சொல்லலாம். பேய் சிந்தனைகள்  உன்னிடத்து அரசாட்சி செய்தால், அல்லது நாட்டியம் செய்தால் நீ கற்று கொண்ட வித்தைகள், நல்ல சாத்திரங்கள் எல்லாம் செத்தவைகளுக்கு சமானம், அவைகளால் ஒன்றும் உனக்கு உதவி செய்ய இயலாது. பல நூல் கற்றும் நீ களிமண் என்றார்.

அப்படி என்றால் இதில் இருந்து விடுதலை கிடையாதா? என்றேன். சாமியார் சிரித்தார். தெய்வீக சிந்தனைகளை நீ மெதுவாக மனதில் அழுத்தமாக பிடித்து கொள்ள இந்த பேய் சிந்தனைகள் விலகும். தவறு என தெரிந்தால் அவற்றை எல்லாம் புறந்தள்ள வேண்டும். தவறு என தெரிந்தும் அதையே பிடித்து கொண்டிருப்பதால் மேலும் மேலும் உனது மரியாதைகள் குறைந்து கொண்டே போகும். நீதி நியாயத்திற்கு உட்பட்டு வாழ்வதே மனித வாழ்வில் பெரும் சௌகரியமான செயல் எனவே தெய்வீக சிந்தனைகளை கைபற்று பேய் சிந்தனைகளிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்றார் சாமியார்.

பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் நானும் சொல்லிப் பார்த்து கொண்டேன். எனக்கு சாமியார் அறிவியல் பற்றி பேசமாட்டாரா எனும் ஏக்கம் வந்து தொலைந்தது. தாங்கள் இந்த பூமி பற்றி எனக்குசொல்லித் தாருங்கள் என அவரது பேச்சை தடை செய்ய நினைத்த நான் வினவினேன். சாமியார் சிரித்தார்.

எனக்கு சங்கடமாகவே இருந்தது. எதற்கு எடுத்தாலும் சாமியார் சிரிப்பது எனக்கு புரியாமலே இருந்தது. நிச்சயம் அடுத்த முறை சொல்கிறேன் என எழுந்து சென்றார். என்னுள் இருந்த பேய் சிந்தனைகள் என்னை அழுத்திக் கொண்டிருந்தன. எனது சோம்பேறித்தனம் என்னை பார்த்து ஏளனமாக பார்த்தது. விழித்துக் கொண்டேன்.

மணி எட்டாகுது, வேலைக்குப் போகலையா என்றார் அம்மா. எட்டு மணி ஆகுதல, எழுப்பி இருக்கலாம்ல என அம்மாவை சத்தம் போட்டேன். பிணம் தின்னும் சாத்திரங்கள். வேகவேகமாக கிளம்பினாலும் மணி ஒன்பது தொட்டு இருந்தது. வேலை இடத்தை அடைந்தேன். தாமதமாக வந்ததற்காக என்னை எனது அதிகாரி ஏகத்திற்கும் என்னை சத்தம் போட்டார். பேய்களின் அரசாட்சி.

மாலை வந்தது, விஸ்வரூபம் எனும் திரைப்படம் பார்க்கலாம் என சென்றேன். நான் சென்றபோது அந்த திரையரங்கில் வேறு படம் போட்டு கொண்டிருந்தார்கள், அங்கே இருந்தவரிடம் என்னவென வினவினேன். இந்த படம் திரையிடக் கூடாது என்பது தெரியாதா, இந்த படத்திற்கு தடை விதித்து இருக்கிறார்கள் என்றார். என்ன காரணம் என்றேன். இது கூட தெரியாமல் எதற்கு உயிர் வாழுற என்றார். எனக்கு என்ன சொல்வது என புரியவில்லை. ஒரு திரைப்படம் பற்றி நான் அறிந்து கொள்ளாமல் இருப்பது சமூக குற்றமா?

நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.  அப்போது இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றார் ஒருவர். மற்றொருவர் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் அரசு பற்றி ஏதோ பேய் அரசு என திட்டி விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார். நான் மனதிற்குள் சிரித்து கொண்டேன். அரசு, மக்கள், மதம், சாமியார் எல்லாம் மனிதர்கள் தானே! ஆனால் சாமியார் எனது கண்களுக்கு மிகவும் பிரமாண்டமாக தெரிந்தார்.

அம்மாவிடம் பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றேன். பிணத்தை தின்னா தின்னுட்டு போகுது. பேய்கள் அரசாண்டா ஆண்டுட்டு போகுது. நீ ஒழுங்கா இரு, அது போதும் என்றார். எனக்கு அம்மா, சாமியாரை விட மிகவும் பிரமாண்டமாகத் தெரிந்தார். 

No comments: