பகுதி - 3
திருமூலர் கதையை பற்றி அறிந்ததும் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றே மனம் சொல்லி அமைதி கொண்டது. பேய் பிடித்து அதை விரட்ட சொல்லி எங்கள் ஊருக்கு முனியாண்டி என்ற ஒரு பூசாரியிடம் வந்த பலரின் கதையை கேட்டதுண்டு. ஒவ்வொருவரும் ஒரு விதமாகவே சொன்னார்கள். அந்த அம்மா, அந்த பொண்ணு போலவே பேசினாங்க. என்ன நடந்த்துச்சினு, எப்படி நடந்துச்சுன்னு சொன்னாங்க என்றெல்லாம் சொன்னதை கேட்டதும் மனதில் ஆச்சர்யம் பொங்கி வழிந்தது. ஆனால் இதுவரை எதையும் சோதனை செய்தது இல்லை.
நான் உறங்கி கொண்டிருக்க, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஆவியை வைத்து விளையாடிய கல்லூரி நண்பர்கள் சொன்ன கதை பலிக்காமல் போனது கண்டு புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்தது.
திருமூலரின் கதை சுருக்கத்தை மீண்டும் பார்க்கலாம்.
திருமூலர் சுந்தரநாதா எனும் இயற்பெயர் கொண்டவர். இவர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு அல்லது பதினோராம் நூற்றாண்டு என்றே கருதபடுகிறது. அதுவும் இவர் எழுதிய திருமந்திரம் மூலமே இவரது காலம் கணிக்கப்படுகிறது. அதாவது எப்போது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்கிற ஒரு விபரங்கள் கிடைக்காத படச்சத்தில் இவரைப் பற்றிய ஒரு விசயம் பரவலாகப் பேசப்படுவது ஆச்சர்யமே. அதாவது இவர் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்று கொண்டவராக சொல்லப்படுகிறது. இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்தி மூன்று நாயன்மார்களிலும் ஒருவராகவும் போற்றப்படுகிறார்.
இவர் இமாலய மலைப்பகுதிகளில் தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது. இமாலய மலைப்பகுதிகளில் தோன்றிய இவர் தென்னிந்தியாவிற்கு வந்து அதுவும் தமிழில் மூவாயிரத்திற்கும் மேலாக பாடல்கள் இயற்றி இருப்பது பெருமைக்குரியது. பொதுவாகவே இந்த சித்தர்கள், முனிவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் போலவே இடம் விட்டு இடம் செல்லுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மனிதர்கள் வணிகம் செய்ய செல்வார்கள், இவர்கள் எதற்கு இப்படி இடம் பெயன்றார்கள்?
இவர் பொதிகை மலையில் இருந்த தனது நண்பர் அகஸ்தியரை காணவே கைலாய மலைகளில் இருந்து கிளம்பினாராம். அன்றைய காலத்தில் தொலைபேசி இல்லை, கடித போக்குவரத்து புறா மூலம் இருந்து இருக்கலாம். இதை எல்லாம் உபயோகிக்காமல் நேரடியாக அகஸ்தியரை காண திருமூலர் கிளம்பிவிட்டார். அப்படி வரும்போது சாத்தனூர் எனும் ஊருக்கு அருகில் பசுக்கள் எல்லாம் இறந்து போன ஒரு மனித உயிரை சுற்றி அழுது கொண்டிருந்தனவாம். அந்த மனிதர் மூலன், அந்த மாடுகளை தினமும் மேய்ப்பவன். இப்படி மாடுகள் அழுவதை கண்டு இரக்கப்பட்ட திருமூலர், தான் ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்தார். தனது உடலை ஒரு மரக்கட்டையில் பத்திரப்படுத்திவிட்டு இந்த மூலன் உடலில் தான் உட்புகுந்தார். அந்த மாடுகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அந்த மாடுகளை எல்லாம் வீட்டில் பத்திரமாக சேர்த்துவிட்டு தனது உடலை பார்க்க வந்த திருமூலர் உடல் காணாமல் போனது கண்டு கலக்கமுற்றார். இப்போது மாடுகள் திருமூலருக்கு வழிகாட்டியதா? அல்லது மூலனின் உடலில் நுழைந்ததால் எல்லா விசயங்களும் திருமூலருக்கு நினைவுக்கு வந்ததா? இப்போது தான் மூலன் இல்லை என்கிற ஒரு உணர்வு திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும், அதே வேளையில் மூலன் என்பவனின் எண்ணங்களும் திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும். எது சரி?
அந்த மூலனின் உடலில் இருந்து கொண்டே பல பாடல்கள் இயற்றியமையால் திருமூலர் எனும் பெயர் அடைந்தார் என்கிறது வரலாறு. இப்போது இந்த பாடலை எழுதியது மூலன் என்பவனா? அல்லது மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதா எனும் திருமூலரா? மூலனின் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் சிந்தனையை உருவாக்கியது திருமூலரின் ஆன்மாவா? அல்லது மூலனின் சிந்தனைகளா?
சுந்தரநாதா என இருந்தவரை எந்த ஒரு பாடலும் இயற்றியதாக வரலாறு இல்லை. அதுவும் சுந்தரநாதா என இருந்தபோது என்ன மொழி இவர் அறிந்து இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் கிடையாது. மூலன் தமிழன். தமிழில் பாடல் இயற்றிய திருமூலர் இதை எங்கேனும் சொல்லி இருக்கிறாரா என பாடல் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
எதற்கு திருமூலர் கதை? எழுதியவரே இப்படி எல்லாம் எழும் கேள்விகள் என ஆங்காங்கே பதில்கள் எழுதி வைத்து இருக்கிறார். அதே வேளையில் நரம்பு மண்டலத்தை அலசி பார்க்க இதுதான் ஒரு சிறந்த வழியாக தெரிகிறது. பரிணாமம், கடவுள் என்றெல்லாம் பேசி பேசி மொத்த நரம்பு மண்டலத்தை சிதைத்து கொண்டிருக்கிறோமோ என்னவோ!
நரம்புகள் பற்றிய பார்வை மூலம் எப்படி ஒருவர் முக்காலமும் அறிந்தவராக மாற முடியுமா என்பதை காணலாம். இந்த நரம்பு மண்டலம் தான் சிந்தனைகளை தூண்டுகின்றனவா? நமது மூளைக்கும், விலங்குகளின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? இந்த மூளையை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் பகுதி என ராமச்சந்திரன் என்பவர் மூளையில் ஒரு இடத்தை கண்டுபிடித்ததாக நுனிப்புல் நாவலில் எழுதி வைத்தேன். அதாவது கடவுள் பற்றாளர்கள் மத, கடவுள் எண்ணம் எழும்போது மூளையில் ஒரு பகுதி அதிக அளவில் செயல்படுவதாகவும், அதே வேளையில் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு மூளையில் அந்த பகுதி செயல்படுவதில்லை எனவும் சொல்லி இருப்பது விவாதத்திற்கு உரியது என்றாலும் ஒன்றை ஒன்றுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதுதான் அறிவியலில் உள்ள வேலை.
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றும் இல்லை
அவனன்றி ஊர்புகு மாற்றி யேனே (6 )
மேற்குறிப்பிட்டபடி திருமூலர் வரலாறு என்றே திருமூலரே பல பாடல்களில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில் இப்படி எழுதி இருக்கிறார்.
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாக தமிழ்ச்செய்யு மாறே (80 )
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளால் நானி ருந்தேனே (92 )
இந்த பாடலில் திருமூலர் ஒரு ரகசியத்தை எழுதி வைத்து இருக்கிறார். மூலனை நாடிப்பின் சதாசிவ னாயினேன்.
அதிலும் ஒரு சிறப்பு.
சுந்தரனாதன் எழுதியது என்று திருமூலர் சொல்லவில்லை.
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே (99 )
யான் பெற்ற பெறுக இவ்வையகம் என்றே சொல்கிறார் திருமூலர். அதோடு மட்டுமில்லாமல் மூலனின் உடலில் உட்புகும் முன்னர் சிவனோடுதான் இருந்தேன் என்கிறார். சிவநாமங்கள் ஓதிக்கொண்டிருந்தேன். நந்தியின் இணையடிக்கீழ் இருந்தேன் என்கிறார்.
விநாயகர் பற்றி துதி எழுதியது திருமூலர் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுவது உண்டு. திருமூலருடன் சேர்ந்து பல முனிவர்களை சந்திப்பதோடு நரம்பு மண்டலம் நோக்கிய பயணம் தொடரும்.
4 comments:
திருமந்திரத்தில் இடைச் சொருகல்கல் உண்டு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், ஸ்வாமி ஓம்கார் திருமூலர் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்
மிக்க நன்றி கோவியாரே. மேலும் விபரங்களை ஓம்கார் அவர்களின் பதிவுகளில் படித்து தெரிந்து கொள்கிறேன்.
திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டது மூவாயிரம் பாடல்கள். ஆனால் மூவாயிரத்து எண்பத்தி ஒரு பாடல்கள் என ஒரு இடத்திலும் மூவாயிரத்து நாற்பத்தி எட்டு என மற்றொரு இடத்திலும் காணப்பெற்றேன். இடைச்செருகல் செய்யப்பட பாடல்கள் எவை எவை என அறிதல் கடினம் தான், அதே போல வார்த்தைகள் மாற்றியமைத்து இருந்தால் கூட எவருக்கு தெரியப்போகிறது. சிதைத்தல் வேலைகளை நன்றாகவே நம் மக்கள் செய்வார்கள்.
தொடருங்கள் சகோ. படிக்க நிறைய தகவல். இடம் பெயர்வதற்கான முக்கிய காரணம். பற்றறுப்பதும் ஒரு நோக்கம் என படித்ததுண்டு. எவ்வூரும், எந்நாடு, எந்நாட்டு மக்களும் மாடும், ஆடும், மரமும் தனக்கு சொந்தமல்ல, என்ற பரந்து விரிந்து போய்க்கொண்டிருபப்தே.
அட, வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நன்றி சகோதரி.
Post a Comment