Friday, 20 July 2012

எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு

இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை.

நான் மெதுவாக அவரிடம் சென்று "சாமி" என்றேன்.

மூடிய கண்களைத் திறந்தவர் "என்ன இந்த பக்கம்" என்றார்.

"எங்கே உங்கள் சிஷ்ய கோடிகள்"

"கடந்த சில நாட்களாக எவரும் இங்கே தென்படவில்லை"

"என்ன காரணமாக இருக்கும்"

 "தெரியவில்லை"

"சாமி நீங்கள் சற்று கிளுகிளுப்பான சாமியாராக இருந்து இருந்தால் எல்லாரும் மயக்கத்தில் வந்து இருந்து இருப்பார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பூமி, ஆகாயம், நட்சத்திரம் என சொல்லிக் கொண்டிருந்தால் எவர் உங்களைத் தேடி வருவார்கள்"

"இதோ நீ வந்து இருக்கிறாயே"

 எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட கருமமே, என நினைத்துக் கொண்டு

"இல்லை சாமி, பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே என்று வந்தேன்".

"சரி உட்கார்"

நான் மறு பேச்சின்றி அமர்ந்தேன்.

"நீ பூமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சொன்னாய் அல்லவா"

"ஆமாம் சாமி, பக்தா என என்னை எதற்கு கூப்பிட மறுக்கிறீர்கள்"

"பக்தா என்றால் உனக்குப் பிடிக்காதே, சரி சரி பூமி பற்றி கேள்"

"ஆமாம் சாமி இத்தனை கோளங்கள் இருக்க பூமியில் உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கு காரணம் இயற்கை தேர்வு என சொல்கிறார்களே, அதாவது ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை என்று"

"சரி, ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை, அப்படியெனில் இந்த இயற்கை இப்படி இருக்க வேண்டுமென எவர் படைத்தது?"

அட கண்றாவியே என நினைத்துக் கொண்டு

"சாமி, இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கைத் தேர்வு"

சாமி கலகலவென சிரித்தார்.சோளிகளை எடுத்தார். சிதறடித்தார். எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது.

"மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும்"

"சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது?"

"எதற்கு கேட்கிறாய்?"

"எல்லாம் ஒரு கணக்குதான்"

"ஓஹோ, நீ என்ன சொல்ல வருகிறாய் என புரிகிறது"

"இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே"

 "எந்த வகையான மாற்றம்"

"புரியவில்லை"

"இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும்"

 "சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது?"

"இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு"

"சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது,  அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம்? இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கைத் தேர்வு செய்ததா? எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு என்று சொல்லுங்களேன்"

"இறைவன் தவிர எல்லாமே இயற்கைத் தேர்வு தான், போய் வா"

"எதற்கு சாமி இப்படி விட்டேந்தியாக பதில் சொல்கிறீர்கள்"

"பிறகு என்ன, இறைவன் ஒருவனே அனைத்தையும் தேர்வு செய்தவன். இதில் இயற்கைத் தேர்வு, செயற்கைத் தீர்வு என்றெல்லாம் சொல்லக் கொண்டிருந்தால்  எப்படி"

"சாமி, தேர்வு, தீர்வு. எவ்வளவு அழகான பதில். இயற்கைத் தேர்வு செய்ய வாழ்க்கைக்குத் தீர்வு கிடைக்கும்"

"இறைவன் தீர்ப்பு இறுதி தீர்ப்பு"

சாமியாரை அழைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு இடத்தில் அளவு கடந்த கூட்டம். என்னவென விசாரித்ததில் புதிதாக ஒரு சாமியார் வந்து இருப்பதாகவும் பல விசயங்களை மிகவும் எளிமையாக சொல்வதாகவும் சொன்னார்கள்.

சாமியாரைப் பார்த்தேன்.

"சாமி, நீங்க கொஞ்சம் புரியும்படியா பேசினா எல்லாரும் உங்களைத் தேடித்தான் வருவாங்க"

 "எல்லாம் இயற்கைத் தேர்வு"

"சாமி, இறைவன் தீர்ப்பு இல்லையா?"

உன் சோலிய பாரு என சாமி தனது வேடம் கலைக்க, நான் என் தூக்கம் தொலைக்க  விட்டத்தில் இருந்த பல்லி  ஒன்று எனது வாயின் அருகில் எச்சம் விட்டுச் சென்றது. இனி அங்கே சிறு பருக்கள் முளைக்கும்.

ஆமாம் இவ்வுலகில் எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு?

(முற்றும்)

Thursday, 19 July 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 5

தியரி அதாவது கோட்பாடு, தேற்றம். நமது சிந்தனைகள் இந்த தியரி எனப்படுவதை சுற்றியே நிகழ்கிறது. சோதனைகள் செய்யும் முன்னர் இந்த தியரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தியரிக்கான சிந்தனையின் மூலம் என்ன என்பது குறித்து அவரவருக்கு அந்த வேளையில் ஏற்படும் சிந்தனை குறித்தே சொல்ல முடியும்.

ஒரு உதாரணத்திற்கு புத்தர். இப்போது புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஒரு தியரி. ஆசை என்பதன் அளவு எது? துன்பத்தின் அளவு எது? என்பதெல்லாம் இங்கே விவரிக்கப்படவில்லை. மிகவும் எளிமையாக சொல்லப்பட்ட கோட்பாடு இது. ஆசையே துன்பத்திற்கு காரணம். இப்போது இந்த சிந்தனை எப்படி புத்தருக்கு எழுந்தது. இப்போது நாம் சொல்லப்போவது கூட ஒரு தியரி தான். ஆனால் உண்மை என்ன என்பது புத்தருக்கு மட்டுமே வெளிச்சம். அரண்மனையில் சுகவாசம் அனுபவித்த புத்தர் வெளியில் சென்று பார்க்கும்போது மக்கள் இன்னல்படுவதை காண்கிறார். அங்கே அவருக்கு எதற்கு மக்கள் இன்னல் படுகிறார்கள் எனும் சிந்தனை எழுகிறது. அதற்கான காரணம் என்னவென பார்க்கும்போது அவருக்கு ஆசை என்ற ஒன்று பிடிபடுகிறது. அப்படியே ஒரு மரத்தடியில் அமர்கிறார். கண்களை மூடி அமர்கிறார். மக்கள் துன்பபடுவது ஆசையின் காரணம் தான் என நினைவில் கொள்கிறார். அதை பின்னர் உலகுக்கு அறிவிக்கிறார். இப்போது இந்த கோட்பாடுதனை சோதனைக்கு உட்படுத்தலாம்.

இரு நபர்கள் எடுத்துக் கொள்வோம். ஒருவர் ஆசையே படாதவர். இருப்பதே போதும் என இருப்பவர். மற்றொருவர் அளவுகடந்த ஆசை கொண்டவர். அது வேண்டும், இது வேண்டும் என அலை பாய்பவர். பொதுவாக எல்லோர் வீட்டில் கணவன், மனைவி இப்படித்தான் இரண்டு துருவங்களாக இருப்பார்கள் என்பது வேறு விசயம். ஆசையே இல்லாதவர் துன்பத்துடன் வாழ்கிறாரா, ஆசை கொண்டவர் துன்பமின்றி வாழ்கிறாரா என அவர்களது வாழ்க்கையை இருபது ஆண்டு காலம் கவனித்து வருவோம். பொதுவாக போதும் என இருப்பவர் துன்பம் கொள்வது இல்லை என்பது ஒருவித தியரி. அதன்படியே போதும் என இருப்பவர் இருபது வருடம் முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்பவும் இருப்பார். அதாவது எந்த வித முன்னேற்றமோ, வசதிகளோ, வாய்ப்புகளோ பெருக்காமல், ஏனெனில் அவருக்கு எவ்வித ஆசையும் இல்லை. இருப்பினும் சில தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இவர்  துன்பம் அடைகிறார். இப்போது அவரைப் பொறுத்தவரை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு துர்பாக்கியம் கொண்டவர். ஆனால் அவருக்கோ அப்படி இருப்பதே ஆனந்தம். மற்றவர் அப்படி இல்லை. ஆசையின் காரணமாக போராடி நல்ல வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்கிறார். இதன் காரணமாக அவர் கொண்ட துன்பம் அதிகம். இல்லாது இருப்பவர் போதிய வசதி இல்லாமல் துன்பம் அடைகிறார். இருப்பவர் மேலும் மேலும் வசதிகள் வேண்டுமென துன்பம் அடைகிறார். இப்போது ஆசை கொண்டவரும் துன்பம் அடைகிறார். ஆசை இல்லாதவரும் துன்பம் அடைகிறார். இதன் காரணமாக ஆசை ஒரு காரணி. ஆனால் ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம் இல்லை என இந்த சோதனையின் முடிவில் தீர்ப்பு எழுதப்படும்.

இப்படி கோட்பாடுகளை கொண்டு எழுதப்பட்டுத்தான் முக்காலமும். அந்த கோட்பாடுகளை சொன்னவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொண்ட விச யத்தை சொன்னவர்கள் உண்டு. அதே வேளையில் கணிதம், பௌதிகம், பூகோளம் என கணக்கீடு முறையால் இப்படித்தான் இருக்கும் என சொன்னவர்கள் உண்டு. தங்களுக்குள் உணர்ந்து கொண்டு சொன்ன விச யத்தை நிரூபிக்க கதைகள் எழுதலாம். ஆனால் அதை ஒரு சோதனை மூலம் நிரூபிப்பது சற்று இயலாத காரியம். கணக்கீடு முறையால் சொன்ன விசயங்களை சோதனைகள் மூலம் நிரூபிக்கலாம். அப்படி நிரூபிக்க முடியாது போனால் அந்த கோட்பாடு தவறு என்றே முடிவுக்கு கொண்டு வரப்படும்.

இப்படி பல சிந்தனைகளை உருவாக்கும் நரம்பு மண்டலத்தில் எவர் இதற்கான விதைகள் விதைத்தது. உங்கள் வீடு ஒன்று. உங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் பல. இப்போது ஒரே விசயம். அந்த ஒரே ஒரு விசயத்தை வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என பாருங்கள். இந்த சோதனையை வீட்டில் செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு தாளில் எழுதி கொள்ள வேண்டும். பின்னர் அனைவருக்கும் வாசித்து காண்பியுங்கள். சிந்தனைகளுக்கான காரணம் என்னவாக இருக்கும்?

ஒன்று கண்ட, கேட்ட விசயங்களின் நேரடி, மறைமுக பாதிப்பு.  மற்றொன்று எதற்கும் தொடர்பே இல்லாத ஒரு சிந்தனை. இப்படி எதற்குமே தொடர்பே இல்லாத சிந்தனை ஒன்று உண்டா?

மாணிக்கவாசகர் பாடுகிறார்.

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஒளியும், இருளும் நீயன்றி எதுவும் இல்லை. தோன்றியவைகளும், தற்போது தோற்றத்தில் இல்லாதவைகளும் நீயன்றி எதுவும் இல்லை. முதலுமாய், முடிவுமாய் என முதலும் முடிவும் இல்லாதவன் நீயன்றி எதுவும் இல்லை.

முக்காலமும் எப்படி மாணிக்கவாசகர் அறிந்தார்?

(தொடரும்) 

Saturday, 14 July 2012

எவருக்கு என்ன லாபம்

என் எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டு 
நீ இல்லையெனில் 
நீ என் அன்னையும் இல்லை 
நீ என் தந்தையும் இல்லை 
உங்களுக்கான மகனும் நான் இல்லை 
வெற்று உறவாய் இருப்பதில் 
எவருக்கு என்ன லாபம் 

என் சிந்தனையின் கோட்டில் 
நீ இல்லையெனில் 
நீ என் தோழனும் இல்லை 
நீ என் தோழியும் இல்லை 
உங்களுக்கான தோழமை எனதில்லை 
நட்பு என சொல்லிக்கொள்வதில் 
எவருக்கு என்ன லாபம் 

நான் கேட்கும் வரங்கள் 
நீ தரவில்லையெனில் 
நீ கடவுள் இல்லை 
உனக்கு கோவில் இல்லை 
உனக்கான பக்தனும் நான் இல்லை 
இருப்பதாய் சொல்லிக் கொள்வதில் 
எவருக்கு என்ன லாபம் 

எல்லாம் இருந்தும் இருந்தும் 
நிம்மதியாய் நீ இல்லையெனில் 
இது உன் வாழ்க்கை இல்லை 
வாழ்க்கையில் பயனும் இல்லை 
பூமிக்கான மனிதனும் நீ இல்லை 
மனம் செத்த சடமாய் இருப்பதில் 
எவருக்கு என்ன லாபம் 

தெளிந்த அறிவு இன்றி 
தேடுவதில் உன்னை தொலைத்தால் 
இயற்பியல் விதிகளும் இல்லை 
இயற்கை தேர்வும் இல்லை 
இதற்கான நடைமுறையும் இல்லை 
பரிணாமமும் பகுத்தறிவும் சொல்வதால் 
எவருக்கு என்ன லாபம் 

லாபம் என்றே தொடங்கிட 
இது வியாபாரம் இல்லை 
பாபம் என்றே ஒதுங்கிட 
இது பந்தயம் இல்லை 
அன்பில் கிடந்து வாழ்ந்திடும் 
பண்பின் சிகரமாம் வாழ்க்கை இது
எவருக்கு என்ன லாபம் 
என்றே கணக்கை தவிர்த்து 
எல்லோருக்கும் லாபம் என்றே 
போற்றி வாழ்ந்திடுவோம் 

Saturday, 7 July 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 9

காயத்ரியின் அப்பா என்னை பயத்துடன் பார்த்தார். எனது அதிர்ச்சியை மறைத்துவைத்து கொண்டு மன சுமையை இறக்கி வைக்க முடியாமல் நோட்டு புத்தகங்களை வைத்துவிட்டு முகம் அலம்ப சென்றேன். காயத்ரி என் பின்னால் வரவில்லை. 

கை கால் முகம் அலம்பிவிட்டு 'அம்மா இவர் எப்போ வந்தார்?' என்றேன். 'ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும் முருகேசு என காபிதனை கையில் தந்தார். காயத்ரியோட அக்கா இன்னும் வரலையா என்றேன். 'எப்பவும் போலதான் வருவா, இன்னைக்கு மட்டும் என்ன வேகமாகவா வரப்போறா என அம்மா சொன்ன வேளையில் காயத்ரி வந்து நின்றாள். 'இந்தாம்மா காபி'' என காயத்ரிக்கும் கொடுத்தார் எனது அம்மா.

'அப்பா எதுவும் சாப்பிட்டாரா'' என்றாள் காயத்ரி. 'காபி வைச்சி கொடுத்தேன். வெளியில சாப்பிட்டேன் அப்படின்னு சொல்லிட்டார் என்றார் அம்மா. தேங்க்ஸ்மா என்று காயத்ரி சொல்லிவிட்டு அவளது அப்பாவிடம் சென்றாள். நானும் பின் தொடர்ந்தேன். 

'என்னப்பா இமயமலை போக மனசு இல்லையா'' என்றாள் காயத்ரி. என்னை பார்த்தவர் என்ன சொல்வது என புரியாமல் விழித்தார். 'காயத்ரி என்னை மன்னிச்சிரும்மா'' என்றார் அவர். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'என்ன தப்பு பண்ணினீங்க, உங்களை மன்னிக்க சொல்றீங்க'' என்றாள் காயத்ரி. நிலைமையை சுதாரித்து கொண்டவராய் உங்களை எல்லாம் விட்டுட்டு இமயமலை போகிறேன்னு போனது தப்புதான்மா என்றார். இதையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. காயத்ரிக்கு விசயம் தெரியாது என நினைத்துவிட்டாரோ? அல்லது காயத்ரி தெரியாதது போல இருப்பது அவருக்கு வசதியாக போவ்யிட்டதோ என நினைத்து கொண்டு நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னை பார்க்கும்போது மட்டும் அவர் குற்ற உணர்வில் இருப்பது போல் நான் உணர்ந்தேன். 

நான் அவரிடம் எதுவுமே பேசவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பா வந்தார். 'அடடே வாங்க வாங்க, குடும்ப வாழ்க்கையில இருந்தவங்க எல்லாம் அப்படி லேசா எல்லாத்தையும் விட்டுற முடியாது என்றவர் அவரிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். காயத்ரியின் அக்கா அவரது அப்பாவை பார்த்து இனிமே இந்த பக்கமே வரமாட்டீங்கன்னு நினைச்சேன் என சொல்லிவிட்டு போய்விட்டார்.. எனக்கு புரியாமலே இருந்தது. பின்னர் நான் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டேன். காயத்ரியும் மேலே வந்தாள்.

முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியா என்றாள். என்ன என்றேன்? என் அப்பாவை பத்தி என்கிட்டே சொன்னதை நீ யார்கிட்டயுமே சொல்லலைன்னு என் அப்பாகிட்ட சொல்வியா என்றாள். என்னை பொய் சொல்ல சொல்றியா என்றேன். ம்ம் என்றாள். சிரித்தேன். The world is created by a chance. A chance that can be explained in many ways. நான் அவ்வாறு சொன்னதும் இனி உன் இஷ்டம் என்றாள். காயத்ரி கவலைப்படாதே, நீ சொன்னமாதிரி நடந்த்துக்கிறேன் என்றேன். காயத்ரியின் அக்கா கோபத்துடனே இருந்தது கண்டேன். 'ஒருமாதிரியா இருக்கீங்க, வேலையில பிரச்சினையா'' என்றேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை, இவரை பாத்ததுல இருந்து ஒருமாதிரியா இருக்கு என்றார். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

அன்று இரவு காயத்ரியின் அப்பாவிடம்  நான் எவரிடமும் எதையும் சொல்லவில்லை என சொன்னதும் என்னை கைகள் எடுத்து கும்பிட்டார். அவரிடம் என்ன நடந்தது ஏது நடந்தது என விசாரிக்க மனம் வரவில்லை. நேராக தூங்க சென்று விட்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. Human beings are erroneous subjects without having any proper objects. நினைப்பு எல்லாம் ஆங்கிலத்தில் வந்து தொலைந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து தூங்கிய விதமே நினைவில் இல்லை.

காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்கையில்  காயத்ரியின் அப்பா நினைவுக்கு வந்தார்.  அம்மாவிடம் கேட்டேன். அவர் அஞ் சரை மணிக்கே கிளம்பி போய்ட்டார் என்றார். அப்பாவிடம் சென்று கேட்டேன். அப்பா சிரித்து கொண்டே எழுதி கொடுத்த சொத்து பத்திரம் எல்லாம் வாங்கிட்டு போய்ட்டார் என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காயத்ரிக்கு விசயம் தெரிந்ததும் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அக்காவுக்கு பயங்கர கோபம் வந்தது. எதுக்கு சார் அந்த பத்திரம் எல்லாம் எங்களை கேட்காம கொடுத்தீங்க என்றார். 

என்னம்மா சொல்ற என்றார் என் அப்பா. என் அப்பா எங்க குடும்பத்துக்கு நல்லவர் இல்லை என்றார் அவர். இதைக் கேட்ட காயத்ரி அதிர்ச்சியானதை கண்டேன். உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார் என்றவர்  அங்கே எவரையும் கவனத்தில் கொள்ளாமல் சார் என் அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருப்பதா என் அம்மா என்கிட்டே சொல்லி இருக்காங்க. இதை நானே நேரா பார்த்து உறுதிபடுத்திகிட்டேன். ஆனா காலக்கொடுமை.. எல்லாம் கைக்கு மீறி போயிருச்சி. அதனால எதுவுமே தெரியாம நான் இருக்க வேண்டியதா போச்சு. எங்க அம்மா இறந்தப்பறம் எங்க நிலைமையை நினைக்கவே முடியல. நீங்க தான் உதவிக்கு வந்தீங்க. எதிர்பாரா விதமா எங்க அப்பா எங்களுக்கு சொத்து எழுதி வைச்சார். இமயமலை போறேன்னு சொன்னதும் எனக்கு அவர் எங்க போகப்போறாரு அப்படின்னு தெரியும். சரி போகட்டும் அப்படின்னு விட்டுட்டேன் என்றவர் இப்போ இந்த சொத்து எல்லாம் எடுத்துட்டு போகத்தான் வந்திருக்கிறதை நினைச்சா அருவெறுப்பா இருக்கு சார் என்றார். 

'சே இதை என்கிட்டே எதுக்கும்மா முன்னமே சொல்லலை. விசயம் தெரிஞ்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பேனா? என ஆறுதல் சொன்னார். அம்மாவுக்கு கோபம் வந்தது. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் என பாடல் பாட .ஆரம்பித்துவிட்டார். காயத்ரி மட்டும் அமைதியாக இருந்தாள். நாங்க உங்களுக்குனு இருக்கோம் என அம்மா அவர்கள் இருவரையும் அணைத்து கொண்டபோது எனக்கு சற்று மகிழ்வாகவே இருந்தது. 

கல்லூரிக்கு நாங்கள் கிளம்பினோம். Courtship behaviour sometimes are not followed based on customs by some human beings என்றேன். முருகேசு எனக்கு எப்படி இருக்கு தெரியமா என்றாள். எப்படி இருக்கு என்றேன். உன்னை ஓங்கி அறையலாம் போல இருக்கு என்றாள். உன்னோட அப்பாவின் தப்புக்கு நான் எப்படி பொறுப்பு என்றேன். நீ பொறுப்பு இல்லை, ஆனா என்னோட உணர்வுகளை நீ கேலி பண்றமாதிரி சர்காஸ்டிக்கா பேசறது சரியா என்றாள். அப்படின்னா உன் அப்பா மேல கோவம் இல்லையா என்றேன். அவள் கண்கள் கலங்கி இருந்தது. 

முருகேசு, காதல் அப்படிங்கிறதோட அர்த்தம் தெரியுமா என்றாள். அவளை பார்த்து கொண்டே இருந்தேன். சொல்லு என்றாள். நான் காயத்ரி என்றேன். பதில் சொல்லு என்றாள். சொல்லிட்டேன். என்னைப் பொருத்தவரைக்கும் என் காதலுக்கு அர்த்தம் நீதான் என்றேன். சாலை என பார்க்காமல் எனது கைகளை இறுக  பற்றினாள். இனி என் அப்பா பத்தி பேசவேண்டாம் என்றாள். சரி என சொன்னேன்.

முதல் பாடம் எடுக்க வந்த ஆசிரியரை  எனக்கு அத்தனையாக பிடிக்காது. அவர் என்னை நோக்கி என்னை உனக்கு எதற்கு பிடிக்காது என்றார். நான் தடுமாறினேன். சொல்லுப்பா என்றார். சார் என்றேன். சும்மா ஒரு கற்பனைக்கே வைச்சுக்கோ. சொல்லு என்றார். தெரியலை சார் என்றேன். 
என்ன காரணம் என்றே தெரியாமல் ஒருவரை பிடிக்காமல் போவதும், பிடித்துவிடுவதும் என சொல்வது மனிதர்களின் மடத்தனம் என்றவர், எந்த ஒரு காரணமும் இல்லாமல் எந்த ஒரு காரியமும் இல்லை என்றார். 

இதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை என்றார். 

சும்மா வெட்டித்தனமா பேசாதீங்க சார் என்றான் எனது அருகில் இருந்தவன். என்னடா சொன்ன? என்றவரின் கோபத்தில் நான் எரிய ஆரம்பித்தேன்.

(தொடரும்)