தமிழகத்தில் தென்மாவட்டமாகிய விருதுநகர் அருகில் உள்ள குண்டத்தூரில் இருந்து ஒரு சாமி தாத்தா வருடம் தோறும் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள திண்ணையில் தினமும் ஒரு வாரத்திற்கு இரவு கதை சொல்வார். வீட்டில் என்னை கதை கேட்க சொல்லி போகச் சொல்வார்கள். ஆனால் நான் இரவு எட்டு மணி ஆனதும் தூங்க போய்விடுவேன். ஒருநாள் கூட அவர் சொன்ன கதையை கேட்க நான் போனது இல்லை.
வீட்டின் மாடியில் தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவர் பேசும் பேச்சுகள் காதில் காற்றோடு கலந்து வந்து விழும். அவருக்கு.நல்ல கனத்த குரல் அவர் கதை சொல்லி முடித்ததும் ஒரு பாடல் பாடுவார். ஆனால் என்ன என்ன கதை சொன்னார் என்பதெல்லாம் எதுவுமே தற்போது நினைவில் இல்லை, ஏனெனில் நான் கதையை காது கொடுத்து கேட்டது இல்லை. இந்த சாமி தாத்தா எனது உறவினர் தான். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. குண்டத்தூர் சென்றபோது ஒரு சில முறை பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்துவிட்டு புன்னகையோடு சென்றதோடு சரி. அவர் என்னிடம் பேசியது இல்லை, நான் அவரிடம் பேசியதும் இல்லை.
ஆனால் அவர் கதையின் முடிவில் பாடிய பாடலின் முதல் வரிகள் மட்டும் எப்போதும் என்னில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன. எனக்கு கோபம் வரும் போதெல்லாம் இந்த பாடல் மனதில் தைத்துவிட்டு போகும். ஆனால் கோபம் வந்தது வந்ததுதான். எதற்கு இந்த கோபம் என கோபம் வந்து சென்றபின்னர் சிந்தித்து பார்த்தால் 'எல்லாம் முட்டாள்தனமாக மட்டுமே தோன்றும்'.
அவர் பாடிய பாடலின் முதல் வரி இதுதான். 'கோவம் ஏனய்யா நாம சாவது நிசம் ஐயா' அதற்கடுத்து என்ன வரிகள் பாடினார், அந்த பாடல் எப்படி போகும் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த வரி மட்டும் என்னை மிகவும் பாதித்த வரி. நான் மிகவும் கோபக்காரனாகவே எனது வாழ்வில் நான் வாழ்ந்து இருந்து இருக்கிறேன். என்னை எனது வீட்டில் விசுவாமித்திரர் என்றே சொல்வார்கள்.
ஆனால் நான் கோபம் கொண்டது எல்லாம் அன்றைய நாட்களின் தேவைக்கு மட்டுமே. எனக்கு சமூக அக்கறையோ, சமூகத்தின் மீதான அக்கறையில் எழுந்த கோபமோ, அல்லது தீண்டத்தகாதவர் என எனது ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமுதாயம்தனை ஒடுக்கி வைத்தவர்களின் மீதான கோபமோ, சாலை போடப்பட்ட ஒரே மாதத்தில் பழுதாகிப் போன சாலை போட்டவர்கள் மீதான கோபமோ, சாதிகள் என பல சாதிகள் கொண்ட ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற கோபமோ இல்லை. எனது கோபம் எல்லாம் மிக மிக சின்ன சின்ன அதுவும் அற்ப விசயங்கள் என சொல்வார்களே அப்படித்தான் இருந்தது, இப்பவும் அப்படித்தான் இருக்கிறது.
இந்த கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்றே ஒருமுறை எனக்கு ஒருவர் சொன்னார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என மற்றொருவர் சொன்னார். ஆனால் இந்த கோபம் மொத்த குடும்பத்தையே வேரறுக்கவல்லது என்பதை பல கதைகளில் கற்று தெளிந்து இருக்கிறேன். இருப்பினும் கோபம் நம்மை விட்டு அகல்வதில்லை.
கோபத்தை எதற்காக கட்டுபடுத்த இயலாது? அல்லது கோபத்தை எதற்காக கட்டுபடுத்த வேண்டும்? எனது நண்பர் என்னிடம் சொல்வார், ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இந்த கோபம் எல்லாம் அனாவசியம் என்பார். ஆனால் அவர் கொண்டுள்ள கோபங்கள் பற்றி எதுவுமே பேசமாட்டார். நான் மிக மிக கோபக்காரன், ஆனால் எப்படி வெளிப்படுத்துவது, எங்கே வெளிப்படுத்துவது என்பதில் நான் மிகவும் கவனமாகவே இருக்கிறேன்.
சாலையில் போய்க் கொண்டிருப்பவனிடம் நான் ஒருபோதும் எனது கோபத்தை காட்டியது இல்லை. எனது உற்றார் உறவினர் என இவர்களிடமும் கூட நான் அவ்வளவாக கோபம் காட்டியது இல்லை. ஏதேனும் அவர்கள் செய்தால் கூட புன்முறுவலுடன் விலகிப் போய்விட முடிகிறது. இவர்கள் மீது கோபம் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற உணர்வு மேலிடுகிறது. இவர்களின்பால் எனது அன்பு கூட அளவுடனே இருக்கிறது. என்னால் முடிந்தால் அவர்கள் கேட்கும் உதவிகளை செய்வதுடன் நான் எனது அன்பு எல்லாம் அங்கே நின்றுவிடுகிறது. கேட்டுவிட்டார்களே என மாய்ந்து மாய்ந்து செய்யும் பழக்கம் எல்லாம் இல்லை. எவர் எப்படி பேசினால் எனக்கு என்ன என்கிற மமதை அதிகமாகவே இருக்கிறது.
ஆனால், எங்கு அன்பு அதிகம் செலுத்துகிறேனோ அங்கே நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அன்புதனை செலுத்தும் இடத்தில் அங்கே கோபத்திற்கு என்ன வேலை? புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த கோபத்தின் மூலம் நான் இதுவரை எவரையுமே அடித்தது இல்லை. ஆனால் வார்த்தைகளால் சுட்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஒருவேளை நான் அடித்து இருந்தால் ஏற்பட்டு இருக்கும் வலியை விட இந்த வார்த்தைகளின் வலி எனக்கு அதிகம் வலித்து இருக்கிறது.
கோபத்தை கட்டுபடுத்த பலமுறை நினைத்துவிட்டேன், ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள். மீண்டும் கோபம் வந்து தொலைக்கிறது. எனது சாமி தாத்தா பாடிய பாடலும் மனதில் ரீங்காரம் இடுகிறது. இறுதியாக ஒரு முடிவில் வந்து நிற்க முடிகிறது, அதாவது மனிதன் இறக்கும் வரையில் இந்த கோபம் இறப்பது இல்லை. ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொண்டு பல்லை நறநறவென கடித்து கொண்டு வார்த்தைகளை துப்பிவிடுகிறது.
சினம் - குலத்தை அழித்துவிடும். சினம் - நண்பர்களை குலைத்துவிடும்.
நியாயமான கோபம், தார்மீக கோபம் என கோபம் பற்றி என்னவெல்லாமோ சொல்லி நியாயப் படுத்துகிறார்கள். சாவே உனக்கு சாவு வராதா என கதறி அழுதானாம் ஒரு கவிஞன். மனித வாழ்வில் பலரும் கோபமே உனக்கு சாவு வராதா என்று கேட்பதில் கூட கோபம் கொள்கிறார்கள்.
கோபம் பற்றி எழுத தூண்டிய சகோதரி ஷக்திப்ரபா பதிவுக்கு நன்றி.
19 comments:
சகோ,
எனக்கும் ரொம்ப கோவம் வரும். என்னுடைய மிகுந்த அன்புக்கு உரிய சிலரிடம் மட்டும் அதி ஆக்ரோஷமாகக் காட்டுவேன். மற்றோரிடம் புன்னகைத்துப் போய்விடுவோம்.
நான் பயிற்சி செய்து கொண்டிருக்கும் சில
1. கோபம் வந்தவுடன், சிந்திக்கவேண்டும். இந்த கோபத்தில் நான் காயப்படுத்துவது என் காதலுக்கும் அன்புக்கும் உரியவர்களை.
2. கோபம் நம் சக்தியை வீணடிக்கிறது.
3. ஆழ்ந்து மூச்சு பயிற்சி ஐந்து நிமிடம் செய்யலாம்
4. சிந்தைக்கு சமாதானம் செய்யும் பாடல் அல்லது புத்தகம் படிக்கலாம்.
5. அந்த இடத்தை விட்டு முதலில் மெதுவாக அகன்றுவிடுங்கள்
முயற்சி செய்யுங்கள், நான் வெகுவாக என் கோபம் குறைவதை உணர்கிறேன். குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் பாய்ண்டுகள் உதவுகிறது.
அப்புறம் இன்னொரு குறள் நினைவுக்கு வரும்...உடனே வந்த கோபம் குறைந்து விடுகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
(உங்களுக்கும் அர்த்தம் புரியும் :) )
//கோபம் பற்றி எழுத தூண்டிய சகோதரி ஷக்திப்ரபா பதிவுக்கு நன்றி.
//
ஓ!! இதை இப்பொழுது தான் பார்த்தேன் :)
கோபம் குறைக்கவும் என் பதில் பயன்பட்டால் மகிழ்வேன் :)
***Shakthiprabha said...
சகோ,
எனக்கும் ரொம்ப கோவம் வரும். என்னுடைய மிகுந்த அன்புக்கு உரிய சிலரிடம் மட்டும் அதி ஆக்ரோஷமாகக் காட்டுவேன். மற்றோரிடம் புன்னகைத்துப் போய்விடுவோம். ***
Emotional outcome is one's true feeling unlike "artificial smiles". IMHO, It is nice that you reveal your "dislike" to others earlier than later. Don't keep accumulating that in your "account" as their "credit" and it will come out one day. The problem is, the favor you did by not revealing your true feelings to them is in fact, a "disfavor"! Yeah, you cheated them by being "polite"! :-)
Again, Shakthi or VR dont have to agree with me. It is truly, purely, my opinion. :)
மிக்க நன்றி சகோதரி. மிகவும் நல்ல வழிகள். நான் கோபப்படுவது ஒரு விளையாட்டு போல என நான் நினைப்பதால் என்னவோ நான் கொண்ட/கொள்ளும் கோபமானது சில மணித்துளிகள் மட்டுமே என்னில் இருக்கிறது.
கோபம் கொண்ட மறுகணம் அன்பில் எல்லாம் மறந்துவிடுவேன், ஆனால் என்னால் காயப்பட்டவர்கள் அத்தனை எளிதில் மறப்பதில்லை என்பதையும் அறிந்து இருக்கிறேன்.
இனிமேல் எக்காரணம் கொண்டும் கோபம் கொள்வதில்லை என மிகவும் நேர்மையான சத்திய பிரமாணம் நேற்றுதான் எடுத்தேன். நிச்சயம் அந்த சத்தியத்தை காத்து கொள்வதில் உறுதியாய் இருப்பேன். எனது எண்ணங்களை அமைதியாய் என்னால் தெரிவிக்க இயலும் எனும் நம்பிக்கை உள்ளது.
வருண், நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. தேக்கி வைத்து மொத்தமாக வெளிப்படுத்துதல் இத்தனை நாள் காட்டிய பொறுமையை சிதைத்துவிடும். நீங்கள் கூறுவது போன்று சில நேரங்களில் நான் செயல்பட்டது உண்டு. தேக்கி வைத்து அல்ல, சொல்ல வேண்டிய விசயத்தை தருணம் பார்த்து சொல்லிவிடுதல். இருப்பினும் கோபத்தை கட்டுபடுத்தி வாழ்வது சிறந்த முறை என்றே கருதுகிறேன்.
புறந்தள்ளுதல் போன்று ஒரு சிறந்த முறை எதுவும் இல்லை. எதற்கு கோபம் கொள்ள வேண்டும் எனும் சிந்தனையே கோபத்தை குறைத்துவிடும் அளவுக்கு சக்தி உடையது.
நாம் கோபம் கொள்பவர்களாக இருந்தால் நம்மிடம் பேசவே பலர் தயங்குவார்கள். :௦)
Varun,
I do agree with u completely, bottling one's feeling or artificial communication is not the solution. However even amidst extreme anger, filtered "words" are important. Normal words can also convey the intensity of anger, and one need not resort to unhealthy or hurting words.
Getting angry is healthy provided displayed with civic sense.
vr,
We share similar traits. I hold my anger for less then few seconds. I smile, forget and forgive easily too. But the intensity of anger for those few seconds is too high :) atleast used to be high :)
இன்று ஒன்றை நான் உணர்கிறேன் இது போன்று ஒத்த குணவான்கள் தான் இங்கே நண்பர்களாய் இருக்க முடியுமோ?! என்பது தான் அது....
தாங்கள் கூறிய யாவற்றிற்கும் கோபப் படுபவன் நானும் தான்... சொல்லும் கருத்தை கொஞ்சம் அழுத்தி, அவர்கள் மனம் சட்டென்று பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கணீரென்று கூறுவதும் கோபமாகப் பார்க்கப் படுகிறது! (ஜோதிட சாஸ்திரத்தில் உங்களுக்கு நபிக்கை இருக்காது) எனக்கு அதில் உள்ள சிலவற்றை ஆராயும் பொது பலதும் பொருந்துகிறது. இருந்தும் அதைப் பற்றி எதுவும் இங்கே வேண்டாம்.
நல்லவர் இருந்தும் கோபம் தான் தாங்க முடியாது என்னும் வகைக்கு...பொதுவாக எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், தான் சொல்லும் செய்யும் காரியங்களை நடுநிலையோடு யோசித்து (பெருமாபாலும்). இப்படித்தான் செய்ய வேண்டும் யோசிக்க நேரமில்லை என்று தீர்க்கமாகவே எதையும் பேசுபவர்கள்.... அன்பினாலும், உரிமையினாலும், கடமையினாலும் கட்டப் பட்டவர்கள் தாம் இதற்கு இரையாகிறார்கள்...
எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள் / இருக்கிறார்கள் இருந்தும் அவசியம் என்றால் மட்டுமே தொடர்பு கொள்வார்கள்.... அதே நேரம் நான் சொல்லும் வார்த்தைக்கு மற்றவர்களின் வார்த்தைகளை விட நம்பிக்கைப் படுவார்கள்.... இதற்கு மேற் கூறியதே காரணம் என்று நினைக்கிறேன்... உறவுகளும் அப்படியே...
சரி கோபத்தைப் பற்றியும் அதை எப்படி கையாள்வது என்பதுப் பற்றியும் சிந்தனை வந்ததே ஆரோக்கியமான விஷயம் தான்.... அதற்கு காரணம் என்னவென்றெல்லாம் யோசித்தால்.... நல்லக் குணம் படைத்தவர்களின் மீதும் அல்லது அவர்கள் கோபப் படும் கருத்தின் மீதுள்ள அக்கறையே!
நானும் உங்களைப் போல் பலவகைகளும் கையாண்டேன் ஏதோ ஒரு அளவுக்கு தான் முடிந்தது...
கடைசியாக தியானம்! என்பதே சிறந்தது என்று ஒரு முடிவுக்கு வந்து அதை இப்போது லேசாக ஆரம்பித்து இருக்கிறேன்.... ஆழ்மனத்தில் சென்று இந்த சிந்தனையை ஆழப் பதிய வைப்பது செய்து பாருங்கள் என்பதே எனது கருத்து.... அதென்ன ஆழ்மனது!.... தெரிந்திருந்தாலும் கூறுகிறேன்.. அமைதியான இடத்தில் அமர்ந்து முடிந்தால் விரிப்பின் மீது.... ஒரு பத்து பதினைந்து மூச்சுப் பயிற்சி செய்து.. உங்களின் சிந்தனையை நெற்றியில் கொண்டு வந்து நான் ஆழ்மனத்தில் இருக்கிறேன் என்று தாங்களே சொல்லிக் கொண்டு போக வேண்டும் அப்படிப் போகும் போது உங்கள் மனம் பலவற்றையும் நினைக்கும் அப்படி நினைக்க விடாமல், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை மனதிற்குள்ளே சொல்லுங்கள்... மனது மறையும் போது உங்கள் விருப்பத்தை பதியுங்கள்... பிறகு நீங்கள் ஆழ்மனதில் இருந்து வெளியேறுவதாக நினைத்துக் கொண்டும் நான் இனி சந்தோசமாகவும், கோபமின்றியும் இருக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே சாதாரண மனநிலைக்கு வாருங்கள் இவை யாவும் கண்களை மூடிக் கொண்டே செய்ய வேண்டும்..
செய்து பாருங்கள் நானும் செய்கிறேன்... யாவரும் செய்யலாம்...
இந்த சுய பரிசோதனை அல்லது அலசல் சாதாரணமாக எல்லோருக்கும் வருவதில்லை. தன்னைப் பற்றித் தானே சிந்திக்கத் துவங்கி விட்டால், அவர் சஞ்சரிக்கும் தளமே வேறாகிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடுட்னானே அன்பு, சந்தோஷம், கோபம் வெறுப்பு துக்கம் போன்றவை எல்லாம். இந்த உணர்ச்சிகள் மற்றவருக்குத் தீங்கு இழைக்காதவரை கவலைபபடத் தேவை இல்லை. கோபப் பட வேண்டிய இடத்தில் கோபப் படாமல் இருப்பதும் தவறுதான். இதற்குத்தான் ரௌத்திரம் பழகு என்றானோ பாரதி.?
அன்புச் சகோதரர் வி.ஆர்,
உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள அபிமானத்துக்கு சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன்.
சுட்டி கீழே:
http://minminipoochchigal.blogspot.in/2012/02/blog-post_06.html
//Shakthiprabha said...
vr,
We share similar traits. I hold my anger for less then few seconds. I smile, forget and forgive easily too. But the intensity of anger for those few seconds is too high :) atleast used to be high :)//
மிக்க நன்றி சகோதரி. இன்று காலையில் சின்னதாய் கோபம் எட்டிப் பார்க்க துடித்து ஓடிவிட்டது. :)
//Shakthiprabha said...
அன்புச் சகோதரர் வி.ஆர்,
உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள அபிமானத்துக்கு சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன்.
சுட்டி கீழே:
http://minminipoochchigal.blogspot.in/2012/02/blog-post_06.html//
தங்களின் அன்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விரைவில் விருதினை பெற்று கொள்கிறேன்.
//இன்று ஒன்றை நான் உணர்கிறேன் இது போன்று ஒத்த குணவான்கள் தான் இங்கே நண்பர்களாய் இருக்க முடியுமோ?! என்பது தான் அது....//
புரிந்துணர்வு என்று சொல்வது உண்டுதானே ஐயா.
//சொல்லும் கருத்தை கொஞ்சம் அழுத்தி, அவர்கள் மனம் சட்டென்று பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கணீரென்று கூறுவதும் கோபமாகப் பார்க்கப் படுகிறது! (ஜோதிட சாஸ்திரத்தில் உங்களுக்கு நபிக்கை இருக்காது) எனக்கு அதில் உள்ள சிலவற்றை ஆராயும் பொது பலதும் பொருந்துகிறது. இருந்தும் அதைப் பற்றி எதுவும் இங்கே வேண்டாம்.//
மிகவும் சரியே. நான் கொஞ்சம் அழுத்திப் பேசினாலே கோபம் என நினைத்துவிடுகிறார்கள். :) ஆனால் நான் உண்மையில் அந்த தருணத்தில் கோபம் கொள்வதில்லை. எதற்கு அமைதியாய் இருக்கிறாய் என்று கேட்டு கூட கோபபட வைத்து இருக்கிறார்கள். ஜாதகம் மிகவும் சுவாரஸ்யமானது.
//அன்பினாலும், உரிமையினாலும், கடமையினாலும் கட்டப் பட்டவர்கள் தாம் இதற்கு இரையாகிறார்கள்...//
:). நல்லதொரு கணிப்பு.
//கடைசியாக தியானம்! என்பதே சிறந்தது என்று ஒரு முடிவுக்கு வந்து அதை இப்போது லேசாக ஆரம்பித்து இருக்கிறேன்....
செய்து பாருங்கள் நானும் செய்கிறேன்... யாவரும் செய்யலாம்...//
தியானம் செய்ய இருக்கிறேன். ஓரிரு மாதங்களில் பலன் சொல்கிறேன். மிக்க நன்றி ஐயா.
//G.M Balasubramaniam said...
இந்த சுய பரிசோதனை அல்லது அலசல் சாதாரணமாக எல்லோருக்கும் வருவதில்லை. தன்னைப் பற்றித் தானே சிந்திக்கத் துவங்கி விட்டால், அவர் சஞ்சரிக்கும் தளமே வேறாகிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடுட்னானே அன்பு, சந்தோஷம், கோபம் வெறுப்பு துக்கம் போன்றவை எல்லாம். இந்த உணர்ச்சிகள் மற்றவருக்குத் தீங்கு இழைக்காதவரை கவலைபபடத் தேவை இல்லை. கோபப் பட வேண்டிய இடத்தில் கோபப் படாமல் இருப்பதும் தவறுதான். இதற்குத்தான் ரௌத்திரம் பழகு என்றானோ பாரதி.?//
மிகவும் சரியான கருத்து. ஆனால் கோபப்பட வேண்டும் எனும் இடத்தில் கூட எதற்கு கோபப்பட வேண்டும் என நினைத்தால் அங்கே கோபம் கொள்ள தேவையில்லை. அன்பினால் உலகை திருத்த முடியும் என எந்த ஒரு இதிகாசங்களும் எழுதப்படவில்லை என்றே கருதுகிறேன் ஐயா. மிக்க நன்றி.
good postநல்ல பதிவு .....
ஆறுவது சினம்...
கோபம் குடியை கெடுக்கும்....
////அன்பினால் உலகை திருத்த முடியும் என எந்த ஒரு இதிகாசங்களும் எழுதப்படவில்லை//
இந்தியா....???
நான் எழுதிவிடுகிறேன்....அந்த முயற்சியில் தான் இருக்கிறேன் :)
நன்றி புரட்சிமணி. விரைவில் எழுதி வெளியிட வாழ்த்துகள்.
*** கோபப் பட வேண்டிய இடத்தில் கோபப் படாமல் இருப்பதும் தவறுதான். இதற்குத்தான் ரௌத்திரம் பழகு என்றானோ பாரதி.?
7 February 2012 06:50 ***
அருமையாக சொல்லியிருக்கீங்க! பாரதி தன் கோபங்களை அடக்கி 100 ஆண்டுகள் ஊருக்காக வாழ்ந்திருந்தால் இப்போ நமக்கு அவருடைய் உணர்ச்சிகளின் வெளிப்பாடான அருமையான கவிதைகள் கிட்டியிருக்காது. அக்ரஹார சட்டதிட்டங்களுக்கு தன் உணர்வுகளை பலி கொடுத்து ஏதோ 100 ஆண்டுகள் வாழ்ந்து நமக்குத் தெரியாமலே செத்து இருப்பார். அவர் உணர்ச்சிகளை, தன் கோபத்தை, புன்னகையால் மறைத்து தன்னையும் மற்றவர்களியும் ஏமாற்றாமல் வெளிப்படுத்தியதால்தான் அவர் இன்னும் ஆயிரக்கனக்கான ஆண்டுகள் வாழ்ந்துகொண்டேயிருப்பார்!:)
கோபத்தை கட்டுபடுத்த முடிஞ்சா உலகத்துல நெறைய பிரச்சனைகள் இல்லாம போய்டும்... வீட்லயும் தான்...:) நல்ல பதிவு
பாரதியார் காதல் கவிதைகளுக்கும் பெயர் போனவர் வருண். அவரது விடுதலை விடுதலை எனும் கவிதையை விட காக்கை சிறகினிலே நந்தலாலா கவிதையை அதிகம் தெரிந்தவர்கள் உண்டு.
அக்னி குஞ்சொன்று கண்டேன் எனும் கவிதையை ரசிப்பவர்களைவிட நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா ரசிப்பவர்கள் ஏராளம்.
அசோக சக்ரவர்த்தி, மாவீரர் அலெக்சாண்டரை விட பெரும் நன்மதிப்பு பெற்றவர் என்றே உலகம் அறிந்து இருக்கிறது.
மகாத்மா காந்தியடிகள் உலகில் மிகவும் நேசிக்கப்படும் தலைவர்.
கோபம் கொள்வது என்பது அனைவருக்கும் இயல்பு, அந்த கோபத்தை எப்படி ஒரு மாபெரும் சக்தியாக மாற்றுகிறோம் என்பதில் தான் நாம் அனைவருமே வேறுபடுகிறோம். நன்றி.
மிக்க நன்றி அப்பாவி தங்கமணி. மிகவும் சரிதான்.
இந்தக் கோபம்தானே எத்தனை பெரும்பிரச்சனைகளைக் கொண்டு வந்திருக்கிறது.வயது பக்குவப்பட கோபத்தை உணர்ந்து
குறைக்கமுடிகிறது !
நன்றி ஹேமா.
Post a Comment