Wednesday, 22 February 2012

ரீமேக், ரீமிக்ஸ் - சீரழிகிறதா சினிமாத்துறை

ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது அத்தனை சுலபமான வேலை அல்ல. அதே போல ஒரு எழுத்தை ரீமேக் செய்வதும் அத்தனை சுலபமான வேலை அல்ல. சிந்தனை மட்டுமே இங்கே அதிகம் வேலை செய்வதில்லை. மற்றபடி பார்த்து எழுதுவதற்கான புலமை, பார்த்ததை மீண்டும் அப்படியே செய்ய  கட்டாயம் திறமை வேண்டும்.

டப்பிங், ரீமேக் என்பதற்கு வேறுபாடு உண்டு. டப்பிங் படங்களில் வசனங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்படும். ரீமேக் படங்களில் மொத்த விசயங்களையும் மாற்றி செய்யலாம், ஆனால் மூலபடத்தினை ஒட்டியதாக அமையவேண்டும் எனும் நிர்பந்தனைகள் ரீமேக் படத்திற்கு உண்டு. இன்றைய தினத்தில் ரீமேக் படங்கள் மிகவும் அதிகம் தமிழ் சினிமாவில் எட்டி பார்த்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் 'பெரிய' நடிகர்கள் என சொல்லப்படுபவர்களே இந்த ரீமேக் கலாச்சாரத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

இவர்கள் ஆங்கிலப்படத்தை, இந்திப்படத்தை, தெலுங்கு படத்தை, மலையாள படத்தை ரீமேக் செய்வதோடு மட்டுமில்லாமல் பழைய தமிழ் படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதைபோல தமிழ் படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எல்லா மொழிகளிலும் எடுத்து வெளியிடப்படும் திரைப்படங்கள் வெகு சில உண்டு. இப்படி ரீமேக் செய்வது இவர்களிடம் சிந்தனைகள் வற்றி போய்விட்டன என்பதையே காட்டுகிறது என சொல்வோர் உண்டு. 'அரைத்த மாவை அரைக்கும் மசாலா, காதல் கதைகள்' எல்லாமே ஒரு விதத்தில் ரீமேக் படம் தான் என்பதை இந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர்வது இல்லை.

ரீமேக் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றவையா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒரு மொழியில் உள்ள ரசனை மற்ற மொழியில் இருப்பது இல்லை. பொதுவாக மலையாள படங்களை தமிழில் அப்படியே ரீமேக் செய்தால் ஒரு படம் கூட ஓடாது என உறுதியாக சொல்லலாம். மலையாளத்தில் வெளியான சிறந்த படங்களை தமிழுக்கு என்றே மசாலா தடவி விற்றால் தான் வெற்றி பெறும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது.

ரீமிக்ஸ் பாடல்கள் அதைவிட மிகவும் கொடுமை என்போர் சிலர். மூல பாடலின் ஜீவனை ஒட்டு மொத்தமாக கொன்றுபோடும் அளவிற்கு 'டன் டன்' என இந்த காலத்து இசைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு அவை வலம் வந்து கொண்டிருக்கின்றன. தெய்வீக பாடல்கள் முதற்கொண்டு எல்லாமே இன்று ரீமிக்சியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் வெகுவாக ஜனங்களால் ரசிக்கப்படுவது என்பது ஓரளவுக்கு உண்மைதான். பாரதியார் கவிதைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தனித்தன்மை என்பதை பொறுத்தே ஒருவரின் திறமை பெரிதளவு பேசப்படுகிறது. தனக்கென ஒரு அடையாளத்தை காட்டாத எவருமே உலகில் பெரிதாக சாதித்தது இல்லை. ஒரிஜினாலிட்டி, நாவல்டி என சொல்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் எல்லா துறைகளுமே கிட்டத்தட்ட மூட்டை கட்டி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. எதற்கு கிடந்து மெனக்கெடுவானேன். சிம்பிளா ஒரு விசயத்தை செய்றதை விட்டுட்டு எதுக்கு காம்ப்ளிகேட் பண்ணனும் என்றே பலரும் நினைக்கிறார்கள். உடனடி வெற்றிதான் இப்போதைய இலக்கு. உடனடி வெற்றி உடனடியாக மறைந்து போய்விடுகிறது, அது காலத்திற்கும் நிற்பது இல்லை.

அதைப்போலவே வலைப்பூக்கள் எழுதும் பலரிடம் ஒரிஜினாலிட்டி இருப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நிலவி வருவது தவிர்க்க இயலாதது. அவசர உலகில் நின்று நிதானமாக எழுதும் நிலை எல்லாம் வெகு குறைவானவர்களிடமே இருக்கிறது என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது.

நாவல்கள், கவிதைகள், உபநிடதங்கள், வேதங்கள் என முன்னோர்கள் எழுதியவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்கள். இங்கே மூலத்தினை சிதைக்காமல் எழுதுவது மிகவும் அவசியம் ஆகிறது. இப்படி பல காலத்திற்கு முன்னாள் எழுதியவகைகள் திரும்பவும் எழுதுவதால் எழுத்துகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன, சிந்தனைகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் ஆகிவிடாது. அதைப்போலவே ரீமேக், ரீமிக்ஸ் போன்றவைகள் ஒரு துறையை சீரழித்து கொண்டிருக்கின்றன என்பது ஆகாது. பழையனவாகிய  அவை எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கொண்டு வருகின்றன என்றுதான் அர்த்தம் கொள்ளலாம். 

No comments: