Tuesday, 13 November 2012

எனக்கு மட்டும் இல்லையா தீபாவளி?

சிறு வயதில் கேள்விப்பட்ட நரகாசுரன் கதை தான் தீபாவளிக்கு என இருந்தாலும் வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன. நிறைய பெண்களை தனது கட்டுபாட்டில் வைத்திருந்த நரகாசுரனை வீழ்த்திய தினம் தான் தீபாவளி என்றே கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி அன்று வெடி வெடித்து ஆராவரத்துடன் புத்தாடை உடுத்தி மகிழ்ந்து இருப்பது ஒரு பொழுது போக்கு. எப்போது தீபாவளி வரும், எத்தனை புது படங்கள் வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருப்போரும், ஒரு புது ஆடை கிடைக்கும் என மகிழ்ச்சியுடன் சிலரும், எந்த பண்டிகை வந்தாலும் நமது நிலை இதுதான் என இருப்போர் பலரும் என விழாக்காலங்கள் இந்தியாவில் களைகட்டும்.

சரவெடி, லக்ஷ்மி வெடி, அணுகுண்டு, மத்தாப்பு என சந்தோசமாக கழித்த நாட்கள் நினைவில் ஆடும். இந்த தீபாவளியுடன் எங்கள் கிராமத்தில் பொங்கலும், அதனுடன் கரி நாள் என கொண்டாடப்படும். தீபாவளிக்கு என விடுமுறை நாட்கள் குறைந்தது மூன்று தினமாவது  கிடைத்துவிடும். இது போன்று தீபாவளி கொண்டாடி பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. தீபாவளி அன்று கூட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் போலவே நிலைமையும் மாறிவிட்டது.

இந்த சிறப்பான தீபாவளி லக்ஷ்மி தேவிக்கு தொடர்புடையது என்று ஒரு சாரர் கூறுவது உண்டு. அதாவது ஒளியானது வாழ்வில் வீசத் தொடங்கினால் அங்கே லக்ஷ்மி தேவி வாசம் செய்வது உண்டு எனும் ஐதீகம் உண்டு. அதாவது லக்ஷ்மி தேவி அவதாரம் செய்த தினம் இந்த தினம் தான் என்று குறிப்பில் இருக்கிறதாம். அதோடு மட்டுமில்லாமல் வாமன அவதாரம் எடுத்து வந்தபோது லக்ஷ்மி தேவியை இந்த திருநாளில் தான் பாலி எனும் அரசனிடம் இருந்து வாமணர் காப்பாற்றினார் என்பதால் இந்த திருநாளை லக்ஷ்மி தேவிக்கு அர்பணிக்கிறார்கள்.

வனவாசம் முடித்துவிட்டு பாண்டவர்கள் திரும்பி வந்த தினம், இலங்கையில் இருந்து சீதையை  மீட்டு அயோத்திக்கு ராமர் வந்த தினம் கூட தீபாவளியாக கொண்டாடப்படுவதும் உண்டு. இந்த தீபாவளி இந்துக்கள் மட்டுமில்லாது சீக்கியர்கள், ஜெயின் மதம் தொடர்புடையவர்கள் கூட கொண்டாடுவது உண்டு. யுகங்கள் மாறினாலும் வெவ்வேறு காரணத்திற்காக இந்த தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது தெள்ளத் தெளிவாகிறது.

இனி வரும் காலங்களில் இந்த தீபாவளி தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட்ட தினமாகவும், இனம், நிறம் போன்ற வேறுபாடு நீக்கிய நாளாகவும், மதங்கள் அழிக்கப்பட்டு தெய்வீகத் தன்மை நிலைபெற்ற நாளாகவும் கொண்டாடப்படலாம். அப்படிப்பட்ட ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் நாள் ஒன்றே உண்மையான தீபாவளி. அதுவரை இந்த தீபாவளி பண்டிகை எல்லாம் ஒரு பொழுது போக்கு. ஒரு விடுமுறை தினம் அவ்வளவுதான். 

2 comments:

வவ்வால் said...

ரா.கி,

//ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் நாள் ஒன்றே உண்மையான தீபாவளி. அதுவரை இந்த தீபாவளி பண்டிகை எல்லாம் ஒரு பொழுது போக்கு. ஒரு விடுமுறை தினம் அவ்வளவுதான். //

மதங்கள் தவிர்த்து மக்களுக்கான பண்டிகையாக மாறினால் அனைவருக்கும் தீவாளி தான், வாழ்த்துக்கள்!

Radhakrishnan said...

சரிதான் வவ்வால், நன்றி.