Monday, 26 March 2012

மறுபிறப்பு, நட்சத்திரங்கள், புரட்டல்கள்

எனது கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்கு வந்திருந்த ஒரு சாமியாரை பார்க்க சென்றேன். அவர் மிகவும் சாந்தமாக இருந்தார். நீங்கள் எல்லாம் ஒரு சாமியாரா? என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தார். நானும் தான் அவரை முறைத்து பார்த்து கொண்டிருந்தேன்.

அடுத்த ஜன்மத்தில் நீ பறவையாக பிறக்க கடவது என அவர் என்னைப் பார்த்து சொன்னதும் எனக்கு அவர் மீது கடும் கோபம் வந்தது. அவரை நோக்கி நான் நீங்கள் அடுத்த ஜன்மத்தில் மனிதனாகவே பிறக்க கடவது என்றேன்.

எனக்கே சாபம் விடுகிறாயா? உனது சாபம் எல்லாம் பலிக்காது என்றார். அப்படியெனில் நீங்க விடுத்த சாபம் பலிக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றேன். எனது ஞான கண்களில் தெரிகிறது என்றார்.

வெட்கமாக இல்லை, இதோ அருகில் இருக்கும் எனது கிராமம் உங்கள் கண்ணுக்கே தெரியாது, இதில் எனது அடுத்த பிறப்பு பற்றியெல்லாம் தெரிகிறது எனும் புரட்டல் வேறு என சொன்னதும் சாந்தமாக இருந்த அவர் கோபம் கொப்பளிக்க எழுந்தார். கையில் வைத்திருந்த தண்ணீரை என் மீது தெளித்தார்.

எந்த ஊரில் திருடிய தண்ணீர் என்றேன். அவரை பார்க்க வந்திருந்த பலர் என்னை திட்டினார்கள், சத்தம் போட்டார்கள். அவர்களை நோக்கி சற்று அமைதியாக இருங்கள் என சொன்னேன். எவரும் கேட்கவில்லை. அந்த சாமியார், அவர்களை அமைதி என சொன்னதும் எல்லோரும் அடங்கினார்கள். படித்த முட்டாள்கள் மனிதர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என நினைத்து கொண்டேன்.

இந்த தண்ணீர் கைலாய மலையில் இருந்து கொண்டு வந்தது என்றார். எப்போது கைலாய மலையில் இருந்து கிளம்பினீர்கள் என்றேன். காலம், நேரம் எல்லாம் எனக்கு இல்லை நான் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியவர் என்றார். எனக்கு தலை சுற்றியது.

இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறுபிறப்பு எடுக்கின்றனவோ அது போலவே மனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், ஊர்வன, பறப்பன எல்லாம் மறுபிறப்பு எடுக்கின்றன என்றார். நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுக்கிறதா? என்றேன். ஆமாம் என்றார். சாமியார் சயின்ஸ் பேசுகிறார் என சைலன்ஸ் ஆனேன் நான்.

இந்த பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன்னால் நான் தூசியாகவும், துகளாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் காலமும் இல்லை, நேரமும் இல்லை. தூசியாய், துகளாய் இருந்த நான் இறுக்கமடைந்தபோது என்னுள் வெப்பம், அழுத்தம் எல்லாம் அதிகரித்தன. ஒளியற்று இருந்த நான் ஒலி எழுப்பி, ஒளி கொண்டேன் என்றார். நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒரு வேளை இவர் ஏதாவது பள்ளி கூடத்தில் ஆசிரியராக இருந்துவிட்டு மாணவர்கள் தொல்லை தாங்காமல் சாமியார் ஆகிவிட்டாரா எனும் ஐயப்பாடு என்னுள் நிலவியது.

அப்படி ஒளி ஒலி கொண்டு இருந்தபோது நான் நட்சத்திரமாக உருவாகினேன். அந்த நட்சத்திரம் தான் இன்று எல்லையற்று விரிந்து கிடக்கும் அனைத்து நட்சத்திரங்களும், அனைத்து உயிர்களும் என்றவர், ஒரு நட்சத்திரத்தில் இருந்து பல்லாயிரம் நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுத்து கொண்டே இருப்பது போல ஒரு உயிரில் இருந்து பல்லாயிர மறுபிறப்பு நடைபெற்று கொண்டே இருக்கிறது என்றார். உயிர்கள் எல்லாம் பூமியில் மட்டும் தானே என எனக்கு அவரது தாடியை பிடித்து இழுத்து உலக நடப்புக்கு வா என சத்தம் போட வேண்டும் போல் இருந்தது.

நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுத்து வேறொரு நட்சத்திரம் தானே உருவாகிறது என்னை எதற்கு பறவையாக பிறப்பேன் என்றீர்கள் என்றேன். ஒரு நட்சத்திரம் மறு நட்சத்திரம் என்பது போல ஒரு உயிர் மற்றொரு உயிர், இதில் பறவை, மனித செயல்பாடுகள் வேறு என்பது போல நட்சத்திரங்களின் செயல்பாடு வேறு என்றார். நீங்கள் எந்த பள்ளிக்கூடத்து சயின்ஸ் வாத்தியார், பூமியில் மாத்திரம் தானே உயிர்கள் என்றேன்.

புல்லாக இருந்த போதும் சாமியார். நான் ஒவ்வொரு பிறப்பிலும் சாமியார். இந்த அண்ட சாரங்கள் எல்லாவற்றிலும் உயிர்கள் உள்ளது என்றார். உனது கேட்கும் திறன் எப்படி ஒரு அளவுக்குள் சுருங்கியதோ அதைப்போலவே உனது பார்க்கும் திறனும் ஒரு அளவுக்குள் சுருங்கியது. அதனால் தான் தொலைநோக்கி எல்லாம் வைத்து கொண்டு தேடிக்கொண்டு அலைகிறீர்கள் அதுதான் சொன்னேன் எனது ஞான கண்களில் தெரிகிறது நீ பறவையாக பிறப்பாய் என. நீங்கள் சரியான புரட்டல் சாமியார் என்றேன்.

புரட்டல்கள் என்றால் கலவை. இந்த உடல் பல கலவைகளால் ஆனது. இசையில் இந்த புரட்டல்கள் அதிகம் பேசப்படும். ஒவ்வொரு தாளத்திற்கேற்ப இந்த புரட்டல்கள் வேறுபாடு அடையும் என்றார். சலனமே இல்லாத மக்கள் கண்டு நான் சலனப்பட்டேன். நீங்கள் அதிகம் பாவம் செய்வதால் தான் அடிக்கடி பிறப்பு எடுக்கிறீர்கள் என்றேன்.

பாவம் செய்பவர்கள் தான் மறுபிறப்பு எடுப்பதில்லை. ஒரு நட்சத்திரம் தன்னில் இருந்து வேறு நட்சத்திரம் உருவாக்க முடியாத பட்சத்தில் அவை ஒன்றுமில்லாமல் போகும். அது போலவே மறுபிறப்பு எடுக்க முடியாத பிறவிகள் ஒன்றுமில்லாமல் போகும் என்றார்.

எனக்கு அவர் அப்படி சொன்னதும் ஒரு ஆசை வந்தது. அப்படியெனில் என்னை கருட பறவையாக பிறக்க வழி செய்வீர்களா என்றேன். எதற்கு என்றார். நான் ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் நாராயணனுக்கு பணி செய்யவே விருப்பம் என்றேன்.

சாமியார் சிரித்தார். படித்த முட்டாள்கள் மனிதர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்றார்.

எனது மனதை இவர் எப்போது படித்தார்? துணுக்குற்றேன். கட்டிலில் இருந்து விழுந்த வலி இன்னும் போகாமலே இருந்தது.



2 comments:

சார்வாகன் said...

அருமை
இவர் ரொம்ப நல்ல சாமியாருங்க சகோ

அவரை வணங்க சொல்லவில்லை.அவர் சொலவ்து அனைத்துமே அறிவியலுக்கு பொருந்துகிறது,குறைந்த பட்சம் தவறென்று நிரூபிக்க்ப்பட முடியாது.

"கருடனா எந்த பிரபஞ்சத்தில்,எந்த கால்க்ஸியில்,எந்த நடசத்திரத்தில் கோளில் ,இடத்தில் பிறப்போம் என்பதை அறியும் வாய்ப்பை த்வற விட்டு விட்ட்ர்களே"

முற்பிறவி தவறு என வாதிடும் நாத்திக கும்பலை எனினும் இப்படி போட்டு தாக்கி விடலாம்.

நாம் இப்படி பிறந்தோம் என்ற‌ முற்பிறவி ஞாபகம் இல்லாததால் உணர முடியவில்லை என்பதால் முற்பிறவியே இல்லை என் கூற இயலுமா?????????


எதற்கும் இன்னும் கொஞ்சம் கனவு காணுங்கள்!!!!!

அருமை,

நன்றி

முத்தரசு said...

நல்லா இருக்குங்க உங்க கனவு