Thursday, 12 January 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? எனது பெயர் முகமது பின் துக்ளக்

முன்பகுதி 

தொலைந்த நாகரிங்கள் பற்றி பார்க்கும் முன்னர் ஒரு முக்கியமான நபரை பற்றி பார்த்துவிடுவது சிறப்பு தரும் என்பதால் அவரே நம்மிடம் பேசுகிறார்.

--------

எனது பெயர் முகம்மது பின் துக்ளக், அதாவது நீங்கள் எப்படி என் சகோதரன் பின் லேடனை உச்சரிப்பீர்களோ அதைப்போலவே எனது பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டும். பேருந்தினை 'பின்னால்' தள்ளினால் என்ன ஆகும் என கேட்டால் 'பின்' வளைந்து விடும் என மொக்கை சொல் சொல்வார்களே அது போல எனது பெயரில் நகைச்சுவை உண்டு என நீங்கள் கருதினால் அது உங்கள் முட்டாள்தனம். எனது பெயரில் நாடகம், திரைப்படம் கூட எடுத்து இருக்கிறீர்கள், அந்த திரைப்படத்தை நான் பார்த்து சிரித்து சிரித்து அழுதேன். சோ எனும் இந்துத்துவா எடுத்த படம் அது. அவரது பத்திரிக்கைக்கு கூட துக்ளக் என்றே பெயர் இட்டு எனது பெருமை நிலை நாட்டி மத நல்லிணக்கத்தை காட்ட முயற்சி செய்து இருக்கிறார். துக்ளக் என்றால் கோமாளி என்று அர்த்தம் தனை சொன்ன சோ வேண்டுமானால் கோமாளியாக இருக்கலாம், நான் ஒருபோதும் கோமாளியாக இருந்தது இல்லை. மேலும் முசலமான் மட்டும் தான் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய நெடுநாளைய கனவு அல்ல. இந்துக்கள், ஜெயின் மதத்தவர்கள் என அனைவரையும் நேசிக்கும் மனப்பான்மை எனக்கு அதிகம் உண்டு. இதை புரிந்து கொள்ளாதவர்கள் பற்றி நான் என்ன செய்ய இயலும்?

என்னை அறிவிற்சிறந்த முட்டாள் என்றே உலகம் அழைத்து வருகிறது கண்டு வெகுவாக மனம் உடைகிறேன். நான் அறிவினை முட்டாள்தனமாக உபயோகித்தேனா என்பது குறித்து விளக்கம் தருமாறு பலர் கேட்கிறார்கள். நான் பல நல்ல நல்ல திட்டங்களை நாட்டில் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அதை சரிவர செயல்படுத்தவில்லை என்பதால் என்னை அறிவிற்சிறந்த முட்டாள் என்றே சொல்கிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன், திட்டம் ஒன்றை கொண்டுவந்தால் அதை வெற்றி பெற செய்வது அரசரான நானா, மக்களா? மக்கள் எதையுமே புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இருப்பதில்லை. அவர்களது நலத்திட்டங்கள் என்று தெரிந்து இருந்தும் எனது திட்டங்கள் தோல்வி அடைந்ததற்கு மக்களே காரணம். அவர்கள் தான் கோமாளிகள், நான் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறேன்.

நான் பல துறைகளில் தேர்ச்சி பெற்று இருந்தேன். என்னை தத்துவ ஞானி என போற்றுவார்கள். கணித புலமை எனக்கு நிறைய இருந்தது. எனக்கு சமஸ்கிருதம் முதற்கொண்டு பெர்சியன், அரபிக், துர்கிஷ் போன்ற மொழிகளில் புலமை பெற்று இருந்தேன். எனது அரசு எல்கைகள் விரிவடைந்ததால் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினேன். தொவ்லபாத் என்று பெயரிட்டது உண்மைதான். ஆனால் தேவகிரியில் போதிய வசதிகளை பெருக்க முடியாததால் எனது திட்டம் தோல்வி அடைந்தது. மொத்த மக்களையும் டெல்லியில் இருந்து நான் இடமாற்றம் செய்தது எனது தவறு என்றே சொல்கிறார்கள். தலைநகரை மட்டுமே மாற்ற நினைத்த நான் எப்படி மக்களை என்னுடன் கொண்டு செல்ல முயற்சி செய்து இருப்பேன். நான் தலைநகர் மாற்றியதும் ஒரு கவிஞர் டெல்லி சாத்தான்களின் கூடாரமாக இருந்தது என்று எழுதி இருக்கிறார்.  வரலாற்றை திரித்து திரித்து எழுதுவதுதான் அனைவரின் வேலையா? அது சரி, இந்தியாவின் தலைநகரை டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்திருக்கு மாற்றினால் எப்படி இருக்குமோ அப்படி ஆகிவிட்டது எனது செயல்பாடு, இதற்காக நான் அறிவிற்சிறந்த முட்டாள் என அழைக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம், என்னை கோமாளி என சொல்வது எப்படி சரியாகும்?

நாணயங்களில் என்னை நானே பதித்து அழகு பார்த்தேன், எனது தந்தையை பதித்து அழகு பார்த்தேன். வரிவடிவ வரைவியல் எனக்கு பிடித்தமானதாக இருந்தது, இதன் காரணமாக நான் ஏராளனமான தங்க நாணயங்கள் உற்பத்தி செய்தேன். நான் எழுதியதில் எனக்கு பிடித்தது என்னவெனில் 'எவர் ஒருவர் சுல்தானுக்கு தலைவணங்குகிறார்களோ அவர்கள் இரக்கமுள்ள இறைவனுக்கு தலை வணங்குகிறார்கள்' என்று குறிப்பிட்டேன். இதன் மூலம் பல நாணயங்கள் அதிக விற்பனைக்கு போனது. அது எனது ராஜ தந்திரம் ஆகும்.


தவறு செய்பவர்களுக்கு, என்னை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்தேன். எப்படி ஹிட்லர் குளிரில் சென்று மாட்டினாரோ அதைப்போலவே எனது படைகள் சீனப் படையெடுப்பின் போது குளிரில் மாட்டி கொண்டன. அதற்காக ஹிட்லரும் நானும் கோமாளிகளா? எனக்கு எதிராக நடத்த அடக்குமுறை போராட்டத்தை எதிர்க்க புறப்பட்ட நான் நோய்வாய்பட்டு இறந்தேன். எனது அறிவை போர் போன்றவைகளில் செலவழிக்காமல் மக்கள் நலனுக்காக செலவழித்து இருக்கலாமோ என இப்போது கண்ணீர் விட்டு கதறுகிறேன், என்ன செய்வது. காலம் கடந்துவிட்டது. 

வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்ற நான் எனது அகங்காரத்தால் சீரழிந்து போனேன், வாழ்க்கையில் சீரழிய முட்டாள்தனமான அறிவு ஒன்றே போதும் என்பதற்கு என்னை உதாரணமாக காட்ட முனைகிறார்கள். அது முற்றிலும் தவறு. எனது அகங்காரம் எனது அறிவை மறைத்தது. வாழ்வில் சீரழிய 'தான்' என்ற அகங்காரம், மற்றவர்களை 'மதிக்காத தன்மை' மற்றும் அன்பை நிலைநாட்டாமல் இருப்பது போன்றவை என்பதுதான் நான் வாழ்வில் கற்று கொண்ட பாடம். இதை நீங்கள் கற்று கொண்டு ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து இந்த உலகத்தில் தீன் இலாஹி அக்பர் என சொல்லிக்கொண்டு மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். 

----------

முகம்மது பின் துக்ளக் உரையை கேட்டதும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் தங்களது அறிவினை முட்டாள்தனமாக உபயோகிப்பதை மட்டும் மாற்றப் போவதில்லை என்பது உறுதியானது. முடிந்த பின் வருந்துவது மனித இயல்பு. 

தொலைந்த நாகரிகங்கள் எப்படி சீரழிந்து இருக்க கூடும்? 


6 comments:

Unknown said...

துக்ளக் பற்றிய துணுக்குகளில் துக்ளக்கை வரைந்துள்ளீர் அருமை!

G.M Balasubramaniam said...

There are many similarities between the present UPA government( I mean Manmohanji )and Thuglak.They have done and trying to do a lot of good things for the people; but somehow end up with bad name. Both have become the butt end for jokes.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

Radhakrishnan said...

நன்றி தமிழ் விரும்பி ஐயா. நன்றி ஜி எம் ஐயா. நன்றி ரத்னவேல் ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

வித்தியாசமான பதிவு. பிடித்திருந்தது :)

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி.