சுயநலமற்ற மனிதர்களின் கருத்துமலர்கள் சத்திய வாக்குதான். என்னைப் பொருத்தவரை அவர்கள் மனிதர்களே. வாழ்வில் இப்படித்தான் வாழ வேண்டுமெனெ சத்தியத்துக்கு கட்டுபட்டு வாழ்ந்த ஷீர்டி சாய்பாபா போன்ற வெகு சில மனிதர்கள் போற்றத்தக்கவர்கள்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் என்னைப் பொருத்தவரை அவர்கள் கூறிய கருத்துமலர்களை மட்டுமே போற்றி கொண்டு இருக்காமல் நாமும் ஒரு சாய்பாபா போல வாழ்ந்து காட்டுவதுதான் அவர் போன்றோரை பின்பற்றுபவர் செய்ய வேண்டிய அரிய செயலாகும். இது எவருக்கும் வாய்ப்பது அத்தனை எளிதில்லை, அதனால்தான் ஒரே ஒரு ஷிரிடி சாய்பாபா மட்டுமே இருக்கிறார், மற்றவர்கள் எல்லாம் அவர்களின் அடியார்களாக இருக்கிறார்கள். இது நான் மக்களின் மீது சொல்லும் குற்றசாட்டு அல்ல.
சாதாரண மக்கள் தங்களால் வாழ இயலாத வாழ்க்கையை இந்த மகான்களிடம் காண்பதால் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைத் தாங்களே முடக்கி கொள்கிறார்கள் என்பதுதான் எனது எண்ணம். இதன் காரணமாக மனிதர்களை கடவுளாக வழிபடுதல் என்பது அவரவரின் மனதுக்கு ஏற்ப நடக்கும் நம்பிக்கை எனும் செயல்பாடு. இந்த நம்பிக்கை இருக்கும் மட்டுமே ஷ்ரிடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராகவேந்திரர் போன்ற மகான்கள் மீதான பற்றுதல் தொடர்கிறது. இப்பொழுது சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் எனும் மனித உருவில் உள்ள தெய்வங்கள் என சொல்லப்படுபவர்களை எடுத்துக் கொள்வோம். இந்த தெய்வங்கள் எல்லாம் இன்னல்களில் இருந்து காத்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை ஒன்றுதான் நம்மை அவர்களை வணங்க செய்கிறது. ஊரில் விளையாட்டாக சொல்வார்கள், கஷ்டம்னு ஒன்னு வந்தாத்தான் கடவுள் நமது கண்களுக்குத் தெரிவார் என்பார்கள்.
மரணமடைந்த எனது தாய் இறைவனாக இருந்து காத்து கொண்டிருக்கிறார் என எனது தந்தை அடிக்கடி சொல்வார், என்ன முட்டாள்தனம் என்றே எனக்குத் தோன்றும், ஆனால் பிறரது நம்பிக்கைகளை உதாசீனப்படுத்தும் யோக்யதை எனக்கு இல்லை, யோக்யதை இருந்தாலும் உதாசீனப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, எனவே சிரித்து கொண்டே அமைதியாக இருப்பேன். கிராமத்து வீட்டில் எனது தாத்தா, எனது தாய் என பூஜையறையை அலங்கரித்து கொண்டிருப்பார்கள். அதே போல எனது மற்றொரு தாத்தாவுக்கு (எனது தாயின் அப்பா) கிராமத்து தோட்டத்தில் சமாதி ஒன்று உண்டு, அங்கே பூஜைகள் எல்லாம் நடக்கும். அதே போல நாச்சாரம்மாள் எனும் குழந்தை தீயில் விழுந்து இறந்து போனதால் அந்த குழந்தை நம்மை காக்கும் என அவரையும் ஒரு வீட்டில் தெய்வமாக கொண்டாடுவோம். இப்படி மனிதர்களை கடவுளாக வைத்து வணங்கிப் பார்க்கும் பழக்கம் நம்மில் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் என்ன வேண்டும்? நிம்மதி! அந்த நிம்மதி எந்த ரூபத்தில் வந்தால் என்ன என்கிற மனப்பக்குவம் உடையவர்கள் தான் நாம்.
எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஆனால் இறைவன் இருக்கிறார். எப்படி இருக்கிறார், ஏன் இருக்கிறார், எதனால் இருக்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இறைவன் இருக்கிறார் அவ்வளவே. எனது செயல்பாடுகளுக்கே நானே காரணம். இதில் இறைவன் பங்கு கொள்வதும் இல்லை, பங்கு பெறுவதும் இல்லை. நான் என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறேன். நன்றும் தீதும் பிறர்தர வாரா என சொன்னவர்கள் இந்த வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்தவர்கள்.
ஏதேனும் தவறாக நடந்தால், ஏதேனும் நேர்மாறாக நடந்தால் 'தெய்வம் சும்மா விடாது' என சொல்பவர்களை கண்டு சிறுவயதில் மிகவும் பயந்தே இருக்கிறேன். இப்பொழுது கூட வாழ்வில் நடக்கும் பல விசயங்களைப் பார்க்கும்போது நமக்கு அதனதன் காரண காரியங்கள் தெளிவதில்லை தெரிவதும் இல்லை. நான் முதன் முதலில் நாவலுக்கு எழுதிய கவிதை
நீ என் அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை.
இது எனது மனைவி அருகில் இருக்க நான் எழுதியது. இங்கே இறைவனைப் பொருத்திப் பார்க்கலாம், எனது மனைவியை நினைத்தும் பார்க்கலாம்.
மனிதர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் இறைவன் பொறுப்பு ஏற்பது இல்லை, எனினும் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் ஒரு காரணியாக காட்டப்படுவதால் மனிதர்களின் நம்பிக்கை, தெய்வங்களிடம் மட்டுமின்றி மனிதர்களிடமும் பரவி இருக்கிறது என்பதுதான் நான் இதுவரை கண்டுகொண்ட விசயம்.
அவரவருக்கு எது எது பிடித்து இருக்கிறதோ அதன்படி அவர்கள் மட்டுமே நடந்து கொண்டால் பிரச்சினை இல்லை, அதை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது பெரும் பிரச்சினைக்கே வழி வகுக்கும்.
நான் அவர்களின் அருகில் இல்லாத காரணத்தினால் மகான்கள் எனப் போற்றபடுபவர்கள் எல்லாம் என்னை வியக்க வைக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களைப் பற்றி என்னில் பல அபிமானங்களை பிறர் திணித்துவிடுகிறார்கள், அல்லது அபிமானங்களை நானே திணித்துக் கொள்கிறேன்.
ஒரு கட்டத்துக்குள் நம்மை நாமே நுழைத்துக்கொள்ளும்போது எந்த சிந்தனையும் முழுமை பெறுவதில்லை.
உருவ வழிபாடு தப்பும் இல்லை, வழிபாடு பண்ணாம இருப்பதும் தப்பு இல்லை. அவரவருக்கு அவரவர் செயல்கள் தப்பே இல்லையாம்!
12 comments:
இந்த விஷயம் குறித்து பலரும் எழுதுகிறார்கள். நானும் எழுதி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் இது குறித்து புரிந்து கொள்வது மிகவும் அசாதாரண காரிய மாயிருப்பதால்,அறியாமை இருளில் இருப்பதே மேல் என்றும் எழுதி இருக்கிறேன் விடை தேட வேண்டிய கேள்விகள்.
நன்றி ஐயா. விரைவில் வாசித்து விடுகிறேன்.
வழிபாடு என்பது ஆன்ம பலத்தைக் கூட்ட... அது உண்மையாக இருக்க வேண்டும். வியாபாரமாக இருக்கக் கூடாது. அது இறைவனைப் பற்றிய தவறானப் புரிந்துணர்வே!... மேலும் எந்த வழிபாடும் ஒரு பாலப் பாடம் போன்றதே என்பார் விவேகானந்தர்... அடுத்தபடி வாருங்கள் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி கல்லூரி அதற்கு மேலும் ஆராய்ச்சி ஏற்று போக வேண்டும்.. அதுக்கு மற்ற ஏதுக்களும் அமைய வேண்டும். சரி அது அப்படி இருக்கட்டும்... அவரே கூறுவார் எந்த வெற்றிக்கும் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு அவரவரேக் காரணம் என்றும்... ஒரு விழுக்காடு சிலர் அதிர்ஷ்டம் என்பார், சிலரோ ஆண்டவன் அருள், விதி என்பார் என நான் புரிந்துக் கொள்கிறேன்...
தாங்கள் கூறுவது போல் உலகில் எல்லா மதங்களிலும், எல்லா மக்களுமே மகாத்மாக்கள் கூறியக் கருத்தைப் போற்றுவதை விடுத்து அந்தக் கருத்தை கூறிய மகாத்மாவையே கடவுளாக்கியது தான் பெரும் குறை.
பழங்காலந்தொட்டே இறந்தவர்களைப் பற்றிய கருத்து பலவாறு வந்துள்ளது... ஏன்? இறந்த பின்பு அந்த உடம்பை அழித்தால் அவர்களின் ஆத்மாவும் அழியும் என்பதாலே பிரமீடுகளில் மம்மிகள் உறங்கிக் கிடந்தன... அதற்கு மேல் அந்த ஆத்மாக்கள் தங்கள் உடல் இல்லாததால் செய்ய விரும்பிய எதையும் செய்ய முடியாது மனிதர்களை தொந்தரவு செய்வதாகவும் நம்பி வந்தார்கள் அந்த பாபிலோனிய எகிப்திய மூடத்தனம் நம்மிடம் நேர்மறையாக கருதப் பட்டு குடும்பத்தைக் காப்பதாக எண்ணப் பட்டதாம்... அத்வைதம் அதையும் மாற்றிக் கூறி சென்றுள்ளதாகவே அறிகிறேன்... எப்படியும் வேதாந்தக் கருத்துப் படி இவைகள் எல்லாம் வேறு அவைகளைப் பேசினால் நீளும்...
பக்தர்களின் வகையையும் அதில் நான்காவது வகையாக கூறப் படும் ஞானிகளின் வகையைப் பற்றியும் அவர்களுக்கும் இறைவனுக்கும் உள்ளத் தொடர்பைப் பற்றி பகவத் கீதை -ல் பார்க்கலாம். எதுவானாலும். ஆத்திகமோ, நாத்திகமோ அல்லது இரண்டிலும் குழம்பிய நிலையோ எதுவானாலும் தனது கடமைகளை சரியாகச் செய்து "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவர்" என்னும் வேதத்தின் சாரத்தை வள்ளுவர் அழகாக சொல்லி யுள்ளார்...
தங்களின் ஆக்கம் நன்று....
Geetha 7:16
அற்புதமான கருத்துகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தமிழ் விரும்பி ஐயா.
இறைவன் இருக்கிறார் அவ்வளவே. எனது செயல்பாடுகளுக்கே நானே காரணம்.
அருமையான பதிவு.
அருமையான வரிகள்.
ஆழ்ந்த கருத்துகள்.
வாழ்த்துகள்.
இருக்கிறது
இல்லவே இல்லை
இருந்தால் நல்லது
இப்படி கடவுள் குறித்த கருத்துக்கள் பலப் பல
இதற்கு சரியான விளக்கம் எனச் சொன்னால்
கவியரசு அவர்களின்
"உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை " என்பதே சரி என்பதே என் கருத்து
மனம் கவர்ந்த பதிவு.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரத்னவேல் ஐயா.
நம்பிக்கை என வரும்போது உண்டு என்றால் உண்டு என்பதும் இல்லை என்றால் இல்லை என்பதும் சரிப்பட்டு வரும். உண்மை என வரும்போது 'வெறுமையே' மிஞ்சும். நன்றி ரமணி ஐயா.
//இறைவன் இருக்கிறார் அவ்வளவே. எனது செயல்பாடுகளுக்கே நானே காரணம். இதில் இறைவன் பங்கு கொள்வதும் இல்லை, பங்கு பெறுவதும் இல்லை. //
உண்மை தான். நல்ல பகிர்வு.
நன்றி சகோதரி, சில விசயங்கள் நம்மை வெகுவாக யோசிக்க வைப்பதுண்டு. இதற்கெல்லாம் யார் காரணம், என்ன காரணிகள் என புரிய முடியாத நிலையில் இறைவன் தெரிகிறார்.
வண்க்கம் சகோ
அருமையான் பதிவு!.நான் இறை மறுப்பாளன் என்றாலும் இயற்கையே படைப்பு,காக்கும்,அழிக்கும் சக்தி என்ற [அறிவியல் ரீதியான் ] அனுபவ பூர்வமான் உண்மையை ஏற்கிறேன்.நம்பிக்கையாளர்கள் இயற்கையை ஒரு உருவகப் படுத்தி வழிபடுவதோடு மட்டும் நிற்காமல் அதனை பாழ்படுத்தாமல் இருக்க ஆவண செய்வதுதான் மிக சிறந்த வழிபாடு.
" நாம் பிரபஞ்சத்தில் ஒரு துளி"
பஞ்சபூத ,முன்னோர்,இயற்கை வழ்பாடு இந்தியாவில் இயல்பான ஒன்று.இருப்பினும் ஆன்மீகம் என்பது மதம் சாராத சுயநலமற்ற தேடலாக மட்டும் இருப்பது நல்லது.கூட்டம் சேர்க்க ,அரசியல் அதிகாரம் என்றால் சிக்கல்தான்.
நன்றி
புரிந்து கொள்ள முடிகிறது சகோ. நன்றி.
Post a Comment